I was thinking of Bhishma! | Shanti-Parva-Section-46 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 46)
பதிவின் சுருக்கம் : கிருஷ்ணன் ஆழ்ந்த தியானத்தில் இருப்பதைக் கண்டு வியந்து, அவனைத் துதித்த யுதிஷ்டிரன்; பீஷ்மர் தன்னை நினைத்துக் கொண்டிருப்பதாகச் சொன்ன கிருஷ்ணன்; பீஷ்மர் மறைவதற்குள் அவரிடமிருக்கும் அறிவுக்களஞ்சியத்தை அவரிடம் கற்றுப் பெறுமாறு யுதிஷ்டிரனிடம் சொன்ன கிருஷ்ணன்; இருவரும் சேர்ந்து செல்லலாம் என்று சொன்ன யுதிஷ்டிரன்...
யுதிஷ்டிரன் {கிருஷ்ணனிடம்}, "ஓ! அளவிலா ஆற்றல் கொண்டோனே, நீ ஆழ்ந்த தியானத்தில் இருப்பது அற்புதம். ஓ! அண்டத்தின் பெரும்புகலிடமே, மூவுலகங்களும் நலமா?(1) ஓ! தேவா, ஓ! மனிதர்களில் காளையே, (இவ்வுலகில் இருந்து) நான்காம் நிலையைப் பின்பற்றி நீ உன்னை விலக்கிக் கொள்ளும்போது, என் மனம் ஆச்சரியத்தால் நிறைகிறது[1].(2) உடலுக்குள் செயல்படும் ஐந்து உயிர் மூச்சுகள் அசைவில்லாத உன்னால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இன்பத்தில் திளைத்திருக்கும் உன் புலன்கள் உன் மனத்திற்குள் உன்னால் குவிக்கப்படுகின்றன.(3) ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, பேச்சும், மனமும் உன் புத்திக்குள் குவிக்கப்படுகின்றன. உண்மையில் உன் புலன்கள் அனைத்தும் உன் மனத்திற்குள் இழுக்கப்படுகின்றன[2].(4) உன் உடலில் உள்ள மயிர் சிலிர்த்திருக்கிறது. உன் மனமும், புத்தியும் அசைவற்றிருக்கின்றன. ஓ! மாதவா {கிருஷ்ணா}, ஒரு மரத்தைப் போலவோ, பாறையைப் போலவோ நீ அசைவற்றவனாக இருக்கிறாய்.(5)
[1] "சாதாரண மனிதர்களின் வழக்கில், அவர்களது விழிப்புணர்வில், விழிப்பு, கனவு மற்றும் உறக்கம் என்ற மூன்று நிலைகள் இருக்கின்றன. யோகியர் மட்டுமே உணரும் நான்காம் நிலையானது துரியம் என்றழைக்கப்படுகிறது. முற்றிலும் இவ்வுலகின் உணர்வற்ற நிலையில், ஆன்மாவானது தனக்குள்ளேயே சுருங்கி பரமாத்மாவிலோ, ஏதோ ஒரு பொருளிலோ என்று சொல்லப்படும் நிலையே இது {மனத்தின் நான்காம் நிலை}" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[2] "இந்து மெய்யியலில், மனமானது, புலன்களுக்கும், உணர்வுகளுக்கும் ஆசனமாகக் கொள்ளப்படுகிறது. புத்தம் என்பது புத்தி, அல்லது அறியும் தன்மையின் ஆற்றலாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "சரீரத்திலிருந்து கொண்டு ஐந்துவித வேலைகளைச் செய்யும் பிராணவாயு அடங்கியிருக்கிறது. உங்கள் இந்திரியங்கள் யாவும் மனத்தில் நிலைபெற்றிருக்கின்றன. வாக்கு முதலிய இந்திரியங்களும் மனமும் மகத்துவமென்ற ஸமஷ்டி புத்தியில் லயப்பட்டிருக்கின்றன" என்றிருக்கிறது.
ஓ! சிறப்புமிக்கத் தேவா {கிருஷ்ணா}, காற்றில்லாத இடத்தில் எரிந்து கொண்டிருக்கும் விளக்கின் தழலைப் போல நீ அசைவற்றவனாக இருக்கிறாய். ஒரு பாறைக்குவியலைப் போல நீ அசைவற்றவனாக இருக்கிறாய்.(6) ஓ! தேவா, இதன் காரணத்தைக் கேட்க நான் தகுந்தவனென்றால், இதில் உன் இரகசியமேதும் இல்லையென்றால், என் ஐயத்தை விலக்க வேண்டும் என்ற உதவியை நான் உன்னிடம் இரந்து கேட்கிறேன்.(7) படைப்பவனும், அழிப்பவனும் நீயே. அழியக்கூடியனவும், அழிவற்றனவும் நீயே. தோற்றமும் {ஆதியும்}, மறைவும் {அந்தமும்} அற்றவன் நீயே. உயிரினங்களில் முதல்வனும், முதன்மையானவனும் நீயே.(8) ஓ! நீதியாளர்களில் முதன்மையானவனே, இந்த நுண்மமயத்தின் (யோகத்தின்) காரணத்தை நீ எனக்குச் சொல்வாயாக. நான் உன் உதவியை நாடுபவனும், உனக்கு அர்ப்பணிப்புள்ள வழிபாட்டினனும், சிரம் தாழ்த்தி உன்னை வணங்குபவனும் ஆவேன்" என்றான் {யுதிஷ்டிரன்}.(9) இவ்வாறு சொல்லப்பட்ட வாசவனின் {இந்திரனின்} சிறப்புமிக்கத் தம்பி {கிருஷ்ணன்}, தன் மனத்தையும், புத்தியையும், புலன்களையும் மீண்டும் தங்கள் வழக்கமான செயற்களத்திற்கு அழைத்து, மெல்லிய புன்னகையுடன் இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(10)
வாசுதேவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்}, "இப்போது கணைப்படுக்கையில் கிடப்பவரும், அணையப்போகும் நெருப்பைப் போல இருப்பவரும், மனிதர்களில் புலியுமான பீஷ்மர் என்னை நினைத்துக் கொண்டிருக்கிறார். எனவே, என் மனமும் அவரிடம் குவிந்திருந்தது.(11) எவருடைய நாண்கயிற்றின் நாணொலியையும், உள்ளங்கைகளின் ஒலிகளையும் இந்திரனாலேயே தாங்கிக் கொள்ள முடியாதோ அவரிடமே நான் என் மனத்தைக் குவித்திருந்தேன்.(12) (ஒரு சுயம்வரத்தின்போது, காசி மன்னனின் மகள்களான) மூன்று இளவரசிகளைத் தன் தம்பி விசித்திரவீரியனின் திருமணத்திற்காகக் கடத்தி, அங்கே கூடியிருந்த மன்னர்கள் அனைவரையும் வென்றவர் எவரோ, அவரைக் குறித்து நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.(13) பிருகு குல ராமரிடம் {பரசுராமரிடம்} இருபத்து மூன்று {23} நாட்கள் தொடர்ந்து போரிட்டவர் எவரோ, எவரை ராமராலேயே வெல்ல இயலவில்லையோ, அவரைக் {பீஷ்மரைக்} குறித்து நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.(14) தம் புலன்கள் அனைத்தையும் திரட்டி, புத்தியின் உதவியுடன் தம் மனத்தைக் குவித்து (என்னைக் குறித்துச் சிந்திப்பதால்) அவர் {பீஷ்மர்} என்னிடம் புகலிடத்தை நாடுகிறார். அதன் காரணமாகவே நான் என் மனத்தை அவரிடம் மையம் கொள்ளச் செய்தேன்.(15)
எவரைக் கங்கையீன்று, சாதாரண மனித விதிகளின்படி வளர்த்தாளோ, எவரை வசிஷ்டர் தமது சீடராகக் கொண்டாரோ, அவரைக் குறித்து நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.(16) எவர் தெய்வீக ஆயுதங்கள் அனைத்தையும், நான்கு வேதங்களையும், அவற்றின் அங்கங்களையும் அறிந்தவரோ, வலிமை, சக்தி, பெரும் நுண்ணறிவு ஆகியவற்றைக் கொண்ட அந்த வீரரைக் குறித்து நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.(17) ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே}, ஜமதக்னியின் மகனான ராமருக்குப் {பரசுராமருக்கு} பிடித்தமான சீடர் எவரோ, அறிவியல்கள் அனைத்தின் கொள்ளிடம் எவரோ, அவரைக் குறித்து நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.(18) ஓ! பாரதக் குலத்தின் காளையே, கடந்த காலம், எதிர்காலம் மற்றும் நிகழ்காலம் ஆகியவற்றையும், அறநெறி மற்றும் கடமைகளையும் நன்கறிந்த அந்த மனிதர்களில் முதன்மையானவரைக் குறித்து நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.(19)
ஓ! பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரரே}, அந்த மன்னர்களில் புலி சொர்க்கத்திற்குச் சென்றதும், பூமியானது, நிலவற்ற இரவைப் போலத் தெரியும்.(20) எனவே, ஓ! யுதிஷ்டிரரே, பயங்கர ஆற்றலைக் கொண்டவரும், கங்கையின் மைந்தருமான பீஷ்மரைப் பணிவுடன் அணுகி, நீர் கற்க விரும்பும் எதையும் கேட்பீராக.(21) ஓ! பூமியின் தலைவரே, (அறநெறி, பொருள் ஆதாயம், இன்பம் மற்றும் முக்தி ஆகியவற்றைப் பொருத்தவரையிலான) அறிவின் நான்கு கிளைகளையும, நான்கு வகையினருக்காக விதிக்கப்பட்ட வேள்விகள் மற்றும் சடங்குகள் குறித்தும், வாழ்வின் நான்கு வாழ்வுமுறைகள், மன்னர்களின் கடமைகள் ஆகியவற்றைக் குறித்து முழுமையாக அவரிடம் கேட்பீராக.(22) குரு குலத்தில் முதன்மையானவரான பீஷ்மர் இவ்வுலகில் இருந்து மறைந்துவிட்டால், அவருடன் சேர்ந்து அனைத்து வகை அறிவும் {ஞானமும்} மறைந்துவிடும். இதன் காரணமாகவே நான் (இப்போதே அவரிடம் செல்லுமாறு) உம்மைத் தூண்டுகிறேன்" என்றான் {கிருஷ்ணன்}.(23)
உயர்ந்தவையும், முக்கியமானவையுமான வாசுதேவனின் {கிருஷ்ணனின்} இந்த நல்ல வார்த்தைளைக் கேட்டவனும், நீதிமானுமான யுதிஷ்டிரன், கண்ணீரால் தடைப்பட்ட குரலுடன் ஜனார்த்தனனிடம் {கிருஷ்ணனிடம்} பதிலுரைத்தான்.(24) {அவன்}, "ஓ! மாதவா பீஷ்மரின் சிறப்பைக் குறித்து நீ சொன்னதனைத்தும் முற்றிலும் உண்மையே. அதில் நான் சிறு ஐயமும் கொள்ளவில்லை.(25) உண்மையில், உயர் ஆன்ம பிராமணர்கள், சிறப்புமிக்கப் பீஷ்மரின் உயர்ந்த அருளையும், பெருமையையும் குறித்துப் பேசும்போது அவற்றை நான் கேட்டிருக்கிறேன்.(26) ஓ! எதிரிகளைக் கொல்பவனே, உலகங்கள் அனைத்தின் படைப்பாளன் நீயே. எனவே, ஓ! யாதவர்களைத் திளைக்கச் செய்பவனே, நீ சொல்வதில் சிறு ஐயத்தையும் கொள்ள மடியாது.(27) ஓ! மாதவா, உன் இதயம் அருளுமென்றால், உன் தலைமையில் நாம் பீஷ்மரிடம் செல்வோம்.(28) தெய்வீகமான சூரியன் வடக்குத் திரும்பினால், பீஷ்மர் (இவ்வுலகை விட்டு) தான் வென்றிருக்கும் அருள் உலகங்களுக்குச் சென்றுவிடுவார். எனவே, ஓ! வலிய கரங்களைக் கொண்டோனே, அந்தக் குருகுலத்தின் கொழுந்து உன் காட்சியைப் பெறத் தகுந்தவராவார்.(29) (நீ என் வேண்டுதலை அருளினால்), அழியக்கூடியவையாகவும், அழிவற்றவையாகவும் இருப்பவனும், தேவர்களில் முதல்வனுமான உன்னுடைய காட்சியைப் பீஷ்மர் பெறுவார். ஓ! தலைவா, உண்மையில் பிரம்மத்தின் பரந்த கொள்ளிடம் நீயே" என்றான் {யுதிஷ்டிரன்}".(30)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட மதுசூதனன் {கிருஷ்ணன்}, தன்னருகே அமர்ந்திருந்த சாத்யகியிடம், "என் தேர் ஆயத்தமாகட்டும் {தேரில் குதிரைகள் பூட்டப்படட்டும்}" என்றான்.(31) இதைக் கேட்ட சாத்யகி, விரைவாகக் கேசவனின் முன்னிலையை விட்டகன்று வெளியே சென்று தாருகனிடம், "கிருஷ்ணனின் தேர் ஆயத்தமாகட்டும்" என்று உத்தரவிட்டான்.(32) சாத்யகியின் வார்த்தைகளைக் கேட்ட தாருகன், விரைவாகக் கிருஷ்ணனின் தேரை ஆயத்தம் செய்தான். தங்கத்தாலானதும், வைடூரியங்கள், சந்திரகாந்தங்கள் மற்றும் சூரிய காந்தங்களால் அலங்கரிக்கப்பட்டதும், தங்கத்தால் மறைக்கப்பட்ட சக்கரங்களைக் கொண்டதும், பிரகாசமுடையதும், மனோவேகமுடையதும், சாரதிக்கு மத்தியில் வேறு பிற ரத்தினங்கள் நிறுவப்பட்டதும், காலைச் சூரியனைப் போல அழகானதும், உச்சியில் கருடனைக் கொண்ட அழகிய கொடிமரத்தைக் கொண்டதும், எண்ணற்ற கொடிகளைக் கொண்டதுமான தேரில், தங்க இழைகளைக் கொண்டவையும், மனோ வேகம் கொண்டவையும், குதிரைகளில் முதன்மையானவையுமான சுக்ரீவம், சைவியம் மற்றும் இன்னும் இரண்டு குதிரைகளும் பூட்டப்பட்டன. ஓ! மன்னர்களில் புலியே, அவற்றை ஆயத்தம் செய்த தாருகன், கூப்பிய கரங்களுடன் சென்று, இந்தச் செய்தியை கிருஷ்ணனிடம் தெரிவித்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(33-36)
சாந்திபர்வம் பகுதி – 46ல் உள்ள சுலோகங்கள் : 36
ஆங்கிலத்தில் | In English |