Parasurama! | Shanti-Parva-Section-49 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 49)
பதிவின் சுருக்கம் : பரசுராமரின் கதையைச் சொன்ன கிருஷ்ணன்; காதிக்குப் பிறந்த விஷ்வாமித்திரர்; காதியின் மகள் சத்தியவதிக்குப் பிறந்த ஜமதக்னி; ஜமதக்னிக்குப் பிறந்த பரசுராமர்; ஹைஹய குல க்ஷத்திரியர்களால் கொல்லப்பட்ட ஜமதக்னி; கோபத்தால் க்ஷத்திரிய குலத்தை அழித்த பரசுராமர்; கசியபருக்குப் பூமியைத் தானமளித்த பரசுராமர்; கசியபரிடம் இரந்து கேட்ட பூமாதேவி; பூமாதேவி குறிப்பிட்ட மன்னர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களை மன்னர்களாக்கிய கசியபர்...
வாசுதேவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்}, "ஓ! குந்தியின் மகனே, ராமரின் {பரசுராமரின்} சக்தி, ஆற்றல் மற்றும் பிறப்பைக் குறித்துப் பெருமுனிவர்களுடன் உரையாடும்போது நான் கேட்டவாறே சொல்கிறேன்; கேட்பீராக.(1) ஜமதக்னியின் மகனால் {பரசுராமரால்} கோடிக்கணக்கான க்ஷத்திரியர்கள் கொல்லப்பட்டது எவ்வாறு? மேலும், பல்வேறு அரச குலங்களில் மீண்டும் பிறந்தவர்கள் எவ்வாறு மீண்டும் கொல்லப்பட்டனர்? என்பதைக் கேட்பீராக.(2) ஜாஹ்னுவுக்கு, ரஜன் {அஜன்} என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான். ரஜனுக்குப் பலாகாஸ்வன் என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான். மன்னன் பலாகாஸ்வனுக்கு, நன்னடத்தைக் கொண்டவனாகக் குசிகன் என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான்.(3) பூமியில் ஆயிரங்கண் இந்திரனுக்கு ஒப்பானவனாக இருந்த குசிகன், மூவுலகங்களுக்குத் தலைவனாகும் மகனை விரும்பி கடுந்தவங்களைச் செய்து வந்தான்.(4)
கடுந்தவங்களைச் செய்பவனும், ஒரு மகனைப் பெறுவதற்குத் தகுந்தவனுமான அவனைக் {குசிகனைக்} கண்ட ஆயிரங்கண் புரந்தரன் {இந்திரன்}, (தன் சக்தியால்) அம்மன்னனை ஈர்த்தான்.(5) ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, பகனைக் கொன்றவனான அந்த மூவுலகங்களின் பெருந்தலைவனே, காதி என்ற பெயரில் அறியப்பட்டவனாகவும் குசிகரின் மகனாகவும் ஆனான்.(6) ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, காதிக்கு, சத்தியவதி என்ற பெயரில் ஒரு மகள் இருந்தாள். பலமிக்கக் காதி, பிருகுவின் வழித்தோன்றலான ரிசிகருக்கு அவளை (மனைவியாகக்) கொடுத்தான்.(7) ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவரே, பிருகு குலத்தவரான அவளது தலைவர் {ரிசிகர்}, அவளது நடத்தையின் தூய்மையில் நிறைவு கொண்டவராக இருந்தார். அவர், (அவளது தந்தையான) காதிக்கு ஒரு மகனைக் கொடுப்பதற்காகப் பால் மற்றும் அரிசி கலந்த வேள்வி உணவைச் சமைத்தார்.(8)
பிருகு குலத்தின் ரிசிகர், தமது மனைவியை {சத்தியவதியை} அழைத்து, "புனிதமாக்கப்பட்ட உணவின் இப்பகுதி உன்னால் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும், (மறுபாதியான) இந்தப் பகுதி உன் தாயால் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். அவளுக்குச் {மன்னன் காதியின் மனைவிக்குச்} சுடர்மிக்கப் பிரகாசத்துடன் ஒரு மகன் பிறந்து, க்ஷத்திரியர்களில் காளையாக இருப்பான். பூமியில் க்ஷத்திரியர்களால் வெல்லப்பட முடியாத அவன், க்ஷத்திரியர்களில் முதன்மையானோரைக் கொல்பவனாக இருப்பான்.(10)
உன்னைப் பொறுத்தவரையில், ஓ! அருளப்பட்ட மங்கையே, உணவின் இப்பகுதியானது, பெரும் ஞானம் கொண்டவனும், அமைதியின் வடிவமும், தவத்துறவுகளுடன் கூடியவனும், பிராமணர்களில் முதன்மையானவனுமான ஒரு மகனை உனக்குக் கொடுக்கும்" என்றார்.(11) பிருகு குலத்தைச் சேர்ந்தவரான அந்த அருளப்பட்ட ரிசிகர், தமது மனைவியிடம் {சத்தியவதியிடம்} இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, தவங்களில் தன் இதயத்தை நிலைநிறுத்தி காட்டுக்குச் சென்றுவிட்டார்.(12)
உன்னைப் பொறுத்தவரையில், ஓ! அருளப்பட்ட மங்கையே, உணவின் இப்பகுதியானது, பெரும் ஞானம் கொண்டவனும், அமைதியின் வடிவமும், தவத்துறவுகளுடன் கூடியவனும், பிராமணர்களில் முதன்மையானவனுமான ஒரு மகனை உனக்குக் கொடுக்கும்" என்றார்.(11) பிருகு குலத்தைச் சேர்ந்தவரான அந்த அருளப்பட்ட ரிசிகர், தமது மனைவியிடம் {சத்தியவதியிடம்} இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, தவங்களில் தன் இதயத்தை நிலைநிறுத்தி காட்டுக்குச் சென்றுவிட்டார்.(12)
அதேநேரத்தில், மன்னன் காதி, புனித நீர்நிலைகளுக்குப் புனிதப்பயணம் மேற்கொள்ளத் தீர்மானித்து, ரிசிகரின் ஆசிரமத்திற்குத் தன் ராணியுடன் வந்தான்.(13) ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, அப்போது சத்தியவதி, புனிதமாக்கப்பட்ட உணவின் இரு பகுதிகளையும் எடுத்துக் கொண்டு, பெரும் அவசரத்துடன் தன் தலைவர் சொன்ன வார்த்தைகளைத் தன் தாயிடம் சொன்னாள்.(14) ஓ! குந்தியின் மகனே, அப்போது அந்த அரசத்தாய் {ராஜமாதா}, அறியாமையால் தனக்கென நிர்ணயிக்கப்பட்டிருந்த பகுதியைத் தன் மகளுக்குக் கொடுத்து, தன் மகளுக்கென நிர்ணயிக்கப்பட்டிருந்த பகுதியைத் தனக்கு எடுத்துக் கொண்டாள்.(15) இதன்பேரில், க்ஷத்திரியர்களை நிர்மூலம் செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த பயங்கர வடிவிலான பிள்ளையைத் தன் கருவில் கொண்ட சத்தியவதியின் உடல் பிரகாசத்தால் ஒளிவீசியது.(16)
அவளது கருவறைக்குள் கிடக்கும் பிராமணப் பிள்ளையைக் கண்ட அந்தப் பிருகுக்களில் புலி {ரிசிகர்}, தெய்வீக அழகுடையவளான தன் மனைவியிடம் {சத்தியவதியிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னார்:(17) "ஓ! அருளப்பட்ட பெண்ணே, புனிதமாக்கப்பட்ட உணவுக் கவளங்களை மாற்றியதன் விளைவால் உன் தாய் உன்னை வஞ்சித்துவிட்டாள். உன் மகன் கொடுஞ்செயல்களைச் செய்பவனாகவும், இதயத்தில் பழியுணர்ச்சி கொண்டவனாகவும் இருப்பான். அதே போல (உன் தாய்க்குப் பிறக்கப்போகும்) உன் சகோதரனோ, தவத்துறவுகளுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட பிராமணனாக இருப்பான்.(18) உனக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த புனிதமாக்கப்பட்ட உணவில் உயர்ந்ததும், உலகளாவியதுமான பிரம்மத்தின் வித்து வைக்கப்பட்டிருந்தது. அதே வேளையில், உன் தாய்க்காக நிர்ணயிக்கப்பட்டதில் க்ஷத்திரிய சக்தியின் மொத்த தொகையும் வைக்கப்பட்டிருந்தது.(19) எனினும், ஓ! அருளப்பட்ட மங்கையே {சத்தியவதியே}, அந்த இரண்டு பகுதிகளும் மாற்றப்பட்டதன் விளைவால், என்ன நினைத்து இது செய்யப்பட்டதோ அது நடக்காது. ஒரு தாய் பிராமணப் பிள்ளையை அடைவாள், நீயோ ஒரு க்ஷத்திரியனை மகனாக அடைவாய்" என்றார்.(20)
தன் தலைவரால் இவ்வாறு சொல்லப்பட்ட உயர்ந்த அருளைக் கொண்ட சத்தியவதி, நெடுஞ்சாண்கிடையாக அவரது பாதத்தில் தன் தலையை வைத்து நடுங்கிக் கொண்டே,(21) "ஓ! புனிதமானவரே, பிராமணர்களில் இழிந்தவனை (உமது மகனாக) அடைவேன் என்ற இத்தகு வார்த்தைகளை என்னிடம் சொல்வது உமக்குத் தகாது" என்றாள்.(22)
ரிசிகர் {சத்தியவதியிடம்}, "ஓ! அருளப்பட்ட மங்கையே, உன்னைப் பொறுத்தவரை இஃது என்னால் நினைக்கப்பட்டதன்று. புனிதமாக்கப்பட்ட உணவுக்கவளங்களை மாற்றியதன் விளைவாலேயே கடுஞ்செயல்களைச் செய்யக்கூடிய மகனை நீ கருவில் கொண்டிருக்கிறாய்" என்றார்.(23)
சத்தியவதி {ரிசிகரிடம்}, "ஓ! தவசியே, நீர் விரும்பினால் உம்மால் அவளுக்கு உலகங்களையே படைத்துத் தர முடியும் எனும்போது ஒரு பிள்ளையைக் குறித்துச் சொல்வதற்கு என்ன இருக்கிறது? ஓ! சக்திமிக்கவரே, அறவோனும், அமைதிக்குத் தன்னை அர்ப்பணித்தவனுமான ஒரு மகனை எனக்குக் கொடுப்பதே உமக்குத் தகும்" என்றாள்.(24)
ரிசிகர் {சத்தியவதியிடம்}, "ஓ! அருளப்பட்ட மங்கையே, இதற்கு முன் கேலிக்காகக் கூட என்னால் பொய்மை பேசப்பட்டது கிடையாது. நெருப்பை மூட்டி, வேத சூத்திரங்களின் உதவியுடன் புனிதமாக்கப்பட்ட உணவைச் சமைத்ததில் (அந்த உள்ளார்ந்த நிகழ்வில்) என்ன சொல்ல முடியும்?(25) ஓ !இனியவளே, இது பழங்காலத்திலேயே விதிக்கப்பட்ட விதியாகும். நான் என் தவங்களின் மூலம் இவை அனைத்தையும் உறுதி செய்திருக்கிறேன். உன் தந்தையின் வழித்தோன்றல்கள் அனைவரும் பிராமணத் தன்மைகளையே கொண்டிருப்பார்கள்" என்றார்.(26)
சத்தியவதி {ரிசிகரிடம்}, "ஓ! சக்திமிக்கவரே, ஓ! தவசிகளில் முதன்மையானவரே, நமது பேரப்பிள்ளை அவ்வாறு இருக்கட்டும், ஆனால் எனக்கு, அமைதியில் நாட்டம் கொண்ட ஒரு மகன் பிறக்க வேண்டும்" என்றாள்.(27)
ரிசிகர் {சத்தியவதியிடம்}, "ஓ! அழகிய நிறம் கொண்டவளே, ஒரு மகனுக்கும், பேரப்பிள்ளைக்கும் இடையில் நான் எந்த வேறுபாட்டையும் காணவில்லை. ஓ! இனிமையானவளே, நீ சொல்வது போலவே ஆகட்டும்" என்றார்".(28)
வாசுதேவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "பிறகு சத்தியவதி, தவங்களில் அர்ப்பணிப்பு கொண்டவரும், அமைதியில் நாட்டம் கொண்டவரும், நெறிப்படுத்தப்பட்ட நோன்புகளை நோற்பவருமான ஜமதக்னியை பிருகு குலத்தின் மகனாக ஈன்றெடுழுத்தாள்.(29) குசிகனின் மகன் காதி, விஷ்வாமித்திரர் என்ற பெயரில் ஒரு மகனைப் பெற்றான். ஒரு பிராமணனின் ஒவ்வொரு பண்பையும் கொண்ட அந்த மகன் (க்ஷத்திரிய வகையில் பிறந்தவராக இருப்பினும்) ஒரு பிராமணனுக்கு இணையானவராகவே இருந்தான்.(30) (இவ்வாறே) ரிசிகர், ஜமதக்னி என்ற தவக்கடலை மகனாகப் பெற்றார். ஜமதக்னி கடுஞ்செயல்களைச் செய்யவல்ல ஒரு மகனைப் பெற்றார்.(31) மனிதர்களில் முதன்மையானவனான அந்த மகன் {பரசுராமர்}, ஆயுத அறிவியல் உள்ளிட்ட அறிவியல்களில் திறம்பெற்று இருந்தார். சுடர்மிக்க நெருப்பைப் போன்றவரான அந்த மகனே, க்ஷத்திரியர்களை நிர்மூலமாக்கிய ராமராவார் {பரசுராமராவார்}.(32)
கந்தமாதன மலைகளில் மஹாதேவனை நிறைவு செய்த அவர் {பரசுராமர்}, அந்தப் பெருந்தேவனிடம் ஆயுதங்களை, அதிலும் குறிப்பாகக் கடுஞ்சக்தி கொண்ட கோடரியை இரந்து கேட்டார்.(33) நெருப்பின் சக்தியையும், தாங்கிக் கொள்ளப்பட முடியாத கூர்மையையும் கொண்ட அந்த ஒப்பற்ற கோடரியின் விளைவால் அவர் உண்மையில் ஒப்பற்றவரானார்.(34) அதே வேளையில், கிருதவீர்யனின் வலிமைமிக்க மகனும், க்ஷத்திய வகையைச் சேர்ந்தவனும், ஹைஹயர்களின் ஆட்சியாளனும், (பெரும் முனிவரான) தத்தாத்ரேயரின் அருளால் ஆயிரம் கரங்களை அடைந்தவனும், உயர்ந்த அறம்சார்ந்த நடத்தை கொண்டவனுமான அர்ஜுனன் {கார்த்தவீரியார்ஜுனன்}, தன் கரங்களின் வலிமையால் மலைகளுடனும், ஏழு தீவுகளுடனும் கூடிய மொத்த பூமியையும் போரில் அடக்கி, பலமிக்கப் பேரரசனாகி, (இறுதியில்) ஒரு குதிரை வேள்வியில் பூமியை பிராமணர்களுக்குக் கொடையாகக் கொடுத்தான்.(35-37)
ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, ஒரு குறிப்பட்ட சந்தர்ப்பத்தில், பெரும் ஆற்றலைக் கொண்டவனும், ஆயிரங்கரங்களைக் கொண்டவனுமான அந்த ஏகாதிபதி, தாகமடைந்தவனான நெருப்புத் தேவனால் வேண்டப்பட்டு அந்தத் தேவனுக்குப் பிச்சையளித்தான்.(38) அவனது கணைகளின் முனைகளில் இருந்து உதித்தவனும், பெரும் சக்தி கொண்டவனுமான அந்த நெருப்பு தேவன் {அக்னி}, (தனக்குக் கொடுக்கப்பட்டதை) எரிக்க விரும்பி, கிராமங்களையும், நகரங்களையும், நாடுகளையும், மாட்டிடையர்களின் சிற்றூர்களையும் எரித்தான்.(39) மனிதர்களில் முதன்மையானவனும், பெரும் சக்தி கொண்டவனுமான அந்தக் கார்த்தவீரியனின் ஆற்றலின் மூலம் அந்த நெருப்பு தேவன் மலைகளையும், பெருங்காடுகளையும் எரித்தான்.(40)
ஹைஹயர்களுடைய மன்னனின் துணையோடும், காற்றால் உண்டான சக்தியுடனும் சுடர்விட்டெரிந்த நெருப்பு தேவன், உயர் ஆன்ம ஆபவரின் இனிய ஆசிரமத்தை எரித்தான்.(41) ஓ! வலிய கரங்களைக் கொண்ட மன்னா {யுதிஷ்டிரரே}, பெரும் சக்தி கொண்டவரான ஆபவர், பலமிக்க அந்த க்ஷத்திரியனால் {கார்த்தவீரியனால்} தன் ஆசிரமம் எரிக்கப்பட்டதைக் கண்டு, கோபத்தால் அந்த ஏகாதிபதியிடம்,(42) "ஓ! அர்ஜுனா, கண்ணுக்கினியதான என் வனத்தையும் தவிர்க்காமல் நீ அவற்றை எரித்ததால், (பிருகு குல) ராமன், உன் (ஆயிரம்) கரங்களைத் துணிப்பான்" என்று சபித்தார்.(43) எனினும், ஓ! பாரதரே, பேராற்றல் கொண்டவனும், வலிமைமிக்கவனும், அமைதிக்கு எப்போதும் அர்ப்பணிப்பு உள்ளவனும், பிராமணர்களை எப்போதும் மரியாதையுடன் நடத்துபவனும், (அனைத்து வகையினருக்கும்) பாதுகாப்பை அளித்தவனும், ஈகையாளனும், துணிச்சல்மிக்கவனுமான அர்ஜுனன் {கார்த்தவீரியார்ஜுனன்}, அந்த உயர் ஆன்ம முனிவரால் இடப்பட்ட சாபத்தை எண்ணியும் பார்க்கவில்லை. எப்போதும் செருக்குடையவர்களும், கொடூரர்களுமான அவனது பலமிக்க மகன்கள், அந்தச் சாபத்தின் விளைவாக அவனது மரணத்திற்கு மறைமுகக் காரணமானார்கள். ஓ! பாரதக் குலத்தின் காளையே, அந்த இளவரசர்கள், ஹைஹயர்களின் ஆட்சியாளனான கார்த்தவீரியன் அறியாமலேயே, ஜமதக்னியுடைய ஹோமப் பசுவின் கன்றைக் கவர்ந்து சென்றனர். இதன் காரணமாக உயர் ஆன்ம ஜமதக்னிக்கும் ஹைஹயர்களுக்குமிடையில் சச்சரவு தோன்றியது.(44-47)
ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, ஜமதக்னியின் மகனான சக்திமிக்க ராமர் {பரசுராமர்}, கோபத்தால் நிறைந்து, அர்ஜுனனின் {கார்த்தவீரியார்ஜுனனின்} கரங்களைத் துண்டித்து, அம்மன்னனின் அரண்மனையில் திரிந்து கொண்டிருந்த தமது தந்தையின் கன்றை மீட்டுக் கொண்டு வந்தார்.(48) ஓ! மன்னா, கொண்டாடப்பட்ட ராமர் {பரசுராமர்} புனித விறகும், புல்லும் சேகரிக்கச் சென்றிருந்தபோது, அர்ஜுனனின் மூட மகன்கள் ஒன்றாகச் சேர்ந்து, உயர் ஆன்ம ஜமதக்னியின் ஆசிரமத்திற்குச் சென்று, தங்கள் வேல்களின் முனைகளால் அந்த முனிவரின் {ஜமதக்னியின்} தலையை அவரது உடலில் இருந்து வீழ்த்தினர்.(49,50) தமது தந்தையின் மரணத்தால் கோபமடைந்து, பழி தீர்க்க நினைத்த ராமர், க்ஷத்திரியர்களிடம் இருந்து பூமியை விடுவிக்கச் சபதமேற்று ஆயுதங்களை எடுத்தார்.(51) பிறகு, பெரும் சக்தி கொண்ட அந்தப் பிருகுக்களில் புலி {பரசுராமர்}, தன் ஆற்றலை வெளிப்படுத்தி, கார்த்தவீரியனின் மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகள் அனைவரையும் விரைவில் கொன்றார்.(52)
ஓ! மன்னா, சினத்தால் ஆயிரக்கணக்கான ஹைஹயர்களைக் கொன்ற அந்தப் பிருகுவின் வழித்தோன்றல், பூமியைக் குருதியால் சகதியாக்கினார்.(53) பெரும் சக்தி கொண்ட அவர், விரைவில் பூமியை க்ஷத்திரியர்கள் எவரும் அற்றதாகச் செய்தார். பிறகு கருணையால் நிரம்பிய அவர் காட்டுக்கு ஓய்ந்து சென்றார்.(54) பிறகு, ஆயிரம் வருடங்கள் கடந்த பின்னர், இயல்பிலேயே கோபம் நிறைந்தவரான ராமர் {பரசுராமர்}, (கோழைத்தனம் கொண்டவர்) எனக் குற்றம் சுமத்தப்பட்டார்.(55) ஓ! ஏகாதிபதி, விஷ்வாமித்திரரின் பேரனும், ரைப்பியரின் மகனும், பராவசு என்ற பெயரைக் கொண்டவருமான பெருந்துறவி ஒருவர்,(56) "ஓ! ராமரே {பரசுராமரே}, யயாதியின் வீழ்ச்சியின்போது, வேள்வியில் கூடியிருந்த அறவோரான பிரதர்த்தனன் மற்றும் பிறர், பிறப்பால் க்ஷத்திரியர்களில்லையோ?(57) ஓ! ராமரே, நீர் உண்மை நோன்புகளைக் கொண்டவரல்ல. மக்களுக்கு மத்தியில் நீர் வெறும் தற்பெருமை பேசிக் கொண்டிருக்கிறீர். க்ஷத்திரிய வீரர்களிடம் கொண்ட அச்சத்தின் காரணமாகவே நீர் மலைகளில் இருக்கிறீர்" என்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார்.(58)
பராவசுவின் வார்த்தைகளைக் கேட்ட அந்தப் பிருகுவின் வழித்தோன்றல் {பரசுராமர்}, மீண்டும் ஆயுதமெடுத்து, மீண்டும் பூமியை நூற்றுக்கணக்கான க்ஷத்திரியர்களின் உடல்களால் விரவிக் கிடக்கச் செய்தார்.(59) எனினும், ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, ராமரால் தப்ப விடப்பட்டவர்களும், எண்ணிக்கையில் நூற்றுக்கணக்கானவர்களுமான க்ஷத்திரியர்கள் (காலத்தின் போக்கில்) பல்கிப் பெருகி, பூமியில் வலிமைமிக்க ஏகாதிபதிகளாகினர்.(60) ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, மீண்டும் ராமர் {பரசுராமர்}, பிள்ளைகளைக் கூடத் தப்ப விடாமல் அவர்களைக் கொன்றார். உண்மையில், பூமியானது முற்றாபிறவி கொண்ட க்ஷத்திரிய பிள்ளைகளின் உடல்களால் மீண்டும் விரவிக் கிடந்தது.(61) ராமர் {பரசுராமர்}, க்ஷத்திரியப் பிள்ளைகள் பிறந்த உடனேயே அவர்களைக் கொன்றார். எனினும், சில க்ஷத்திரியப் பெண்டிர், (ராமரின் கோபத்திலிருந்து) தங்கள் பிள்ளைகளைப் பாதுகாத்துக் கொள்வதில் வென்றனர்.(62)
இருபத்தோரு {21} முறை பூமியை க்ஷத்திரியர்களற்றதாகச் செய்த பலமிக்கப் பார்க்கவர் {பரசுராமர்}, ஒரு குதிரை வேள்வி நிறைவின்போது, கசியபரின் வேள்விக் கொடையாகப் பூமியை அளித்தார்.(63) ஓ! மன்னா, எஞ்சியிருக்கும் க்ஷத்திரியர்களைக் காக்க நினைத்த கசியபர், வேள்விக்கரண்டியுடன் கூடிய தன் கரங்களால் சுட்டிக்காட்டியபடி இந்த வார்த்தைகளைச் சொன்னார்,(64) "ஓ! பெரும் தவசியே, தென்கடலின் கரைகளுக்குச் செல்வாயாக. ஓ! ராமா, (எது) என் ஆட்சிப்பகுதியாக இருக்கிறதோ, அதில் வசிப்பது உனக்குத் தகாது" என்றார்.(65) இந்த வார்த்தைகள் சொல்லப்பட்டதும், பெருங்கடலானது, தனது மறுகரையில் சூர்ப்பாரகம் என்றழைக்கப்படும் பகுதியை {நாட்டைத்} திடீரென உண்டாக்கியது.(66) கசியபரும், ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, பூமியைக் கொடையாக ஏற்று, அதைப் பிராமணர்களுக்குக் கொடையாக அளித்துவிட்டுப் பெருங்காட்டுக்குள் நுழைந்தார்.(67)
பிறகு, ஓ! பாரதக் குலத்தின் காளையே, சூத்திரர்கள், வைசியர்கள் ஆகியோர், வேண்டுமென்றே பிராமணர்களின் மனைவியரோடு தங்களை இணைத்துக் கொள்ளத் தொடங்கினர்.(68) பூமியில் அரசற்ற நிலை தோன்றும்போது, வலியோரால் வலிமையற்றவர்கள் ஒடுக்கப்பட்டு, எந்த மனிதனும் தன் உடைமைக்குத் தலைவனாக இல்லாத நிலையை அடைந்தான்.(69) அந்தக் குழப்பமான சூழ்நிலையின் விளைவால், பூமியானது அறம் நோற்கும் க்ஷத்திரியர்களால் முறையாகப் பாதுகாக்கப்படாமல், தீயோரால் ஒடுக்கப்பட்டு, விரைவில் மிகக் கீழான நிலையில் {பாதாளத்திற்குள்} மூழ்கியது.(70) அச்சத்தால் மூழ்கும் பூமியைக் கண்ட உயர் ஆன்மக் கசியபர், அவளைத் {பூமாதேவியைத்} தன் மடியில் தாங்கினார்; அந்தப் பெரும் முனிவர் பூமியைத் தன் மடியில் தாங்கியதிலிருந்தே அவள் உர்வி என்ற பெயரில் அறியப்படுகிறாள்.(71) அந்தப் பூமாதேவி, தன் பாதுகாப்புக்காகக் கசியபரிடம் ஒரு மன்னனை இரந்து கேட்டாள்[1].(72)
[1] இந்தப் பத்தியானது கும்பகோணம் பதிப்பில் மிகவிரிவாக இருக்கிறது. அது பின்வருமாறு: "பிறகு, இவ்வுலகம் அராஜகமானதும், சூத்திரர்களும், வைஸ்யர்களும் தம்மிஷ்டப்படி மேற்குலத்தார் தாரங்களிடம் செல்லத் தொடங்கினார்கள். ஓ! பரதரேறே! பலமுள்ளவர்கள் பலம் குறைந்தவர்களை அடிக்கத் தொடங்கினார்கள். அக்காலம் பொருள்களால் பிரபுத்தன்மை எவனிடமும் நிலைத்திருக்கவில்லை. மூர்க்கர்களான சில பிராம்மணர்கள் தாம் பண்டிதரென்னும் அகங்காரமுள்ளவராய்க் கள்ளைக் குடிக்கத் தலைப்பட்டார்கள். பிராம்மணர்கள், க்ஷத்திரியர்கள், வைசையர்கள், சூத்திரர்கள் யாவரும் கெட்ட வழியிற் சென்று ஒருவரையொருவர் அடுத்துக் கொலைசெய்ய முயன்றார்கள். கெட்டவழியிற் சென்ற பிராம்மணர்கள் தம்தர்மத்தைவிட்டுப் பாஷண்டர்களானார்கள். எல்லோரும் திருட்டு, பொய் மாயைகளைச் செய்தார்கள். தமது ஜாதிதர்மங்களையும் ஆஸ்ரமதர்மங்களையும் ஸரிவரநடத்தி நல்வழிச் செல்லும் பிராம்மணர்களையும், வைசியர்களையும் தர்மஞ்செய்யும் சூத்திரர்களையும், கெட்ட நடையுள்ள சிலர் யாதொரு பயமுமின்றிக் கொலை செய்தார்கள். வேறு சிலர் யாகத்தையும் அத்தியயனத்தையும் செய்பவர்களையும், ஆஸ்ரமத்திலிருக்கும் தவஞ்செய்பவர்களையும், பசுக்கள், பாலர்கள், கிழவர்கள், ஸ்திரீகள் ஆகிய இவர்களையும் நாசஞ்செய்தார்கள். வேதமும், தர்மசாஸ்திரமும், ராஜநீதியும் அக்காலம் ஒளித்துப் போயின. கீழ்மேலான கெட்ட செய்கையால் பல துவிஜர்கள் பெரும்பாலும் விராத்தியர்களும், மிலேச்சர்களுமானார்கள். தர்மத்தைப் பாதுகாக்கும் க்ஷத்திரியர்களால் நீதிப்படி காக்கப்படாத பூமிதேவியும் அக்காலத்தில் துஷ்டமனிதர்களின் தீச்செயல்களால் பீடிக்கப்பட்டுப் பாதாளஞ் செல்லத் தொடங்கினாள். அப்படிப் பயந்து ஓடிப் பாதாளத்தில் முழுகக்கூடிய பூமியைக் கண்டு பெரிய மனுமுள்ள கஸ்யபர் தமது தொடையில் தாங்கித் தூக்கினார்" என்றிருக்கிறது.
பூமாதேவி {கசியபரிடம்}, "ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே}, க்ஷத்திரியர்களில் முதன்மையானோர் சிலர் என்னால் பெண்களுக்கு மத்தியில் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் ஹைஹயர்களின் குலத்தில் பிறந்தவர்கள். ஓ! தவசியே, அவர்கள் என்னைப் பாதுகாக்கட்டும்.(73) ஓ! சக்திமிக்கவரே, புருவின் குலத்தில் விதுரதனின் மகன் என்றொருவன், ரிக்ஷவான் மலைகளில் கரடிகளுக்கு மத்தியில் வளர்ந்து வருகிறான்.(74) சௌதாசனின் மகனான மற்றொருவன், அளவிலா சக்தி கொண்டவரும், எப்போதும் வேள்விகளில் ஈடுபடுபவருமான பராசரரின் கருணையால் பாதுகாக்கப்பட்டு வருகிறான்.(75) அவன் மறுபிறப்பாள வகைகளிலொன்றில் பிறந்திருந்தாலும், ஒரு சூத்திரனைப் போல அந்த முனிவருக்கு அனைத்துப் பணிவிடைகளையும் செய்து வருவதால் அவன் சர்வகர்மன் (அனைத்துப் பணிகளையும் செய்யும் பணியாள்) என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறான்.(76) பெரும் சக்தி கொண்ட சிபியின் மகன் கோபதி என்ற பெயரில் காட்டில் பசுக்களுக்கு மத்தியில் வளர்ந்து வருகிறான். ஓ! தவசியே, அவன் என்னைப் பாதுகாக்கட்டும்.(77)
பெரும் வலிமை கொண்ட பிரதர்த்தனன் மகன், வத்சன் என்ற பெயரில் மாட்டுக்கொட்டிலில் கன்றுகளுக்கு மத்தியில் வளர்ந்து வருகிறான். அரச வகையைச் சேர்ந்த அவன் என்னைப் பாதுகாக்கட்டும்.(78) திவிரதனின் பேரனும், ததிவாஹனனின் மகனுமான ஒருவன், தவசியான கௌதமரால் கங்கைக்கரையில் பாதுகாக்கப்பட்டு மறைக்கப்பட்டிருக்கிறான்.(79) அவனுடைய பெயர் பிருஹத்ரதன் என்பதாகும். பெரும் சக்தியாலும், எண்ணற்ற அருள் குணங்களாலும் அருளப்பட்டிருக்கும் அந்த அருள் நிறைந்த இளவரசன் கிருத்ரக்கூடம் என்ற மலையில் ஓநாய்களால்[2] பாதுகாக்கப்படுகிறான்.(80) மருத்த குலத்தைச் சேர்ந்த பல க்ஷத்திரியர்களும் பாதுகாக்கப்பட்டிருக்கின்றனர். சக்தியில் மருத்த தேவனுக்கே இணையான அவர்கள், பெருங்கடலால் வளர்க்கப்பட்டிருக்கின்றனர்.(81) இந்த க்ஷத்திரிய வகைப் பிள்ளைகள் பல்வேறு இடங்களில் இருப்பதாகக் கேள்விப்படுகிறோம். அவர்கள், கைவினைஞர்கள் மற்றும் பொற்கொல்லர்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் என்னைப் பாதுகாத்தால், நான் அசைவில்லாமல் நிலைபெற்றிருப்பேன்.(82) அவர்களுடைய தந்தைமாரும், பாட்டன்மாரும் பேரன்மாரும் பேராற்றல் கொண்ட ராமரால் {பரசுராமரால்} என் பொருட்டுக் கொல்லப்பட்டனர். ஓ! பெரும் தவசியே {கசியபரே}, அவர்களது ஈமச் சடங்குகள் முறையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டியது என் கடமையாகும்.(83) தற்போதைய ஆட்சியாளர்களால் நான் பாதுகாக்கப்பட விரும்பவில்லை. ஓ! தவசியே, நான் (முன்பு போலவே) நீடிக்க வேண்டிய ஏற்பாடுகளை விரைவாகச் செய்வீராக" என்றாள்.(84)
[2] கும்பகோணம் பதிப்பில் "மந்திகளால்" என்றிருக்கிறது.
வாசுதேவன் {கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "அப்போது, தவசியான கசியபர், அந்தத் தேவி {பூமாதேவி} குறிப்பிட்ட பெருஞ்சக்தி கொண்ட க்ஷத்திரியர்களைத் தேடி (அவளைப் பாதுகாப்பதற்கான) மன்னர்களாக முறையாக அவர்களை நிறுவினார்.(85) இப்போது வரை நீடித்திருக்கும் அந்த க்ஷத்திரிய குலங்களைச் சேர்ந்தோர், அந்த இளவரசர்களின் வாரிசுகளே ஆவர். ஓ! பாண்டுவின் மகனே, எவற்றை நீர் கேட்டீரோ, அவை பழங்காலத்தில் இவ்வாறே நடந்தன" என்றான் {கிருஷ்ணன்}.(86)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அறவோரில் முதன்மையான அந்த உயர் ஆன்ம யாதவ வீரன் {கிருஷ்ணன்}, யுதிஷ்டிரனுடன் இவ்வாறு பேசிக் கொண்டே, திசைப்புள்ளிகள் அனைத்திற்கும் ஒளியூட்டும் தெய்வீகச் சூரியனைப் போல அந்தத் தேரில் வேகமாகச் சென்று கொண்டிருந்தான்".(87)
சாந்திபர்வம் பகுதி – 49ல் உள்ள சுலோகங்கள் : 87
ஆங்கிலத்தில் | In English |