Do your duty! | Shanti-Parva-Section-33 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 33)
பதிவின் சுருக்கம் : தன் துயரையும், தாங்கள் அடையப் போகும் நிந்தனையையும் நினைத்து துறவே கதி என வியாசரிடம் சொன்ன யுதிஷ்டிரன்; பலரைக் கொன்றது காலமேயன்றி அவனில்லை என்றும், இறந்தவர்கள் தங்கள் செயல்களின் பலனாகவே இறந்தார்கள், கொல்லத்தக்கவர்களே கொல்லப்பட்டார்கள் என்றும், நண்பர்களின் நாடுகளில் அவர்களது வாரிசுகளை அரியணையில் நிறுவச் செய்வதும், தான் அடைந்த நாட்டை ஆள்வதுமே யுதிஷ்டிரனின் கடமை, துறவல்ல என்றும் அவனிடம் சொன்ன வியாசர்...
யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, "ஓ! பாட்டா {வியாசரே}, மகன்கள், பேரப்பிள்ளைகள, சகோதரர்கள், தந்தைமார்கள், மாமன்மார்கள், ஆசான்கள், தாய்மாமன்கள், பாட்டன்கள்,(1) உயர் ஆன்ம க்ஷத்திரியர்கள் பலர், (திருமண உறவால் உண்டான) உறவினர்கள் பலர், நண்பர்கள், தோழர்கள், சகோதரியின் மகன்கள்,(2) பல்வேறு நாடுகளில் இருந்து வந்த முதன்மையானோர் பலரும் வீழ்ந்துவிட்டனர். ஓ! பாட்டா, நாடு அடையும் ஆசை கொண்ட என்னால் மட்டுமே இவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.(3) ஓ! பெரும் தவசியே, அறத்திற்குத் தங்களை அர்ப்பணித்திருந்தவர்களும், வேள்விகளில் சோமம் பருகியவர்களுமான வீர மன்னர்கள் பலரைக் கொல்லச் செய்த நான் இறுதியில் என்ன கதியை அடையப் போகிறேன்?(4) ஓ! பாட்டா, பெருஞ்செழிப்பில் திளைத்த மன்னர்களில் சிங்கங்களான பலரை இந்தப் பூமி இழந்துவிட்டதே என்ற நினைப்பில் இந்த நாள் வரை நான் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறேன்.(5) உறவினர்களும், லட்சக்கணக்கான பல மனிதர்களும் கொல்லப்பட்டதைக் கண்டு துயரத்தில் நான் எரிந்து கொண்டிருக்கிறேன்.(6)
ஓ!, மகன்கள், கணவர்கள், சகோதரர்கள் ஆகியோரை இழந்த முதன்மையான பெண்கள் அடையப்போகும் அவலநிலை என்ன?(7) உடல் மெலிந்த அந்தப் பெண்கள், பாண்டவர்களையும், விருஷ்ணிகளையும் கொடூரக் கொலைகாரர்களாக நிந்தித்துத் துயரில் மூழ்கி பூமியில் விழப்போகிறார்கள்.(8) ஓ! பிராமணர்களில் சிறந்தவரே {வியாசரே}, தங்கள் தந்தைமார், சகோதரர்கள், கணவர்கள் மற்றும் மகன்களைக் காணாத அந்த மகளிர், துயரத்தை அடைந்து, தங்கள் உயிர் மூச்சுகளை விட்டு, யமலோகம் செல்லப் போகிறார்கள். இதில் எனக்கு ஐயமேதுமில்லை. அறநெறியின் பாதையானது மிகவும் நுட்பமானது. இதன் காரணமாகப் பெண்களைக் கொன்ற குற்றத்தால் நாங்கள் களங்கப்படுவோம் என்பது வெளிப்படையானது.(9,10) உறவினர்களையும், நண்பர்களையும் கொன்று, அதன்மூலம் கழிக்கப்படவே முடியாத {பரிகாரமில்லாத} பாவத்தைச் செய்த நாங்கள் நரகிற்குள் தலைக்குப்புற விழப் போகிறோம்.(11) எனவே, ஓ! மனிதர்களில் சிறந்தவரே, கடுந்தவங்களின் மூலம் நாங்கள் எங்கள் அங்கங்களை வீணாக்கப் போகிறோம். ஓ! பாட்டா, இப்போது நான் எந்த வாழ்வு முறையை நோற்க வேண்டும் என்பதைச் சொல்வீராக" என்று கேட்டான்.(12)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "தீவில் பிறந்த முனிவர் {வியாசர்}, யுதிஷ்டிரனின் இந்த வார்த்தைகளைக் கேட்டு, சிறிது நேரம் கூர்மையாகச் சிந்தித்து, பின்வருமாறு பாண்டுவின் மகனிடம் பேசினார்.(13)
வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா, ஒரு க்ஷத்திரியனின் கடமைகளை நினைவுகூர்வாயாக. துயரில் மூழ்காதே. ஓ! க்ஷத்திரியர்களில் காளையே, அந்த க்ஷத்திரியர்கள் அனைவரும் தங்களுக்கு முறையான கடமைகளை நோற்றே வீழ்ந்தனர்.(14) பூமியில் பெருஞ்செழிப்பையும், பெரும்புகழையும் தொடர்ந்து சென்றவர்களும், மரணக்கடப்பாடு கொண்டவர்களுமான அந்த மனிதர்களில் முதன்மையானவர்கள், காலத்தின் ஆதிக்கத்தின் மூலமே அழிந்தனர்[1].(15) நீயோ, இந்தப் பீமனோ, அர்ஜுனனோ, இரட்டையர்களோ {நகுல சகாதேவர்களோ} அவர்களைக் கொன்றவர்களில்லை. மாற்றம் என்ற பெரும் விதியின்படி காலமே அவர்களது உயிர் மூச்சுகளை எடுத்தது.(16) காலனுக்குத் தாயோ, தந்தையோ, எந்தக் கருணையும் காட்ட வேறு எவருமோ கிடையாது. அவனே {காலனே} அனைத்து உயிரினங்களின் செயல்களுக்கான சாட்சியாக இருக்கிறான். அவர்கள் அவனாலேயே எடுத்துக் கொள்ளப்பட்டனர்.(17) ஓ! பாரதக் குலத்தின் காளையே, இந்தப் போரானது அவனால் விதிக்கப்பட்ட ஒரு சந்தர்ப்பம் மட்டுமே. உயிரினங்களெனும் கருவிகளின் மூலம் அவனே உயிரினங்களைக் கொல்லச் செய்கிறான். இந்த வகையிலேயே காலமானது தடுக்கப்பட முடியாத தன் பலத்தை வெளிப்படுத்துகிறது.(18)
[1] "நீலகண்டர் இதை வேறு வழியில் விளக்குகிறார். "அவர்களின் சொந்த தவறுகளின் மூலமே" என்ற பொருளுடன் விளக்குகிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "பூர்ணமான ஸம்பத்தையும், இப்பூமியில் பெரிய கீர்த்தியையும் விரும்பிப் பிறர்களைக் கொல்ல முயன்ற அந்த க்ஷத்திரியர்கள் காலத்தால் முடிவடைந்தார்கள்" என்றிருக்கிறது.
காலமானது (உயிரினங்களின் பிறப்பு மற்றும் இறப்பில்) செயல்பாடுகளில் உள்ள பற்றைச் சார்ந்திருக்கிறது, மேலும் நல்ல மற்ற தீய செயல்கள் அனைத்தின் சாட்சியாக இருக்கிறது என்பதை அறிவாயாக. அருள், அல்லது துயர் நிறைந்த நமது செயல்பாடுகளின் கனியைக் கொண்டு வருவது காலமே.(19) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, வீழ்ந்துவிட்ட அந்த க்ஷத்திரியர்களின் செயல்பாடுகளை நினைவுகூர்வாயாக. அந்தச் செயல்பாடுகளே அவர்களுடைய அழிவுக்கான காரணங்களாகும். அவற்றின் விளைவாகவே அவர்கள் அழிவை அடைந்தனர்.(20) தற்கட்டுபாட்டுடன் கூடிய நோன்புகளை நோற்றுச் செய்யப்பட்ட உன் செயல்களையும் நினைத்துபார். (மனிதர்கள் பலரைக் கொல்லும் வகையில்) இத்தகு செயலைச் செய்யுமாறு விதிசமைத்த உயர்ந்தவனால் எவ்வாறு நீ பலவந்தப்படுத்தப்பட்டாய் என்பதையும் நினைத்துப் பார்.(21) கொல்லனாலோ, தச்சனாலோ செய்யப்பட்ட ஆயுதமானது, அதைப் பயன்படுத்தும் மனிதனின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து, அவன் பயன்படுத்துவற்குத்தக்க வகையில் பயன்படுவதைப் போலவே இந்த அண்டமும் காலத்தின் செயல்களால் கட்டுப்படுத்தப்பட்டு, அந்தச் செயல்பாடுகள் தன்னைப் பயன்படுத்துவதற்குத்தக்கவே பயன்படுகிறது[2].(22) தூண்டலற்றவகையில், எந்த (குறிப்பிட்ட) காரணமும் இல்லாமல் உயிரனங்களின் பிறப்பும், இறப்பும் நேர்வதைக் காணும்போது, துன்பமும் இன்பமும் முற்றிலும் தேவையற்றனவாகத் தெரிகின்றன.(23) உன் இதயத்தின் சிக்கல் வெறும் மாயையே என்றாலும், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, (ஒரு வகையில் பாவம் என்றழைக்கப்படுவதில் இருந்து விடுபட்டு உன்னைக் கழுவிக் கொள்வதற்கு வேண்டிய) பாவக்கழிவு சடங்குகளைச் செய்வாயாக.(24)
[2] கும்பகோணம் பதிப்பில், "தச்சனால் செய்யப்பட்ட யந்திரம் அதைச் சுழற்றிவிடும் மனிதனிடம் அடங்கியிருப்பது போல இவ்வுலகனைத்தும் காலத்துடன் சேர்ந்த கர்மத்தால் சுழற்றப்படுகிறது" என்றிருக்கிறது.
ஓ! பார்த்தா {யுதிஷ்டிரா}, தேவர்களும், அசுரர்களும் ஒருவரோடொருவர் போரிட்டனர் என்று கேள்விப்படுகிறோம். அசுரர்கள் மூத்த சகோதரர்களாகவும், தேவர்கள் இளைய சகோதரர்களாகவும் இருந்தனர்.(25) செழிப்பில் பேராசை கொண்டு அவர்களுக்குள் ஏற்பட்ட போரானது மிகக் கடுமையானதாக இருந்தது. அந்தப் போர் முப்பத்திரண்டாயிரம் {32,000} வருடங்கள் நீடித்தது.(26) தேவர்கள், பூமியை ஒரே இரத்தக்கடலாகச் செய்து, தைத்தியர்களைக் கொன்று சொர்க்கத்தை உடைமையாக அடைந்தனர்.(27) பூமியை உடைமையாகக் கொண்டிருந்தவர்களும், வேதங்களை அறிந்தவர்களும், பெரும் எண்ணிக்கையிலானவர்களுமான பிராமணர்கள், செருக்கில் மயங்கி, ஆயுதங்கள் தரித்துக் கொண்டு தானவர்களுக்கு உதவும் வகையில் அவர்களோடு சேர்ந்து போரிட்டனர்.(28) எண்ணிக்கையில் எண்பத்தெட்டாயிரம் {86,000} பேரான அவர்கள் {பிராமணர்கள்} சாலாவிருகர்கள் என்ற பெயரில் அறியப்பட்டனர். எனினும் அவர்கள் அனைவரும் தேவர்களால் கொல்லப்பட்டனர்.(29) அறத்திற்கு அழிவை உண்டாக்க விரும்புபவர்களும், பாவம் செய்பவர்களுமான அந்தத் தீய ஆன்மாக்கள் {பிராமணர்கள்}, தேவர்களால் கொல்லப்பட்ட கடுந்தைத்தியர்களைப் போலவே கொல்லப்படத்தகுந்தவர்களே ஆவர்.(30)
தனிப்பட்ட ஒருவனைக் கொல்வதால் ஒரு குடும்பத்தைக் காக்கமுடியும் என்றால், அல்லது ஒரு தனிப்பட்ட குடும்பத்தைக் கொல்வதன் மூலம் மொத்த நாட்டையும் காக்க முடியும் என்றால், அந்தப் படுகொலைகள் அறமீறலாகாது.(31) ஓ! மன்னா, சில வேளைகளில் பாவமானது அறத்தின் வடிவை ஏற்கிறது, சில வேளைகளில் அறமும் பாவ வடிவை ஏற்கிறது. எனினும் கல்விமான்கள் அவை எவை என்பதைப் பகுத்தறிவார்கள்[3].(32) எனவே, ஓ! பாண்டுவின் மகனே, சாத்திரங்களை நன்கறிந்தவனான நீ ஆறுதலடைவாயாக. ஓ! பாரதா, தேவர்கள் சென்ற பாதையையே நீயும் பின்பற்றியிருக்கிறாய்.(33) ஓ! பாண்டு குலத்தின் காளையே உன்னைப் போன்றோர் ஒருபோதும் நரகை அடைவதில்லை. ஓ! எதிரிகளை எரிப்பவனே, உன் சகோதரர்களையும், உன் நண்பர்கள் அனைவரையும் தேற்றுவாயாக.(34) தெரிந்தே பாவகரச் செயல்களில் ஈடுபட்டும், பாவகரச் செயல்களைச் செய்து வெட்கமேதும் அடையாமல் முன்பைப் போலவே இருப்பவன் (சாத்திரங்களின்படி) பெரும்பாவி என்றழைக்கப்படுகிறான். பாவம் கழிக்கும் எந்த வழியும் {பரிகாரமேதும்} அவனுக்கு இல்லை. {பாவக் கழிப்புச் சடங்குகள் செய்தாலும்} அவனது பாவங்களும் குறைவடைவதில்லை.(36)
[3] கும்பகோணம் பதிப்பில், "ஓ நரபதியே! தர்மமான சில அதர்மம் போலவும், அதர்மமான சில தர்மம் போலவுமிருக்கும் பகுத்தறியத் திறமையுள்ளவன் அதனை ஊகமாய்த் தெரிந்து கொள்ள வேண்டும்" என்றிருக்கிறது.
நீ உன்னதக் குலத்தில் பிறந்திருக்கிறாய். பிறரின் குற்றங்களால் வலுகட்டாய நிலையை அடைந்தும், விருப்பமில்லாமலுமே நீ இதைச் செய்தாய், இதைச் செய்த பிறகு நீ வருந்தலாகாது.(37) பெருஞ்சடங்கான குதிரைவேள்வியே உனக்கான பாவக்கழிப்பாகச் சொல்லப்படுகிறது. ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அந்த வேள்விக்கான ஏற்பாடுகளைச் செய்வாயாக, நீ உன் பாவங்களில் இருந்து விடுபடுவாய்.(38) பகனைத் தண்டித்த தெய்வீகமானவன் {இந்திரன்}, மருத்துக்களின் துணையுடன் தன் எதிரிகளை வென்று, படிப்படியாக நூறு வேள்விகளைச் செய்து சதக்ரதுவானான்[4].(39) பாவத்திலிருந்து விடுபட்டுச் சொர்க்கத்தை அடைந்து, பல அருள் உலகங்களையும், பெரும் மகிழ்ச்சியையும், செழிப்பையும் அடைந்த சக்ரன் {இந்திரன்}, மருத்துகளால் சூழப்பட்டவனாக, அழகில் ஒளிர்ந்து கொண்டே, தன் காந்தியால் நான்கு பகுதிகளுக்கும் ஒளியூட்டிக் கொண்டிருக்கிறான்.(40) சச்சியின் தலைவனான அவன் {இந்திரன்} சொர்க்கத்தில் அப்சரஸ்களால் துதிக்கப்படுகிறான். முனிவர்களும், பிற தேவர்கள் அனைவரும் அவனை மதிப்புடன் வணங்குகின்றனர்.(41)
[4] "நூறு வேள்விகளைச் செய்தவன் என்பது பொருள்" என இங்கே விளக்குகிறார்கள் கங்குலி.
நீ இந்தப் பூமியை உன் ஆற்றலால் அடைந்திருக்கிறாய். ஓ! பாவமற்றவனே {யுதிஷ்டிரனே}, உன் ஆற்றலின் மூலம் நீ மன்னர்கள் அனைவரையும் வென்றாய்.(42) ஓ! மன்னா, உன் நண்பர்களுடன் அவர்களின் நாட்டுக்குச் சென்று, அவர்களது சகோதரர்கள், மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகளை அவர்களது அரியணையில் நிறுவுவாயாக.(43) கருவில் இருக்கும் குழந்தையிடமும் கருணையோடு நடந்து கொண்டு, உன் குடிமக்களை மகிழ்ச்சியடையச் செய்து பூமியை ஆள்வாயாக.(44) மகனில்லாதவர்களின் அரியணைகளில் அவர்களது மகள்களை நிறுவுவாயாக. பெண்கள் இன்பத்தையும், அதிகாரத்தையும் விரும்புபவர்களாவர். இந்த வழிமுறையின் மூலம் அவர்கள் தங்கள் கவலைகளை விட்டு, மகிழ்ச்சி அடைவார்கள்.(45) ஓ! பாரதா, இவ்வழியில் பேரரசு முழமைக்கும் ஆறுதலளித்து, வெற்றியாளனான பழங்காலத்து இந்திரனைப் போல ஒரு குதிரை வேள்வியில் தேவர்களைத் துதிப்பாயாக. ஓ! க்ஷத்திரியக் காளையே, (போரில் வீழ்ந்துவிட்ட) உயர் ஆன்ம க்ஷத்திரியர்களுக்காக நீ வருந்துவது முறையாகாது.(46) யமனின் சக்தியால் திகைப்படைந்த அவர்கள், தங்கள் சொந்த கடமைகளை நோற்றதிலேயே அழிவை அடைந்தார்கள்.(47) நீ ஒரு க்ஷத்திரியனுக்குரிய கடமைகளைச் செய்து, முள்ளில்லா {எதிரிகளில்லா} பூமியை அடைந்திருக்கிறாய். ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, ஓ! பாரதா, உன் சொந்த கடமைகளை நீ நோற்றால்தான் மறுமையில் இன்பத்தை அடைய முடியும்" என்றார் {வியாசர்}.(48)
சாந்திபர்வம் பகுதி – 33ல் உள்ள சுலோகங்கள் : 48
ஆங்கிலத்தில் | In English |