Vamadeva and Vasumanas! | Shanti-Parva-Section-92 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 92)
பதிவின் சுருக்கம் : செங்கோலின் சிறப்பு மற்றும் கொடுங்கோலின் இழிவு ஆகியவை குறித்து வாமதேவர் வசுமனசுக்குச் சொன்னதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "அறத்தின் பாதையைப் பின்பற்ற விரும்பும் ஒரு நீதிமிக்க மன்னன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? ஓ! மனிதர்களில் முதன்மையானவரே, ஓ! பாட்டா {பீஷ்மரே}, கேட்கும் எனக்குப் பதில் அளிப்பீராக" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இது தொடர்பாக, பெரும் நுண்ணறிவைக் கொடையாகக் கொண்டவரும், பழங்காலத்தில் பாடப்பட்ட அனைத்தின் உண்மையை அறிந்தவருமான வாமதேவர் என்ன சொன்னார் என்பது பழங்கதையில் குறிப்பிடப்படுகிறது.(2) ஒரு காலத்தில், அறிவு, மனோவுறுதி, தூய நடத்தை ஆகியவற்றைக் கொண்ட {கோசல நாட்டு} மன்னன் வாசுமனஸ், உயர்ந்த தவத்தகுதியை உடைய பெரும் முனிவர் வாமதேவரிடம்,(3) "ஓ! புனிதமானவரே, எந்த நடத்தையைப் பின்பற்றுவதால் நான் எனக்கு அளிக்கப்பட்ட கடமைகளில் இருந்து வீழாமல் இருப்பேன் என்பதை, முக்கியத்துவமும் அறமும் நிறைந்த வார்த்தைகளில் எனக்குக் கற்பிப்பீராக" என்று கேட்டான்.(4) தவசிகளில் முதன்மையானவரும், பெரும் சக்தி கொண்டவருமான வாமதேவர், நகுஷனின் மைந்தனான யயாதியைப் போலச் சுகமாக வீற்றிருந்த அந்தத் தங்க நிறத்தோனிடம் {வசுமனஸிடம்} பின்வருமாறு சொன்னார்.(5)
வாமதேவர் {வாசுமனஸ்}, "நீ நீதியுடன் நடந்து கொள்வாயாக. நீதிக்கும் {அறத்துக்கும்} மேன்மையானது ஏதும் இல்லை. அறம் நோற்கும் மன்னர்கள் மொத்த உலகையும் வெற்றி கொள்வதில் வெல்கிறார்கள்.(6) தன் நோக்கங்களைச் சாதிப்பதில் எதிர்பார்க்கும் விளைவைத் தரவல்ல வழிமுறைகளையே நீதியாகக் கருதி, நல்லோரின் ஆலோசனைகளின்படி செயல்படும் மன்னன், நீதியுடன் சுடர்விடுகிறான்.(7) அறத்தை அலட்சியம் செய்து, முரட்டு பலத்துடன் செயல்பட விரும்பும் மன்னன் விரைவில் அறத்திலிருந்து விழுந்து, அறம் மற்றும் பொருள் ஆகிய இரண்டையும் இழக்கிறான்.(8) குற்றமுள்ளவனும், பாவியுமான ஓர் அமைச்சனின் ஆலோசனைகளின்படி செயல்படும் மன்னன், அறத்தை அழிப்பவனாகி, தன் குடும்பம் அனைத்துடன் சேர்த்து, தன் குடிமக்களால் கொல்லப்படத் தகுந்தவனாகிறான். உண்மையில், அவன் மிக விரைவில் அழிவை அடைவான்.(9) அரசகலையின் கடமைகளை வெளிப்படுத்த இயலாதவனும், தன் செயல்பாடுகள் அனைத்திலும் உறுதியின்மையால் {சபலத்தால்} ஆளப்படுபவனும், தற்புகழ்ச்சியில் ஈடுபடுபவனுமான மன்னன் மொத்த பூமியின் ஆட்சியாளனாகவே இருந்தாலும், விரைவில் அழிவை அடைவான்.(10)
மறுபுறம், செழிப்பை விரும்புபவனும், வன்மமற்றவனும், புலன்களைக் கட்டுப்படுத்தியவனும், நுண்ணறிவைக் கொடையாகக் கொண்டவனுமான மன்னன், நூற்றுக்கணக்கான ஆறுகளால் நிரப்பப்பட்டுப் பெருகும் பெருங்கடலைப் போல வளமையில் தழைத்தோங்குவான்.(11) அவன் அறம், இன்பம், செல்வம், நுண்ணறிவு மற்றும் நண்பர்கள் ஆகியவற்றில் நிறைவு {போதுமான அளவுக்குக்} கொண்டவனாகத் தன்னை ஒருபோதும் கருதக்கூடாது[1].(12) உலகின் ஒழுக்கம் இவற்றைச் சார்ந்தே இருக்கிறது. இந்த ஆலோசனைகளைக் கேட்பதால் ஒரு மன்னன், புகழ், சாதனைகள், செழிப்பு மற்றும் குடிமக்களை அடைகிறான்.(13) அறத்திற்குத் தன்னை அற்பணித்துக் கொண்டு, இத்தகு வழிமுறைகளின் மூலம் அறம் மற்றும் செல்வத்தை அடைய முனைபவனும், தன் திட்டங்கள் அனைத்திலும் அவற்றின் நோக்கங்கள் குறித்துச் சிந்தித்தபிறகு தொடங்குபவனுமான மன்னன், பெருஞ்செழிப்பை அடைவதில் வெல்கிறான்.(14)
[1] கும்பகோணம் பதிப்பில், "பூபதியே, எப்பொழுதும், ‘தர்மத்தாலும், காமத்தாலும், பொருளாலும், புத்தியாலும், ஆலோசனையாலும் பூர்ணமாயிருக்கிறேன்’ என்றெண்ணக்கூடாது" என்றிருக்கிறது.
கஞ்சனும், பற்றில்லாதவனும், முறையற்ற தண்டனைகளால் தன் குடிமக்களைப் பீடிப்பவனும், தன் செயல்பாடுகளில் முரடனுமாம மன்னன் விரைவில் அழிவை அடைகிறான்.(15) நுண்ணறிவைக் கொடையாகக் கொள்ளாத மன்னன், தன் குற்றங்களைக் காணத் தவறுகிறான். அவன் இம்மையில் புகழ்க்கேட்டிலும், மறுமையில் நரகிலும் மூழ்குகிறான்.(16) மன்னன், கௌரவிக்கத் தகுந்தவர்களுக்கு அஃதை அளித்து, இனிமையான பேச்சின் மதிப்பை உணர்ந்து அனைத்து சந்தர்ப்பங்களிலும் அப்படியே பேசினால், அவனுக்கு ஏற்படும் பேரிடரைத் குடிமக்கள் தங்களுக்கே ஏற்பட்டதாகக் கருதி, அதிலிருந்து அவனை விடுவிப்பார்கள்.(17) அறவழிகள் போதிப்பவர் எவரும் இல்லாதவனும், பிறரின் ஆலோசனைகளை ஒருபோதும் கேளாதவனும், உறுதியற்ற வழிமுறைகளின் மூலம் செல்வத்தை அடைய முனைபவனுமான மன்னன், நீடித்த மகிழ்ச்சியை அனுபவிப்பதில் ஒருபோதும் வெல்வதில்லை.(18) மறுபுறம், அறம் தொடர்புடைய காரியங்களில் தன் ஆசானின் அறிவுரைகளைக் கேட்பவனும், தன் நாட்டில் நடக்கும் நிகழ்வுகளைத் தானே கண்காணிப்பவனும், அனைத்தையும் அடைவதில் அறக்கருத்துகளால் வழிநடத்தப்படுபவனுமான மன்னன், நீண்டகால மகிழ்ச்சியை அனுபவிப்பதில் வெல்கிறான்" என்றார் {வாமதேவர்}.
சாந்திபர்வம் பகுதி – 92ல் உள்ள சுலோகங்கள் : 19
ஆங்கிலத்தில் | In English |