Food and gifts! | Shanti-Parva-Section-36 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 36)
பதிவின் சுருக்கம் : உண்ணத்தக்கவை, உண்ணத்தகாதவை, அதற்குரிய பாவக்கழிப்புகள், கொடைக்குத் தகுந்தவர், கொடைக்குத்தகாதவர் ஆகியவற்றைக் குறித்துத் தவசிகளிடம் மனு ஆற்றிய உரையை யுதிஷ்டிரனிடம் சொன்ன வியாசர் ...
யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, "ஓ! பாட்டா, எந்த உணவு தூய்மையானது? எது தூய்மையற்றது? எந்தக் கொடை புகழத்தக்கது? (கொடைகளுக்குத்) தகுந்தவராக எவரைக் கருதலாம்? எவரைக் கருதலாகாது?" என்று கேட்டான்.(1)
வியாசர் {யுதிஷ்டிரனிடம்}, "இது தொடர்பாகத் தவசிகளுக்கும், படைப்பின் தலைவனான மனுவுக்கும் இடையில் நடந்த ஒரு பழைய உரையாடல் இருக்கிறது.(2) கிருத காலத்தில் {யுகத்தில்} கடும் நோன்புகளைக் கொண்ட ஒரு முனிவர் கூட்டமானது, சுகமாக அமர்ந்திருப்பவரும், படைப்பின் பெரிய பலமிக்கத் தலைவருமான மனுவை அணுகி, கடமைகளைக் குறித்து உரையாற்றும்படி கேட்டுக் கொண்டனர்.(3) {அவர்கள்}, "எந்த உணவை உண்ண வேண்டும்? (கொடைகளுக்குத்) தகுந்த மனிதராக எவர் கருதப்பட வேண்டும்? என்ன கொடைகள் கொடுக்கலாம்? ஒரு மனிதன் எவ்வாறு படிக்க {பயில} வேண்டும்? ஒருவன் என்ன தவங்கள் செய்ய வேண்டும்? என்ன செயல்கள், எவ்வாறு செய்யப்பட வேண்டும்? எந்தச் செயல்கள் செய்யப்படக்கூடாது?" என்று கேட்டனர்.(4)
இவ்வாறு அவர்களால் கேட்கப்பட்டவரும், தெய்வீகமானவரும், தான்தோன்றியுமான மனு, அவர்களிடம், "கடமைகளைக் குறித்துச் சுருக்கமாகவும், விரிவாகவும் விளக்கப் போகிறேன், கேட்பீராக.(5) {அறத்தொடர்பிலிருந்து} விலக்கப்பட்ட பகுதிகளில் (புனித மந்திரங்களை) அமைதியாக ஓதுதல், ஹோமங்கள், நோன்புகள், தன்னைக் குறித்த அறிவு, புனித ஆறுகள், பக்திச் செயல்பாடுகளுக்கு அர்ப்பணிப்புள்ள மனிதர்கள் வசிக்கும் பகுதிகள் ஆகியன(6) தூய்மையாக்கும் செயல்பாடுகளாகவும், பொருட்களாகவும் சொல்லப்படுகின்றன. குறிப்பிட்ட சில மலைகளும் தூய்மையாக்குபவையே, தங்கம் உண்ணுதல், ரத்தினங்களும், மதிப்புமிக்கக் கற்களும் மூழ்கிய நீரில் நீராடுதல் ஆகியனவும் தூய்மையாக்குபவையே[1].(7) புனிதத்தலங்களுக்குப் பயணிப்பது மற்றும் புனித நெய்யை உண்பது ஆகியனவும், விரைவாக மனிதனைத் தூய்மையாக்கவல்லவையே என்பதில் ஐயமில்லை.(8) செருக்குடைய {அகங்காரம் கொண்ட} எந்த மனிதனும் எப்போதும் ஞானியெனச் சொல்லப்பட மாட்டான். அவன் நீண்ட நாட்கள் வாழ விரும்பினால், (தன் செருக்குக்கான பாவக்கழிப்பாக) மூன்று இரவுகள் வெண்ணீரைக் குடிக்க வேண்டும்[2].(9)
[1] கும்பகோணம் பதிப்பில், "விசேஷவிதி இல்லாவிடத்தில் ஜபம், ஹோமம், உபவாசம், ஆத்மஜ்ஞானம் இவைகளுள்ள பெரியோர்களிருக்கும் இடம், புண்ணிய நதிகள், பரிசுத்தமான பர்வதங்கள், ஸுவர்ணம் நெய் இவைகளைப் பூஜிப்பது, ரத்நஸ்நானம், தேவாலயத்துக்குப் போவது இவைகள் மனிதனைச் சீக்கிரத்தில் சுத்தனாகச் செய்வதில் சந்தேகமில்லை" என்றிருக்கிறது.[2] கும்பகோணம் பதிப்பில், "அகங்காரமடைந்தவன், ஆயுளுக்குக் குறைவின்றி இருக்க வேண்டுமானால், தப்தகிருச்சிரமென்னும் தவத்தைச் செய்ய வேண்டும்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "முதல் மூன்று நாள் ஆறுபலம் வெந்நீரும் பின் மூன்று நாள் மூன்று பலம் காய்ந்த பாலும், பின் மூன்று நாள் ஒருபலம் சூடுள்ள நெய்யும் புஜித்துப் பின் மூன்று நாள் ஒன்றும் உண்ணாமலிருப்பது தப்தகிருச்சிர விரதத்தின் லக்ஷணம்" என்றிருக்கிறது.
கொடுக்கப்படாதவற்றை ஏற்க மறுப்பது, கொடை, (சாத்திரக்) கல்வி, தவம், தீங்கிழையாமை {அஹிம்சை}, உண்மை, கோபத்திலிருந்து விடுதலை, வேள்விகளில் தேவர்களை வழிபடுதல் ஆகியவையே அறத்தின் பண்புகளாகும்.(10) இருப்பினும், காலம் மற்றும் இடத்திற்கு ஏற்ப அந்த அறமே கூடப் பாவமாகக்கூடும். இவ்வாறே (அடுத்தவருக்குச் சொந்தமானவற்றை) ஏற்பது, பொய்மை, தீங்கிழைத்தல், கொலை செய்தல் ஆகியவையும் கூடச் சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் அறமாகக் கூடும்[3].(11) நீதியைத் தீர்மானிக்க இயன்ற மனிதர்களைப் பொறுத்தவரை, செயல்கள் என்பன அறம் சார்ந்தவை {நல்லவை}, மறம் சார்ந்தவை {பாவம் நிறைந்த தீயவை} என இரு வகைப்படும். மேலும் உலகம் சார்ந்த மற்றும் வேதம் சார்ந்த கண்ணோட்டத்தில், அறமும், பாவமும் (விளைவுகளின் அடிப்படையில் நல்லவையாகவோ, தீயவையாகவோ அமைகின்றன. வேதத்தின் கண்ணோட்டத்தில் அறமும், பாவமும், (ஒரு மனிதன் செய்யும், அல்லது செய்யாத அனைத்தும்) செயல் மற்றும் செயலின்மை என்ற இருவகையில் வகுக்கப்படுகின்றன. (வேதச்சடங்குகளைச் செய்யாமல், தியான வாழ்வைப் பின்பற்றி) செயல்பாடின்றி இருப்பது (மறுபிறப்பில் இருந்து) விடுதலையளிக்கிறது; அதே வேளையில் (வேதச் சடங்குகளைப் பயில்வதால் உண்டாகும்) செயல்பாட்டின் விளைவுகள் மீண்டும் மீண்டும் இறப்பையும், மறுபிறப்பையும் தருகின்றன. உலகப் பார்வையில் கண்டால், தீச்செயல்கள் தீமைக்கும், நற்செயல்கள் நன்மைக்கும் இட்டுச் செல்கின்றன. எனவே உலகக் கண்ணோட்டத்தில் அறத்தையம், பாவத்தையும், அவற்றின் விளைவுகளால் உண்டான நல்ல மற்றும் தீய தன்மைகளைக் கொண்டு வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்[4].(12,13)
[3] "குற்றங்களுக்கு மன்னன் அபராதம் விதிக்கும்போது, அவற்றை நாட்டின் பயனுக்காக ஏற்பது; தலைவனின் உயிரைக் காப்பதற்காகச் சொல்லப்படும் பொய்மை; குற்றவாளியை மன்னன் கொல்வது; அல்லது தற்காப்பின் போது கொல்வது போன்றவற்றை இவ்வரி குறிக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[4] "இந்த இரண்டு ஸ்லோகங்களும் அதீத சொற்செரிவுடன் இருக்கின்றன. ஆங்கில உரையைப் புரிந்து கொள்ளும்பொருட்டு இதில் நான் ஒரு சில சொற்களைச் செருக வேண்டி இருந்தது. பகட்டு ஆரவாரச் சொற்றொடராகத் தெரிவதைத் தவிர்க்கவே இடைச்செருகல்கள் அனைத்தையும் அடைப்புக்குறிக்குள் கொடுத்திருக்கிறேன்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "அறிந்தவர்களுக்கு இந்த இரண்டு விதமான தர்மாதர்மங்களும், பிரவிருத்தியென்றும் நிவிருத்தியென்றும் இரண்டுவிதங்களாகும். பிரவிருத்தி நிவிருத்தியாகிய இவ்விரண்டும் லௌகிகமென்றும் வைதிகமென்றும் இவ்விரண்டு வகைப்படும். இவைகளுள், வைதிகமான நிவிருத்தியின்பயன் அழிவில்லாத பதவியும் அவிதப் பிரவிருத்தியின் பயன் அழிவுள்ள பதவியுமாகும். லௌகிகமான அவ்விரண்டுக்கும் அது சுபமானால் சுபமான பயனும், அசுபமானால் அசுபமான பயனும் உண்டாகுமெனத் தெரிந்து கொள்ள வேண்டும்" என்றிருக்கிறது.
(வெளிப்படையாகவே) தீமையாகத் தெரியும் செயல்களை, தேவர்கள், சாத்திரங்கள், உயிர், உயிர்வாழ்வதற்கான வழிமுறைகள் ஆகியவற்றைக் கருதி செய்யும்போது, அவை நன்மையான விளைவுகளையே உண்டாக்கும்.(14) எதிர்பார்ப்புடன் செய்யப்படும் செயல்களுக்கும், ஐயம் நிறைந்ததாக இருப்பினும், எதிர்காலத்தில் (யாரோ ஒருவருக்கு) காயத்தை ஏற்படுத்தும், அல்லது காயமேற்படுத்தும் விளைவுகளைத் தரும் என்று தெரிந்தே செய்யப்படும் செயல்களுக்கும் பாவக்கழிப்புகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.(15) கோபத்தாலோ, தீர்மானிக்க முடியாத குழப்பத்தாலோ ஒரு செயல் செய்யப்படும்போது, பாவக்கழிப்பானது, உள்ளுணர்வு, சாத்திரங்கள் மற்றும் அறிவு ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படியும், உடலுக்கு வலியைத் தரும்படியும் செய்யப்பட வேண்டும். மேலும் மனத்திற்கு ஏற்புடையதாகவோ, ஏற்பில்லாததாகவோ ஏதாவது செய்யப்பட்டால், அதனால் உண்டாகும் பாவம் புனிதமாக்கப்பட்ட உணவு மற்றும் மந்திரங்களை ஓதுதல் ஆகியவற்றின் மூலம் தூய்மையடையும்.(16,17)
(ஏதோ ஒரு குறிப்பிட்ட வழக்கில்) தன் தண்டக் கோலை புறந்தள்ளும் மன்னன், ஓரிரவு உண்ணா நோன்பிருக்க வேண்டும். (ஏதோ ஒரு குறிப்பிட்ட வழக்குக்கான) தண்டனை வழங்குவதில் மன்னனுக்கு அறிவுரைகூறாமல் தவிர்க்கும் புரோகிதர், பாவக்கழிப்பாக மூன்று இரவுகள் உண்ணா நோன்பிருக்க வேண்டும்.(18) துயரத்தின் காரணமாக ஆயுதம் மூலமாகத் தற்கொலை செய்ய முயன்ற மனிதன், {பாவக்கழிப்பாக} மூன்று இரவுகள் உண்ணா நோன்பிருக்க வேண்டும்.(19) தங்கள் கடமைகளையும், தங்கள் வகை {வர்ணம்}, குலம், நாடு, குடும்பம் சம்பந்தப்பட்ட நடைமுறைகளையும் கைவிடுபவர்களுக்கும், தங்கள் சொந்த அறத்தையே {தர்மத்தையே}[5] கைவிடுபவர்களுக்கும் எந்தப் பாவக்கழிப்பும் கிடையாது.(20)
(ஏதோ ஒரு குறிப்பிட்ட வழக்கில்) தன் தண்டக் கோலை புறந்தள்ளும் மன்னன், ஓரிரவு உண்ணா நோன்பிருக்க வேண்டும். (ஏதோ ஒரு குறிப்பிட்ட வழக்குக்கான) தண்டனை வழங்குவதில் மன்னனுக்கு அறிவுரைகூறாமல் தவிர்க்கும் புரோகிதர், பாவக்கழிப்பாக மூன்று இரவுகள் உண்ணா நோன்பிருக்க வேண்டும்.(18) துயரத்தின் காரணமாக ஆயுதம் மூலமாகத் தற்கொலை செய்ய முயன்ற மனிதன், {பாவக்கழிப்பாக} மூன்று இரவுகள் உண்ணா நோன்பிருக்க வேண்டும்.(19) தங்கள் கடமைகளையும், தங்கள் வகை {வர்ணம்}, குலம், நாடு, குடும்பம் சம்பந்தப்பட்ட நடைமுறைகளையும் கைவிடுபவர்களுக்கும், தங்கள் சொந்த அறத்தையே {தர்மத்தையே}[5] கைவிடுபவர்களுக்கும் எந்தப் பாவக்கழிப்பும் கிடையாது.(20)
[5] கங்குலியில் இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் Creed என்ற ஆங்கில வார்த்தைக்குச் சமயம் என்பதே இணையான சொல். கும்பகோணம் பதிப்பில் இது தர்மம் என்றே சொல்லப்படுகிறது. எனவே, நாம் அறமெனவும் கொள்ளலாம்.
ஒரு சந்தர்ப்பத்தில் என்ன செய்ய வேண்டும் என்ற ஐயம் எழும்போது, வேத சாத்திரங்களை அறிந்த பத்து பேரோ, அவற்றை {வேத சாத்திரங்களை} அடிக்கடி உரைக்கும் மூன்று பேரோ தீர்மானிக்க {ஐயத்தைத் தெளிவிக்க} வேண்டும் என்ற சாத்திரங்களின் ஆணை கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.(21) காளை, பூமி, சிற்றெறும்புகள், புழுதியில் உதிக்கும் புழுக்கள், நஞ்சு ஆகியவை பிராமணர்களால் உண்ணப்படக்கூடாது.(22) செதில்களற்ற மீன்களையும், தவளைகளையும், நான்கு கால் கொண்ட நீர்விலங்குகளில் ஆமைகளைத்தவிர வேறு எந்த விலங்கையும் அவர்கள் {பிராமணர்கள்} உண்ணக்கூடாது[6].(23) பாசங்கள் என்றழைக்கப்படும் நீர்க்கோழிகள், வாத்துகள், சுபர்ணங்கள், சக்கரவாகங்கள், மீன்கொத்திப்பறவைகள், நாரைகள், காக்கைகள், நீர்க்காகங்கள், கழுகுகள், பருந்துகள், ஆந்தைகள்,(24) மற்றும் ஊன் உண்பவையும், கூரிய நீண்ட பற்களைக் கொண்டவையுமான நான்கு கால் விலங்குகள், பறவைகள் ஆகியவற்றையும் உண்ணக்கூடாது,(25) செம்மறி ஆடு, பெண்கழுதை, பெண் ஒட்டகம், புதிதாகக் கன்றீன்ற பசு, {மனிதப்} பெண்கள், மான்கள் ஆகியவற்றின் பாலையும் ஒரு பிராமணன் பருகக் கூடாது.(26) இதைத்தவிரவும், பித்ருக்களுக்குக் காணிக்கையளிக்கப்பபட்ட உணவு, அண்மையில் பிள்ளை ஈன்ற பெண்ணால் சமைக்கப்பட்ட உணவு, அறியாத மனிதரால் சமைக்கப்பட்ட உணவு ஆகியவற்றை உண்ணக்கூடாது. அண்மையில் கன்றீன்ற பசுவின் பாலும் பருகப்படக்கூடாது.(27)
[6] ஆமைகளைத் தவிர மேற்கண்ட எந்த உயிரினத்தையும் உண்ணக்கூடாது என்பது பொருள் என நினைக்கிறேன். கும்பகோணம் பதிப்பில், "எருது, சிற்றெறும்புகள், நறுவிலிக்காய், வத்ஸநாப முதலிய விஷம், சல்கமென்னும் சிறகில்லாத மீன்கள், ஆமையல்லாத நாற்கால் பிராணிகள், ஜலத்தினாலுண்டான தவளைகள், பாஸமென்னும் பக்ஷிகள், ஹம்ஸங்கள், கருடன், சக்ரவாகம், மீன்கொத்திக் குருவிகள், கொக்கு, காகம், நீர்க்காகம், கழுகு, பருந்து, கோட்டான், மாம்ஸம் உண்ணும் கோலப்பல்லுள்ள நாலுகால் பிராணிகள், இரண்டு வரிசை பல்லுள்ள பிராணிகள், நாலு கோரப்பல்லுள்ளவைகள், செம்மறியாடுகள் இவைகள் யாவும் பிராமணர்களுக்குப் புஜிக்கத்தக்கவைகளல்ல" என்றிருக்கிறது.
ஒரு க்ஷத்திரியனால் சமைக்கப்பட்ட உணவை ஒரு பிராமணன் உண்டால், அஃது அவனது சக்தியைக் குறைக்கும்; ஒரு சூத்திரனால் அளிக்கப்பட்ட உணவை உண்டால், அவனிடம் பிரம்ம ஒளி குன்றும், கொல்லன், அல்லது கணவனோ, பிள்ளையோ இல்லாத பெண் கொடுக்கும் உணவை அவன் உண்டால், அஃது அவனது வாழும் காலத்தைக் குறைக்கும்.(28) வட்டிக்குப் பணம் தருபவனால் அளிக்கப்படும் உணவு புழுதிக்குச் சமமானது, அதே வேளையில், பரத்தமையினால் வாழும் ஒரு பெண்ணால் கொடுக்கப்படும் உணவு விந்துக்குச் சமமானது. தங்கள் மனைவியரின் கற்பில்லாமையைச் சகித்துக் கொள்ளும் மனிதர்களால் அளிக்கப்படும் உணவும், தங்கள் துணைவிகளால் ஆளப்படும் மனிதர்களால் அளிக்கப்படும் உணவும் தவிர்க்கப்பட வேண்டியன.(29)
வேள்வியின் குறிப்பிட்ட பகுதியில் (கொடைகள் பெற) தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மனிதன் {யாகத்தில் தீக்ஷை பெற்றவன்}, தன் செல்வத்தை அனுபவிக்காதவன், அல்லது கொடைகள் அளிக்காதவனால் கொடுக்கப்படும் உணவு, சோமத்தை விற்பவன், காலணி செய்பவன், கற்பற்ற பெண், வண்ணான்,(30) மருத்துவன், காவலாளி, மனிதக் கூட்டம், மொத்த கிராமத்தால் சுட்டப்படும் ஒருவன், ஆடல் மகளிரின் ஆதரவில் வாழ்பவன்,(31) அண்ணனுக்கு முன்பு மணமுடித்த தம்பி, பாணர்கள், வந்திகள், சூதாடிகள் ஆகியோரால் கொடுக்கப்படும் உணவு, இடது கையால் பெறப்பட்ட உணவு, நாள்பட்ட உணவு,(32) மதுவில் கலந்த உணவு, ஏற்கனவே உண்ணப்பட்ட உணவின் பகுதி, விருந்தில் எஞ்சிய உணவு ஆகியவற்றை (ஒரு பிராமணன்) உண்ணக்கூடாது. பணியாரங்கள், கரும்பு, அறைக்கீரை, இனிப்பூட்டப்பட்ட பாலில் கொதிக்கவைக்கப்பட்ட அரிசி {பால்சோறு/பாயாசம்} ஆகியவை தங்கள் இன்சுவையை இழந்தால் உண்ணப்படக்கூடாது.(33) தேவர்களுக்கு அர்ப்பணிக்கப்படாத வறுத்த வாற்கோதுமை மாவு {சத்துமாவு}, வறுக்கப்பட்ட பிறவகைத் தானியங்கள், தயிரில் கலந்தவை ஆகியவை நாட்பட்டதனால் உண்ணப்படக்கூடாது, இனிப்பூட்டப்பட்ட பாலில் கொதிக்க வைக்கப்பட்ட அரிசி {பாயாசம்}, எள் கலந்த உணவு, இறைச்சி, அப்பங்கள் ஆகியவை இல்லற நோன்பு நோற்கும் பிராமணர்களால் உண்ணப்படக்கூடாது. தன் இல்லத்தில் இவ்வாறு வாழும் ஓர் இல்லறத்தான், உலகைத் துறந்த பிக்ஷுவைப் போல ஆகிறான்.(34-36) வீட்டில் தன் மனைவியரோடு வாழும் இத்தகு நடத்தை கொண்ட மனிதன், பெரும் அறத்தகுதியை ஈட்டுகிறான்.
புகழ் அடைவதற்காகவோ (நிந்தனை போன்ற) அச்சத்தின் காரணமாகவோ, ஒரு நலம் விரும்பிக்காகவோ ஒருவன் கொடையளிக்கக்கூடாது.(37) பாடல், ஆடல் செய்து வாழ்பவருக்கோ, தொழில்முறை கோமாளிகளுக்கோ, போதையுண்டவனுக்கோ, அறிவு குலைந்தவனுக்கோ, கள்வனுக்கோ, பழுதூற்றுபவனுக்கோ,(38) முட்டாளுக்கோ, நிறம் மங்கியவனுக்கோ, அங்கப்பழுதுள்ளவனுக்கோ, உயரம் குறைந்தவனுக்கோ {குள்ளனுக்கோ}, தீயவனுக்கோ, இழிந்த தீய குடும்பத்தில் பிறந்தவனுக்கோ, நோன்புகள் நோற்று புனிதமடையாதவனுக்கோ நல்லோன் எவனும் கொடையளிக்க மாட்டான்.(39) வேத அறிவில்லாத பிராமணனுக்கு எந்தக் கொடையும் அளிக்கப்படக்கூடாது. ஸ்ரோத்ரியனாக[7] இருந்தால் மட்டுமே அவனுக்குக் கொடைகள் அளிக்கப்படலாம். முறையற்ற கொடையும், முறையற்ற கொடையேற்பும், கொடுப்பவனுக்கும், பெறுபவனுக்கும் தீய விளைவுகளையே உண்டாக்கும்.(40) பாறை, அல்லது கருங்காலி மரத்தின் துணை கொண்டு பெருங்கடலைக் கடக்க முயல்பவன் மூழ்குவதைப் போலவே, (இத்தகு வழக்கில்) கொடுப்பவனும், அதைப் பெறுபவனும் என இருவரும் சேர்ந்தே மூழ்குவார்கள்.(41)
[7] ஸ்ரோத்ரியன் என்பவன் வேதங்களை அறிந்தவனாவான் எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஈர விறகால் மறைக்கப்படும் நெருப்பு சுடர்விடாததைப் போலவே தவம், கல்வி, பக்தி ஆகியவை அற்ற கொடையேற்பாளன், (கொடையாளனின்) கொடையால் எந்த நன்மையையும் அடைய முடியாது.(42) (மனித மண்டை) ஓட்டில் உள்ள நீரும், நாயின் தோலில் செய்யப்பட்ட துருத்தியில் உள்ள பாலும், அவை ஏற்றுக் கொண்ட பாத்திரத்தின் விளைவால் தூய்மையற்றதாவதைப் போலவே, நன்னடத்தை இல்லாதவரிடம் வேதங்களும் கனியற்றதாகப் போகும்.(43) மந்திரங்கள் அறியாதவனும், சாத்திரங்களை அறியாதவனும், பொறாமை குணம் கொண்டவனுமான ஓர் இழிந்த பிராமணனுக்குக் கருணையின் அடிப்படையில் ஒருவன் கொடையளிக்கலாம்.(44) ஏழை, அல்லது துன்பப்படுபவன், அல்லது நோயாளி மனிதனுக்கு ஒருவன் கருணையின் மூலம் கொடையளிக்கலாம். ஆனால், அத்தகு மனிதனுக்குக் கொடுப்பதால் (ஆன்ம) நன்மை பெற முடியும் என்ற நம்பிக்கையிலோ, அதன் மூலம் அறத்தகுதி ஈட்ட முடியும்என்ற நம்பிக்கையிலோ கொடையளிக்கக்கூடாது.(45)
வேதங்களை அறியாத பிராமணனுக்குக் கொடையளிப்பது பெறுபவனுடைய குறையின் விளைவால் முற்றிலும் கனியற்றதாகிறது என்பதில் எந்த ஐயமும் கிடையாது.(46) மரத்தால் செய்யப்பட்ட யானையையோ, தோலால் செய்யப்பட்ட மானையோ போன்றவனே வேத கல்வியற்ற பிராமணன். மேற்கண்ட மூன்றிடமும் பெயரையன்றி வேறேதும் இருப்பதில்லை.(47) மகளிரிடம் உற்பத்தி செய்ய முடியாத அலியைப் போலவோ, பசுவிடம் உற்பத்தி செய்ய முடியாத பசுவைப் போலவோ, இறகுகளற்று வாழும் ஒரு பறைவையைப் போலவோ மந்திரங்கள் இல்லாத பிராமணனும் வாழ்வான்.(43) பருப்பற்ற தானியம், நீரற்ற கிணறு, சாம்பலில் ஊற்றப்படும் நீர்க்காணிக்கைகளைப் போன்றதே கல்வியில்லாத பிராமணனுக்கு அளிக்கப்படும் கொடையாகும்.(49) கல்லாத பிராமணன், தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் கொடுக்கப்படும் உணவை அழிப்பவனும், (அனைவரின்) எதிரியுமாவான். அத்தகு மனிதனுக்குக் கொடுக்கப்படும் கொடை ஏதிலியாகப் போகும். எனவே, அவன் (அடுத்தவர் செல்வத்தைக் கொள்ளையடிக்கும்) கள்வனாவான். மறுமையில் அருள் உலகங்களை அடைவதில் அவன் வெல்லவே முடியாது" {என்றார் மனு}.(50)
ஓ! யுதிஷ்டிரா, (அந்தச் சந்தர்ப்பத்தில்) மனுவால் சொல்லப்பட்ட அனைத்தையும் உனக்குச் சுருக்கமாகச் சொல்லிவிட்டேன். ஓ! பாரதக் குலத்தின் காளையே, இந்த உயர்ந்த உரையாடல் அனைவராலும் கேட்கப்பட வேண்டும்" {என்றார் வியாசர்}.(51)
சாந்திபர்வம் பகுதி – 36ல் சுலோகங்கள் : 51
ஆங்கிலத்தில் | In English |