How were Kshatriyas revived? | Shanti-Parva-Section-48 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 48)
பதிவின் சுருக்கம் : பீஷ்மரைக் காணச் சென்ற கிருஷ்ணனும், யுதிஷ்டிரனும் வழியில் பேசிக் கொண்டது; பரசுராமரால் உண்டாக்கப்பட்ட தடாகங்களை யுதிஷ்டிரனுக்குச் சுட்டிக்காட்டிய கிருஷ்ணன்; பரசு ராமர் க்ஷத்திரியர்களை இருபத்தோரு முறை அழித்ததும், க்ஷத்திரியர்கள் மீண்டும் வளர்ந்ததும் எவ்வாறு என்று கிருஷ்ணனிடம் கேட்ட யுதிஷ்டிரன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பிறகு, ரிஷிகேசனும் {கிருஷ்ணனும்}, மன்னன் யுதிஷ்டிரனும், கிருபரின் தலைமையிலானவர்கள் அனைவரும், நான்கு பாண்டவர்களும், கொடிகள், கொடிமரங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டவையும், அரணமைக்கப்பட்ட நகரங்களைப் போலத் தெரிந்தவையுமான தங்கள் தங்கள் தேர்களில், வேகமான குதிரைகளின் உதவியுடன் குருக்ஷேத்திரத்தை நோக்கி வேகமாகச் சென்றனர்.(1,2) மயிர், ஊனீர், எலும்புகள் ஆகியவற்றால் மறைக்கப்பட்டதும், உயர் ஆன்மாக்களைக் கொண்டோரான லட்சோபலட்சம் க்ஷத்திரியர்கள் தங்கள் உடல்களை விட்ட இடமுமான அந்தக் களத்தில் இறங்கினர்.(3) மேலும் அது {அந்தக் களம்}, யானைகள், குதிரைகளின் எலும்புகளாலும் அமைந்த பல மலைகளாலும், சங்குகளைப் போலச் சிதறிக் கிடக்கும் மனிதத் தலைகளாலும், மண்டை ஓடுகளாலும் நிறைந்திருந்தது.(4) ஆயிரக்கணக்கான ஈமச்சிதைகளாலும், கவசங்கள் மற்றும் ஆயுதங்களின் குவியல்களாலும் நிறைந்திருந்த அந்தப் பரந்த களம், குடிப்பதற்காக அந்தகனால் பயன்படுத்தப்பட்டதும், அண்மையில் கைவிடப்பட்டதுமான அவனுடைய பானசாலையைப் போலத் தெரிந்தது.(5)
அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், பூதக்கூட்டங்களாலும், ராட்சசர்களாலும் மொய்க்கப்பட்ட அந்தப் போர்க்களத்தைப் பார்த்தபடியே வேகமாகச் சென்றனர்.(6) அப்படிச் சென்று கொண்டிருந்தபோது, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், யாதவர்களைத் திளைக்கச் செய்பவனுமான கேசவன், ஜமதக்னி மகனின் {பரசுராமரின்} ஆற்றலைக் குறித்து யுதிஷ்டிரனிடம் சொன்னான்.(7) {கிருஷ்ணன்}, "ஓ! பார்த்தரே {யுதிஷ்டிரரே}, அதோ தொலைவில் காணப்படுவதே ராமரின் {பரசுராமரின்} ஐந்து தடாகங்களாகும். அங்கேதான் ராமர், க்ஷத்திரியர்களின் குருதியைக் கொண்டு தமது மூதாதையரான பித்ருக்களுக்குக் காணிக்கையளித்தார். பலமிக்கவரான அந்த ராமர் {பரசுராமர்}, இருபத்தோரு {21} முறை க்ஷத்திரியர்களிடம் இருந்து இந்தப் பூமியை விடுவித்த பிறகு, அங்கேதான் தனது பணியைக் கைவிட்டார்" என்றான் (9)
யுதிஷ்டிரன் {கிருஷ்ணனிடம்}, "பழங்காலத்தில் க்ஷத்திரியர்களை இருபத்தோரு முறை ராமர் அழித்தார் என்று நீ சொல்வதில் எனக்குப் பேரையங்கள் {பெரும் சந்தேகங்கள்} இருக்கின்றன.(10) ஓ! யதுக்களில் காளையே, ஓ! அளவிலா ஆற்றலைக் கொண்டோனே க்ஷத்திரிய வித்தே ராமரால் அழிக்கப்பட்டது எனில், க்ஷத்திரிய வகையினர் மீண்டதெவ்வாறு?(11) ஓ! யதுக்களில் காளையே, சிறப்புமிக்க, உயர் ஆன்ம ராமரால் க்ஷத்திரிய வகை எவ்வாறு முற்றாக அழிக்கப்பட்டது? மேலும் அது மீண்டும் எவ்வாறு வளர்ந்தது?(12) பயங்கரமான தேர் மோதல்களில் கோடிக்கணக்கான க்ஷத்திரியர்கள் எவ்வாறு கொல்லப்பட்டனர்? ஓ! நாநயமிக்க மனிதர்களில் முதன்மையானவனே, க்ஷத்திரியர்களின் சடலங்களால் பூமி விரவிக் கிடந்தது.(13) ஓ! யதுக்களில் புலியே, பழங்காலத்தில் உயர் ஆன்ம பிருகு குல வழித்தோன்றலான ராமரால் க்ஷத்திரிய வகையானது என்ன காரணத்தால் இவ்வாறு நிர்மூலமாக்கப்பட்டது? ஓ! விருஷ்ணி குலத்தோனே, ஓ! பறவைக் கொடி கொண்டோனே, இந்த என் ஐயத்தை நீக்குவாயாக. ஓ! கிருஷ்ணா, ஓ! வாசவனின் {இந்திரனின்} தம்பியே[1], உயர் அறிவு உன்னில் இருந்தே கிடைக்கிறது" என்றான் {யுதிஷ்டிரன்}.
[1] கங்குலியில் வாசுதேவனின் தம்பியே என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும் அவ்வாறே வாசுதேவனின் தம்பியே என்றே இருக்கிறது. அவை அச்சுப்பிழை என நினைக்கிறேன். பிபேக்திப்ராயின் பதிப்பில் வாசவனின் தம்பியே என்று இருக்கிறது.
http://mahabharatham.arasan.info/2013/03/Mahabharatha-Adiparva-Section65.html அனைத்துயிர்களின் பிறப்பு | ஆதிபர்வம் - பகுதி 65
....{1.தக்ஷனின் முதல் மகளான} அதிதியிலிருந்து இந்த அண்டத்தின் தலைவர்களான {லோக ஈஸ்வரர்களான} பனிரெண்டு ஆதித்யர்கள் தோன்றினர். ஓ! பாரதா {ஜனமேஜயா}, பெயர் வரிசையில் உனக்கு அவர்களை விவரித்துச் சொல்கிறேன்.(14) தாத்ரி {தாதா}, மித்ரன், அர்யமா, சக்ரன் {இந்திரன்}, வருணன், அம்சன், பகன், விவஸ்வத் {விவஸ்வான்}, உஷா {பூஷா}, சாவித்ரி {சவிதா},(15) த்வஷ்த்ரி {த்வஷ்டா} மற்றும் விஷ்ணு ஆகியோரே அவர்கள். எனினும், இளையவன் {விஷ்ணு} தகுதியால் அவர்கள் அனைவரையும் விட மேன்மையானவனாக இருந்தான்.(16).....
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "பிறகு கதனின் பலமிக்க அண்ணன், ஒப்பற்ற ஆற்றலைக் கொண்ட யுதிஷ்டிரனிடம், பூமியில் க்ஷத்திரியர்கள் மீண்டும் எவ்வாறு நிறைந்தனர் என்பது குறித்த அனைத்தையும் உள்ளபடியே சொன்னான்".(14-16)
சாந்திபர்வம் பகுதி – 48ல் உள்ள சுலோகங்கள் : 16
ஆங்கிலத்தில் | In English |