Sraddha rites! | Shanti-Parva-Section-42 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 42)
பதிவின் சுருக்கம் : போரில் கொல்லப்பட்ட வீரர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் அவர்களது ஈமக்கடன்களைச் செய்யச் செய்த யுதிஷ்டிரன்; போரின் காரணமாக விதவைகளான பெண்டிருக்குக் கருணை காட்டியது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "இதன்பிறகு, மகத்தான ஆன்மா கொண்டவனான மன்னன் யுதிஷ்டிரன், போரில் கொல்லப்பட்ட உறவினர்கள் ஒவ்வொருவருக்கும் சிரார்த்தச் சடங்குகளைச் செய்ய {ஈமக்கடன்களைச் செலுத்தச்} செய்தான்.(1) பெரும்புகழைக் கொண்ட மன்னன் திருதராஷ்டிரனும், அடுத்த உலகில் இருக்கும் தன் மகன்களின் நன்மைக்காகச் சிறந்த உணவு, பசுக்கள், அதிகச் செல்வம், விலைமதிப்புமிக்க அழகிய ரத்தினங்கள் பல ஆகியவற்றை (பிராமணர்களுக்குக்) கொடையாக அளித்தான்.(2) திரௌபதியின் துணையுடன் கூடிய யுதிஷ்டிரன், துரோணர், உயர் ஆன்ம கர்ணன், திருஷ்டத்யும்னன், அபிமன்யு, ஹிடிம்பையின் மகனான ராட்சசன் கடோத்கசன், விராடன், தனக்கு மாறாப்பற்றுடன் தொண்டு புரிந்த நலன் விரும்பிகள் பிறர், துருபதன், திரௌபதியின் மகன்கள் ஐவர் ஆகியோருக்காக அதிகச் செல்வத்தைக் கொடையளித்தான்.(3,4) இவர்கள் ஒவ்வொருவருக்காகவும் மன்னன், செல்வத்தையும், ரத்தினங்களையும், பசுக்களையும், துணிமணிகளையும் ஆயிரக்கணக்கான பிராமணர்களுக்குக் கொடையளித்தான்.(5) எந்த உறவினரையும், நண்பரையும் விட்டுவிடாமல் போரில் வீழ்ந்த மன்னர்கள் ஒவ்வொருவரும் அடுத்த உலகில் நன்மை பெறுவதற்காகச் சிரார்த்தச் சடங்கைச் செய்தான்.(6)
மேலும் அம்மன்னன் {யுதிஷ்டிரன்}, தன் நண்பர்கள் அனைவருடைய ஆன்மாக்களின் நன்மைக்காக, அவர்களுடைய பெயரிலேயே உணவு விநியோகத்திற்கான வீடுகளையும், நீர் விநியோகத்திற்கான இடங்களையும் நிர்மாணித்து, {அவர்களது பெயரிலேயே} குளங்களையும் வெட்டினான்.(7) இவ்வாறு அவர்களுக்குத் தான் பட்ட கடனை செலுத்தி, உலகத்தின் நிந்தனையைத் தவிர்த்த மன்னன்[1], மகிழ்ச்சியடைந்தவனாகி, தன் குடிமக்களை அறம்சார்ந்து காப்பதைத் தொடர்ந்தான்.(8) அவன் முன்பு போலவே, திருதராஷ்டிரன், காந்தாரி, விதுரன், கௌரவப் பெரியோர்கள், மற்றும் அதிகாரிகள் அனைவருக்கும் உரிய மதிப்பை வழங்கினான்.(9) அன்பு நிறைந்தவனான அந்தக் குரு மன்னன் {யுதிஷ்டிரன்}, போரின் விளைவால் தங்கள் வீரக் கணவர்களையும், மகன்களையும் இழந்த பெண்கள் அனைவரையும் பாதுகாத்து அவர்களுக்கு மதிப்பளித்தான்.(10) பெருங்கருணை கொண்ட அந்தப் பலமிக்க மன்னன், யாருமற்றவர்களுக்கும், பார்வையற்றவர்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கு உணவு, உடை மற்றும் உறைவிடத்தைக் கொடுத்து உதவி செய்தான்.(11) எதிரிகளிடம் இருந்து விடுபட்டு, மொத்த பூமியையும் வென்ற மன்னன் யுதிஷ்டிரன், பெரும் மகிழ்ச்சியில் இன்புறத் தொடங்கினான்" {என்றார் வைசம்பாயனர்}.(12)
[1] "அவ்வாறு செய்யவில்லையெனில், அவன் நன்றியற்றவன் என்று அழைக்கப்பட்டிருப்பான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
சாந்திபர்வம் பகுதி – 42ல் உள்ள சுலோகங்கள் : 12
ஆங்கிலத்தில் | In English |