Don't avoid duty! | Shanti-Parva-Section-71 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 71)
பதிவின் சுருக்கம் : அறப்பிழையேற்படாமல் குடிமக்களைப் பாதுகாக்கும் வழிமுறைகளைப் பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; வழிமுறைகளைச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, துயரத்தைத் தவிர்க்கும் வகையிலும், அறத்திற்கு எதிராகக் குற்றமிழைக்காத வகையிலும் ஒரு மன்னன் தன் குடிமக்களைப் பாதுகாக்க வேண்டிய வழியை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்[1].(1)
[1] கும்பகோணம் பதிப்பில், "ஓ பிதாமஹரே, பிரஜைகளைப் பாதுகாத்து வரும் அரசன் மனத்தில் சிந்தையென்னும் பந்தமில்லாமலிருப்பது எங்ஙனம்? தர்மத்தில் தவறாமலிருப்பது எங்ஙனம்? இவ்விரண்டையும் எனக்கு உபதேசிக்க வேண்டும்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "ஓ பாட்டா, அறத்திற்கு எந்தக் குற்றத்தையுமிழைக்கமால் ஒரு மன்னன் எவ்வாறு தன் குடிமக்களைக் காப்பதில் ஈடுபட வேண்டும்? அதை எனக்குச் சொல்வீராக" என்று இருக்கிறது.
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அந்த நித்திய கடமைகளை விரிவாகச் சொன்னால் என்னால் அதன் முடிவை எட்ட முடியாது என்பதால் அவற்றைச் சுருக்கமாகச் சொல்கிறேன் கேட்பாயாக.(2) தங்கள் கடமைகளில் அர்ப்பணிப்புமிக்கோரும், கல்வியறிவைக் கொண்டவர்களும், தேவர்களைத் தொடர்ந்து வழிபடுபவர்களும், உயர்ந்த நோன்புகளை நோற்பவர்களும், பிற சாதனைகளையும் கொண்டவர்களுமான பிராமணர்கள் உன் வசிப்பிடத்திற்கு வரும்போது நீ அவர்களை வழிபட்டு, உன் வேள்விகளைச் செய்வதில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும்.(3) அவர்கள் உன்னை அணுகும்போது உன் புரோகிதருடன் கூடிய நீ, எழுந்திருந்து அவர்களது பாதங்களை வழிபட்டு, தேவையான பிற செயல்கள் அனைத்தையும் செய்ய வேண்டும்.(4) இந்தப் பக்திச் செயல்களையும், உன் நன்மைக்கான பிற செயல்களையும் செய்து (அவர்களுக்குக் கொடைகளையும் அளித்து) உன் காரியங்களின் வெற்றிக்காக அந்தப் பிராமணர்களை ஆசிகூறச் செய்ய வேண்டும்.(5)
ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, நேர்மை, ஞானம், நுண்ணறிவு ஆகியவற்றுடன் கூடிய நீ உண்மையைப் பின்பற்றி, காமத்தையும், கோபத்தையும் தவிர்க்க வேண்டும்.(6) காமம் மற்றும் கோபத்தைத் தவிர்க்காத மூட மன்னன், அறமீட்டத் தவறி, இறுதியாகப் பொருளையும் இழக்கிறான்.(7) பேராசை கொண்டோரையும், மூடர்களையும் இன்பம் மற்றும் பொருள் சார்ந்த காரியங்களில் ஒருபோதும் ஈடுபடுத்தாதே. பேராசையில் இருந்து விடுபட்டவர்கள் மற்றும் நுண்ணறிவைக் கொண்டோர் ஆகியோரையே நீ எப்போதும் உன் பணிகள் அனைத்திலும் ஈடுபடுத்த வேண்டும்.(8) காமம் மற்றும் கோபத்தின் கறை படிந்தவர்களும், வணிகப் பரிவர்த்தனையில் திறமற்றவர்களுமான மூட மனிதர்களைப் பொருள் சார்ந்த பொறுப்புகளில் ஈடுபடுத்தினால், அவர்கள் எப்போதும் தீமைகளை உண்டாக்கும் பல்வேறு சூழ்ச்சிகளால் மக்களை ஒடுக்குவார்கள்[2].(9) முறையான கணக்கீட்டின்படி, மண்ணில் விளைவதில் ஆறில் ஒரு பகுதியாகப் பெறப்படும் கப்பத்தையும், குற்றவாளிகளுக்கு விதிக்கப்படும் அபராதங்களையும், அவர்களிடம் செய்யப்படும் பறிமுதல்களையும், வணிகர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்புக்குப் பதிலாகச் சாத்திரங்களின் படி அவர்களிடம் பெறப்படும் தீர்வைகளையும் கொண்டே ஒரு மன்னன் தன் கருவூலத்தை நிரப்ப வேண்டும்[3].(10)
[2] கும்பகோணம் பதிப்பில், "காரியங்களில் ஸாமர்த்தியமில்லாத அவிவேகிக்குக் காரியங்களில் அதிகாரங்கொடுத்தால் அவன் காமக்குரோதங்களை அடைந்து தனது இஷ்டத்திற்காகத் தப்புவழியிற்சென்று பிரஜைகளைத் துன்பப்படுத்துவான்" என்றிருக்கிறது.[3] இவையே அரசு வருவாயின் உண்மையான ஆதாரங்கள் எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
இந்த நியாயமான கப்பத்தை அடைந்து, நாட்டை முறையாகவும், கவனத்துடனும் ஆளும் மன்னன், தன் குடிமக்கள் தேவைக்கான எந்த அழுத்தத்தையும் உணராத {அவர்களுக்கு எந்தக் குறையும் இல்லாத} வகையில் செயல்பட வேண்டும்.(11) பாதுகாப்பு வழங்கும் கடமையை முறையாகச் செய்பவனும், தாரளவாதியாக இருப்பவனும், அறம் நோற்பதில் உறுதியுள்ளவனும், எச்சரிக்கை உணர்வுடன் விழிப்புடன் இருப்பவனும், காமம் மற்றும் வெறுப்பில் {ஆசை மற்றும் துறவில்} இருந்து விடுபட்டவனுமான மன்னனிடம் மனிதர்கள் ஆழ்ந்த அர்ப்பணிப்பைக் கொள்வார்கள்.(12) அநீதியாகவோ, பேராசையாலோ செயல்பட்டு உன் கருவூலத்தை நிரப்ப ஒருபோதும் விரும்பாதே. சாத்திரங்களின்படி செயல்படாத மன்னன் செல்வத்தையும் அறத்தகுதியையும் ஈட்டுவதில் தவறுகிறான்.(13) செல்வம் ஈட்டுவதில் மட்டுமே மனம் கொண்ட மன்னன் அறத்தகுதி மற்றும், செல்வம் ஆகிய இரண்டையும் அடையத் தவறுகிறான். மேலும் (இத்தகு வழிமுறைகளால்) அவன் அடையும் செல்வமானது, தகாத பொருட்களில் வீணாகச் செலவிடப்படுவதே காணப்படுகிறது[4].(14) சாத்திரங்களால் அங்கீகரிக்கப்படாத வரிகளை விதித்து மடமையின் மூலம் தன் குடிமக்களை ஒடுக்கும் பேராசைக்கார மன்னன், தனக்குத் தானே தீங்கிழைத்துக் கொள்கிறான் என்று சொல்லப்படுகிறது.(15)
[4] "இங்கே சுட்டப்படும் பொருள் என்னவெனில், செல்வமீட்டுவதை மட்டுமே செய்யும் மன்னன், செல்வத்தை அடைந்தாலும், ஒருபோதும் அறத்தகுதியை ஈட்டுவதில்லை என்பதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பாலை விரும்பும் ஒருவன், பசுவின் மடியை வெட்டி எதையும் அடையாததைப் போலவே ஒரு நாடும் முறையற்ற வழிமுறைகளால் பீடிக்கப்பட்டால், அது மன்னனுக்கு ஒருபோதும் எதையும் ஈட்டித் தருவதில்லை.(16) ஒரு காராம்பசுவை மென்மையாக நடத்துபவன் எப்போதும் அதனிடமிருந்து பாலை அடைகிறான். அதே போலவே, முறையான வழிமுறைகளின் உதவி மூலம் தன் நாட்டை ஆளும் மன்னனும், அதிலிருந்து அதிகக் கலன்களை அறுவடை செய்கிறான்.(17) ஒரு நாட்டை முறையாகப் பாதுகாத்து, நீதிமிக்க வழிமுறைகளின் உதவியுடன் அஃதை ஆண்டால், ஒரு மன்னன் எப்போதும் அதிகச் செல்வத்தையே அடைகிறான்.(18) மன்னனால் நன்கு பாதுகாக்கப்படும் பூமியானது, மனம் நிறைந்த தாயானவள் தன் பிள்ளைக்குப் பாலைத் தருவதைப் போலவே, (அஃதை ஆள்பவர்களுக்கும், ஆளப்படுபவர்களுக்கும்) பயிர்களையும், தங்கத்தையும் விளைவிக்கிறது.(19) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பூக்காரனின் உதாரணத்தைப் பின்பற்றுவாயாக, கரி உற்பத்தி செய்பவனைப் பின்பற்றாதே. அவ்வாறு பின்பற்றி, பாதுகாப்பு வழங்கும் கடமையைச் செய்யும் உன்னால் எப்போதும் பூமியில் இன்புற்றிருக்க முடியும்[5].(20)
[5] "கரி உற்பத்தியாளன் சந்தையில் விற்பனை செய்வதற்காக மரம் மற்றும் செடிகளை வெட்டி, அவற்றை எரித்துக் கரியை உற்பத்தி செய்கிறான். மறுபுறம், பூக்காரன், மரம் மற்றும் செடிகளுக்கு நீரூற்றி, அவை உற்பத்தி செய்வதை மட்டுமே எடுக்கிறான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஓர் எதிரியின் நாட்டைத் தாக்கும்போது உன் கருவூலம் வற்றினால், பிராமணர்களைத் தவிர மற்ற அனைவரின் செல்வங்களையும் எடுத்து நீ அதை நிரப்பலாம்.(21) நீ பெரும் துன்பத்தில் இருக்கும்போது, செல்வம்படைத்த பிராமணர்களைக் கண்டாலும் உன் இதயம் அசையாமல் இருக்கட்டும். நீ செழிப்புடன் இருக்கும்போது என்ன செய்ய வேண்டும் என்று சொல்லத் தேவையில்லை.(22) அவர்களுக்குத் {பிராமணர்களுக்குத்} தகுந்தவாறும், உனது சக்திக்குத்தக்கவாறும் அவர்களுக்குச் {பிராமணர்களுக்குச்} செல்வத்தை அளித்து, பாதுகாத்து, அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவர்களுக்கு {பிராமணர்களுக்கு} ஆறுதலளிக்க வேண்டும். இவ்வாறு நீ நடந்து கொண்டால், மறுமையில் அடைதற்கரியவற்றை நீ அடைவாய்.(23) அத்தகு நன்னடத்தையைப் பின்பற்றியே நீ உன் குடிமக்களைப் பாதுகாக்க வேண்டும். ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, அப்போது நீ உயர்ந்த, தூய்மையான, நீடித்த புகழை அடைவாய்.(24) ஓ பாண்டுவின் மகனே, உன் குடிமக்களை நீதியுடன் பாதுகாத்தால் எந்த வருத்தமோ, வலியோ உனதாகாது.(25)
அனைத்து உயிரினங்களிடமும் கருணை காட்டி, அவற்றைத் தீங்கிலிருந்து காப்பதே உயர்ந்த தகுதி என்று சொல்லப்படுவதால் குடிமக்களைப் பாதுகாப்பதே ஒரு மன்னனின் உயர்ந்த கடமையாகும்.(26) கடமைகளை அறிந்த மனிதர்கள், மன்னன் அனைத்து உயிரினங்களையும் பாதுகாப்பதில் ஈடுபடும்போது அவற்றின் மீது தன் கருணையை வெளிப்படுத்துவதால் அதுவே அவனுடைய உயர்ந்த தகுதியாகும் {புண்ணியமாகும்} என்று கருதுகின்றனர்.(27) ஒரு மன்னன் அச்சத்திலிருக்கும் தன் குடிமக்களைப் பாதுகாக்காமல், {அக்கடமையை} ஒரு நாள் புறக்கணித்தாலும், அவன் (அதற்காக) ஆயிரம் வருடங்களுக்கு நரகில் துன்புற்றாலும் அதன் {அந்தப் பாவத்திற்கான} முடிவை அடைய மாட்டான். (28) ஒரு மன்னன் தன் குடிமக்களை நீதியுடன் ஒரு நாள் பாதுகாப்பதால் ஈட்டும் தகுதியால், அவன் சொர்க்கத்தில் பத்தாயிரம் வருடங்களை அதற்கான வெகுமதியாக அனுபவிப்பான்.(29) தன் குடிமக்களை நீதியுடன் பாதுகாப்பதால் மட்டுமே ஒரு மன்னன், கார்ஹஸ்த்யம், பிரம்மச்சரியம், வானப்பிரஸ்த வாழ்வுமுறைகளை முறையாகப் பின்பற்றும் மனிதர்கள் அடையும் உலகங்கள் விரைவாக அடைந்துவிடுகிறான்.(30)
ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, எனவே, நீ பெருங்கவனத்துடன் (பாதுகாப்பு எனும்) இந்தக் கடமையை ஆற்றுவாயாக. அப்போதுதான் நீ நீதிக்கான வெகுமதியை அடைவாய், எந்தத் துயரும், எந்த வலியும் உனதாகாது. ஓ! பாண்டுவின் மகனே, சொர்க்கத்தில் நீ பெருஞ்செழிப்பை அடைவாய்.(31) இது போன்ற தகுதியை மன்னர்களாக இல்லாத மனிதர்கள் அடைவது சாத்தியமில்லை. எனவே, வேறெதுவுமாக இல்லாமல் மன்னனாக இருக்கும் ஒருவன், இத்தகு அற வெகுமதியை ஈட்டுகிறான்.(32) நுண்ணறிவைக் கொண்ட நீ ஒரு நாட்டை அடைந்திருக்கிறாய். உன் குடிமக்களை நீதியுடன் பாதுகாப்பாயாக. சோமத்தால் இந்திரனையும், விருப்பத்திற்குரிய பொருட்களால் உன் நண்பர்கள் மற்றும் நலன் விரும்பிகளையும் நிறைவடையச் செய்வாயாக" என்றார் {பீஷ்மர்}.(33)
சாந்திபர்வம் பகுதி – 71ல் உள்ள சுலோகங்கள் : 33
ஆங்கிலத்தில் | In English |