Adoration by Hundred Names! | Shanti-Parva-Section-43 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 43)
பதிவின் சுருக்கம் : நூறு பெயர்களால் கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்; மனம் நிறைந்த கிருஷ்ணன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பெரும் ஞானியும், தூய்மையானவனுமான மன்னன் யுதிஷ்டிரன், நாட்டை மீண்டும் அடைந்து, முடிசூட்டுவிழாவும் முடிந்த பிறகு, தாமரைக் கண்ணனும், தசார்ஹ குலத்தோனுமான கிருஷ்ணனிடம் கரங்களைக் கூப்பி,(1) "ஓ! கிருஷ்ணா, ஓ! யதுக்களில் புலியே, உன் அருளாலும், உன் கொள்கை, வலிமை, நுண்ணறிவு, ஆற்றல் ஆகியவற்றாலுமே நான் என் மூதாதையரின் நாட்டை மீண்டும் அடைந்தேன். ஓ! தாமரைக் கண்ணனே, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே நான் உன்னை மீண்டும் மீண்டும் வணங்குகிறேன்.(2,3) நீயே ஒரே தலைவன்[1] என்று அழைக்கப்படுகிறாய். மறுபிறப்பாளர்கள் {பிராமணர்கள்} உன்னை எண்ணற்ற பெயர்களால் அழைக்கின்றனர்.(4)
[1] "உண்மையில் பரமாத்மாவுக்குச் சொல்லப்படுவதைப் போல இங்கே சொல்லப்படும் புருஷன் Purusha என்பதன் பொருள், ’அண்டத்தில் உள்ள அனைத்து வடிவங்களிலும் படர்ந்தூடுருவி இருப்பவன்’ என்பதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "பரிசுத்தர்களான பிராம்மணர்கள் உம்மை ஒருவரையே புருஷரென்றும், பக்தர்களைப் பாதுகாப்பவரென்றும் சொல்லுகிறார்கள்; பலவிதமான பெயர்களால் உம்மைத் துதிக்கிறார்கள்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "புருஷர் என்பவர் எல்லாப் பிராணிகளின் ஹ்ருதயத்திலுமிருப்பவர்" என்று இருக்கிறது.
அண்டத்தின் படைப்பாளனே, உனக்கு வணக்கம். நீயே அண்டத்தின் ஆன்மாவாக இருக்கிறாய், அண்டமானது உன்னிலிருந்தே எழுந்திருக்கிறது. விஷ்ணு நீயே, ஜிஷ்ணு நீயே, ஹரி நீயே, கிருஷ்ணன் நீயே, வைகுண்டன் நீயே, உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையானவன் நீயே {புருஷோத்தமன் நீயே}.(5) புராணங்களில் சொல்லப்படுவதைப் போல அதிதியின் கருவறையில் ஏழு முறை பிறப்பை எடுத்தவன் நீயே. பிருஸ்னியின் கருவறையில் பிறப்பெடுத்தவன் நீயே[2]. கல்விமான்களால் மூன்று யுகங்கள் {திரியுகன்} என்று சொல்லப்படுபவன் நீயே[3].(6) சாதனைகள் அனைத்தாலும் புனிதமானவன் {சுசிஸ்ரவஸ்} நீயே. எங்கள் புலன்களின் தலைவன் {ஹ்ருஷீகேசன்} நீயே. வேள்விகளில் வழிபடப்படும் பெருந்தலைவன் {க்ருதார்ச்சிஸ்} நீயே. பெரும் அன்னம் {ஹம்சன்} என்றழைக்கப்படுபவன் நீயே, முக்கண் சம்பு நீயே. விபு மற்றும் தாமோதரன் என்று அழைக்கப்பட்டாலும் ஒருவனாகவே இருப்பவன் நீயே.(7) பெரும்பன்றி {வராகன்} நீயே, நெருப்பு {அக்னி} நீயே, சூரியன் {பிருஹத்பானு} நீயே, கொடியில் காளைச் சின்னத்தைக் கொண்டவன் {ரிஷபன்} நீயே, கருடனையும் சின்னமாகக் கொண்டவன் {தார்க்ஷ்யலக்ஷணன்} நீயே. பகைவரின் படைகளைக் கலங்கடிப்பவன் {அநீகஸாஹன்} நீயே, அண்டத்தின் அனைத்து வடிவங்களிலும் படர்ந்தூடுருவியிருப்பவன் {புருஷன்} நீயே, கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றல் {சிபிவிஷ்டன்} நீயே.(8) அனைத்துப் பொருட்களிலும் முதன்மையானவன் {உருக்ரமன்} நீயே, கடுமையானவன் {வரிஷ்டன்} நீயே, போரின் படைத்தலைவன் {உக்ரஸேநாநீ} நீயே, உண்மை {ஸத்யன்} நீயே, உணவை அளிப்பவன் {வாஜஸநி} நீயே, (தேவர்களின் படைத்தலைவனான) குஹன் நீயே, எதிரிகளின் ஒளியை மங்கச் செய்து அவர்களை வீணாகச் செய்யும் மங்காதவன் {அச்சுதன்} நீயே, தூய இரத்தம் கொண்ட பிராமணன் {ஸம்ஸ்கிருதன்} நீயே, கலப்பில் பிறந்தவன் {விக்ருதி} நீயே, பெரியவன் {வ்ருஷன்} நீயே.(9) உயர்வாக நடப்பவன் {கிருஷ்ணதர்மன்} நீயே, மலைகள் {ஆதி} நீயே, விருஷதர்ப்பன் என்றும், வ்ருஷாகபி என்றும் அழைக்கப்படுபவன் நீயே, பெருங்கடல் {ஸிந்து} நீயே, பண்புகளற்றவன் {விதூர்மி} நீயே, மூன்று கூன்களைக் கொண்டவன் {த்ரிககுப்} நீயே, மூன்று வசிப்பிடங்களைக் கொண்டவன் {த்ரிதாமா} நீயே, சொர்க்கத்தில் இருந்து இறங்கி பூமியில் மனித வடிவங்களை எடுப்பவன் {த்ரிவ்ருத்} நீயே.(10) பேரரசன் {ஸம்ராட்} நீயே, விராட் நீயே, ஸ்வராட் நீயே[4]. ஸ்வாராட் நீயே, தேவர்களின் தலைவன் நீயே, அண்டம் உதித்த காரணம் {பூதமயன்} நீயே, எல்லாம் வல்லவன் {பவன்} நீயே, எல்லாம் வல்லவன் {விபு} நீயே, அனைத்து வடிவிலும் இருப்பவன் {பூ} நீயே, வடிவமற்றவனும் {அதிபூவும்} நீயே, கிருஷ்ணன் நீயே, நெருப்பு {கிருஷ்ணவர்த்மா} நீயே.(11)
[2] "அஃதாவது, அதிதியும், அதிதியின் சுயமும் வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு வடிவங்களில் பிறக்கின்றனர்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[3] "இங்கே சொல்லப்படும் மூன்று காலங்கள் கிருதம், திரேதம் மற்றும் துவாபரமாக இருக்கலாம், அல்லது, அறமும் அறிவும், துறவும் தலைமையும், மற்றும் செழிப்பும் புகழுமாகிய மூன்று இரட்டைகளாகவும் இருக்கலாம்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[4] "விராட் என்றால் பேரரசனுக்கும் மேம்பட்டவன் என்று பொருள். ஸ்வராட் என்பது விராட்டையும்விட மேன்மையானது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
படைப்பாளன் {ஸ்விஷ்டகிருத்} நீயே, தெய்வீக மருத்துவர்களின் தந்தை {பிஷஜாவர்த்தன்} நீயே, (தவசி) கபிலன் நீயே. உயரம் குறைந்தவன் {வாமனன்} நீயே[5].(12) வேள்வியின் வடிவம் {யக்ஞன்} நீயே, துருவன்[6] நீயே, கருடன் {பதங்கன்} நீயே, யக்ஜசேனன் {ஜயத்ஸேனன்} என்றழைக்கப்படுபவன் நீயே. சிகண்டி நீயே, நகுஷன் நீயே, பப்ரு நீயே, ஆகாயத்தில் விரிந்திருக்கும் புநர்வஸு நீயே,(13) பழுப்புநிறம் கொண்டவன் {ஸுபப்ரு} நீயே, உக்தம் என்ற பெயரில் அறியப்படும் வேள்வி {ருக்மயஜ்ஞன்} நீயே, ஸுஷேணன் நீயே, அனைத்துப் பக்கங்களிலும் ஒலியை எழுப்பும் பேரிகை {துந்துபி} நீயே. எடை குறைந்த தேர்ச்சக்கரத்தைக் கொண்டவன் {கபஸ்திநேமி} நீயே, செழிப்பின் தாமரை {ஸ்ரீ பத்மன் நீயே}, புஷ்கரன் என்றழைக்கப்படுபவன் நீயே, மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவன் {சுஷ்மதாரணன்} நீயே.(14) செழிப்புமிக்கவன் {ருபு} நீயே, பலமிக்கவன் {விபு} நீயே, மிக நுட்பமானவன் {ஸர்வஸூக்ஷ்மன்} நீயே, வேதங்களை விளக்குபன் {தரித்ரீ} நீயே. பெரிய நீர் கொள்ளிடம் {அம்போநிதி} நீயே, பிரம்மன் நீயே, புனிதமான புகலிடம் {பவித்ரதாமன்} நீயே, அனைத்து வசிப்பிடங்களையும் அறிந்தவன் {தாமவித்து} நீயே, ஹிர்ணயகர்ப்பன் நீயே, ஸ்வதா நீயே, ஸ்வாஹா நீயே, கேசவனும் நீயே.(15) இவ்வுலகத்துடைய இருப்பின் {உற்பத்திக்குக்} காரணமும், இல்லாமையின் {அழிவின்} காரணமும் நீயே. முதலில் இந்த உலத்தைப் படைத்தவன் நீயே. ஓ! அண்டத்தைப் படைத்தவனே, இவ்வண்டம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. ஓ! சாரங்கம், சக்கரம் மற்றும் வாளைத் தரிப்பவனே, உன்னை நான் வணங்குகிறேன்" என்றான் {யுதிஷ்டிரன்}[7].(16)
[5] "விஷ்ணுவே உயரம் குறைந்தவனின் வடிவை ஏற்று, அசுரன் பலியிடம் இருந்து மூவுலகங்களையும் தானமாகப் பெற்று, அதை இந்திரனுக்கு அளித்தான்" எனக் கங்குலி[6] "உத்தானபாதனின் மகன் துருவன், கிருத யுகத்தின் மிகத் தொடக்கக் காலத்தில் விஷ்ணுவைப் புகழ்ந்து பல மதிப்புமிக்க வரங்களை அடைந்தான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[7] கும்பகோணம் பதிப்பில், "யுதிஷ்டிரராஜரால் சொல்லப்பட்ட ஸ்ரீ கிருஷ்ண பகவானுடைய இந்த நூறு பெயர்களையும் படிப்பவரும், கேட்பவரும் பாவங்களனைத்தையும் விட்டு மோக்ஷமடைகிறார்கள்" என்றிருக்கிறது.
சபைக்கு மத்தியில் வைத்து நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனால் இவ்வாறு துதிக்கப்பட்ட தாமரைக்கண்ணனான கிருஷ்ணன் நிறைவடைந்தான். பிறகு அந்த யாதவர்களில் முதன்மையானவன் {கிருஷ்ணன்}, ஏற்புடைய பேச்சுகள் பலவற்றால் பாண்டுவின் மூத்த மகனைத் திளைக்க வைக்கத் தொடங்கினான்" {என்றார் வைசம்பாயனர்}.(17)
சாந்திபர்வம் பகுதி – 43ல் உள்ள சுலோகங்கள் : 17
ஆங்கிலத்தில் | In English |