Palace assigned! | Shanti-Parva-Section-44 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 44)
பதிவின் சுருக்கம் : போரில் கொல்லப்பட்ட குரு இளவரசர்களின் அரண்மனைகளைத் தன் தம்பிகளின் முறையான வசிப்பிடங்களாக ஒதுக்கிக் கொடுத்த யுதிஷ்டிரன்; அர்ஜுனனின் அரண்மனையில் தங்கிய கிருஷ்ணனும், சாத்யகியும்; தங்கள் தங்கள் வசிப்பிடங்களில் இரவைக் கழித்த இளவரசர்கள்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "மன்னன் {யுதிஷ்டிரன்} தன் குடிமக்கள் அனைவருக்கும் விடைகொடுத்தனுப்பினான். அவர்களும் அந்த ஏகாதிபதியின் ஆணைக்கிணங்க தங்கள் தங்கள் இல்லங்களுக்குத் திரும்பினர்.(1) சுடர்மிகும் அழகு கொண்ட யுதிஷ்டிரன், பயங்கர ஆற்றலைக் கொண்ட பீமன், அர்ஜுனன் மற்றும் இரட்டையர்கள் {நகுல சகாதேவன்} ஆகிய தன் தம்பியரிடம், அவர்களுக்கு ஆறுதலிக்கும் வகையில் (2) "இந்தப் பெரும்போரில் எதிரியின் பல்வேறு வகை ஆயுதங்களால் உங்கள் உடல்கள் சிதைக்கப்பட்டிருக்கின்றன. நீங்கள் களைப்பை அடைந்திருக்கிறீர்கள். உங்கள் இதயங்கள் துயரத்தாலும், கோபத்தாலும் எரிகின்றன.(3) பாரதக் குலத்தின் காளைகளே, நான் செய்த குற்றத்தால், நீங்கள் இழிந்த மனிதர்களைப் போல நாடுகடத்தப்பட்டுக் காடுகளில் பேரிடரை அனுபவித்தீர்கள்.(4) (வெற்றியடைந்தவர்களான நீங்கள்) இப்போது இந்த வெற்றியை மகிழ்ச்சியாகக் கொண்டாடித் திளைப்பீராக. ஓய்வையும், உங்களுக்குத் தேவையானவற்றின் முழுப் பயனையும் அடைந்த பிறகு, காலையில் மீண்டும் என்னைச் சந்தியுங்கள்" என்றான்.(5)
அதன்பிறகு, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனான விருகோதரன் {பீமன்}, திருதராஷ்டிரனின் சம்மதத்தின் பேரில் யுதிஷ்டிரனால் தனக்கு ஒதுக்கப்பட்டதும், சிறந்த கட்டடங்கள் மற்றும் அறைகளால் {உப்பரிகைகளால்} அலங்கரிக்கப்பட்டதும், பல்வேறு வகையான ரத்தினங்களால் நிறைந்ததும், ஆண் மற்றும் பெண் பணியாளர்கள் நிறைந்ததுமான துரியோதனனின் அரண்மனைக்குள், மகவத் {இந்திரன்} தன் கோவிலுக்குள் நுழைவதைப்போல நுழைந்தான்.(6,7) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனான அர்ஜுனனும், மன்னனின் ஆணைப்படி, சிறந்த கட்டுமானங்கள் பலவற்றைக் கொண்டதும், தங்க வாயிலால் அலங்கரிக்கப்பட்டதும், செல்வத்தால் நிறைந்ததும், இரு பாலினங்களையும் சேர்ந்த பணியாட்கள் நிறைந்ததும், துரியோதனனின் அரண்மனைக்குச் சற்றும் குறையாததுமான துச்சாசனனின் அரண்மனையை அடைந்தான்.(8,9) துர்மர்ஷணனின் அரண்மனை துச்சாசனின் அரண்மனையைவிட மேன்மையானதாக இருந்தது. தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு, அனைத்து வகை ரத்தினங்களுடன் கூடிய அது குபேரனின் மாளிகையைப் போலத் தெரிந்தது.(10) மன்னன் யுதிஷ்டிரன், அதைக் கொள்ளச் சிறந்த தகுதி கொண்டவனும், பெருங்காட்டினால் (அதன் இடர்பாடுகளால்) மெலிந்தவனுமான நகுலனுக்கு மகிழ்ச்சியுடன் கொடுத்தான்.(11) துர்முகனின் முதன்மையான அரண்மனை தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு மிக அழகானதாக இருந்தது. அதில் படுக்கைகளும் இருந்தன, தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவர்களான அழகிய பெண்களும் இருந்தனர்.(12) மன்னன், தனக்கு ஏற்புடையதையே எப்போதும் செய்பவனான சகாதேவனுக்கு அதைக் கொடுத்தான். அஃதை அடைந்த சகாதேவன், கைலாசத்தை அடைந்த பொக்கிஷத் தலைவனை {குபேரனைப்} போலத் திளைப்படைந்தான்.(13)
ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, யுயுத்சு, விதுரன், சஞ்சயன், சுதர்மர், தௌமியர் ஆகியோர் ஏற்கனவே தங்களுக்குச் சொந்தமான வசிப்பிடங்களுக்குச் சென்றனர்[1].(14) மனிதர்களில் புலியான சௌரின் {கிருஷ்ணன்}, மலையில் உள்ள தன் குகைக்குள் நுழையும் புலியைப் போலச் சாத்யகியின் துணையுடன் அர்ஜுனனின் அரண்மனைக்குள் நுழைந்தான்.(16) (அவர்களுக்காகத் தயாராக வைக்கப்பட்டிருந்த) உணவு மற்றும் பானங்களை விருந்துண்ட அந்த இளவரசர்கள், தங்கள் இரவை மகிழ்ச்சியாகக் கழித்தனர். நிறைவான இதயத்துடன் காலையில் விழித்து, மன்னன் யுதிஷ்டிரனின் முன்னிலையை அடைந்தனர்" {என்றார் வைசம்பாயனர்}.(16)
[1] "சுதர்மர் குருக்களின் புரோகிதராவார். பாண்டவர்களின் புரோகிதரான தௌமியர் எவ்வாறு குருக்களின் தலைநகரில் முன்பே வசிப்பிடத்தைக் கொண்டிருந்தார்?" எனக் கங்குலி இங்கே தன் ஐயத்தை எழுப்புகிறார்.
சாந்திபர்வம் பகுதி – 44ல் உள்ள சுலோகங்கள் : 16
ஆங்கிலத்தில் | In English |