The coronation of Yudhishthira! | Shanti-Parva-Section-40 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 40)
பதிவின் சுருக்கம் : கிருஷ்ணனின் ஆணைப்படி வேள்விப்பீடத்தை அமைத்த தௌமியர்; சங்கிலிருந்த மங்கல நீரை யுதிஷ்டிரனின் தலையில் ஊற்றிய கிருஷ்ணன்; குடிமக்கள் கொடுத்த பரிசை ஏற்றுக் கொண்டு, பதிலுக்கு அவர்களைக் கௌரவித்த யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனை வாழ்த்திய குடிமக்கள்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "துயரத்திலிருந்தும், இதயத்தின் நோயிலிருந்தும் {துன்பத்திலிருந்தும்} விடுபட்ட குந்தியின் அரச மகன் {யுதிஷ்டிரன்}, தங்கத்தாலான ஒரு சிறப்பான இருக்கையில் கிழக்கு நோக்கி அமர்ந்தான்.(1) எதிரிகளைக் கொல்பவர்களான சாத்யகி மற்றும் வாசுதேவன் {கிருஷ்ணன்} ஆகிய இருவரும், அழகானதும், சுடர்மிக்கதும், தங்கத்தாலானதுமான மற்றொரு இருக்கையில், அவனது {யுதிஷ்டிரனின்} முகம் நோக்கி அமர்ந்தனர்.(2) பீமனும், அர்ஜுனனும், மன்னனைத் தங்களுக்கு மத்தியில் அமர்த்திக் கொண்டு, அவனுக்கு இருபுறத்திலும் ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய இருக்கைகள் இரண்டில் அமர்ந்தனர்.(3) தந்தத்தாலானதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், வெண்ணிறத்திலானதுமான அரசக் கட்டிலில் சகாதேவன் மற்றும் நகுலனுடன் பிருதையும் {குந்தியும்} சேர்ந்து அமர்ந்திருந்தாள்.(4) சுதர்மர்[1], விதுரன், தௌமியர், குருமன்னன் திருதராஷ்டிரன் ஆகியோர் ஒவ்வொருவரும் நெருப்பின் பிரகாசத்தைக் கொண்ட தனித்தனி இருக்கைகளில் தனியாக அமர்ந்தனர்.(5) யுயுத்சு, சஞ்சயன், பெரும்புகழ் கொண்ட காந்தாரி ஆகியோர் அனைவரும் மன்னன் திருதராஷ்டிரன் எங்கு அமர்ந்திருந்தானோ அங்கேயே அமர்ந்திருந்தனர்.(6)
[1] "இவர் குருக்களின் புரோகிதராவார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். பிபேக்திப்ராயின் பதிப்பிலும் இவ்வாறே குறிப்பிடப்படுகிறார். கும்பகோணம் பதிப்பில் துரியோதனனின் ஆசிரியர் என்று இவர் குறிப்பிடப்படுகிறார்.
அங்கே அமர்ந்திருந்த அற ஆன்மா கொண்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, அழகிய வெண்மலர்கள், ஸ்வஸ்தீகங்கள் {ஸ்வஸ்திக் சின்னங்கள்}, பல்வேறு பொருட்களால் நிறைந்திருந்த பாத்திரங்கள், பூமி, (தன் முன்னே வைக்கப்பட்டிருந்த) தங்கம், வெள்ளி மற்றும் ரத்தினங்கள் ஆகியவற்றைத் தீண்டினான்.(7) பிறகு புரோகிதரின் தலைமையிலான குடிமக்கள் அனைவரும், பல்வேறு வகையான மங்கலப் பொருட்களுடன் மன்னனைக் காண அங்கே வந்தனர்.(8) அப்போது பூமி {மண்}, தங்கம், பல வகைகளிலான ரத்தினங்கள் ஆகியவையும், மூடிசூட்டும் சடங்குக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் அங்கே அபரிமிதமான அளவில் கொண்டு வரப்பட்டன.(9) அங்கே விளிம்பு வரை (நீரால்) நிறைந்திருந்த தங்கக் கலசங்கள், தாமிரம், வெள்ளி மற்றும் மண்ணால் செய்யப்பட்ட கலசங்கள், மலர்கள், பொரி, குசப் புல் {தர்ப்பை}, பசும்பால்,(10) (வேள்விக்கான) விறகுகளான சமி {வன்னி}, பிப்பலம் {அரசு}, பலாசு மரங்கள், தேன், தெளிந்த நெய், உடும்பரத்தால் {அத்தி மரத்தால்} செய்யப்பட்ட வேள்விக் கரண்டிகள், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட சங்குகள் ஆகியன இருந்தன.(11)
அப்போது புரோகிதர் தௌமியர், கிருஷ்ணனின் வேண்டுகோளின் பேரில், கிழக்கு மற்றும் வடக்கை நோக்கி படிப்படியாக உயரும் பீடத்தை விதிப்படி கட்டமைத்தார்[2].(12) புலித்தோலால் மறைக்கப்பட்டதும், சுடர்மிக்கப் பிரகாசம் கொண்டதும் சர்வதோபத்திரம் என்றழைக்கப்படுவதுமான ஓர் அழகிய இருக்கையில் உயர் ஆன்ம யுதிஷ்டிரனையும், துருபதன் மகளான கிருஷ்ணையையும் {திரௌபதியையும்} உறுதியான பாதங்களுடன் அமரச் செய்து, உரிய மந்திரங்களுடன் தெளிந்த நெய்யை (வேள்வித்தீயில்) ஆகுதியாக ஊற்றத் தொடங்கினார்.(13,14) அப்போது தன் இருக்கையில் இருந்து எழுந்த தசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்}, புனிதமாக்கப்பட்ட சங்கை எடுத்து, அதில் இருந்த நீரை, பூமியின் தலைவனும், குந்தியின் மகனுமான யுதிஷ்டிரனின் தலையில் ஊற்றினான். கிருஷ்ணனின் வேண்டுகோளின் பேரில் அரச முனியான திருதராஷ்டிரனும், குடிமக்கள் அனைவரும் அதையே செய்தனர்.(15) சங்கிலிருந்த புனிதமாக்கப்பட்ட நீரில் இவ்வாறு தன் தம்பிகளுடன் குளித்த அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, மிகவும் அழகு நிறைந்தவனாகத் தெரிந்தான்.(16)
[2] கும்பகோணம் பதிப்பில், "பிறகு, ஸ்ரீ கிருஷ்ணபகவான் கட்டளைப்படி புரோஹிதரும் புத்திமானுமான தௌம்யர் வடகிழக்குப் பாகத்தில் சற்றுப் பள்ளமானவிடத்தில் லக்ஷணப்படி வேதியை அமைத்து" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "வடக்கு மற்றும் கிழக்கை நோக்கி சரிந்து செல்லும் மங்கலமான பீடத்தை அமைத்தார்" என்றிருக்கிறது.
அப்போது, பணவங்களும், ஆனகங்களும், பேரிகைகளும் முழக்கப்பட்டன. நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், குடிமக்களால் தனக்குக் கொடுக்கப்பட்ட பரிசுகளை முறையாக ஏற்றுக் கொண்டான். தன் வேள்விகள் அனைத்திலும் எப்போதும் அபரிமிதமாகக் கொடையளிக்கும் மன்னன், தன் குடிமக்களைப் பதிலுக்குக் கௌரவித்தான்.(17) தனக்கு (சிறப்பான) ஆசிகளைக் கூறிய பிராமணர்களுக்கு ஓராயிரம் நிஷ்கங்களைக் கொடுத்தான். அவர்கள் அனைவரும் வேதங்களைக் கற்றறிந்தவர்களாகவும், ஞானமும், நன்னடத்தையும் கொண்டவர்களாகவும் இருந்தனர்.(18) ஓ! மன்னா, (கொடைகளால்) நிறைவடைந்த பிராமணர்கள், செழிப்பையும், வெற்றியையும் அடையுமாறு அவனை வாழ்த்தி, அன்னங்களைப் போன்ற இனிமையான குரலில் அவனைப் புகழ்ந்தனர்.(19)
{அவர்கள்}, "ஓ! வலிமையான கரங்களைக் கொண்ட யுதிஷ்டிரா, ஓ! பாண்டுவின் மகனே, நற்பேற்றாலே வெற்றி உனதானது, ஓ! பெரும் காந்தி கொண்டவனே, நற்பேற்றாலேயே, ஆற்றலின் மூலம் உன் நிலையை மீண்டும் அடைந்தாய்.(20) நற்பேற்றாலேயே, காண்டீவதாரியும் {அர்ஜுனனும்}, பீமசேனனும், நீயும், மாத்ரியின் மகன்கள் இருவரும் உங்கள் எதிரிகள் அனைவரையும் கொன்று, வீரர்களுக்கு அழிவைத் தந்த இந்தப் போரில் இருந்து உயிருடன் தப்பி, நலமாக இருக்கிறீர்கள். ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அடுத்து செய்யப்பட வேண்டிய செயல்களைத் தாமதமில்லாமல் கவனிப்பாயாக" என்றனர்.(21,22) ஓ! பாரதா {ஜனமேஜயா}, தன் நண்பர்களுடன் கூடியவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், அந்தப் பக்திமான்களால் இவ்வாறு துதிக்கப்பட்டு, அந்தப் பெரிய நாட்டின் அரியணையில் நிறுவப்பட்டான்" {என்றார் வைசம்பாயனர்}.(23)
சாந்திபர்வம் பகுதி – 40ல் உள்ள சுலோகங்கள் : 23
ஆங்கிலத்தில் | In English |