Bhishma's hymn - Shri Vishnu Stavraj! | Shanti-Parva-Section-47 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 47)
பதிவின் சுருக்கம் : பீஷ்மர் எவ்வாறு உயிர்துறந்தார் என வைசம்பாயனரிடம் கேட்ட ஜனமேஜயன்; பாவங்களை அழிக்கும் ஸ்ரீவிஷ்ணுஸ்வராஜம் என்ற பீஷ்மரின் துதியை ஜனமேஜயனுக்கு உரைத்த வைசம்பாயனர்...
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "கணைப்படுக்கையில் கிடந்தவரான பாரதர்களின் பாட்டன் {பீஷ்மர்} எவ்வாறு தன் உடலை விட்டார்? அவர் என்ன வகை யோகத்தைப் பின்பற்றினார்?" என்று கேட்டான்.(1)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! மன்னா {ஜனமேஜயா}, ஓ! குருக்களில் புலியே, உயர் ஆன்ம பீஷ்மர் எவ்வாறு தன் உடலை விட்டார் என்பதைத் தூய்மையான இதயத்துடனும், குவிந்த கவனத்துடனும் கேட்பாயாக.(2) சூரியன் துருவத்தைக் கடந்து வட பாதையில் {உத்தராயணத்தில்} நுழைந்தபோது, பீஷ்மர் குவிந்த கவனத்துடன், (உடலில் இருந்து விடுபட்டாலும் தொடர்புடன் கூடிய) தமது ஆன்மாவை (முழுமையாக விடுபட்ட நிலையுடன் கூடிய) தமது ஆன்மாவுக்குள் நுழையச்செய்தார்[1].(3) முதன்மையான பிராமணர்கள் பலரால் சூழப்பட்டிருந்த அந்த வீரர், எண்ணற்ற கணைகளால் துளைக்கப்பட்டிருந்த உடலுடன், எண்ணற்ற கதிர்களைக் கொண்ட சூரியனைப் போலப் பேரழகுடன் பிரகாசித்தார்.(4)
[1] கும்பகோணம் பதிப்பில், "பூபதியே, ஸூர்யன் உத்தராயணம் என்னும் வழியில் சென்றதும், மாசி மாஸம், சுக்லபக்ஷம், அஷ்டமிதிதியில் மிருகசீர்ஷ நக்ஷத்திரத்தின் மத்திய பாகத்தை ஸூர்யன் அடைந்தபொழுது, பீஷ்மர் ஸமாதியுள்ளவராய் மனத்தை ஆத்மரூபத்திலேயே லயிக்கச் செய்தார்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பிலும், கும்பகோணம் பதிப்பிலுள்ள குறிப்பு இல்லை.
வேதங்களை அறிந்த வியாசர், தெய்வீக முனிவரான நாரதர், தேவஸ்தானர், அஸ்மகர், சுமந்து,(5) ஜைமினி, உயர் ஆன்ம பைலர், சாண்டில்யர், தேவராதர், பெரும் நுண்ணறிவைக் கொண்ட மைத்திரேயர்,(6) அசிதர், வசிஷ்டர், உயர் ஆன்ம கௌசிகர், ஹரிதர், லோமசர், பெரும் நுண்ணறிவைக் கொண்ட அத்ரியின் மகன்,(7) பிருஹஸ்பதி, சுக்கிரர், பெரும் தவசியான சியவனர், சனத்குமாரர், கபிலர், வால்மீகி, தும்புரு, குரு,(8) மௌத்கல்யர், பிருகு குலத்தின் ராமர் {பரசுராமர்}, பெருந்தவசியான திருணபிந்து, பிப்பலாதர், வாயு, ஸம்வர்த்தர், புலஹர், கதர் {கசர்},(9) காசியபர், புலஸ்தியர், கிரது, தக்ஷன், பராசரர், மரீசி, அங்கிரஸ், காஸ்மியர், கௌதமர், தவசி காலவர்,(10) தௌம்யர், விபாண்டர், மாண்டவ்யர், தௌம்ரர், கிருஷ்ணாநுபௌதிகர், பிராமணர்களில் முதன்மையான உலூகர், பெருந்தவசி மார்க்கண்டேயர், பாஸ்கரி, புராணர் {பூர்ணர்}, கிருஷ்ணன், சூதர் ஆகிய அறவோர்களில் முதன்மையானோரான இவர்களாலும்,(11) நம்பிக்கையும், தற்கட்டுப்பாடும், மனோ அமைதியையும், உயர்ந்த அருளையும் கொண்ட இன்னும் பலராலும் சூழப்பட்டிருந்த அந்தக் குருவீரர் {பீஷ்மர்}, கோள்கள் மற்றும் நட்சத்திரங்களுக்கு மத்தியில் உள்ள நிலவைப் போலத் தெரிந்தார்.(12)
கணைப்படுக்கையில் நீண்டு கிடந்தவரும், மனிதர்களில் புலியுமான பீஷ்மர், தூய்மையான இதயத்துடனும், கூப்பிய கரங்களுடனும், மனத்தாலும், சொல்லாலும், செயலாலும் கிருஷ்ணனை நினைத்தார்.(13) அவர், யோகத்தின் தலைவனும், நாபியில் தாமரையைக் கொண்டவனும், அண்டத்தின் தலைவனும், விஷ்ணு என்றும், ஜிஷ்ணு என்றும் அழைக்கப்படுபவனுமான மதுசூதனனின் புகழை உற்சாகமான பலத்த குரலில் பாடினார்.(14) நாநயமிக்க மனிதர்களில் முதன்மையானவரும், பலமிக்கவரும், உயர்ந்த அற ஆன்மாவுமான பீஷ்மர், குவிந்த கரங்களுடன் இவ்வாறே வாசுதேவனைப் {கிருஷ்ணனைப்} புகழ்ந்தார்.(15)
பீஷ்மர், "ஓ! கிருஷ்ணா, ஓ! அனைத்திலும் முதன்மையானவனே, உன்னைப் புகழும் விருப்பத்தால் சுருக்கமாகவும், விரிவாகவும் என்னால் சொல்லப்படும் இவ்வார்த்தைகளில் மகிழ்வாயாக.(16) தூய்மையானவனும், தூய்மையேயானவனும் நீயே. அனைத்தையும் கடந்தவன் நீயே. அஃது என மக்களால் சொல்லப்படுபவன் நீயே. உயர்ந்த தலைவன் நீயே. ஓ! அண்டத்தின் ஆன்மாவும், அனைத்துயிரினங்களின் தலைவனும் ஆனவனே, முழு இதயத்துடன் நான் உனது புகலிடத்தை நாடுகிறேன் {உன்னைச் சரணடைகிறேன்}[2].(17) தொடக்கமும் {ஆதியும்}, முடிவும் {அந்தமும்} அற்றவன் நீயே. உயர்ந்தனவற்றிலும் உயர்ந்தவனும், பிரம்மமும் {பரப்பிரம்மமும்} நீயே. தேவர்களும், முனிவர்களும் கூட உன்னை அறியமாட்டார்கள். நாராயணன் என்றும், ஹரி என்றும் அழைக்கப்படும் தெய்வீகப் படைப்பாளன் மட்டுமே உன்னை அறிவான்.(18) முனிவர்கள், சித்தர்கள், பெரும் நாகர்கள், தேவர்கள் மற்றும் தெய்வீக முனிவர்கள் நாராயணன் மூலமே உன்னைக் குறித்துச் சிறிது அறிவார்கள். உயர்ந்தனவற்றில் உயர்ந்தவனும், சிதைவை அறியாதவனும் நீயே.(19) தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், பன்னகர்கள் ஆகியோரும் நீ யார் என்பதையும், எங்கிருந்து வந்தாய் என்பதையும் அறியமாட்டார்கள்.(20)
[2] "இங்கும், எங்கும் ஹம்சம், அஃதாவது அன்னம் என்று பரம்பொருளே அழைக்கப்படுகிறான். பறக்கும் வல்லமையில் சிறகு படைத்த அனைத்து உயிரினங்களிலும் அன்னமானது மேம்பட்டதாக இருப்பதால், அண்டத்தின் உயிரினங்கள் அனைத்தையும் விஞ்சி நிற்கும் அவன் இவ்வாறு அழைக்கப்படுகிறான். "அது நீயே" என்று வேத சூத்திரத்தில் சொல்லப்பட்டுள்ளதைப் போல இங்கு, "காணப்பட முடியாதவனும், வார்த்தைகளால் விவரிக்கப்பட முடியாதவனுமான நீ" என்ற பொருளில், இங்கே "அது" என்று அழைக்கப்படுகிறான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "பரிசுத்தரும், பரிசுத்தமான ஸ்தானத்திலிருப்பவரும், உத்தமபதத்திலிருப்பவரும், எல்லாவற்றிற்கும் மேலானவரும், பிரம்மரூபியும் {அது}, உலகங்களுக்குப் பதியுமான அந்தப் பரமாத்மாவை என் முழு ஆத்மாவுடன் ஸமாதியால் ஒன்றுசேர்த்துச் சரணமடைகிறேன்" என்றிருக்கிறது.
அனைத்து உலகங்களும், படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களும் உன்னுள் வாழ்ந்து, (அழிவுக்காலம் வரும்போது) உன்னிலேயே நுழைகின்றன. நூலில் கோர்க்கப்பட்ட ரத்தினங்களைப் போல, பண்புகள் கொண்ட அனைத்துப் பொருட்களும் உயர்ந்த தலைவனான உன்னிலேயே வசிக்கின்றன[3].(21) உனது செயல்பாடும், உனது உறுப்புகளானதும், மனம் மற்றும் பொருள்களாலானதுமான இவ்வண்டம், வலுவான நூலில் கோர்க்கப்பட்ட மலர்ச்சரத்தைப்போல, படர்ந்தூடுருவி அழியாமல் நிலைத்திருக்கும் ஆன்மாவான உன்னில் வசிக்கிறது.(22) ஆயிரக்கணக்கான தலைகளையும், கால்களையும், கண்களையும், கரங்களையும், மகுடங்களையும், பிரகாசமிக்க முகங்களையும் கொண்ட ஹரி என்று அழைக்கப்படுபவன் நீயே. தெய்வீகமானவனும், அண்டத்தின் புகலிடமுமான நாராயணன் என்று அழைக்கப்படுபவன் நீயே.(23) நுண்ணியவற்றில் நுண்ணியமானவனும், திரள்களில் {பெரியவற்றில்} திரளானவனும் {பெரியவனும்}, கனமானவற்றில் கனமானவனும், உயர்ந்தவற்றில் உயர்வானவனும் நீயே.(24) வாக்குகள் {மந்திரங்கள்}, அனுவாக்குகள் {பிராம்மணங்கள்}, நிஷதங்கள் {உபாஸனாவிதிகள்}, உபநிஷதங்கள் ஆகியவற்றில் கருதப்படும் தடுக்கப்படமுடியாத பரம்பொருள் நீயே. எப்போதும் உண்மையையே அறிவிக்கும் சாமங்களிலும் {சாம வேதத்திலும்} கருதப்படும் உண்மையின் வடிவம் நீயே[4].(25)
[3] "படைக்கப்பட்ட பொருட்கள் பண்புகளைக் கொண்டிருக்கின்றன. நம்மால் அறியப்படும், அறியப்படாத பண்புகள் ஏதுமில்லாதவன் என்ற பொருளில் பிரம்மம் மட்டுமே பண்புகளற்றதாகச் சொல்லப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "சேஷபூதங்களான {ஈஸ்வரருடைய சொத்துக்களான} இவ்வுலகங்கள் யாவும் நூலில் கோத்தமணிக்கூடங்கள் போலப் பிராணிகளுக்கு ஈசரான அவரிடம் நிலைபெற்றிருப்பதோடு அவரிடமே லயமடைகின்றன" என்று இருக்கிறது.[4] "வாக்குகள் என்பன மந்திரங்களாகும்; அனுவாக்குங்கள் என்பன பிராம்மணங்கள் என்றழைக்கப்படும் வேத பகுதிகளாகும்; நிஷதங்கள் என்பன தேவர்களை அறிய வழிவகுக்கும் வேத சடங்கின் பகுதிகளாகும். உபநிஷதங்கள் என்பன ஆன்மாவைக் குறித்த அறிவைப் பெரிதாகக் கருதும் பகுதிகளாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
நான்கு பகுதிகளாலான ஆன்மாவைக் கொண்டவன் நீயே. (அனைத்து உயிரினங்களின்) புத்தியில் மட்டுமே வெளிப்படுபவன் நீயே. நம்பிக்கையில் கட்டுப்பட்டிருப்போரின் தலைவன் நீயே. ஓ! தேவா, (நம்பிக்கை நிறைந்தோரால்) சிறந்த, உயர்ந்த, இரகசியமான நான்கு பெயர்களால் புகழப்படுபவன் நீயே[5].(26) தவங்கள் எப்போதும் உன்னில் நிலைத்திருக்கின்றன. (உன்னை நிறைவு செய்வதற்காக உயிரினங்களால்) செய்யப்படும் தவங்கள், உன் வடிவிலேயே வாழ்கின்றன. அண்டத்தின் ஆன்மா நீயே. அண்ட அறிவு நீயே. அண்டமே ஆனவனும் நீயே. அனைத்துமறிந்தவன் நீயே. அண்டத்தில் அனைத்தையும் படைத்தவன் நீயே[6].(27) சுடர்மிக்க நெருப்பை உண்டாக்கும் இரு கட்டைகளை {அரணிக்கட்டைகளைப்} போல, பூமியில் பிரம்மத்தைக் காக்க தெய்வீகமானவர்களான தேவகி மற்றும் வசுதேவரிடத்தில் பிறந்தவன் நீயே[7].(28) ஓ! கோவிந்தா, அர்ப்பணிப்புள்ள ஒரு வழிபாட்டினன் {பக்தன்} தன் நித்திய முக்திக்காக மனத்தில் இருந்து அனைத்தையும் விலக்கி, விருப்பங்கள் அனைத்தையும் கைவிட்டு, தூய ஆன்மாவான உன்னையே தன் ஆன்மாவில் காண்கிறான்.(29) மகிமையில் சூரியனுக்கும் மேம்பட்டவன் நீயே. புலன்கள் மற்றும் அறிவுக்கு அப்பாற்பட்டவன் நீயே. ஓ! அனைத்து உயிரினங்களின் தலைவா, நான் உன் கரங்களில் என்னை நிறுத்துகிறேன் {கொடுக்கிறேன்}.(30)
[5] "நான்கு பகுதி ஆன்மா என்பது பிரம்மம், ஜீவன், மனம் மற்றும் விழிப்புணர்வு ஆகியனவாகும். நம்பிக்கை நிறைந்தோரால் புகழப்படும் பரம்பொருளின் நான்கு பெயர்கள், வாசுதேவன், சங்கர்ஷணன், பிரத்யும்னன், அநிருத்தன் என்பனவாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[6] "தவங்கள் எப்போதும் உன்னில் நிலைத்திருக்கின்றன என்று சொல்வது, அவையில்லாமல் நீ இல்லை, தவங்களின் சாறானவன் நீயே என்ற பொருளில் சொல்லப்படுவதாகும். உயிரினங்களால் செய்யப்படும் இவை {தவங்கள்} உன் அங்கங்களிலேயே வாழ்கின்றன என்று சொல்வது, செய்யப்படும் தவங்கள் ஒருபோதும் அழிவதில்லை என்ற பொருளில் சொல்லப்படுவதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[7] "புராதன இந்தியாவில், காடுகளில் வாழ்ந்த முனிவர்கள் இரு குச்சிகளை உரசி நெருப்பை உண்டாக்கினர். அவர்கள் அஃதை அரணி என்றழைத்தனர். பூமியின் பிரம்மம் என்பது வேதங்கள், பிராமணர்கள் மற்றும் வேள்விகள் என நீலகண்டரால் விளக்கப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
(அனைத்திலும் படர்ந்தூடுருவியிருக்கும் ஆன்மாவான) புருஷன் என்று புராணங்களில் சொல்லப்படுபவன் நீயே. யுகங்களின் தொடக்கத்தில் பிரம்மன் என்றும், அண்ட அழிவின் போது சங்கர்ஷணன் என்றும் சொல்லப்படுபவன் நீயே. புகழத்தக்கவனான உன்னை நான் துதிக்கிறேன்.(31) ஒருவனேயானாலும், எண்ணற்ற வடிவங்களில் இன்னும் பிறந்து கொண்டிருப்பவன் நீயே. விருப்பங்களை முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டவன் நீயே. ஓ! அனைத்து விருப்பங்களையும் அளிப்பவனே, உன்னிடம் அர்ப்பணிப்புள்ள வழிபாட்டினர் {பக்தர்கள்}, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளை நம்பிக்கையுடன் செய்து தங்களைத் தியாகம் செய்கின்றனர்.(32) அண்டம் கிடக்கும் உறையென அழைக்கப்படுபவன் நீயே. நீரில் நீந்தும் அன்னங்களையும், வாத்துகளையும் போல உலகங்கள் அனைத்தும் உன்னிலேயே மிதக்கின்றன.(33) உண்மை நீயே. ஒருவனும், அழிவற்றவனும் நீயே. பிரம்மம் நீயே. மனத்திற்கும், பொருளுக்கும் அப்பாற்பட்ட "அது" நீயே. தொடக்கமும், நடுநிலையும், முடிவும் இல்லாதவன் நீயே. தேவர்களும், முனிவர்களும் உன்னை அறியமாட்டார்கள்.(34) தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள், முனிவர்கள், பெரும் உரகர்கள் ஆகியோர் குவிந்த ஆன்மாக்களோடு எப்போதும் உன்னைத் துதிக்கின்றனர். கவலைகள் அனைத்திற்கும் பெரும் மருந்து நீயே.(35) பிறப்பும், இறப்பும் அற்றவன் நீயே. தெய்வீகமானவன் நீயே. தான்தோன்றி நீயே. அழிவற்றவன் நீயே. புலப்படாதவனும், அறிவுக்கு எட்டாதவனும் நீயே. ஓ! பலமிக்கவனே, ஹரி என்றும் நாராயணன் என்றும் அழைக்கப்படுபவன் நீயே[8].(36)
[8] கும்பகோணம் பதிப்பில் இந்த வரிக்குப் பின் வரும் வரிகள் "பீஷ்மஸ்தவராஜம்" என்ற தலைப்பின் கீழ் வருகின்றன.
அண்டத்தின் படைப்பாளனாகவும், அண்டத்தில் இருக்கும் அனைத்துக்கும் தலைவனாகவும் வேதங்களால் அறிவிக்கப்படுபவன் நீயே. அண்டத்தின் உயர்ந்த பாதுகாவலன் நீயே. சிதைவற்றவன் நீயே. உயர்ந்தவன் {பரம்} என்று அழைக்கப்படுபவன் நீயே.(37) தங்க நிறம் கொண்டவன் நீயே, அசுரர்களைக் கொல்பவன் நீயே. ஒருவனேயாயினும், அதிதியால் பனிரெண்டு வடிவங்களில் பெறப்பட்டவன் நீயே.(38) வளர்பிறையில் தேவர்களை அமுதத்தால் நிறைவு செய்பவனும், தேய்பிறையில் பித்ருக்களை நிறைவு செய்பவனும், மறுபிறப்பாளர்கள் {பிராமணர்கள்} அனைவரின் தலைவனுமான சோமனாக இருக்கும் உனது அந்த வடிவத்தை நான் வணங்குகிறேன்.(39) அடர்ந்த இருளுக்கு மறுபுறத்தில் வசிக்கும் பெரும் பிரகாசத்துடன் கூடிய ஒரே ஒருவன் நீயே. உன்னை அறிந்து கொள்ளும் ஒருவன், மரணம் குறித்த எந்த அச்சத்தையும் விடுகிறான். அறிவை அடையச் செய்யும் பொருளாக இருக்கும் அந்த உன் வடிவத்தை நான் வணங்குகிறேன்[9].(40)
[9] "அறியாமைக்கு அப்பால் வசிக்கும் தூய அறிவு நீயே. சாதாரணமாகத் துதிக்கப்படும் உனது எந்த வடிவத்தையும் வணங்காமல், ஆன்ம ஒளியால் யோகியர் மட்டுமே காணும் தூய ஒளியிலான அந்த உனது வடிவை நான் வணங்குகிறேன் என்பதே இங்குப் பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
மகத்தான உக்தவேள்வியில், பிராமணர்கள் பெரும் ரிக்காக உன்னைத் துதிக்கின்றனர். பெரும் நெருப்பு வேள்வியில் {அக்நிசயன யாகத்தில்} அவர்கள் உன்னைத் தலைமை அத்யர்யுவாக (புரோகிதராகப்) பாடுகிறார்கள். வேதங்களின் ஆன்மா நீயே. உன்னை நான் வணங்குகிறேன். ரிக்கும், யஜுரும், சாமங்களும் உன் வசிப்பிடங்களாகும்[10]. (வேள்விகளில் பயன்படுத்தப்படும்) ஐந்து வகைப் புனித காணிக்கைகள் {ஆகுதிகள்} நீயே. வேதங்களில் பயன்படுத்தப்படும் ஏழு ஊடுகள் {சந்தங்கள்} நீயே. வேள்வியாலான உனது அந்த வடிவை நான் வணங்குகிறேன்[11].(42) பதினேழு ஓரசை ஒலிகளுடன் ஹோம நெருப்பில் காணிக்கைகள் {ஆகுதிகள்} ஊற்றப்படுகின்றன. ஹோமத்தின் ஆன்மாவானவன் நீயே. நான் உன்னை வணங்குகிறேன்.(43) வேதங்கள் பாடும் புருஷன் நீயே. யஜுஸ் என்பது உனது பெயராகும். வேத சந்தங்கள் உன் அங்கங்களாகும். மூன்று வேதங்களிலும் விதிக்கப்பட்டிருக்கும் வேள்விகள் உனது மூன்று தலைகளாகும். ரதந்தரம் என்றழைக்கப்படும் பெரும் வேள்வி நிறைவை வெளிப்படுத்தும் உன் குரலாகும். புனிதப் பாடல்களாலான உன் வடிவை நான் வணங்குகிறேன்.(44) அண்டப் படைப்பாளர்களால் செய்யப்பட்டு, ஆயிரம் வருடங்கள் நீடித்த பெரும் வேள்வியில் தோன்றிய முனிவன் நீயே. தங்கச் சிறகுகள் கொண்ட பெரும் அன்னம் நீயே. அன்னத்தாலான உன் வடிவை நான் வணங்குகிறேன்[12].(45)
[10] கும்பகோணம் பதிப்பில், "ஸாமர்கள் பிருஹத் என்னும் ஸாமத்திலும், ரிக்வேதிகள் உக்தமென்னும் மந்திரத்திலும், யஜுர் வேதிகள் அக்நிசயனம் என்ற பெரிய யாகத்திலும் உபாஸித்து வரும் பெரிய ஸ்வரூபமுள்ள வேத உருவமான அந்தப் பகவானுக்கு நமஸ்காரம்" என்றிருக்கிறது.[11] "ஐந்து காணிக்கைகள் {ஆகுதிகள்} என்பன தானம், கரம்பம், பரிவாபம், புரோடாசம், பால் ஆகியவை ஆகும். ஏழு ஊடுகள் என்பன, காயத்ரி போல வேதப் பாடல்களில் உள்ள ஏழு மந்திரங்கள் (சந்தஸ்கள்) ஆகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[12] "அண்டப் படைப்பாளர்களான பிரஜாபதிகள் ஆயிரம் வருடங்கள் நீடித்த வேள்வி ஒன்றைச் செய்தனர். வேள்வி செய்பவர்களிடம் கொண்ட கருணையால் அந்த வேள்வியில் பரம்பொருள் தோன்றினான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
வேர்களுடன் கூடிய அனைத்து வகை இணை மற்றும் பின்னொட்டு சொற்களும் உனது அங்கங்களாகும். சந்திகள் உன் மூட்டுகளாகும். மெய்யெழுத்துகளும், உயிரெழுத்துகளும் உன் ஆபரணங்களாகும். வேதங்கள் உன்னைத் தெய்வீகச் சொல்லென அறிவிக்கின்றன. சொல்லாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்[13].(46) மூவுலகங்களின் நன்மைக்காக வேள்வியாலான அங்கங்களுடன் கூடிய ஒரு பன்றியின் வடிவையேற்று, {நீரில்} மூழ்கியிருந்த பூமியை உயர்த்தியவன் நீயே. முடிவிலா ஆற்றலாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(47) பாம்பால் அலங்கரிக்கப்பட்ட ஆசனத்தில் ஆயிரந்தலைகளுடன் யோகத்தில் உறங்குபவன் நீயே. உறக்கத்தாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(48) எவ்வழிகளால் முக்தி அடையப்படுமோ, எவ்வழிகளால் புலன்கள் கட்டுப்படுத்தப்படுமோ அந்த வழிகளுடனும், உண்மையுடனும் (வாழ்வெனும் பெருங்கடலைக் கடக்கும்) நல்லோருக்கான பாலத்தை {அணையைக்} கட்டுபவன் நீயே. உண்மையாலான அந்த உனது வடிவை நான் வணங்குகிறேன்.(49) பல்வேறு அறங்களை {சமயங்களைப்} பயிலும் மனிதர்கள், பல்வேறு கனிகளின் விருப்பத்தால் செயலூக்கம் பெற்று, பல்வேறு சடங்குகளுடன் உன்னை வழிபடுகின்றனர். அறத்தாலான அந்த உன் வடிவை {தர்மஸ்வரூபியான உன்னை} நான் வணங்குகிறேன்[14].(50)
[13] "(இரு சொற்களைச் சேர்க்கும்போது) ஒலிநயச் சொற்களுக்கான விதிகளின்படி ஒட்டியுள்ள உயிரெழுத்துகளுக்குத் தேவைப்படும் மாற்றமே சந்திகளாகும். அக்ஷரம் என்பது எழுத்தாகும்; இங்கே எழுத்துகளாலான சொல் எனவே நாம் கொள்ள வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[14] இந்த 49 மற்றும் 50ம் ஸ்லோகங்கள் கும்பகோணம் பதிப்பில், "தர்மமொன்றைக் கருதி முக்திக்குக் காரணமான வேதத்திலுள்ள உபாயத்தால் ஸாதுக்கள் இந்திரியங்களை அடக்கிச் செல்லத்தக்க யோகமுறை என்னும் கரையைக் கட்டிய ஸத்யரூபியான அந்தப் பகவானுக்கு நமஸ்காரம். வேறுவேறான பயனை விரும்பி வேறு வேறான ஆசாரங்களுடன் வேறு வேறான கர்மங்களால் ஆராதிக்கப்படும் தர்மரூபியான ஆந்தப் பகவானுக்கு நமஸ்காரம்" என்றிருக்கிறது.
உன்னிலிருந்தே அனைத்துப் பொருள்களும் உண்டாகின. ஆசையெனும் கொள்கையை உடைய உடற்கட்டுகளுடன் கூடிய உயிரினங்கள் அனைத்தையும் தூண்டுபவன் நீயே. தூண்டலாலான அந்த உன் வடிவை {காமரூபியான உன்னை} நான் வணங்குகிறேன்.(51) பெருமுனிவர்கள், வடிவமில்லாத உன்னை வடிவங்களுக்குள் தேடுகின்றனர். க்ஷேத்ரஜனன் என்றழைக்கப்படும் நீ க்ஷேத்திரத்தில் அமர்ந்திருக்கிறாய். க்ஷேத்திரத்தாலான உன் வடிவை நான் வணங்குகிறேன்[15].(52) விழிப்புடன் தன்னில் நிலைத்திருப்பவனானாலும், விழிப்பு, கனவு மற்றும் ஆழ்ந்த உறக்கம் ஆகிய மூன்று நிலைகளில் இருப்பவனாகச் சாங்கியர்கள் உன்னை விவரிக்கின்றனர். மேலும் அவர்கள் உன்னைப் பதினாறு பண்புகளைக் கொண்டவனாகவும், பதினேழாம் {17} எண்ணைக் குறிப்பனவாகவும் சொல்கின்றனர்[16].(53) கட்டுப்படுத்தப்பட்ட புலன்களைக் கொண்ட யோகியர்கள், தங்கள் உறக்கத்தைக் கைவிட்டு, மூச்சைத் தவிர்த்து, தமக்குள் ஒடுங்கி அழிவில்லா ஒளியாகவே உன்னைக் காண்கின்றனர்.(54) அமைதி நிறைந்த சந்நியாசிகள், தங்கள் பாவபுண்ணியங்கள் அனைத்தையும் அழித்ததன் விளைவால் மறுபிறவி எனும் அச்சத்திலிருந்து விடுபட்டு உன்னை அடைகின்றனர். முக்தியாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்[17].(55)
[15] "உடலே வடிவமாகும். முனிவர்கள் வெளிப்படாத {வடிவமில்லாத} உன்னைத் தங்கள் இதயங்கள் எனும் உடலுக்குள் தேடுகின்றனர். க்ஷேத்திரம் என்பது புத்தி, அல்லது நுண்ணறிவு ஆகும். அனைத்து மனங்களையும் அறிந்தவனென்பதால் பரம்பொருளே க்ஷேத்திஜனன் என்றழைக்கப்படுகிறான். நுண்ணறிவு {புத்தி}, அல்லது மனம் என்பது அவனது வடிவங்களில் ஒன்றே" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[16] பதினோரு புலன்கள் {ஐந்து ஞானேந்திரியங்கள், ஐந்து கர்மேந்திரியங்கள், மனம் ஆகிய பதினோரு புலன்கள்}, நுண்ணிய வடிவங்களிலான மஹாபூதங்கள் என்றழைக்கப்படும் ஐம்பூதங்கள் ஆகியன சேர்ந்ததே இந்தப் பதினாறு பண்புகளாகும். எல்லையற்ற பண்பு இதனுடன் சேர்க்கப்படுகிறது. எனவே, இப்படியே சாங்கிய தத்துவத்தின் படி பரம்பொருளானது, பதினேழாம் எண்ணின் வடிவமாகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[17] "மறுபிறவி அடைவோரின் வழக்கில், துன்புறவும், இன்புறவும் பூமியில் வாழும்போது செய்த பாவம் மற்றும் புண்ணியத்தின் எச்சங்கள் எப்போதும் நம்மில் இருக்கின்றன. எனினும், துறவு வாழ்வைக் கைக்கொண்டவர்களின் வழக்கில், இந்த எச்சங்களைத் தீர்ப்பதே அவர்களின் பெருமுயற்சியாக இருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஆயிரம் யுகங்களின் முடிவில், சுடர்மிகும் தழல்களுடன் உயிரினங்கள் அனைத்தையும் எரிக்கும் நெருப்பின் வடிவை ஏற்பவன் நீயே. கடுமையாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(56) அனைத்து உயிரினங்களையும் எரித்து, அண்டத்தைப் பரந்த நீர்க்கொள்ளிடமாக்கி, அந்நீரில் குழந்தையின் வடிவில் உறங்குபவன் நீயே. மாயையாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(57) தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட தான்தோன்றியின் நாபியில் ஒரு தாமரை உதித்தது. அந்தத் தாமரையிலேயே இவ்வண்டம் நிறுவப்பட்டது. தாமரையாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(58) ஆயிரம் தலைகள் கொண்டவன் நீயே. அனைத்திலும் படர்ந்தூடுருவி இருப்பவன் நீயே. அளவிலா ஆன்மா கொண்டவன் நீயே. நான்கு பெருங்கடல்களைப் போலப் பரந்தவையான நான்கு வகை ஆசைகளையும் அடக்கியவன் நீயே. யோக உறக்கத்தாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(59) மேகங்கள் உன் தலையின் மயிரில் இருக்கின்றன. ஆறுகள் உன் அங்கங்களின் பல்வேறு மூட்டுகளில் இருக்கின்றன. நான்கு பெருங்கடல்களும் உனது வயிறாகும். நீராலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(60)
பிறப்பு மற்றும் இறப்பால் உண்டாகும் மாற்றம் உன்னிலிருந்தே எழுகிறது. மேலும், அண்ட அழிவின் போது அனைத்துப் பொருட்களும் மீண்டும் மீண்டும் உன்னில் கலக்கின்றன. காரணத்தாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(61) இரவில் உறங்காதவன் நீயே. பகலிலும் செயல்படுபவன் நீயே. (அனைத்தின்) நல்ல மற்றும் தீய செயல்களை நோக்குபவன் நீயே. (அண்டத்தை) நோக்கும் அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(62) உன்னால் செய்ய முடியாத செயலேதும் இல்லை. மேலும் நல்ல செயல்களைச் சாதிக்க எப்போதும் தயாராக இருப்பவன் நீயே. செயலின் வடிவமான, வைகுண்டன் என்றழைக்கப்படும் அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(63) அறத்தையும், அதிகாரத்தையும் தங்கள் காலில் போட்டு மிதித்துக் கொண்டிருந்த க்ஷத்ரியர்களைப் போரில் கோபத்துடன் இருபத்தோரு முறை அழித்தவன் நீயே. கொடூரத்தாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(64) ஐந்து பாகங்களாக உன்னையே வகுத்துக் கொண்டு, அனைவரின் உடலுக்குள் செயல்படும் ஐந்து உயிர்மூச்சுகளாக {பிராண வாயுக்களாக} இயங்கி, அனைத்து உயிரினங்களும் அசைவதற்குக் காரணமானவன் நீயே. காற்றாலான {வாயுவாலான} அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(65)
மாதங்கள் என்றழைக்கப்படும் வடிவங்களிலும், பருவங்கள், அயணங்கள், வருடங்கள் ஆகிய வடிவங்களிலும் யுகந்தோறும் தோன்றி, படைப்பு மற்றும் அழிவுக்குக் காரணமாக இருப்பவன் நீயே. காலத்தாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(66) பிராமணர்கள் உனது வாயாகவும், க்ஷத்திரியர்கள் உன் இரு கைகளாகவும், வைசியர்கள் உன் வயிறு மற்றும் தொடைகளாகவும், சூத்திரர்கள் உன் பாதங்களாகவும் வாழ்கின்றனர். வர்ணத்தாலான அந்த உன் வடிவை {வர்ணரூபியான உன்னை} நான் வணங்குகிறேன்.(67) நெருப்பே உன் வாயாகும். சொர்க்கங்கள் உன் தலையின் மகுடமாகும். வானம் உனது நாபியாகும். பூமி உனது பாதங்களாகும். சூரியன் உனது கண்ணாகும். திசைப்புள்ளிகள் உனது காதுகளாகும். (மூன்று) உலகங்களாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(68) காலத்திலும் மேன்மையானவன் நீயே. உயர்ந்தவற்றில் உயர்ந்தவன் நீயே. அண்டத்தின் தொடக்கமாக இருக்கும் தொடக்கமில்லாதவன் நீயே. அண்டத்தாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(69) வைசேஷிக தத்துவத்தின் படி உன் பண்புகளைத் தீர்மானிக்கும் இவ்வுலகின் மனிதர்கள், உன்னையே உலகின் பாதுகாவலனாகக் கருதுகிறார்கள். பாதுகாவலனாக இருக்கும் அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்[18].(70)
[18] கும்பகோணம் பதிப்பில், "விஷயத்திற் பற்றுள்ள மனிதர்களுக்கு அவர்களுக்குரிய விருப்பு வெறுப்பென்னும் குணத்துக்குத் தக்கப்பட அவ்விஷயங்களைக் காக்கும் ரூபமுள்ள அந்தப் பகவானுக்கு நமஸ்காரம்" என்றிருக்கிறது.
உணவு, பானம், எரிபொருள் {விறகு} ஆகிய வடிவங்களை ஏற்கும் நீ, இன்பங்களையும், உயிரினங்களின் உயிர் மூச்சுகளையும் {பிராண வாயுக்களையும்} அதிகரித்து, அவர்களின் இருப்பைத் தாங்கிப் பிடிக்கிறாய். உயிராலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(71) உயிர் மூச்சுகளைத் தாங்கிப் பிடிப்பதற்காக நான்கு வகை உணவுகளை[19] நீ உண்கிறாய். வயிற்றில் அக்னியின் வடிவை ஏற்று அந்த உணவை நீயே செரிக்கிறாய். செரிமான வெப்பத்தாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(72) பாதி மனிதன், பாதிச் சிங்கம் என்ற வடிவை ஏற்று, பழுப்புக் கண்கள் மற்றும் பழுப்பு பிடரி மயிர் ஆகியவற்றைக் கொண்டு, பற்களையும், நகங்களையும் ஆயுதமாகக் கொண்டு அசுரர்களின் தலைவனுடைய உயிரை எடுத்தவன் நீயே. பெருகும் வலிமையாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(73) தேவர்களோ, கந்தர்வர்களோ, தைத்தியர்களோ, தானவர்களோ உண்மையில் உன்னை அறியமாட்டார்கள். நுட்பமேயான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(74) பாதாளலோகத்தில், சிறப்புமிக்க, பலமிக்க, அழகிய அனந்தனின் வடிவை ஏற்று, உலகைத் தாங்குபவன் நீயே. வலிமையாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(75)
[19] "அதாவது, "மெல்வது, உறிஞ்சுவது, நக்குவது, குடிப்பது ஆகியவற்றால் உண்ணும் நால்வகை உணவுகள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "பிராணன்களைத் தரிக்க வேண்டிப் பக்ஷ்யம், போஜ்யம், லேஹ்யம், சோஷ்யம் என்னும் நான்குவிதமான உணவுகளைப் புஜித்துப் பக்குவமாகச் செய்யும் உதரத்திலுள்ள அக்நியின் பாகரூபியான அந்தப் பகவானுக்கு நமஸ்காரம்" என்றிருக்கிறது.
படைப்பின் தொடர்ச்சிக்காக, அன்பு, பாசமெனும் பற்றுகளால் உயிரினங்கள் அனைத்தையும் திகைக்கச் செய்பவன் நீயே. (யோகிகள் எதற்காக முயல்கின்றனரோ அந்த) உண்மையான தன்னறிவு ஐம்பூதங்களே என்பதை அறியும் அந்த அறிவைக் கருதியே, அறிவுக்காக மக்கள் உன்னை அணுகுகின்றனர். அறிவாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(77) உன் உடல் அளவில்லாததாகும். உன் அறிவும் கண்களும் அனைத்திற்கும் அர்ப்பணிப்புள்ளவையாகும். எல்லைகள் அனைத்திற்கும் அப்பால் உள்ள எல்லையற்றவன் நீயே. பரந்த தன்மையாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(78) சடாமுடிதரித்து, கையில் தண்டத்துடனும், நீண்ட வயிற்றுடனும் {தொங்கும் தொந்தியுடனும்}, அம்பறாத்தூணியையே இரக்கும் ஓடாகவும் கொண்ட துறவியின் வடிவை ஏற்றவன் நீயே. பிரம்மத்தாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்[20].(79) திரிசூலதாரியும், தேவர்களின் தலைவனும், முக்கண்ணனும், உயர்ந்த ஆன்மா கொண்டவனும் நீயே. உன் உடல் எப்போதும் சாம்பலால் {திருநீற்றால்} பூசப்பட்டிருக்கிறது. உனது லிங்கச் சின்னம் எப்போதும் மேல்நோக்கியே இருக்கிறது. ருத்திரன் என்ற அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(80)
[20] "இங்கே பிரம்மச்சாரியெனக் கொள்ள வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அரைபிறை வடிவங்கள் உன் நெற்றியின் ஆபரணங்களாகும். கழுத்தைச் சுற்றும் புனித நூலாகப் பாம்புகளைக் கொண்டவன் நீயே. பிநாகை மற்றும் திரிசூலதாரி நீயே. கடூரத்தாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(81) அனைத்து உயிரினங்களின் ஆன்மா நீயே. அனைத்துயிரினங்களைப் படைப்பவனும், அழிப்பவனும் நீயே. கோபம், பகை, பாசம் ஆகியவை அற்றவன் நீயே. அமைதியாலான அந்த உன் வடிவை நான் வணங்குகிறேன்.(82) அனைத்தும் உன்னில் இருக்கின்றன. ஒவ்வொரு பொருளும் நீயே. எங்கும் இருப்பவன் நீயே. எங்கும், எப்போதும் அனைத்துமாக இருப்பவன் நீயே. ஒவ்வொரு பொருளிலும் இருக்கும் உன் வடிவை நான் வணங்குகிறேன்.(83) அண்டத்தையே செயலாகக் கொண்டவனும், அண்டத்தின் ஆன்மாவாக இருப்பவனும், அண்டம் எழுந்த பொருளாக இருப்பவனும், அனைத்துப் பொருள்களுக்கும் அழிவாக இருப்பவனும், (அனைத்துப் பொருட்களில் இருக்கும் பூதங்களான) ஐந்தைக் கடந்தவனுமான உன்னை நான் வணங்குகிறேன்.(84) மூவுலகங்களாய் இருப்பவனும், மூவுலகங்களிலும் மேன்மையானவனுமான உன்னை நான் வணங்குகிறேன். திசைகள் அனைத்துமான உன்னை நான் வணங்குகிறேன். அனைத்தும் நீயே, அனைத்தின் ஒரே கொள்ளிடம் நீயே.(85)
ஓ! தெய்வீகத் தலைவா, ஓ! விஷ்ணு, ஓ! அனைத்து உலகங்களின் நித்திய மூலமே உன்னை நான் வணங்குகிறேன். ஓ! ரிஷிகேசா, படைப்பவனும் நீயே, அழிப்பவனும் நீயே, வெல்லப்படமுடியாதவன் நீயே.(86) கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் ஆகியவற்றில் வெளிப்படும் உன் தெய்வீக வடிவை என்னால் காண முடியவில்லை. எனினும், (உனது செயல்களில் நம்பிக்கையுடன்) உன் நித்திய வடிவை என்னால் உண்மையில் காண முடியும்.(87) உன் தலையால் சொர்க்கத்தையும், பாதத்தால் பூமியையும், ஆற்றலால் மூவுலகங்களையும் நிறைத்திருப்பவன் நீயே. அழிவற்றவனும், அண்டத்தில் உள்ள ஒவ்வொரு பொருளிலும் படர்ந்தூடுருவி இருப்பவனும் நீயே.(88) திசைகளே உனது கரங்களாகும், சூரியனே உனது கண்ணாகும், ஆற்றலே உனது உயிர்நீராகும். அனைத்து உயிரினங்களின் தலைவன் நீயே. அளவிலா சக்தி கொண்ட காற்றின் {வாயுவின்} ஏழு பாதைகளையும் அடைத்து நிற்பவன் நீயே.(89) ஓ! மங்கா மகிமை கொண்ட கோவிந்தா, காயாம்பூவைப் போன்ற நிறம் கொண்ட மஞ்சள் ஆடை உடுத்தியவனான உன்னை, அச்சங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டவர்களே வழிபடுகின்றனர்.(90)
ஓ! கிருஷ்ணா, ஒரே முறை உன்னிடம் தலைவணங்கினாலும், அது பத்து குதிரை வேள்விகளின் நிறைவுக்கு இணையானதாகும். பத்து குதிரைவேள்விகளைச் செய்தவனும், மறுபிறவி என்ற கடமையில் இருந்து விடுபட மாட்டான். எனினும், கிருஷ்ணனை வழிபடும் மனிதன் மறுபிறவியில் இருந்து தப்புகிறான்.(91) தங்கள் நோன்பாகக் கிருஷ்ணனையே கொண்டோரையும், இரவின்போதும், உறக்கத்திலிருந்து விழிக்கும்போதும் கிருஷ்ணனையே நினைப்போரையும் கிருஷ்ணனையே தங்கள் மேனியாகக் கொண்டவர்கள் என்று சொல்லலாம்., மந்திரங்களால் புனிதமாக்கப்பட்ட தெளிந்த நெய்யாகுதிகள் சுடர்மிக்க நெருப்பில் நுழைவதைப் போல, அம்மனிதர்கள் (மரணத்திற்குப் பிறகு) கிருஷ்ணனுக்குள்ளேயே நுழைகின்றனர்.(92) ஓ! விஷ்ணுவே, நரகத்தின் அச்சத்தை விலக்குபவனும், உலகவாழ்வெனும் பெருங்கடலின் சுழியில் மூழ்கியவனை, ஒரு படகைப் போல நரகின் அச்சத்தில் இருந்து விடுவிப்பவனான உன்னை நான் வணங்குகிறேன்.(93) ஓ! தேவா, பிராமணனின் நிலையைக் கொண்டவனும், பிராமணர்கள் மற்றும் பசுக்களுக்கு நன்மை செய்பவனும், அண்டத்திற்கு நன்மை செய்பவனும், கிருஷ்ணன் மற்றும் கோவிந்தனாக இருப்பவனுமான உன்னை நான் வணங்குகிறேன்.(94) ஹரி என்ற ஈரெழுத்தானவை, காட்டுவழியில் பயணிக்கும் வணிகர்களையும், சோகம் மற்றும் துயரங்களைக் கொண்ட உலகின் நோய்கள் அனைத்தையும் நன்கு குணமடையச் செய்யும் மருந்தையும் தனக்குள் கொண்டவையாகு[21].(95)
[21] சம்சாரமே உலகம், அல்லது இவ்வுலக வாழ்வு பல்வேறு பற்றுகளைக் குறிக்கின்றன. ஹரியை நினைப்பது, ஒருவனை அவனது பற்றுகளில் இருந்து விடுவிக்கின்றன. அல்லது சம்சாரம் என்பது முக்தியை அடையாமல் மீண்டும் மீண்டும் இறந்து பிறக்கும் நிலைய அடைவதாக இருக்கலாம். பரம்பொருளைத் தியானிப்பது, முக்திக்கு வழிவகுத்து மீண்டும் மீண்டும் இறந்து, பிறக்கும் நிலையைத் தவிர்க்கலாம்"எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
உண்மையானது விஷ்ணுவால் நிறைந்திருப்பைத் போலவும், அண்டமானது விஷ்ணுவால் நிறைந்திருப்பதைப் போலவும், அனைத்தும் விஷ்ணுவால் நிறைந்திருப்பதைப் போலவும், என் ஆன்மாவும் விஷ்ணுவால் நிறைந்து, என் பாவங்கள் அழிவையடையட்டும்.(96) உன்னிடம் அர்ப்பணிப்புக் கொண்ட நான், மகிழ்ச்சியான முடிவை அடைய விரும்பி, உனது பாதுகாப்பை நாடுகிறேன். ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனே, ஓ! தேவர்களில் சிறந்தவனே, எது எனக்கு நன்மையோ, அதையே எனக்கு {செய்ய} நினைப்பாயாக.(97) ஓ! விஷ்ணுவே, அறிவுக்கும், தவங்களுக்கும் பிறப்பிடமான பிறப்பற்றவன் நீயே. இவ்வாறே நீ புகழப்படுகிறாய். ஓ! ஜனார்த்தனா, ஓ! தேவா, பேச்சை (மட்டுமே) கொண்ட வேள்வியால் இவ்வாறு என்னால் வழிபடப்படும் நீ என்னிடம் நிறைவு கொள்வாயாக.(98) வேதங்கள் நாராயணனுக்கு அர்ப்பணிப்புள்ளவையாக இருக்கின்றன. தவங்கள் நாராயணனுக்கு அர்ப்பணிப்புள்ளவையாக இருக்கின்றன. தேவர்கள் நாராயணனுக்கு அர்ப்பணிப்புள்ளவர்களாக இருக்கின்றனர். எங்கும், எப்போதும் அனைத்தும் நாராயணனே" என்று துதித்தார் {பீஷ்மர்}".(99)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இவ்வார்த்தைகளைச் சொன்ன பீஷ்மர், குவிந்த மனத்துடன் கிருஷ்ணனிடம், "கிருஷ்ணனை வணங்குகிறேன்" என்று சொல்லி வணங்கினார்.(100) பீஷ்மரின் வழிபாட்டைத் தன் யோக ஆற்றலால் அறிந்தவனும், ஹரி என்றும் அழைக்கப்படுபவனுமான மாதவன், (அவரது {பீஷ்மரது} உடலுக்குள் நுழைந்து), கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் வருங்காலம் ஆகியவற்றின் தெய்வீக அறிவை அவருக்கு அளித்து அங்கிருந்து சென்றான்.(101) பீஷ்மர் அமைதியடைந்தபோது, (அவரைச் சுற்றிலும் அமர்ந்து) பிரம்மத்தை ஓதிக்கொண்டிருந்தவர்கள், கண்ணீரால் தடைபட்ட குரல்களுடன், அந்தக் குருக்களின் உயர் ஆன்மத் தலைவரை {பீஷ்மரைச்} சிறந்த வார்த்தைகளால் துதித்தனர்.(102) பிராமணர்களில் முதன்மையானோரான அவர்கள், உயிரினங்களில் முதன்மையான கிருஷ்ணனையும் புகழ்ந்தபடியே, மெல்லிய குரல்களால் பீஷ்மரை மீண்டும் மீண்டும் பாராட்டினர்.(103) உயிரினிங்களில் முதன்மையான மாதவன் {கிருஷ்ணன்}, தன்னிடம் பீஷ்மர் கொண்ட அர்ப்பணிப்பை (தனது யோக சக்தியால்) அறிந்து, தன் ஆசனத்தில் இருந்து திடீரென எழுந்து தன் தேரில் ஏறினான்.(104) {அப்போது} கேசவனும், சாத்யகியும் ஒரே தேரில் சென்றனர். சிறப்பு மிக்க இளவரசர்களான யுதிஷ்டிரனும், தனஞ்சயனும் {அர்ஜுனனும்} மற்றொரு தேரில் சென்றனர்.(105) பீமசேனனும், இரட்டையர்களும் {நகுல சகாதேவனும்} மூன்றாவதிலும், மனிதர்களில் காளையரான கிருபர், எதிரிகளை எரிப்பவனான யுயுத்சு, சூதனான சஞ்சயன் ஆகியோர், ஒரு நகரத்தைப் போலத் தெரிந்த தங்கள் தங்கள் தேர்களிலும் சென்றனர். அவர்கள் அனைவரும், தங்கள் தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலியால் பூமியை நடுங்கச் செய்தபடியே சென்றனர்.(106,107) அந்த மனிதர்களில் முதன்மையானவன் {கிருஷ்ணன்}, பிராமணர்களால் சொல்லப்பட்ட தனக்கான புகழுரைகளைக் கேட்டபடியே மகிழ்ச்சியாகச் சென்றான். அந்தக் கேசியைக் கொன்றவன் {கிருஷ்ணன்}, (வீதியெங்கும்) கூப்பிய கரங்களுடனும், வணங்கிய தலைகளுடனும் காத்திருந்த மக்களை மகிழ்ச்சியான இதயத்துடன் வணங்கினான்" {என்றார் வைசம்பாயனர்}[22].(108)
[22] இதன்பிறகு கும்பகோணம் பதிப்பில் இன்னும் இருக்கிறது. அது பின்வருமாறு: "இவ்விதம் பீஷ்மரால் சொல்லப்பட்ட ஸ்ரீகிருஷ்ணஸ்துதியைப் பக்தியுடன் படிப்பவனும், கேட்பவனும், ஸ்ரீகிருஷ்ணனுடைய அனுக்ரஹத்தால் பாபங்களெல்லாம் அற்று, முடிவில் ஸ்ரீ கிருஷ்ணபகவானை அடைகிறான். யோகிகள் உயிர்நீங்குங்காலத்தில் மிக்கப் பிரயத்தனத்துடன் மனத்தில் எந்தப் பகவானை நிலைக்கப் பாவனைச் செய்கிறார்களோ அந்த ஹரியைப் பீஷ்மர் எதிரிற்கண்டு கிருதார்த்தராயத் தம்முயிரைவிட்டார். முன்காலத்தில் பீஷ்மராற் சொல்லப்பட்டதும் மஹாபாபங்களை நாசஞ்செய்வதும், ஆச்சர்யமான செய்கையுள்ள ஸ்ரீ விஷ்ணுவைப் பற்றியதுமான இந்த ஸ்தவராஜம் முடிவுபெற்றது. பரிசுத்தனாகி மோக்ஷவிருப்பமுள்ள மனிதன் நிந்திக்கப்பட்ட பாவங்களை விலக்கும் இந்த ஸ்தவராஜத்தைப் படித்துத் தாமாகக் கிடைத்த அழிவுள்ள உலகங்களைக் கடந்து மஹாத்மாவினுடைய அழிவற்ற பதத்தைப் பெறுகிறான்" என்றிருக்கிறது.
சாந்திபர்வம் பகுதி – 47ல் உள்ள சுலோகங்கள் : 108
ஆங்கிலத்தில் | In English |