Comparitive values of four varnas said by Vayu deva! | Shanti-Parva-Section-72 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 72)
பதிவின் சுருக்கம் : புரூரவஸுக்கும், வாயு தேவனுக்கும் இடையில் நடந்த உரையாடலைச் சொன்ன பீஷ்மர்; நான்கு வர்ணங்களின் ஓப்பீட்டு மதிப்பையும், புரோகிதராக இருக்கத் தகுந்த பிராமணனின் பண்புகளையும் புரூரவஸுக்கு விளக்கிய வாயு தேவன்...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்},[1] "ஓ! மன்னா, எந்த மனிதன் நல்லோரைப் பாதுகாத்துத் தீயோரைத் தண்டிப்பானோ, அவன் மன்னனால் அவனது புரோகிதராக நியமிக்கப்பட வேண்டும்.(1) இது தொடர்பாக, இளையின் மகனான புரூரவஸுக்கும், மாதரிஸ்வானுக்கும் {வாயுவுக்கும்}[2] இடையில் நடந்த உரையாடல் பழங்காலக் கதையில் தென்படுகிறது.(2)
[1] கும்பகோணம் பதிப்பில், " ஓ பிதாமஹரே, அரசனுடைய காரியாகாரியங்களை விசாரிக்கவும், செய்யவும் ஸாமர்த்தியமுள்ள பிராம்மணன் எவ்விதக் குணமுள்ளவனென்பதை எனக்குச் சொல்ல வேண்டுகிறேன்" என்று இந்த அத்யாயத்தின் தொடக்கத்திலேயே யுதிஷ்டிரன் பீஷ்மரிடம் கேட்பதாக வருகிறது. அதன் பிறகே பீஷ்மர் பின்வருவனவற்றைச் சொல்லத் தொடங்குகிறார்.[2] கும்பகோணம் பதிப்பில் இவன் வாயு தேவன் என்று சுட்டப்படுகிறான். மாத்ரிஸ்வான் என்பது வாயுவைக் குறிக்கும் என்று பிபேக்திப்ராயும் தன் அடிக்குறிப்பில் குறிப்பிடுகிறார்.
புரூரவஸ் {வாயுதேவனிடம்}, "பிராமணன் எங்கிருந்து உண்டானான்? மூவகையினரும் எங்கிருந்து உண்டானார்கள்? எதன் காரணமாகப் பிராமணன் முதன்மையானவனானான்? இவை யாவற்றையும் சொல்வதே உனக்குத் தகும்" என்று கேட்டான்.(3)
மாதரிஸ்வான் {வாயுதேவன் புரூரவஸிடம்}, "ஓ! மன்னர்களில் சிறந்தவனே {புரூரவஸ்ஸே}, பிராமணன், பிரம்மனின் வாயிலிருந்து உண்டானான். க்ஷத்திரியன், அவரது இரு கரங்களிலிருந்து உண்டானான், வைசியன் அவரது இரு தொடைகளில் இருந்து உண்டானான்.(4) ஓ! மனிதர்களின் ஆட்சியாளனே, இந்த மூவகையினருக்காகக் காத்திருப்பதற்காக {பணிவிடை செய்வதற்காக} உயிர்த்தெழுந்தவனும், நான்காவது வகையைச் சேர்ந்தவனுமான சூத்திரன் (பிரம்மனின்) பாதத்தில் இருந்து உண்டானான்.(5) உண்மையில் இவ்வாறு உண்டான பிராமணன், வேதங்களையும், பிற சாத்திரங்களையும் பராமரிப்பதற்காக, அனைத்து உயிரினங்களின் தலைவனாகப் பூமியில் பிறப்பை எடுத்தான்[3].(6) பிறகு, பூமியை ஆள்வதற்காகவும், தண்டக்கோலை {செங்கோலைத்} தரிக்கவும், அனைத்து உயிரினங்களையும் காக்கவும், இரண்டாவது வகையைச் சேர்ந்த க்ஷத்திரியன் படைக்கப்பட்டான்.(7) வைசியன், உழவு, வணிகம் மூலம் தன்னையும் தாங்கிக் கொண்டு, இந்த இரு வகையினரையும் ஆதரிப்பதற்காகப் படைக்கப்பட்டான். இறுதியாக, சூத்திரன் இந்த மூன்று வகையினருக்கும் கீழ்ப்படிந்து பணிசெய்ய வேண்டும் என்ற பிரம்மனால் விதிக்கப்பட்டான்" என்றான் {வாயு தேவன்}.(8)
[3] "இங்கே குறிப்பிடப்படும் தர்மகோஷம் Dharmakosha என்பது அனைத்துக் கடமைகளின் களஞ்சியம் {கொள்ளிடம்} என்ற பொருளைக் கொண்டது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "பிராம்மணன் பூமியில் பிறக்கும்போதே எல்லாப்பிராணிகளுக்கும் ஈசனாயும், தர்மமென்னுங் கோசத்தை ரக்ஷிக்க சக்தி பெற்றவனாயும் பிறக்கிறான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "பூமி பிறந்த உடனேயே பிராமணனும் பிறந்தான். தர்மத்தின் கொள்ளிடத்தைப் பாதுகாப்பதற்காகவே அவன் அனைத்து உயிரினங்களின் தலைவனாக இருக்கிறான்" என்றிருக்கிறது.
புரூரவஸ் {வாயுதேவனிடம்}, "ஓ! வாயு தேவா, இந்தப் பூமி நியாயமாக யாருக்குச் சொந்தமானதாகும். {இது சொந்தமானது} பிரமணனுக்கா? க்ஷத்திரியனுக்கா?" என்று கேட்டான்.(9)
வாயு தேவன் {புரூரவஸ்ஸிடம்}, "பிறப்பு மற்றும் முன்னிலையின் விளைவால் இந்த அண்டத்தில் இருக்கும் அனைத்தும் பிராமணனுக்கே சொந்தமானதாகும். அறநெறியறிந்தோர் இதையே சொல்கின்றனர்.(10) பிராமணன் எதை உண்கிறானோ, அஃது அவனுடையதே. அவன் வசிக்கும் இடம் அவனுடையதே. அவன் கொடுப்பதும் அவனுடையதே. அவன், அனைத்து {பிற மூன்று} வகையினரின் மதிப்புக்கும் தகுந்தவனாவான். அவனே முதலில் பிறந்தவனும், முதன்மையானவனும் ஆவான்.(11) கணவன் இல்லாத போது, ஒரு பெண், அவனுக்குப் பதில் அவனது தம்பியை ஏற்பதைப் போலவே, பூமியானவள், பிராமணனுடைய மறுப்பின் காரணமாக, அவனுக்கு அடுத்துப் பிறந்த க்ஷத்திரியனைத் தன் தலைவனாக ஏற்றாள். இதுவே முதல் விதியாகும். எனினும், இடர் காலங்களில் இதற்கு விதிவிலக்கும் உண்டு.(12) நீ, உன் வகைக்குண்டான கடமைகளை வெளிப்படுத்த முனைந்து, சொர்க்கத்தில் உயர்ந்த இடத்தை அடைய விரும்பினால், நீ வெல்லும் நிலங்கள் அனைத்தையும்,(13) கல்வியறிவு கொண்டவனும், அறநடத்தை கொண்டவனும், கடமைகளை அறிந்தவனும், தவங்களை நோற்பவனும், தன் வகைக்கான கடமைகளில் நிறைவடைந்தவனும், செல்வத்தில் பேராசையில்லாதவனுமான பிராமணனுக்குக் கொடுக்க வேண்டும்.(14) நற்பிறப்பைக் கொண்டவனும், ஞானம் மற்றும் பணிவைக் கொண்டவனுமான
பிராமணன், தன் பெரும் நுண்ணறிவைக் கொண்டு ஒவ்வொரு காரியத்திலும் மன்னனுக்கு வழிகாட்டுகிறான்.(15) நல்லாலோசனைகளின் மூலமாக அவன் அந்த மன்னனைச் செழிப்பீட்டச் செய்கிறான். மன்னன் ஆற்ற வேண்டிய கடமைகளை அந்தப் பிராமணன் சுட்டிக் காட்டுகிறான்.(16) தன் வகைக்குரிய கடமைகளைச் செய்பவனும், செருக்கற்றவனும், ஞானம் கொண்டவனுமான ஒரு மன்னன், பிராமணனின் அறிவுரைகளை எவ்வளவு காலம் கேட்பானோ, அவ்வளவு காலம் அவன் மதிக்கப்படுகிறான், அவ்வளவு காலம் அவன் புகழை அனுபவிக்கிறான். எனவே, மன்னன் அடையும் தகுதியில் {புண்ணியத்தில்} அவனது புரோகிதனுக்கும் ஒரு பங்குண்டு.(17) மன்னன் இவ்வாறு நடக்கும்போது, அவனைச் சார்ந்திருக்கும் அவனது குடிமக்கள் அனைவரும், தங்கள் நடத்தையில் அறவோராகவும், தங்கள் கடமைகளில் கவனமுள்ளோராகவும், அனைத்து வகை அச்சத்தில் இருந்து விடுபட்டவர்களாகவும் இருப்பார்கள்.(18) மன்னன், தன்னால் முறையாகப் பாதுகாக்கப்படும் தன் குடிமக்களால் தன் நாட்டில் செய்யப்படும் அறச் செயல்களின் நான்கில் ஒரு பாகத்தை அடைகிறான்.(19)
தேவர்கள், மனிதர்கள், பித்ருக்கள், கந்தர்வர்கள், உரகர்கள் மற்றும் ராட்சசர்கள் ஆகியோர் அனைவரும் தங்களைத் தாங்கிக் கொள்ள வேள்விகளையே சார்ந்திருக்கின்றனர். மன்னன் இல்லாத ஒரு நாட்டில், எந்த வேள்வியும் நடைபெறாது.(20) தேவர்களும், பித்ருக்களும் வேள்விகளும் அளிக்கப்படும் காணிக்கைகளாலேயே வாழ்கின்றனர். எனினும் வேள்வியானது மன்னனைச் சார்ந்திருக்கிறது.(21) கோடை காலத்தில், மனிதர்கள், மரத்தின் நிழல், குளிர்ந்த நீர் மற்றும் குளிர்ந்த தென்றல் ஆகியவற்றின் ஆறுதலை விரும்புவார்கள். குளிர் காலத்தில் அவர்கள் நெருப்பு, கதகதப்பான துணிகள் மற்றும் சூரியன் ஆகியவற்றில் இருந்து ஆறுதலை அடைகிறார்கள்.(22)
மனிதனின் இதயமானது, ஒலி, தீண்டல், சுவை, காட்சி மற்றும் மணம் ஆகியவற்றில் இன்பத்தைக் கண்டடைகிறது. எனினும், அச்சமடைந்த மனிதன் இவையாவற்றிலும் எந்த இன்பத்தையும் காண்பதில்லை.(23) மனிதர்களின் அச்சத்தை விலக்கும் மனிதன் பெரும் தகுதியை {புண்ணியத்தை} அடைகிறான். உயிர்க்கொடையைப் போன்ற வேறொரு கொடை மூன்று உலகங்களிலும் கிடையாது.(24) மன்னனே இந்திரனாவான். மன்னனே யமனாவான். மன்னனே தர்மனும் ஆவான். மன்னன் பல்வேறு வடிவங்களை ஏற்கிறான். மன்னனே அனைத்தையும் தாக்குப்பிடித்து, அவற்றை ஆதரிக்கிறான்" என்றான் {வாயு தேவன்}".(25)
சாந்திபர்வம் பகுதி – 72ல் உள்ள சுலோகங்கள் : 25
ஆங்கிலத்தில் | In English |