The men who deserve and not to be consulted! | Shanti-Parva-Section-83 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 83)
பதிவின் சுருக்கம் : அரசவையினர், அமைச்சர்கள், படைத்தலைவர்கள் ஆகியோரின் பண்புகளையும், ஒரு மன்னனுக்கு ஆலோசிக்கத்தகுந்தவர் யாவர், தகாதவர் யாவர் என்பதையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, ஒரு மன்னனின் சட்டமன்றத்தினர், போர்த்துறை அமைச்சர்கள், அரசவையினர், படைத்தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் எவ்விதப் பண்புகளைக் கொண்டோராக இருக்க வேண்டும்?" என்று கேட்டான்[1].(1)
[1] "இந்த வரியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சொற்களில் நீலகண்டரின் விளக்கத்தைப் பின்பற்றியிருக்கிறேன்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "வியவகார ஸபையின் அதிகாரிகளும், யுத்தத்தில் உதவி செய்பவர்களும், ஸ்நேஹிதர்களும், சேனைத்தலைவன் முதலியவர்களும், மந்திரிகளும் எவ்விதக் குணமுள்ளவர்களாயிருக்க வேண்டும்?" என்றிருக்கிறது.
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "பணிவு, தன்னடக்கம், உண்மை, நேர்மை, சரியானதைச் சொல்லும் துணிவு ஆகிய பண்புகளைக் கொண்டோரே உன் சட்டமன்றத்தினராக {அரசவையோரோக} இருக்க வேண்டும்.(2) ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, எப்போதும் உன் தரப்பில் இருப்போரும், பெரும் துணிவு கொண்டோரும், மறுபிறப்பாள வகையைச் சார்ந்தோரும், பெரும் கல்விமான்களும், எப்போதும் உன்னிடம் நிறைவு கொண்டோரும், அனைத்துச் செயல்பாடுகளிலும் விடாமுயற்சியுடன் கூடியவர்களும் துன்பகாலங்கள் அனைத்திலும் உடனிருப்பவனையே போர்த்துறை அமைச்சர்களாக நீ விரும்ப வேண்டும்.(3) உயர்ந்த மரபுவழியில் வந்தவனும், உன்னால் கௌரவிக்கப்படுபவனும், உன்சார்பாக முடிந்த அளவுக்கு எப்போதும் தன் சக்தியை வெளிப்படுத்துபவனும், இன்பத்திலோ துன்பத்திலோ, நோயிலோ, மரணத்திலோ ஒருபோதும் உன்னைக் கைவிடாதவனும் உன் அரசவை உறுப்பினராக ஊக்கப்படுத்தப்பட வேண்டும்.(4) உன்நாட்டில் பிறந்த உயர் பிறப்பாளர்களும், ஞானம், அழகிய வடிவம், நற்பண்புகள், பெரும் கல்வி, நடத்தையில் கண்ணியம் ஆகியவற்றைத் தவிர உன்னிடம் அர்ப்பணிப்பும் கொண்டோர் உன் படை அதிகாரிகளாக நியமிக்கப்பட வேண்டும்.(5)
தாழ்ந்த மரபுவழி, பேராசையுடன் கூடிய மனோநிலை ஆகியவற்றைக் கொண்டவர்கள், கொடூரர்கள், வெட்கமில்லாதவர்கள் ஆகியோர், அவர்களது கரங்களில் ஈரம் உள்ள வரையில் உன் அவையில் இருப்பார்கள்[2].(6) நற்பிறவி, நன்னடத்தை ஆகியவற்றைக் கொண்டோர், குறியீடுகள் மற்றும் சைகைகள் அனைத்தையும் படிப்போர், கொடுமையற்றோர், இடத்திற்கும், காலத்திற்கும் தக்க தேவைகளை அறிந்தோர், அனைத்துச் செயல்பாடுகளிலும் தங்கள் தலைவனின் நன்மையையே எப்போதும் நாடுவோர் ஆகியோரை மன்னன் தன் காரியங்கள் அனைத்திலும் அமைச்சர்களாக நியமிக்க வேண்டும்.(7) செல்வக்கொடை, கௌரவங்கள், மரியாதைமிக்க வரவேற்பு, புகழை அடையும் வழிமுறைகள் ஆகியவற்றின் மூலம் வெல்லப்பட்டவர்கள், உன் காரியங்கள் அனைத்திலும் உனக்கு நன்மை செய்வார்கள் என்று கருதப்படத்தக்கவர்கள் ஆகியோர் எப்போதும் உன் மகிழ்ச்சியைப் பங்கிட்டுக் கொள்பவர்களாக இருக்க வேண்டும்.(8) மாறாநடத்தை கொண்டவர்கள், கல்வியும் நல்லொழுக்கமும் படைத்தவர்கள், சிறந்த நோன்புகளை நோற்பவர்கள், பெரிய இதயம் கொண்டவர்கள், பேச்சில் உண்மை நிறைந்தவர்கள் ஆகியோர் எப்போதும் உன் காரியங்களில் கவனம் உள்ளவர்களாகவும், உன்னை ஒருபோதும் கைவிடாதவர்களாகவும் இருப்பார்கள்.(9) மறுபுறம், கௌரவமற்றவர்கள், கட்டுப்பாடுகள் எதையும் நோற்காதவர்கள், தீய ஆன்மா படைத்தவர்கள், நற்செயல்களில் இருந்து வீழ்ந்துவிட்டவர்கள், ஆகியோர் நலம்சார்ந்த அனைத்துக் கட்டுப்பாடுகளையும் நோற்கும்படி எப்போதும் கட்டாயப்படுத்தப்பட வேண்டும்.(10)
[2] "அஃதாவது, அவர்களுக்கு ஊதியம் கொடுக்கப்படும்வரையும், அவர்களுக்குக் கொடுக்கப்பட்டவற்றைத் தங்கள் கையில் கொண்டிருக்கிற வரையும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "கெட்டகுலத்தில் பிறந்தவர்களும், ஆசையுள்ளவர்களும், கொடுமையுள்ளவர்களும் லஜ்ஜையில்லாதவர்களுமான மனிதர்கள் (உண்ட) கையில் ஈரமுள்ளவரையில் உன்னை அனுசரிப்பார்கள்" என்றிருக்கிறது.
எத்தரப்பைத் தேர்ந்தெடுப்பது என்ற கேள்வி எழும்போது, ஒரு தரப்பைத் தேர்ந்தெடுப்பதற்காகப் பலரை நீ கைவிடக் கூடாது. எனினும், ஒரே ஒரு மனிதன் சாதனைகள் பலவற்றின் விளைவாகப் பலரை விஞ்சியிருக்கும்போது, அந்த ஒருவனுக்காக நீ பலரைக் கைவிட வேண்டும்[3].(11) ஆற்றல், புகழைத் தரும் செயல்களில் அர்ப்பணிப்பு, நலம்சார்ந்த கட்டுப்பாடுகளை நோற்றல் ஆகியவையே மேன்மையின் குறியீடுகளாகக் கருதப்படுகின்றன.(12) மேலும், திறன் கொண்ட மனிதர்கள் அனைவரையும் கௌரவிப்பவன், எந்தத் தகுதியும் இல்லாதவனிடம் ஒருபோதும் போட்டியிடாதவன், காமம், அல்லது அச்சம், அல்லது கோபம், அல்லது பேராசை ஆகியவற்றின் காரணமாக ஒருபோதும் அறத்தைக் கைவிடாதவன்,(13) பணிவால் அலங்கரிக்கப்பட்டவன், பேச்சில் உண்மை நிறைந்தவன், மன்னிக்கும் இயல்பு கொண்டவன், தன் ஆன்மாவைக் கட்டுக்குள் கொண்டவன், கண்ணிய உணர்வு கொண்டவன், அனைத்துச் சூழ்நிலைகளையும் பயன்படுத்துபவன் ஆகியோர் உன் அமைச்சர்களாக நியமிக்கப்பட வேண்டும்.(14) ஓ! பிருதையின் மகனே {குந்தியின் மகனே யுதிஷ்டிரா} உயர்ந்த மரபுவழி, குருதித்தூய்மை, மன்னிக்கும் தன்மை {பொறுமை}, புத்திசாலித்தனம், ஆன்மத்தூய்மை, துணிச்சல், நன்றியுணர்ச்சி, உண்மை ஆகியன மேன்மை மற்றும் நல்லியல்பு ஆகியவற்றின் குறியீடுகளாகும்.(15) இவ்வழியில் தன்னை நடத்திக் கொள்ளும் ஞானி ஒருவன், தன் எதிரிகளிடம் உள்ள பகைமையை அகற்றி, அவர்களைத் தன் நண்பனாக்கிக் கொள்வான்.(16)
[3] கும்பகோணம் பதிப்பில், "பலஜனங்களின் கூட்டத்தை விலக்கி ஒரு மனிதனை விரும்புவது கூடாது. இரண்டில் ஒன்றை அடைய வேண்டிவந்தால், பல மனிதர்களைவிட ஒரு மனிதன் மிகச் சிறந்தவனாயிருப்பானாகில் அம்மனிதனுக்காகக் கூட்டத்தை விலக்கலாம்" என்றிருக்கிறது.
தன் ஆன்மாவைக் கட்டுக்குள் கொண்டவன், ஞானம் கொண்டவன், செழிப்பை விரும்புவனான ஒரு மன்னன், தன் அமைச்சர்களின் தகுதிகள் மற்றும் தவறுகளைக் கவனமாகக் கண்காணிக்க வேண்டும்.(17) செழிப்பையும், போட்டியாளர்களுக்கு மத்தியில் ஒளிர்வதையும் விரும்பும் மன்னன் ஒருவன், தன் நாட்டில் பிறந்தவர்களும், உயர் குடிபிறப்பு கொண்டவர்களும், பிழை செய்ய இயலாதவர்களும், ஒழுக்கக்கேடு மற்றும் அதுபோன்ற பிற தீமைகளின் களங்கம் படியாதவர்களும், நன்கு பரிசோதிக்கப்பட்டவர்களும், நல்ல குடும்பங்களைச் சார்ந்தவர்களும், கல்வி படைத்தவர்களும், அதே போன்ற அலுவல்களைச் செய்திருந்த தந்தைமார் மற்றும் பாட்டன்மாரிடம் இருந்து உதித்தவர்களும், பணிவால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான தன் நம்பிக்கைகுரிய நண்பர்களுடன் தொடர்புடைய மனிதர்களையே தன் அமைச்சர்களாகக் கொண்டிருக்க வேண்டும்[4].(18,19) செருக்கால் களங்கப்படாத நுண்ணறிவு, நல்ல மனோநிலை, சக்தி, பொறுமை, மன்னிக்கும் தன்மை, தூய்மை, பற்று, உறுதி, துணிவு ஆகியவற்றைக் கொண்டவர்களும், தகுதி மற்றும் பிழைகளுக்காக நன்கு பரிசோதிக்கப்பட்டவர்களும், வயதால் முதிர்ந்தவர்களாக இருப்பவர்களும் {அனுபவமிக்கோர்}, {பணிச்} சுமைகளைச் சுமக்கவல்லவர்களும், வஞ்சனையற்றவர்களுமாக இருப்போரில் ஐந்து பேரை, மன்னன் தன் காரியங்களைக் கவனித்துக் கொள்வதில் நியமிக்க வேண்டும்.(20,21) பேச்சில் ஞானம் கொண்டோர், வீரம் கொண்டோர், கடினமான காலங்களிலும் வளம் நிறைந்தோர், நற்பிறவி கொண்டோர், உண்மை நிறைந்தோர், குறியீடுகளை உணர்ந்து கொள்வோர், கொடூரமற்றோர்,(22) இடம் மற்றும் நேரத்திற்குத் தக்க தேவையானவற்றை அறிந்தோர், தங்கள் தலைவர்களுக்கு நன்மையை விரும்புவோர் ஆகியோர் நாட்டின் அனைத்து காரியங்களையும் கவனிக்கும் அமைச்சர்களாக மன்னனால் நியமிக்கப்பட வேண்டும்.(23)
[4] கும்பகோணம் பதிப்பில், "பராக்கிரமுள்ளவனும் கீர்த்தியைப் பெரிதாகக் கொண்டவனும் ஆசாரத்தில் நிலைபெற்றவனும் ஸமர்த்தர்களைப் பூஜிப்பவனும் பகைக்கத்தகாதவர்களைப் பகையாதவனும், காமம், பயம், கோபம், லோபம் இவைகளால் தர்மத்தை விடாதவனும், அகங்காரமற்றவனும் ஸத்தியவசனமுள்ளவனும், சக்தியுள்ளவனும், மனத்தை ஜயித்தவனும், மானமுள்ளவனுமான மனிதனை எல்லா ஸமயங்களிலும் பரீக்ஷை செய்து ஆலோசனை செய்யும் மந்திரியாகச் செய்து கொள்ள வேண்டும்" என்றிருக்கிறது.
சக்தியற்றவனாலும், நண்பர்களால் கைவிடப்பட்டவனாலும் விடாமுயற்சியுடன் ஒருபோதும் செயல்பட முடியாது. அத்தகு மனிதனை {அமைச்சனாக} நியமித்தால் அவன் கிட்டத்தட்ட அனைத்து தொழிலிலும் தோல்வியுறவே செய்வான்.(24) குறைந்த கல்வி கொண்ட ஓர் அமைச்சர், நற்பிறவி கண்டவராகவும், அறம், பொருள் மற்றும் இன்ப காரியங்களில் கவனத்துடனும் இருந்தாலும், அவர் சரியான செயல்களைச் செய்யத் தவறுவார்.(25) அதேபோலவே, தாழ்ந்த மரபுவழியில் வந்த ஒரு மனிதன், பெரும் கல்வியைக் கொண்டவனாக இருந்தாலும், அவன் வழிகாட்டியில்லாத ஒரு குருடரைப் போல, திறன்மிக்க இயக்கம் மற்றும் முன்னறிதிறனுக்கான தேவை இருக்கும் செயல்கள் அனைத்திலும் எப்போதும் தவறு செய்வான்.(26) மேலும், உறுதியற்ற நோக்கங்களை {நிலையற்ற எண்ணங்களைக்} கொண்ட ஒரு மனிதன், நுண்ணறிவு, கல்வி ஆகியவற்றைக் கொண்டிருந்தாலும், வழிமுறைகளை அறிந்தவனாக இருந்தாலும் நீண்ட காலம் {தேவைப்படும் காரியங்களில்} வெற்றியடையமுடியாது.(27) தீய இதயம் கொண்டவனும், கல்வி இல்லாதவனுமான ஒரு மனிதன், ஒரு வேலையைச் செய்யத் தொடங்கலாம், ஆனால், அவன் தனது பணியின் விளைவுகளை உறுதிசெய்வதில் தவறுவான்.(28)
ஒரு மன்னன், தன்னிடம் அர்ப்பணிப்பில்லாத அமைச்சனிடம் ஒருபோதும் நம்பிக்கை வைக்கக்கூடாது. எனவே, அவன் தன்னிடம் அர்ப்பணிப்பில்லாத அமைச்சனிடம் ஒருபோதும் தன் ஆலோசனைகளை வெளிப்படுத்தக்கூடாது.(29) அத்தகு தீய அமைச்சன், மன்னனின் பிற அமைச்சர்களுடன் சேர்ந்து, காற்றின் உதவியுடன் ஏற்பட்ட வழிகளில் மரத்தினுள் சென்று அஃதை எரித்துவிடும் நெருப்பைப் போலவே தன் தலைவனை அழித்துவிடுவான்.(30) ஒரு தலைவன், ஒரு நாள் கோபத்திற்கு ஆட்பட்டு ஒரு பணியாளனை அவனது அலுவலில் இருந்து இறக்கலாம் {பதவி நீக்கலாம்}, அல்லது சீற்றத்துடன் கடும் வார்த்தைகளில் நிந்திக்கவும் செய்யலாம், அவனே மீண்டும் {ஒருநாள்} அதிகாரத்தில் அமர்த்தவும் செய்யலாம்.(31) தலைவனுக்கு அர்ப்பணிப்புள்ள ஒரு பணியாளனால் மட்டுமே இவ்வாறு நடத்தப்படுவதைத் தாங்கிக் கொள்ளவும், மன்னிக்கவும் முடியுமேயன்றி வேறு யாராலும் முடியாது. சில வேளைகளில் அமைச்சர்களும் தங்கள் அரசத் தலைவர்களால் அதிகம் புண்படுத்தப்படுகிறார்கள்.(32) அவர்களில், தன் தலைவனுக்கு நன்மை செய்யும் விருப்பத்தால் தன் கோபத்தை அடக்கிக் கொள்பவனும், மன்னனின் இன்பத்திலும், துன்பத்திலும் பங்கு கொள்பவனுமான ஒருவனிடம் மன்னன் தன் காரியங்கள் அனைத்திலும் ஆலோசனை பெற வேண்டும்.(33) தன் தலைவனிடம் அர்ப்பணிப்பு கொண்டவனாகவும், ஞானியாகவும், எண்ணற்ற நற்குணங்களால் அலங்கரிக்கப்பட்டவனாகவும் இருந்தாலும்கூட, குறுகிய இதயம் கொண்ட ஒரு மனிதனிடம் மன்னன் ஒருபோதும் எதையும் ஆலோசிக்கக்கூடாது.(34)
எதிரியுடன் கூட்டு சேர்பவனும், மன்னனின் குடிமக்களுக்கான நன்மையைக் கருத்தில் கொள்ளாதவனுமான ஒருவன் எதிரியாகவே அறியப்பட வேண்டும். மன்னன் அவனோடு ஒருபோதும் ஆலோசிக்கூடாது.(35) கல்வியற்றவனும், தூய்மையற்றவனும், செருக்கால் களங்கமடைந்தவனும், மன்னனின் எதிரிகளுடன் கூட்டு சேர்பவனும், தற்புகழ்ச்சியில் ஈடுபடுபவனும், நட்புணர்வற்றவனும், கோபம் நிறைந்தவனும், பேராசை கொண்டவனுமான ஒருவனிடம் மன்னன் ஆலோசிக்கக் கூடாது.(36) அயலானான ஒருவன், மன்னனிடம் அர்ப்பணிப்பு கொண்டவனாகவும், கல்வி மானாகவும் இருந்தாலும் கூட, அவன் மன்னனால் கௌரவிக்கப்படலாம், வாழ்வாதாரத்திற்குத் தேவையான பணிகளை ஒப்படைக்கப்பட்டு நிறைவு செய்யப்படலாம், ஆனால் மன்னன் ஒருபோதும் தன் காரியங்களைக் குறித்து அவனிடம் ஆலோசிக்கக்கூடாது.(37) எந்த மனிதனின் தந்தை அரசாணையின்படி அநீதியாகத் தண்டிக்கப்பட்டானோ, அவனுக்கு மன்னன் கௌரவத்தை அளித்து, வாழ்வாதாரத்திற்கான பணிகளை அவனிடம் ஒப்படைத்தாலும்கூட, அவனிடம் ஆலோசிக்கக்கூடாது.(38) சிறிய மீறலுக்காகச் செல்வம் பறிமுதல் செய்யப்பட்ட ஒரு நலன் விரும்பி, அனைத்து சாதனைகளையும் கொண்டவனாகவே இருந்தாலும் கூட, மன்னன் அவனிடம் ஆலோசிக்கக்கூடாது.(39)
ஞானம், நுண்ணறிவு, கல்வி ஆகியவற்றைக் கொண்டவனும், தன் நாட்டிலேயே பிறந்தவனும், தூய்மையானவனும், தன் செயல்கள் அனைத்திலும் நீதியுடன் இருப்பவனுமான ஒரு மனிதனே, மன்னன் ஆலோசிக்கத்தகுந்தவன் ஆவான்.(40) அறிவும், விவேகமும் கொண்டவனும், நண்பர்கள் மற்றும் எதிரிகளின் மனோநிலைகளை அறிந்தவனும், மன்னன் தன்னைப் போலவே கருதிக்கொள்ளும் நண்பனுமான ஒருவன், ஆலோசனைக்குத் தகுந்தவனாவான்.(41) பேச்சில் உண்மையும், பணி மற்றும் மென்மை கொண்டவனும், தலைமுறை தலைமுறையாக மன்னனின் பணியாளுமான ஒருவன், ஆலோசனைக்குத் தகுந்தவனாவான்.(42) நிறைவுடையவனும், கௌரவமிக்கவனும், உண்மை நிறைந்தவனும், கண்ணியமானவனும், தீமையையும், தீய மனிதர்களையும் வெறுப்பவனும், கொள்கை மற்றும் காலத்தின் தேவைகள் ஆகியவற்றை அறிந்தவனும், துணிவுமிக்கவனுமான ஒருவன் ஆலோசனைக்குத் தகுந்தவனாவான்.(43)
ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, இணங்கச் செய்வதன் மூலம் மனிதர்கள் அனைவரையும் வெல்லத்தகுந்த ஒருவனிடம், தண்டனை அறிவியலின் ஆணைப்படி ஆள விரும்பும் ஒரு மன்னன் ஆலோசிக்க வேண்டும்.(44) எவனுடைய நியாயமான நடவடிக்கையின் காரணமாக அவன் மீது தலைநகரம் மற்றும் மாகாணங்களில் வசிப்போர் நம்பிக்கை வைத்திருக்கிறார்களோ, எவன் போரிடத் தகுந்தவனோ, எவன் கொள்கைவிதிகளை அறிந்தவனோ, அவன் மன்னனால் ஆலோசனை கேட்கப்படத் தகுந்தவனாவான்.(45) எனவே, அத்தகு பண்புகளைக் கொண்ட மனிதர்கள், அனைவரின் மனோநிலைகளையும் அறிந்தவர்களும், உயர்ந்த செயல்களைச் செய்ய விரும்புபவர்களுமான மனிதர்கள் மன்னனால் கௌரவிக்கப்பட்டு, அவனது அமைச்சர்களாக்கப்பட வேண்டும். அவர்களுடைய எண்ணிக்கை மூன்றுக்கும் குறைவாக இருக்கக் கூடாது[5].(46)
[5] "த்ரையவராஹம் tryavaraaah என்பது "மூன்றுக்கும் குறையாமல்" என்று நீலகண்டரால் விளக்கப்படுகிறது. பொதுவாக இஃது ஐந்து எனவே விதிக்கப்படுகிறது. எப்படியும் இது மூன்றுக்கும் குறைவானதாக இருக்கக்கூடாது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "பட்டணத்திலுள்ளவர்களும், கிராமத்திலுள்ளவர்களும் தர்மப்படி எந்த மனிதனிடம் நம்பிக்கையடைந்திருக்கிறார்களோ அவ்விதமிருப்பவனும் யுத்தத்தில் சக்தியுள்ளவனும், நீதியில் விசேஷமான அறிவுள்ளவனுமான மனிதன் ஆலோசனைகளுக்குத் தக்கவன். ஆகையால் இவ்விதக் குணங்கள் யாவும் பொருந்தியவர்களும், நன்கு பூஜிக்கப்பட்டவர்களும் அரசன் அமாத்தியன் முதலிய பிரகிருதியை அறிந்தவர்களும் பெருமையை விரும்புகிறவர்களுமான மந்திரிகள் மூன்றுபேர்களுக்குக் குறையாமலிருக்க வேண்டும்" என்றிருக்கிறது.
அமைச்சர்கள், தங்கள் தலைவர்களின் குறைகள், தங்கள் மற்றும் குடிமக்களின் குறைகள் மற்றும் தங்கள் தலைவனுடைய எதிரியின் குறைகளைக் காண நியமிக்கப்பட வேண்டும். அமைச்சர்களிடம் இருந்து பாயும் கொள்கை ஆலோசனைகளே நாட்டின் வேராகும், மேலும் அது நாடு எனும் அந்த மூலத்தில் இருந்தே வளர்கிறது.(47) அமைச்சர்கள், தங்கள் தலைவனுடைய எதிரிகள் தங்கள் குறைகளைக் காண இயலாத வகையில் நடந்து கொள்ள வேண்டும். மறுபுறம், அவர்களது குறைகள் வெளிப்படையாகத் தெரிந்தால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். ஓர் ஆமை தனது அங்கங்களை ஓட்டுக்குள் இழுத்துக் கொள்வதைப் போலவே, அமைச்சர்கள் தங்கள் ஆலோசனைகளைப் பாதுகாக்க வேண்டும். மேலும் அவர்கள் தங்கள் குறைகளையும் மறைக்க வேண்டும்.(48) தங்கள் ஆலோசனைகளை மறைப்பதில் வெல்லும் ஒரு நாட்டின் அமைச்சர்கள் விவேகிகள் என்று சொல்லப்படுகிறார்கள். ஆலோசனைகள் மன்னனின் கவசமாகவும், குடிமக்கள் மற்றும் அதிகாரிகளின் அங்கங்களாகவும் இருக்கின்றன.(49) ஒரு நாடு, தன் ஒற்றர்கள் மற்றும் இரகசிய உளவாளிகளிடமே தன் வேரைக் கொண்டுள்ளது, அதன் பலம் கொள்கைகளின் ஆலோசனையிலேயே இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. தலைவர்களும், அமைச்சர்கள், செருக்கையும் கோபத்தையும், பகத்தையும், பொறாமையையும் அடக்கி, ஒருவரிடம் இருந்து ஒருவர் ஆதரவைப் பெற்று, ஒருவரையொருவர் பின்பற்றினால் அவர்கள் இருவரும் மகிழ்ச்சியடைவார்கள்.(50)
ஒரு மன்னன், ஐந்து வகை வஞ்சகங்களில் இருந்து விடுபட்ட அமைச்சர்களிடமே ஆலோசிக்க வேண்டும்[6].(51) முதல் தருணத்தில், மன்னனுடன் ஆலோசித்தவர்களுள் மூவரின் வெவ்வெறு கருத்துகளை நன்கு உறுதிப்படுத்திக் கொண்டு, அதன் பிறகு உறுதியான தீர்மானத்தை அடையும் மன்னன், தன் ஆசானிடம் சென்று அந்தக் கருத்துகளையும், தன் சொந்தக் கருத்தையும் சொல்ல வேண்டும். அவனது ஆசான், அறம், பொருள் மற்றும் இன்பம் குறித்த அனைத்து காரியங்களையும் நன்கு அறிந்த ஒரு பிராமணராக இருக்க வேண்டும். உறுதியான தீர்மானத்துடன் அவரிடம் செல்லும் மன்னன், குவிந்த மனத்தோடு அவரது கருத்தையும் கேட்க வேண்டும். மன்னன் அவரோடு சேர்ந்து ஒரு தீர்மானத்திற்கு வந்தபிறகு, எந்தப் பற்றும் இல்லாமல் அதை நடைமுறைப்படுத்த வேண்டும்.(52,53) ஆலோசனை எனும் அறிவியலின் தீர்மானங்களை நன்கறிந்தோர், மன்னர் எப்போதும் இவ்வழியிலேயே தங்கள் ஆலோசனைகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்கின்றனர். ஆலோசனைகளை இவ்வழியில் தீர்மானிக்கும் அவர்கள், குடிமக்கள் அனைவரையும் வெல்வதற்காக அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும்.(54)
[6] கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில், "மனத்தாலும், வாக்காலும், சரீரத்தாலும் இவைகளில் இரண்டாலும் மூன்றாலும் செய்யப்படுவன. உதாரணம் துரியோதனன் மனோவாக்கு காயங்களால் அரக்கு மாளிகையைக் கொளுத்தச் செய்தது. திருதராஷ்டிரன் மனத்தினால் பாண்டவர்களைத் துரோஹம் செய்தது. யுதிஷ்டிரர் துரோணவதத்தில் வாக்கினால் சொன்னது. அஸ்வத்தாமா ஸௌப்திகவதத்திற் கபடம் செய்தது. பீமன் காய்யிகவாசிகத்தினால் துரோண வதத்தில் செய்தது" என்றிருக்கிறது.
மன்னன் தன் ஆலோசனைகளைச் செய்யும் இடத்தில், உயரம் குறைந்தோர் {குள்ளர்கள்}, முதுகு வளைந்தோர் {கூனர்கள்}, மெலிந்த உடல் வாகைக் கொண்டவர்கள், முடமானோர், பார்வையற்றோர் {குருடர்கள்}, மூடர்கள், பெண்கள், அலி ஆகியோரில் எவரும் இருக்கக்கூடாது. அங்கே எதுவும் முன்போ, பின்போ, மேலோ, கீழோ, குறுக்காகவோ நகர்ந்து கொண்டிருக்கக்கூடாது.(55) மன்னன், படகில் ஏறியோ, புல், புதர் அற்ற, சுற்றிலும் தெளிவாகத் தெரியக்கூடிய நிலங்களைக் கொண்ட திறந்தவெளிக்குச் சென்றோ, பேச்சு மற்றும் தோற்றத்தில் குறைகளைத் தவிர்த்து உரிய நேரத்தில் ஆலோசனைகளைச் செய்ய வேண்டும்" என்றார் {பீஷ்மர்}.(56)
சாந்திபர்வம் பகுதி – 83ல் உள்ள சுலோகங்கள் : 56
ஆங்கிலத்தில் | In English |