The means for victory! | Shanti-Parva-Section-95 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 95)
பதிவின் சுருக்கம் : வெற்றியடைய விரும்பும் மன்னன் செயல்பட வேண்டிய முறை; போரிடச் செல்லும் க்ஷத்திரியனின் நடத்தை எவ்வாறு இருக்க வேண்டும்? என்பது குறித்தும், வெற்றி அடையவும், தன் வளங்களை அதிகரிக்கவும் நியாயமான வழிமுறைகளே பின்பற்றப்பட வேண்டும் என்றும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஒரு க்ஷத்திரியன் மற்றொரு க்ஷத்திரியனைப் போரில் அடக்க விரும்பினால், முன்னவன் வெற்றி குறித்த காரியத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும்? என்னால் கேட்கப்படும் நீர் இதற்குப் பதிலளிப்பீராக" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "தன் பின்னே படையுடனோ, இல்லாமலோ செல்லும் மன்னன், தான் அடக்கப்போகும் மன்னனின் ஆட்சிப்பகுதிக்குள் நுழைந்து, அந்த மக்கள் அனைவரிடமும், "நானே உங்கள் மன்னன், நான் எப்போதும் உங்களைப் பாதுகாப்பேன்.(2) எனக்கு உரிய கப்பத்தைக் கொடுங்கள், அல்லது போரில் என்னோடு மோதுங்கள்" என்று சொல்ல வேண்டும். மக்கள் அவனைத் தங்கள் மன்னனாக ஏற்றால், எந்தப் போருக்குமான அவசியமில்லை.(3) பிறப்பால் க்ஷத்திரியர்களாக இல்லாத அவர்கள், பகைமையின் குறியீடுகளை வெளிப்படுத்தும்போது, அவர்கள் தங்களுக்கு விதிக்கப்படாத நடைமுறைகளை நோற்பதால், அனைத்து வழிமுறைகளிலும் அவர்கள் அடக்கப்பட வேண்டும்.(4) எதிரியிடம் அதிகம் எதிர்பார்ப்பவனும், தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இயலாதவனும், போரிட ஆயுதமின்றி வருபவனுமான க்ஷத்திரியனைக் கண்டால், பிற வகையைச் சேர்ந்த மக்களும் (படையெடுத்து வருபவனைத் தடுப்பதற்காக) ஆயுதங்களை எடுப்பார்கள்[1]" என்றார் {பீஷ்மர்}.(5)
[1] "மன்னர்கள், அரச வகையைச் சேர்ந்தோருடன் மட்டுமே போரிட வேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தாலும், படையெடுப்பாளனைத் தடுப்பதற்காக க்ஷத்திரியர்கள் ஆயுதமெடுக்காமல், வேறு வகையினர் எடுத்தால், அவன் தனக்கு எதிராக ஆயுதம் எடுக்கும் அவர்களோடும் போரிடலாம் என்பது இங்கே பொருளாகத் தெரிகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "க்ஷத்திரியர்களல்லாதவர்களான அவர்கள் விரோதஞ்செய்வார்களானால் தமக்குத்தகாத கர்மத்திலிருக்கும் அவர்களை எவ்விதத்திலும் எல்லா உபாயங்களாலும் அடக்க வேண்டும். ஆயுதமில்லாத க்ஷத்திரியனைக் காக்குந்திறமை இல்லாதவனென்றும், அதிகமான எண்ணமுள்ளவனென்றும் அறிந்தால் தாழ்ந்த மனிதனும் ஆயுதமெடுப்பான்" என்றிருக்கிறது.
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, மற்றொரு க்ஷத்திரிய மன்னனை எதிர்த்து போரிடச் செல்லும் க்ஷத்திரிய மன்னன் ஒருவனின் நடத்தை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(6)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "கவசம் பூணாத க்ஷத்திரியனுடன் போரிட அந்த க்ஷத்திரியன் தானும் கவசம் பூணக்கூடாது. ஒருவன் மற்றொருவனோடு போரிட்டு, எதிராளி இயலாமையை அடையும்போது பின்னவனை {எதிராளியைக்} கைவிட வேண்டும்[2].(7) எதிரி கவசம் பூண்டு வந்தால், அவனது எதிராளியும் கவசம் அணிந்து கொள்ள வேண்டும். எதிரி ஒரு படையின் பாதுகாப்புடன் முன்னேறி வந்தால், படையின் பாதுகாப்புடன் கூடிய ஒருவன் அவனைப் போருக்கு அறைகூவி அழைக்க வேண்டும்.(8) எதிரி வஞ்சகத்தின் உதவியுடன் போரிட்டால், அவனை வஞ்சகத்தின் உதவியுடனேயே சந்திக்க வேண்டும். மறுபுறம் அவன் நியாயமாகப் போரிட்டால், நியாயமான வழிமுறைகளின்படியே அவன் தடுக்கப்பட வேண்டும்.(9) ஒருவன், ஒரு தேர்வீரனை எதிர்த்து குதிரையின் முதுகில் செல்லக்கூடாது. ஒரு தேர்வீரன் மற்றொரு தேர்வீரனை எதிர்த்தே செல்ல வேண்டும். எதிராளி துயரில் வீழ்ந்தால், அவன் தாக்கப்படக்கூடாது; அச்சத்தில் இருப்பவனும், வெல்லப்பட்டவனும் தாக்கப்படக்கூடாது[3].(10)
[2] "நான் பின்பற்றும் வங்க உரையில் இந்தச் சுலோகம், பம்பாய் உரையில் உள்ளதைவிடச் சிறப்பாக இருக்கிறது. பின்வரும் 8ம் சுலோகத்துடன் வங்க உரையே பொருந்துகிறது. பம்பாய் உரை பின்பற்றப்பட்டால், அதன் மொழிபெயர்ப்பு, "ஒரு க்ஷத்திரியன் போரில் கவசமணியாதவரை அவனோடு ஒருவன் போரிடக்கூடாது. ‘நான் உன்னை நோக்கி {கணையை} ஏவப்போகிறேன்; நீ ஏவுவாயாக" என்ற வார்த்தைகளில் அவனை அறைகூவி அழைத்த பிறகே அவனுடன் ஒருவன் போரிட வேண்டும்" என்றிருக்கும். கே.பி. சின்ஹா இதைக் கணிசமான அளவுக்குச் சரியாகவே மீட்டுத் தந்திருக்கிறார். பர்துவான் பதிப்பு வழக்கம் போலவே தவறாக இருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ஸன்னகமில்லாமலும், கவசமில்லாமலுமிருக்கும் ஒரு க்ஷத்திரியன் யுத்தத்தில் எதிர்க்கத்தக்கவனல்லன். ஒருவனாயிருந்து ஒருவனாயிருப்பவனை நோக்கி, "நீ அம்பை விடு" என்றும், "நானும் விடுகிறேன்" என்றும் அறிவிக்க வேண்டும். அவன் ஸன்னகத்துடன் வருவானாகில், பிறகு தானும் ஸன்னகத்துடனிருக்க வேண்டும்" என்றிருக்கிறது.
[3] "இங்கே சுட்டப்படும் துயரம் என்பது குதிரையில் இருந்து வீழ்தல், அல்லது தேர், அல்லது ஆயுதங்களை இழத்தல் போன்றவை" என்று பொருள் கொள்ளப்பட வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
நஞ்சு தோய்த்த கணைகளோ, முள்பதித்த கணைகளோ {கர்ணிகளோ} பயன்படுத்தப்படக்கூடாது. இவை தீயவர்களின் ஆயுதங்களாகும். ஒருவன் கோபத்திற்கோ, கொல்லும் விருப்பத்திற்கோ வசப்படாமல் நியாயமான முறையில் போரிட வேண்டும்.(11) பலவீனமானவனோ, காயம்பட்டவனோ கொல்லப்படக்கூடாது. அதேபோலவே மகனற்றவனோ, ஆயுதம் முறிந்தவனோ, துயரில் வீழ்ந்தவனோ, நாண்கயிறு அறுந்தவனோ, தன் வாகனத்தை இழந்தவனோ கொல்லப்படக்கூடாது. காயம்பட்ட எதிரியை, அவனது வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும், அல்லது அவன் வெற்றியாளனின் பகுதிக்குக் கொண்டுவரப்பட்டால், திறன்மிக்க மருத்துவ நிபுணர்களைக் கொண்டு அவனது காயங்கள் கவனிக்கப்பட வேண்டும்.(12) நல்ல மன்னர்களுக்கிடையில் சச்சரவு விளையும்போது, ஒரு நல்ல போர்வீரன் துயரில் விழுந்தால் (அவனது காயங்கள் கவனிக்கப்பட்டு) குணமடைந்தபிறகு அவனைச் சுதந்திரமாக விட வேண்டும். இதுவே நித்திய கடமையாகும் {இதுவே ஸனாதன தர்மமாகும்}.(13) தான்தோன்றியின் (பிரம்மனின்) மகனான மனுவே, போர்கள் நியாயமான முறையில் போரிடப்பட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அவர்கள் {க்ஷத்திரியர்கள்} அறத்தை அழிக்காமல் அதைப் பின்பற்ற வேண்டும்.(14)
நியாயமாகப் போரிடுவதைக் கடமையாகக் கொண்ட ஒரு க்ஷத்திரியன், நியாயமற்ற வழிமுறைகளின்படி வெற்றியடைந்தால் அவன் பாவியாகிறான். வஞ்சக நடத்தை கொண்ட அத்தகு மனிதன் தன்னையே கொல்கிறான் எனச் சொல்லப்படுகிறான்.(15) தீயோரின் நடைமுறை இதுவே. தீயோனும் கூட நியாயமான வழிமுறைகளின்படியே அடக்கப்பட வேண்டும். பாவகரமான வழிமுறைகளில் வெற்றியை அடைவதை விட அறம் நோற்று உயிரைவிடுவதே சிறந்தது.(16) ஓ! மன்னா, இழைக்கப்படும் பாவமானது, ஒரு பசுவைப் போலவே உடனடி பலனை உண்டாக்குவதில்லை. அந்தப் பாவம், அஃதை இழைத்தவனின் வேர்களையும், கிளைகளையும் எரித்த பிறகே அவனை மூழ்கச் செய்கிறது.(17) பாவம் நிறைந்த ஒரு மனிதன், பாவம்நிறைந்த வழிமுறைகளில் செல்வத்தை அடைந்து மிகவும் இன்புற்றிருக்கிறான். ஆனால், பாவம் நிறைந்த வழிமுறைகளில் முன்னேற்றத்தை அடைந்த அந்தப் பாவி அந்தப் பாவத்தையே தொடர்வான்.(18) அறம் எந்த உச்சவினையுமாற்றுவதில்லை என்று நினைக்கும் அவன் நன்னடத்தைக் கொண்ட மனிதரை ஏளனம் செய்கிறான். அறத்தை நம்பாத அவன், இறுதியில் அழிவையடைகிறான்.(19)
அவன், வருணனின் சுருக்கு {பாசக்} கயிற்றில் சிக்கியிருந்தாலும், தன்னை இறவாதவனாகவே கருதுகிறான். காற்றடைக்கப்பட்ட பெரிய தோற்பையைப் போல, அந்தப் பாவி தன்னை அறத்திலிருந்து முற்றிலுமாகத் துண்டித்துக் கொள்கிறான். எனினும், விரைவில் அவன் ஆற்றங்கரை மரமானது, வேருடன் சேர்த்து அடித்துச் செல்லப்படுவதைப் போலவே காணாமல் போகிறான்.(20) அப்போது, கல் தரையில் விழுந்து உடைந்த மண்குடத்துக்கு ஒப்பானவனாக அவனைக் காணும் மக்கள், அவனுக்குத் தகுந்தபடியே அவனைக் குறித்துப் பேசுவார்கள். எனவே, மன்னனானவன், வெற்றி மற்றும் தன் வளங்களை அதிகரித்தல் ஆகிய இரண்டிலும் நியாயமான வழிமுறைகளையே நாட வேண்டும்" என்றார் {பீஷ்மர்}.(21)
சாந்திபர்வம் பகுதி – 95ல் உள்ள சுலோகங்கள் : 21
ஆங்கிலத்தில் | In English |