The duties in modes of life! | Shanti-Parva-Section-61 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 61)
பதிவின் சுருக்கம் : நான்கு வகை வாழ்வுமுறைகளைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டோனே, ஓ! கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டோனே {யுதிஷ்டிரா}, நான்கு வாழ்வு முறைகளின் பெயர்களையும், அவை ஒவ்வொன்றின் கடமைகளையும் இப்போது சொல்கிறேன், கேட்பாயாக.(1) பிராமணர்களால் பின்பற்றப்படுவது, வானப்ரஸ்தம், பைக்ஷ்யம் {சந்நியாசம்}, பெரும் தகுதியைத் தரும் கார்ஹஸ்த்யம் {இல்லறம்} மற்றும் பிரம்மச்சரியம் ஆகிய நான்கு வாழ்வு முறைகளாகும்.(2) சடாமுடி தரிப்பதைப் பொறுத்தவரையில், தூய்மைச் சடங்கைச் {சௌளம்} செய்து, {உபநயனவிதியைக் கொண்டு} மறுபிறப்புக்கான சடங்கையும் செய்த பிறகு, சில காலம், புனித நெருப்புக்குச் சில சடங்குகளைச் செய்த பிறகு, வேதங்களைக் கற்று,(3) தூய ஆன்மாவுடனும், புலனடக்கத்துடனும், கார்ஹஸ்த்யம் {இல்லறம்} என்றழைக்கப்படும் வாழ்வுமுறையின் கடமைகள் அனைத்தையும் முதலில் கவனமாகச் செய்த பிறகு, மனைவியுடனோ, மனைவியில்லாமலோ, வானப்ரஸ்தம் என்றழைக்கப்படும் வாழ்வுமுறையைப் பின்பற்ற கானகம் செல்ல வேண்டும்.(4) ஆரண்யகங்கள் என்றழைக்கப்படும் {வானப்ரஸ்த வாழ்வுமுறைக்குரிய} சாத்திரங்களைக் கற்றுத் தன் உயிர் நீரை மேலிழுத்து, உலகக் காரியங்கள் அனைத்தில் இருந்தும் ஓய்ந்த அறம் சார்ந்த துறவி ஒருவன், அழிவில்லா நித்திய ஆன்மாவில் ஒன்றிய நிலையை {பிரம்மஸ்வரூபத்தை} அடையலாம்.(5) இவையே தங்கள் உயிர் நீரை மேலிழுத்த முனிவர்களின் குறியீடுகளாகும். ஓ! மன்னா, கல்விமானான ஒரு பிராமணன் முதலில் அவற்றைப் பயன்று, அவற்றில் ஈடுபட வேண்டும்.(6)
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, வீடடைய {முக்தியடைய} விரும்பும் ஒரு பிராமணன், பிரம்மச்சரியம் என்றழைக்கப்படும் வாழ்வுமுறையைக் கடந்தபிறகே பைக்ஷ்ய {சந்நியாச} வாழ்வு முறையைப் பின்பற்றத்தகுந்தவனாவான் என்பது நன்கறியப்பட்ட ஒன்றாகும்.(7) கல்விமானான பிராமணன் ஒருவன், (தினமும் தான் திரிகையில்) மாலைவேளை எங்கே ஏற்படுகிறதோ, அந்தச் சூழ்நிலையைச் சிறந்ததாக்க விரும்பாமல் அங்கேயே உறங்கி, {வசிப்பதற்கு} வீடில்லாமல், (ஈகையில்) கிடைக்கும் உணவை உண்டு, தற்கட்டுப்பாட்டுடன் தியானம் பயின்று, ஆசையேதும் இல்லாமல் புலன்களை அடக்கி,(8) அனைத்து உயிரினங்களையும் சமமாகக் கருதி, எதிலும் மகிழ்ச்சியோ வெறுப்போ அடையாமல் இந்த {சந்நியாச} வாழ்வு முறையைப் பின்பற்றி அழிவில்லா நித்திய ஆன்மாவுடன் தோய்ந்த ஒன்றிய நிலையை அடைகிறான்.(9)
கார்ஹஸ்த்திய {இல்லற} வாழ்வுமுறையில் வாழும் மனிதன், வேதங்களைக் கற்று, தனக்காக விதிக்கப்பட்ட அறச்செயல்கள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும். அவன் பிள்ளைகளைப் பெற்று, இன்பங்களையும், வசதிகளையும் அனுபவிக்க வேண்டும். (மீறல்கள் ஏதுமில்லாமல்) வாழ மிகக் கடினமானதும், தவசிகளால் மெச்சப்படுவதுமான அந்த வாழ்வுமுறையின் கடமைகள் அனைத்தையும் அவன் மிகுந்த கவனத்துடன் நிறைவேற்ற வேண்டும்.(10) அவன் தான் மணந்து கொண்ட மனைவியுடனே நிறைவுடன் இருந்து, அவளது பருவ காலமன்றி வேறு காலங்களில் அவளை அணுகாதிருக்க வேண்டும். அவன், தந்திரமாகவோ, வஞ்சகமாகவோ செயல்படாமல் சாத்திரங்களின் விதிகளைப் பின்பற்ற வேண்டும். அவன் உணவில் சிக்கனமாக இருந்து, தேவர்களுக்கு அர்ப்பணிப்புடன், நன்றி நிறைந்தவனாக, மென்மையானவனாக, கொடூரமற்றவனாக, மன்னிக்கும் தன்மை கொண்டவனாக இருக்க வேண்டும்.(11) அவன், இதய அமைதி கொண்டவனாக, கட்டுப்படக்கூடியவனாக, தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் காணிக்கைகள் அளிப்பவனாக இருக்க வேண்டும். அவன் பிராமணர்களிடம் எப்போதும் விருந்தோம்பலுடன் நடந்து கொள்ள வேண்டும். அவன் செருக்கற்றவனாக இருக்க வேண்டும். அவனுடைய ஈகை ஒரு குழுவினருக்கு மட்டுமே கட்டுப்பட்டதாக இருக்கக்கூடாது. வேத சடங்குகளைச் செய்வதில் அவன் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும்.(12)
இது தொடர்பாக, பெரும் தவத்தகுதியைக் கொண்டதும், பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததும், நாராயணனால் பாடப்பட்டதுமான ஒரு வரியை சிறப்புமிக்கப் பெரும் முனிவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். அதைத் திரும்பச் சொல்கிறேன் கேட்பாயாக.(13) "உண்மை, எளிமை, விருந்தினரை வழிபடுவது, அறம் பொருள் அடைதல், தான் மணந்து கொண்ட மனைவியோடு இன்புற்றிருத்தல் ஆகியவற்றின் மூலம் ஒருவன் இம்மையிலும், மறுமையிலும் பல்வேறு வகை இன்பங்களை அனுபவிக்க வேண்டும்" {என்று நாராயணன் பாடியிருக்கிறான்}.(14) மகன்களையும், மனைவியரையும் ஆதரித்தல், வேதங்களைக் கற்றல் ஆகியவை இந்த உயர்ந்த {இல்லற} வாழ்வுமுறையை நோற்போரின் கடமைகளாக அமைகின்றன என்று பெருமுனிவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.(15) வேள்விகளைச் செய்வதில் எப்போதும் ஈடுபடும் பிராமணன், இந்த வாழ்வுமுறையை முறையாக வாழ்ந்து, தன் கடமைகள் அனைத்தையும் முறையாகச் செய்து, சொர்க்கத்தில் அருள்வெகுமதிகளை அடைகிறான்.(16) அவனது இறப்புக்குப் பிறகு, அவனால் விரும்பப்பட்ட வெகுமதிகள் இறவாத் தன்மை கொண்டவையாக இருக்கின்றன. உண்மையில், அவை தலைவனின் உத்தரவைச் செயல்படுத்த எப்போதும் விழிப்புடன் இருக்கும் பணியாட்களைப் போல நித்தியமாக {அழிவில்லாமல்} எப்போதும் அவனுக்காகக் காத்திருக்கின்றன {பணிவிடை செய்கின்றன}.(17)
பிரம்மச்சரிய வாழ்வுமுறையை நோற்கும் ஒருவன், எப்போதும் வேதங்களில் ஈடுபாட்டுடன், தன் ஆசானிடம் இருந்து அடைந்த மந்திரங்களை அமைதியாக ஓதிக் கொண்டு, தேவர்கள் அனைவரையும் வழிபட்டு, உடலில் புழுதி மற்றும் தூசியுடனும்,(18) கடமையுணர்வுடனும் தன் ஆசானுக்குத் தொண்டாற்றி, புலனடக்கத்துடன், தனக்குக் கிடைக்கும் கல்வியில் எப்போதும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். அவன், வேதங்களைக் குறித்துச் சிந்தித்து, (தியானம் மற்றும் வெளிப்படையான செயல்கள் ஆகிய) தன் கடமைகள் அனைத்தையும் செய்து, கடமையுணர்வுடன் தன் ஆசானுக்காகக் காத்திருந்து, அவரை எப்போதும் வணங்கி வாழ வேண்டும். (பிறரின் வேள்விகளைச் செய்து கொடுத்தல் போன்ற) ஆறு வகை வேலைகளில்[1] ஈடுபடாமை, எந்தச் செயல்பாடுகளிலும் ஒருபோதும் பற்று கொள்ளாமை,(19,20) எவருக்கும் ஆதரவோ, ஆதரவில்லா நிலையையோ ஏற்காமை, தன் எதிரிகளுக்கும் நன்மையைச் செய்தல் ஆகிய இவையே ஒரு பிரம்மச்சாரியின் கடமைகளாக விதிக்கப்பட்டிருக்கின்றன" என்றார் {பீஷ்மர்}.(21)
[1] இவை, "பிராணாயாமம், பிரத்யாஹாராம், த்யாநம், தாரணை, தர்க்கம், ஸமாதி" எனக் கும்பகோணம் பதிப்புக் குறிப்பிடுகிறது.
சாந்திபர்வம் பகுதி – 61ல் உள்ள சுலோகங்கள் : 21
ஆங்கிலத்தில் | In English |