Kingly duties! | Shanti-Parva-Section-64 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 64)
பதிவின் சுருக்கம் : அரசகடமைகளின் முக்கியத்துவம்; தேவர்களும் க்ஷத்திரியக் கடமைகளையே நோற்றனர்; இந்திரனின் வடிவை ஏற்ற விஷ்ணு; அரச கடமைகள் குறித்து மாந்தாதாவிடம் உரையாடியது...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பாண்டுவின் மகனே, நான்கு வாழ்வுமுறைகளின் கடமைகள், யதிகளின் கடமைகள், மனிதர்களின் பொதுவான நடைமுறை வழக்கங்கள் ஆகிய அனைத்தும் அரச கடமைகளிலும் இருக்கின்றன.(1) ஓ! பாரதர்களின் தலைவா, இந்தச் செயல்கள் அனைத்தும் க்ஷத்திரியக் கடமைகளிலும் நேர்கின்றன. அரச செயல்பாடுகளில் தடங்கலேற்பட்டால், அனைத்து உயிரினங்களுக்கும் தீமை விளைகிறது.(2) மனிதர்களின் கடமைகள் {தர்மங்கள்} வெளிப்படையானவை அல்ல. மேலும் அவை பல கிளைகளைக் கொண்டவையாக இருக்கின்றன[1]. சில வேளைகளில், (தவறான) பல முறைமைகளால் வழிநடத்தப்பட்டு, அவற்றின் நித்திய இயல்பு பாதிக்கப்படுகிறது.(3) உண்மையில், (சாத்திரங்களில் அறிவிக்கப்பட்டுள்ள) கடமைகளைக் குறித்த உண்மைகள் எதையும் அறியாமலேயே, {வெறுமனே} அடுத்தவர்களின் தீர்மானங்களைக் கண்டு நம்பும் மனிதர்கள், இறுதியில், முடிவான தீர்மானங்களை அறியாத நம்பிக்கை குழம்பிய நிலையையே அடைகிறார்கள்[2].(4) க்ஷத்திரியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கடமைகள் வெளிப்படையானவையும், பெரும் மகிழ்ச்சியை உண்டாக்குபவையும், தாங்கள் விளைவிக்கும் விளைவுகளைப் பொறுத்தவரையில் தெளிவானவையும், வஞ்சகம் இல்லாதவையும், மொத்த உலகத்திற்கும் நன்மை பயக்கக்கூடியவையுமாக இருக்கின்றன.(5)
[1] "ஒருவேளை, அவற்றைப் பொறுத்தவரையில் சில விதிவிலக்குகளும், கட்டுப்பாடுகளும் இருக்கின்றன என்று இந்த வரி பொருள்படுகிறதோ" எனத் தாம் கருதுவதாகக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[2] இந்த வரி ஒவ்வொரு பதிப்பிலும் ஒவ்வொரு விதத்தில் இருக்கிறது. கும்பகோணம் பதிப்பில், "ஆஸ்ரமவாஸிகளின் சாஸ்வதமான தர்மம் அப்ரத்யக்ஷமாயும், பலவித பிரயோஜனமுள்ளதாயுமிருந்தும் அதனுண்மையை ஆகமங்களாலேயே அறிவிக்கிறார்கள்; மற்ற வாதிகள் புண்ணியமான வசனங்களால் உலகத்தில் உறுதிப்படச் சொல்லுகிறார்கள். மற்றும் சிலர் தர்மங்களின் உண்மையை அறியாவிடினும் அழிவற்ற பெரிய தர்மத்தில் விருப்பமுற்றிருக்கிறார்கள்" என்று இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "தர்மத்தை அறிந்த மனிதர்கள், பிற வகைத் தர்மங்கள் அனைத்தும் சொற்பமான பாதுகாப்பையும், பலன்களையும் தருபவையே என்று சொல்கிறார்கள். உன்னதமானவர்கள், க்ஷத்திரிய தர்மமே பெரும் பாதுகாப்பையும், பல நன்மைகளையும் தரும் என்றும், வேறு எந்தத் தர்மமும் இவ்வாறு தராது என்றும் சொல்கிறார்கள். அனைத்துத் தர்மங்களிலும் ராஜதர்மமே மிக முக்கியமானதும், அனைத்துத் தர்மங்களையும் பாதுகாப்பதுமாகும்" என்றிருக்கிறது.
ஓ! யுதிஷ்டிரா, மூன்று வகையினர், பிராமணர்கள் மற்றும் உலக வாழ்வில் ஓய்ந்து சென்றவர்கள் {துறவிகள்} ஆகியோரின் கடமைகள் அனைத்தும் (கார்ஹஸ்த்யம் என்றழைக்கப்படும்) புனித வாழ்வுமுறைக்குள் அடங்கியிருந்தது என்று சொல்லப்படுவதைப் போலவே, நற்செயல்கள் அனைத்தையும் கொண்ட மொத்த உலகமும் அரசகடமைகளுக்கு அடங்கியதாகும்.(6) ஓ! ஏகாதிபதி, பழங்காலத்தில் எவ்வாறு துணிச்சல்மிக்கப் பல மன்னர்கள், தெய்வீகமானவனும், பலமிக்கவனும், பேராற்றல் கொண்டவனும், உயிரினங்கள் அனைத்தின் தலைவனுமான விஷ்ணுவிடம் சென்று, தண்ட நீதி {அரச நீதி} குறித்த தங்கள் ஐயங்களைத் தீர்த்துக் கொண்டனர் என்பதை நான் உனக்குச் சொன்னேன்[3].(7) உதாரணங்களுடன் சொல்லப்பட்டிருக்கும் சாத்திரங்களின் தீர்மானங்களில் கவனமாக இருந்த அம்மன்னர்கள், பழங்காலத்தில், தங்கள் ஒவ்வொரு செயல்பாட்டையும், ஒவ்வொரு வாழ்வுமுறையின் கடமைகளோடு நிகர்த்துப் பார்த்த பிறகு நாராயணனுக்காகக் காத்திருந்தனர்[4].(8) பழங்காலத்தில் தேவர்களில் முதல்வனால் படைக்கப்பட்ட சத்தியஸ்கள், வசுக்கள், அசுவினிகள், ருத்திரர்கள், விஸ்வர்கள், மருத்துகள், சித்தர்கள் ஆகியோருடன் கூடிய தேவர்கள் அனைவரும் க்ஷத்திரியக் கடமைகளையே நோற்று வந்தனர்.(9)
[3] "பல்வேறு வாழ்வுமுறைகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கடமைகளைவிட அரசகடமைகள் மேன்மையானவையா என்பது உறுதி செய்வதற்காகச் சென்றனர்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[4] "அவ்வாறு ஒப்பீடு செய்தும் பொருளை உணரத் தவறியதால், தங்கள் ஐயங்களைத் தீர்த்துக் கொள்ள விஷ்ணுவுக்காக அவர்கள் காத்திருந்தனர்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பழங்காலத்தில் தானவர்கள் பெருகி, அனைத்துக் கட்டுப்பாடுகளையும், வேறுபாடுகளையும் மீறியபோது[5],(10) ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, பலமிக்கவனான மாந்தாத்ரி {மாந்தாதா} மன்னனாக ஆனான். பூமியின் ஆட்சியாளனான மன்னன் மாந்தாத்ரி, பலமிக்கவனும், தேவர்களுக்குத் தேவனும், தொடக்கம், நடுநிலை, முடிவு இல்லாதவனுமான நாராயணனைக் காணும் விருப்பத்தில் ஒரு பெரும் வேள்வியைச் செய்தான்.(11,12) அந்த வேள்வியில் அவன் பெருமைமிக்க விஷ்ணுவைப் பணிவுடன் வணங்கினான். அந்த உயர்ந்த தலைவன் {விஷ்ணு}, இந்திரனின் வடிவில் அவன் முன் தோன்றினான்.(13) நல்ல மன்னர்கள் பலரின் துணையுடன் கூடிய அவன் அந்தப் பலமிக்கத் தேவனுக்குத் தன் துதியைக் காணிக்கையாக்கினான்.(14) அந்த மன்னர்களில் சிங்கத்திற்கும் {மாந்தாத்ரிக்கும்}, பெரும் இந்திரனின் வடிவில் இருந்த அந்தச் சிறப்புமிக்கத் தேவனுக்கும் இடையில் பிரகாசமிக்க விஷ்ணுவைத் தீண்டும் இந்த உயர்ந்த உரையாடல் நடந்தது.(15)
[5] "பூமியில் குழப்பத்தை ஏற்படுத்தியபோது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
இந்திரன் {இந்திரன் உருவில் வந்த விஷ்ணு மந்தாதாவிடம்}, "ஓ! அறவோரில் முதன்மையானவனே, புராதானமானவனும், தேவர்களில் முதல்வனும், நினைத்தற்கரிய சக்தி படைத்தவனும், முடிவிலா மாயைகளைக் கொண்டவனுமான நாராயணனைக் காண நீ இவ்வாறு முயல்வதன் நோக்கம் யாது?(16) நானோ, பிரம்மனோ கூட அந்தத் தேவனின் உலகளாவிய வடிவைக் காண முடியாது. நீ மனிதர்களில் முதன்மையானவனாக இருப்பதால், உன் இதயத்தில் இருக்கும் வேறு நோக்கங்களுக்கு நான் உனக்கு அருள் செய்வேன்.(17) உன் ஆன்மா அமைதியில் கட்டுப்பட்டிருக்கிறது; நீ நீதிக்கு அர்ப்பணிப்புள்ளவனாக இருக்கிறாய்; உன் புலன்களைக் கட்டுக்குள் கொண்டிருக்கிறாய்; வீரம் கொண்டவனாகவும் இருக்கிறாய். தேவர்களுக்கு ஏற்புடையதைச் செய்யப் பின்வாங்காமல் நீ முயல்கிறாய். உன் நுண்ணறிவு, அர்ப்பணிப்பு, உயர்ந்த நம்பிக்கை ஆகியவற்றின் காரணமாக உன்னால் விரும்பப்படும் எந்த வரத்தையும் நான் உனக்கு அளிப்பேன்" என்றான்.(18)
மாந்தாத்ரி {மாந்தாதா விஷ்ணுவிடம்}, "உன்னை நிறைவு செய்ய நான் தலைவணங்குகிறேன். எனினும், ஓ! தெய்வீகத் தலைவா, நான் தேவர்களில் முதல்வனைக் {விஷ்ணுவைக்} காணவே விரும்புகிறேன் என்பதில் ஐயமில்லை. (பூமி சார்ந்த) அனைத்து ஆசைகளைக் கைவிட்டு, அறத்தகுதி ஈட்டி, நல்லோரின் பாதைக்கு இட்டுச் செல்லும் முதன்மையான வாழ்வுமுறையைப் பின்பற்றி, அனைவராலும் உயர்வாக மதிக்கப்படுபவனாக இருக்க நான் விரும்புகிறேன்.(19) ஒரு க்ஷத்திரியனின் உயர்ந்த கடமைகளைச் செய்து, அடுத்த உலகில் வற்றாத தகுதிகளுடன் கூடிய பல பகுதிகளை ஈட்டியிருக்கிறேன். மேலும், அந்தக் கடமைகளின் மூலம் என் புகழும் பரவியிருக்கிறது. எனினும், தேவர்களில் முதல்வனிடமிருந்து {விஷ்ணுவிடம்} வந்தவையும், உலகில் முதன்மையானவையுமான கடமைகளைச் செய்வது எவ்வாறு என்பதை நான் அறியவில்லை" என்று கேட்டான்.(20)
இந்திரன் {விஷ்ணு மந்தாதாவிடம்}, "மன்னர்களாக இல்லாதோர், தங்கள் கடமைகளைச் சரியாகச் செய்தாலும், கடமையின் உயர்ந்த வெகுமதிகளை எளிதில் அடைய முடியாது. மூல தேவனிடமிருந்தே அரச கடமைகள் வாய்த்தன. பிற கடமைகள் அவனது உடலில் இருந்து பிற்பாடு தோன்றின.(21) வானப்ரஸ்த வாழ்வுமுறையுடன் கூடியவையும், பிற்பாடு படைக்கப்பட்டவையுமான பிற கடமைகள் முடிவற்றவையாக இருக்கின்றன. அவை அனைத்தின் கனிகளும் {பலன்களும்} வற்றாதவையாக இருக்கின்றன. அவற்றிலேயே பிற கடமைகள் அனைத்தும் அடங்கியிருக்கின்றன. இதன் காரணமாகவே அனைத்திலும் முதன்மையானவையாக க்ஷத்திரியக் கடமைகள் சொல்லப்படுகின்றன.(22) பழங்காலத்தில், க்ஷத்திரியக் கடமைகளின்படி செயல்பட்ட விஷ்ணு, தன் எதிரிகளைப் பலவந்தமாக ஒடுக்கி, அழித்து, அளவில்லா சக்தி கொண்ட முனிவர்கள் மற்றும் தேவர்களுக்கும் நிவாரணத்தை அளித்தான்.(23) நினைத்தற்கரிய சக்தி கொண்ட அந்தத் தெய்வீக விஷ்ணு, அசுரர்களுக்கு மத்தியில் இருந்து தன் எதிரிகளைக் கொல்லாமல் இருந்திருந்தால், பிராமணர்கள், உலகங்களின் படைப்பாளன் (பிரம்மன்) ஆகியோருக்கும், க்ஷத்திரியக் கடமைகளும், உயர்ந்த தேவனிடம் இருந்து முதலில் வந்த கடமைகள் அனைத்துக்கும் அழிவு ஏற்பட்டிருக்கும்.(24) தேவர்களில் முதன்மையான அந்த முதல்வன் {விஷ்ணு}, தன் ஆற்றலை வெளிப்படுத்தி அசுரர்களுடன் கூடிய பூமியை அடக்காமல் இருந்திருந்தால், பிராமணர்களுக்கு ஏற்படும் அழிவின் விளைவால், நான்கு வாழ்வுமுறைகளின் கடமைகள் அனைத்தும் அழிவை அடைந்திருக்கும்.(25)
(மனிதர்களின்) நித்திய கடமைகள் அனைத்துக்கும் அழிவு ஏற்பட்டது. க்ஷத்திரியக் கடமைகளைச் செய்தே அவை மீட்கப்பட்டன. பிரம்மத்தை அடையும் பிராமணர்களின் கடமைகளே, ஒவ்வொரு யுகத்திலும் முதலில் தோன்றுகின்றன. எனினும் இவை அனைத்தும் அரசகடமைகளாலேயே காக்கப்படுகின்றன. எனவே, அரசகடமைகளே முதன்மையானவையாகக் கருதப்படுகின்றன.(26) போரில் உயிரைக் கைவிடுவது, அனைத்து உயிரினங்களிடமும் கருணை கொள்வது, உலகக் காரியங்களில் அறிவு, மனிதர்களைப் பாதுகாப்பது, ஆபத்திலிருந்து அவர்களை மீட்பது, துயரில் இருப்போரையும், ஒடுக்கபட்டோரையும் விடுவிப்பது ஆகிய இவை அனைத்தும் மன்னர்களால் செய்யப்படும் க்ஷத்திரியக்கடமைகளில் நேர்கின்றன.(27) நலந்தரும் கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொள்ளாதோர், காமம் மற்றும் கோபத்தின் வசப்பட்டோர் ஆகியோர் மன்னர்களிடம் கொண்ட அச்சத்தின் காரணமாக வெளிப்படையான பாவச் செயலைச் செய்யாதிருக்கிறார்கள். இதன் காரணமாகவே, க்ஷத்திரியக்கடமைகள் நீதிமிக்கவையாகக் கருதப்படுகின்றன.(28) பெற்றோரால் பாதுகாக்கப்படும் பிள்ளைகளைப் போல க்ஷத்திரியக் கடமைகளைச் செய்யும் மன்னர்களால் பாதுகாக்கப்படுவதாலேயே அனைத்து உயிரினங்களும் இவ்வுலகில் மகிழ்ச்சியாக வாழ்கின்றன என்பதில் ஐயமில்லை.(29) கடமைகள் அனைத்திலும் க்ஷத்திரியக் கடமைகளே முதன்மையானவை. உலகில் முதன்மையானவை என்று கருதப்படும் அந்த நித்திய கடமைகளே ஒவ்வொரு உயிரினத்தின் பாதுகாப்பையும் உறுதிசெய்கின்றன. நித்தியமான அவையே, அழிவில்லா பேற்றுக்கு வழிவகுப்பனவாகும்." என்றான் {இந்திரன்}.(30)
சாந்திபர்வம் பகுதி – 64ல் உள்ள சுலோகங்கள் : 30
ஆங்கிலத்தில் | In English |