The virtues of a king! | Shanti-Parva-Section-70 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 70)
பதிவின் சுருக்கம் : மன்னர்களுக்குரிய முப்பத்தாறு {36} பண்புகளைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! அனைத்துவகை நடத்தைகளையும் அறிந்தவரே, அந்நடத்தையைப் பின்பற்றுவதால் ஒரு மன்னனால் இம்மையையும், மறுமையையும், முடிவில் மகிழ்ச்சியை அளிக்கும் பொருட்களையும் அடைவதில் வெல்ல முடியுமா?" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "(ஒரு மன்னன் நோற்கவேண்டிய) முப்பத்தாறு {36} பண்புகள் இருக்கின்றன. அவை மேலும் முப்பத்தாறுடன் தொடர்புடையவையாக இருக்கின்றன. ஓர் அறவோன் அப்பண்புகளைக் கைக்கொள்வதால் நிச்சயம் பெரும் தகுதியை {புண்ணியத்தை} ஈட்ட முடியும்.(2)
[1] மன்னன் தன் கடமைகளைக் கோபமோ, தீய நோக்கமோ இன்றி ஆற்றவேண்டும்.
[2] அவன் கருணையைக் கைவிடக்கூடாது.
[3] அவன் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.
[4]துன்புறுத்தலோ, கொடூரமோ இன்றி அவன் தன் செல்வத்தை அடைய வேண்டும்.
[5]அவன் பற்றுதல் இல்லாமல் இன்பங்களை அனுபவிக்க வேண்டும்.(3)
[6] அவன் ஏற்புடையவற்றை உற்சாக நிறைவுடன் சொல்ல வேண்டும், அவன் தற்புகழ்ச்சி செய்து கொள்ளாமல் துணிவுடன் இருக்க வேண்டும்.
[7] அவன் தாராளவாதியாக இருந்தாலும் கவனமில்லாதோருக்குக் கொடைகளை அளிக்கக்கூடாது.
[8] அவன் கொடூரமில்லா ஆற்றலைக் கொண்டிருக்க வேண்டும்.(4)
[9] அவன் தீயோரைப் புறக்கணித்துக் கூட்டணிகளை அமைக்க வேண்டும்.
[10] அவன் நண்பர்களிடம் பகைமையுடன் நடந்து கொள்ளக்கூடாது.
[11] தன்னிடம் அர்ப்பணிப்பில்லாதவர்களை ஒருபோதும் அவன் தன் ஒற்றர்களாகவும், இரகசிய முகவர்களாகவும் நியமிக்கக்கூடாது.
[12] துன்புறுத்தலின் மூலம் அவன் தன் நோக்கங்களை ஒருபோதும் நிறைவேற்றிக் கொள்ளக்கூடாது.(5)
[13] அவன் ஒருபோதும் தன் நோக்கங்களைத் தீயோர் முன்பு வெளிப்படுத்தக்கூடாது.
[14] அவன் பிறரின் தகுதிகளையன்றி ஒருபோதும் தன்னுடையவற்றைப் பேசக்கூடாது.
[15] அவன், தன் குடிமக்களிடம் இருந்து செல்வத்தைப் பெறலாமேயன்றி ஒருபோதும் நல்லோரிடம் பெறக்கூடாது.
[16] அவன் ஒருபோதும் தீயோரை வேலையில் அமர்த்தவோ, அவர்களின் உதவியை நாடவோ கூடாது.(6)
[17] கவனமான விசாரணையின்றி அவன் ஒருபோதும் தண்டனையை வழங்கக்கூடாது.
[18] அவன் ஒருபோதும் தன் ஆலோசனைகளை வெளிப்படுத்தக்கூடாது.
[19] அவன் கொடையளிக்கலாமேயன்றி, பேராசைக்காரர்களுக்கு அளிக்கக்கூடாது.
[20] அவன் பிறரை நம்பலாமேயன்றி தனக்குத் தீங்கிழைத்தோரை ஒருபோதும் நம்பக்கூடாது.(7)
[21] அவன் கெட்ட நோக்கத்தை வளர்த்துக்கொள்ளக்கூடாது.
[22] அவன், தான் மணந்து கொண்ட மனைவியரைப் பாதுகாக்க வேண்டும்.
[23] அவன் தூய்மையாயிருக்கவேண்டுமேயன்றி ஒருபோதும் கருணையால் உருகக்கூடாது.
[24] அவன் பெண்களிடம் அதிகமாகத் தோழமை பூணக்கூடாது {பெண்களின் துணையை அதிகமாக நாடக்கூடாது}.
[25] அவன், நலம்சார்ந்த உணவையன்றி ஒருபோதும் வேறுவகையானவற்றை எடுத்துக்கொள்ளக்கூடாது.(8)
[26] அவன் செருக்கில்லாமல் தகுந்தோருக்கு வெகுமதிகளை அளித்து, தன் ஆசான்கள் மற்றும் பெரியோர்களுக்கு உண்மையுடன் தொண்டாற்ற வேண்டும்.
[27] அவன் செருக்கில்லாதவனாகத் தேவர்களை வழிபட வேண்டும்.
[28] அவன் செழிப்பையன்றி ஒருபோதும் புகழ்க்கேட்டைக் கொண்டுவரும் எதையும் நாடக்கூடாது.(9)
[29] அவன், (தன்னைவிடப் பெரியோரிடம்) பணிவுடன் காத்திருக்க வேண்டும்.
[30] அவன் தொழிலில் புத்திசாலியாக இருக்க வேண்டும், ஆனாலும் அவன் தகுந்த காலத்திற்காக எப்போதும் காத்திருக்க வேண்டும்.
[31] அவன் மனிதர்களுக்கு ஆறுதலளிக்க வேண்டும், ஒருபோதும் வெற்று வார்த்தைகளுடன் அவர்களை அனுப்பக்கூடாது.
[32] அவன், ஒரு மனிதனுக்கு ஆதரவளித்துவிட்டு, பிறகு அவனைக் கைவிடக்கூடாது.(10)
[33] அவன் ஒருபோதும் அறியாமையுடன் இருக்கக்கூடாது.
[34] அவன், தன் எதிரியைக் கொன்றுவிட்டு, ஒருபோதும் துயரில் ஈடுபடக்கூடாது.
[35] அவன் கோபத்தை வெளிப்படுத்தலாம், ஆனால் எந்த நிகழ்வும் இல்லாதபோது அதை வெளிப்படுத்தக்கூடாது.
[36] அவன் மென்மையாக இருக்கவேண்டும், ஆனால் ஒருபோதும் குற்றவாளிகளிடம் மென்மையாக இருக்கக்கூடாது.(11)
உன் நாட்டை ஆளும்போது நீ செழிப்பை விரும்பினால் இத்தகு நடத்தையையே நீ பின்பற்றுவாயாக. வேறுமாதிரியாக நடந்து கொள்ளும் மன்னன் பேராபத்தையே அடைவான்.(12) நான் குறிப்பிட்ட இந்தப் பண்புகள் அனைத்தையும் பின்பற்றும் மன்னன் பூமியில் பல அருள்களையும், சொர்க்கத்தில் பெரும் வெகுமதிகளையும் அடைகிறான்" என்றார் {பீஷ்மர்}.(13)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அறிவுரைகளைப் பெறுவதில் அடக்கமுள்ளவனும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், பீமன் மற்றும் பிறரால் பாதுகாக்கப்படுபவனுமான மன்னன் யுதிஷ்டிரன், சந்தனு மகனின் {பீஷ்மரின்} இந்த வார்த்தைகளைக் கேட்டு, தன் பாட்டனை {பீஷ்மரை} வணங்கி, அந்தக் காலம் முதல் அந்தக் கற்பிதங்களின்படியே ஆளத்தொடங்கினான்" {என்றார் வைசம்பாயனர்}.(14)
சாந்திபர்வம் பகுதி – 70ல் உள்ள சுலோகங்கள் : 14
ஆங்கிலத்தில் | In English |