Who is the best of kings? | Shanti-Parva-Section-57 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 57)
பதிவின் சுருக்கம் : மன்னன் என்பவன் செயல்பட ஆயத்தமாக இருக்க வேண்டும்; குடிமக்களுக்குப் பாதுகாப்பை வழங்க வேண்டும்; அரச காரியங்களில் பணியில் அமர்த்தப்பட வேண்டியவர்களின் பண்புகள்; சிறந்த மன்னனுக்குரிய அடிப்படை தேவைகள்; எவன் ஆளத்தகுந்த மன்னன்; தவிர்க்கப்பட வேண்டிய ஆறு மனிதர்கள் ஆகியன குறித்து யுதிஷ்டிரனிடம் உரையாடிய பீஷ்மர்....
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! யுதிஷ்டிரா, ஒரு மன்னன் எப்போதும் செயல்பட ஆயத்தமாக இருக்க வேண்டும். ஒரு பெண்ணைப் போல முயற்சியற்றிருக்கும் மன்னன் புகழத்தகாதவனாவான்.(1) ஓ! ஏகாதிபதி, இது தொடர்பாக, புனிதமான உசனஸ் {சுக்கிரன்} ஒரு சுலோகத்தைப் பாடியிருக்கிறார். ஓ! மன்னா, அதை நான் உரைக்கிறேன் கவனமாகக் கேட்பாயாக.(2) "போரில் வெறுப்புள்ள மன்னன், மனைவியர் மற்றும் பிள்ளைகளிடம் பெரும்பற்றுக் கொண்ட பிராமணன் ஆகிய இருவரையும், எலியை விழுங்கும் பாம்பைப் போலப் பூமியானவள் விழுங்குகிறாள்".(3) ஓ! மன்னர்களில் புலியே இதை நீ எப்போதும் உன் இதயத்தில் தாங்குவதே உனக்குத் தகும். (விதிப்படி) யாருடன் அமைதி பேணப்பட வேண்டுமோ அந்த எதிரிகளிடம் அமைதியை ஏற்படுத்திக் கொண்டு, யாருடன் போர்தொடுக்கப்பட வேண்டுமோ அந்த எதிரிகளிடம் போர் தொடுப்பாயாக.(4) ஏழு அங்கங்களுடன்[1] கூடிய உன் நாட்டிடம் பகைமை பாராட்டுபவன் உன் ஆசானோகவோ, உன் நண்பனாகவோ இருந்தாலும் கூட, அவன் உன்னால் கொல்லப்பட வேண்டும்.(5)
[1] "மன்னன், அமைச்சர்கள், நண்பர்கள், கருவூலம், நாட்டுக்கு உரிமைப்பட்ட நிலப்பகுதி, கோட்டைகள் படைகள் ஆகியனவே நாட்டின் ஏழு அங்கங்கள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, மன்னர்களின் கடமை குறித்து, பிருஹஸ்பதியின் கருத்துக்கு ஏற்புடைய வகையில் மன்னன் மருத்தனால் பாடப்பட்ட பழைய சுலோகம் ஒன்று இருக்கிறது.(6) "ஓர் ஆசான், அகந்தையுடனும், எது செய்யப்பட வேண்டும், எது செய்யப்படக்கூடாது என்பதில் அலட்சியத்துடனும் இருந்து வரைமுறைகள் அனைத்தையும் மீறினால் அழிவில்லா வரைமுறைகளின்படி அவருக்கும் தண்டனையுண்டு".(7) பாஹுவின் மகனும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனுமான மன்னன் சகரன், தன் குடிமக்களுக்கு நன்மை செய்யும் விருப்பத்தால் தன் மூத்த மகனான அசமஞ்சனை நாடு கடத்தினான்.(8) ஓ! மன்னா, அந்த அசமஞ்சன், குடிமக்களின் பிள்ளைகளைச் சரயுவில் {சரயு ஆற்றில்} மூழ்கடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான். எனவே அவனது தந்தை {மன்னன் சகரன்} அவனை {அசமஞ்சனை} நிந்தித்து, நாடு கடத்தினான்.(9) முனிவர் உத்தாலகர், தனக்குப் பிடித்தமான மகனும், கடுந்தவங்களைக் கொண்டவருமான சுவேதகேது, பிராமணர்களை மகிழ்விப்பதாக வஞ்சகமாக உறுதி கூறி, அவர்களை அழைப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்ததால் அவரைக் கைவிட்டார்.(10)
குடிமக்களின் மகிழ்ச்சி, உண்மையை நோற்கும் நோன்பு, நடத்தையில் உண்மை மற்றும் நேர்மை ஆகியவையே மன்னர்களின் நித்திய கடமைகளாகும்.(11) ஒரு மன்னன் பிறரின் செல்வத்தில் ஆசை கொள்ளக்கூடாது. எது கொடுக்கப்பட வேண்டுமோ அதைச் சரியான நேரத்தில் கொடுக்க வேண்டும். ஒரு மன்னன் ஆற்றல் கொண்டவனாகவும், பேச்சில் உண்மை நிறைந்தவனாகவும், உணர்வால் மன்னிக்கும் இயல்பு கொண்டவனாகவும் இருந்தால் அவன் ஒருபோதும் செழிப்பிலிருந்து வீழமாட்டான்.(12) தீமைகளிலிருந்து தூய்மையடைந்த ஆன்மாவைக் கொண்ட மன்னன், தன் கோபத்தைக் கட்டுப்படுத்த இயன்றவனாகவும், சாத்திரங்களுக்கு ஏற்புடைய தீர்மானங்களை எடுப்பவனாகவும் இருப்பான். அவன் எப்போதும் அறம், பொருள், இன்பம் மற்றும் வீடு ஆகியவற்றை {தர்மார்த்தகாமமோக்ஷத்தை} (நீதியுடன்) பின்பற்ற வேண்டும்.(13) இவை மூன்றை (அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியவற்றைப்) பொறுத்தவரையில் ஒரு மன்னன் தன் ஆலோசனைகளை எப்போதும் மறைக்க வேண்டும். தன் ஆலோசனைகள் வெளிப்படுவதைக் காட்டிலும் ஒரு மன்னனுக்குப் பெரும் தீமை ஏதும் ஏற்பட முடியாது.(14) மன்னர்கள் தங்கள் கடமைகளை ஆற்றுகையில் நால் வகையினரையும் பாதுகாக்க வேண்டும். வேறுபட்ட வகையினரை {நால் வர்ணத்தாரைப்} பொறுத்தவரை கடமைகளில் குழப்பமேற்படாமல் தவிர்ப்பது மன்னர்களின் நித்திய கடமையாகும்.(15)
ஒரு மன்னன் (தன் பணியாட்களைத் தவிர வேறு யாரிடமும்) நம்பிக்கை வைக்கக்கூடாது, அதேபோல (தன் பணியாட்களிடம் கூட) நம்பிக்கை இல்லாமலும் இருக்கக்கூடாது. அவன் தன் புத்தியால், அரசுரிமைக்குத் தேவைப்படும் முக்கியமான ஆறு ஆதாரங்களின்[2] தகுதிகளையும், குறைகளையும் கவனிக்க வேண்டும்.(16) தன் எதிரிகளின் கவனக்குறைவுகளைக் கவனிப்பவனும், அறம், பொருள், இன்பத்தில் நீதியைப் பின்பற்றுபவனும், இரகசியங்களை உறுதி செய்யப் புத்திக்கூர்மையுள்ள ஒற்றர்களை நியமிப்பவனும், தன் எதிரிகளுடைய அதிகாரிகளுக்குச் செல்வம் கொடுத்துக் கெடுக்க முயல்பவனுமான மன்னன் பாராட்டுக்குத் தகுந்தவனாவான்.(17) ஒரு மன்னன் யமனைப் போல நீதியை நிர்வகித்து, குபேரனைப் போலச் செல்வத்தைத் திரட்ட வேண்டும். தான் அடைந்தவை, இழந்தவை மற்றும் தன் ஆட்சிப்பகுதிகள் ஆகியவற்றின் நிறை குறைகளை அவன் கண்காணிக்க வேண்டும்.(18) உணவில்லாதவர்களுக்கு அவன் உணவளிக்க வேண்டும். உணவளித்த பிறகு அஃதை அவர்களிடம் விசாரிக்க வேண்டும். அவன் (கடுப்பில்லாத) புன்னகையுடன் கூடிய முகத்துடன் இனிமையாகப்பேச வேண்டும்.(19) அவன், வயதில் பெரியோருக்காக எப்போதும் காத்திருந்து, தன் தாமதத்திற்கு வருந்த வேண்டும். பிறரின் உடைமைகளில் அவன் ஒருபோதும் ஆசை வைக்கலாகாது.(20)
[2] "இந்த ஆறும்: 1. (பலமிக்க எதிரியிடம்) அமைதியைப் பேணல், 2. (சமபலம் கொண்ட எதிரியிடம்) போருக்குத் தயாராக இருத்தல், 3. (பலவீனமானவர்களின் ஆட்சிப்பகுதிகளுக்கு அணிவகுத்து) படையெடுத்தல், 4. இடைத்தங்கல், 5.(பலவீனமாக இருந்தால், தன் கோட்டைக்குள்) பாதுகாப்பை நாடல், 6.(எதிரியின் தலைமை அதிகாரிகளுக்கு மத்தியில்) பிரிவினையைத் தூண்டல்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அவன் நீதிமான்களின் நடத்தையை உறுதியாகப் பின்பற்றி, அந்நடத்தையைக் கவனமாக நோற்க வேண்டும். நல்லோரின் செல்வத்தை அவன் ஒருபோதும் கைப்பற்றக்கூடாது. நியாயமற்றவர்களிடம் உள்ள செல்வத்தைக் கைப்பற்றி நல்லோரிடம் அவன் கொடுக்க வேண்டும்.(21) ஒரு மன்னன் தானே தாக்குவதில் திறன்கொண்டவனாக இருக்க வேண்டும். அவன் ஈகை பயில வேண்டும். அவன் தன் ஆன்மாவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அவன் பிரகாசமாக உடை உடுத்த வேண்டும். அவன் சரியான காலங்களில் கொடையளித்து, தன் உணவை முறையான நேரங்களில் உட்கொள்ள வேண்டும். அவன் நன்னடத்தைக் கொண்டவனாகவும் இருக்க வேண்டும்.(22) செழிப்பை அடைய விரும்பும் மன்னன், துணிவுமிக்கோர், அர்ப்பணிப்புமிக்கோர், எதிரிகளால் வஞ்சிக்கப்பட முடியாதோர், நற்குடியில் பிறந்தோர், உடல்நலம் கொண்டோர், நன்னடத்தைக் கொண்டோர், நன்னடத்தைக் கொண்ட குடும்பங்களுடன் தொடர்பிலிருப்போர், மரியாதைக்குரியோர், பிறரை அவமதிக்காதோர், அனைத்து அறிவியல்களையும் அறிந்தோர், உலகம் மற்றும் அதன் காரியங்களைக் குறித்த அறிவைக் கொண்டோர், நாட்டின் எதிர்காலம் குறித்து எப்போதும் கவனமாக இருப்போர், தங்கள் கடமைகளை எப்போதும் நோற்போர், நேர்மையானோர், மலைகளைப் போன்ற உறுதியைக் கொண்டோர் ஆகியோரை எப்போதும் தன் பணியில் இணைத்துக் கொள்ள வேண்டும். இன்ப நோக்கங்களைப் பொறுத்தவரையில் அவனுக்கும் அவர்களுக்கும் இடையில் எந்த வேறுபாடுகளும் இருக்கக்கூடாது. தன் குடை மற்றும் கட்டளையிடும் அதிகாரம் ஆகியவை மட்டுமே அவர்களுக்குள் ஒரே வேறுபாடாக இருக்க வேண்டும்.(23-25) அவர்களுக்கு முன்னாலும், பின்னாலும் அவனுடைய நடத்தையானது ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். இவ்வாறு நடந்து கொள்ளும் மன்னன் ஒருபோதும் துயரடையமாட்டான்.(26)
அனைவரையும் சந்தேகப்பட்டு, தன் குடிமக்களுக்குக் கனமான வரிகளை விதித்து நேர்மையற்றவனாகவும், பேராசைக்காரனாகவும் இருக்கும் மன்னன், விரைவில் தன் பணியாட்கள் அல்லது உறவினர்களாலேயே தன் உயிரை இழப்பான்.(27) நன்னடத்தைக் கொண்டவனும், தன் மக்களின் இதயங்களைக் கவர்வதில் ஈடுபடுபவனுமான மன்னன், எதிரிகளால் தாக்கப்பட்டாலும் ஒருபோதும் அழிவடையமாட்டான். ஒருவேளை வெல்லப்பட்டாலும், அவன் வெகுவிரைவில் தன் நிலையை மீண்டும் அடைவான்.(28) ஒரு மன்னன் கோபம் நிறைந்தவனாக இல்லையென்றால், தீய நடைமுறைகளுக்கு அடிமையாகாமல் இருந்தால், கடும் தண்டனைகளை அளிக்காமல் இருந்தால், தன் ஆசைகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளக்கூடியவனாக இருந்தால், அவன் (அனைத்துயிர்களுக்கும் நம்பிக்கையளிக்கும்) இமய மலைகளைப் போல அனைவரின் நம்பிக்கைக்குரியவனாவான்.(29)
ஞானம், ஈகை, எதிரிகளின் கவனக்குறைவைப் பயன்படுத்திக் கொள்ளும் ஆயத்த நிலை, இனிய பண்புகள், நால்வகைசேர்ந்த தன் குடிமக்களுக்கான நன்மையையும், தீமையையும் அறிந்த நிலை, செயலூக்கம், கோபத்தை முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல், பழியுணர்ச்சி இல்லாமை, உயர்ந்த மனம், கோபம் நிறைந்த மனோநிலை இல்லாமை, வேள்விகளிலும், பிற அறச் செயல்களிலும் ஈடுபாடு, தற்பெருமை பேசாமை, தன்னால் தொடங்கப்பட்ட அனைத்து வேலைகளை நிறைவு செய்யத் தீவிரச் செயல்பாடு ஆகியவற்றைக் கொண்டவனே மன்னர்களில் சிறந்தவனாவான்.(30-32) தன் தந்தையின் வீட்டில் இருக்கும் மகனைப் போலத் தன் நாட்டில் உள்ள மக்கள் அச்சமில்லாமல் வாழும் வகைச் செய்பவனே மன்னர்களில் சிறந்தவனாவான்.(33) தங்கள் செல்வத்தை மறைத்து வைக்கும் தேவையில்லாதவர்களும், தங்களுக்கான நன்மை தீமைகளை அறிந்தவர்களுமான குடிமக்களைக் கொண்டிருப்பவனே மன்னர்களில் சிறந்தவனாவான்.(34)
எவனுடைய குடிமக்கள் தங்கள் தங்கள் கடமைகளில் ஈடுபட்டிருக்கின்றனரோ, கடமைக்காகத் தங்கள் உடல்களைக் கைவிடவும் அஞ்சுவதில்லையோ; எவனுடைய மக்கள் முறையாகப் பாதுகாக்கப்பட்டு, அமைதி நிறைந்த நடத்தையுடன், கீழ்ப்படிந்தவர்களாக, அடக்கமானவர்களாக, கட்டுப்படுபவர்களாக, சச்சரவுகளில் ஈடுபட விரும்பாதவர்களாக, முற்போக்கானவர்களாக இருக்கின்றனரோ அவனே உண்மையில் மன்னனாவான். எந்த மன்னனின் ஆட்சிப்பகுதிகளில் தீமைகள், கள்ளநடத்தை, வஞ்சகம், பொறாமை ஆகியவை ஏதும் இல்லையோ அந்த மன்னன் அழிவில்லா தகுதியை ஈட்டுகிறான்.(35,36)
எவன் அறிவை மதிக்கிறானோ, எவன் சாத்திரங்களுக்கும், தன் மக்களுக்கான நன்மைக்கும் அர்ப்பணிப்புடன் இருக்கிறானோ, எவன் நீதியின் பாதையில் நடக்கிறானோ, எவன் முற்போக்காளனோ அந்த மன்னனே உண்மையில் ஆளத்தகுந்தவனாவான்.(37) எவனுடைய ஒற்றர்கள், ஆலோசனைகள், நிறைவேற்றப்பட்ட மற்றும் நிறைவேற்றப்படாத செயல்கள் ஆகியன எதிரிகள் அறியாதனவாகவே இருக்கின்றனவோ அந்த மன்னனே ஆளத்தகுந்தவனாவான்.(38)
பின்வரும் வரியானது ராமசரிதம்[3] என்றழைக்கப்படும் உரையில் பிருகு குலத்தின் உசனஸால் {சுக்கிரனால்} மன்னர்களின் கடமைகள் என்ற கருத்தில் பாடப்பட்டுள்ளது.(39) "ஒருவன் முதலில் (எவனுடைய ஆட்சிப்பகுதியில் வாழ்வதெனத்) தன் மன்னனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பிறகு அவன் ஒரு மனைவியைத் தேர்ந்தெடுத்து, பிறகு செல்வம் ஈட்ட வேண்டும். ஒரு மன்னன் இல்லையென்றால் மனைவியும், உடைமைகளும் எவ்வாறு இருக்க முடியும்?"(40) நாட்டின் மீது ஆசை கொண்டோரைப் பொறுத்தவரையில், (குடிமக்களின்) பாதுகாப்பைத் தவிர வேறு எந்தக் கட்டுப்பாடான நித்திய கடமையும் அவர்களுக்குக் கிடையாது. தன் குடிமக்களுக்கு மன்னன் அளிக்கும் பாதுகாப்பே உலகத்தைத் தாங்கிப் பிடிக்கிறது[4].(41)
[3] பரசுராமரின் வரலாறு என்பதாகும். கும்பகோணம் பதிப்பில் இது பரசுராமரால் பாடப்பட்ட சுலோகம் என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பிலும் பார்க்கவர் என்று பரசுராமரே குறிப்பிடப்படுகிறார்.[4] "அரச பாதுகாப்பு இல்லையென்றால் விரைவில் உலகம் துன்புறும் என்பது இங்கே பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பிசேதசின் மகனான மனு, மன்னர்களின் கடமைகளைக் குறித்து இரு வரிகளைப் பாடியிருக்கிறார். அவற்றைக் கவனமாகக் கேட்பாயாக.(42) கடலில் உள்ள ஓட்டைப் படகைத் தவிர்ப்பதைப் போல இந்த ஆறு மனிதர்கள் தவிர்க்கப்பட வேண்டும். அவர்கள். பேசாத ஆசான், சாத்திரங்கள் பயிலா புரோகிதன்,(43) பாதுகாப்பை வழங்கா மன்னன், ஏற்பில்லாததைப் பேசும் மனைவி, கிராமத்திற்குள் திரிய விரும்பும் இடையன் மற்றும், காடுகளுக்குச் செல்ல விரும்பும் நாவிதன் ஆகியோராவர்[5]" {என்றார் பீஷ்மர்}.(44)
[5] "இடையனின் கடமை மேய்ச்சல் நிலங்களுக்குத் தன் மந்தையை ஓட்டிச் செல்லுதல். அங்கே செல்ல விரும்பாமல் அவன் கிராமத்திற்குள் திரிய விரும்பினால், அவனை அந்தத் தொழிலில் ஈடுபடுத்தக்கூடாது. அதே போல ஒரு நாவிதரின் கடமை கிராமத்திற்குள் இருப்பது. கிராமத்தில் இல்லாமல் அவன் காடுகளில் திரிந்து கொண்டிருந்தால் அவனை அப்பணியில் அமர்த்தக்கூடாது. இவ்விரண்டு வரிகளும் கல்விமான்களாலும், கல்விகற்காதவர்களாலும் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
சாந்திபர்வம் பகுதி – 57ல் உள்ள சுலோகங்கள் : 44
ஆங்கிலத்தில் | In English |