The indications of warriors! | Shanti-Parva-Section-101 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 101)
பதிவின் சுருக்கம் : எந்தெந்த நாடுகளைச் சார்ந்தோர், எந்தெந்தப் போர்முறைகளில் வல்லவர்கள் என்பதையும், போர்வீரர்களின் அங்க அடையாளங்களையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
Bhishma advises Yudhistra Pandavs and Shree Krishna on his death bed of arrows |
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "போருக்குத் தகுந்தவர்களாகத் தங்களை வகைப்படுத்திக் கொள்ளப் போராளிகள் என்ன மனநிலையை மற்றும் என்ன நடத்தையைக் கொண்டிருக்க வேண்டும்? அவர்கள் எவ்வாறு கவசமணிந்திருக்க வேண்டும்? எவ்வாறு ஆயுதந்தரித்திருக்க வேண்டும்?" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "(போராளிகளில் {அந்தந்த நாடுகளைச் சேர்ந்த} குறிப்பிட்ட குழுவினரின்) பயன்பாட்டில் மிகப் பரிச்சயமாக இருக்கும் ஆயுதங்களையும், வாகனங்களையும் {அவர்கள்} ஏற்றுக்கொள்வதே முறையாகும். துணிச்சல்மிக்கப் படைவீரர்கள், அந்த ஆயுதங்களையும், வாகனங்களையும் ஏற்றுக்கொண்டே போரில் ஈடுபடுகிறார்கள்.(2)
Map of Mahabharatha period- Mahabharatham |
உசீநரர்கள், பெரும் பலம் கொண்டவர்களாகவும், அனைத்து வகை ஆயுதங்களைப் பயன்படுத்துவதிலும் திறன்மிக்கவர்களாக இருக்கிறார்கள்.
கிழக்கத்தியர்கள், யானைகளின் முதுகுகளில் இருந்து போரிடுவதில் திறன்பெற்றவர்களாகவும், நீதியற்ற போர்முறைகள் அனைத்தையும் அறிந்தவர்களாகவும் இருக்கின்றனர்.(4)
யவனர்கள், காம்போஜர்கள், மதுராவைச் சுற்றிலும் வசிப்போர் ஆகியோர் வெறுங்கரங்களால் போரிடுவதில் திறன்பெற்றவர்களாக இருக்கிறார்கள்[1].
[1] கும்பகோணம் பதிப்பில், "குதிரைச் சண்டையில் ஸமர்த்தர்களாயிருப்பார்கள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் "வெறுங்கைகளால் போரிடுவதில் திறம்பெற்றவர்கள்" என்றே இருக்கிறது.
தெற்கத்தியர்கள் தங்கள் கரங்களில் வாளுடன் போரிடுவதில் திறம்பெற்றவர்களாக இருக்கிறார்கள்[2].(5)
[2] இதன்பிறகு, கும்பகோணம் பதிப்பில், "அவந்தியிலுள்ளவர்கள் பெரிய சூரர்களாயிருப்பார்கள். மாளவ தேசத்திலுள்ளவர்கள் தேர், யானை, குதிரை, காலாளென்னும் நான்கு அங்கமுள்ள படையிலும் மிக்கச் சூரர்களாயிருப்பார்கள். (இவர்களில்) ஒருவன் தனியாயிருந்தாலும் யுத்தத்தில் ஆயிரம் பெயரை எதிர்த்து நிற்பான்" என்றிருக்கிறது. பிபேகத்திப்ராயிலும், கங்குலியிலும் இந்தக் குறிப்புகள் இல்லை.
பெரும் பலமும், பெரும் துணிவும் படைத்தோர் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் பிறக்கிறார்கள் என்பது நன்கறியப்பட்டது. அவர்களின் அறிகுறிகளை விளக்கிச் சொல்கிறேன் கேட்பாயாக.(6)
சிங்கம், அல்லது புலி போன்ற குரலையும், கண்களையும் கொண்டோர், சிங்கம் மற்றும் புலியின் நடையைக் கொண்டோர், பாம்பு அல்லது புறா போன்ற கண்களைக் கொண்டோர் ஆகியோர் அனைவரும், பகைவரின் படையணிகளைக் கலங்கடிக்கவல்லவர்கள் ஆவர்[3].(7). மான் போன்ற குரலும், சிறுத்தை, அல்லது காளை போன்ற கண்களும் கொண்டவர்கள் பெரும் சுறுசுறுப்புக் கொண்டவர்கள் ஆவர். மணியோசைக்கு ஒப்பான குரலைக் கொண்டவர்கள் எளிதில் உணர்ச்சிவசப் படக்கூடியவர்களாகவும், தீச்செயல் புரியக்கூடியவர்களாகவும், கோபம் நிறைந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.(8) மேகங்களைப் போன்ற ஆழ்ந்த ஒலியைக் குரலாகக் கொண்டவர்கள், கோபம் நிறைந்த முகங்களைக் கொண்டவர்கள், ஒட்டகங்களைப் போன்ற முகங்களைக் கொண்டவர்கள், கோணலான மூக்கும், நாக்கும் கொண்டவர்கள் ஆகியோர் பெரும் வேகத்தைக் கொண்டவர்களாகவும், பெருந்தொலைவுக்குத் தங்கள் ஆயுதங்களை ஏவவோ, வீசவோ கூடியவர்களாகவும் இருக்கிறார்கள்.(9) பூனை போன்று வளையும் உடல்களும், மெலிந்த முடியும், மெலிந்த தோலும் கொண்டவர்கள், பெரும் வேகம் கொண்டவர்களாகவும், ஓய்வறியாதவர்களாகவும், கிட்டத்தட்ட போரில் வெட்டப்பட முடியாதவர்களாகவும் இருக்கிறார்கள்.(10)
[3] "இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் குளிங்கம் Kulinga என்பதற்குப் பல பொருள்கள் உள்ளன. அது பாம்பைக் குறிக்கிறது என நீலகண்டர் நினைக்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "சிங்கம்புலிகளின் குரலும் கண்களும் போன்ற குரலும் கண்களுமுள்ளவர்களும், சிங்கம்புலிகள் போல நடக்கிறவர்களும், மாடப்புறா ஸர்ப்பம் இவைகளின் கண்போன்ற கண்ணுள்ளவர்களுமாகிய இவர்கள் யாவரும், சூரர்களும், சத்துருக்களை வெல்லத்தக்கவர்களுமாயிருப்பார்கள்" என்றிருக்கிறது.
உடும்பு போன்ற மூடிய கண்களைக் கொண்ட சிலர், மென்மையான மனநிலை கொண்டவர்களாகவும், குதிரையின் வேகமும், குரலும் கொண்டவர்கள், எதிரிகள் அனைவருடனும் போரிடத் தகுந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.(11) கடினமான உடல் படைத்தவர்களாக, அழகானவர்களாக, கட்டுடல் கொண்டவர்களாக, அகன்ற மார்பைக் கொண்டவர்களாக இருப்போர், பகைவனின் பேரிகையையோ, எக்காளத்தையோ கேட்டதும் கோபமடைவோர், அனைத்து வகை அமளிகளிலும் மகிழ்ச்சியில் திளைப்போர்,(12) ஈர்ப்பைக் குறிக்கும் வகையிலான கண்களை, அல்லது வெளியில் பிதுங்கிய கண்களை, அல்லது பச்சை நிறக் கண்களைக்[4] கொண்டோர், நெரிந்த புருவங்களுடன் கருமையடைந்த முகங்களைக் கொண்டோர், கீரிப்பிள்ளையைப் போன்ற கண்களைக் கொண்டோர் ஆகிய அனைவரும் துணிச்சல்மிக்கவர்களாகவும், போரில் தங்கள் உயிர்களைக் கைவிட வல்லவர்களாகவும் இருக்கிறார்கள்.(13) கோணலான கண்களும், அகன்ற நெற்றியும், சதைப்பற்றில்லாத கன்னங்களும், வஜ்ரங்களைப் போன்ற உறுதிமிக்கக் கரங்களும், வளையக் குறிகள் கொண்ட விரல்களும், மெலிந்த உடல்களும், புடைத்துத் தெரியும் நரம்புகளும் கொண்டோர்,(14) போர்க்களத்தில் விரைந்து செல்லக்கூடியவர்களாவர். மதங்கொண்ட யானைகளைப் போன்ற அவர்கள் தடுக்கப்பட முடியாதவர்களாக இருகிறார்கள்.(15)
[4] கும்பகோணம் பதிப்பில் மஞ்சள் நிறக் கண்கள் என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் கடுமையான கண்கள் என்றிருக்கிறது.
பச்சைநிறத்தில்[5] பிளந்து சுருளாக இருக்கும் மயிர் கொண்டவர்கள், பருத்த விலாப்புறங்களுடன் கொளுத்த சதை கொண்டவர்கள், உயர்ந்த தோள்களையும், அகன்ற கழுத்துகளையும் கொண்டவர்கள், அச்சமேற்படுத்தும் முகங்களையும், பருத்த ஆடுதசைகளையும் கொண்டவர்கள்,(16) (வாசுதேவனின் குதிரையான) சுக்ரீவத்தைப் போன்றோ, வினதையின் மகனான கருடனின் வாரிசுகளைப் போன்றோ சீற்றமுடையவர்கள், உருண்ட தலைகள், அகன்ற வாய், பூனைகளைப் போன்ற முகங்கள் ஆகியவற்றைக் கொண்டோர்,(17) கீச்சுக்குரலும், கோபம் நிறைந்த இயல்பும் கொண்டோர், ஆரவாரத்துடன் போரில் விரைவோர், தீய நடத்தையும், நிறைந்த அகந்தையும் கொண்டோர், பயங்கர முகத்தோற்றங்களைக் கொண்டோர், வெளிப்புற மாவட்டங்களில் வாழ்வோர் ஆகிய அனைவரும்,(18) தங்கள் உயிர்களைத் துச்சமாக மதித்து, போரில் இருந்து ஒருபோதும் தப்பி ஓடாதவர்களாக இருக்கிறார்கள். அத்தகு துருப்பினரே படையின் முன்னணியில் நிறுத்தப்பட வேண்டும். அவர்கள் எப்போதும் போரில் தங்கள் எதிரிகளைக் கொன்று, புறமுதுகிடாமல் கொல்லப்படுபவர்களுமாக இருக்கிறார்கள்.(19) தீய நடத்தையும் அந்நிய பழக்க வழக்கங்களும் கொண்டோர், மென்மையான பேச்சைத் தோல்வியின் அறிகுறியாகக் கருதுகிறர்கள். அவர்கள் மென்மையாக நடத்தப்பட்டால், எப்போதும் அரசுக்கு எதிரான கோபத்தையே அவர்கள் வெளிப்படுத்திக் கொண்டிருப்பார்கள்" என்றார் {பீஷ்மர்}.(20)
[5] கும்பகோணம் பதிப்பில் சிவப்பு மயிர் என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் ஒளிரும் மயிர்நுனி கொண்டோர் என்றிருக்கிறது.
சாந்திபர்வம் பகுதி – 101ல் உள்ள சுலோகங்கள் : 20
ஆங்கிலத்தில் | In English |