The king of Kaikeyas and the Rakshasa! | Shanti-Parva-Section-77 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 77)
பதிவின் சுருக்கம் : எவருடைய செல்வத்துக்கெல்லாம் அரசன் தலைவனாகக் கருதப்படுகிறான் என்பதையும், மன்னன் பின்பற்ற வேண்டிய நடைமுறை குறித்துக் கேகய மன்னனுக்கும் ராட்சசனுக்கும் நடந்த உரையாடலையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாரதக் குலத்துக் காளையே, எவருடைய செல்வத்திற்கு மன்னன் தலைவனாகக் கருதப்படுகிறான்? மன்னன் பின்பற்ற வேண்டிய நடைமுறை என்ன? ஓ! பாட்டா, இது குறித்து என்னிடம் உரைப்பீராக" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "பிராமணர்களைத் தவிர்த்து, அனைவருக்குச் சொந்தமான செல்வத்துக்கும், தங்கள் முறையான கடமைகளை நோற்காத பிராமணர்களுக்குச் சொந்தமான செல்வத்துக்கும் மன்னனே தலைவன் என்று வேதங்கள் அறிவிக்கின்றன.(2) தங்கள் கடமைகளை நோற்காத பிராமணர்களை மன்னன் {தண்டனை இல்லாமல் தப்ப} விட்டுவிடக்கூடாது. இதுவே பண்டைய மன்னர்களின் பாரம்பரிய வழக்கமாகும் என்று நீதிமான்கள் சொல்கின்றனர்.(3) ஓ! ஏகாதிபதி, எவனுடைய ஆட்சிப்பகுதியில் உள்ள ஒரு பிராமணன் கள்வனாகிறானோ, அந்த மன்னனே அக்குற்றத்திற்குக் காரணமாகக் கருதப்படுகிறான். அவ்வழக்கில் அவனே பாவம் நிறைந்தவனாகிறான்.(4) அத்தகு சூழ்நிலையின் விளைவால் மன்னர்கள் தங்களையே நிந்தனைக்குத் தகுந்தவர்களாகக் கருதுகிறார்கள். எனவே நீதிமான்களான மன்னர்கள் அனைவரும், பிராமணர்கள் தங்களைத் தாங்கிக் கொள்வதற்கான வழிமுறைகளை அவர்களுக்கு வழங்குகின்றனர்.(5)
ஒரு ராட்சசன், கைகேயர்களின் மன்னனைக் கடத்தும்போது அவனிடம் அம்மன்னன் பேசியதாக உள்ள ஒரு பழைய உரையாடல் இது தொடர்பாகத் தென்படுகிறது.(6) ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, கடும் நோன்புகளைக் கொண்டவனும், வேதங்களை அறிந்தவனுமான கைகேயர்களின் மன்னன், காட்டில் வசித்துவந்தபோது, ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் ஒரு ராட்சசனால் பலவந்தமாகக் கைப்பற்றப்பட்டான்.(7) {அப்போது} அம்மன்னன், "என் ஆட்சிப்பகுதிகளில் திருடன் எவனும், தீய நடத்தை கொண்டவன் எவனும், மதுவுண்பவன் எவனும் கிடையாது. புனித நெருப்பு இல்லாதவனோ, வேள்விகளைச் செய்யாதவனோ எவனும் என் ஆட்சிப்பகுதிகளில் கிடையாது. இவ்வாறிருக்கையில் உன்னால் எவ்வாறு என் இதயத்தை அடைய முடிந்தது?[1](8) கல்வியில்லா, நோன்பு நோற்கா, சோமம் பருகா பிராமணர் எவரும் என் ஆட்சிப்பகுதிகளில் கிடையாது. புனித நெருப்பு இல்லாதவனோ, வேள்விகளைச் செய்யாதவனோ எவனும் என் ஆட்சிப்பகுதிகளில் கிடையாது[2]. இவ்வாறிருக்கையில் உன்னால் எவ்வாறு என் ஆன்மாவையடைய முடிந்தது?(9) என் ஆட்சிப்பகுதிகளில் தக்ஷிணையுடன் நிறைவுபெறாத வேள்வி ஏதும் செய்யப்படுவதில்லை. என் ஆட்சிப்பகுதிகளில் நோன்புகளை நோற்காதோர் எவரும் வேதங்களைக் கற்பதில்லை. இவ்வாறிருக்கையில், உன்னால் எவ்வாறு என் ஆன்மாவையடைய முடிந்தது?(10)
[1] கும்பகோணம் பதிப்பில், "ஓ ரக்ஷஸே, என் தேசத்தில் திருடனும், லோபியும், கட்குடிப்பவனும் அக்நியாதானம் செய்யாதவனும், யாகஞ்செய்யாதவனுமில்லை; ஆகையால், நீ என்னிடம் ப்ரவேசியாதே" என்றிருக்கிறது.[2] இதே கருத்து இரண்டாம் முறையாகச் சொல்லப்படுகிறது.
என் நாட்டில் உள்ள பிராமணர்கள் கற்பிக்கவும், கற்கவும், வேள்விகள் செய்யவும், மற்றவர்களின் வேள்விகளைச் செய்து கொடுக்கவும், கொடையளிக்கவும், கொடைபெறவும் செய்கிறார்கள். அவர்கள் அனைவரும் அந்த ஆறு செயல்பாடுகளையும் செய்கிறார்கள்.(11) என் நாட்டில் உள்ள பிராமணர்கள் அனைவரும் தங்கள் வகைக்கான கடமைகளை அர்ப்பணிப்புடன் செய்கிறார்கள். அவர்கள் மென்மையானவர்களாகவும், பேச்சில் உண்மை நிறைந்தவர்களாகவும் இருப்பதால் அனைத்தும் வழங்கப்பட்டவர்களாகவும், வழிபடப்படுபவர்களாகவும் இருக்கிறார்கள். இவ்வாறிருக்கையில், உன்னால் எவ்வாறு என் ஆன்மாவையடைய முடிந்தது?(12)
என் நாட்டில் உள்ள க்ஷத்திரியர்கள் அனைவரும், தங்கள் வகைக்கான கடமைகளில் அர்ப்பணிப்பு கொண்டவர்களாக இருக்கின்றனர். அவர்கள் ஒருபோதும் இரந்து கேட்காமல் கொடுக்கவே செய்கிறார்கள். மேலும் அவர்கள் உண்மையையும், அறத்தையும் அறிந்தவர்களாக இருக்கின்றனர். அவர்கள் கற்பிக்காமல் எப்போதும் கற்கவே செய்கிறார்கள். வேள்விகளைச் செய்கிறார்களேயன்று ஒருபோதும் மற்றவர்களின் வேள்வியை நடத்துவதில்லை. அவர்கள் பிராமணர்களைப் பாதுகாக்கிறார்கள். ஒருபோதும் அவர்கள் போரில் புறமுதுகிடுவதில்லை. இவ்வாறிருக்கையில் உன்னால் எவ்வாறு என் ஆன்மாவையடைய முடிந்தது?(13,14)
என் ஆட்சிப்பகுதிகளில் உள்ள வைசியர்கள் அனைவரும் தங்கள் வகைக்கான கடமைகளை நோற்கின்றனர். அவர்கள் எளிமையாகவும், வஞ்சகமில்லாமலும் உழவு, கால்நடை வளர்த்தல், வணிகம் ஆகியவற்றின் மூலம் தங்கள் வாழ்வாதாரங்களை அடைகின்றனர். அவர்கள் அனைவரும் கவனம் நிறைந்தவர்களாகவும், அறச்சடங்குகளையும், அற்புத நோன்புகளை நோற்பவர்களாகவும், உண்மைநிறைந்த பேச்சு கொண்டவர்களாகவும் இருக்கின்றனர்.(15) அவர்கள், விருந்தினர்களுக்கு உரியதைக் கொடுப்பவர்களாகவும், தற்கட்டுப்பாடு கொண்டவர்களாகவும், தூய்மையானவர்களாகவும், தங்கள் உறவினர்கள் மற்றும் சொந்தங்களுடன் பிணைப்புள்ளவர்களாகவும் இருக்கின்றனர். இவ்வாறிருக்கையில் உன்னால் எவ்வாறு என் இதயத்தையடைய முடிந்தது?(16)
என் நாட்டில் உள்ள சூத்திரர்கள், தங்கள் வகைக்குரிய கடமையை நோற்பவர்களாகவும், பணிவுடையவர்களாகவும் இருந்து, முறையான தொண்டாற்றி, மூன்று வகையினரிடமும் எந்தத் தீய எண்ணமும் இன்றி அவர்களுக்காகக் காத்திருக்கின்றனர் {அவர்களுக்குப் பணிவிடை செய்கின்றனர்}. இவ்வாறிருக்கையில் உன்னால் எவ்வாறு என் இதயத்தையடைய முடிந்தது?(17)
ஆதரவற்றோர், முதியோர், பலவீனர், நோய்வாய்ப்பட்டார், (பாதுகாப்பவரில்லா) பெண்கள் ஆகியோர் அனைவருக்கும் அவர்களுக்குத் தேவையானவற்றைக் கொடுத்து நான் ஆதரிக்கிறேன். இவ்வாறிருக்கையில் உன்னால் எவ்வாறு என் இதயத்தையடைய முடிந்தது?(18) பழங்காலத்தில் இருந்து வழக்கத்தில் இருந்து வரும் நாடுகள் சார்ந்த, குடும்பங்கள் சார்ந்த, சிறப்புக்குரிய பழக்கவழக்கங்கள் எதையும் ஒருபோதும் நான் ஒழித்ததில்லை. இவ்வாறிருக்கையில் உன்னால் எவ்வாறு என் இதயத்தையடைய முடிந்தது?(19)
என் நாட்டில் உள்ள தவசிகள் பாதுகாக்கப்பட்டும், வழிபடப்பட்டும் இருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் கௌரவிக்கப்படுபவர்களாக, உணவு கொடுத்து பராமரிக்கப்படுபவர்களாக இருக்கிறார்கள். இவ்வாறிருக்கையில் உன்னால் எவ்வாறு என் இதயத்தையடைய முடிந்தது?(20) பிறருக்குக் கொடுக்காமல் நான் உண்பதில்லை. அடுத்தவரின் மனைவியரிடம் நான் செல்வதில்லை. நான் தனியாக விளையாடுவதோ, மகிழ்வதோ இல்லை. இவ்வாறிருக்கையில் உன்னால் எவ்வாறு என் இதயத்தையடைய முடிந்தது?(21) பிரம்மச்சாரியல்லாத எவரும் என் நாட்டில் உணவுக்கு இரப்பதில்லை. பிக்ஷு வாழ்வு முறையை நோற்பவர்கள் எவரும் பிரம்மச்சாரியாக விரும்புவதில்லை. ரித்விக்காக இல்லாத எவரும் வேள்வி நெருப்பில் (தெளிந்த நெய்யாலான) ஆகுதிகளை ஊற்றுவதில்லை. இவ்வாறிருக்கையில் உன்னால் எவ்வாறு என் ஆன்மாவையடைய முடிந்தது?(22) கற்றறிந்தோர், முதியோர், தவங்களில் ஈடுபடுவோர் ஆகியோர் நான் ஒருபோதும் அவமதித்ததில்லை. மொத்த மக்களும் உறங்கும்போது, (அவர்களுக்குக் காவலாக) நான் விழித்திருக்கிறேன். இவ்வாறிருக்கையில் உன்னால் எவ்வாறு என் இதயத்தையடைய முடிந்தது?(23)
என் புரோகிதர் தன்னை அறிந்த ஞானியாக இருக்கிறார். அவர் தவங்களைச் செய்பவராகவும், அனைத்து கடமைகளை அறிந்தவராகவும் இருக்கிறார். பெரும் நுண்ணறிவைக் கொண்ட அவர் என் நாட்டில் முழு அதிகாரம் கொண்டவராக இருக்கிறார்.(24) கொடைகளின் மூலம் அறிவையும், உண்மை மற்றும் பிராமணர்களைப் பாதுகாப்பதன் மூலம் சொர்க்கத்தில் உள்ள அருள் உலகங்களையும் அடைய நான் விரும்புகிறேன். தொண்டால் நான் என் ஆசான்களுடன் பிணைப்புடன் இருக்கிறேன். எனக்கு ராட்சசர்களிடம் எந்த அச்சமும் கிடையாது.(25)
என் நாட்டில் விதவைகளோ, தீய பிராமணர்களோ, தங்கள் கடமைகளில் இருந்து தவறிய பிராமணர்களோ, வஞ்சகர்களோ, கள்வர்களோ, தகாதோரின் வேள்விகளைச் செய்து கொடுக்கும் பிராமணர்களோ, பாவம் நிறைந்த செயல்களைச் செய்யும் பாவிகளோ எவரும் கிடையாது. எனக்கு ராட்சசர்களிடம் எந்த அச்சமும் கிடையாது.(26)
என் உடலில் ஆயுதங்களால் ஏற்பட்ட காயத்தால் உண்டான வடு இல்லாத இரண்டு விரல் அகல இடம் கூடக் கிடையாது. நான் எப்போதும் அறத்திற்காகப் போரிடுகிறேன். இவ்வாறிருக்கையில் உன்னால் எவ்வாறு என் இதயத்தையடைய முடிந்தது?(27) என் நாட்டின் மக்கள், நான் அவர்களின் பசுக்களையும், பிராமணர்களையும் பாதுகாப்பேன் என்பதாலும், வேள்விகளைச் செய்வேன் என்பதாலும் எப்போதும் எனக்கு ஆசி கூறுகின்றனர். இவ்வாறிருக்கையில் உன்னால் எவ்வாறு என்னை அடைய முடிந்தது?" என்று கேட்டான் {கைகேய மன்னன்}.(28)
என் உடலில் ஆயுதங்களால் ஏற்பட்ட காயத்தால் உண்டான வடு இல்லாத இரண்டு விரல் அகல இடம் கூடக் கிடையாது. நான் எப்போதும் அறத்திற்காகப் போரிடுகிறேன். இவ்வாறிருக்கையில் உன்னால் எவ்வாறு என் இதயத்தையடைய முடிந்தது?(27) என் நாட்டின் மக்கள், நான் அவர்களின் பசுக்களையும், பிராமணர்களையும் பாதுகாப்பேன் என்பதாலும், வேள்விகளைச் செய்வேன் என்பதாலும் எப்போதும் எனக்கு ஆசி கூறுகின்றனர். இவ்வாறிருக்கையில் உன்னால் எவ்வாறு என்னை அடைய முடிந்தது?" என்று கேட்டான் {கைகேய மன்னன்}.(28)
ராட்சசன், "ஓ! கைகேயர்களின் மன்னா, அனைத்துச் சூழ்நிலைகளிலும் நீ உன் கடமைகளை நோற்றவனாக இருப்பதால், நீ உன் வசிப்பிடத்திற்குச் செல்லலாம். நான் உன்னை விடுகிறேன், நீ அருளப்பட்டிருப்பாயாக.(29) ஓ! கைகேயர்களின் மன்னா, பசுக்கள் மற்றும் பிராமணர்களைப் பாதுகாப்போரும், தங்கள் குடிமக்கள் அனைவரையும் பாதுகாப்போரும் ராட்சசர்களிடமும், பாவம் நிறைந்த மனிதர்களிடமும் எந்த அச்சமும் கொள்ளத் தேவையில்லை.(30) எந்த மன்னர்கள் பிராமணர்களை வழிகாட்ட விடுகிறார்களோ, எவர்களின் வலிமை பிராமணர்களைச் சார்ந்து இருக்கிறதோ, எவர்களது குடிமக்கள் விருந்தோம்பும் கடமைகளைச் செய்கிறார்களோ, அவர்கள் சொர்க்கத்தை அடைவதில் எப்போதும் வெல்கிறார்கள்" என்றான்."(31)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "எனவே, நீ பிராமணர்களைப் பாதுகாக்க வேண்டும். உன்னால் பாதுகாக்கப்படும் அவர்கள், பதிலுக்கு உன்னைப் பாதுகாப்பார்கள். ஓ! மன்னா, அவர்களுடைய ஆசிகள் அறம்சார்ந்த நடத்தை கொண்ட மன்னர்களுக்கு எப்போதும் கிடைக்கும்.(32) தங்கள் கடமைகளை நோற்காத பிராமணர்களை அறத்தின் நிமித்தமாகத் தண்டித்து, சிறந்தவர்களிடம் இருந்து அவர்களைத் (தனிப்பட்ட வகுப்பாக) தனிமைப்படுத்த வேண்டும்.(33) நகர மற்றும் மாகாண மக்களிடம் இவ்வழியில் நடந்து கொள்ளும் மன்னன் ஒருவன் இம்மையில் செழிப்பையும், இந்திரனுடன் கூடிய சொர்க்கத்தில் வசிப்பிடத்தையும் அடைகிறான்" {என்றார் பீஷ்மர்}.(34)
சாந்திபர்வம் பகுதி – 77ல் உள்ள சுலோகங்கள் : 34
ஆங்கிலத்தில் | In English |