Royal duties as said by Utatthya! | Shanti-Parva-Section-91 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 91)
பதிவின் சுருக்கம் : மன்னன் நீதியுடன் செயல்படாவிட்டால் நடப்பதென்ன? பலவீனமே பெரியது என்பதேன்? துன்புறுபவனின் கண்ணீர் செய்வதென்ன? மன்னனின் கடமைகள் என்னென்ன? மன்னனின் நடத்தை இருக்க வேண்டியதெவ்வாறு என்பது குறித்து, உதத்ய முனிவர் மன்னன் மாந்தாதாவுக்குச் சொன்னதைப் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
உதத்தியர் {மன்னன் மந்தாதாவிடம்}, "மேகங்களின் தேவன் {இந்திரன்}, {உரிய} காலத்தில் மழையைப் பொழிந்து, அதே போல, மன்னனும் அறம்சார்ந்த செயல்பட்டால் விளையும் செழிப்பு, குடிமக்களைப் புகழில் நிலைக்கச் செய்யும்.(1) துணியின் சாயத்தை வெளுக்க விடாமல் அழுக்கை அகற்றத் தெரியாத வண்ணான், தன் தொழில் மிகவும் திறனற்றவன் ஆவான்.(2) பிராமணர்களிலோ, க்ஷத்திரியர்களிலோ, வைசியர்களிலோ எந்த மனிதனும், தன் வகைக்கு உரிய கடமைகளில் இருந்து வீழ்ந்து சூத்திரனானால் அவன், உண்மையில் அத்தகு வண்ணானுடன் ஒப்பிடத்தகுந்தவனே. உடல்சார்ந்த தொண்டு சூத்திரனையும்; உழவு வைசியனையும், தண்டனை அறிவியல் க்ஷத்திரியனையும், பிரம்மச்சரியம், தவங்கள், மந்திரங்கள், உண்மை ஆகிய பிராமணனையும் பிணைக்கின்றன.(4) பிறரின் நடத்தையில் உள்ள பிழைகளைத் திருத்தவும், வண்ணானைப்போல அவற்றைத் தூய்மையாக்கவும் அறிந்த க்ஷத்திரியனே உண்மையில் அவர்களின் தந்தையாகவும், அவர்களது மன்னனாகவும் இருக்கத் தகுந்தவனாவான்.(5)
[1] "உதத்தியர் பேசுகிறார், மாந்தாதா கேட்கிறான் என்பதைக் கண்டால் பாரதரிஷப {பாரதக்குலத்தின் காளையே} Bhararshabha என்பது தவறான இடத்தில் அமைந்திருக்கிறது என்பதைக் காணலாம். மன்னன் நீதியுடன் ஆட்சி செய்தால் கிருத காலம் தொடங்கும்; மறுபுறம் அவனே பாவகரமாகச் செயல்பட்டால் அவன் கலி காலத்தை உண்டாகச் செய்கிறான் என்பதால் மன்னனே காலம் உண்டாவதற்கான காரணம் என்பது இந்தச் சுலோகத்தின் பொருளாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். மாந்தாதா இக்ஷவாகு குலத்தவன், யுவனாஸ்வனின் மகன்.
மன்னன் நீதியற்றவனாக மாறும்போது, யானைகள், குதிரைகள், பசுக்கள், ஒட்டகங்கள், கோவேறு கழுதைகள், கழுதைகள் மற்றும் பிற விலங்குகள் அனைத்தும் தங்கள் உடலுறுதியை இழக்கும்.(11) ஓ! மாந்தாத்ரி, பலவீனரைப் பாதுகாக்கும் நோக்கிலேயே {பிரம்மன்} படைப்பாளன் (மன்னனின் வடிவில்) பலத்தை உண்டாக்கினான். பலவீனத்தைச் சார்ந்தே அனைத்தும் இருப்பதால், உண்மையில், அதுவே பெரியது[2].(12) அனைத்து உயிரினங்களும் மன்னனை வழிபடுகின்றன. அனைத்து உயிரினங்களும் மன்னனுக்குப் பிள்ளைகளைப் போன்றவர்களே. எனவே, ஓ! ஏகாதிபதி {மந்தாதா}, நீதியில்லாதவனானால், அனைத்து உயிரினங்களும் துயரடையும்.(13) பலவீனர், முனிவர் ஆகியோரின் கண்கள் மற்றும் கடும்நஞ்சுமிக்கப் பாம்பின் கண்கள் ஆகியவை பொறுத்துக்கொள்ள முடியாதவையாகக் கருதப்பட வேண்டும். எனவே, பலவீனரின் அருகே (பகையுடன்) செல்லாதே.(14) பலவீனர்கள் எப்போதும் அவமதிக்கப்படத் தகாதவர்களாக உன்னால் கருதப்பட வேண்டும். பலவீனரின் கண்கள் உன்னையும், உன் உறவினர்களையும் எரித்துவிடாமல் இருக்கக் கவனம் கொள்வாயாக.(15)
[2] "எவன் பலவீனரைப் பாதுகாக்கிறானோ அவன் சொர்க்கத்தை வெல்கிறான், அதே வேளையில் பலவீனரைத் துன்புறுத்துபவன் நரகத்தில் வீழ்கிறான். எனவே, பலவீனம் பெரியதே. அதன் பலம் ஒருவனைச் சொர்க்கத்திற்கும், நரகத்திற்கும் வழிநடத்தவல்லது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பலவீனரின் கண்களால் எரிக்கப்பட்ட ஒரு குலத்தில் பிள்ளைகள் பிறப்பதில்லை. அத்தகு கண்கள் குலத்தின் வேரையே அழித்துவிடும். எனவே, பலவீனரின் அருகே (பகையுடன்) செல்லாதே.(16) பலவீனரால் எரிக்கப்படும் பலம் முற்றிலும் அழிவை அடைகிறது என்பதால் எந்தப் பெரும்பலத்தையும்விடப் பலவீனமே பலமிக்கது.(17) அவமதிக்கபடும், அல்லது தாக்கப்படும் மனிதன் ஒருவன், துணைக்காகக் கதறியும் பாதுகாவலனை அடையத் தவறினால், தெய்வீகத் தண்டனை மன்னனை அடையும், அஃதுவே அவனுக்கு அழிவையும் கொண்டுவரும்.(18) ஓ! ஐயா, அதிகாரத்தை அனுபவிக்கும்போது, பலவீனரின் செல்வத்தை ஒருபோதும் அபகரியாதே. சுடர்மிக்க நெருப்பைப் போன்ற பலவீனரின் கண்கள் உன்னை எரித்துவிடாதிருப்பதில் கவனம் கொள்வாயாக.(19) பொய்மையால் பீடிக்கப்பட்டு அழுது கொண்டிருக்கும் மனிதனின் கண்ணீரானது, அந்தப் பொய்களைச் சொன்னோரின் பிள்ளைகளையும், விலங்குகளையும் கொன்றுவிடும்.(20)
இழைக்கப்பட்ட பாவச்செயல் ஒரு பசுவைப் போல உடனடி பலன்களை உண்டாக்காது[3]. பாவமிழைத்தவனிடம் அப்பலன் தென்படவில்லையென்றால், அஃது அவனது மகன், அல்லது மகனின் மகன், அல்லது மகளின் மகனிடம் தென்படும்.(21) ஒரு பலவீனன் பாதுகாவலனை அடையத் தவறும்போது, தெய்வீகத் தண்டனை என்ற பெரும் தண்டம் (மன்னனின் மீது) {நாட்டின் மீது} பாயும்.(22) ஒரு மன்னனின் குடிமக்கள் அனைவரும் (துன்பத்திற்கு ஆட்பட்டு) பிராமணர்களைப் போலப் பிச்சையெடுக்க நேர்ந்தால், அந்தப் பிச்சையெடுக்கும் நிலையானது மன்னனுக்கு அழிவைக் கொண்டுவரும்.(23) மாகாணங்களில் உள்ள மன்னனின் அதிகாரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து நீதியில்லாமல் செயல்பட்டால், அம்மன்னன் தன் நாட்டில் கலப்படமில்லாத தீமையைக் கொண்டு வருகிறான் என்று சொல்லப்படுகிறது.(24) மன்னனின் அதிகாரிகள், நியாயமில்லாத வழிமுறைகளின் மூலமோ, காமம் மற்றுப் பேராசையால் செயல்பட்டோ, கருணையை வேண்டும் பரிதாபகரமான மனிதர்களிடம் இருந்து செல்வத்தைப் பறிக்கும்போது, அந்த மன்னனுக்கும் நிச்சயம் பேரழிவு ஏற்படும்.(25)
[3] "பசுவைப் பாதுகாப்பவன், பாலுக்காக அந்தப் பசுக் கன்றீனும் வரை பொறுத்திருக்க வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஒரு பெரிய மரம், முதலில் தன் வாழ்வைத் தொடங்கிப் பெரும் அளவுகளில் வளர்கிறது. அதன்பின், எண்ணற்ற உயிரினங்கள் வந்து அதனிடம் உறைவிடத்தை நாடுகிறார்கள். எனினும், அது வெட்டப்படும்போதோ, காட்டுத்தீயால் எரிக்கப்படும்போதோ, அதனிடம் உறைவிடம் கொண்டவை அனைத்தும் வீடுகளற்றதாகின்றன[4].(26) நாட்டில் வசிப்போர், அறச்செயல்களையும், அறச்சடங்குகள் அனைத்தையும் செய்து, மன்னனின் நற்குணங்களை மெச்சும்போது, அவன் செல்வாக்கை அறுவடைசெய்கிறான். மறுபுறம், குடிமக்கள் அறியாமை கொண்டோராக அறத்தைக் கைவிட்டு, நீதியில்லாமல் நடந்து கொண்டால், அம்மன்னன் துன்பத்துக்கு ஆளாவான்.(27) என்ன செயல் செய்வார்கள் என்று அறியப்பட்ட பாவிகள், (அவர்களது குற்றங்களுக்காகத் தண்டிக்கப்படாமல்) நல்லோர் மத்தியில் உலவ அனுமதிக்கப்பட்டால், அந்த நாடுகளின் ஆட்சியாளர்களைக் கலி அடையும். தீயவர்கள் அனைவரையும் மன்னன் தண்டிக்கும்போது, அவனது நாட்டில் செழிப்பு தழைத்தோங்கும்.(28) எந்த மன்னன், தன் அமைச்சர்களுக்கு உரிய கௌரவங்களை அளித்து, கொள்கை நடைமுறைகளிலும், போர்களிலும் அவர்களை நியமிக்கிறானோ, அவனது நாடு நிச்சயம் தழைத்தோங்கும்.(29) எந்த மன்னன், நற்செயல்கள் மற்றும் நற்சொற்கள் அனைத்தையும் முறையாகக் கௌரவிக்கிறானோ, அவன் பெருந்தகுதியை {பெரும்புண்ணியத்தை} ஈட்டுவதில் வெல்கிறான்.(30)
[4] "ஒரு மன்னனுக்கு அழிவு நேர்ந்தால், அவனது அதிகாரிகளும் தப்ப முடியாது என்பதே இங்குப் பொருள் என நான் நினைக்கிறேன்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பிறருடன் பகிர்ந்து கொண்ட பிறகு நல்ல பொருட்களை அனுபவிப்பது, அமைச்சர்களுக்கு உரிய கௌரவங்களை அளிப்பது, பலம் எனும் போதையில் இருப்போரைஅடக்கி வைத்தல் ஆகியவையே மன்னனின் பெருங்கடமை என்று சொல்லப்படுகிறது.(31) சொற்கள், உடல், செயல்களால் மனிதர்கள் அனைவரையும் பாதுகாத்து, (குற்றமிழைத்தால்) தன் மகனேயானாலும் ஒருபோதும் மன்னிக்காமல் இருப்பதும் மன்னனின் பெரும் கடமையாகும்.(32) பொருட்களைப் பலவீனருடன் பகிர்ந்து கொண்டு பராமரித்து, அதன்மூலம் அவர்களது பலத்தை அதிகரிப்பதும் மன்னனின் கடமையாகும்.(33) நாட்டைப் பாதுகாப்பது, கள்வர்களை அழிப்பது, போரில் வெல்வது ஆகியன மன்னனின் கடமையாகும்.(34) செயலாலோ, சொல்லாலோ அன்புக்குரியவனே கூடக் குற்றமிழைத்தாலும், அவனை ஒரு போதும் மன்னிக்காததும் மன்னனின் கடமையாகும்.(35)
உறைவிடம் வேண்டுவோருக்குப் பாதுகாப்பளித்துத் தன் சொந்த பிள்ளைகளைப் போலவே தன் மக்களைப் பாதுகாக்கும் அவன், ஒருவனுக்கு உரிய கௌரவங்களை ஒருபோதும் பறிக்காமல் இருப்பதும் மன்னனின் கடமையாகும்[5].(36) கொடைகளால் நிறைவுபெறும் வேள்விகளில், காமத்தையும், பொறாமையையும் அடக்கி, அர்ப்பணிப்புமிக்க இதயத்துடன் தேவர்களைத் துதிப்பதும் மன்னனின் கடமையாகும்.(37) துன்புறுவோர், ஆதரவற்றோர், முதியோர் ஆகியோரின் கண்ணீரைத் துடைத்து, அவர்களை மகிழ்ச்சியடையச் செய்வதும் மன்னனின் கடமையாகும்.(38) நண்பர்களை வளர்ப்பதும், எதிரிகளைப் பலவீனப்படுத்தவதும், நல்லோரைக் கௌரவிப்பதும் மன்னனின் கடமையாகும்.(39) உண்மையின் கடப்பாடுகளை உற்சாகமாக நோற்பதும், எப்போதும் நிலக்கொடைகள் அளிப்பதும், விருந்தினர்களை உபசரிப்பதும், சார்ந்தோரை ஆதரிப்பதும் மன்னனின் கடமையாகும்.(40)
[5] "சில உரைகளில் சாரனிகான் Saranikaan என்றிருப்பதை, பயணங்கள் மேற்கொள்ளும் பயணிகள் என்று பொருள் கொள்ள வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். அந்த உரைகளின் படி ஒருவன் என்று வருமிடத்தில் பயணத்தில் இருக்கும் வணிகன் என்று பொருள் கொள்ள வேண்டும்.
உதவிகளுக்குத் தகுந்தோருக்கு உதவுபவனும், தண்டைக்குத் தகுந்தோரைத் தண்டிப்பவனுமான மன்னன், இம்மையிலும், மறுமையிலும் பெரும் தகுதியை {புண்ணியத்தை} ஈட்டுகிறான்.(41) மன்னனே யமனாவான். ஓ! மாந்தாத்ரி {மாந்தாதா}, நீதிமிக்கவர் அனைவருக்கும் அவனே (அவதாரம் செய்திருக்கும்) தேவனாவான். அவன், தனது புலன்களைக் கட்டுப்படுத்துவதால் பெரும் செல்வாக்கை அடைவதில் வெல்கிறான். அவற்றைக் கட்டுப்படுத்தாததால் பாவத்தையே ஈட்டுகிறான்[6].(42) ரித்விக்குகள், புரோகிதர்கள், ஆசான்கள் மற்றும் அவர்களுக்கு நல்ல அலுவல்களைச் செய்து கொடுப்போர் ஆகியோருக்கு உரிய கௌரவங்களை அளிப்பதும் மன்னனின் கடமையாகும்.(43) யமன் உயிரினங்கள் அனைத்திடமும் எந்தப் பாகுபாடும் பார்ப்பதில்லை. மன்னன் தன் குடிமக்கள் அனைவரையும் முறையாகக் கட்டுப்படுத்தும் நடத்தையில் அவனையே {யமனையே} பின்பற்ற வேண்டும்.(44) மன்னனானவன், அனைத்து வகையிலும் ஆயிரங்கண்ணோனுக்கு (இந்திரனுக்கு) ஒப்பானவனாகச் சொல்லப்படுகிறான். நீதியும் அவனால் அதே போலவே கருதப்படுகிறது.(45)
[6] "நீதிமிக்க அனைவரும் மன்னனிடம் இருந்தே அனைத்தையும் எதிர்பார்ப்பதால், அவனே (அவதாரம் செய்துள்ள) தேவனாவான். இரண்டாவது வரியைப் பொறுத்தவரையில், அதன் பொருள் பாரதி bharati என்பதைச் சார்ந்திருக்கிறது. உரையாசிரியர் விளக்குவது போல் பார்த்தால், அதன் பொருள் "செல்வாக்கு அல்லது செழிப்பை அடைதல்" என்பதாகும். சில உரைகளில் பாதுகா Paatukah என்பதற்குப் பதில் Paavaka என்றிருக்கிறது. அப்போது அதன் பொருள் "நெருப்பாகுதல்" அதாவது தன் வேரையே அழித்துக் கொள்வது, அல்லது ஒருவேளை, "பிறருக்கு அழிவை உண்டாக்குவது" என்ற பொருளாக இருக்கலாம்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
நீ கவனமில்லாதவனாக இருக்காமல், மன்னிக்கும் குணம், நுண்ணறிவு, பொறுமை, அனைத்து உயிரினங்களிடமும் அன்பு ஆகியவற்றை வளர்க்க வேண்டும். மேலும் நீ மனிதர்கள் அனைவரின் பலம் மற்றும் பலவீனங்களையும் உறுதி செய்து கொண்டு, நல்லோர் மற்றும் தீயோரை வேறுபடுத்திப் பார்க்க கற்க வேண்டும்.(46) நீ அனைத்து உயிரினங்களிடமும் நியாயமாக நடந்து கொண்டு, கொடைகள் அளித்து, ஏற்புடைய இனிய சொற்களையே பேச வேண்டும். நீ உன் நகரம் மற்றும் மாகாணங்களில் உள்ள குடிமக்களை மகிழ்ச்சியுடன் பராமரிக்க வேண்டும்.(47) புத்திக்கூர்மை இல்லாத மன்னன் தன் குடிமக்களைக் காப்பதில் ஒருபோதும் வெல்ல மாட்டான். ஓ! ஐயா, அரசுரிமை என்பது தாங்கிக் கொள்ளப் மிகக்கனமானதாகும்.(48) ஞானமும், துணிவும் கொண்டவனும், தண்டனை அறிவியலை அறிந்தவனுமான மன்னனால் மட்டும் ஒரு நாட்டைக் காக்க முடியும். மறுபுறம், சக்தியும், நுண்ணறிவு இல்லாதவனும், பெரும் அறிவியலை அறியாதவனுமாக இருந்தால், அவன் அரசுரிமையின் கனத்தைச் சுமக்க இயன்றவனல்ல.(49) நற்பண்புகள் மற்றும் நற்குடி பிறப்பு, தொழில் புத்திக்கூர்மை, தலைவனிடம் அர்ப்பணிப்பு, பெரும் கல்வியுடைமை ஆகியவற்றுடன் கூடிய அமைச்சர்களின் துணை கொண்டு நீ, காடுகளில் உள்ள தவசிகளையும் சேர்த்து மனிதர்கள் அனைவரின் இதயங்களையும், செயல்களையும் ஆய்வு செய்ய வேண்டும்.(50)
இவ்வாறு உன்னை நடத்திக் கொண்டால் உன்னால் அனைத்து வகை மனிதர்களின் கடமைகளையும் கற்க முடியும். நீ உன் நாட்டில் இருக்கும் போதோ, அல்லது பிற நாடுகளுக்குச் செல்லும்போதோ உன் கடமைகளை நோற்பதற்கு அஃது {அந்நடத்தை} உதவி செய்யும். (51) அறம், பொருள், இன்பம் ஆகிய இம்மூன்றில் அறமே முதன்மையானதாகும். அற ஆன்மா கொண்ட ஒருவன் இம்மையிலும், மறுமையிலும் பெருமகிழ்ச்சியை அடைகிறான்.(52) மனிதர்கள் கௌரவத்துடன் நடத்தப்பட்டால், (நீ அவர்களுக்கு அளிக்கும் கௌரவத்தின் நிமித்தமாக அவர்கள்) தங்கள் மனைவியரையும், மகன்களையும் கூடக் கைவிடுவார்கள். கொடைகள், இனிய சொற்கள், அக்கறை, தூய நடத்தை ஆகியவற்றின் மூலம், (அவர்களுக்கு நல்ல அலுவல்களைச் செய்து கொடுப்பதன் மூலமும்) நல்ல மனிதர்களைத் தன்னோடு இணைத்துக் கொள்ளும் மன்னன் பெருஞ்செழிப்பை வெல்கிறான். எனவே, ஓ! மாந்தாத்ரி {மாந்தாதா}, இந்தப் பண்புகளிலும், செயல்களிலும் அக்கறையில்லாமல் இருக்காதே.(53,54) மன்னன், தன் குறைகளைக் கட்டுப்படுத்துவதிலும், தன் எதிரிகளின் குறைகளைக் கண்காணிப்பதிலும் ஒருபோதும் அக்கறையில்லாம்ல இருக்கக்கூடாது. அவன் தன் எதிரிகள் தன் குறைகளைக் காண முடியாதவாறு செயல்பட்டு, அவர்களுடைய குறைகள் தென்படும்போதெல்லாம் தாக்கவும் வேண்டும்.(55)
வாசவன் {இந்திரன்}, யமன், வருணன் மற்றும் பெரும் அரசமுனிகள் அனைவரும் இவ்வழியிலேயே செயல்பட்டிருக்கின்றனர். நீயும் அதே நடத்தையை நோற்பாயாக.(56) ஓ! பெரும் மன்னா (மாந்தாதா), அந்த அரசமுனிகள் பின்பற்றிய நடத்தையையே நீயும் பின்பற்றுவாயாக. ஓ! பாரதக் குலத்தின் காளையே {மந்தாதா}, நீ விரைவில் இந்தத் தெய்வீகப் பாதையைப் பின்பற்றுவாயாக.(57) பெருஞ்சக்தி கொண்ட தேவர்கள், முனிவர்கள், பித்ருக்கள், கந்தர்வர்கள் ஆகியோர் நீதிமிக்க நடத்தை கொண்ட மன்னின் புகழை இம்மையிலும், மறுமையிலும் பாடுவார்கள்" என்றார் {உதத்தியர்}".(58)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, உதத்யரால் இவ்வாறு சொல்லப்பட்ட மாந்தாத்ரி {மாந்தாதா}, தயங்காமல் அவர் சொன்னது போலச் செய்து, இந்தப் பரந்த பூமியின் ஒரே தலைவனானான்.(59) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நீயும் மாந்தாத்ரியை {மாந்தாதாவைப்} போல நீதியுடன் நடந்து கொள்வாயாக. அப்போதுதான், நீ பூமியை ஆண்ட பிறகு, சொர்க்கத்தில் ஒரு வசிப்பிடத்தை அடைவாய்" {என்றார் பீஷ்மர்}.(60)
சாந்திபர்வம் பகுதி – 91ல் உள்ள சுலோகங்கள் : 60
ஆங்கிலத்தில் | In English |