Krishna in rapt meditation! | Shanti-Parva-Section-45 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 45)
பதிவின் சுருக்கம் : பிராமணர்களுக்கும், குடிமக்களுக்கும் பெரும் தானங்களைச் செய்த யுதிஷ்டிரன்; கிருஷ்ணன் இருந்த இடத்திற்குச் சென்று அவனைத் துதித்தது; ஆழ்ந்த தியானத்தில் இருந்த கிருஷ்ணன்...
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! கற்ற பிராமணரே, தர்மனின் மகனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான யுதிஷ்டிரன் தன் நாட்டை மீட்ட பிறகு என்ன செய்தான் என்பதைச் சொல்வதே உமக்குத் தகும்.(1) ஓ! முனிவரே {வைசம்பாயனரே}, மூவுலகங்களின் உயர்ந்த தலைவனான வீர ரிஷிகேசன் {கிருஷ்ணன்} இதன் பிறகு என்ன செய்தான் என்பதையும் எனக்கு நீர் சொல்ல வேண்டும்" என்று கேட்டான்.(2)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஓ! பாவமற்றவனே, வாசுதேவனின் தலைமையிலான பாண்டவர்கள், இதன்பிறகு என்ன செய்தனர் என்பதைச் சொல்லப் போகிறேன் கேட்பாயாக.(3) ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, குந்தியின் மகனான யுதிஷ்டிரன் தன் நாட்டை அடைந்ததும், நால்வகை மனிதர்களுள் ஒவ்வொருவரையும் அவரவர்களுக்குரிய கடமைகளில் நியமித்தான்.(4) அந்தப் பாண்டுவின் (மூத்த) மகன் {யுதிஷ்டிரன்}, ஸ்நாதக வகையைச் சேர்ந்த ஆயிரம் உயர் ஆன்ம பிராமணர்களில் ஒவ்வொருவருக்கும் ஓராயிரம் நிஷ்கங்களைக் கொடுத்தான்.(5) பிறகு அவன் தன்னை நம்பியிருந்த பணியாட்களுக்கும், தன்னிடம் வந்த தகாதோர் மற்றும் வழக்கத்திற்கு மாறான கொள்கைகளை உடையோர் உள்ளிட்ட விருந்தினர்களின் விருப்பங்களை நிறைவேற்றி அவர்களை மனம் நிறையச் செய்தான்.(6)
அவன், தனது புரோகிதரான தௌமியருக்கு, ஆயிரக்கணக்கான பசுக்களையும், அதிகமான செல்வம், தங்கம், வெள்ளி மற்றும் பல்வேறு வகையான ஆடைகளையும் கொடுத்தான்.(7) ஓ! ஏகாதிபதி, கிருபரிடம் அவன் ஓர் ஆசானிடம் ஒருவன் நடந்து கொள்ள வேண்டிய வழியில் நடந்து கொண்டான். நோன்புகளை நோற்பவனான அம்மன்னன், விதுரனைப் பெரிதும் கௌரவிப்பதைத் தொடர்ந்தான்.(8) ஈகையாளர்களில் முதன்மையானவனான அவன் {யுதிஷ்டிரன்}, உணவு, பானம், பல்வேறு வகையான ஆடைகள், படுக்கைகள் மற்றும் இருக்கைகள் ஆகியவற்றால் அனைத்து மனிதர்களையும் நிறைவு செய்தான்.(9) ஓ! ஏகாதிபதிகளில் சிறந்தவனே, தன் நாட்டில் அமைதியை நிலைநாட்டியவனும், பெரும்புகழைக் கொண்டவனுமான அம்மன்னன், யுயுத்சு மற்றும் திருதராஷ்டிரனுக்கு உரிய கௌரவங்களை அளித்தான்.(10) திருதராஷ்டிரன், காந்தாரி மற்றும் விதுரனின் உத்தரவிற்குக் கீழ் தன் நாட்டை வைத்த மன்னன் யுதிஷ்டிரன் தன் நாட்களை மகிழ்ச்சியாகக் கழிக்கத் தொடங்கினான்.(11)
ஓ! பாரதக் குலத்தின் காளையே, குடிமக்கள் உள்ளிட்ட அனைவரையும் இவ்வழியில் நிறைவு செய்த யுதிஷ்டிரன், கூப்பிய கரங்களுடன் உயர் ஆன்ம வாசுதேவனின் {கிருஷ்ணனின்} முன்னிலைக்குச் சென்றான்.(12) நீலமேக வண்ணனான கிருஷ்ணன், தங்கம் மற்றும் ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட பெரிய இருக்கையில் அமர்ந்திருப்பதை அவன் கண்டான்.(13) மஞ்சள் பட்டாடையுடுத்தி, தெய்வீக ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட அவனது மேனி, தங்கத்தின் காந்தியுடன் பிரகாசித்தது.(14) கௌஸ்துப ரத்தினத்தால் அலங்கரிக்கப்பட்ட மார்புடைய அவன், உதயச் சூரியனால் அலங்கரிக்கப்பட்ட உதய மலையைப் போலத் தெரிந்தான்.(15) மூவுலகங்களிலும் தனக்கு நிகரில்லாதவன் போல அவன் மிக அழகாக இருந்தான். விஷ்ணுவின் அவதார வடிவமான அந்த உயர் ஆன்மாவை அணுகிய மன்னன் யுதிஷ்டிரன், சிரித்துக் கொண்டே இனிமையாக, "ஓ! நுண்ணறிவு கொண்டோரில் முதன்மையானவனே, இரவை மகிழ்ச்சியாகக் கடத்தினாயா?(16,17) ஓ! மங்கா மகிமை கொண்டவனே, உன் புலன்கள் அனைத்தும் முழு வீரியத்துடன் இருக்கின்றனவா? ஓ! நுண்ணறிவு கொண்டோரில் முதன்மையானவனே, உன் புத்தி சரியாக {தெளிவாக} இருக்கிறதா?(18) ஓ! தெய்வீகத் தலைவா ஓ! மூவுலகங்களின் புகலிடமே, ஓ! மூன்று {நடை} அடிகளைக் கொண்டவனே, உன் அருளின் காரணமாகவே நாங்கள் எங்கள் நாட்டை மீண்டும் அடைந்து, இந்த மொத்த பூமியும் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தோம். உன் அருளால் நாங்கள் வெற்றியையும், பெரும் புகழையும் அடைந்து, எங்கள் வகைக்கான கடமைகளில் இருந்து வழுவாமல் இருக்கிறோம்" என்றான் {யுதிஷ்டிரன்}.(19)
எதிரிகளைத் தண்டிப்பவனான தெய்வீகக் கிருஷ்ணனிடம், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது, அவன் {கிருஷ்ணன்} ஆழ்ந்த தியானத்தில் இருந்ததால் ஒரு வார்த்தையும் பேசாதிருந்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(20)
சாந்திபர்வம் பகுதி – 45ல் உள்ள சுலோகங்கள் : 20
ஆங்கிலத்தில் | In English |