The duties of four classes! | Shanti-Parva-Section-60 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 60)
பதிவின் சுருக்கம் : பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் மற்றும் சூத்திரன் ஆகிய நான்கு வர்ணங்களின் தனிப்பட்ட கடமைகளைப் பட்டியலிட்ட பீஷ்மர்; பிராமணர்களின் பெருமையையும், வேள்விகளின் பயனையும் சொல்லி, வேள்விகள் அனைவரும் செய்யத்தக்கதே என்று சொன்னது...
வைசம்பாயனர் {ஜயமேஜயனிடம்} சொன்னார், "இதன்பிறகு யுதிஷ்டிரன் தன் கரங்களைக் கூப்பித் தன் பாட்டனான கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} வணங்கி, குவிந்த கவனத்துடன் மீண்டும்,(1) "நால்வகை மனிதர்களின் பொதுவான கடமைகள் எவை? ஒவ்வொரு வகையின் குறிப்பிட்ட கடமைகள் எனென்ன? எவ்வகை மனிதரால் எவ்வகை வாழ்வு முறை நோற்கப்பட வேண்டும்? மன்னர்களின் கடமைகள் எனக் குறிப்பாகச் சொல்லப்படுபவை எவை?(2) எந்த வழிமுறைகளால் ஒரு நாடு வளர்ச்சியை அடையும்? மன்னன் வளர்ச்சியடைவதற்கான வழிமுறைகள் என்ன? ஓ! பாரதக் குலத்தின் காளையே {பீஷ்மரே}, மன்னனின் குடிமக்களும், அவனது பணியாட்களும் வளர்ச்சியடைவது எவ்வாறு?(3) என்ன வகைக் கருவூலங்கள், தண்டனைகள், கோட்டைகள், கூட்டாளிகள், அமைச்சர்கள், புரோகிதர்களை ஒரு மன்னன் தவிர்க்க வேண்டும்?[1](4) எந்தெந்த வகைத் துயரம் மற்றும் ஆபத்துகளில் மன்னன் யாரை நம்ப வேண்டும்? எந்தத் தீமைகளில் இருந்து மன்னன் தன்னை உறுதியாகப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்? ஓ! பாட்டா, இவையனைத்தையும் எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(5)
[1] "ஒரு ரித்விஜயருக்கும், ஒரு புரோகிதருக்கு உள்ள வேறுபாடு என்னவென்றால், ரித்விஜர் குறிப்பிட்ட நிகழ்வுகளில் மட்டும் ஈடுபடுவார், புரோகிதரோ, நிலையான, நிரந்தரமான தொண்டுகளில் ஈடுபடுவார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "பெருமையுள்ள தர்மத்தையும், பிரம்மமான கிருஷ்ணனையும் வணங்குகிறேன். (இங்கே கூடியிருக்கும்) பிராமணர்களையும் வணங்கி, அழிவில்லா நித்திய கடமைகளை நான் உரைக்கப் போகிறேன்.(6) கோபத்தை அடக்குதல், பேச்சில் உண்மை, நீதி பேணல், மன்னிக்கும் தன்மை, மணந்து கொண்ட மனைவியிடம் பிள்ளைகளைப் பெறுதல், நடத்தையில் தூய்மை, சச்சரவு தவிர்த்தல், எளிமை, சார்ந்தோரைக் கட்டிக்காத்தல் ஆகிய இந்த ஒன்பது கடமைகளும் நால்வகையினர் அனைவருக்கும் (சமமாகவே) பொருந்தும்.(7)
எனினும், பிராமணர்களுக்கு மட்டுமே உரிய தனிப்பட்ட கடமைகளைக் குறித்து இப்போது நான் உனக்குச் சொல்லப் போகிறேன். ஓ! மன்னா, தற்கட்டுப்பாடே பிராமணர்களின் முதற்கடமையாகத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. வேதம் கற்பது, பொறுமையுடன் தவம் செய்வது ஆகியவையும் அவர்களது கடமைகளே. இவை இரண்டையும் செய்தால் அவர்களது செயல்பாடுகள் அனைத்தும் நிறைவடையும்.(8) எந்த முறையற்ற செயலையும் செய்யாமல் தன் கடமைகளை நோற்கும்போது, அந்த அறிவு கொண்ட அமைதியான பிராமணனைத் தேடி செல்வம் வந்தால்,(9) அவன் மணம்புரிந்து கொண்டு, பிள்ளைகளைப் பெற முயன்று, ஈகையும் பயின்று, வேள்விகளைச் செய்ய வேண்டும். இவ்வாறு அடையப்படும் செல்வமானது, (தகுந்த மனிதர்களுக்கும், உறவினர்களுக்கும்) பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.(10) அவனது வேத கல்வியின் மூலம், (அந்தப் பிராமணனுக்கு விதிக்கப்பட்ட) அறச் செயல்கள் அனைத்தும் நிறைவடைகிறது. வேறெதையும் அவன் அடைகிறானோ, இல்லையோ, அவன் வேத கல்விக்குத் தன்னை அர்ப்பணித்தால், அவன் பிராமணன் என்றோ, அனைத்துயிர்களுக்கும் நண்பன் என்றோ அறியப்படுவான்.(11)
எனினும், பிராமணர்களுக்கு மட்டுமே உரிய தனிப்பட்ட கடமைகளைக் குறித்து இப்போது நான் உனக்குச் சொல்லப் போகிறேன். ஓ! மன்னா, தற்கட்டுப்பாடே பிராமணர்களின் முதற்கடமையாகத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. வேதம் கற்பது, பொறுமையுடன் தவம் செய்வது ஆகியவையும் அவர்களது கடமைகளே. இவை இரண்டையும் செய்தால் அவர்களது செயல்பாடுகள் அனைத்தும் நிறைவடையும்.(8) எந்த முறையற்ற செயலையும் செய்யாமல் தன் கடமைகளை நோற்கும்போது, அந்த அறிவு கொண்ட அமைதியான பிராமணனைத் தேடி செல்வம் வந்தால்,(9) அவன் மணம்புரிந்து கொண்டு, பிள்ளைகளைப் பெற முயன்று, ஈகையும் பயின்று, வேள்விகளைச் செய்ய வேண்டும். இவ்வாறு அடையப்படும் செல்வமானது, (தகுந்த மனிதர்களுக்கும், உறவினர்களுக்கும்) பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.(10) அவனது வேத கல்வியின் மூலம், (அந்தப் பிராமணனுக்கு விதிக்கப்பட்ட) அறச் செயல்கள் அனைத்தும் நிறைவடைகிறது. வேறெதையும் அவன் அடைகிறானோ, இல்லையோ, அவன் வேத கல்விக்குத் தன்னை அர்ப்பணித்தால், அவன் பிராமணன் என்றோ, அனைத்துயிர்களுக்கும் நண்பன் என்றோ அறியப்படுவான்.(11)
ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, ஒரு க்ஷத்திரியனின் கடமைகள் என்னென்ன என்பதையும் நான் உனக்குச் சொல்கிறேன். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ஒரு க்ஷத்திரியன் கொடுக்கவே வேண்டும், இரக்கக் கூடாது. தன் வேள்விகளையே அவன் செய்ய வேண்டும், அடுத்தவரின் வேள்விகளில் ஒரு புரோகிதராகப் பொறுப்பேற்று அவனே அவ்வேள்விகளைச் செய்யக் கூடாது.(12) அவன் {க்ஷத்திரியன்} (வேதங்களைப்) பயிற்றுவிக்கக் கூடாது, (ஒரு பிராமண ஆசானின் மூலம்) அவற்றைப் பயிலவே வேண்டும். அவன் மக்களைப் பாதுகாக்க வேண்டும். கள்வர்களையும், தீய மக்களையும் அழிப்பதில் எப்போதும் முயன்று, போரில் தன் ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும்.(13) வேதங்களில் அறிவைக் கொண்டவர்களும், போரில் வெற்றியை ஈட்டுபவர்களும், பெரும் வேள்விகளைச் செய்பவர்களுமான க்ஷத்திரிய ஆட்சியாளர்கள், தங்கள் தகுதியின் {புண்ணியத்தின்} மூலம் மறுமையில் அருள் உலகங்கள் பலவற்றைப் பெறுவதில் முதன்மையானோராகத் திகழ்வார்கள்.(14) பழைய சாத்திரங்களை அறிந்த மனிதர்கள், போரில் காயமேற்படாமல் திரும்பும் க்ஷத்திரியனை மெச்சுவதில்லை.(15) அஃது இழிந்த க்ஷத்திரியனின் நடத்தையாகத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. கள்வர்களை ஒடுக்குதலைவிட உயர்ந்த கடமையேதும் அவனுக்கு இல்லை.(16) கொடைகள், கல்வி மற்றும் வேள்விகள் ஆகியன மன்னர்களுக்குச் செழிப்பைக் கொண்டு வருகின்றன. எனவே, அறத்தகுதியை அடையவிரும்பும் ஒரு மன்னன் போரில் ஈடுபட வேண்டும்[2].(17) தன் குடிமக்கள் அனைவரையும் தங்கள் தங்கள் கடமைகளை நோற்கும்படி நிறுவும் ஒரு மன்னன், அவர்கள் அனைவரையும், அறவிதிகளுக்கு உட்பட்டே அனைத்தையும் செய்ய வைக்க வேண்டும்.(18) அவன் {மன்னன்} வேறேதும் செயலைச் செய்கிறானோ இல்லையோ, தன் குடிமக்களை மட்டும் பாதுகாத்தாலே அவன் தன் அறச் செயல்கள் அனைத்தையும் நிறைவேற்றியதாகக் கருதப்பட்டு, க்ஷத்திரியன் என்றும், மனிதர்களில் முதன்மையானவன் என்றும் அழைக்கப்படுவான்.(10)
[2] "ஏனெனில், போரில்லாமல், அவனால் தன் நாட்டை விரிவாக்கவோ, தானமளிப்பதற்குச் செல்வத்தை அடையவோ, வேள்விகளுக்கான செலவுகளைச் சந்திக்கவோ முடியாது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஓ! யுதிஷ்டிரா, வைசியர்களுக்கான நித்திய கடமைகளை இப்போது நான் உனக்குச் சொல்லப் போகிறேன். ஒரு வைசியன், கொடைகள் அளிப்பது, வேதகல்வி கற்பது, வேள்விகள் செய்வது, நியாயமான வழிமுறைகளில் செல்வத்தை ஈட்டுவது ஆகியவற்றைச் செய்ய வேண்டும்.(20) ஒரு தந்தை தம் மகன்களைப் பாதுகாப்பதைப் போல, அவன், (தான் வளர்க்கும்) விலங்குகள் அனைத்தையும் உரிய கவனத்துடன் வளர்த்துப் பாதுகாக்க வேண்டும். வேறெதையும் அவன் செய்வது, அவனுக்கு முறையற்றதாகக் கருதப்படும்.(21) (வீட்டில் வளர்க்கும்) விலங்குகளைப் பாதுகாப்பதால் அவன் பெரும் மகிழ்ச்சியை அடைவான். (வீட்டில் வளர்க்கக்கூடிய) விலங்குகளைப் படைத்த படைப்பாளன், அவற்றைப் பராமரிப்பதை வைசியனுக்கே அளித்திருக்கிறான்.(22) பிராமணனுக்கும், க்ஷத்திரியனுக்கும் அனைத்து உயிரினங்களையும் (பரமாரிப்பதை) அளித்திருக்கிறான். ஒரு வைசியனின் தொழில்கள், மற்றும் அவன் தன் வாழ்வாதாரத்திற்குத் தேவையானதை ஈட்டும் வழிமுறைகள் ஆகியவை என்னென்ன என்பதை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(23) அவன் (பிறருக்காக) ஆறு பசுக்களைப் பாதுகாத்தால் {மேய்த்தால்}, தன் உழைப்பூதியமாக ஒரு பசுவின் பாலை அவன் எடுத்துக் கொள்ளலாம்; அவன் (பிறருக்காக) நூறு பசுக்களைப் பாதுகாத்தால் {மேய்த்தால்}, {வருடத்திற்கு} ஒரு ஜோடியை {ஒரு பசு மற்றும் ஒரு காளையை} அத்தகு கட்டணமாக அவன் எடுத்துக் கொள்ளலாம். அவன் {வைசியன்} பிறரின் செல்வத்தைக் கொண்டு வணிகம் செய்தால், பெறுவதில் {லாபத்தில்} ஏழில் ஒரு பங்கை {அவனுடைய பங்காக} எடுத்துக் கொள்ளலாம். கொம்புகளின் வணிகத்தில் எழும் லாபத்திலும் அவன் தன் பங்காக ஏழில் ஒன்றை எடுத்துக் கொள்ளலாம், ஆனால், குளம்புகளின் வணிகத்தில் அவன் பதினாறில் ஒன்றை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்[3]. அவன் பிறரால் கொடுக்கப்பட்ட விதைகளைக் கொண்டு உழவில் ஈடுபட்டால், கிடைக்கும் விளைச்சலில் அவன் ஏழில் ஒரு பங்கை எடுத்துக் கொள்ளலாம். இதுவே அவனுடையே ஆண்டு உழைப்பூதியமாக இருக்க வேண்டும்.(24) கால்நடை வளர்க்கக்கூடாது என்று ஒரு வைசியன் ஒருபோதும் விரும்பக்கூடது. ஒரு வைசியன் கால்நடை வளர்க்க விரும்பினால், வேறு எவனும் அப்பணியில் ஈடுபடுத்தப்படக்கூடாது.(25)
[3] இங்கே இறந்து போன விலங்குகளின் {மாடு, ஆடு, குதிரை, யானை என எந்த விலங்கின்} கொம்புகள் மற்றும் குளம்புகள் சொல்லப்படுகின்றன என்று நினைக்கிறேன். கும்பகோணம் பதிப்பில், "வர்த்தகத்தில் கொள்முதல் தொகையில் ஏழிலொன்று லாபம் பெறுதல் நியாயமாகும். வருஷம் ஒருமுறை முடிவு பெறும் பயிர்களுக்கும் மற்றுமுள்ள விதைகளுக்கும் கவயசிருங்க முதலிய வர்த்தகத்திற்கும் இவ்வேழில் ஒரு பாகமே லாபமாகும். விலையுயர்ந்த ஒரு வகை மிருகத்தின் குளம்பு முதலிய வஸ்துக்களின் வர்த்தகத்தில் பதினாறில் ஒன்றுதான் லாபம் கூடும்" என்றிருக்கிறது. கங்குலியில் லாபத்தில் ஏழில் ஒரு பங்கு என்று சொல்லப்படுகிறது. கும்பகோணம் பதிப்பில் கொள்முதல் தொகையில் ஏழிலொன்று லாபம் என்று சொல்லப்படுகிறது. இங்குக் கும்பகோணம் பதிப்பே தெளிவாக இருப்பதாகத் தெரிகிறது.
ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, சூத்திரர்களின் கடமைகள் என்ன என்பதை நான் உனக்குச் சொல்கிறேன். ஒரு சூத்திரன் மூன்று பிற வகையினருக்கும் பணியாளாக இருக்க வேண்டும் எனப் படைப்பாளன் கருதினான்.(26) இதனால், மூன்று பிற வகையினருக்கான தொண்டே ஒரு சூத்திரனின் கடமையாயிற்று. மூவகையினருக்கும் இத்தகு தொண்டில் ஈடுபடுவதால், ஒரு சூத்திரன் பெரும் மகிழ்ச்சியை அடைகிறான்.(27) அவன் மூன்று பிற வகையினரிடமும், அவர்களுடைய மூப்பின் அடிப்படையில் பணிசெய்ய வேண்டும். ஒரு சூத்திரன் ஒருபோதும் செல்வம் திரட்டக்கூடாது,(28) அவனுடைய செல்வத்தால் மற்று மூன்று மூத்த வகையினரையும் அவனுக்குக் கீழ்ப்படிந்தவர்களாக ஆக்குகிறான். இதனால் அவன் பாவத்தையே ஈட்டுவான். எனினும், மன்னனின் அனுமதியின் பேரில், அறச்செயல்கள் செய்வதற்காக ஒரு சூத்திரன் செல்வம் ஈட்டலாம்.(29) அவன் செய்ய வேண்டிய தொழிலையும், அவனது வாழ்வாதாரத்திற்குத் தேவையானதை ஈட்டவும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை இப்போது உனக்குச் சொல்கிறேன்.(30) சூத்திரர்கள் பிற (மூன்று) வகையினரால் நிச்சயம் பராமரிக்கப்பட வேண்டும் என்று சொல்லப்படுகிறது.(31)
பழைய குடை, தலைப்பாகைகள், படுக்கைகள், இருக்கைகள், காலணிகள், விசிறிகள் ஆகியன சூத்திரப் பணியாட்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும்.(32) அணிவதற்குப் பொருந்தாத கிழிந்த ஆடைகள் யாவும் மறுபிறப்பாள வகையினரால் {மூன்று பிற வர்ணத்தாரால்} சூத்திரனுக்குக் கொடுக்கப்பட வேண்டும். அவை சூத்திரர்களின் சட்டப்படியான உடைமைகளாகும்.(33) ஒரு சூத்திரன், மூவகை மறுபிறப்பாளர்களில் எவரிடம் பணி செய்ய அணுகினாலும், அவர்கள் அவனுக்கு முறையான வேலையை அளிக்க வேண்டும் என்று அறநெறி அறிந்த மனிதர்கள் சொல்கிறார்கள்.(34) மகனில்லாத சூத்திரனுக்கு அவனுடைய தலைவனே ஈமப் பிண்டம் அளிக்க வேண்டும். அவர்களில் பலவீனமானவர்களும், முதியவர்கள் {அவர்களுடைய தலைவனால்} பராமரிக்கப்பட வேண்டும்.
ஒரு சூத்திரன், தன் தலைவனுக்கு நேர்ந்த துயரம் என்ன இயல்பில், அல்லது என்ன தன்மையில் இருந்தாலும் அவனை ஒரு போதும் கைவிடக்கூடாது.(35) தலைவன் தன் செல்வத்தை இழந்தாலும், அவன் மிகுந்த பற்றார்வத்துடன் சூத்திரப் பணியாளால் ஆதரிக்கப்பட வேண்டும்[4]. ஒரு சூத்திரன் தனக்கெனச் செல்வம் கொள்ள முடியாது. அவன் கொண்ட எதுவும் சட்டப்படி அவனுடைய தலைவனுடையதே ஆகும்.(36) வேள்வி செய்வது மூன்று பிற வகையினரின் கடமையாக விதிக்கப்பட்டிருக்கிறது. ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அது சூத்திரனுக்கும் விதிக்கப்படுகிறது. எனினும், ஒரு சூத்திரன், சுவாஹா, சதா, அல்லது வேதத்தின் வேறு எந்த மந்திரத்தையும் ஓதத்தகுந்தவனல்ல.(37) இதன்காரணமாக, ஒரு சூத்திரன் வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள நோன்புகளை நோற்காமல் பாகயக்ஞங்கள் என்றழைக்கப்படும் சிறு வேள்விகளில் தேவர்களை வழிபட வேண்டும். பூர்ண பாத்திரம் என்றழைக்கப்படும் கொடையே அத்தகு வேள்விகளில் தக்ஷிணையாகத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது[5].(38) பழங்காலத்தில் பைஜவனன் என்ற பெயர் கொண்ட ஒரு சூத்திரன் (தன் வேள்விகளில் ஒன்றில்) ஐந்திராக்னி[6] {ஐந்திராக்னம்} என்றழைக்கப்படும் விதியின்படி ஒரு நூறாயிரம் {ஒரு லட்சம்} பூர்ண பாத்திரங்கள் அடங்கிய தக்ஷிணையை அளித்தான் என நாம் கேள்விப்படுகிறோம்.(39) (ஏற்கனவே சொல்லப்பட்டபடி) ஓ! பாரதா, வேள்வி என்பது மற்ற மூன்று வகையினரைப் போலவே சூத்திரனுக்கும் விதிக்கப்படுகிறது. அனைத்து வேள்விகளிலும், அர்ப்பணிப்பே முதன்மையானதாக விதிக்கப்படுகிறது[7].(40)
[4] கும்பகோணம் பதிப்பில், "சூத்திரன் எவ்வித ஆபத்திலும் எஜமானனை விட்டு விலகாமல் அவன் பொருளிழந்த காலத்தில் தன் குடும்பத்தில் அதிகமான பொருளால் அவனைப் போஷிக்க வேண்டும். சூத்திரர்களுடைய தனம் அவர்களுக்குச் சொந்தமின்றி அவர் எஜமானனைச் சேர்ந்ததாகும்" என்றிருக்கிறது.[5] "பாகயக்ஞம் என்பது தீய சகுனத்தை முன்னறிவிக்கும் கோளைத் தணிப்பது, அல்லது, விஸ்வதேவர்கள் என்றழைக்கப்படும் சிறுதெய்வங்களுக்கான வழிபாடு போன்ற சிறு வேள்வியாகும். பூர்ணபாத்திரம் என்பது ஒரு கூடை நிறைய அரிசி என்றோ, பெரும் உணவு என்றோ கொள்ளப்படும். அது 256 கைப்பிடிகளைக் கொண்டதாகும். பூர்ண பாத்திரத்தைத் தாண்டி, ஒரு சூத்திரன் வேறு எந்தத் தக்ஷிணையையும், தன் எந்த வேள்வியிலும் கொடுக்கக்கூடாது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "வேதத்தில் கூறிய யாகமானது வேதத்தில் அதிகாரம் பெற்ற பிராம்மணர் முதலிய மூன்று ஜாதிகளின் தர்மமே தவிர, சூத்திரனிடம் வேதமும் அது மூலமான ஸ்வாஹாகாரவஷட்காரங்களும் இல்லை. ஆகையால், வேதத்திற் சொல்லிய விரதங்களின்றிச் சூத்திரன், பூர்ணபாத்திரமென்னும் தக்ஷிணையுள்ள கிரஹசாந்தி முதலிய சிறு யாகங்களைச் செய்ய வேண்டும்" என்றிருக்கிறது.[6] "இந்த விதியில் தக்ஷிணை என்பது பசுக்கள், அல்லது குதிரைகளைக் கொண்ட நூறாயிரம் விலங்குகளாக இருக்க வேண்டும். இங்கே இந்தச் சூத்திரனைப் பொறுத்தவரையில், (மந்திரங்களில்லாமல்) அந்த விதி பின்பற்றப்படுவதால், பசு அல்லது குதிரைகளின் எண்ணிக்கைக்குப் பதிலாக நூறாயிரம் பூர்ணபாத்திரங்கள் கொடுக்கப்படுகின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[7] "மூன்று வகையினரிடம் கொள்ளும் அர்ப்பணிப்பின் காரணமாக ஒரு சூத்திரன், மத்திரங்களை ஓதத்தகுந்தவன் இல்லையென்றாலும், வேள்விகளின் தகுதியை {புண்ணியங்களை} ஈட்டுவான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அர்ப்பணிப்பே உயர்ந்த தெய்வமாகும். அது வேள்வி செய்வோர் அனைவரையும் தூய்மைப்படுத்துகிறது. மேலும் பிராமணர்களே அந்தந்த சூத்திரப் பணியாட்களுக்குத் தேவர்களில் முதன்மையானோராவர்.(41) வேள்விகளில் பல்வேறு விருப்பங்கள் கனிவதற்காக அவர்கள் {பிராமணர்கள்} தேவர்களை வழிபடுகின்றனர். மற்ற மூன்று வகையினரும் பிராமணர்களிலிருந்து உதித்தனர்[8].(42) பிராமணர்கள் தேவர்களுக்கே தேவர்களாவர். அவர்கள் எது சொன்னாலும் உனது பெரும் நன்மைக்கே சொல்வார்கள். எனவே, அனைத்து வகை வேள்விகளும், நால்வகையினர் அனைவருக்கும் இயற்கையாகவே உரித்தாகுகின்றன. விருப்பப்பட்டால் செய்யலாம் என்பது ஒருவனுக்குக் கடமையாகாது.(43) ரிக்குகள், யஜுஸ்கள், சாமன்கள் ஆகியவற்றை அறிந்த பிராமணன், ஒரு தேவனாக வழிபடப்பட வேண்டும். ரிக்குகள், யஜஸ்கள், சாமன்கள் {சாம வேதம்} ஆகியவையற்ற சூத்திரன், பிரஜாபதியைத் தன் தேவனாகக் கொள்கிறான்[9].(44) ஓ! ஐயா, ஓ! பாரதா, மனோவேள்வியானது அனைத்து வகையினருக்கும் விதிக்கப்பட்டிருக்கிறது. தேவர்களும், பிற (மேன்மையான) மனிதர்களும், சூத்திரனின் வேள்விகளில் அளிக்கப்படும் காணிக்கைகளில் பங்கு பெற விரும்புவதில்லை என்பது உண்மையில்லை[10]. இதன் காரணமாகவே அர்ப்பணிப்பையே வேள்வியாகக் கொள்வது {சூத்திரர்களும் உட்பட} அனைத்து வகையினருக்கும் விதிக்கப்பட்டுள்ளது.(45)
[8] "இதன் காரணமாகவே தங்கள் பிராமணத் தலைவர்களால் செய்யப்படும் வேள்விகளின் தகுதிகளை {புண்ணியங்களை} சூத்திரர்கள் ஈட்டுகிறார்கள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[9] வேதங்களை அறிந்த பிராமணன் தானே தேவனாகிறான். ஒரு சூத்திரன் வேதங்களையும், வேத மந்திரங்களையும் ஓதத்தகுந்தவனில்லை என்றாலும், வேதங்களில் விதிக்கப்பட்ட சடங்குகளின்றிப் பிரஜாபதியைத் தன் தேவனாகக் கொண்டு, அவனை வழிபடலாம். பிராமணர்கள் அக்னியையும், க்ஷத்திரியர்கள் இந்திரனையும் தங்கள் தேவர்களாகக் கொண்டவர்களாவர். இங்கே இருக்கும் சொல்லான உபத்ரவஹன் Upadravah என்பது ஒரு பணியாளைக் குறிக்கும். எனவே, இங்கே அது சூத்திரன் எனக் கொள்ளப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[10] வேள்விகள் உடலாலும், சொற்களாலும், மனத்தாலும் செய்யப்படுகின்றன. {மற்ற} மூவகையினர் செய்யும் வேள்விகள் அனைத்தையும் பிராமணன் செய்யலாம். க்ஷத்திரியனும், வைசியனும், உடல்களால் செய்யப்படும் வேள்விகளைச் செய்ய முடியாது. அவர்கள் தங்கள் வேள்விகளைப் பிராமணர்கள் மூலமே செய்ய வேண்டும். எனினும் இந்த இரு வகையினரும் மந்திரங்களை ஓதலாம், மனோவேள்வியும் செய்யலாம். சூத்திரன் மட்டுமே வேள்விகளில் தன் உடலாலோ, சொற்களாலோ, அதாவது மந்திரங்களை ஓதியோ ஈடுபட முடியாது. அவனது வழக்கில் அவன் செய்யக்கூடிய வேள்வி மனோ வேள்வி மட்டுமே. மனோ வேள்வியானது, தேவர்களிடம் கொண்ட மதிப்பால், வேத சடங்குகளின்றிக் கொடுக்கத் தீர்மானிக்கப்படும் தானமாகும். அந்தத் தீர்மானம் {மனோ வேள்வியானது} உண்மையான தானங்களை அளிப்பதன் மூலம் பின்பற்றப்பட வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பிராமணனே தேவர்களில் முதன்மையானவன். அந்த வகையைச் சார்ந்தவர்கள் மற்ற வகையினரின் வேள்விகளைச் செய்யக்கூடாது என்பது உண்மையில்லை. விதானம் என்றழைக்கப்படும் நெருப்பு, வைசியர்களிடம் இருந்து அடையப்பட்டு, மந்திரங்களால் ஈர்க்கப்பட்டாலும் அதுவும் தாழ்ந்ததே[11]. மற்ற மூன்று வகையினரின் வேள்விகளையும் ஒரு பிராமணனே செய்கிறான்.(46) இதன் காரணமாக நால்வகையைச் சேர்ந்தோர் அனைவரும் புனிதமானவர்களே. இடைப்பட்ட வகையினரின் மூலம் அனைத்து வகையினரும் ஒருவருக்கொருவர் இரத்த உறவு கொண்டவர்களே. அஃதை (பிறப்பின் அடிப்படையில்) உறுதி செய்தால், அனைத்து வகையினரிலும் பிராமணனே முதலில் பிறந்தவன் என்பது வெளிப்படும். முன்பு சாமன் {சாம வேதம்} ஒன்றுதான், யஜுஸ் {யஜுர் வேதம்} ஒன்றுதான், ரிக்கும் {ரிக் வேதம்} ஒன்றுதான்[12].(47) பழைய வரலாறுகளை அறிந்தவர்கள், வைகானச முனிவர்களின் வேள்விகளில் இது தொடர்பாக அவர்களால் புகழ்ந்து பாடப்படும் ஒரு வரியை {சுலோகத்தைக்} காண்கின்றனர்.(48) "புலனடக்கம் கொண்ட ஒரு மனிதன், சூரிய உதயத்திற்கு முன்போ, பின்போ, இதயம் நிறைந்த அர்ப்பணிப்புடன் விதிப்படி (வேள்வி) நெருப்பில் காணைக்கைகளை ஆகுதி செய்கிறன். அர்ப்பணிப்பே வலிமைமிக்கக் காரணியாகும்".(49) மேலும் ஹோமங்களைப் பொறுத்தவரையில், ஸ்கன்னம் என்றழைக்கப்படும் வகையானதே தொடக்கம், அதே வேளையில் அஸ்கன்னம் என்றழைக்கப்படுவது இறுதியாகும் (ஆனால் தகுதியைப் பொறுத்தவரை முதன்மையானதாகும்). வேள்விகள் பலவகைப்பட்டவை. மேலும் அவற்றின் சடங்குகளும், பலன்களும் பலவகைப்பட்டவை.(50)
[11] "அனைத்து வேள்வி நெருப்புகளும் விதிப்படி வைசியர்களின் இல்லங்களில் இருந்தே பெறப்படுகின்றன. சூத்திரனின் வேள்வி நெருப்பு விதானம் என்றழைக்கப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "தங்களுடைய தெய்வம் போன்ற பிராம்மணர்கள் கீழான மூன்று ஜாதிகளுக்கும் சொந்தக்காரர்களாதலால் அவர்கள் மற்ற மூன்று ஜாதியார்களுக்கும் பயன்படும்படி அவர்களைக் குறித்து முன் காலத்தில் யாகஞ்செய்யாமலிருந்தார்களென்பதில்லை. ஆயினும், அவ்வித யாகத்தில் வைதிகமான அக்கினிகளுக்குக் கீழான லௌகிகாக்நியை ஆதாரமாகச் செய்தார்கள். அந்தக் காரணத்தால் பிராம்மணன் மூன்று ஜாதிகளுக்கும் யாகத்தைச் செய்வித்தவனாகிறான்" என்றிருக்கிறது.[12] "வேதங்கள் ஒன்றெனினும் பலவாகின. அதே போல முதலில் படைக்கப்பட்ட பிராமணனிலிருந்து எஞ்சியோர் அனைவரும் உண்டாகினர்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அர்ப்பணிப்பும், ஆன்ம கல்வியும் கொண்ட ஒரு பிராமணன் அவை அனைத்தையும் அறிந்தால், அவன் வேள்விகளைச் செய்யத்தகுந்தவனாவான்.(51) ஒருவன் கள்வனாகவோ, பாவியாகவோ, பாவிகளில் இழிந்தவனாகவோ இருந்தாலும் அவன் வேள்வி செய்ய விரும்புவானானால், அவன் நீதிமானாகக் கருதப்படுகிறான்.(52) முனிவர்கள் அத்தகு மனிதனை மெச்சுகிறார்கள். அவர்கள் செய்வது சரி என்பதில் ஐயமில்லை. அவ்வாறெனில், அனைத்து வகையினரும், தன் சக்திக்குட்பட்ட அனைத்து வழிகளிலும், வேள்விகளைச் செய்ய வேண்டும் என்பதே முடிவான தீர்மானமாக இருக்க முடியும்.(53) மூவுலகிலும் வேள்விக்கு இணையானது ஏதுமில்லை. எனவே, தீமையிலிருந்து விடுபட்ட இதயம் கொண்ட ஒவ்வொருவரும், புனிதமான அர்ப்பணிப்பின் துணையுடன், தன் சக்திக்குட்பட்ட வகையிலும், தனது விருப்பத்தின்படியும் வேள்விகளைச் செய்யவே வேண்டும்" என்றார் {பீஷ்மர்}".(54)
சாந்திபர்வம் பகுதி – 60ல் உள்ள சுலோகங்கள் : 54
ஆங்கிலத்தில் | In English |