Application of means and contrivances! | Shanti-Parva-Section-100 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 100)
பதிவின் சுருக்கம் : உண்மை, அறிவு, நன்னடத்தை மற்றும் திட்டத்துடன்கூடிய வழிமுறைகளால் அறம் உறுதியாக நிலைக்கச் செய்யப்படுகிறது என்றும் அவற்றில் திட்டத்துடன் கூடிய வழிமுறைகளே உடனடி பலன்களை உண்டாக்கவல்லைவை என்றும் சொல்லும் பீஷ்மர், அவற்றைக் குறித்து மேலும் விரிவாகச் சொல்வது...
Bhishma advises Yudhistra Pandavs and Shree Krishna on his death bed of arrows |
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, ஓ! பாரதக் குலத்தின் காளையே, வெற்றியை விரும்பும் மன்னர்கள், அறவிதிகளுக்குச் சற்றே எதிராகச் செயல்பட்டாவது போரில் தங்கள் துருப்புகளை எவ்வாறு வழிநடத்த வேண்டும்?"(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "அறமானது உண்மையால் {சத்தியத்தால்} உறுதியாக நிலைக்கச் செய்யப்படுகிறது என்று சிலர் சொல்கிறார்கள்; அறிவால் எனச் சிலரும்; நன்னடத்தையால் எனச் சிலரும், வழிமுறைகள் மற்றும் திட்டங்களின் {சூழ்ச்சியின்} பயன்பாடு ஆகியவற்றால் {உறுதியாக நிலைக்கச்செய்யப்படுகிறது} என்று சிலரும் சொல்கிறார்கள்[1].(2) உடனடி பலனை உண்டாக்கவல்ல வழிமுறைகளும், திட்டங்களும் எவை என்பது குறித்து நான் இப்போது உனக்குச்சொல்லப் போகிறேன். நலம் சார்ந்த கட்டுபாடுகள் அனைத்தையும் மீறும் கள்வர்கள், உடைமைகளையும். அறத்தகுதியையும் நித்தம் நித்தம் அழிப்பவர்களாக இருக்கிறார்கள்.(3) அவர்களைத் தடுத்துக் கட்டுப்படுத்துவதற்குச் சாத்திரங்களில் குறிப்பிடப்படும் திட்டங்கள் என்னென்ன என்பதை நான் உனக்குச் சொல்கிறேன். அனைத்துச் செயல்களின் வெற்றிக்குமான அந்த வழிமுறைகளைச் சொல்கிறேன் கேட்பாயாக.(4)
[1] "இது யுதிஷ்டிரனின் கேள்விக்கான பதிலாக எவ்வாறு இருக்க முடியும் என்பது எனக்குப் புரியவில்லை. மேலே சொல்லப்படும் உண்மை என்பது க்ஷத்திரியக் கடமைகளின் விதிகள் என்று பொருள் கொள்ளப்பட வேண்டும் என்று நீலகண்டர் நினைக்கிறார். இங்கே அறிவு (அல்லது தீர்மானம்) என்று பொருள்படும்படியான உபாபட்டி Upapatti என்ற சொல், வாழ்வில் உள்ள அலட்சியத்தைக் குறிக்கிறது என நான் நினைக்கிறேன். ஏனெனில், அந்த விதிகள் வேறு எந்தத் தீர்மானத்திற்கும் வழிவகுக்கவில்லை. அவரது {நீலகண்டரின்} கூற்றின்படி நன்னடத்தை என்பது படைவீரர்களுக்கு உற்சாகமூட்டுவது, அவர்களிடம் இனிமையாகப் பேசுவது, துணிச்சல்மிக்கோரை நிலையில் உயர்த்துவது போன்றவை ஆகும். வழிமுறைகள் மற்றும் திட்டங்கள் என்பன கைவிட்டு தப்பி ஓடுபவர்கள் மற்றும் கோழைகளைத் தண்டித்தல் ஆகும். நீலகண்டர் சொல்வது சரியானால், ‘இந்த நான்கு காரணங்களின் விளைவுகளாலேயே (நல்லோரைப் பாதுகாக்கும் நோக்கில் உண்டாகும்) போர் சாத்தியமாகும்’ என்று பீஷ்மர் சொல்வதாக ஆகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில் இங்கே முற்றிலும் வேறு பொருளில் இருக்கிறது. அது பின்வருமாறு, "உண்மையான க்ஷத்திரிய தர்மப்படி சிலர் தர்மத்திலிருக்கிறார்கள், மற்றுஞ்சிலர் மரணமுண்டென்ற உறுதியுடன் தர்மத்திலிருக்கிறார்கள். மற்றுஞ்சிலர் பெரியோர்களின் ஆசாரமென்ற எண்ணத்தாலும், சிலர் அரசனிடம் பயத்தாலுண்டான முயற்சியென்னும் உபாயத்தாலும் தர்மத்திலிருக்கிறார்கள். உடனே பயன்படத்தக்கவைகளான உபாயதர்மங்களைப் பொருள் ஸித்திக்க வேண்டி உபதேசிக்கிறேன்" என்றிருக்கிறது.
நேர், குறுக்கு ஆகிய இரண்டு புத்திகளையும் மன்னன் பயன்படுத்தத் தயாராக {அவற்றை அறிந்து வைத்து} இருக்க வேண்டும். குறுக்கு புத்தியை அவன் அறிந்திருந்தாலும், (பிறருக்குத் தீங்கிழைக்க) அதைப் பயன்படுத்தக் கூடாது. தனக்கு ஏற்படும் ஆபத்துகளைத் தடுக்க அதைப் பயன்படுத்தலாம்.(5) பகைவர்கள், மன்னனுக்குத் தீங்கிழைப்பதற்காக, (அமைச்சர்கள், அல்லது துருப்புகள், அல்லது கூட்டாளிகள், அல்லது குடிமக்கள் ஆகியோருக்கு மத்தியில்) அடிக்கடி ஒற்றுமையின்மையை உண்டாக்க முனைவார்கள். கபடம் அறிந்த மன்னன், பகைவரின் அச்செயல்களுக்கு வஞ்சகத்தின் துணையுடன் எதிர்வினையாற்றலாம்.(6) யானைகளின் உடல்களைக் காக்கும் தோற்கவசங்கள், அதே பொருளாலான காளைகளுக்கான கவசங்கள், எலும்புகள், முட்கள், இரும்பாலான கூர்முனை ஆயுதங்கள், இரும்புக்கவசங்கள், வெண்சாமரங்கள்,(7) கூரியவையும், நன்கு கடினமாக்கப்பட்டவையுமான ஆயுதங்கள், மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தாலான அனைத்து வகைக் கவசங்கள், பல்வேறு வண்ணங்களிலான கொடிகள் மற்றும் கொடிமரங்கள்,(8) பெருங்கூர்மையுடைய வாள்கள், வேல்கள், கத்திகள், போர்க்கோடரிகள், ஈட்டிகள், கேடயங்கள் ஆகியவை {போர்கருவிகள்} அபரிமிதமாக உற்பத்தி செய்யப்பட்டு, கிடப்பில் வைக்கப்பட்ட வேண்டும்.(9)
ஆயுதங்கள் அனைத்தும் முறையாகக் கூர்த்தீட்டப்பட வேண்டும். படைவீரர்களுக்கு உற்சாகமும், உறுதியும் ஊட்டப்பட வேண்டும். சைத்ரம் {சித்திரை}, அல்லது அக்ரஹாயண {மகரசீரிஷ - மார்கழி} மாதத்தில் துருப்புகள் {போருக்குப்} புறப்படுவதே முறையாகும் {சிறப்பாகும்}.(10) அக்காலத்தில்தான் பயிர்கள் முதிர்கின்றன, நீரும் அரிதாவதில்லை. ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, வருடத்தின் அந்தக் காலங்களில்தான் அதிகக் குளிரோ, வெப்பமோ இருப்பதில்லை.(11) எனவே, துருப்புகள் அக்காலத்தில் நகரத்தப்பட வேண்டும். எனினும், பகைவன் துன்புறும் காலம் நேரும்போது (இத்தகு உகந்த காலத்திற்காகக் காத்திராமல்) துருப்புகளை உடனடியாகப் புறப்படச் செய்ய வேண்டும். பகைவரை அடக்கும் காரியத்தில் படைகளை நகர்த்த இவையே (இந்த இரண்டு காலங்களும், பகைவனின் ஆபத்துக் காலங்களுமே) சிறந்த தருணங்களாகும்.(12) (படைகளை நகர்த்தும் போது), நீர் நிறைந்ததும், நெடுகிலும் புற்கள் இருப்பதும், சமமானதும், அணிவகுத்துச் செல்ல எளிமையானதுமான சாலை {பாதை} பின்பற்றப்பட வேண்டும். அந்தச் சாலைக்கு அருகே உள்ள பகுதிகள் (சாலைக்கு இரு மருங்கிலும் உள்ள பகுதிகள்), திறன்மிக்கவர்களும், வனங்கள் குறித்த நல்லறிவு கொண்டவர்களுமான ஒற்றர்களின் மூலம் முன்னதகாவே {சோதிக்கப்பட்டு} உறுதி செய்யப்பட வேண்டும்.(13) துருப்பினரை விலங்குகளைப் போல வனப்பகுதிகளின் ஊடாக அணிவகுக்கச் செய்யக்கூடாது. எனவே, வெற்றியை விரும்பும் மன்னர்கள் தங்கள் துருப்புகள் அணிவகுத்துச் செல்ல நல்ல சாலைகளைப் பின்பற்ற வேண்டும்[2].(14)
[2] கும்பகோணம் பதிப்பில், "ஜலமுள்ளதும், புல்லுள்ளதும், ஸமமானதும், காட்டிலுள்ள ஸமர்த்தர்களான சாரர்களால் நன்றாகப் பழகி அறியப்பட்டதுமான வழியானது செல்லத்தக்கதாகப் புகழப்படுகிறது. மிருகக்கூட்டங்கள் போலக் காடுகளில் செல்லுவது முடியாது. ஆகையால், ஜயத்தை விரும்புகிறவர்கள் சேனைகளிடம் அந்தக் காட்டாள்களையே சேர்த்து வைக்கிறார்கள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "நீரும், புற்களும் கொண்ட சமமான சாலையில் முன்னேறிச் செல்வதே பரிந்துரைக்கப்படுகிறது. வனங்களில் சுற்றித் திரிந்து சாதித்த ஒற்றர்கள் இவற்றைச் சரிபார்க்க நியமிக்கப்பட வேண்டும். படையை, காட்டில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட வழிகளின் ஊடாகச் செல்லும் மான் மந்தையைப் போல அணிவகுக்கச் செய்யக் கூடாது. வெற்றியை விரும்பும் மன்னர்கள் தங்கள் படைவீரர்கள் அனைவரையும் இவ்வழியிலேயே நியமிக்க வேண்டும்" என்றிருக்கிறது.
பலமும், உயர்குடி பிறப்பும் கொண்ட துணிச்சமிக்க மனிதர்கள் படையின் முன்னணியில் நிறுத்தப்பட வேண்டும். கோட்டைகளைப் பொறுத்தவரையில், அவை சுவர்களையும், சுற்றிலும் நீர் நிறைந்த ஓர் அகழியையும், ஒரே ஒரு நுழைவாயிலையும் கொண்டவையாக இருப்பதே புகழத்தக்கது.(15) படையெடுத்துவரும் பகைவர்களைப் பொறுத்தவரையில், அதனுள் {கோட்டையினுள்} இருந்தே அவர்களைத் தடுக்கலாம். முகாம் அமைப்பதைப் பொறுத்தவரையில், அது திறந்த வெளியில் இருப்பதைவிடக் காடுகளுக்கு அருகே இருப்பதே சிறப்பானது எனப் போரை அறிந்தவர்களாலும், படை சார்ந்த சாதனைகளைச் செய்தோராலும் கருதப்படுகிறது. முகாமானது வனத்திற்கு அருகிலேயே அமைக்கப்பட வேண்டும்.(16,17) அத்தகு இடத்தில் முகாமை அமைத்து, காலாட்படையினரை பாதுகாப்பான நிலையில் நிறுவி, பகைவன் வந்ததும் அவனுடன் மோதுவது, ஆபத்தையும், துயரத்தையும் விலக்கும் வழிமுறைகளாகும். (18)
துருப்புகள், உர்ச மேஜர் {ஸப்தரிஷிநக்ஷத்திரங்கள்}[3] என்றழைக்கப்படும் நட்சத்திரக் கூட்டத்தைத் தங்கள் பின்னே கொண்டு, மலைகளைப் போன்ற நிலைத்து நின்று போரிட வேண்டும். இவ்வழிமுறையின் மூலம் ஒருவனால் தடுக்கப்பட முடியாத எதிரிகளையும்கூட வெல்ல முடியும்.(19)
காற்று, சூரியன் மற்றும் சுக்கிரனெனும் கோள் ஆகியவை தங்கள் பின்னே இருந்து வீசவும், ஒளிரவும் செய்யும் வகையில் துருப்பினர் தங்கள் நிலைகளை அமைத்துக் கொள்ள வேண்டும். ஓ! யுதிஷ்டிரா, வெற்றியடையும் வழிமுறைகளில் காற்று, சூரியனை விட மேன்மையானது, சூரியன் சுக்கிரனை விட மேன்மையானவன்[4].(20)
Saptha rishi-Ursa Major- Mahabharatham |
காற்று, சூரியன் மற்றும் சுக்கிரனெனும் கோள் ஆகியவை தங்கள் பின்னே இருந்து வீசவும், ஒளிரவும் செய்யும் வகையில் துருப்பினர் தங்கள் நிலைகளை அமைத்துக் கொள்ள வேண்டும். ஓ! யுதிஷ்டிரா, வெற்றியடையும் வழிமுறைகளில் காற்று, சூரியனை விட மேன்மையானது, சூரியன் சுக்கிரனை விட மேன்மையானவன்[4].(20)
[3] "இந்த நட்சத்திரக்கூட்டத்தில் உள்ள ஏழு நட்சத்திரங்களாவன, மரீசி, அத்ரி, அங்கீரஸ், புலஸ்தியர், புலஹர், கிரது மற்றும் வசிஷ்டர் ஆகிய ஏழு பெரும் முனிவர்களாகக் கருதப்படுகின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். "இஃது ஏழு முனிவர்களைக் கொண்ட உர்ச மேஜர் என்றழைக்கப்படும் நட்சத்திரக்கூட்டமாகும். படையானது தெற்கு நோக்கிச் செல்ல வேண்டும் என்பது இதன் பொருளாகும்" எனப் பிபேக்திப்ராயின் பதிப்பில் அடிக்குறிப்பிருக்கிறது.[4] கும்பகோணம் பதிப்பில், "வாயுவும், ஸூர்யனும், சந்திரனுமுள்ள பக்ஷத்தில் ஜயமுண்டாகும். ஓ யுதிஷ்டிரா, இரண்டு பக்ஷத்திலும் சேர்க்கையிருந்தால் இவர்களுள் முன்முன்னுள்ளவர் மிகச் சிறந்தவராவர்" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், "எங்கே காற்று, சூரியன் மற்றும் சுக்கிரன் ஆகியவை இருக்கின்றனவோ அங்கே வெற்றியும் இருக்கும். ஓ! யுதிஷ்டிரா, காற்றானது, சூரியனைவிட மேன்மையானது, சூரியனானது சுக்கிரனைவிட மேன்மையானது. ஆனால் {அனைத்தும்} சேர்ந்திருப்பதே சிறந்ததாகும்" என்றிருக்கிறது.
போரை அறிந்த மனிதர்கள், புழுதியற்றதும், ஈரமற்றதும், சமமானதும், அதிகக் கற்கள் இல்லாததுமான பகுதியானது, குதிரைப்படையின் செயல்பாட்டுக்கு மிகத் தகுந்தது என அங்கீகரிக்கின்றனர்.(21) புழுதி மற்றும் குழிகளற்ற களமானது தேர்வீரர்களுக்குத் தகுந்ததாகும். புதர்கள் அடர்ந்ததும், பெரும் மரங்கள் நிறைந்ததும், நீருள்ளதுமான பகுதி யானை வீரர்களுக்குத் தகுந்ததாகும்.(22) பெரும் மரங்கள் நிறைந்ததும், மூங்கில் மற்றும் பிரம்புப்புதர்கள் அடர்ந்ததும், மலைசார்ந்த அல்லது வனம் சார்ந்த அடைதற்கரிய பல இடங்களைக் கொண்டதுமான ஒரு பகுதியானது, யானைப்படையின் செயல்பாட்டுக்கு மிகவும் தகுந்ததாகும்.(23) ஓ! பாரதா, பெரும் யானைப்படைப்பிரிவைக் கொண்ட ஒரு படையானது, மிகப் பலமானதாகக் கருதப்படுகிறது. தேர் மற்றும் குதிரைவீரர்கள் பெருகியிருக்கும் ஒரு படையானது, (மழையற்ற) தெளிவான நாளில் மிகச் சிறந்த பலனளிக்கும் எனக் கருதப்படுகிறது.(24) காலாட்படை வீரர்களும், யானைகளும் நிறைந்த ஒரு படையானது, மழைக்காலத்தில் மிகச் சிறந்த பலனை அளிக்கும். (பல்வேறு வகையான படைகளின் தன்மைகள், அவற்றை அணிவகுத்து, நிறுவி வழிநடத்தும் முறைகள் ஆகிய) இந்தக் குறிப்புகளைக் கவனத்தில் கொள்ளும் மன்னன், காலம் மற்றும் இடத்தின் பண்புகளிலும் தன் கவனத்தைத் திருப்ப வேண்டும்.(25)
எந்த மன்னன், இந்தக் கருத்துகள் அனைத்தையும் கவனத்தில் கொண்டு, சரியான நட்சத்திரக்கூட்டம் மற்றும் மங்கலமான சந்திர நாள் ஆகியவற்றின் கீழ் {போருக்குப்} புறப்படுவானோ, அவன் தன் துருப்புகளை முறையாக வழிநடத்தி எப்போதும் வெற்றியையே அடைவான்.(26) உறங்குபவர்களையோ, தாகத்திலிருப்பவர்களையோ, களைப்பாக இருப்பவர்களையோ, கவசம் நழுவியவர்களையோ, முக்தியில் தன் இதயத்தை நிலைக்கச் செய்தவனையோ, தப்பி ஓடுபவனையோ, (ஆயத்தமில்லாமல்) சாலையில் நடந்த செல்பவனையோ, உணவு உண்டு கொண்டிருப்பவனையோ, பானம் செய்து கொண்டிருப்பவனையோ,(27) பைத்தியக்காரனையோ, மனநிலை குலைந்தவனையோ, மரணக்காயமடைந்தவனையோ, காயங்களால் மிகவும் பலவீனமடைந்தவனையோ, நம்பிக்கைக்குரியவனாக இருப்பவனையோ, ஒரு காரியத்தைத் தொடங்கிவிட்டு அதை முடிக்க இயலாமல் இருப்பவனையோ, குறிப்பிட்ட கலையில் திறம் பெற்றவனையோ, துயரத்தில் இருப்பவனையோ, கால்நடைத் தீவனம் கொள்முதல் செய்ய முகாமை விட்டு வெளியே செல்பவனையோ, முகாம்களை அமைப்பவனையோ {கட்டுபவனையோ}, முகாமின் தொண்டர்களையோ {பணியாட்களையோ},(28) மன்னன், அல்லது அவனது அமைச்சர்களின் வாயில்காப்போராகப் பணி செய்பவர்களையோ, (படைத்தலைவர்களுக்கு) பணிவிடை செய்பவர்களையோ, பணியாளர்களுக்குத் தலைவர்களாக இருப்பவர்களையோ எவனும் ஒருபோதும் கொல்லக்கூடாது.(29)
உன் போர்வீரர்களில், பகைவரின் படையணிகளை உடைப்பவர்களுக்கும், பின்வாங்கிச் செல்லும் உன் துருப்புகளை மீண்டும் திரட்டுபவர்களுக்கும், இரட்டிப்பான ஊதியம் வழங்கி, உணவு, பானம் மற்றும் உனக்கு இணையான ஆசனம் ஆகியவை கொடுக்கப்பட்டுக் கௌரவிக்கப்பட வேண்டும்.(30) அவர்களில் பத்து படைவீரர்களுக்குத் தலைவர்களாக இருப்பவர்கள், நூறு படைவீரர்களுக்குத் தலைவர்களாக நியமிக்கப்பட வேண்டும். மேலும் (அவர்களில்) நூறு படைவீரர்களுக்குத் தலைவனாக இருக்கும் கருத்துள்ள வீரன், ஆயிரம் படைவீரர்களுக்குத் தலைவனாக நியமிக்கப்பட வேண்டும்.(31)
{போரின் போது} முக்கியமான போர்வீரர்களைத் திரட்டி, அவர்களிடம், "வெற்றியடைய உறுதியேற்போம், ஒருபோதும் ஒருவரையொருவர் கைவிடோம்.(32) அச்சமடைந்தோர் இங்கேயே இருக்கட்டும். போரின் நெருக்கத்தில் வீரத்தைப் புறக்கணித்து, தங்கள் தலைவர்கள் கொல்லப்பட விடுபவர்களும் இங்கேயே இருக்கட்டும்.(33) போரில் இருந்து தப்பி ஓடாதவர்களும், தங்கள் தோழர்கள் கொல்லப்பட அனுமதியாதவர்களும் வரட்டும். தங்களையும், தங்கள் தோழர்களையும் பாதுகாக்கும் அவர்கள் நிச்சயம் போரில் எதிரியைக் கொல்வார்கள்.(34) போரில் இருந்து தப்பி ஓடுவதென்பது, செல்வ இழப்பு, மரணம், புகழ்க்கேடு, நிந்தனை ஆகியவற்றை ஏற்படுத்தும். போரில் இருந்து தப்பி ஓடுபவனும், உதடுகளையும், பற்களையும் இழந்தவனும், ஆயுதங்கள் அனைத்தையும் கைவிடுபவனும், எதிரியால் கைப்பற்றப்படுபவனுமான மனிதன் ஏற்பில்லாது, கடுஞ்சொற்களைக் கேட்க வேண்டிருக்கும். அத்தகு தீய விளைவுகள் நம் பகைவீரர்களுக்கு உண்டாகட்டும்.(35,36)
போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் மனிதர்களில் இழிந்தோராவர். அவர்கள் வெறுமனே பூமியில் மனிதர்களின் எண்ணிக்கையைப் பெருக்குகிறார்கள். எனினும், ஆண்மையைப் பொறுத்தவரையில் அவர்கள் இம்மையிலும், மறுமையிலும் அவ்வாறிருக்க மாட்டார்கள்.(37) ஓ! ஐயா {யுதிஷ்டிரனே}, வெற்றிபெறும் பகைவர்கள் உற்சாகமாகச் செல்வார்கள், ஓடும் எதிராளிகளைத் தொடர்ந்து செல்பவர்கள் எனப் பாணர்களால் அவர்கள் துதிக்கப்படுவார்கள்.(38) போருக்கு வரும் எதிரிகள் ஒரு மனிதனின் புகழை அழித்தால், அவன் அடையும் துயரம் மரணத்தைவிடக் கொடியதாகும்.(39) வெற்றியே அறத்தகுதி மற்றும் அனைத்து வகை இன்பங்களுக்கும் வேர் என்பதை அறிவீர்களாக. எது பெரும் துயரம் என்று கோழைகளால் கருதப்படுமோ, அதை வீரர்கள் உற்சாகமாகச் சுமப்பார்கள்.(40) சொர்க்கத்தை அடையத் தீர்மானித்து, உயிரையே துச்சமாக மதித்து, வெற்றி அல்லது மரணம் என்ற தீர்மானத்துடன் போரிட்டு, இறுதி அருளை சொர்க்கத்தில் அடைவோம்.(41)" என்று சொல்ல வேண்டும்.
இத்தகு உறுதி மொழியை ஏற்றுக் கொண்டு, உயிரையே விட ஆயத்தமாக இருக்கும் வீரர்கள், பகைவரின் படையணிகளை எதிர்த்துத் துணிவுடன் விரைய வேண்டும்.(42) படையின் முன்னணியில் வாள்கள் மற்றும் கேடயங்களுடன் கூடிய மனிதர்கள் நிறுத்தப்பட வேண்டும். பின்புறம் தேர்ப்படை நிறுத்தப்பட வேண்டும். அவற்றின் இடைவெளியில் பிற வகைப் போராளிகள் நிறுத்தப்பட வேண்டும்.(43) பகைவரைத் தாக்கும் ஏற்பாடாக இஃது இருக்க வேண்டும். படையில் உள்ள தேர்ந்த போர்வீரர்கள் முன்னணியில் இருந்து போரிட வேண்டும். அவர்கள் பின்னால் இருக்கும் தங்கள் தோழர்களைக் காக்க வேண்டும்.(44) படையினருக்கு மத்தியில் பலத்திலும், துணிவிலும் முதன்மையானவர்களாகக் கருதப்படுபவர்கள், முன்னணியில் நிறுத்தப்பட வேண்டும். அவர்களுக்குப் பின்னால் பிறர் நிற்க வேண்டும்.(45)
அச்சமடைந்தோருக்கு ஆறுதலையும்ம் உற்சாகத்தையும் கவனமாக அளிக்க வேண்டும். பலவீனமான போராளிகளும், (எதிரிக்குப்) படையின் எண்ணிக்கையைக் காட்டுவதற்காகவாவது களத்தில் (இருந்து விலக்கப்படாமல்) நிறுத்தப்பட வேண்டும்[5]. (46) துருப்புகள் {துருப்புகளின் எண்ணிக்கை} சொற்பமாக இருப்பின், அவர்கள் நெருங்கியிருந்து போரிடுமாறு செய்யப்பட வேண்டும். சில நேரங்களில், தலைவன் விரும்பினால், நெருக்கமாக இருக்கும் வியூகமானது, பரந்து விரிந்ததாக அமைக்கப்படலாம்.
சிறு எண்ணிக்கையிலான துருப்புகள் பெரும் எண்ணிக்கையிலானோருடன் போரிடும்போது, சூசிமுகம் என்றழைக்கப்படும் வியூகம் அமைக்கப்பட வேண்டும்[6].(47) சிறுபடையானது, பெரும்படையுடன் மோதும்போது, அந்தச் சிறு படையின் தலைவன், தன் மக்களின் கரங்களைக் குலுக்கி, உரக்கக் கூச்சலிடும் வகையில், "பகைவர்கள் பிளக்கப்படுகிறார்கள்! பகைவர்கள் பிளக்கப்படுகிறார்கள்!" என்று கூவ வேண்டும்.(48)
அவர்களில் பலமிக்கோர், தங்கள் தோழர்களிடம், "புதிய நண்பர்கள் வந்திருக்கிறார்கள். அச்சமில்லாமல் உங்கள் எதிரிகளைத் தாக்குங்கள்" என்று உரக்கச் சொல்ல வேண்டும்.(49) எஞ்சியோர் அனைவருக்கும் முன்னால் நிற்பவர்கள், உரக்க கூச்சலிட்டபடி, பல்வேறு வகைகளிலான ஒலிகளை உண்டாக்கியபடி, கிரகசங்கள், கொம்புகள், பேரிகைகள், மிருதங்கங்கள் மற்றும் பணவங்களை முழங்க வேண்டும்" என்றார் {பீஷ்மர்}.(50)
Susi mugam-Mahabharatham |
Susi Mugam2-Mahabharatham |
[5] "இங்கே சொல்லப்படும் ஸ்கந்தம் Skanda என்பது சமூகம் Samuha என்ற பொருளைக் கொண்டது என நீலகண்டர் நினைக்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "பயமுள்ளவர்களுக்கும் முயற்சியுடன் உத்ஸாகமுண்டாகும்படி செய்ய வேண்டும். (அவர்கள்) கூட்டத்தைக் காண்பிக்க வேண்டியதற்காக மாத்திரம் ஸமீபத்திலாவது இருக்க வேண்டும்" என்றிருக்கிறது.[6] "அதாவது படைவீரர்களை, குறுகிய தலை கொண்ட ஆப்பு போன்ற வடிவில் நெருக்கமாக அணிவகுக்கச் செய்வதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
சாந்திபர்வம் பகுதி – 100ல் உள்ள சுலோகங்கள் : 50
உர்ச மேஜர்=Ursa Major Stars {ஸப்தரிஷிநக்ஷத்திரங்கள்}[3]
வடக்கு வானத்தில் ஏழு நட்சத்திரங்களைக் காணலாம். எதிலும் கடவுளைக் காணும் இந்துக்கள் மட்டும் இதை சப்தரிஷி மண்டலம் (Ursa Major Stars) என்று அழைத்தனர். சப்த என்றால் ஏழு என்று பொருள். அத்ரி, ப்ருகு, குத்ச, வசிஷ்ட, கௌதம, காஸ்யப, ஆங்கிரசர் ஆகிய 7 ரிஷிகள் உலக மக்கள் இனத்தைத் தோற்றுவித்த முதல் எழுவர் ஆவர்.
பிராமணர்கள் நாள்தோறும் மும்முறை செய்யும் அந்திப் பொழுது நீர்க்கடனில் (ஸந்தியா வந்தனம்) இந்த எழுவரையும் தொழுவர். இதை சங்க இலக்கிய நூலான நற்றிணைப் பாடலும் உறுதி செய்யும்.
தமிழர்கள் அனைவரும் இந்த ஏழு நட்சத்திரங்களையும் தொழுததை
நற்றிணை 231 பாடல் வரியில் காணலாம்:–
கைதொழும் மரபின் எழுமீன் போல – (இளநாகனார் பாடியது).
கைதொழும் மரபின் எழுமீன் போல – (இளநாகனார் பாடியது).
சப்த ரிஷி மண்டலம்
சாதாரணமாக வானவியல் தெரியாதவர்கள் கூட இந்தக் காலத்திலும் சப்தரிஷி மண்டலத்தைத் தெரிந்து அதை வானில் ஒருவருக்கு ஒருவர் சுட்டிக் காட்டி மகிழ்கின்றனர். இது மேலை நாட்டில் ‘க்ரேட் பேர்’ அல்லது ‘ஊர்ஸா மேஜர்’ என வழங்கப்படுகிறது. மக நட்சத்திரத்திற்கும் சுவாதிக்குமுள்ள தூரத்திற்கு நேர் வடக்காக ஏழு ஒளி பொருந்திய நட்சத்திரங்கள் ஏர்க்கால் போன்று ஒரு முனை கிழக்காக இருக்குமாறு காணப்படுகிறது. இதையே பண்டைய காலம் தொட்டு சப்தரிஷி மண்டலம் என அழைக்கிறோம்.மேற்கில் உள்ள இரண்டு நட்சத்திரங்களைச் சேர்த்து சுமார் 7 பங்கு தூரம் வடக்கே நீட்டினால் துருவ நட்சத்திரத்தில் (Pole Starல்2) முடியும். ஆகவே திசையைக் காட்டும் நட்சத்திரங்களான இந்த இரண்டை மட்டும் மாலுமிகள் திசைகாட்டி என அழைத்தனர். இந்த சப்த ரிஷி மண்டலம் சூரிய வீதியில் இல்லாததால் 27 நட்சத்திரங்கள் பட்டியலில் சேரவில்லை.
பிரம்ம சித்தாந்தம் என்னும் நூலில் சகலர் என்னும் ரிஷி சப்த ரிஷிகள் மற்றும் அருந்ததி எங்கே உள்ளனர் என்பதை விரிவாக விளக்குகிறார். ரிக் வேதம் (9-114-3) “தேவா: ஆதித்யா: யே சப்த” என்று இந்த ஏழு பேரும் ஏழு தெய்வங்கள் என முழங்குகிறது.
வசிஷ்ட நட்சத்திரம்=Mizar star ; அருந்ததி நட்சத்திரம்= Alcor star
வசிஷ்ட நட்சட்த்திரத்திற்கு பின்னால் உள்ள மறைந்திருக்கும் நட்சத்திரமே வசிஷ்டரின் மனைவியான அருந்ததி நட்சத்திரமாகும்.
பூமியின் வடக்கு பக்கத்தில் மிகக் கடைகோடியில் உள்ள துருவ நட்சத்திரமே (Pole Star) பூமியில் உள்ள அனைவருக்கும், எந்த நாட்டில் உள்ளவர்களுக்கும், கடல் பயணத்தில் உள்ளவர்களுக்கும், எந்த காலத்திலும் வடக்கு எது என்று வழிகாட்ட உதவும் மிக மிக முக்கியமான நட்சத்திரமாகும்.
இந்த துருவ நட்சத்திரத்திற்கு (Pole Star) சற்று தொலைவிலேயே நாம் வசிஷ்ட நட்சத்திரத்தை (Mizar Star) பார்க்கலாம். இந்த வசிஷ்ட நட்சத்திரத்திற்கு பின்னாலேயே அதை ஒட்டியே இருப்பதும் கூர்ந்து கவனித்தால் மட்டுமே தெரியக்கூடியதுதான் இந்த அருந்ததி நட்சத்திரம் (Alcor Star) ஆகும். இந்த அருந்ததி நட்சத்திரத்தை திருமணச் சடங்குகளில் பெண்ணும் மாப்பிள்ளையையும் பார்க்கத்தூண்டுவதே நமது இந்திய மரபாகும்.
வசிஷ்ட நட்சத்திரம்=Mizar star ; அருந்ததி நட்சத்திரம்= Alcor star
வசிஷ்ட நட்சட்த்திரத்திற்கு பின்னால் உள்ள மறைந்திருக்கும் நட்சத்திரமே வசிஷ்டரின் மனைவியான அருந்ததி நட்சத்திரமாகும்.
பூமியின் வடக்கு பக்கத்தில் மிகக் கடைகோடியில் உள்ள துருவ நட்சத்திரமே (Pole Star) பூமியில் உள்ள அனைவருக்கும், எந்த நாட்டில் உள்ளவர்களுக்கும், கடல் பயணத்தில் உள்ளவர்களுக்கும், எந்த காலத்திலும் வடக்கு எது என்று வழிகாட்ட உதவும் மிக மிக முக்கியமான நட்சத்திரமாகும்.
இந்த துருவ நட்சத்திரத்திற்கு (Pole Star) சற்று தொலைவிலேயே நாம் வசிஷ்ட நட்சத்திரத்தை (Mizar Star) பார்க்கலாம். இந்த வசிஷ்ட நட்சத்திரத்திற்கு பின்னாலேயே அதை ஒட்டியே இருப்பதும் கூர்ந்து கவனித்தால் மட்டுமே தெரியக்கூடியதுதான் இந்த அருந்ததி நட்சத்திரம் (Alcor Star) ஆகும். இந்த அருந்ததி நட்சத்திரத்தை திருமணச் சடங்குகளில் பெண்ணும் மாப்பிள்ளையையும் பார்க்கத்தூண்டுவதே நமது இந்திய மரபாகும்.
ஆங்கிலத்தில் | In English |