Hero and coward! | Shanti-Parva-Section-99 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 99)
பதிவின் சுருக்கம் : மிதிலையின் மன்னன் ஜனகன் தன் படைகளை உற்சாகப்படுத்திப் போருக்கு அனுப்பிய வரலாற்றையும், அணிவகுத்தல், பகைவரைத் துரத்துதல், வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ளல் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
Bhishma advises Yudhistra Pandavs and Shree Krishna on his death bed of arrows |
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "இது தொடர்பாக, பிரதர்த்தனனுக்கும், மிதிலையின் ஆட்சியாளனுக்கும் {ஜனகனுக்கும்} இடையில் நடைபெற்ற போரானது பழங்கதையில் குறிப்பிடப்படுகிறது.(1) மிதிலையின் ஆட்சியாளனான ஜனகன், போரெனும் வேள்வியில் தன்னை நிறுவிக் கொண்ட பிறகு, (அப்போரின் தொடக்கத்தில்) தன் துருப்புகள் அனைத்தையும் மகிழ்ச்சியில் திளைக்கச் செய்தான். ஓ! யுதிஷ்டிரா, நான் அக்கதையைச் சொல்கிறேன் கேட்பாயாக.(2) அனைத்தின் உண்மையை அறிந்தவனும், மிதிலையின் உயர் ஆன்ம மன்னனுமான ஜனகன், தன் போர்வீரர்களுக்குச் சொர்க்கம் மற்றும் நரகம் ஆகிய இரண்டையும் காட்டினான்.(3) அவன் {ஜனகன்} அவர்களிடம் {தன் படைவீரர்களிடம்}, "அச்சமில்லாமல் போரிடுபவர்களுக்காக ஒதுக்கப்படுபவையும், பெரும் காந்தியைக் கொண்டவையுமான இவ்வுலகங்களைப் பார்ப்பாயாக. கந்தர்வப் பெண்கள் நிறைந்த அந்த உலகங்கள், விருப்பம் அனைத்தையும் அருள வல்லவையும், அழிவற்றவையுமாகும்.(4) மறுபுறம், போரில் இருந்து தப்பி ஓட நினைப்போருக்கான நரக உலகங்கள் அதோ இருக்கின்றன. அவர்கள் அங்கே அழிவில்லாமல் நீடிக்கும் மகிமையின்மையில் அழுகுவார்கள்.(5) உங்கள் உயிரைக் கைவிடத் தீர்மானித்து, உங்கள் எதிரிகளை நீங்கள் வெல்வீராக. மகிமையற்ற நரகத்தில் வீழ்ந்துவிடாதீர்கள். வீரர்களைப் பொறுத்தவரையில், (போரில்) உயிரை விடுவதே சொர்க்கத்திற்கான அவர்களின் இன்பக் கதவாகும்" என்றான் {ஜனகன்}.(6)
ஓ! பகை நகரங்களை அடக்குபவனே {யுதிஷ்டிரா}, இவ்வாறு தங்கள் மன்னனால் சொல்லப்பட்ட மிதிலையின் போர்வீரர்கள், தங்கள் ஆட்சியாளர்களை மகிழ்விக்கும் வகையில் போரில் தங்கள் எதிரிகளை வென்றார்கள். உறுதியான ஆன்மா கொண்டோர் போரில் முன்னணியில் நிற்கும் அவர்களது நிலையையே ஏற்க வேண்டும்.(7) தேர்வீரர்கள், யானைகளுக்கு மத்தியில் நிறுத்தப்பட வேண்டும். தேர்வீரர்களுக்குப் பின்னால் குதிரைவீரர்கள் நிற்க வேண்டும். அதற்கும் பின்னால் கவசம் பூண்ட காலாட்படையினர் அனைவரும் நிறுத்தப்பட வேண்டும்.(8) எந்த மன்னன் தன் அணிவகுப்பை இவ்வகையில் அமைக்கிறானோ அவன் எப்போதும் தன் எதிரிகளை வெல்கிறான். எனவே, ஓ! யுதிஷ்டிரா, போர் வியூகமானது எப்போதும் இவ்வாறே அமைக்கப்பட வேண்டும்.(9) கோபத்தால் நிறையும் வீரர்கள், நியாயமாகப் போரிடுவதன் மூலம் சொர்க்கத்தின் அருள்நிலையை வெல்லவே விரும்புவார்கள். பெருங்கடலைக் கலங்கடிக்கும் மகரங்களைப் போல அவர்கள் பகைவரின் படையணிகளைக் கலங்கடிப்பார்கள்.(10)
ஒருவருக்கொருவர் உறுதிகூறிக் கொள்ளும் அவர்கள், (தங்களுக்கு மத்தியில்) உற்சாகமற்று இருப்பவர்களை மகிழச் செய்ய வேண்டும். வெற்றியாளன் (வலிய தீங்குகள் ஏதும் செய்யாமல்) புதிதாக வென்ற நிலத்தைப் பாதுகாக்க வேண்டும். அவன் {வெற்றியாளன்} முறியடிக்கப்பட்ட தன் எதிரியைத் தன் துருப்புகளைக் கொண்டு அதிகமாகத் தொடர்ந்து துரத்தக்கூடாது.(11) முறியடிக்கப்பட்டுச் செல்பவர்கள், தங்கள் பாதுகாப்பில் நம்பிக்கையிழந்து தங்களைப் பின்தொடர்பவர்களைத் தாக்கத் தொடங்கினால் அது பொறுத்துக் கொள்ளப்பட முடியாததாக இருக்கும். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இதன் காரணமாகவே நீ முறியடிக்கப்பட்ட எதிரியை அதிகமாகத் துரத்த உன் துருப்புகளைப் பணிக்ககூடாது.(12) துணிவுமிக்கப் போர்வீரர்கள், வேகமாக ஓடிக்கொண்டிருப்போரைத் தாக்க விரும்புவதில்லை. முறியடிக்கப்பட்ட எதிரி அதிகமாகப் பின்தொடரக்கூடாது என்பதற்கு இதுவும் மற்றொரு காரணமே.(13) அசையாதன அசைவனவற்றால் உட்கொள்ளப்படுகின்றன; பற்களற்ற உயிரினங்கள், பற்களுள்ளவற்றால் விழுங்கப்படுகின்றன; நீரானது தாகம் கொண்டோரால் குடிக்கப்படுகிறது; கோழைகள் வீரர்கள் விழுங்கப்படுகிறார்கள்.(14)
கோழைகள் தாங்களும் வெற்றியாளர்களைப் போல முதுகுகளும், வயிறுகளும், கரங்களும், கால்களும் கொண்டவர்களாக இருப்பினும் தோல்வியையே நீடிக்கச் செய்வார்கள். அச்சத்தால் பீடிக்கப்பட்டோர், துணிவுமிக்கோர் முன்னிலையில், கரங்களைக் கூப்பித் தலை வணங்கி நிற்பார்கள்.(15) தகப்பனின் தோள்களில் இருக்கும் மகனைப் போல இந்த உலகமானது வீரர்களின் தோள்களில் ஓய்ந்திருக்கிறது. எனவே, அனைத்து சந்தர்ப்பங்களிலும் வீரனானவன் மரியாதைக்குத் தகுந்தவனாவான்.(16) மூன்று உலகங்களிலும் வீரத்தைவிட உயர்ந்தது வேறேதும் இல்லை. வீரனே அனைத்தையும் பாதுகாத்துப் பேணி வளர்க்கிறான், அனைத்துப் பொருட்களும் வீரனைச் சார்ந்தே இருக்கின்றன" என்றார் {பீஷ்மர்}.(17)
சாந்திபர்வம் பகுதி – 99ல் உள்ள சுலோகங்கள் : 17
ஆங்கிலத்தில் | In English |