The confirmation of power! | Shanti-Parva-Section-94 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 94)
பதிவின் சுருக்கம் : உறுதியான அதிகாரம் படைத்த மன்னன் எவன்? வெற்றின் கனிகளைச் சுவைக்கக்கூடிய மன்னன் எவன்? என்பவை குறித்து வசுமனஸுக்குச் சொன்ன வாமதேவர்; அந்த உரையாடலில் வாமதேவர் சொன்னவற்றைக் கடைப்பிடிக்கும்படி யுதிஷ்டிரனைக் கேட்டுக் கொண்ட பீஷ்மர்...
வாமதேவர் {கோசல நாட்டு மன்னன் வசுமனஸிடம்} சொன்னார், "மன்னன் போர்கள் இல்லாமலேயே வெற்றிகளை வென்றெடுக்க வேண்டும். ஓ! ஏகாதிபதி {வசுமனஸே}, போர்களின் மூலம் அடையப்படும் வெற்றிகள் ஞானியரால் புகழப்படுவதில்லை.(1) அரசின் சொந்த பலம் உறுதியாகாதபோது, அவன் புதிய பொருட்களை {உரிமைகளை} அடைவதில் முனையக் கூடாது. அதிகாரம் வலுப்பெறாத மன்னன் அவ்வாறு பொருட்களை {உரிமைகளை} அடைவதில் முனைவது முறையாகாது.(2) எவனுடைய ஆட்சிப்பகுதிகள் பரந்ததாகவும், செல்வம் நிறைந்ததாகவும் இருக்கிறதோ, எவன் பெரும் எண்ணிக்கையிலான அதிகாரிகளைக் கொண்டிருக்கிறானோ, அந்த மன்னனின் அதிகாரமே உறுதியானது என்று சொல்லப்படுகிறது.(3) எந்த மன்னனின் படைவீரர்கள் (ஊதியம் மற்றும் பரிசுகளால்) மனம் நிறைந்தவர்களாக, பகைவர்களை வஞ்சிக்கத் தகுந்தவர்களாக இருக்கிறார்களோ அவன் சிறு படையையே கொண்டிருந்தாலும் மொத்த உலகத்தையும் அடக்குவான்.(4) எந்த மன்னனின் குடிமக்கள், நகரங்களைச் சார்ந்தவர்களாகவோ, மாகாணங்களைச் சார்ந்தவர்களாகவோ இருப்பினும், அனைத்து உயிரினங்களிடமும் கருணை கொண்டவர்களாகவும், செல்வம் மற்றும் தானியங்களைக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்களோ அவனது அதிகாரமே உறுதியானது என்று சொல்லப்படுகிறது.(5) ஒரு மன்னன், தன் பலம் எதிரியின் பலத்தைவிடப் பெரியது என்று நினைக்கும்போது, தன் நுண்ணறிவின் துணையுடன், பின்னவனின் ஆட்சிப்பகுதிகளையும், செல்வத்தையும் அடைய அவன் முயல வேண்டும்.(6)
வளங்கள் பெருகுபவனும், அனைத்து உயிரினங்களிடம் கருணை கொண்டவனும், காலதாமதத்தால் ஒருபோதும் நேரத்தை இழக்காமல் இருப்பவனும், தன்னைப் பாதுகாத்துக் கொள்வதில் கவனத்துடன் இருப்பவனுமான மன்னன் முன்னேற்றத்தை ஈட்டுவதில் வெல்கிறான்.(7) எந்த மன்னன், எக்குற்றமும் இல்லாத தன் மக்களிடம் வஞ்சகமாக நடந்து கொள்கிறானோ, அவன் கோடரியால் காட்டை அழிக்கும் ஒருவனைப் போலத் தன்னையே வெட்டிக் கொள்கிறான்.(8) மன்னன் தன் எதிரிகளைக் கொல்லும் பணியை எப்போதும் கவனிக்கவில்லையெனில், பின்னவர்கள் {எதிரிகள்} குறையமாட்டார்கள். எந்த மன்னன், தன் கோபத்தைக் கொல்லத் தெரிந்தவனோ, அவனுக்கு எந்த எதிரியும் இருக்க மாட்டான்.(9) மன்னன் ஞானம் கொண்டவனாக இருப்பின், அவன் நல்லோர் அங்கீகரிக்காத எச்செயலையும் ஒருபோதும் செய்யமாட்டான். மறுபுறம், அவன் தனது சொந்த நன்மைக்கும், பிறரின் நன்மைக்கு வழிவகுக்கும் செயல்களையே எப்போதும் செய்பவனாக இருப்பான்.(10) எந்த மன்னன் தன் கடமைகள் யாவையும் நிறைவு செய்து, தன் மனசாட்சியின் ஒப்புதலில் மகிழ்ச்சியடைகிறானோ, அவன் ஒருபோதும் மற்றவரின் நிந்தனைக்கு ஆளாகமாட்டான், எப்போதும் வருத்தமடையவும் மாட்டான்.(11) எந்த மன்னன் மனிதர்களிடம் இத்தகு நடத்தையைக் கடைப்பிடிக்கிறானோ, அவன் இரண்டு உலகங்களையும் அடக்குவதில் வென்று, வெற்றியின் கனிகளைச் சுவைப்பான்" {என்றார் வாமதேவர்}".(12)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "வாமதேவரால் இப்படிச் சொல்லப்பட்ட மன்னன் வசுமனஸ், அவர் வழிநடத்தியதைப் போலவே செய்தான். நீயும் இந்த ஆலோசனைகளைப் பின்பற்றினால், இரண்டு உலகங்களையும் வெற்றி கொள்வதில் நீ வெல்வாய் என்பதில் ஐயமில்லை".(13)
சாந்திபர்வம் பகுதி – 94ல் உள்ள சுலோகங்கள் : 13
ஆங்கிலத்தில் | In English |