Formation of Ministry! | Shanti-Parva-Section-41 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 41)
பதிவின் சுருக்கம் : குடிமக்களுக்கு விடைகொடுத்தனுப்பிய யுதிஷ்டிரன்; பீமன், விதுரன், சஞ்சயன், நகுலன், அர்ஜுனன், தௌமியர், சகாதேவன், யுயுத்சு ஆகியோரை நாட்டின் முக்கிய பொறுப்புகளில் நியமித்தது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "காலத்திற்கும் இடத்திற்கும் பொருத்தமானதும், தன் குடிமக்களால் சொல்லப்பட்டதுமான இந்த வார்த்தைகளைக் கேட்ட மன்னன் யுதிஷ்டிரன், பின்வரும் வார்த்தைகளால் அவர்களுக்குப் பதிலளித்தான்.
{யுதிஷ்டிரன்}, "பாண்டு மகன்களின் தகுதிகள் உண்மையோ, பொய்யோ, இவ்வாறு திரண்டிருக்கும் முதன்மையான பிராமணர்களால் இவ்வாறு ஆறுதல் சொல்லப்படுவதற்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.(2) இத்தகு பண்புகளைக் கொண்டோராக எங்களை நீங்கள் வெளிப்படையாகச் சொல்வதால் உங்கள் கருணைக்கு நாங்கள் பாத்திரமாக இருக்கிறோம் என்பதில் ஐயமில்லை.(3) எனினும், மன்னர் திருதராஷ்டிரர் எங்களுக்குத் தந்தையும், தேவரும் ஆவார். எனக்கு ஏற்புடையதைச் செய்ய நீங்கள் விரும்பினால், நீங்கள் எப்போதும் அவருக்கு ஏற்புடையதைச் செய்து, அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.(4) என் உறவினர்கள் அனைவரையும் கொன்ற பிறகு, நான் அவருக்காக மட்டுமே உயிருடன் வாழ்கிறேன். அனைத்து வகையிலும் விழிப்புணர்வுடன் எப்போதும் அவருக்குத் தொண்டாற்றுவதே என் பெருங்கடமை.(5)
நீங்களும் என் நண்பர்களும் நான் உங்கள் கருணைக்குப் பாத்திரமானவன் என்று கருதினால், திருதராஷ்டிரரிடம் நீங்கள் முன்பு நடந்து கொண்ட அதே நடத்தையுடன் நடந்துகொள்ளுமாறு உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்வேன்.(6) அவர் இந்த உலகத்திற்கும், உங்களுக்கும் எனக்கும் தலைவராவார். பாண்டவர்களுடன் கூடிய மொத்த உலகமும் அவருக்குச் சொந்தமானதாகும்.(7) இந்த என் வார்த்தைகளை நீங்கள் எப்போதும் மனத்தில் தாங்க வேண்டும்" என்று சொன்னான். பிறகு அந்த மன்னன் {யுதிஷ்டிரன்} அவர்களை விரும்பிய இடத்திற்குச் செல்லுமாறு விடைகொடுத்தனுப்பினான்.(8)
குருக்களைத் திளைக்கச் செய்பவனான அவன் {யுதிஷ்டிரன்}, குடிமக்கள் மற்றும் மாகாணங்களின் மக்களுக்கு விடைகொடுத்து அனுப்பிவிட்டு, தன் தம்பியான பீமசேனனை யுவராஜாவாக {இளவரசனாக} நியமித்தான்.(9) தன் கலந்துரையாடலில் துணை புரியவும், மாநிலத்தின் ஆறு வகைத் தேவைகளைப் பார்த்துக் கொள்ளவும் கூடிய பொறுப்பில்[1] பெரும் நுண்ணறிவு கொண்ட விதுரனை நியமித்தான்.(10) மேலும் அவன், வயதில் முதிர்ந்தவனும், அனைத்து சாதனைகளையும் கொண்டவனுமான சஞ்சயனை, நிதித்துறையின் கண்காணிப்பாளராகவும், பொது இயக்குனராகவும் நியமித்தான்.(11) மேலும் மன்னன், படைகளின் பதிவேடுகளைப் பராமரிக்கவும், அவர்களுக்கு உணவு மற்றும் கூலி வழங்கவும், படையின் பிற காரியங்களைக் கண்காணிக்கவும் நியமித்தான்.(12) மன்னன் யுதிஷ்டிரன், பகைவரின் படையைத் தடுக்கவும், தீயவர்களைத் தண்டிக்கவும் பல்குனனை {அர்ஜுனனை} நியமித்தான்.(13) மேலும் அவன், பிராமணர்களைத் தினமும் கவனித்துக் கொள்ளவும், தேவர்களுக்கான சடங்குகள் அனைத்தையும் செய்யவும், அறச் செயல்கள் அனைத்தையும் கவனித்துக் கொள்ளவும் புரோகிதர்களில் முதன்மையான தௌமியரை நியமித்தான்.(14) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, மேலும் அம்மன்னன், தான் எப்போதும் சகாதேவனால் காக்கப்பட வேண்டும் என்று எண்ணியதால், அவனை எப்போதும் தன்னருகிலேயே இருக்குமாறு நியமித்தான்.(15) மேலும் அம்மன்னன், வேறு பிற காரியங்களில் அவரவர்க்குத் தகுந்தது எனத் தான் கருதியவற்றில் அவரவரை நியமித்தான்.(16)
[1] "அமைதி, போர், அணிவகுப்பு, நிறுத்துவது, பிரிவினைகளை விதைப்பது, கூட்டணிகளை நாடுவதன் மூலம் நாட்டைப் பாதுகாப்பது, கோட்டைகள் கட்டுவது ஆகியவையே இவை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். பிபேக்திப்ராய், "பொதுவாக இவை, ஒழுக்கம், அரசுப்பணியாளர்களின் கடமைகள், சட்ட ஒழுங்கைப் பாதுகாப்பது, அமைச்சர்களின் நடத்தை, தடங்கல்களை அகற்றுதல், வேறு நாடுகளுடன் தொடர்பு கொள்ளுதல் ஆகியவையாகும் எனத் தன் அடிக்குறிப்பில் விளக்குகிறார்.
பகைவீரர்களைக் கொல்பவனும், எப்போதும் அறத்திற்கு அர்ப்பணிப்புள்ளவனும், அற ஆன்மா கொண்டவனுமான மன்னன் யுதிஷ்டிரன், விதுரன், உயர் ஆன்ம யுயுத்சு ஆகியோரை அழைத்து,(17) "என் அரச தந்தையான திருதராஷ்டிரரின் விருப்பங்கள் அனைத்தையும், எப்போதும் கவனமாகவும், விரைவாகவும் நீங்கள் செய்யுங்கள்.(18) குடிமக்கள் மற்றும் மாகாணங்களில் வசிப்பரைப் பொறுத்தவரை என்ன செய்யப்பட வேண்டுமோ அவை அனைத்தும், மன்னரின் {திருதராஷ்டிரரின்} அனுமதியைப் பெற்றுக் கொண்டு உங்களின் துறைகளின் மூலம் உங்களால் நிறைவேற்றப்பட வேண்டும்[2]" என்றான் {யுதிஷ்டிரன்}".(19)
[2] கும்பகோணம் பதிப்பில், "நமது பிதாவான திருதராஷ்டிர ராஜாவின் காரியத்தை நீங்கள் கவனித்துக் கவனித்துச் செய்ய வேண்டும். என் காரியத்தைப் போல அவர் காரியம் யாவற்றையும் ஒரு குறையுமின்றி நீங்கள் தவறாமல் செய்ய வேண்டும். பட்டணங்களிலும், கிராமங்களிலுமுள்ள ஜனங்களுக்குச் செய்யுங்காரியங்கள் யாவற்றையும் எப்பொழுதும் அவரிடம் தெரிவித்துவிட்டுத் தர்மமாகச் செய்ய வேண்டும்" என்றிருக்கிறது.
சாந்திபர்வம் பகுதி – 41ல் உள்ள சுலோகங்கள் : 19
ஆங்கிலத்தில் | In English |