Unity of Brahmana and Kshatriya! | Shanti-Parva-Section-73 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 73)
பதிவின் சுருக்கம் : புரூரவஸுக்கும், கசியபருக்கும் இடையில் நடந்த உரையாடலைச் சொன்ன பீஷ்மர்; பிராமணர்கள் மற்றும் க்ஷத்திரியர்களுக்கிடையில் இருக்க வேண்டிய ஒற்றுமையின் அவசியத்தைச் சொன்ன கசியபர்...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்},[1] "ஓ! மன்னா, அறத்தகுதி மற்றும் செல்வம் ஆகிய இரண்டிலும் கண் கொண்டவனும், மிகச் சிக்கலான கருத்துகளைக் கொண்டவனுமான மன்னன், கல்வியறிவு பெற்றவரும், வேதங்களையும், பிற சாத்திரங்களையும் மிக நெருக்கமாக அறிந்தவருமான ஒரு புரோகிதரைத் தாமதமில்லாமல் நியமித்துக் கொள்ள வேண்டும்.(1) நல்லான்மா கொண்டோரும், கொள்கை அறிந்தவர்களுமான புரோகிதர்களையுடைய மன்னர்கள், தாங்களே அத்தகைய பண்புகளைக் கொண்டோராகி, திசைகள் அனைத்திலும் செழிப்பை அனுபவிப்பார்கள்.(2) மதிக்கத்தக்க பண்புகளைக் கொண்ட புரோகிதர், மற்றும் மன்னன் ஆகிய இருவரும், நோன்புகள் மற்றும் தவங்களை நோற்பவர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் தங்கள் குடிமக்களையும், தேவர்கள், பித்ருக்கள் மற்றும் பிள்ளைகளையும் பெருக்கிக் கொள்ள முடியும் {அல்லது அவர்களின் தரத்தை உயர்த்த முடியும்}.(3) அவர்கள் ஒரே இதயங்களைக் கொண்டவர்களாகவும், ஒருவருக்கொருவர் நண்பர்களாகவும் இருக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது. பிராமணனுக்கும், க்ஷத்திரியனுக்கும் இடையில் உண்டாகும் அத்தகு நட்பின் விளைவாகக் குடிமக்கள் மகிழ்ச்சியடைவார்கள்.(4) அவர்கள் ஒருவரையொருவர் மதிக்கவில்லையெனில் மக்களுக்கு அழிவே ஏற்படும். பிராமணனும், க்ஷத்திரியனும் தான் அனைத்து மனிதர்களுக்கும் மூதாதையர்கள் என்று சொல்லப்படுகிறது.(5) இது தொடர்பாக இளையின் மகனுக்கும் {புரூரவஸுக்கும்}, கசியபருக்கும் இடையில் நடந்த உரையாடலொன்று பழங்கதையில் தென்படுகிறது. ஓ! யுதிஷ்டிரா, அதைக் கேட்பாயாக.(6)
[1] கும்பகோணம் பதிப்பில், "ஓ பிதாமஹரே, அரசன் எவ்வித வர்ணமுள்ளவரும், குணமுள்ளவருமான பிராம்மணரைப் புரோஹிதராகச் செய்து கொள்ள வேண்டும் என்பதை எனக்கு உபதேசிக்க வேண்டும்" என்று இந்த அத்யாயத்தின் தொடக்கத்திலேயே யுதிஷ்டிரன் பீஷ்மரிடம் கேட்பதாக வருகிறது. அதன் பிறகே பீஷ்மர் பின்வருவனவற்றைச் சொல்லத் தொடங்குகிறார்.
இளையின் மகன் {புரூரவஸ் காசியபரிடம்}, "பிராமணன் க்ஷத்திரியனைக் கைவிடும்போது, அல்லது க்ஷத்திரியன் பிராமணனைக் கைவிடும்போது, அவர்களில் எவன் மேன்மையானவனாகக் கருதப்பட வேண்டும்? அவர்களில் எவருடைய ஆணைகளைச் சார்ந்து பிற வகையினர்கள் தங்களைப் பராமரித்துக் கொள்ள முடியும்?" என்று கேட்டான்.(7)
கசியபர் {புரூரவஸ்ஸ்டம்}, "பிராமணனும், க்ஷத்திரியனும் ஒருவரோடொருவர் போரிடும்போது, அந்த க்ஷத்திரியனின் நாடு அழிவடைகிறது. குழப்பமே நீடிக்கும் அந்த நாட்டில் கள்வர்கள் பெருகுவார்கள், நல்லோர் அனைவரும் ஆட்சியாளனை மிலேச்சன் என்று கருதுவார்கள்.(8) அவர்களுடைய {நல்லோரின்} எருதுகள் தழைக்காது, அவர்களின் பிள்ளைகளும் தழைக்கமாட்டார்கள். எந்த நாடுகளில் பிராமணர்கள் க்ஷத்திரியர்களைக் கைவிடுகிறார்களோ, அங்கே {பிராமணப்} பிள்ளைகள் வேதங்களைக் கற்க மாட்டார்கள்.(9) அவர்களது வீடுகளில் செல்வம் பெருகாது. அவர்களது பிள்ளைகள் நல்லோராகமாட்டார்கள், சாத்திரங்களைக் கற்கமாட்டார்கள், வேள்விகளையும் செய்யமாட்டார்கள். பிராமணர்களைக் கைவிடும் க்ஷத்திரியர்கள், தங்கள் குருதியில் மாசடைந்து, கள்வர்களின் இயல்பை அடைவார்கள்.(10) பிராமணனும், க்ஷத்திரியனும் இயல்பிலேயே ஒருவரோடொருவர் தொடர்புடையவர்களும், ஒருவரையொருவர் பாதுகாத்துக் கொள்பவர்களுமாவர். பிராமணனின் வளர்ச்சிக்கான காரணம் க்ஷத்திரியனே, க்ஷத்திரியனின் வளர்ச்சிக்கான காரணம் பிராமணனே.(11) ஒருவருக்கொருவர் உதவி புரிந்து கொள்ளும் போது, அவர்கள் இருவருமே பெருஞ்செழிப்பை அடைவார்கள். பழங்காலத்தில் இருந்து நீடிக்கும் அவர்களது நட்பு உடையுமேயானால், அனைத்திலும் பெருங்குழப்பமே ஏற்படும்.(12)
வாழ்வெனும் பெருங்கடலைக் கடக்க விரும்பும் எந்த மனிதனும், கடலின் பரப்பில் மிதக்கும் சின்னஞ்சிறு படகைப் போலத் தன் பணியில் வெற்றியடைவதில்லை. மனிதர்களில் நால்வகையினரும் குழப்பமடைந்து, அனைவருக்கும் அழிவு ஏற்படுகிறது.(13) ஒரு மரத்தைப் போன்றவனான பிராமணன் பாதுகாக்கப்பட்டால், அது பொன்னையும், தேனையும் பொழியச் செய்கிறது. மறுபுறம் அது பாதுகாக்கப்பட வில்லையெனில், அது கண்ணீரையும், பாவத்தையும் பொழியும்.(14) வேதங்களில் இருந்து வீழ்ந்த பிராமணன், (க்ஷத்திரிய ஆட்சியாளன் இல்லாமல்) சாத்திரங்களின் பாதுகாப்பை நாடும்போது, இந்திரன் பருவ காலத்தில் மழை பொழிய மாட்டான், பல்வேறு வகையான இடர்கள் இடையறாமல் நாட்டைப் பீடித்துக் கொண்டிருக்கும்.(15) இழிந்தவனும், பாவியுமான ஒருவன், ஒரு பெண்ணையோ, பிராமணனையும் கொன்றுவிட்டு, சக மனிதர்களின் சபைகளில் மன்னன் மீதான எந்த அச்சமும் இல்லாமல் நிற்க நேர்ந்தால், அந்த க்ஷத்திரிய ஆட்சியாளனை ஆபத்து அச்சுறுத்தும்.(16) பாவிகளால் இழைக்கப்படும் பாவங்களின் விளைவாக, அந்நாட்டில் தேவன் ருத்ரன் தோன்றுகிறான். உண்மையில், பாவிகள், பழிதீர்க்கும் தேவனையே தங்கள் பாவங்களின் மூலம் கொண்டுவருகிறார்கள். பிறகு அவன் {ருத்ரன்}, நல்லோர் அல்லோர் ஆகியோர் அனைவரையும் ஒன்றாகவே {எந்தப் பாகுபாடுமின்றி} அழிக்கிறான்" என்றார் {கசியபர்}[2].(17)
[2] கும்பகோணம் பதிப்பில், "பாபியானவன் ஸ்திரீயையும், பிராம்மணனையும் கொன்றுவிட்டு அதை ஸபையிலும் பெருமையாகப் பேசிக் கொள்வான்; அரசன் அருகிலும் பயப்பட மாட்டான். அந்தக் காரணத்தால் அரசனுக்குப் பயம் நேரும். பாபிகள் வரம்பின்றிப் பாபத்தைச் செய்யும்போது இந்த அரசனும் மிகக் கொடியவனாவான். பாபிகள் தமது கெட்ட காரியங்களால் அரசனைக் கொடுஞ்செய்கையுள்ளவனாகச் செய்துவிடுவார்கள், பிறகு, ஸாதுக்கள் அஸாதுக்கள் யாவரையும் அரசன் அடிக்கத் தொடங்குவான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் கங்குலியில் உள்ளதைப் போலவே ருத்ரன் என்றே இருக்கிறது.
ஐலன் {இளையின் மகனான புரூரவஸ்}, "ருத்ரன் எங்கிருந்து தோன்றுவான்? அவனுடைய வடிவம் என்ன? உயிரினங்கள் உயிரினங்களாலேயே அழிக்கப்படுவதே காணப்படுகிறது. ஓ! கசியபரே, இவை யாவற்றையும் எனக்குச் சொல்வீராக. ருத்ர தேவன் எங்கிருந்து உண்டாகிறான்?" எனக் கேட்டான்.(18)
கசியபர், "ருத்ரன் மனிதர்களின் இதயங்களில் நிலைத்திருக்கிறான். அவன் தானிருக்கும் உடல்களையும், பிறரின் உடல்களையும் அழிக்கிறான். {வாயு போன்ற} வழிமண்டலம் சார்ந்த தேர்வாகச் சொல்லப்படுகிறான், அவனது வடிவம் காற்றுத் தேவர்களைப் போன்றதாகும்" என்றார்.(19)
ஐலன், "காற்று வீசுவதால், அஃது அனைத்து சமயங்களிலும் மனிதர்களை அழிப்பதாகக் காண முடியவில்லை. மேகங்களின் தேவனும் மழைப்பொழிவால் அவ்வாறு அழிப்பதில்லை. மறுபுறம், தங்கள் புலனுணர்வுகளை இழக்கும் மனிதர்களே காமத்தினாலும், வன்மத்தினாலும் கொல்லப்படுகிறார்கள்" என்றான்.(20)
கசியபர், "ஒரு வீட்டில் சுடர்விடும் நெருப்பானது, மொத்த பகுதியையோ, மொத்த கிராமத்தையோ எரிக்கிறது. அதே போல, இந்தத் தேவனும், எவனாவது ஒருவனின் புலன்களைத் திகைக்கச் செய்கிறான், அந்தக் குழப்பம் நேர்மையானவர்கள், தீயவர்கள் என எந்த வேறுபாடுமின்றி அனைவரையும் தீண்டுகிறது" என்றார்.(21)
ஐலன், "பாவிகளால் இழைக்கப்படும் பாவங்களின் விளைவால் நேர்மையானவர்கள், தீயவர்கள் என எந்த வேறுபாடுமின்றி அனைவரையும் தண்டனை தீண்டுமேயானால், மனிதர்கள் ஏன் நற்செயல்புரிய வேண்டும்? உண்மையில் அவர்கள் ஏன் தீச்செயல்களில் இருந்து விலக வேண்டும்?" என்று கேட்டான்.(22)
கசியபர், "பாவிகளுடனான அனைத்துத் தொடர்புகளையும் தவிர்ப்பதன் மூலம் ஒருவன் தூய்மையடைந்தவனாக, களங்கமற்றவனாக ஆகிறான். எனினும், அவர்கள் பாவிகளுடன் கலந்திருப்பதால், பாவமற்றவர்களும் தண்டனையால் தீண்டப்படுகிறார்கள். ஈர விறகு, காய்ந்த விறகோடு கலந்திருந்தால், அத்தகு உடனுறைவின் விளைவால் அது நெருப்பால் எரிக்கப்படுகிறது. எனவே, பாவமற்றவர்கள் ஒருபோதும் பாவிகளுடன் கலந்து இருக்கக்கூடாது" என்றார்.(23)
ஐலன், "பூமியானது நேர்மையானவர்களையும், தீயோரையும் தாங்குகிறது. சூரியன், நேர்மையானவர்களையும், தீயோரையும் வெப்பமடையச் செய்கிறது. காற்றும் சமமாகவே அவர்களுக்கு வீசுகிறது. நீரும் சமமாகவே அவர்களைக் கழுவுகிறது" என்றான்.(24)
கசியபர், "ஓ! இளவரசே, உண்மையில் இதுவே உலகின் நடைமுறை. எனினும், மறுமையில் இஃது அவ்வாறில்லை. மறு உலகத்தில், நேர்மையாகச் செயல்படுபவர்களுக்கும், பாவம் நிறைந்த செயல்களைச் செய்பவர்களுக்கும் இடையில் சூழ்நிலையிலேயே பெரும் வேறுபாடு இருக்கிறது.(25) தகுதிபடைத்த {புண்ணியம் செய்த} மனிதர்கள், தேர் நிறைந்தவையும், தங்கம், அல்லது தெளிந்த நெய் ஊற்றப்படும் நெருப்பின் காந்தியைக் கொண்டவையுமான உலகங்களை அடைகின்றனர். அந்த உலகங்கள் அமுதத்தின் இருப்பிடங்களைப் போன்றனவாகும். தகுதி படைத்த மனிதன் அங்கே பெரும் இன்ப நிலையை அனுபவிக்கிறான். மரணம், முதுமை, கவலை ஆகியன அங்கே கிடையாது.(26) பாவிகளுக்கான உலகம் நரகமாகும். இருளும், இடையறாத வலியும் {துன்பமும்} அங்கே இருக்கின்றன, அது துயரம் நிறைந்ததாகும். பாவம் நிறைந்த செயல்களைச் செய்த மனிதன், புகழ்க்கேட்டில் மூழ்கி, அங்கே பல வருடங்கள் வருத்தத்தில் ஈடுபடுகிறான்.(27)
பிராமணர்கள் மற்றும் க்ஷத்திரியர்களுக்கிடையிலான ஒற்றுமையின்மையின் விளைவால் மக்கள் தாங்கிக்கொள்ள முடியாத துன்பங்களால் பீடிக்கப்படுகிறார்கள். ஒரு மன்னன் இஃதை அறிந்து கொண்டு, அனுபவமும், பரந்த அறிவும் கொண்ட ஒரு (பிராமணப்) புரோகிதனை நியமித்துக் கொள்ள வேண்டும்.(28) ஒரு மன்னன் முதலில் புரோகிதனைத் தன் அலுவலில் நியமித்த பிறகு, அவன் மணிமுடிசூட்டிக்கொள்ள வேண்டும். இதுவே விதியாக விதிக்கப்பட்டிருக்கிறது. அந்த விதிகள், பிராமணனே அனைத்து உயிரினங்களிலும் முதன்மையானவன் என்று அறிவிக்கின்றன. வேதங்களை அறிந்த மனிதர்கள், பிராமணனே முதலில் உண்டாக்கப்பட்டான் என்று சொல்கின்றனர்.(29) முந்திப் பிறந்ததன் விளைவால் அவனிடம் இவ்வுலகின் நல்ல பொருட்கள் அனைத்தும் இருக்கின்றன. படைப்பாளன் உண்டாக்கிய சிறந்த பொருட்கள் அனைத்தின் உரிமையாளனான பிராமணன், முந்திப் பிறந்தவனாதலால், அவன் மரியாதைக்குத் தகுந்தவனும், அனைத்து உயிரினங்களின் வழிபாட்டுக்குத் தகுந்தவனுமாவான்.(30) ஒரு மன்னன் பலமிக்கவனாகவே இருந்தாலும், சாத்திரங்களின் ஆணைப்படி, பிற பொருட்களைக் காட்டிலும் தனித்துவமான, புகழ்பெற்ற, சிறந்த பொருட்களைப் பிராமணனுக்கு அளிக்க வேண்டும்.(31) க்ஷத்திரியனின் வளர்ச்சிக்கும் பிராமணன் பங்காற்றுகிறான், பிராமணனின் வளர்ச்சிக்கு க்ஷத்திரியன் பங்காற்றுகிறான். எனவே எப்போதும் பிராமணர்கள் மன்னர்களால் சிறப்பாக வழிபடப்பட வேண்டும்"என்றார் {கசியபர்}".(32)
சாந்திபர்வம் பகுதி – 73ல் உள்ள சுலோகங்கள் : 32
ஆங்கிலத்தில் | In English |