Expiatory acts! | Shanti-Parva-Section-34 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 34)
பதிவின் சுருக்கம் : பாவக்கழிப்பைச் செய்யத்தக்கவர்கள் எவர்? மனிதர்களுக்குத் தடைசெய்யப்பட்ட செயல்கள் யாவை? தடைசெய்யப்பட்ட செயல்களைச் செய்தாலும் பாவத்தின் கறைபடாத சந்தர்ப்பங்கள் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்கு விளக்கிச் சொன்ன வியாசர்...
யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, "எந்தச் செயல்களைச் செய்த பிறகு ஒரு மனிதன் பாவக்கழிப்பு {பரிகாரம்} செய்யத்தக்கவனாகிறான்? பாவத்தில் இருந்து விடுபட அவன் எந்தச் செயல்களைச் செய்ய வேண்டும்? ஓ! பாட்டா, இவை யாவையும் எனக்குச் சொல்வீராக" என்றான்.(1)
வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, "விதிக்கப்பட்ட செயல்களைத் தவிர்த்து, தடை செய்யப்பட்ட செயல்களைச் செய்து, வஞ்சகம் நிறைந்த நடத்தை கொண்ட ஒரு மனிதன் பாவக்கழிப்பைச் செய்யத்தக்கவனாகிறான்.(2) சூரியன் உதித்த பிறகு தன் படுக்கையில் இருந்து எழுபவன், அல்லது சூரியன் மறையும்போது படுக்கைக்குச் செல்பவன், சொத்தை நகமோ, கருப்பு பல்லோ கொண்டவன்,(3) தனக்கு முன்பே தம்பி திருமணம் செய்து கொண்ட நிலையில் இருப்பவன், மூத்தவன் திருமணம் செய்து கொள்ளும் முன்பே தான் திருமணம் செய்து கொள்பவன், பிராமணனைக் கொன்ற குற்றவுணர்வு கொண்டவன், பிறரை இழிவாகப் பேசுபவன், {பெண்ணெடுக்கும் இல்லத்தில் உள்ள} மூத்தவள் {தமக்கை} திருமணம் முடிப்பதற்கு முன்பே அவளது தங்கையைத் திருமணம் செய்பவன், தங்கையைத் திருமணம் செய்த பிறகு, அவளது மூத்தவளை {தமக்கையைத்} திருமணம் செய்பவன்,(4) உறுதிமொழி தவறியவன், மறுபிறப்பாள வகைகளில் ஏதாவது ஒரு வகையைச் சேர்ந்த ஒருவனைக் கொல்பவன்[1], தகாதவர்களுக்கு வேத அறிவைப் போதிப்பவன், (5) பல உயிர்களை எடுப்பவன், இறைச்சி விற்பவன், தன் (புனித) நெருப்பைக் கைவிட்டவன், வேத அறிவை விற்பவன்[2],(6) தன் ஆசானையோ, ஒரு பெண்ணையோ கொல்பவன், பாவம் நிறைந்த குடும்பத்தில் பிறந்தவன், விருப்பத்துடன் ஒரு விலங்கைக் கொல்பவன்[3], குடியிருக்கும் வீட்டுக்கு நெருப்பு வைப்பவன்,(7) வஞ்சகத்தையே வாழ்வாகக் கொண்டவன், தன் ஆசானுக்கு எதிராகச் செயல்படுபவன், ஒப்பந்தத்தை மீறுபவன் ஆகியோர் அனைவரும் பாவக்கழிப்பு {பரிகாரம்} தேவைப்படும் குற்றவாளிகளாவர்.(8)
[1] கும்பகோணம் பதிப்பில், "துவிஜாதிகளென்னும் மூன்று வர்ணத்தாரையும் கொன்றவன்" என்று இருக்கிறது.[2] "சாத்திரங்களைப் போதிக்க மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பவன் என்பது பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[3] "வேள்விக்காக அல்லாமல் விலங்குகளைக் கொல்வது என்பது பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
உலகம் மற்றும் வேதங்கள் ஆகிய இரண்டால் மனிதர்களுக்குத் தடைசெய்யப்பட்ட செயல்களைக் குறித்து இப்போது சொல்லப் போகிறேன். குவிந்த கவனத்துடன் நான் சொல்வதைக் கேட்பாயாக.(9) தன் சமய நம்பிக்கையை மறுப்பது, பிற மக்களின் சமய நம்பிக்கையைப் பயில்வது[4], உதவத் தகாத ஒருவனின் வேள்வி அல்லது அறச்சடங்குகளில் உதவி செய்வது, விலக்கப்பட்ட உணவை உண்பது,(10) பாதுகாப்பை நாடும் ஒருவனைக் கைவிடுபவன், பணியாட்களையும், தன்னை நம்பியிருப்பவர்களையும் பராமரிக்காமல் புறக்கணிப்பது, உப்பு, புளி (மற்றும் அது போன்ற பொருட்களை) விற்பது, பறவைகளையும், விலங்குகளையும் கொல்வது,(11) இயன்றவனானாலும், தன்னிடம் வேண்டும் பெண்ணிடம் பிள்ளையைப் பெற மறுப்பது, (பசுவுக்குக் கைநிறைய புல்லைக் கொடுப்பது போன்ற) தினக்கொடைகள் கொடுப்பதைத் தவிர்ப்பது,(12) தக்ஷிணை கொடுப்பதைத் தவிர்ப்பது, ஒரு பிராமணனை அவமதிப்பது ஆகிய இவை அனைத்தும் யாராலும் செய்யக்கூடாத செயல்கள் எனக் கடமைகளை அறிந்த மனிதர்களால் சொல்லப்படுகிறது.(13) ஓ! மனிதர்களில் புலியே, தந்தையுடன் சச்சரவு செய்யும் மகன், தன் ஆசானின் படுக்கையைக் களங்கப்படுத்துபவன், தான் மணந்து கொண்ட மனைவியிடம் வாரிசை உண்டாக்காமல் புறக்கணிப்பவன் ஆகியோர் பாவம் நிறைந்தவர்களாவர்.(14) பாவக்கழிப்புச் செய்யத் தகுந்த மனிதர்களின் செயல்பாடுகள் மற்றும் செயல்படாமை ஆகியவற்றைக் குறித்துச் சுருக்கமாகவும் விரிவாகவும் சொல்லிவிட்டேன்.(15)
[4] Creed என்ற ஆங்கில வார்த்தைக்கு இணையாகவே இங்கே சமயம் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கும்பகோணம் பதிப்பில், "தனக்குரிய தர்மத்தை விடுதல், பிறர் தருமத்தைச் செய்தல்" என்றிருக்கிறது. அறம் / தர்மம் என்பதே இங்கே சரியாக இருக்க வேண்டும்.
இப்போது, இந்தச் செயல்களைச் செய்தாலும் கூட மனிதர்கள் பாவத்தின் கறைபடாமல் இருக்கும் சந்தர்ப்பங்களைச் சொல்லப்போகிறேன்.(16) வேதங்களை நன்கறிந்த ஒரு பிராமணன் உன்னைக் கொல்வதற்காக எதிர்த்துப் போரிட வந்தால், நீயும் அவனது உயிரை எடுக்க அவனை எதிர்க்க வேண்டும். அத்தகு செயலைச் செய்வதால் அவனைக் கொல்பவன், பிராமணனைக் கொன்ற குற்ற உணர்வுக்கு ஆளாகமாட்டான்.(17) ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே} வேதங்களில் உள்ள ஒரு மந்திரத்தில் இது விதிக்கப்பட்டிருக்கிறது. வேதங்களால் அதிகாரத்துடன் அனுமதிக்கப்படும் நடைமுறைகளை மட்டுமே நான் உனக்கு அறிவிக்கிறேன்.(18) தன் கடமைகளில் இருந்து வழுவிய பிராமணன், கொலை செய்யும் நோக்குடனும், கையில் ஆயுதத்துடனும் முன்னேறி வருபவன் ஆகியோரைக் கொன்றால், உண்மையில் அது பிராமணக் கொலை {பிரம்மஹத்தி} ஆகாது. அப்படிப்பட்ட வழக்கில் கொல்பவனின் கோபமே, கொல்லப்படுபவனின் கோபத்தை எதிர்த்துச் செல்கிறது.(19) அறியாமையாலோ, உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒரு நல்ல மருத்துவரின் பரிந்துரையின் பேரில் ஒருவன் ஊக்கம்தரும் மதுபானம் அருந்தினால், அவனது வழக்கில் மீண்டும் மீள்பிறப்புச் சடங்குகள் செய்யப்பட வேண்டும்[5].(20)
[5] கும்பகோணம் பதிப்பில், "உயிருக்கபாயம் நேருங்கால் தர்மமறிந்தவர்களின் அனுமதி பெற்று, தெரிந்து ஸுரையை உபயோகிப்பவன், பின்பு, சுத்தி பெறத்தக்கவனாவான்" என்றிருக்கிறது. மேலும் ஸுரை என்பதற்கான அடிக்குறிப்பாக, "ஔபாஸனமென்னும் ஸ்மார்த்தாக்கினியை வைதிகமான மூன்று அக்னிகளாகச்செய்யும் விதி" என்றிருக்கிறது.
ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, தடுக்கப்பட்ட உணவை உண்பது குறித்து நான் உன்னிடம் சொன்னது அனைத்திலிருந்தும் இத்தகு பாவக்கழிப்பு சடங்குகளின் மூலம் தூய்மையடையலாம்.(21) ஆசானின் ஆணைப்படி ஆசானின் மனைவியுடன் கலப்பது அம்மாணவனைக் களங்கப்படுத்தாது. தவசியான உத்தாலகர், ஒரு சீடனின் மூலமே தன் மகன் ஸ்வேதகேதுவைப் பெற்றார்.(22) துயர் நிறைந்த காலத்தில் தன் ஆசானுக்காகத் திருடுபவன் பாவக்கறை அடைய மாட்டான். எனினும், தன் இன்பங்களுக்காகத் திருடுபவன் பாவத்தால் கறைபட்டவனே ஆவான்.(23) (துயர் நிறைந்த காலத்தில், தன் ஆசானுக்காக) பிராமணர்களைத் தவிர வேறு எவரிடம் திருடுபவனும் கறைபடிந்தவனாக மாட்டான். அத்தகு சூழ்நிலையில் தனக்கென எந்தப் பங்கையும் எடுத்துக் கொள்ளாத ஒருவன் மட்டுமே பாவத்தால் தீண்டப்படாமல் இருப்பான்.(24) ஒருவன், தன் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காகப் பொய் சொல்லலாம், அல்லது ஒருவனுடைய ஆசானுக்காக, அல்லது ஒரு பெண்ணை நிறைவு செய்வதற்காக, அல்லது திருமணம் செய்வதற்காகப் பொய் சொல்லலாம்.(25) ஈரக்கனவுகளால் ஒருவன் தன் பிரம்மச்சரிய நோன்பை உடைத்தவனாக மாட்டான். அத்தகு வழக்குகளில், சுடர்மிக்க நெருப்பில் தெளிந்த நெய்யைக் காணிக்கையாக ஊற்றுவதே பாவக்கழிப்பாக விதிக்கப்படுகிறது[6].(26)
[6] "ஸ்வப்னகாலத்தில் சுக்லம் போவதால் திரும்ப உபநயனஞ்செய்ய வேண்டுமென்ற பிராயச்சித்தமில்லை. அக்நியை வளர்த்து அதற்குரிய மந்திரத்துடன் நெய்யை ஓமம் செய்ய வேண்டும்" என்றிருக்கிறது.
மூத்தவன் {அண்ணன்} வீழ்ந்துவிட்டாலோ, உலகைத் துறந்துவிட்டாலோ, இளையவன் {தம்பி} திருமணம் செய்து கொள்வதால், அவன் எந்தப் பாவத்தையும் இழைத்தவனாக மாட்டான். ஒரு பெண்ணால் வேண்டப்பட்டு, அவளுடன் கலப்பது அறத்திற்கு அழிவைத் தராது.(27) வேள்வியைத் தவிர வேறு எதற்காகவும் ஒருவன் விலங்குகளைக் கொல்லவோ, கொல்லப்படச் செய்யவோ கூடாது. படைப்பாளனால் விதிக்கப்பட்ட விதியின் படி அவனால் வெளிப்படுத்தப்படும் கருணையால் விலங்குகள் புனிதமடைகின்றன (வேள்விக்குத் தகுந்தவையாகின்றன).(28) தகாத பிராமணருக்கு அறியாமையால் கொடையளிப்பவன் பாவத்துக்கு உள்ளாக மாட்டான். தகுந்தோரிடம் (அறியாமையினால்) தயாளமில்லாமல் நடந்து கொள்ளும் ஒருவன் பாவத்துக்கு உள்ளாகமாட்டான்.(29) ஒழுக்கங்கெட்ட மனைவியிடம் இருந்து விலகும் ஒருவன் பாவத்துக்கு உள்ளாகமாட்டான். அப்படி நடத்துவதால் அந்தப் பெண் மாசகற்றப்பட்டவளாவாள், அதேவேளையில் கணவனும் பாவத்தைத் தவிர்ப்பான்[7].(30) சோமச்சாற்றின் உண்மை பயனை அறிந்த ஒருவன், அதை விற்பதால் பாவத்தை அடைய மாட்டான்[8]. தொண்டு செய்ய இயலாத பணியாளை நீக்குவதால் ஒருவன் பாவத்தால் தீண்டப்படமாட்டான்.(31) எவற்றைச் செய்தால் ஒருவன் பாவத்திற்கு உள்ளாக மாட்டானோ அந்தச் செயல்களையே இப்போது நான் உனக்குச் சொன்னேன். இனி பாவக்கழிப்பை {பரிகாரங்களைக்} குறித்து உனக்கு விரிவாகச் சொல்லப்போகிறேன்" என்றார் {வியாசர்}[9].(32)
[7] கும்பகோணம் பதிப்பில், "குற்றமுள்ள ஸ்திரீயை விலக்கி வைப்பது தோஷமாகாது. அவளை அங்ஙனமிருக்கும்படி செய்வித்தல் அவள் பரிசுத்திக்குக் காரணமாகும். அப்படிச் செய்யும் புருஷனுக்குப் பாவமில்லை" என்றிருக்கிறது. மேலும் குற்றமுள்ள ஸ்திரீயை விலக்கி வைப்பது என்பதற்கு அடிக்குறிப்பாக, "குற்றமுள்ள ஸ்திரீக்கு ஆகாரம் வஸ்திரம் முதலியவற்றை மாத்திரம் கொடுத்து உடனுண்ணல் சேர்க்கை முதலியவற்றை நிறுத்துவது" என்றுமிருக்கிறது.[8] "அஃதாவது, ஒருவன் சோமமென்பது தேவர்களை நிறைவு செய்வதற்காக வேள்விகளில் பயன்படுத்தப்படுவதை என்பதை அறிந்தவனாக இருந்தால், என்பது பொருளாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[9] கங்குலியிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் சாந்திபர்வத்தின் 34ம் பகுதி இல்லை. 33க்குப் பிறகு 35தே தொடர்கிறது. Sacred texts வலைத்தளத்தில் இந்தப் பதிவையே 34 மற்றும் 35 என்று குறிப்பிட்டிருக்கின்றனர். அதன்படியே நாமும் இந்தப் பகுதியை 34 மற்றும் 35 பகுதிகள் உள்ளடங்கியதாகக் கொள்கிறோம்.
சாந்திபர்வம் பகுதி – 34ல் உள்ள சுலோகங்கள் : 32
ஆங்கிலத்தில் | In English |