The duties of the king! | Shanti-Parva-Section-93 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 93)
பதிவின் சுருக்கம் : மன்னனின் நடத்தை இருக்க வேண்டியதெவ்வாறு? மன்னன் க்ஷத்திரியக் கடமைகளில் இருந்து வீழ்வதெப்போது? மன்னனின் கண்காணிப்பு இருக்க வேண்டியதெப்படு என்பதை வசுமனஸுக்குச் சொன்ன வாமதேவர்...
கோசல நாட்டு மன்னன் வசுமனஸ் - தவசி வாமதேவர் |
வாமதேவர் {கோசல நாட்டு மன்னன் வசுமனஸிடம்} தொடர்ந்தார், "பலமிக்கவனான மன்னன், பலவீனரிடம் நீதியில்லாமல் நடந்து கொள்ளும்போது, அவனது குலத்தில் பிறந்தோரும் அதே நடத்தையே பின்பற்றுவார்கள்.(1) மேலும், பாவம் செய்யும் அந்த இழிந்தவனைப் பிறரும் பின்பற்றுவார்கள். அவ்வாறு பின்பற்றும் மனிதன் {மன்னன்}, கட்டுப்பாடுகளால் அடக்கப்படவில்லையென்றால், அவனது அத்தகு செயலே விரைவில் நாட்டுக்கு அழிவைக் கொண்டுவரும்.(2) தனக்குரிய கடமைகளை நோக்கும் மன்னனின் நடத்தையானது, பின்பற்றத்தக்க எடுத்துக்காட்டாக மனிதர்களால் பொதுவாக ஏற்கப்படுகிறது. எனினும், தன் கடமைகளில் இருந்து வீழும் ஒரு மன்னன், தன் உறவினர்களால் கூடப் பொறுத்துக்கொள்ளப்பட மாட்டான்[1].(3) சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள ஆணைகளை அலட்சியம் செய்யும் முரட்டு மன்னன், தன் நாட்டில் வரம்பைமீறிச் செயல்பட்டு, மிகவிரைவில் அழிவை அடைகிறான்.(4)
[1] "கே.பி.சின்ஹா இந்தச் சுலோகத்தைத் தவறாக மொழிபெயர்த்திருக்கிறார் என நான் நினைக்கிறேன். பர்துவான் பதிப்பே இதில் சரியாக இருக்கிறது. இந்தச் சுலோகத்தில் பேசுபவர் {வாமதேவர்}, நீதிமிக்க நடத்தையின் பலத்தை எடுத்துக்காட்ட விரும்புகிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
பழங்காலத்தில் இருந்து வெற்றிகொள்ளப்பட்ட அல்லது வெல்லப்படாத வேறு க்ஷத்திரியர்களின் நடத்தையை எந்த க்ஷத்திரியன் பின்பற்றவில்லையோ, அவன் க்ஷத்திரியக் கடமைகளில் இருந்து வீழ்ந்தவனாகச் சொல்லப்படுகிறான்[2].(5) ஒரு போரில் வெற்றிக் கொண்ட எந்த மன்னன், முன்னொரு சமயம் தனக்கு ஏதோ நன்மையைச் செய்த அரச எதிரியைக் கைப்பற்றி, வன்மத்துடன் செயல்பட்டு, அவனுக்கு உரிய கௌரவத்தை அளிக்கவில்லையோ, அவன் க்ஷத்திரியக் கடமைகளில் இருந்து வீழ்ந்தவனாகச் சொல்லப்படுகிறான்.(6) மன்னன், தன் பலத்தை வெளிக்காட்டி, உற்சாகமாக வாழ வேண்டும், ஆபத்துக் காலங்களில் என்ன தேவையோ, அதையும் செய்ய வேண்டும். அத்தகு ஆட்சியாளன் அனைத்து உயிரினங்களாலும் விரும்பப்பட்டு, செழிப்பில் இருந்து ஒரு போதும் வீழாதிருப்பான்.(7) நீ எவனோ ஒருவனுக்குப் பொல்லாங்கு செய்தால், காலம் வரும்போதும் நீ அவனுக்குத் தொண்டு {நல்லது} செய்ய வேண்டும். விரும்பப்படாத ஒருவனும், ஏற்புடையதைச் செய்யும்போது அன்புக்குரியவனாகிறான்[3].(8)
[2] கும்பகோணம் பதிப்பில், "துன்முள்ளவர்கள் விஷயத்திலும், துன்பமில்லாதவர்கள் விஷயத்திலும் நன்னடக்கையுடன் கூடிய ஸ்திதியை அனுஸரியாத க்ஷத்திரியன் க்ஷத்திரிய தர்மத்திலிருந்தடு விலகினவனாகிறான்" என்றிருக்கிறது.[3] கும்பகோணம் பதிப்பில், "எவன் அப்பிரியத்தைச் செய்தானோ அவனுக்குத் திரும்பவும் பிரியத்தைச் செய்ய வேண்டும். எவன் பிரீதியில்லாதவனிடம் பிரீதியைச் செய்கிறானோ அவன் தாமதமின்றிப் பிரியனாவான்" என்றிருக்கிறது.
பொய்மை தவிர்க்கப்பட வேண்டும். வேண்டப்படாமலேயே {கேட்காமலேயே} நீ பிறருக்கு நன்மை செய்ய வேண்டும். காமத்தாலோ {ஆசையாலோ}, கோபத்தாலோ, வன்மத்தாலோ நீ ஒருபோதும் நீதியைக் கைவிடக்கூடாது.(9) எவராலும் கேள்வி கேட்கப்படும்போது, கடுமையான பதில்களைக் கொடுக்காதே. கண்ணியமற்ற சொற்களைப் பேசாதே. எதையும் செய்ய ஒருபோதும் அவசரப்படாதே. வன்மத்தில் ஒருபோதும் ஈடுபடாதே. இத்தகு வழிமுறைகளால் ஓர் எதிரியும் வெல்லப்படுவான்.(10) ஏற்புடைய ஏதும் நடந்தால் மிகைப்பட்ட வகையில் மகிழ்ச்சியடையாதே, அல்லது ஏற்பில்லாத ஏதும் நடந்தால் துயரில் மூழ்கிவிடாதே. செல்வம்சார்ந்த வளங்கள் தீர்ந்துபோகும்போது ஒருபோதும் துயரில் ஈடுபடாதே. உன் குடிமக்களுக்கு நன்மை செய்யும் கடமையை எப்போதும் நினைவில் கொள்வாயாக.(11) தன் மனோ நிலையின்படி அறத்திற்கேற்புடையதையே எப்போதும் செய்யும் மன்னன், தன் திட்டங்கள் அனைத்திலும் வெற்றியை அடைந்து, ஒரு போதும் செழிப்பை இழப்பதில்லை.(12)
தன் தலைவனுக்குத் தீமை தருபவற்றைத் தவிர்ப்பவனும், அவனது நன்மைக்காகவே எப்போதும் செயல்படுபவனும், அர்ப்பணிப்புள்ளவனுமான பணியாளனை மன்னன் கவனத்துடன் எப்போதும் பேணி வளர்க்க வேண்டும்.(13) தங்கள் புலன்கள அடக்கியவர்களும், அர்ப்பணிப்பும், பற்றுறுதியும் கொண்டவர்களும், தூய நடத்தைக் கொண்டவர்களும், திறன்மிக்கவர்களுமான மனிதர்களையே அவன் அனைத்துக் காரியங்களிலும் நியமிக்க வேண்டும்.(14) இத்தகு தகுதிகளைக் கொண்டு மன்னனை நிறைவு செய்பவனும், தன் தலைவனின் நன்மைகளில் கவனத்துடன் எப்போதும் அக்கறைகொள்பவனுமான மனிதன் எவனோ, அவனை மன்னன் தன் நாட்டின் காரியங்களில் நியமிக்க வேண்டும்.(15) மறுபுறம், மூடர்கள், புலனடிமைகள், பேராசைக்காரர்கள், மதிப்பில்லா நடத்தை கொண்டோர், வஞ்சகர்கள், போலி நடத்தையுள்ள பொய்யர்கள், தீய நோக்குடையோர், தீய ஆன்மா கொண்டோர், அறியாமையில் இருப்போர், இழிந்த மனம் கொண்டோர், மது, சூது, பெண்கள், வேட்டை ஆகியவற்றுக்கு அடிமையாக இருப்போர் ஆகியோரை முக்கிய அலுவல்களில் நியமித்தால் அந்த மன்னன் தன் செழிப்பை இழப்பான்.(16,17)
முதலில் தன்னைப் பாதுகாத்துக் கொண்டு, பாதுகாக்கத் தகுந்த பிறரையும் பாதுகாக்கும் மன்னன், தன் குடிமக்கள் செழிப்பில் வளர்வதைக் காணும் நிறைவை உணர்வான். அத்தகு மன்னன் மகத்துவத்தை அடைவதிலும் வெல்கிறான்.(18) ஒரு மன்னன், தன்னிடம் அர்ப்பணிப்புள்ள இரகசிய முகவர்கள் {ஒற்றர்கள்} மூலம் பிற மன்னர்களின் நடத்தைகளையும், செயல்பாடுகளையும் கண்காணிக்க வேண்டும். அத்தகு வழிமுறைகளின் மூலம் அவன் மேன்மையை அடையலாம்.(19) பலமிக்க ஒரு மன்னனுக்குத் தீங்கிழைத்த ஒருவன் {குறுநில மன்னன்}, தீங்கடைந்தவன் {பலமிக்க மன்னன்} தான் வாழும் இடத்தில் இருந்து வெகுதொலைவில் இருக்கிறான் என்று தன்னைத் தேற்றிக் கொள்ளக்கூடாது. அத்தகு மன்னர்கள் {பலமிக்கவர்கள்} தீங்கடையும்போது, இரையின் மீது பாயும் பருந்தைப்போலவே கவனமற்ற கணப்பொழுதில் தீங்கிழைத்தவன் {குறுநில மன்னன்} மீது பாய்வான்.(20)
வலுவூட்டப்பட்ட பலம் கொண்டவனும், தன் பலத்தில் நம்பிக்கை கொண்டவனுமான ஒரு மன்னன், தன்னைவிடப் பலவீனமான அண்டை நாட்டானை {அண்டை நாட்டு மன்னனைத்} தாக்கவேண்டுமேயன்றி ஒருபோதும் பலமிக்கவனையல்ல.(21) அறத்தில் அர்ப்பணிப்புக் கொண்ட மன்னன் ஒருவன், ஆற்றலால் பூமியின் அரசுரிமையை அடைந்து, தன் குடிமக்களை நீதியுடன் பாதுகாத்து, எதிரிகளைப் போரில் கொல்ல வேண்டும்.(22) இவ்வுலகத்திற்குச் சொந்தமான அனைத்தும் அழிவடையவே விதிக்கப்பட்டிருக்கிறது. இங்கே இருக்கும் எதுவும் நீடித்து நிற்கக்கூடியவையல்ல. இதன் காரணமாகவே, அறத்தைப் பின்பற்றும் மன்னன், தன் மக்களை நீதியுடன் பாதுகாக்க வேண்டும்.(23) கோட்டைகளில் தற்பாதுகாப்பு, போர், நீதி நிர்வாகம், கொள்கை சம்பந்தமான கேள்விகளில் கலந்தோலோசனை செய்தல், குடிமக்களை மகிழ்ச்சியுடன் வைத்திருத்தல் ஆகிய இந்த ஐந்து செயல்களும், ஒரு மன்னனின் ஆட்சிப்பகுதிகளை விரிவடையச் செய்வதில் பங்காற்றுகின்றன.(24)
இவற்றில் உரிய கவனம் செலுத்தும் மன்னனே, மன்னர்களில் சிறந்தவனாகக் கருதப்படுகிறான். இவற்றை எப்போதும் கவனிப்பதால் ஒரு மன்னன் தன் நாட்டைப் பாதுகாப்பதில் வெல்கிறான்.(25) எனினும், அனைத்துக் காலங்களில் இக்காரியங்கள் அனைத்தையும் ஒரே மனிதன் கண்காணிப்பது இயலாதது. ஒரு மன்னன், கண்காணிப்பு செய்யும் அத்தகு பணியைத் தன் அமைச்சர்களிடம் ஒப்படைத்து, பூமியை என்றென்றைக்கும் ஆளலாம்.(26) பரந்த மனமுடையவனும், இன்பம் சார்ந்த பொருட்கள் அனைத்தையும் பிறருடன் பகிர்ந்து கொள்பவனும், மென்மையான மனோநிலை கொண்டவனும், தூய நடத்தை கொண்டவனும், தன் குடிமக்களை எப்போதும் கைவிடாதவனுமான ஒருவனையே மக்கள் மன்னனாகச் செய்கிறார்கள்.(27) ஞான அறிவுரைகளைக் கேட்டு, அவற்றை ஏற்று, தன் சொந்தக் கருத்துகளைக் கைவிடுபவனுக்கு உலகமே கீழ்ப்படிகிறது.(28)
தன் பார்வைக்கு எதிர் பார்வை கொண்டதன் விளைவாக ஒரு நலன் விரும்பியின் ஆலோசனையைப் பொறுத்துக் கொள்ளாதவனும், தன் பார்வைகளுக்கு எதிராகச் சொல்லப்படுபவற்றைக் கேட்பதில் அக்கறையில்லாதவனும், வெல்லப்பட்ட, அல்லது வெல்லப்படாத உயர்ந்த உன்னதமான மனிதர்களின் நடத்தையைப் பின்பற்றாதவனுமான மன்னன் தன் க்ஷத்திரியக் கடமைகளில் இருந்து வீழ்ந்தவனாகச் சொல்லப்படுகிறான்[4].(29,30) முன்பொருமுறை தண்டிக்கப்பட்ட அமைச்சர்கள், குறிப்பாகப் பெண்கள் ஆகியோரிடமும், மலைகள், அடைதற்கரிய இடங்கள், யானைகள், குதிரைகள், பாம்புகள் ஆகியவற்றிடமும் இருந்து(31) மன்னன் முழுகவனத்துடன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்[5]. தனது முதன்மையான அமைச்சர்களைக் கைவிட்டு, இழிந்தோரைத் தனக்குப் பிடித்தமானவர்களாக ஆக்கிக்கொள்ளும் மன்னன் விரைவில் துயரில் வீழ்ந்து, (தான் எண்ணியிருந்த) தன் திட்டங்களின் எல்லையை {முடிவை} அடைவதில் ஒருபோதும் வெல்வதில்லை.(32)
[4] கும்பகோணம் பதிப்பில், எவன் ஹிதத்தைச் செய்வதில் விருப்பமுள்ளவனான ஸ்நேஹிதனுடைய வசனத்தை த்வேஷத்தால் பொறுக்கவில்லையோ, ப்ரதிகூலமான வசனங்களை எப்பொழுதும் மனமில்லாதவன்போல் (வெளிக்காட்டி மனத்தில் பிரியத்துடன்) கேட்கிறானோ, புத்திமான்களால் செல்லப்பட்டதும், துன்பமுள்ளவர்களுக்கும் துன்பமில்லாதவர்களுக்கும் ஸமமுமான லாபவழியிலும் எப்பொழுதுஞ் செல்லவில்லையோ அவன் க்ஷத்திரிய தர்மத்திலிருந்து விலகினவனாகிறான்" என்றிருக்கிறது.[5] "மன்னன், கெட்டகுணம் கொண்ட யானைகளையும், குதிரைகளையும் செலுத்தக் கூடாது, நஞ்சுமிக்கப் பாம்புகளிடம் இருந்தும், பெண்களின் கலைகளில் இருந்தும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும், மலைகளில் ஏறவோ அடைவதற்கரிய காடுகள், பள்ளத்தாக்குகள் ஆகியவற்றில் நுழையவோ செய்யும்போது குறிப்பான கவனத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது இங்கே பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
உறுதியற்ற ஆன்மா கொண்டவனும், கோபம் மற்றும் வன்மத்தின் வசத்தை அடைபவனும், நற்பண்புகள் கொண்ட தன் உறவினர்களில் எவரையும் விரும்பவும், மதிக்கவும் செய்யாதவனுமான மன்னன், அழிவடையும் தருணத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறான்.(33) சாதனையாளர்கள் எவரையும் தன் இதயதால் விரும்பாவிடினும், அவர்களுக்கு நன்மை செய்து தன்னோடு இணைத்துக் கொள்ளும் மன்னன், நீடித்த புகழை அனுபவிப்பதில் வெல்கிறான்.(34) நீ ஒருபோதும் அகாலத்தில் வரிகளை விதிக்கக்கூடாது. நீ, ஏற்பில்லாதது ஏதும் நேரும்போது துன்பப்படுவதிலும், ஏற்புடைய ஏதும் நேரும்போது மிகைப்பட்ட மகிழ்ச்சியடைவதிலும் ஒருபோதும் ஈடுபடாதே. நற்செயல்களை நிறைவேற்றுவதிலேயே எப்போதும் உன்னை நீ நிறுவிக் கொள்ள வேண்டும்.(35) உன்னைச் சார்ந்திருக்கும் {குறுநில} மன்னர்களில் உன்னிடம் அர்ப்பணிப்பு கொண்டிருப்பவன் எவன், அச்சத்தால் உன்னிடம் பற்றுறுதியுடன் இருப்பவன், அவர்களில் குற்றங்களையுடையவன் எவன் என்பதை எப்போது நீ உறுதிசெய்து கொள்ள வேண்டும்.(36)
கவனமில்லாத தருணங்களில், கழுகுக்கூட்டம் தங்கள் இரையைப் பற்றுவதைப் போலப் பலவீனர்கள் பலமிக்கவர்களைத் தாக்கக்கூடும் என்பதால், மன்னன் பலவீனர்களை நம்ப வேண்டும்.(37) பாவம் நிறைந்த ஆன்மா கொண்ட ஒரு மனிதன், தன் தலைவன் இனிய சொல் பேசுபவனாகவும், அனைத்து சாதனைகளைக் கொண்டவனாகவும் இருப்பினும் அவனைத் தாக்க முயல்வான். எனவே, நீ அத்தகு மனிதர்களிடம் நம்பிக்கை வைக்காதே.(38) நகுஷனின் மகனான யயாதி, அரசகலையின் {ராஜதந்திரத்தின்} புதிர்களை அறிவிக்கும்போது, "மனிதர்களை ஆள்வதில் ஈடுபடும் ஒரு மனிதன், அருவருக்கத்தக்க எதிரிகளையும் கொல்ல வேண்டும்" எனச் சொன்னான்" {என்றார் வாமதேவர்}.(39)
ஆங்கிலத்தில் | In English |