Tuesday, November 28, 2017

பாவங்களும், பாவக்கழிப்புகளும்! - சாந்திபர்வம் பகுதி – 35

Sins and Expiation! | Shanti-Parva-Section-35 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 35)


பதிவின் சுருக்கம் : பாவங்கழிக்கும் முறைகள்; பிராமணக் கொலை, மதுவுண்ணல், ஆசானின் படுக்கையைக் களங்கப்படுத்துவது; ஆசானுக்கு எதிராகச் செயல்படுவது; பிறன்மனையுறவு, களவு, பெண்களின் பாவங்கள் ஆகியவற்றுக்கான பாவக்கழிப்புகளை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன வியாசர்; அவன் செய்தது குற்றமாகாது, அஃது அவனது கடமை என விளக்கி, அப்படியே அவன் குற்றவுணர்வைக் கொண்டிருந்தாலும் அதற்கான பாவக்கழிப்பைச் செய்துவிட்டு நாடாளுமாறு யுதிஷ்டிரனை வலியுறுத்திய வியாசர்...


வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, தவங்கள், அறச்சடங்குகள் {வேள்விகள்} மற்றும் கொடைகளின் மூலம் ஒரு மனிதன் தான் இழைத்த பாவங்களைக் கழுவிக் கொள்கிறான்.(1) ஒரு நாளைக்கு ஒரே ஒரு முறை மட்டுமே உணவு உண்டு, பிச்சையெடுத்து உணவுண்டு, (பணியாளின் உதவியை எதிர்பாராமல்) தன் செயல்களனைத்தையும் தானே செய்து, ஒரு கரத்தில் மனித மண்டையோட்டையும், மறு கரத்தில் கட்வாங்கத்தையும்[1] எடுத்துக் கொண்டு பிச்சைக்காரனாய் வலம் வந்து, பிரம்மச்சரிய நிலையடைந்து, எப்போதும் உழைப்புக்கு ஆயத்தமாக இருந்து,(2) தீமைகள் அனைத்தையும் கைவிட்டு, வெறுந்தரையில் உறங்கி, தன் குற்றங்களை {பாவங்களை} உலகத்திற்கு வெளியிட்டு, என இவை யாவற்றையும் முழுமையாகப் பனிரெண்டு {12} ஆண்டுகள் செய்யும் மனிதன் ஒரு பிராமணனைக் கொன்ற பாவத்தில் இருந்து தூய்மையடைகிறான்.(3) ஆயுதப்பயன்பாட்டில் வாழும் மனிதனின் ஆயுதத்தாலோ, ஒருவனுடைய சுய விருப்பத்தாலோ, சாத்திரங்களைப் பயின்ற மனிதர்களின் ஆலோசனையின் பேரிலோ அழிவை அடைபவன், அல்லது சுடர்மிக்க நெருப்பில் மூன்று முறை தலைகுப்புற விழுபவன்,(4) அல்லது வேதங்களை ஓதிக்கொண்டே நூறு யோஜனைகள் நடப்பவன், அல்லது வேதங்களை அறிந்த ஒரு பிராமணனுக்குத் தன் மொத்த உடைமைகளையும் கொடையாகக் கொடுப்பவன், (5) அல்லது உயிரைத் தாங்கிக் கொள்ளும் அளவுக்காவது அவனுக்குக் கொடுப்பவன், அல்லது முறையாக அமைக்கப்பட்ட ஒரு வீட்டைக் கொடுத்து பிராமணர்களையும், பசுக்களையும் பாதுகாப்பவன், ஒரு பிராமணனைக் கொன்ற பாவத்தில் இருந்து தூய்மையடைவான்.(6)


[1] "கட்வாங்கம் என்பது மண்டையோடு பொருத்தப்பட்ட ஒரு தடி" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்

ஆறு வருட காலத்திற்கு மிகக் குறைந்த உணவையே தினமும் உண்டு வாழ்வதாலும் ஒரு மனிதன் அந்தப் பாவத்தில் இருந்து தூய்மையடையமுடியும்[2]. உணவைப் பொறுத்தவரையில், இதைவிடக் கடுமையான நோன்பை நோற்பதால் அவன் மூன்று வருடங்களிலேயே தூய்மையடையலாம்[3].(7) ஒரு மாதத்தில் ஒரே ஒரு முறை உண்டு வாழ்ந்தால் ஒருவன் ஒரே வருடத்தில் தூய்மையடையலாம். முற்றாகப் பட்டினி கிடந்தால், ஒருவன் மிகக் குறுகிய காலத்திலேயே தூய்மையடையலாம்.(8) மேலும், ஒரு குதிரை வேள்வியைச் செய்வதால் ஒருவன் தூய்மையடைவான் என்பதில் எந்த ஐயமும் இல்லை. பிராமணனைக் கொன்ற குற்ற உணர்வு கொண்ட மனிதர்கள், குதிரை வேள்வியை நிறைவு செய்து, இறுதி நீராடலை முடித்தால்,(9) அவர்களுடைய பாவங்கள் அனைத்திலிருந்தும் தூய்மையடையலாம். இது ஸ்ருதிகளின் பேரதிகாரத்தில் உள்ள ஒரு தடையாணையாகும். மேலும், போரில் ஒரு பிராமணனுக்காகத் தன் உயிரை விடுபவன், ஒரு பிராமணனைக் கொன்ற பாவத்தில் இருந்து தூய்மையடைகிறான்.(10)

[2] "முதல் மூன்று நாள் காலையில் உண்ண வேண்டும், இரண்டாவது மூன்று நாட்கள் மாலையில் உண்ண வேண்டும், அடுத்த மூன்று நாட்கள் வேண்டாமல் கிட்டும் எதையும் உண்ணலாம் வேறேதும் உண்ணக்கூடாது, அடுத்து வரும் மூன்று நாட்கள் எதையுமே உண்ணாதிருக்க வேண்டும் என்பதே அவ்விதி. இவ்விதி கிருச்சிரபோஜனம் Kricchra-bhojana என்று அழைக்கப்படுகிறது. இவ்விதியை ஆறு வருடங்களுக்கு நோற்கும் ஒருவன், பிராமணனைக் கொன்ற பாவத்தில் இருந்து தூய்மையடைவான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "மூன்று நாள் காலையில் மாத்திரமும், பின் மூன்று நாள் மாலையில் மாத்திரமும், பின் மூன்று நாள் தன் முயற்சியின்றிக் கிடைத்ததை மாத்திரமும் புஜித்துக் கொண்டு பின்மூன்று நாள் உண்ணாவிரதமுள்ளவனாக இருக்க வேண்டுமென்பது கிருச்சிரவிதி" என்று அடிக்குறிப்பில் சொல்லப்பட்டுள்ளது.

[3] "ஏழு நாட்கள் காலையில் மட்டுமே உண்ண வேண்டும்; அடுத்த ஏழு நாட்கள் மாலையில் மட்டுமே உண்ண வேண்டும்; அடுத்த ஏழு நாட்கள் (வேண்டாமல்) கிட்டுவதை உண்ணலாம்; அடுத்த ஏழு நாட்கள் மொத்தமாக எதையும் உண்ணாதிருக்க வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

தகுந்தோருக்கு நூறாயிரம் {1,00,000} பசுக்களைக் கொடையாக அளிப்பவன், பிராமணனைக் கொன்ற பாவத்தில் இருந்தும், உண்மையில் அவன் செய்த அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைகிறான்.(11) கன்றீன்ற இருபத்தைந்தாயிரம் கபிலைப் பசுக்களை {காராம்பசுக்களைக்} கொடையாக அளிப்பவன் தன் பாவங்கள் அனைத்தில் இருந்து தூய்மையடைவான்.(12) ஒருவன் உயிரைவிடும் தருவாயில், கன்றுகளுடன் கூடிய ஓராயிரம் பசுக்களைத் தகுந்தோருக்குக் கொடையாகக் கொடுத்தால் பாவத்தில் இருந்து விடுபடுவான்.(13) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ஒழுக்கத்துடன் கூடிய பிராமணர்களுக்கு நூறு காம்போஜக் குதிரைகளைக் கொடையளிக்கும் மனிதன் தன் பாவத்தில் இருந்து விடுபடுகிறான்.(14) ஒரே ஒருவனுக்காவது, அவன் கேட்கும் அனைத்தையும் கொடுத்து, அதைக் குறித்து வேறு யாரிடமும் பேசாத {சொல்லாத} ஒரு மனிதன் பாவத்தில் இருந்து விடுபடுகிறான்.(15)

ஒரு முறை மதுவுண்ட ஒருவன், (பாவக்கழிப்பாக) காய்ச்சிய மதுவைக் குடித்தால், அவன் இம்மையிலும், மறுமையிலும் தன்னைத் தூய்மையாக்கிக் கொள்கிறான்[4].(16) மலைச்சிகரத்தில் இருந்து குதித்தோ, சுடர்மிக்க நெருப்பில் நுழைந்தோ, உலகைத் துறந்து எப்போதும் நீடிக்கும் பயணத்தை மேற்கொண்டோ ஒருவன் தன் பாவங்கள் அனைத்தில் இருந்து விடுபடலாம்.(17) பிருஹஸ்பதியால் விதிக்கப்பட்டுள்ள வேள்வியைச் செய்வதன் மூலம் மதுபானம் உண்ணும் ஒரு பிராமணனால் பிரம்மலோகத்தை அடைவதில் வெல்ல முடியும்[5]. இதைப் பிரம்மனே சொல்லியிருக்கிறான்.(18) மதுவுண்ட பிறகு ஒரு மனிதன், அடக்கமாக நிலக்கொடையளித்து, பிறகு எப்போதும் அதிலிருந்து விலகியிருந்தால், அவன் தூய்மையும், புனிதமும் அடைகிறான்.(19)

[4] கும்பகோணம் பதிப்பில், "ஒருமுறை ஸுரையைப் பானஞ்செய்தவன் அந்த ஸுரையை நெருப்பு போலக் காய்ச்சிப் பானஞ்செய்தோ, அல்லது மலையிலிருந்து பாலைநிலத்தில் விழுந்தோ அல்லது அக்னியில் விழுந்தோ அல்லது மஹாபத யாத்திரை செய்தோ தன் சரீரத்தைத் தியாகஞ்செய்தால் பாவங்களிலிருந்து விடுபட்ட இரண்டு உலகிலும் சக்தி பெறுவான்" என்றிருக்கிறது.

[5] கும்பகோணம் பதிப்பில், "பிருகஸ்பதிஸவமென்னும் யாகத்தைச் செய்தால் ஸுராபான தோஷம் விலகி ஸபையில் செல்ல யோக்கியதை பெறுவானென்று வேதத்திற்குச் சொல்லியிருக்கிறது" என்றிருக்கிறது.

தனது ஆசானின் படுக்கையைக் களங்கப்படுத்திய மனிதன், பழுக்கக் காய்ச்சிய இரும்புத் தகட்டில் கிடந்து, தன் பாலினச் சின்னத்தை அறுத்து, எப்போதும் மேல்நோக்கிய கண்களுடன் காடுகளில் வாழ்ந்து இந்த உலகை விட்டுச் செல்ல வேண்டும்[6].(20] ஒருவன் தன் உடலைக் கைவிடுவதால் அவன் தன் தீச்செயல்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான். பெண்கள், ஒரு வருடகாலம் ஒழுங்குபடுத்திய வாழ்வை வாழ்ந்தால் தங்கள் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைவார்கள்.(21) ஒரு மனிதன் மிகக் கடுமையான நோன்பை நோற்பதாலோ, தன் செல்வம் முழுவதையும் கொடையாகக் கொடுப்பதாலோ, தன் ஆசானுக்காகப் போரிட்டுப் போரில் அழிவடைவதாலோ தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைகிறான்.(22) தன் ஆசானின் முன்பு பொய் பேசுபவன், அல்லது அவருக்கு எதிராகச் செயல்படும் ஒருவன், தனது ஆசானுக்கு ஏற்புடைய ஏதாவதொன்றைச் செய்து அந்தப் பாவத்தில் இருந்து தூய்மையடையலாம்.(23) (பிரம்மச்சரிய) நோன்பிலிருந்து விழுந்தவன், மாட்டுத் தோலை ஆறு மாதங்களுக்கு உடுத்தி, பிராமணக்கொலைக்கு விதிக்கப்பட்ட தவங்களைப் பயின்றால் அந்தப் பாவத்திலிருந்து அவன் தூய்மையடைவான்[7].(24)

[6] கங்குலி மற்றும் கும்பகோணம் பதிப்புகளில் மேற்சொன்னவாறே இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "ஒருவன் தனது ஆசானின் மனைவியுடன் கலவிபுரிந்தால், அவன் சுடப்பட்ட கல்லில் கிடக்க வேண்டும். அல்லது, தன் குறியைத் தன் கையில் ஏந்தி, கண்களை மேல்நோக்கிச் செலுத்தி வலம் வர வேண்டும்" என்றிருக்கிறது.

[7] கும்பகோணம் பதிப்பில், "பிரம்மசரிய விரதத்தை இழந்தவன் பிரம்மஹத்திக்குரிய பிராயச்சித்தத்தைச் செய்து கொள்ள வேண்டும். அல்லது, ஆவின் தோலைத் தரித்துக் கொண்டு ஆறுமாஸம் கிருச்சிரமென்னும் தவத்தைச் செய்தால் அப்பாவம் நீங்கிச் சுத்தனாவான்" என்றிருக்கிறது.

பிறன்மனையுறவு, அல்லது களவு குற்றம் செய்தவன், ஒரு வருட காலம் கடும் நோன்புகளை நோற்று தூய்மையடையலாம்.(25) மற்றொருவனின் உடைமையைத் திருடியவன், தன் சக்திக்குட்பட்ட அனைத்து வழிகளிலும் களவு செய்ததற்கு இணையான மதிப்புடைய உடைமையைத் திரும்பக் கொடுக்க வேண்டும். அப்போது அவன் (களவின்) பாவத்திலிருந்து தூய்மையடைவான்.(26) மூத்தவன் {அண்ணன்} திருமணம் செய்வதற்கு முன்பே திருமணம் செய்து கொள்ளும் இளையவனும் {தம்பியும்}, தனக்கு முன்பே திருமணம் செய்து கொண்ட தம்பியை உடைய மூத்தவனும் {அண்ணனும்}, பனிரெண்டு இரவுகளுக்கு ஆன்மத் திரட்சியுடன் கடும் நோன்பை நோற்று தூய்மையடையலாம்.(27) எனினும், தம்பியானவன், தன் பித்ருக்களைக் காப்பதற்காக மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அந்த இரண்டாவது திருமணத்தின் மூலம் முதல் மனைவி தூய்மையடைகிறாள், அவளது கணவன் அவளை அடைவதனால் பாவமிழைத்தவனாக மாட்டான்[8].(28) பெண்கள், மிகக்குறைந்த அளவிலான, தூய்மையான உணவை உண்டு சாதுர்மாஸ்ய நோன்பை நோற்பதால், அவர்கள் பெரும்பாவங்களில் இருந்தும் தூய்மையடைவார்கள் என்று சாத்திரங்களை அறிந்த மனிதர்கள் அறிவிக்கின்றனர்.(29) பெண்கள், தங்கள் இதயத்தால் இழைக்கும் பாவங்களைச் சாத்திரங்களை அறிந்தோர் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. (இந்த விபரத்துக்குட்பட்ட) அவர்களுடைய எந்தப் பாவமும், சாம்பலால் தேய்க்கப்பட்ட உலோகத் தட்டைப் போல அவர்களது சூதகச் சுழலால் {மாதவிடாயால்} தூய்மையடைகிறார்கள்.(30)

[8] கும்பகோணம் பதிப்பில், "பரிவித்தியும் பரிவேத்தாவும் தமையனுக்கு விவாஹமானபின் நியமத்துன் பன்னிரெண்டு நாளில் செய்ய வேண்டிய கிருச்சிரமென்னும் விரதத்தைச் செய்து கொள்ள வேண்டும். அவர்களில் தம்பி பிதிர்களைக் கரையேற்ற வேண்டி வேறு பெண்ணை விவாஹஞ்செய்து கொள்ள வேண்டும். முதலில் கொண்ட பெண்ணுக்கு அத்தோஷத்தின் ஸம்பந்தமில்லையாகையால் அவள் அசுத்தமுள்ளவளல்லள்" என்றிருக்கிறது.

சூத்திரன் உண்டதால் கறைபடிந்த (பித்தளை மற்றும் தாமிரம் சேர்ந்த கலப்பு உலோகத்தால் செய்யப்பட்ட) தட்டுகள், அல்லது மாட்டால் நுகரப்பட்ட, அல்லது பிராமணனின் கண்டூஷத்தால் {எச்சிலால்} கறைபடிந்த அதே உலோகப் பாத்திரங்கள் {வெண்கலப் பாத்திரங்கள்}, தூய்மையாக்கும் பத்து பொருட்களின் மூலம் தூய்மையடையும்[9].(31) ஒரு பிராமணன் முழு அளவிலான அறத்தைப் பயின்று அடைய வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது. மன்னர் வகையைச் சேர்ந்த ஒரு மனிதன், நாலில் ஒரு பாகம் குறைந்த அளவுக்கு {அறத்தைப்} பயின்று அடைய வேண்டும்.(32) ஒரு வைசியன் இன்னும் நாலில் ஒரு பாகம் (க்ஷத்திரியனைவிடக் கால் பாகம்) குறைந்த அளவுக்கும், ஒரு சூத்திரன் அதனிலும் நாலில் ஒரு பாகம் (வைசியனைவிடக் கால் பாகம்) குறைந்த அளவுக்கு அடையலாம். (பாவக்கழிப்பை உறுதி செய்யும்போது) நால்வகையினரில் ஒவ்வொரு வகையினரும் செய்யும் பாவங்களின் கனம் மற்றும் கனமின்மையை இந்தக் {மேற்கண்ட} கொள்கையின்படியே தீர்மானிக்க வேண்டும்.(33) ஒரு மனிதன், பறவை, அல்லது விலங்கைக் கொன்றுவிட்டாலோ, உயிருடன் கூடிய மரங்களை வெட்டி வீழ்த்திவிட்டாலோ, அவன் தான் செய்த பாவத்தை வெளியிட்டு மூன்று இரவுகள் உண்ணா நோன்பிருக்க வேண்டும்.(34) புணரக்கூடாதாரோடு புணர்ந்த ஒருவன், ஈர ஆடைகளுடன் திரிந்து, சாம்பல் படுக்கையில்[10] உறங்குவதே அவனுக்குப் பாவக்கழிப்பாகும் {பரிகாரமாகும்}.(35) ஓ! மன்னா, முன்னுதாரணங்கள், அறிவு, சாத்திரங்கள், பிரம்மனின் விதிகள் ஆகியவற்றின் படி பாவம் நிறைந்த செயல்களுக்கான பாவக்கழிப்புகள் {பரிகாரங்கள்} இவையே.(36)

[9] "இவை பசுவின் ஐந்து பொருட்களும் {பஞ்சகவ்யம்}, மண், நீர், சாம்பல், அமிலம் {புளி}, நெருப்பு ஆகிய பத்துப் பொருட்களாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "சூத்திரன் எச்சில் பட்டதும், பசுக்களால் மோக்கப்பட்டதும், வாயிலுள்ள எச்சில் பட்டதுமான வெண்கலப் பாத்திரத்தைக் கோவின் பால், தயிர், நெய், மூத்திரம், சாணம் இவ்வைந்தும் மண், ஜலம், சாம்பல், புளி, நெருப்பு இவ்வைந்தும் ஆகிய பத்து பொருள்களால் சுத்தி செய்ய வேண்டும்" என்றிருக்கிறது.

[10] கும்பகோணம் பதிப்பில், "திருநீற்றுமுட்டில் படுத்திருக்க வேண்டும்" என்றிருக்கிறது.

ஒரு பிராமணன், தீமைகள் அனைத்தையும் விலக்கி, கோபத்தையும், வெறுப்பையும் கைவிட்டு, புகழ், பழி ஆகியவற்றை அலட்சியம் செய்து, எப்போதும் சொற்ப உணவையே உண்டு வாழ்ந்து, பேசுவதைத் தவிர்த்து {மௌனவிரதம் இருந்து}, ஒரு புனிதமான இடத்தில் காயத்திரி மந்திரத்தை ஓதினால் அவன் அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைவான்.(37) பகல்வேளையில் அவன் வானத்தையே உறைவிடமாகக் கொள்ளவேண்டும், இரவிலும் அத்தகு இடத்திலேயே அவன் படுக்க வேண்டும். அவன் பகலில் மூன்று முறையும், இரவில் மூன்று முறையும் ஓடையிலோ, தடாகத்திலோ ஆடைகளுடன் மூழ்கி தூய்மைச் சடங்குகளைச் செய்ய வேண்டும்.(38) கடும் நோன்புகளை நோற்கும் அவன் {பிராமணன்}, பெண்கள், சூத்திரர்கள் மற்றும் வீழ்ந்துவிட்ட மனிதர்கள் ஆகியோரோடு பேசாமல் விலக வேண்டும். அத்தகு ஒழுங்கைக் கடைப்பிடிக்கும் ஒரு பிராமணன், அவனால் அறியாமல் செய்யப்பட்ட பாவங்கள் அனைத்திலிருந்தும் தூய்மையடைவான்.(39) ஒரு மனிதன், ஐம்பூதங்களின் சாட்சியாகச் செய்த நல்ல, அல்லது தீய செயல்களின் கனியை மறுமையில் {அடுத்த உலகில்} அடைகிறான். அறமோ, மறமோ அவ்விரண்டை ஒருவன் எவ்வளவு அடைகிறானோ, அவற்றின் விளைவுளான இன்பத்தையோ, துன்பத்தையோ அதே அளவுக்கு அவன் (இங்கேயே) அடைகிறான்.(40) எனவே, ஒருவன் ஞானம், தவங்கள், அறச்செயல்களின் மூலம் (இங்கேயே) அவன் இன்பத்தை அதிகரித்துக் கொள்கிறான். அதேபோல அவன், தீச்செயல்களுக்கான துன்பங்களையும் அடைகிறான்.(41) எனவே ஒருவன் எப்போதும் அறச்செயல்களைச் செய்து, அறமற்ற செயல்களை மொத்தமாகத் தவிர்க்க வேண்டும்.(42)

குறிப்பிட்ட பாவங்களுக்கான பாவக்கழிப்புகள் என்னென்ன என்பதை இப்போது சொல்லிவிட்டேன். மஹாபாதகங்கள் (கடுமையும் கொடுமையும் நிறைந்த பாவங்கள்) என்றழைக்கப்பம் பாவங்களைத் தவிர அனைத்து பாவத்திற்கும் பாவக்கழிப்புகள் உண்டு.(43) தூய்மையற்ற உணவு மற்றும் முறையற்ற பேச்சுகள் போன்ற பாவங்களைப் பொறுத்தவரையில், அவை அறிந்து செய்யப்பட்டவை, அறியாமல் செய்யப்பட்டவை என்று இரு வகைப்படும்.(44) அறிந்து செய்யப்பட்ட பாவங்கள் கொடியவையாகும், அதே வேளையில், அறியாமல் இழைக்கப்பட்ட பாவங்கள் அற்பமானவையே. அவ்விரண்டிற்கும் பாவக்கழிப்புகள் இருக்கின்றன.(45) உண்மையில் பாவமானது, சொல்லப்பட்டிருக்கும் விதிகளால் (அவற்றை நோற்பதால்) கழுவிக்கொள்ளத்தக்கதாக இருப்பினும், அந்த விதிகள் (தெய்வத்தை) நம்புபவர்களுக்காகவும், {பாவக்கழிப்பில்} நம்பிக்கையுள்ளவர்களுக்காகவும் விதிக்கப்பட்டிருக்கின்றன.(46) அவை நாத்திகர்களுக்கோ, நம்பிக்கையற்றவர்களுக்கோ, செருக்கும், தற்பெருமையும் கொண்டவர்களுக்கோ விதிக்கப்படவில்லை.(47)

ஓ! மனிதர்களில் புலியே, ஓ! அறவோரில் முதன்மையானவனே, இம்மையிலும், மறுமையிலும் இன்பத்தை விரும்பும் ஒரு மனிதன், அறத்தின்படியும், அறவோரின் (ஆலோசனையின்) படியும், தனக்கு விதிக்கப்பட்ட கடமைகளின்படியும் நடப்பவனாக இருக்க வேண்டும்.(48) எனவே, ஓ! மன்னா, ஏற்கனவே (என்னால்) சொல்லப்பட்ட காரணங்களின் படி, நீ மன்னனின் கடமைகளைச் செய்யும்போதும், உங்கள் உயிர் மூச்சுகளையும், வாரிசுரிமையையும் பாதுகாக்கும்பொருட்டும் உன் எதிரிகளைக் கொன்றிருப்பதால் உன் பாவங்கள் அனைத்திலும் இருந்து தூய்மையடைவாய்.(49) அல்லது, இவையாவற்றுக்கும் பிறகும் நீ பாவம் நிறைந்தவன் என்று உன்னைக் கருதுவாயானால், பாவக்கழிப்பைச் செய்வாயாக. ஞானிக்குத் தகாத முறையில் துயரின் விளைவால் உன் உயிரை விடாதே" என்றார் {வியாசர்}".(50)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், புனிதமான அந்த முனிவரால் இவ்வாறு சொல்லப்பட்டதும், சிறிது நேரம் சிந்தித்துவிட்டு, அந்தத் தவசியிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்."(51)

சாந்திபர்வம் பகுதி – 35ல் உள்ள சுலோகங்கள் : 51

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்