The conduct of the King! | Shanti-Parva-Section-75 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 75)
பதிவின் சுருக்கம் : அரசன் எவ்வாறான நடத்தைகளைக் கொண்டவனாக இருக்க வேண்டும் என்பதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, தன் குடிமக்களை மேன்மையடையச் செய்வதிலும், மறுமையில் புகழுலகங்களை ஈட்டுவதிலும் எந்த மன்னன் வெல்கிறான் என்பதைச் சொல்வீராக" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பாரதா, மன்னன், பரந்த மனம் கொண்டவனாகவும், வேள்விகளைச் செய்பவனாகவும் இருக்க வேண்டும். அவன் நோன்புகளையும், தவங்களையும் நோற்க வேண்டும், மேலும் அவன் தன் குடிமக்களைப் பாதுகாக்கும் கடமையில் அர்ப்பணிப்புள்ளவனாக இருக்க வேண்டும்.(2) தன் குடிமக்களை நீதியுடன் பாதுகாக்கும் அவன், அறவோர் வரும்போது எழுந்திருந்து, அவர்களுக்குக் கொடையளித்து அவர்கள் அனைவரையும் மதிக்க வேண்டும்.(3) மன்னன் நேர்மையை {அறத்தை} மதித்தால், எங்கும் அது {நேர்மை} மதிக்கப்படும். மன்னனால் விரும்பப்படும் செயல்கள் மற்றும் பொருட்களை, அவனது குடிமக்களும் விரும்புவார்கள்.(4)
மன்னன், எப்போதும் தன் கரங்களில் உயர்த்தப்பட்ட தண்டக்கோலுடன் இருக்கும் காலனைப் போலத் தன் எதிரிகளிடம் நடந்த கொள்ள வேண்டும். அவன் தன் நாட்டில் கள்வர்கள் எங்கிருப்பினும் அவர்களை அடியோடு அழிக்க வேண்டும், உறுதியின்மையால் அவன் ஒருபோதும் அவர்களில் எவரையும் மன்னிக்கக்கூடாது. (5) ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, மன்னன் தன் பாதுகாப்பில் இருக்கும் குடிமக்கள் ஈட்டும் தகுதியின் {புண்ணியத்தின்} நான்கில் ஒரு பகுதியை ஈட்டுகிறான்.(6) கல்வி, கொடைகள், ஆகுதிகள், தேவர்களை வழிபடுதல் ஆகியவற்றின் மூலம் தன் குடிமக்கள் அடையும் தகுதியில் நான்கில் ஒரு பகுதியை, அந்தக் குடிமக்களைப் பாதுகாப்பதின் மூலம் மட்டுமே மன்னன் அடைந்துவிடுகிறான்.(7) பாதுகாப்பை வழங்கும் தன் கடமையை மன்னன் புறக்கணிப்பதால் நாட்டில் எழும் எந்தத் துயரின் விளைவாலும் அவனுடைய குடிமக்கள் செய்யும் பாவத்தில் நான்கில் ஒரு பகுதியையும் அவன் அடைகிறான்.(8) மன்னன், கொடூரனாகவும், பேச்சில் உண்மை இல்லாதவனாகவும் மாறுவதால் உண்டாகும் எந்தப் பாவத்திலும், அவன் ஒரு பகுதியை ஈட்டுகிறான் என்று ஒரு சிலரும், மொத்த பாவத்தையும் அடைகிறான் என்று ஒரு சிலரும் சொல்கிறார்கள்.(9)
அத்தகு பாவங்களிலிருந்து மன்னன் எவ்வாறு தூய்மையடையலாம் என்ற வழிமுறைகளை இப்போது கேட்பாயாக. கள்வர்களால் ஒரு குடிமகனிடம் கொள்ளையடிக்கப்பட்ட செல்வத்தை மீட்பதில் மன்னன் தவறினால், அவன் தன் கருவூலத்திலிருந்தாவது, அல்லது, அஃது இயலாவிட்டாலும், தன்னைச் சார்ந்திருப்பவர்களிடம் அடையப்பட்ட செல்வத்தைக் கொண்டாவது அந்தப் பாதிக்கப்பட்ட மனிதனுக்கு இழப்பீடு தர வேண்டும்.(10) அனைத்து வகையினரும், பிராமணர்களின் உடலையோ, உயிரையோ காக்க வேண்டியதைப் போலவே பிராமணர்களின் செல்வத்தையும் காக்க வேண்டும். பிராமணர்களுக்கு எதிராகக் குற்றமிழைக்கும் மனிதன் நாடுகடத்தப்பட வேண்டும்.(11) பிராமணனின் செல்வத்தைப் பாதுகாப்பதன் மூலம் அனைத்தும் பாதுகாக்கப்படுகின்றன. இவ்வாறு அடையப்படும் பிராமணனின் அருளால் மன்னன் வெற்றிமகுடம் சூட்டுவான்.(12) மேகங்களிடம் இருந்து நிவாரணத்தை நாடும் உயிரினங்களைப் போலவோ, ஒரு பெரிய மரத்திடம் புகலிடத்தை நாடும் பறவைகளைப் போலவோ மனிதர்கள், தகுந்த மன்னனின் பாதுகாப்பை நாடுகிறார்கள்.(13) காமம் நிறைந்த ஆன்மா கொண்டவனும், தன் இச்சைகளை நிறைவுசெய்யவே எப்போதும் முனைபவனும், பேராசைக்காரனும், கொடூரனுமான ஒரு மன்னன், தன் குடிமக்களைப் பாதுகாப்பதில் ஒருபோதும் வெல்வதில்லை" என்றார் {பீஷ்மர்}.(14)
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "அரசுரிமை அளிக்கும் மகிழ்ச்சி, அல்லது தன்னலம் பேணும் அந்த அரசுரிமையையே கூட நான் ஒருக்கணமும் விரும்பவில்லை. எனினும், அதன் மூலம் ஒருவன் அடையும் தகுதிக்காகவே {புண்ணியத்துக்காகவே} அதை நான் விரும்பினேன். எந்தத் தகுதிக்கும் {புண்ணியத்துக்கும்} அதனுடன் தொடர்பில்லை என்றே {இப்போது} எனக்குத் தெரிகிறது.(15) எனில், எந்தத் தகுதியும் ஈட்டமுடியாத அரசுரிமைக்கான எந்தத் தேவையும் இல்லை. எனவே, தகுதியை {புண்ணியத்தை} ஈட்டும் விருப்பத்தால் நான் காட்டிற்குள் ஓயப் போகிறேன். செங்கோலைப் புறந்தள்ளி, என் புலன்களை அடக்கி, புனிதமான காடுகளுக்குச் சென்று, கனிகளையும், கிழங்குகளையும் உண்டு வாழும் துறவியாகி அறத்தகுதிகளை ஈட்டுவதில் முனையப் போகிறேன்" என்றான்[1].(16,17)
[1] கும்பகோணம் பதிப்பில், "ராஜ்யஸுகத்தில் விருப்பமில்லாத நான் தர்மத்தை வேண்டி ராஜ்யத்தில் விருப்பமுள்ளவனானேன். இதில் தர்மமில்லாததையும், அதர்மம் அதிகமாயிருப்பதையும் கவனிக்கையில் ஒரு க்ஷணமும் இதிலிருக்க எனக்கு விருப்பமில்லை. ஆகையால், தர்மம் இல்லாத இந்த ராஜ்யம் எனக்கு வேண்டாம். தர்மத்தைச் செய்யும் விருப்பத்துடன் நான் அரண்யமே செல்லுகிறேன். பரிசுத்தமான அரண்யங்களில் தண்டத்தை விலக்கிவிட்டு இந்திரியங்களை ஜயித்தவனும், கிழங்குகனிகளைப் புஜிப்பவனுமான முனியாயிருந்துகொண்டு தர்மத்தை ஆராதிக்கப்போகிறேன்" என்றிருக்கிறது.
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! யுதிஷ்டிரா,, உன் இதயத்தின் இயல்பு என்ன என்பதையும், குற்றமில்லாத உன் மனநிலையையும் நான் அறிவேன். எனினும், குற்றமில்லா தன்மையினால் மட்டுமே உன்னால் உன் நாட்டை ஆள முடியாது.(18) உன் இதயம் மென்மையானதாக இருக்கிறது. நீ கருணையுள்ளவனாகவும், அதீத நீதிமானாகவும் இருக்கிறாய். சக்தி இல்லாதவனாகவும், அறவோனாகவும், கருணை நிரம்பியவனாகவும் நீ இருக்கிறாய். எனவே, மக்கள் உன்னை அதிகமாக விரும்புகின்றனர்.(19) நீ உன் தந்தை மற்றும் பாட்டனின் நடத்தையைப் பின்பற்றுவாயாக. நீ பின்பற்ற விரும்பும் நடத்தையை மன்னர்கள் ஒருபோதும் பின்பற்றக்கூடாது.(20) (உன் கடமையைச் செய்த பிறகு) இதுபோன்ற கவலையால் தீண்டப்பட்டவனாக ஒருபோதும் இராதே. குற்றமற்ற {புண்படுத்தா} நடத்தையை நீ ஒருபோதும் பின்பற்றாதே.(21) உன் புத்தியாலும், ஞானத்தாலும் தூண்டப்பட்டு, நீ பின்பற்ற விரும்பும் நடத்தையானது உன் தந்தை பாண்டுவின் ஆசிகளுக்கோ, உன் தாய் குந்தி உனக்காக வேண்டி வருவதற்கோ தகுந்ததில்லை.(22) துணிவு, வலிமை, உண்மை ஆகியவற்றையே உன் தந்தை எப்போதும் உனக்காக வேண்டினான். உயர்ந்த மனத்தையும், பெரும் தகைமையையுமே குந்தி எப்போதும் உனக்காக வேண்டினாள். சிராத்தங்கள் மற்றும் வேள்விகளில் ஸ்வாஹா மற்றும் ஸ்வாதாக்களுடன் அளிக்கப்படும் காணிக்கைகளை, பித்ருக்களும், தேவர்களும் தங்கள் பிள்ளைகளிடம் இருந்து எப்போதும் வேண்டுகின்றனர்.(24)
கொடைகள், கல்வி, வேள்விகள், குடிமக்களின் பாதுகாப்பு ஆகியவை தகுதியை {புண்ணியத்தைத்} தருபவையாகவோ, பாவம் நிறைந்தவையாகவோ இருப்பினும், அவற்றைப் பயிலவும், நடைமுறைப்படுத்தவுமே நீ பிறந்திருக்கிறாய்.(25) ஓ! குந்தியின் மகனே, மனிதர்கள் தங்கள் மேல் வைக்கப்பட்ட சுமைகளையும், அவர்களின் வாழ்வோடு பிணைக்கப்பட்டவற்றையும் சுமப்பதில் தோல்வியுற்றாலும், அவர்களது புகழ் ஒருபோதும் மங்குவதில்லை.(26) ஒரு குதிரை கூட நன்கு பயிற்சியளிக்கப்பட்டால், விழுந்துவிடாமல் சுமையைச் சுமப்பதில் வெல்லும். (அப்படியிருக்கையில் மனிதனாக இருக்கும் உன்னைக் குறித்த என்ன சொல்ல வேண்டும்?) வெற்றியானது (செயல்களையும், சொற்களையும்} செயல்களைச் சார்ந்ததாகச் சொல்லப்படுவதால், ஒருவனுடைய செயல்களும், வார்த்தைகளும் முறையானவையாக இருந்தால் அவன் ஒருபோதும் நிந்தனைக்குள்ளாக மாட்டான்.(27) இல்லறம் நோற்கும் அறவோனாகவோ, மன்னனாகவோ, பிரம்மச்சாரியாகவோ எவ்வாறானவனாக இருப்பினும் எந்த மனிதனும் இடறாமல் செயல்படுவதில் வென்றதில்லை.(28) செயல்படாமல் இருப்பதே பாவம் நிறைந்தது என்பதால், அனைத்துச் செயல்களில் இருந்தும் விலகாமல், சிறு தகுதியாவது {புண்ணியமாவது} இருக்கும் நன்மையான செயலைச் செய்வதே சிறந்ததாகும்.(29)
நற்பிறவி கொண்டவனும், நீதிமானுமான ஒருவன் செழிப்படைவதில் வெல்கிறான் எனும்போது, மன்னனானவன், தன் காரியங்கள் அனைத்திலும் செழிப்பை அடைவதில் வெல்வான்.(30) ஒரு நாட்டை அடையும் அறம்சார்ந்த மன்னன் ஒருவன், கொடைகளால் {தானத்தால்} சிலரையும், பலத்தால் (தண்டத்தால்) சிலரையும், இனிமையான வார்த்தைகளால் {சாமத்தால்} சிலரையும் அடிபணியச் செய்ய முயல வேண்டும்.(31) நற்பிறவி கொண்டவர்களும், தங்கள் வாழ்வாதார இழப்பை அஞ்சும் கல்விமான்களும் எவனைச் சார்ந்திருக்கிறார்களோ, எவனை நம்பி நிறைவுடன் வாழ்கிறார்களோ, அவனைவிட {அந்த மன்னனைக் காட்டிலும்} அறவோன் வேறு எவனும் இல்லை"[2] என்றார் {பீஷ்மர்}.(32)
[2] கும்பகோணம் பதிப்பில், "நற்குலத்தில் பிறந்தவர்களும், ஜீவனமில்லாத பயத்தால் துன்பப்பட்டவர்களுமான வித்வான்களும் எந்த அரசனை அடைந்து திருப்தியுடன் இருக்கிறார்களோ, அந்த அரசனுக்கு அக்காரியத்தைக் காட்டிலும் மேலான தர்மம் ஒன்றுமில்லை" என்றிருக்கிறது.
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ ஐயா, சொர்க்கத்திற்கு உகந்த நடத்தைகள் என்ன? அவற்றில் இருந்து பெறப்படும் பெரும் புகழின் இயல்பு என்ன? அதிலிருந்து அடையப்படும் உயர்ந்த செழிப்பு யாது? நீர் அறிந்தால் இவை யாவையும் எனக்குச் சொல்வீராக" என்றான்.(33)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "அச்சத்திலிருக்கும் ஒருவன் எந்த மனிதனிடம் ஒரு கணமேனும் நிவாரணம் அடைகிறானோ, அவனே நம்மில் சொர்க்கத்திற்கு மிகவும் தகுந்தவனாவான். இதை நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன்.(34) ஓ! குரு குலத்தில் முதன்மையானவனே {யுதிஷ்டிரனே}, உற்சாகமாகக் குருக்களின் மன்னன் ஆவாயாக, சொர்க்கத்தை அடைவாயாக, நல்லோரைக் காத்து, தீயோரைக் கொல்வாயாக.(35) மேகங்களின் தலைவனிடம் இருந்து {வருணபகதேவனிடமிருந்து காக்கப்படும்} அனைத்து உயிரினங்களைப் போலவும், இனிய கனிகளுடன் கூடிய பெருமரத்திடம் இருந்து பறவைகளைப் போலவும், நியாயவான்கள் அனைவருடன் சேர்ந்த உன் நண்பர்கள் யாவரும் உன்னிடமிருந்து ஆதரவைப் பெற்றுக் கொள்ளட்டும்.(36) கண்ணியமானவனும், துணிவுமிக்கவனும், தாக்கவல்லவனும், கருணை கொண்டவனும், புலன்களைக் கட்டுப்படுத்தியவனும், அனைவரிடமும் அன்புடன் நடந்து கொள்பவனும், தகைமையாளனும், நீதிமானுமான ஒருவனின் பாதுகாப்பையே மனிதர்கள் நாடுகிறார்கள்" என்றார் {பீஷ்மர்}.(37)
சாந்திபர்வம் பகுதி – 75ல் உள்ள சுலோகங்கள் : 37
ஆங்கிலத்தில் | In English |