Muchukunda and Kuvera! | Shanti-Parva-Section-74 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 74)
பதிவின் சுருக்கம் : மன்னன் முசுகுந்தனுக்கும், குபேரனுக்கும் இடையில் நடந்த மோதலையும் உரையாடலையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்; புரோகிதரால் மன்னனுக்கு நேரும் நன்மைகளை எடுத்துச் சொன்னது...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்},[1] "நாட்டைப் பேணிக் காத்து, வளர்ச்சியடையச் செய்வது மன்னனைச் சார்ந்தது என்று சொல்லப்படுகிறது. மன்னனைப் பேணிக் காத்து, அவனை வளர்ச்சியடையச் செய்வது அம்மன்னனின் புரோகிதரைச் சார்ந்தது.(1) எங்குக் குடிமக்களின் கண்ணுக்குப் புலப்படாத அச்சங்கள் களையப்பட்டு, கண்ணுக்குப் புலப்படும் அச்சங்கள் அனைத்தும் மன்னனின் கர வலிமையால் களையப்படுகின்றனவோ அந்த நாடே உண்மையான இன்பத்தை அனுபவிக்கும்.(2) இது தொடர்பாக மன்னன் முசுகுந்தனுக்கும், வைஸ்ரவணனுக்கும் {குபேரனுக்கும்} இடையில் நடைபெற்ற ஒரு பழைய உரையாடல் தென்படுகிறது.(3)
[1] கும்பகோணம் பதிப்பில், "ஓ பிதாமஹரே, பிராம்மணன் க்ஷத்ரியன் இவர்களுடைய ஸாமர்த்தியமும், புரோஹிதரின் லக்ஷணமும் அவர் பெருமையும் உம்மால் உபதேசிக்கப்பட்டன. இப்பொழுது பிராம்மணன் க்ஷத்ரியன் இவர்களின் நிர்ணயத்தைக் கேட்க விரும்புகிறேன். பிராம்மணனும் க்ஷத்திரியனுமே எல்லா உலகங்களுக்கும் முக்கியக் காரணமாகிறார்கள். ராஜ்யத்தின் யோக்ஷேமமும் அவ்விருவரைக் கொண்டு நிலைபெற வேண்டுமே?" என்று இந்த அத்யாயத்தின் தொடக்கத்திலேயே யுதிஷ்டிரன் பீஷ்மரிடம் கேட்பதாக வருகிறது. அதன் பிறகே பீஷ்மர் பின்வருவனவற்றைச் சொல்லத் தொடங்குகிறார்.
மன்னன் முசுகுந்தன், மொத்த உலகத்தையும் அடக்கிய பிறகு, தன் பலத்தைச் சோதிப்பதற்காக அளகையின் தலைவனிடம் {குபேரனிடம்} சென்றான்.(4) மன்னன் வைஸ்ரவணன் {குபேரன்} (தன் ஆன்ம பலத்தால்) ஒரு பெரிய ராட்சசப் படையை உண்டாக்கினான். அவை முசுகுந்தனால் வழிநடத்தப்பட்ட படையைக் கலங்கடித்தது.(5) ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {யுதிஷ்டிரா}, தன் படையினர் கொல்லப்படுவதைக் கண்ட மன்னன் முசுகுந்தன், கல்விமானான தனது புரோகிதர் (வசிஷ்டரைக்) கண்டிக்கத் தொடங்கினான்.(6) அதன்பேரில், நேர்மையான மனிதர்களில் முதன்மையான வசிஷ்டர் கடுந்தவங்களைச் செய்து, ராட்சசர்களைக் கொல்லச் செய்து, முசுகுந்தனின் விருப்பத்திற்கான உண்மையான வழிமுறையை உறுதி செய்தார்.(7) மன்னன் வைஸ்ரவணனின் {குபேரனின்} துருப்பினர் கொல்லப்பட்டபோது, அவன் {குபேரன்} முசுகுந்தனிடம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(8)
அந்தப் பொக்கிஷங்களின் தலைவன் {குபேரன்}, "உன்னைவிடப் பலவான்களான பழங்காலத்து மன்னர்கள், தங்கள் புரோகிதர்களின் துணையுடன் இவ்வாறு ஒருபோதும் என்னை அணுகியதில்லை.(9) அவர்கள் அனைவரும் ஆயுதங்களில் திறன் கொண்டவர்களாகவும் பெரும் வலிமை கொண்டவர்களாகவும் இருந்தனர். இன்ப துன்பங்களை அருள்பவனாக என்னைக் கருதிய அவர்கள், வழிபடுவதற்காகவே என்னை அணுகியிருக்கின்றனர்.(10) உண்மையில், உனக்குக் கரவலிமை உண்டானால், அதை வெளிப்படுத்துவதே உனக்குத் தகும். பிராமண வலிமையின் துணையுடன் கூடிய நீ ஏன் இவ்வாறு செருக்குடன் நடந்து கொள்கிறாய்?" என்று கேட்டான்.(11)
இந்த வார்த்தைகளில் கோபமடைந்த முசுகுந்தன், செருக்கேதும், அச்சமேதும் இல்லாமல் பொக்கிஷத்தலைவனிடம் {குபேரனிடம்} நீதியுள்ள, அறிவார்ந்த இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(12) "தான்தோன்றியான பிரம்மன் பிராமணனையும், க்ஷத்திரியனையும் உண்டாக்கினான். அவர்கள் பொது மூதாதையையே கொண்டுள்ளனர். அவர்கள் தங்கள் பலங்களைத் தனித்தனியாகப் பயன்படுத்தினால், அவர்களால் உலகத்தைத் தாங்க முடியாது. தவங்கள் மற்றும் மந்திரங்களின் சக்தி பிராமணர்களுக்கு அளிக்கப்பட்டது; கர மற்றும் ஆயுத வலிமை க்ஷத்திரியர்களுக்கு வழங்கப்பட்டது.(14) மன்னர்கள் இந்த இரு வகைச் சக்திகளையும் பெருக்கிக் கொண்டே தங்கள் குடிமக்களைக் காக்க வேண்டும். நான் அவ்வழியிலேயே செயல்படுகிறேன். எனவே, ஓ! அளகையின் தலைவா {குபேரா}, என்னை இவ்வாறு நிந்திக்காதே" என்றான்.(15)
இவ்வாறு சொல்லப்பட்ட வைஸ்ரவணன் {குபேரன்}, முசுகுந்தனிடமும், அவனது புரோகிதரிடமும் {வசிஷ்டரிடமும்}, "(தான்தோன்றியின்) உத்தரவில்லாமல் நான் எவருக்கும் ஒருபோதும் அரசுரிமையை வழங்குவது கிடையாது. அதே போல, உத்தரவில்லாமல் நான் எவரிடம் இருந்தும் அதைப் பறித்தது கிடையாது. ஓ! மன்னா, இதை அறிவாயாக.(16) கட்டுகள் இல்லாத மொத்த உலகத்தையும் நீ ஆள்வாயாக" என்றான்.
இவ்வாறு சொல்லப்பட்ட முசுகுந்தன் {குபேரனிடம்}, பதிலுரையாக,(17) "ஓ! மன்னா, உன்னிடமிருந்து கொடையாக அளிக்கப்படும் அரசுரிமையை அனுபவிக்க நான் விரும்பவில்லை. நான் என் சொந்த கரவலிமையால் கிடைக்கும் அரசுரிமையையே அனுபவிக்க விரும்புகிறேன்" என்றான்".(18)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "முசுகுந்தனின் இந்த வார்த்தைகளைக் கேட்டும், அம்மன்னன் {முசுகுந்தன்} அச்சமில்லாமல் க்ஷத்திரியக் கடமைகளை நோற்பதைக் கண்டும் வைஸ்ரவணன் {குபேரன்} மிகுந்த ஆச்சரியத்தால் நிறைந்தான்.(19) க்ஷத்திரியக் கடமைகளுக்கு அர்ப்பணிப்புடன் இருந்த மன்னன் முசுகுந்தன், தன் கரவலிமையால் மொத்த உலகத்தையும் அடைந்து அதை ஆளத் தொடங்கினான்.(20) அறம்சார்ந்த எந்த மன்னன், பிராமணனை முன்னிலையில் கொண்டு, அவனது துணையுடன் தன் நாட்டை ஆள்கிறானோ, அவன் மொத்த உலகத்தை அடக்குவதிலும், பெரும் புகழை அடைவதிலும் வெல்கிறான்.(21) ஒரு பிராமணன் தினமும் தன் அறச்சடங்குகளைச் செய்ய வேண்டும். க்ஷத்திரியன் எப்போதும் ஆயுதங்களைத் தரித்தவனாக இருக்க வேண்டும். அவ்விருவரே இந்த அண்டத்தில் உள்ள அனைத்திற்கும் உண்மையான உரிமையாளர்கள்" {என்றார் பீஷ்மர்}.(22)
சாந்திபர்வம் பகுதி – 74ல் உள்ள சுலோகங்கள் : 22
ஆங்கிலத்தில் | In English |