Thursday, January 11, 2018

அரசாட்சி முறை! - சாந்திபர்வம் பகுதி – 69

The method of governance! | Shanti-Parva-Section-69 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 69)


பதிவின் சுருக்கம் : மன்னர்களுக்கான குறிப்பிட்ட கடமைகள்; பலமிக்க ஏகாதிபதி ஒருவன் தன் நாட்டின் மீது படையெடுத்து வரும்போது அதைத் தடுப்பதற்கு ஒரு மன்னன் ஆற்ற வேண்டிய கடமைகள்; கோட்டை பாதுகாப்பு; ஆறு குண்யங்களும், மூன்று வர்க்கங்களும்; நான்கு யுகங்களை உண்டாக்கும் மன்னனின் செயல்கள்; தண்ட நீதியின் அருள்நிலை...


யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "மன்னன் வெளிப்படுத்த வேண்டிய வேறு சிறப்புக் கடமைகள் என்னென்ன? அவன் தன் நாட்டை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்? எவ்வாறு தன் எதிரிகளை அடக்க வேண்டும்?(1) அவன் எவ்வாறு தன் ஒற்றர்களை நியமிக்க வேண்டும்? ஓ! பாரதரே {பீஷ்மரே}, தன் நால்வகைக் குடிமக்கள், தன் பணியாட்கள், மனைவியர் மற்றும் மகன்கள் ஆகியோருக்கு அவன் எவ்வாறு நம்பிக்கையளிக்க வேண்டும்?" என்று கேட்டான்.(2)


பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, மன்னர்களின் பல்வேறு கடமைகளையும், மன்னன், அல்லது மன்னனின் நிலையில் உள்ள ஒருவன் முதலில் செய்ய வேண்டிய செயல்களையும் கவனமாகக் கேட்பாயாக.(3) மன்னன் முதலில் தன்னையே அடக்க வேண்டும், அதன் பிறகே அவன் தன் எதிரிகளை அடக்க முயல வேண்டும். தன்னையே வெல்ல முடியாத ஒரு மன்னனால் தன் எதிரிகளை எவ்வாறு வெல்ல முடியும்?(4) ஐந்து திரட்டுகளை {புலன்களை} வெல்வதே தன்னை வெல்வதாகக் கருதப்படுகிறது. தன் புலன்களை அடக்குவதில் வெல்லும் மன்னனே தன் எதிரிகளை ஒடுக்கத் தகுந்தவனாகிறான்.(5)

ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே {யுதிஷ்டிரனே}, ஓ! மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரா}, அவன், தனது கோட்டைகள், எல்லைப்புறங்கள், பூங்காக்கள் {உபவனங்கள்}, இன்ப நந்தவனங்கள் {உத்யானவனங்கள்} மற்றும் தான் செல்லும் இடங்கள் அனைத்திலும், தன் சொந்த அரண்மனைக்குள்ளும் காலாட்படையினரை நிறுத்த வேண்டும்.(6,7) அவன், முட்டாள்களைப் போலத் தெரிபவர்களையோ, குருடர்கள், செவிடர்களைப் போலத் தெரிபவர்களையோ தன் ஒற்றர்களாக நியமிக்க வேண்டும். இவர்கள் அனைவரும் (அவர்களது திறன்களைப் பொறுத்தவரையில்) நன்கு சோதிக்கப்பட்டவர்களாகவும், ஞானம் கொண்டவர்களாகவும், பசி தாகம் ஆகியவற்றைப் பொறுத்துக் கொள்ளக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும்.(8) மன்னன், தன் நகரத்திலும், மாகாணங்களிலும், தனக்குக் கீழுள்ள தலைவர்களின் ஆட்சிப்பகுதிகளிலும் தன் அமைச்சர்கள், நண்பர்கள் மற்றும் மகன்கள் ஆகியோர் அனைவரிடமும் உரிய கவனத்துடன் ஒற்றர்களை நிறுத்த வேண்டும். அவ்வாறு நிறுவப்படும் ஒற்றர்கள் தங்களுக்குள் ஒருவரையொருவர் அறியக்கூடாது.(9,10)

ஓ! பாரதர்களின் காளையே {யுதிஷ்டிரனே}, மேலும் அவன் தன் எதிரிகளின் ஒற்றர்களை அறிந்து கொள்வதற்காக, கடைகளிலும், கேளிக்கை இடங்களிலும், மக்கள் கூடி பேசும் இடங்களிலும், பிச்சைக்காரர்கள் மத்தியிலும்,(11) தனது இன்ப நந்தவனங்கள், பூங்காக்கள், கூட்டங்கள், கல்விமான்களின் சபைகள், நாடு, பொது இடங்கள், தன் சபைகள் இருக்கும் இடங்கள், குடிமக்கள் இல்லங்கள் ஆகியவற்றிலும் தன் ஒற்றர்களை நிறுவ வேண்டும்.(12) நுண்ணறிவு கொண்ட மன்னன், இவ்வாறே தன் எதிரிகளால் அனுப்பப்படும் ஒற்றர்களை உறுதிசெய்து கொள்ள வேண்டும். ஓ! பாண்டுவின் மகனே, இவற்றை அறிவதன் மூலம் ஒரு மன்னன் பெரும் நன்மையை அடைவான்.(13) ஒரு மன்னன், தன் ஆய்வின் மூலம் தான் பலவீனமாக இருப்பதை அறிந்தால், அவன் தன் அமைச்சர்களுடன் ஆலோசித்துப் பலமிக்க எதிரியுடன் அமைதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.(14) ஞானமுள்ள மன்னன், தான் பலவீனமாக இல்லை என்பதை அறிந்தாலும், எந்த நன்மையாவது விளையுமென்றால் ஓர் எதிரியுடன் விரைவாக அமைதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.(15)

தன் நாட்டை நீதியுடன் பாதுகாப்பதில் ஈடுபடும் மன்னன், அனைத்து சாதனைகளையும் கொண்டோர், பெரும் முயற்சி கொண்டோர், அறம்சார்ந்தோர் மற்றும் நேர்மையானோருடன் அமைதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.(16) ஒரு மன்னனுக்கு, ஆபத்து மற்றும் நேரப்போகும் அழிவு ஆகியவற்றால் அச்சமுண்டானால், அவன் முன்பு புறக்கணித்து வந்த குற்றவாளிகள் மற்றும் மக்களால் சுட்டிக்காட்டப்படும் அத்தகு மனிதர்கள் அனைவரையும் கொல்ல வேண்டும்.(17) எவனால் தனக்கு நன்மையோ, தீங்கையோ செய்ய முடியாதோ, துயரில் இருந்து தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள முடியாதா அந்த மனிதனிடம் மன்னன் செய்வதற்கு ஒன்றுமில்லை.(18) படை நடவடிக்கைகளைப் பொறுத்தவரையில், தன் சொந்த பலத்தில் நம்பிக்கை கொண்ட ஒரு மன்னன், முதலில் தன் சொந்த தலைநகரத்தின் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, பெரும்படைக்குத் தலைமையேற்று, தன் இலக்கை அறிவிக்காமல் {எதிரிகளுக்கு முன்னறிவிக்காமல்}, கூட்டாளிகளும் நண்பர்களும் அற்ற ஒருவனையோ, ஏற்கனவே வேறொருவனுடன் போரிட்டுக் கொண்டிருக்கும் அல்லது (வேறு பகுதிகளில் இருந்து வரும் ஆபத்தைக் குறித்து) கவனமில்லாமல் இருக்கும் ஒருவனையோ, தன்னைவிடப் பலவீனமான ஒருவனையோ எதிர்த்து அணிவகுத்துச் செல்வதற்கு உற்சாகத்துடனும், துணிவுடனும் {தன் படைக்கு} ஆணையிட வேண்டும்.(19,20)

ஒரு மன்னன், ஒருபோதும் பேராற்றல் கொண்ட வேறொருவனுக்கு அடங்கி வாழக்கூடாது. அவன், பலவீனமானவனாக இருப்பினும், பலவானைப் பீடிக்க முனையும் தீர்மானத்துடன் தன் ஆட்சியைத் தொடர வேண்டும்.(21) அவன் பலமிக்க ஒருவனின் நாட்டை ஆயுதங்கள், நெருப்பு, நஞ்சூட்டல் ஆகிய வழிமுறைகளின் மூலம் பீடிக்க வேண்டும். மேலும் அவன், அவனுடைய {எதிரியுடைய} அமைச்சர்கள் மற்றும் பணியாட்களிடம் கருத்து வேறுபாடுகளை உண்டாக்க வேண்டும்.(22) நுண்ணறிவைக் கொண்ட ஒரு மன்னன் ஆட்சிப் பகுதிகளை அடைவதற்கான போரை எப்போதும் தவிர்க்க வேண்டும் என்று பிருஹஸ்பதி சொல்லியிருக்கிறார். (சமரசப் பேச்சு {சாமம்}, கொடை {தானம்}, ஒற்றுமையின்மை {பேதம்} ஆகிய) நன்கறியப்பட்ட மூன்று வழிமுறைகளின் மூலமே ஆட்சிப்பகுதி அடையப்பட வேண்டும்.(23) ஞானம் கொண்ட மன்னன், சமரசப் பேச்சு {சாமம்}, கொடை {தானம்}, ஒற்றுமையின்மை {பேதம்} ஆகிய வழிமுறைகளின் மூலம் அடையப்பட்டவற்றிலேயே நிறைவடைய வேண்டும்.(24)

ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே {யுதிஷ்டிரனே}, மன்னன் தன் குடிமக்களின் பாதுகாப்பிற்கான செலவுகளைச் சந்திக்க, அவர்களது வருவாயில் இருந்து ஆறில் ஒரு பங்கைக் கப்பமாக {வரியாகப்} பெற வேண்டும்.(25) அவன் தன் குடிமக்களைப் பாதுகாப்பதற்காக, சாத்திரங்களில் சொல்லப்பட்டுள்ள பத்து வகைக் குற்றவாளிகளிடமிருந்து, (அவ்வழக்கின் தேவைக்கேற்ப) அதிகமாகவோ, சிறிதாகவோ செல்வத்தைப் பலவந்தமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.(26) ஒரு மன்னன் நிச்சயம் தன் குடிமக்களைத் தன் சொந்த பிள்ளைகளைப் போலவே பார்க்க வேண்டும். எனினும், அவர்களுக்குள் உண்டாகும் சச்சரவுகளைத் தீர்மானிப்பதில் அவன் கருணைகாட்டக்கூடாது.(27) நீதியை முறையாக நிர்வகிப்பதைச் சார்ந்துதான் உண்மையில் ஒரு நாடு இருக்க வேண்டும் என்பதால், புகார்களையும், நீதிவழக்குகளில் வழக்கைத் தொடுப்பவர்களின் பதில்களையும் கேட்பதற்காக உலகக் காரியங்களின் ஞானம் கொண்டோரையே ஒரு மன்னன் நியமிக்க வேண்டும்.(28) ஒரு மன்னன், தன் சுரங்கங்கள், உப்பளம், தானியம், படகுத்துறை, யானைக் கூடங்கள் ஆகியவற்றில் நம்பிக்கைக்குரிய நேர்மையான மனிதர்களை நிறுவ வேண்டும்.(29) தகுதியுடன் செங்கோலை {தண்டனை வழங்கும் கோல்} எப்போதும் ஏந்தும் மன்னன் பெரும் தகுதியை ஈட்டுகிறான். தண்டனையை முறையாக ஒழுங்கு செய்வதே மன்னர்களின் உயரிய கடமையும், பெரும் பாராட்டுக்குரிய செயலும் ஆகும்.(30)

ஒரு மன்னன், வேதங்களையும், அதன் அங்கங்களையும் அறிந்தவனாகவும், ஞானம் கொண்டவனாகவும், தவங்களில் ஈடுபடுபவனாகவும், ஈகையாளனாகவும், வேள்விகள் செய்வதில் அர்ப்பணிப்பு கொண்டவனாகவும் இருக்க வேண்டும்.(31) இந்தப் பண்புகள் யாவும் எப்போதும் மன்னனிடம் குடியிருக்க வேண்டும். மன்னன் நீதியை நிர்வகிப்பதில் தவறினால் அவன் சொர்க்கத்தையோ, புகழையோ அடைய முடியாது.(32) ஒரு மன்னன், நுண்ணறிவுமிக்க மற்றொரு பலவானால் பீடிக்கப்பட்டால், அவன் கோட்டையையே புகலிடமாக நாட வேண்டும்.(33) அவன், தன் நண்பர்களை ஆலோசனைக்காகத் திரட்டி உரிய வழிமுறைகளைத் திட்டமிட வேண்டும். அமைதிக்கொள்கையைப் {சாமத்தைப்} பின்பற்றியும், மன வேறுபாடுகளை {பேதத்தை} உண்டாக்கியும் அவன் தன் எதிராளியை எதிர்த்துப் போர் தொடுக்கும் வழிமுறைகளைத் திட்டமிட வேண்டும்.(34) அவன் காட்டுவாசிகளை நெடுஞ்சாலைகளில் நியமிக்க வேண்டும். தேவையேற்பட்டால், மொத்த கிராமங்களையே அகற்றி, கிராமவாசிகள் அனைவரையும் சிறு நகரங்களுக்கோ, பெருநகரங்களின் புறநகர்களுக்கோ மாற்ற வேண்டும்.(35)

அவன் {மன்னன்}, செழிப்புமிக்கத் தன் குடிமக்களுக்கும், படையின் முக்கிய அதிகாரிகளுக்கும் மீண்டும் மீண்டும் உறுதிகூறி, வெளிப்படையாக நாட்டில் வசித்துக் கொண்டிருந்த அவர்களை நன்கு பாதுகாக்கப்பட்ட கோட்டைகளுக்குள் புகலிடம் கொள்ளச் செய்ய வேண்டும்.(36) (திறந்த நாட்டில் இருந்து தன் கோட்டைகளுக்குள்) தானியங்கள் அனைத்தையும் அவன் கொண்டுவரச் செய்ய வேண்டும். அஃது இயலாமல் போனால் அவன் அவற்றை நெருப்பின் மூலம் முழுமையாக அழிக்க வேண்டும்.(37) மேலும் அவன், (எதிரியின் குடிமக்களிடையே ஒற்றுமையின்மையை உண்டாக்கி) எதிரியின் வயல்களில் உள்ள பயிர்களை அழிக்க மனிதர்களை நிறுவ வேண்டும். இதைச் செய்யத் தவறினால், அவன் தன் துருப்புகளின் மூலமே அந்தப் பயிர்களை அழிக்க வேண்டும்.(38) அவன் தன் நாட்டில் உள்ள ஆறுகளில் மேலுள்ள பாலங்கள் அனைத்தையும் அழிக்க வேண்டும். தன் ஆட்சிப்பகுதிகளுக்குள் உள்ள குளங்கள் அனைத்திலும் உள்ள நீரை அவன் வெளியேற்ற வேண்டும். அல்லது, வெளியேற்ற முடியாவிட்டால் அவற்றில் நஞ்சைக் கலக்கச் செய்ய வேண்டும்.(39) அவன், தன் நண்பர்களைக் காக்கும் கடமையைக் கருதிப் பாராமல், நிகழ்கால மற்றும் எதிர்காலச் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு எதிரியின் எதிரியாகவோ, போர்க்களத்தில் தன் எதிரியை எதிர்கொள்ளத் தகுந்தவனாகவோ இருக்கும் மற்றொரு நாட்டின் ஆட்சியாளனுடைய பாதுகாப்பை நாட வேண்டும்[1].(40)

[1] கும்பகோணம் பதிப்பில், "அந்தச் சமயத்திலும், வருங்காலத்திலும் நேரிட்ட வேறுமித்திரகாரியத்தையும் கவனியாமல் தன் சத்ருவிடம் பகையுள்ளவனும், அவனை வெல்லத்தக்கவனுமான அரசனை நேசித்துக் கொண்டு வஸிக்க வேண்டும்" என்றிருக்கிறது.

அவன் தன் நாட்டிலுள்ள சிறு கோட்டைகள் அனைத்தையும் அழித்துவிட வேண்டும். சைத்யம்[2] என்றழைக்கப்படும் மரங்களைத் தவிர்த்து சிறு மரங்கள் அனைத்தையும் அவன் வெட்டிவிட வேண்டும்.(41) பெரும் மரங்களின் கிளைகள் அனைத்தையும் அவன் வெட்டிவிட வேண்டும். ஆனால் சைத்தியம் என்றழைக்கப்படும் மரங்களின் இலைகளைக் கூடத் தொடக்கூடாது.(42) தன் கோட்டைகளில் பதுங்கு துளைகளைச்[3] {பிரகண்டிகள், ஆகாசஜநநி} செய்து வெளிப்புற மதில்களை எழுப்ப வேண்டும். அகழிகளின் அடியில் கூரிய சூலங்கள் நிறுவி அவற்றை நீரால் நிறைத்து, அதில் முதலைகளையும், சுறாக்களையும் விட வேண்டும்.(43) அவன் தன் கோட்டையிலிருந்து {பதுங்கி} பாய்வதற்கு ஏதுவாகச் சுவர்களில் சிறு திறப்புகளை {புடைவாயில், கள்ளவழி} வைத்து[4], பெரிய வாயில்களைப் பாதுகாப்பதைப் போல அவற்றையும் பாதுகாக்க தக்க ஏற்பாடுகளைக் கவனமாகச் செய்ய வேண்டும்.(44) அனைத்து வாயில்களிலும் {சிறு திறப்புகளிலும்} அவன் அழிவைத்தரவல்ல இயந்திரங்களை நிறுவ வேண்டும். (தன் கோட்டைகளின்) மதில்களில் அவன் சதக்னிகளையும், பிற ஆயுதங்களையும் நிறுவ வேண்டும்[5].(45)

[2] "சைத்திய மரங்கள் என்பன மக்களால் புனிதமாகக் கருதப்பட்டு வழிபடப்படுவனவாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "சைத்யவிருக்ஷங்கள் தேவர்கள், யக்ஷர்கள், ராக்ஷஸர்கள், போகிகள் {ஒரு வகைப் பாம்புகள்}, பிசாசங்கள், பன்னகர்கள், கந்தர்வர்கள், அப்ஸரஸுகள், ருத்ரபரிவாரங்களான பூதங்கள் ஆகிய இவர்களுக்கு இருப்பிடமாகையால் அம்மரங்களை வெட்டாமல் விலக்க வேண்டும்" என்றிருக்கிறது.

[3] கும்பகோணம் பதிப்பில், "பிரகண்டிகளென்னும் இடங்களையும், ஆகாசஜநநி என்னும் இடங்களையும் நன்றாகச் செய்து வைக்க வேண்டும்" என்றிருக்கிறது.

[4] "உச்சாஸம் Ucchaasa என்று இந்த இடத்தில் இருக்கும் சொல் மூச்சு, அல்லது காற்று என்ற பொருள்படும் என நீலகண்டர் கருதுகிறார். அந்தச் சிறு வாயில்கள், காற்று வருவதற்கான வழி என்றும் அவர் கருதுகிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். மேலதிக விளக்கத்திற்கு [5]ம் அடிக்குறிப்பைக் காணவும்.

[5] கும்பகோணம் பதிப்பில், "பட்டணத்திலுள்ளவர்களின் ஆஸ்வாஸத்திற்கு வேண்டிச் சிறிய துவாரங்களைச் செய்து கொள்ள வேண்டும். அவ்விதத் துவாரங்களையும் வாயில்களைப் போல மிக்கக் கவனத்துடன் எல்லாவிதத்திலும் ரக்ஷித்து வர வேண்டும். ஒவ்வொரு துவாரங்களிலும் பெரிய யந்திரங்களையும், சதக்நியென்னும் ஆயுதங்களையும் ஏற்றி வைப்பதுடன் அவைகளை ஸ்வாதீனமாக இருக்கச் செய்ய வேண்டும்" என்றிருக்கிறது.

அவன் எரிபொருள் தேவைக்காக விறகைச் சேர்த்து வைக்க வேண்டும் மேலும் கோட்டைக் காவற்படைக்குத் தேவையான நீருக்காகக் கிணறுகளைத் தோண்டவும், சீராக்கவும் வேண்டும்.(46) புல் மற்றும் வைக்கோலால் வேயப்பட்ட வீடுகள் அனைத்தையும் அவன் சேற்றினால் பூச வேண்டும். மேலும், கோடை மாதமாக {சித்திரை, வைகாசி மாதங்களாக} இருந்தால், நெருப்பின் மீது கொண்ட அச்சத்தின் காரணமாகப் புற்கள் மற்றும் வைக்கோற்கிடங்குகளை (வேறு பாதுகாப்பான இடங்களுக்கு) மாற்ற வேண்டும்.(47) உணவு அனைத்தையும் இரவில் சமைக்குமாறு அவன் ஆணையிட வேண்டும். தினமும் செய்யப்படும் ஹோமத்தையன்றி பகலில் வேறு எதற்காகவும் நெருப்பு மூட்டப்படக்கூடாது.(48) உலோகப் பட்டறைகள் {கொல்லர் பட்டறைகள்}, பிள்ளைப்பேற்றுக்கான அறைகள் ஆகியவற்றில் நெருப்பு தொடர்பாகக் குறிப்பிட்ட கவனத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். வீட்டிற்குள் வைக்கப்படும் நெருப்புகள் மிகக் கவனமாக மறைக்கப்பட வேண்டும்.(49) நகரத்தைத் திறனுடன் பாதுகாப்பதற்காக, பகலில் நெருப்பு மூட்டும் மனிதர்களுக்குப் பொருத்தமான தண்டனைகளை அறிவிக்க வேண்டும்.(50)

அத்தகு {போர்க்} காலங்களில், பிச்சைக்காரர்கள், வண்டிக்காரர்கள், அலிகள், பைத்தியக்காரர்கள், ஊமைகள் ஆகியோர் நகரத்தைவிட்டே விரட்டப்பட வேண்டும். அவர்கள் அனுமதிக்கப்பட்டால் தீமையே பின்தொடர்ந்து வரும்.(51) பொது இடங்கள், தீர்த்தங்கள்[6], சபைகள், {குறிப்பிட்ட சில} குடிமக்களின் வீடுகள் ஆகியவற்றில் மன்னன் தகுந்த ஒற்றர்களை நிறுவ வேண்டும்.(52) மன்னன் அகன்ற சாலைகளை உண்டாக்கி, கடைகளையும், உகந்த இடங்களில் நீர் விநியோகத்திற்கான நிலைகளையும் திறக்க வேண்டும்.(53) ஓ! யுதிஷ்டிரா, (தேவையான பல்வேறு பொருட்களுக்கான) கிடங்குகள், ஆயுதக்கிடங்குகள், முகாம்கள், படைவீரர்கள் இருக்கும் இடங்கள், குதிரை மற்றும் யானை கொட்டில்கள், படைவீரர்களின் முகாம்கள்,(54) அகழிகள், வீதிகள், கிளைவீதிகள், வீடுகள், ஓய்வு மற்றும் இன்பத்திற்கான நந்தவனங்கள் ஆகியவற்றைப் பிறர் {எதிரிகள்} அறியாவண்ணம் இருக்குமாறு செய்ய வேண்டும்.(55)

[6] "இவை, அமைச்சரவை உள்ளிட்ட பதினெட்டுத் தீர்த்தங்கள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

பகைவரின் படையால் பீடிக்கப்படும் மன்னன், செல்வத்தைத் திரட்ட வேண்டும். மேலும் அவன் எண்ணெய், தேன், தெளிந்த நெய், அனைத்து வகை மருந்துகள்,(56) கரி, முஞ்சா புல், இலைகள், கணைகள், எழுத்தர்கள், வரைகலைஞர்கள், புற்கள், விறகுகள், நஞ்சூட்டப்பட்ட கணைகள்,(57) ஈட்டிகள் போன்ற அனைத்து வகை ஆயுதங்கள், வாள்கள், வேல்கள், மற்றும் பிறவற்றையும் திரட்ட வேண்டும். ஒரு மன்னன் எப்போதும் அவ்வகைப் பொருட்களைச் சேர்க்க வேண்டும்.(58) அதிலும் குறிப்பாக அவன் அனைத்து வகை மருந்துகள், கிழங்குகள், கனிகள் ஆகியவற்றையும், நால்வகை மருத்துவர்கள்,(59) நடிகர்கள், ஆடற்கலைஞர்கள், விளையாட்டுவீரர்கள், பல்வேறு வேடங்களை ஏற்கவல்ல மனிதர்கள் ஆகியோரையும் வைத்துக் கொள்ள வேண்டும். அவன் தன் தலைநகரை அலங்கரித்துத் தன் குடிமக்கள் அனைவரையும் மகிழ்ச்சியா வைத்திருக்க வேண்டும்.(60)

மன்னனுக்கு எவரிடம் அச்சமுள்ளதோ, அவர்கள் தன் பணியாட்களாகவோ, அமைச்சர்களாகவோ, குடிமக்களாகவோ, அக்கம்பக்கத்து ஏகாதிபதிகளாகவோ இருப்பினும் அவர்களைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதில் அவன் காலந்தாழ்த்தக்கூடாது.(61) மன்னனின் எந்தப் பணி நிறைவடைந்தாலும், அவன் அதன் நிறைவுக்கு உதவியவர்களுக்குச் செல்வம், விகிதப்படியான பிற கொடைகள் மற்றும் நன்றிநிறைந்த பேச்சுகள் ஆகியவற்றை அளிக்க வேண்டும்.(62) ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே {யுதிஷ்டிரனே}, ஒரு மன்னன் தன் எதிரியைத் தவிடுபொடியாக்கும்போதோ, அவனை ஒரேயடியாகக் கொல்லும்போதோ அவன் தனது கடனையே அடைக்கிறான்[7] என்று சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளன.(63) ஒரு மன்னன் ஏழு காரியங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். நான் அதைச் சொல்கிறேன் கேட்பாயாக. அவை தனது சுயம், தனது அமைச்சர்கள், கருவூலம், தண்டனை அளிக்கும் அமைப்பு, நண்பர்கள், மாகாணங்கள் மற்றும் தலைநகரம் ஆகியவையாகும். இந்த ஏழு அங்கங்களைக் கொண்ட தன் நாட்டை அவன் கவனமாகப் பாதுகாக்க வேண்டும்.(64,65)

[7] "தன் கடனை அடைத்தல் என்பது குடிமக்களுக்குத் தான் வெளிப்படுத்த வேண்டிய கடப்பாடுகள் என்ற பொருளைக் கொண்டதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

ஓ! மனிதர்களில் புலியே {யுதிஷ்டிரனே}, ஆறு குண்யங்களையும் {ஷாட்குண்யத்தையும்}, மூன்று வர்க்கங்களையும் {த்ரிவர்க்கத்தையும்}, மூன்று வர்க்கங்களிலும் உயர்ந்ததையும் அறிந்த மன்னன் மொத்த பூமியின் அரசாட்சியை வெல்வான்.(66) ஓ! யுதிஷ்டிரா, ஆறு குண்யங்கள் என்றழைக்கப்படுவதைக் குறித்துக் கேட்பாயாக. அவை, (எதிரியுடன் ஏற்படுத்திக் கொண்ட) ஒப்பந்தத் தீர்மானத்தின்படி அமைதியாக ஆட்சி செய்வது, போரிட அணிவகுத்துச் செல்வது, எதிரிக்கு மத்தியில் ஒற்றுமையின்மையை விளைவிப்பது, (67) எதிரியை அச்சமடையச் செய்வதற்குப் படைகளைக் குவிப்பது, அமைதிக்குத் தயாராகப் போருக்கு ஆயத்தமாதல், பிறருடனான கூட்டணிகள் ஆகியனவே ஆகும்.(68) இப்போது மூன்று வர்க்கங்கள் என்றழைக்கப்படுவனவற்றைக் கவனமாகக் கேட்பாயாக. அவை குறை, இருப்பதைப் பாதுகாப்பது, வளர்ச்சி ஆகியவையாகும். இம்மூன்றின் உயர்ந்த திரள்கள், அறம், பொருள் மற்றும் இன்பமாகும். இவை நீதியுடன் பின்பற்றப்பட வேண்டும். அறத்தின் துணையால் ஒரு மன்னன் பூமியை எப்போதும் ஆள்வதில் வெல்வான்.(70)

இது தொடர்பாக அங்கிரசின் மகனான பிருஹஸ்பதி இரண்டு வரிகளைப் பாடியிருக்கிறார். ஓ! தேவகியின் மகனே {கிருஷ்ணா}, அவற்றைக் கேட்பதே உனக்குத் தகும்.(71) ’ஒரு மன்னன், தன் கடமைகள் அனைத்தையும் செய்து, பூமியைப் பாதுகாத்து, தன் நகரங்களையும் பாதுகாப்பதால் சொர்க்கத்தில் பெரும் மகிழ்ச்சியை அடைகிறான்.(72) அவனுக்குத் தவங்களால் ஆவதென்ன? தன் மக்களை முறையாகப் பாதுகாப்பவனுக்கு வேள்விகளால் ஆகப்போவதென்ன? அத்தகு மன்னன் அறங்கள் அனைத்தையும் அறிந்தவனாகக் கருதப்பட வேண்டும்’ {என்பதே பிருஹஸ்பதியின் அவ்விரண்டு வரிகள்}" என்றார் {பீஷ்மர்}.(73)

யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "தண்டனை அறிவியலும் {தண்டநீதியும்}, மன்னன் மற்றும் குடிமக்களும் இருக்கின்றனர். ஓ! பாட்டா {பீஷ்மரே}, இவற்றில் ஒன்றால் பிறரிடம் இருந்து அடையப்படும் பயன் யாது என்பதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(74)

பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா, ஓ! பாரதா, பெரும் முக்கியத்துவம் வாய்ந்த புனித வார்த்தைகளில் பேரருள் கொண்ட தண்டனை அறிவியலை {தண்ட நீதியை} உனக்குச் சொல்கிறேன், கேட்பாயாக.(75) தண்டனை அறிவியலானது, அனைத்து மக்களையும் தங்கள் தங்கள் கடமைகளைச் செய்யக் கட்டாயப்படுத்துகிறது.(76) நான்கு வகையினரும் {வர்க்கத்தினரும்} தங்கள் தங்கள் கடமைகளைச் செய்யும்போதும், நலந்தரும் கட்டுப்பாடுகள் அனைத்தும் பேணப்படும்போதும், தண்டனை அறிவியலில் இருந்து அமைதியும், மகிழ்ச்சியும் பாயும்போதும், உயர்ந்த மூவகையினர் தங்கள் தங்கள் கடமைகளின்படி நடந்து கொண்டு ஒற்றுமையைப் பேணி அச்சமனைத்திலிருந்தும் மக்கள் விடுபடும்போதும்தான் அவர்கள் {மக்கள்} உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்பதை அறிவாயாக.(77,78) மன்னன் காலத்தை உண்டாக்குகிறானா? அல்லது, காலம் மன்னனை உண்டாக்குகிறதா என்ற கேள்வியில் நீ எந்த ஐயத்தையும் ஊக்கப்படுத்தக்கூடாது. மன்னனே காலத்தை உண்டாக்கிறான் என்பதே உண்மை.(79)

கண்டிப்புடன் தண்டனை அறிவியலைச் சார்ந்து ஒரு மன்னன் முழுமையாக ஆளும்போது, கிருதம் என்றழைக்கப்படும் முதன்மையான காலம் {யுகம்} அப்போது ஏற்படுவதாகச் சொல்லப்படுகிறது[8].(80) கிருதகாலத்தில் {கிருதயுகத்தில்} அறமே விளைகிறது. நீதியற்றவையேதும் அப்போது இருப்பதில்லை. நால்வகையைச் சேர்ந்த மனிதர்கள் அனைவரின் இதயங்களும், அநீதியில் எந்த இன்பத்தையும் அடையாது.(81) மனிதர்கள் அனைவரும் தாங்கள் விரும்பும் பொருட்களை அடைந்து, தாங்கள் அடைந்ததைப் பாதுகாத்துக் கொள்வார்கள். வேதச் சடங்குகள் அனைத்தும் தகுதியை {புண்ணியத்தை} உண்டாக்கவல்லவையாக இருக்கும்.(82) பருவகாலங்கள் அனைத்தும் இனிமை நிறைந்தவையாக, தீமைகளில் இருந்து விடுபட்டவையாக மாறும். மனிதர்கள் அனைவரின் குரல், உச்சரிப்பு மற்றும் மனங்கள் தெளிவானவையாகவும், உற்சாகம் நிறைந்தவையாகவும் மாறும்.(83) நோய்கள் மறைந்துபோகும், மனிதர்கள் நீண்ட காலம் வாழ்வார்கள், மனைவியர் விதவைகளாகமாட்டார்கள், எந்த மனிதனும் கஞ்சனாக இருக்க மாட்டான்.(84) உழாமலேயே பூமி பயிர்களை விளைவிக்கும், செடிகொடிகளும் வளமாக வளரும். மரப்பட்டைகள், இலைகள், கனிகள், கிழங்குகள் ஆகியன வேகமாக அபரிமிதமாக விளையும்.(85) எந்த அநீதியும் தென்படாது. அறத்தைத் தவிர மற்றேதும் நிலைக்காது. ஓ! யுதிஷ்டிரா, இவற்றையே கிருத காலத்தின் பண்புகளாக அறிவாயாக.(86)

[8] இங்கே சரியான உரை சிரேஷ்டம் Creshtham, சிருஷ்டம் Srishtam அல்ல என்றே தெரிகிறது. சிருஷ்டமே சரியானதாக இருப்பின், இதன் பொருள், "காலப்போக்கில் கிருத யுகம் ஏற்படுகிறது" என்று பொருள்படும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "அரசன் தண்டநீதியை முழுதும் நன்றாகச் செலுத்திவருவானாகில், அந்த ஸமயத்தில் மிகச்சிறந்த க்ருதயுகமென்னுங் காலம் உலகத்தில் நடைபெறும்" என்றிருக்கிறது.

மன்னன், தண்டனை அறிவியலின் {தண்டநீதியின்} நான்கு பாகங்களில், நான்காவதை விட்டுவிட்டு மூன்றை மட்டுமே சார்ந்திருந்தால் திரேதம் என்றழைக்கப்படும் காலம் ஏற்படுகிறது.(87) அவ்வாறு (தண்டனை அறிவியலின்) மூன்றுபாகங்களை நோற்கும்போது நான்காம் பாகத்தின் அநீதியானது தொடர்ந்துகொண்டிருக்கும். பூமி விளைவிக்கும், ஆனால் உழவுக்காகக் காத்திருக்கும். செடிகொடிகளும் (உழவைச் சார்ந்தே) வளரும்.(88) மன்னன் அந்தப் பெரும் அறிவியலை {தண்டநீதியை} பாதி அளவே நோற்கும்போது, துவாபரம் என்றழைக்கப்படும் காலம் ஏற்படுகிறது.(89) அந்தப் பெரும் அறிவியலை இவ்வாறு பாதி அளவே நோற்கும்போது பாதி அளவுக்கு அநீதியே தொடர்ந்து கொண்டிருக்கும். பூமிக்கு உழவு அவசியம் தேவைப்படும், பயிர்கள் பாதி அளவுக்கே விளையும்.(90)

மன்னன் அந்தப் பெரும் அறிவியலை {தண்டநீதியை} முற்றாகக் கைவிட்டு, பல்வேறு வகைத் தீய வழிமுறைகளால் தன் குடிமக்களை ஒடுக்கும்போது, கலி என்றழைக்கப்படும் காலம் ஏற்படுகிறது.(91) கலி என்றழைக்கப்படும் காலத்தில், அநீதியே முழுமையக இருக்கும், அறமென எதுவும் தென்படாது. அனைத்து வகை மனிதர்களின் இதயங்களும், தங்கள் தங்கள் கடமைகளில் இருந்து வீழ்ந்துவிடும்.(92) சூத்திரர்கள் துறவிகளாகவும், பிராமணர்கள் பிறருக்குத் தொண்டுபுரிந்தும் வாழ்வார்கள். மனிதர்கள் தங்கள் விருப்பத்திற்குரிய பொருட்களை அடையத் தவறுவார்கள், தாங்கள் ஏற்கனவே அடைந்ததையும் பாதுகாக்கத் தவறுவார்கள். நால்வகையினரின் கலப்பும் ஏற்படும்.(93) வேத சடங்குகள் கனிகளை விளைவிக்கத் தவறும். அனைத்து பருவகாலங்களும் இனிமையை இழந்து, தீமை நிறைந்தவையாக இருக்கும்.(94) மனிதர்களின் குரல், உச்சரிப்பு மற்றும் மனங்கள் ஆகியன சுறுசுறுப்பை இழக்கும். நோய்கள் தோன்றும், மனிதர்கள் முதிரா காலத்திலேயே மாள்வார்கள்.(95)

விதவைகளாகும் மனைவியரும், பல தீய மனிதர்களும் தென்படுவார்கள். மேகங்கள் பருவ காலத்தில் பொழியாது, பயிர்கள் விளையாமல் தவறும்.(96) பெரும் அறிவியலில் {தண்டநீதியில்} உரிய கவனத்துடன் மன்னன் குடிமக்களைப் பாதுகாக்காதபோது, ஈரப்பதங்கள் யாவும் தவறும்.(97) கிருத, திரேத மற்றும் துவாபர காலங்களை மன்னனே உண்டாக்குகிறான். (கலி என்றழைக்கப்படும்) நான்காவது காலத்தையும் மன்னனே உண்டாக்குகிறான்.(98) அவன் கிருத காலத்தை உண்டாக்கினால் நீடித்த சொர்க்கத்தை அடைகிறான். அவன் திரேத காலத்தை உண்டாக்கினால், குறிப்பிட்ட காலத்திற்கான சொர்க்கத்தை அடைகிறான்.(99) துவாபரத்தை உண்டாக்கினால், அவன் தன் தகுதிகளுக்கேற்ப {புண்ணியங்களுக்கேற்ப} சொர்க்கத்தில் அருள்நிலையை அடைகிறான். கலிகாலத்தை உண்டாக்குவதால் அந்த மன்னன் பெரும் சுமைமிக்கப் பாவத்தையே இழைக்கிறான்.(100)

அவன் தன் குடிமக்களைப் பாவங்களில் மூழ்கடிப்பதால், பெரும் பாவத்தை இழைத்து, புகழ்க்கேட்டை அடைந்து, தீமையின் கறைபடிந்து, எண்ணற்ற வருடங்கள் நரகில் அழிவடைவான்.(101) பெரும் அறிவியலை {தண்டநீதியில்} கருத்தில் கொண்டவனும், கல்வியறிவு கொண்டவனுமான க்ஷத்திரியன், தான் விரும்பும் பொருட்களை {நோக்கங்களை} அடைய முனைந்து, ஏற்கனவே அடைந்தவற்றைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.(102) மக்கள் அனைவரையும் தங்கள் தங்கள் கடமைகளை நோற்கச் செய்வதும், நலந்தரும் மேன்மைகள் அனைத்திற்கும் களப்பணியாகச் செயல்படுவதும், உண்மையில் உலகைத் தாங்கி, அதைச் செயல்பட வைப்பதுமான தண்டனை அறிவியலானது {தண்டநீதியானது}, முறையாகச் செயல்படுத்தப்பட்டால், அது, தாயும் தந்தையும் தங்கள் பிள்ளைகளைக் காப்பதைப் போல மக்கள் அனைவரையும் பாதுகாக்கும்.(103) ஓ! மனிதர்களில் காளையே, உயிரினங்களின் வாழவே அதைச் {தண்டநீதியைச்} சார்ந்துதான் இருக்கிறது என்பதை அறிவாயாக. தண்டனை அறிவியலை அறிவதும், அதை முறையாகச் செயல்படுத்துவதும்தான் ஒரு மன்னனை உயர்ந்த தகுதியை அடையச் செய்யும்.(104) எனவே, ஓ! குருகுலத்தோனே {யுதிஷ்டிரனே}, அந்தப் பெரும் அறிவியலின் துணையுடனும், நீதியுடனும் உன் குடிமக்களைப் பாதுகாப்பாயாக. உன் குடிமக்களைப் பாதுகாத்து, இத்தகு நடத்தையைப் பின்பற்றினால் அடைவதற்கு மிக அரிதான சொர்க்கத்தின் அருள்நிலையை நீ நிச்சயம் அடைவாய்" என்றார் {பீஷ்மர்}.(105)

சாந்திபர்வம் பகுதி – 69ல் உள்ள சுலோகங்கள் : 105

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்