Good acts and propensities! | Shanti-Parva-Section-62 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 62)
பதிவின் சுருக்கம் : வர்ணாசிரம தர்மங்களில் யுதிஷ்டிரனுக்கு ஏற்பட்ட ஐயங்களுக்கு விடையளித்த பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "எங்களைப் போன்றோருக்கு, எந்தக் கடமைகள் மங்கலமானவை, எதிர்காலத்தில் மகிழ்ச்சியை உண்டாக்குபவை, நன்மை செய்பவை, அனைவராலும் அங்கீகரிக்கப்படுபவை, ஏற்கப்படுபவை, இனிமையானவை என்பதை எங்களுக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பலமிக்கவனே, நான்கு வாழ்வுமுறைகளும் {ஆசிரமங்களும்} பிராமணர்களுக்கே விதிக்கப்பட்டிருக்கின்றன. ஓ! பாரதர்களில் சிறந்தவனே, பிற வகையினர் மூவரும் அவற்றைப் பின்பற்றுவதில்லை.(2) ஓ! மன்னா, குறிப்பாக அரசவகையினருக்கு {க்ஷத்திரியர்களுக்குப்} பொருந்தக்கூடியவையும், சொர்க்கத்திற்கு வழிவகுக்கூடியவையுமான பல செயல்கள் {பிரவிருத்தி சாஸ்திரத்தில்} ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அவை அனைத்தும் இரக்கமின்மையை ஏற்காத க்ஷத்திரியர்களுக்கான முறையாக விதிக்கப்பட்டவை என்பதால் அவற்றைத் தற்போதைய உன் கேள்விக்குப் பதிலாகச் சொல்லமுடியாது.(3)
க்ஷத்திரிய, வைசிய, சூத்திர நடைமுறைகளுக்கு அடிமையாக இருக்கும் பிராமணன், நிச்சயமாகப் பூமியில் தீய ஆன்மா என நிந்திக்கப்பட்டு, அடுத்த உலகில் {மறுமையில்} நரகிற்குச் செல்வான்.(4) மனிதர்களுக்கு மத்தியில் பணியாட்கள், நாய்கள், ஓநாய்கள் மற்றும் (பிற) விலங்குகளுக்குச் சூட்டப்படும் பெயர்களே, தனக்குத் தகாத செயல்களில் ஈடுபடும் பிராமணனுக்குச் சூட்டப்படும்.(5)
நான்கு வகை வாழ்வுமுறைகளிலும் (மூச்சை ஒழுங்கமைத்தல் மற்றும் தியானம் போன்ற) ஆறு வகைச் செயல்களில்[1] முறையாக ஈடுபடுபவனும், தன் கடமைகள் அனைத்தையும் செய்பவனும், அமைதியானவனும், தன் ஆசைகளைக் கட்டுக்குள் வைத்தவனும்,(6) எதிர்பார்ப்புகளைச் சிறக்கச் செய்யும் விருப்பம் இல்லாதவனும், ஈகையாளனுமான ஒரு பிராமணன், மறுமையில் அழிவில்லா அருள் உலகங்களை அடைவான்.((7) ஒவ்வொருவனும் தங்களுக்கு அமையும் சூழ்நிலை, இடம், வழிமுறை மற்றும் நோக்கங்களுக்குத்தக்க செய்யும் செயல்களின் இயல்பிலிருந்தே தன் சொந்த இயல்பை {குணத்தை} அடைகிறான்.(8) எனவே, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, உயர்ந்த தகுதிகள் {புண்ணியங்கள்} நிறைந்த வேத கல்வியானது, அரச அதிகாரத்துடன் கூடிய உழைப்புக்கோ, உழவு, வணிகம் மற்றும் வேட்டைத் தொழில்களுக்கோ இணையானதாக உன்னால் கருதப்பட வேண்டும்[2].(9)
[1] இவை, "பிராணாயாமம், பிரத்யாஹாராம், த்யாநம், தாரணை, தர்க்கம், ஸமாதி" எனக் கும்பகோணம் பதிப்புக் குறிப்பிடுகிறது.[2] கும்பகோணம் பதிப்பில், "வட்டிவாங்குவதும், வர்த்தகமும், கிருஷியும், வேட்டையும் வேதமோதுவதற்கு ஒப்பாகுமெனத் தெரிந்து கொள்" என இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பிலோ முற்றிலும் வேறுபட்ட வகையில், "கல்வியுடன் தொடர்புடைய செழிப்பானது, உழவு, வணிகம் மற்றும் விலங்கு வளர்த்தல் ஆகியவற்றால் அடையப்படுவதைவிடப் பெரியதாகும்" என்றிருக்கிறது.
உலகம் காலத்தால் இயக்கப்படுகிறது. அதன் இயக்கங்கள் காலத்தின் போக்கிலேயே தீர்மானிக்கப்படுகின்றன. மனிதன் செய்யும் நல்ல, தீய மற்றும் அலட்சிய செயல்கள் {நல்லது, தீயது என வேறுபாடற்ற} அனைத்தும் முற்றிலும் காலத்தின் ஆதிக்கத்தால் செய்யப்படுபவையே[3].(10) ஒரு மனிதனின் கடந்த கால {முற்பிறவியின்} நற்செயல்களில் எவை அடுத்தப் பிறவியில் பேராதிக்கம் செலுத்துகின்றனவோ, அவை {அவற்றின் புண்ணியங்கள்} தீர்ந்து விடக்கூடும். எனினும், மனிதர்கள் தங்கள் மனச்சார்புகள் வழிகாட்டும் செயல்களை எப்போதும் செய்து கொண்டே இருக்கின்றனர். மேலும் அந்த மனச்சார்புகளே, ஓர் உயிரினத்தை ஒவ்வொரு திசையிலும் செலுத்திக் கொண்டிருக்கின்றன[4]" என்றார் {பீஷ்மர்}.(11)
[3] இதன் பொருளானது, "ஒவ்வொருவரின் அடுத்தடுத்த வாழ்வுகளும் கடந்த காலச் செயல்களின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவையே" என்பதாகத் தெரிகிறது. ஒருவன் இவ்வாழ்வில் வேடனாக இருப்பின், அவனது கடந்த கால வாழ்வில் அவன் செய்த பல கொடுஞ்செயல்களின் ஆதிக்கத்தால் அவை இந்த வாழ்விலும் அவனைத் தொடர்ந்து வந்து அவனை இந்நிலையை அடைய வைத்திருக்கின்றன என்பதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[4] எனவே, மனிதர்கள் தங்கள் நற்செயல்களின் புண்ணியங்களை எப்போதும் தக்க வைத்துக் கொள்வதில்லை. எனினும் அவை {அந்த நற்செயல்கள்} சுதந்திர முகவர்களாக {எப்போது வேண்டுமோ அப்போது செயல்படுகின்றன} இருக்கின்றன; அவர்கள் செய்யும் புதிய செயல்கள், அவர்களது அடுத்தப் பிறவியின் பண்பைத் தீர்மானிக்கின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
சாந்திபர்வம் பகுதி – 62ல் உள்ள சுலோகங்கள் : 11
ஆங்கிலத்தில் | In English |