The art of conciliation! | Shanti-Parva-Section-102 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 102)
பதிவின் சுருக்கம் : வெற்றிபெறத்தக்க அறிகுறிகள் மற்றும் சகுனங்களையும், போர் தொடுக்கும் முன்பும், போரிடும்போதும், வெற்றியடைந்த பிறகும் மன்னன் நடந்து கொள்ள வேண்டிய முறைகளையும், சமரசக் கலையைக் குறித்தும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
Bhishma advises Yudhistra Pandavs and Shree Krishna on his death bed of arrows |
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாரதக் குலத்தின் காளையே, ஒரு படை அடையப் போகும் (எதிர்கால) வெற்றியின் நன்கறியப்பட்ட அறிகுறிகள் என்னென்ன? நான் அவற்றை அறிய விரும்புகிறேன்" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! பாரதக் குலத்தின் காளையே, ஒரு படையின் (எதிர்கால) வெற்றிக்கான நன்கறியப்பட்ட அறிகுறிகள் அனைத்தையும் நான் உனக்குச் சொல்வேன்.(2) தேவர்கள் கோபமடைந்து, மனிதர்கள் விதியால் உந்தப்படும்போது, கல்விமான்கள் தெய்வீக அறிவின் கண்ணால் அனைத்தையும் கண்டு,(3) மங்கலச் செயல்கள், ஹோமம் உள்ளிட்ட கேடு நீக்க {பரிகாரச்} சடங்குகள் ஆகியவற்றைச் செய்து, திருவாய்மொழிகளை {மந்திரங்களை} அமைதியாக ஓதுவதன் மூலம் அனைத்துத் தீங்குகளையும் தணிக்கின்றனர்[1].(4) ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, எந்தப் படையின் துருப்புகள் மற்றும் விலங்குகள் அனைத்தும் தளராத உற்சாகம் கொண்டிருக்குமோ, அதுவே உறுதியான வெற்றியை நிச்சயம் வெல்லும்.(5)
[1] "சாதகமற்ற விதி, தேவர்களின் கோபம் ஆகியவற்றால் உண்டாகும் பேரிடர்கள் அனைத்தையும் அகற்றி வெற்றியை அடைய கல்விமானான ஒரு சோதிடனும், கல்விமானான ஒரு புரோகிதனும் வழியாக இருக்கிறார்கள் என்பதைக் குறிப்பதே இவ்விரு சுலோகங்களின் நோக்கமாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
காற்றானது அந்தத் துருப்புகளின் பின்னால் நலம்பயக்கும் வகையில் {சாதகமாக} வீசிக் கொண்டிருக்கும். வானவில் தோன்றும். மேகங்கள் தங்கள் நிழல்களை அவர்களின் மீது படியச் செய்யும், சில நேரங்களில் சூரியனும் அவர்களின் மேல் ஒளிர்வான்.(6) நரிகளும், கருங்காக்கைகளும், கழுகுகளும் கூட அவர்களுக்கு மங்கலமானவையாகின்றன. இவை அந்தப் படையிடம் இவ்வாறு நடந்து கொண்டால், அதன் மூலம் உயர்ந்த வெற்றியை அடைவது நிச்சயமாகும்.(7) அவர்களது (வேள்வி) நெருப்புகள் மேல்நோக்கி ஒளிர்ந்து, சற்றே தெற்கு நோக்கிய புகையற்ற தழல்களுடனும், தூய காந்தியுடனும் சுடர்விடும். அவற்றின் மேல் ஊற்றப்படும் ஆகுதிகள் இனிமையான நறுமணத்தை வீசும். இவையே எதிர்கால வெற்றியின் அறிகுறிகளாகச் சொல்லப்படுகின்றன.(8) முழக்கப்படும் சங்குகளும், பேரிகைகளும், உரத்த ஆழமான ஒலிகளை வெளியிடும். போராளிகள் ஆர்வம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். இவையும் எதிர்கால வெற்றிக்கான அறிகுறிகளாகச் சொல்லப்படுகின்றன.(9) மானும், நான்கு கால் விலங்குகளும், போருக்குப் புறப்பட்டவரின், அல்லது புறப்பட ஆயத்தமாகிக் கொண்டிருப்பவரின் பின்னாலோ, இடதுபுறமோ தென்பட்டால், அவை மங்கலமானவையாகக் கருதப்படுகின்றன. போர்வீரர்கள் படுகொலையில் {போரில்} ஈடுபடும்போது அவர்களின் வலப்புறம் அவை தென்பட்டால், அதுவும் வெற்றிக்கான அறிகுறியாகவே கருதப்படுகிறது. எனினும், அவை அத்தகு மனிதர்களின் முன்னால் தோன்றினால், அவை பேரழிவையும், தோல்வியையும் குறிக்கின்றன.(10)
அன்னங்கள், நாரைகள் {கிரௌஞ்சங்கள்}, சதபத்திரங்கள் {மரங்கொத்திகள்}, சாஷங்கள் {காடைகள்} ஆகிய பறவைகள் மங்கல ஒலிகளையெழுப்புவதும், திறன்மிக்கப் போராளிகள் அனைவரும் உற்சாகமடைதலும் எதிர்கால வெற்றியின் குறியீடுகளாகக் கருதப்படுகின்றன.(11) எவருடைய வியூகமானது காந்தியால் சுடர்விடுகிறதோ, ஆயுதங்கள், இயந்திரங்கள், கவசங்கள், கொடிமரங்கள், சீற்றமிகு மனித முகங்களின் ஒளிரும் நிறங்கள் ஆகியவற்றின் விளைவால் பயங்கரமாகத் தெரிகிறதோ, அவர்கள் தங்களுடைய எதிரிகளை எப்போதும் வெல்வார்கள்.(12) படையின் போராளிகள் தூய நடத்தை கொண்டோராக, பணிவுள்ளவர்களாக, ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டுபவராக இருந்தால், அதுவும் எதிர்கால வெற்றிக்கான குறியீடாகக் கருதப்படுகிறது.(13) இனிமையான ஒலிகள், மணங்கள், உணர்ச்சிமிக்கத் தீண்டல் ஆகியவை மேலோங்கினால், போராளிகள் செய்நன்றி, பொறுமை ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டவர்களாக இருந்தால், அவையே வெற்றிக்கான வேர்களாகக் கருதப்படுகின்றன.(14) போரில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவனுக்கு இடப்புறமும், ஈடுபட இருப்பவனுக்கு வலப்புறமும் இருக்கும் காகம், மங்கலமானதாகக் கருதப்படுகிறது. பின்புறம் தென்பட்டால் அது கருத்தில் உள்ள நோக்கங்கள் நிறைவடையாமையைக் குறிக்கும், முன்புறம் தென்பட்டாலோ அஃது ஆபத்தின் முன்னறிவிப்பாகும்[2].(15)
[2] கும்பகோணம் பதிப்பில், "யுத்தத்திற்குப் புறப்பட்டவனுக்கு இடப்பக்கத்திலுள்ள காகத்தின் சப்தமும், ப்ரவேசிக்க விருப்பமுள்ளவனுக்கு வலப்பக்கத்திலுள்ள காகத்தின் சப்தமும், பின்புறத்திலுள்ள காகத்தின் சப்தமும் காரியஸித்தியை அறிவிக்கும். எதிரிலுள்ள சப்தமானது தடைசெய்கிறதாகும்" என்றிருக்கிறது.
ஓ! யுதிஷ்டிரா, நால்வகைப் படைகளைக் கொண்ட ஒரு பெரும்படையை {பட்டியல் சரிபார்க்கப்பட்டுக்} கணக்கிட்டபிறகும் கூட முதலில் அமைதியாக {சாமோபாயத்துடன்} நடந்து கொள்வாயாக. அமைதிக்கான உன் முயற்சிகள் தோல்வியடைந்தால், பிறகு நீ போரில் ஈடுபடலாம்.(16) ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, போரில் ஒருவன் அடையும் வெற்றியானது தாழ்ந்ததே. போரில் அடையப்படும் வெற்றியானது, உறுதியின்மை, அல்லது விதியைச் சார்ந்திருப்பதாகவே தெரிகிறது.(17) ஒரு பெரும்படையானது பிளந்து, துருப்புகள் தப்பி ஓடும்போது, அவர்களின் ஓட்டத்தைத் தடுப்பது என்பது மிகக் கடினமானதாகும். தப்பி ஓடும் வேகமானது, ஒரு பெரும் நீரூற்றுக்கோ, அச்சமடைந்த மான்மந்தைக்கோ ஒப்பானதாகும்.(18) சிலர் பிளந்தால், துணிச்சல்மிக்கவர்களும், போரில் திறன்மிக்கவர்களுமான பிறரும்கூடப் போதுமான காரணமின்றிப் பிளந்து செல்வார்கள். துணிச்சல்மிக்கப் படைவீரர்களைக் கொண்ட ஒரு பெரும்படையேகூட, ருருமான் மந்தையைப் போன்றதே[3].(19) சில வேளைகளில், உறுதியானவர்களும், ஒருவரையொருவர் சார்ந்திருப்பவர்களும், உற்சாகம் நிறைந்தவர்களும், தங்கள் உயிரையே விட ஆயத்தமாயிருப்பவர்களுமான வெறும் ஐம்பது {50} மனிதர்களே கூட, எண்ணிக்கையில் மிக அதிகமான பகைவர்களைக் கலங்கடிப்பதில் வெல்வதைக் காண முடிகிறது.(20) சில வேளைகளில், உறுதியானவர்களும், ஒற்றுமையுடன் நெருக்கமாக நிற்பவர்களும், உயர்ந்த குடிவழியில் வந்தவர்களும், அறிந்தவர்களால் மதிக்கப்படுபவர்களுமான ஐந்து, அல்லது ஆறு, அல்லது ஏழு மனிதர்கள் கூட, எண்ணிக்கையில் மிக அதிகமான பகைவர்களை வெல்கிறார்கள்.(21)
[3] "ஒரேயொரு மான் அச்சமடைந்து குறிப்பிட்ட திசையில் ஓடினால், காரணமேதும் அறியாமல் மொத்த மந்தையும் அதைப் பின்தொடரும். இந்த உவமை, பெரும்படைகளைப் பொறுத்தவரையில், அதிலும் குறிப்பாக ஆசியாவைச் சேர்ந்த படைகளைப் பொறுத்தவரையில் தனிப்பட்டவகையில் பொருந்துகிறது. ஒரே ஒரு படைப்பிரிவு தப்பி ஓடினாலும், எஞ்சிய அனைத்தும் அதைப் பின்தொடரும். அச்சமென்பது தொற்றிக்கொள்ளும் தன்மையுடையதாகும். வங்க உரையான ஜங்கம் Jangh பிழையானது என்பது தெளிவு. பம்பாய் உரையில் சங்கம் Sangha என்றிருக்கிறது. பர்துவான் மொழிபெயர்ப்பாளர்கள், பிழையான உரையைப் பின்பற்றியதால் பொருள் உணர முடியாத முயற்சியைச் செய்திருக்கிறார்கள். உண்மையென்னவென்றால், அவர்கள் அந்த உரையின் குற்றத்தில் ஐயங்கொள்ளவில்லை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "அதிக வேகமுள்ள நதிபோலவும், பயமுள்ள பெரிய மிருகங்கள் போலவும் அடக்க மிகக் கடினமான பெரிய சேரையும் பங்கமடைகிறது. அதிகமான பலமுள்ளதும், பெரியதும் மான்கூட்டத்திற்கு ஒப்பானதுமான சேனை காரணமன்று. அறிவுள்ளவர்களாயிருந்தாலும் சேனைகள் பங்கமடைவதாலேயே பங்கப்படுகிறார்கள்" என்றிருக்கிறது. இந்தச் சுலோகத்தில் கங்குலி சொல்லும் குழப்பம் கும்பகோணம் பதிப்பிலும் இருப்பதாகவே தெரிகிறது.
தவிர்க்கக்கூடிய வரை போரானது விரும்பத்தக்கதன்று. கொடைகளைக் கொடுத்து ஒற்றுமையின்மையை {வேற்றுமையை} உண்டாக்கும் இணக்க {சமரசக்} கொள்கையே முதலில் முயற்சிக்கப்பட வேண்டும். இவற்றின் பிறகே போரிட வேண்டும் என்று சொல்லப்படுகிறது.(22) சொர்க்கத்தின் சுடர்மிக்க வஜ்ரத்தைக் கண்டு, "ஓ!, எதன் மூலம் இது நிறைவை எட்டும்" என்று அச்சமடைந்தோர் சொல்வதைப் போல, (பகைவரின்) படையைக் கண்டதும் அச்சமானது மருண்டோரை முடமாக்குகிறது[4].(23) போரை உறுதிசெய்து கொண்டு, அதில் ஈடுபடப்போவோரின் அங்கங்களும், வெல்பவனின் அங்கங்களும் அபரிமிதமாக வியர்க்கின்றன[5].(24) ஓ! மன்னா, (போரின் இருக்கையாக விளங்கும்) மொத்த நாடும் கலக்கமடைந்து, அதிலிருக்கும் அசையும், மற்றும் அசையாத உயிரினங்களுடன் சேர்த்துப் பீடிக்கப்படுகிறது. உடல்கொண்ட உயிரினங்களின் மஜ்ஜைகள் ஆயுதங்களின் வெப்பத்தால் எரிக்கப்பட்டு, வலியால் {துன்பத்தால்} வாடுகின்றன.(25)
[4] "மூலத்தில் உள்ள அமைப்பையே தர நான் முயற்சித்திருக்கிறேன். இந்த எளிய சுலோகத்தைப் பர்துவான் பண்டிதர்கள் எவ்வாறு தவறாகப் புரிந்து கொண்டார்கள் என்பதைக் காண வியப்பாக இருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "மிகவும் ஜ்வலிக்கும் இடியினால் பயமுண்டாவது போலகச் சேனையின் வரவால், "இது நாசஞ்செய்துவிடுமோ" என்ற பயமானது, பயந்த ஸ்வபாவமுள்ளவர்களை மிகவும் துன்புறுத்தும்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "கோழைகள், தாக்க வரும் படைவீரர்களை, மின்னலுடன் கூடிய இடியைப் போலக் கண்டும், அடுத்ததாக அஃது எங்கே பாயப்போகிறது என்பதில் உறுதியில்லாமல் கண்டும் அஞ்சுவார்கள்" என்றிருக்கிறது[5] சமிதி Samiti என்பது போர் என்ற பொருளிலும், விஜயாஸ்யம் vijayasya என்பது விஜியகிஷமானயம் vijigishamaanaya என்றும் நீலகண்டரால் விளக்கப்படுகின்றன. எந்தக் குறுக்கீடும் இல்லாமல் விஜயாஸ்யம் என்பது இத்தகு பொருளில் தவறாகப் பொருள் கொள்ள முடியாது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "எதிர்த்து வரக்கூடிய யுத்தத்தைக் கண்டு பிறகு எவர்கள் எதிர்த்துச் செல்லுகிறார்களோ, அந்தப் படர்களின் சரீரங்களும் தேசத்திலுள்ளவர்களின் அங்கங்களும் வேர்வையைப் பெருகவிடும்" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், "தாக்குதலின் நோக்கத்தை அறிந்து படைவீரர்கள் முன்னேறும்போது, போர்வீரர்களின் உடல்களும், நாட்டின் உடலும் நடுங்குகிறது" என்றிருக்கிறது. கங்குலி சுட்டும் குழப்பம் இங்கே பிபேக்திப்ராயின் பதிப்பில் நேர்ந்திருப்பதாகத் தெரிகிறது.
எனவே, ஒரு மன்னன் கடுமையான நடவடிக்கைகளுடன் கலந்த இணக்க {சமரசக்} கலைகளை அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்த வேண்டும். மக்கள் பகைவர்களால் பீடிக்கப்படும்போது, {அப்பகைவரின்} வரையறைகளை ஏற்கும் மனநிலையையே அவர்கள் எப்போதும் வெளிப்படுத்துவார்கள்[6].(26) எதிரியின் கூட்டாளிகளுக்கு மத்தியில் ஒற்றுமையின்மையை {வேற்றுமையை} உண்டாக்க மறைமுகவர்கள் {ஒற்றர்கள்} அனுப்பப்பட வேண்டும். ஒற்றுமையின்மையை உண்டாக்கிய பிறகு, (நசுக்கப்பட வேண்டிய) எதிரியை விட அதிகப் பலசாலியாக இருக்கும் மன்னனிடம் அமைதியை ஏற்படுத்திக் கொள்வது மிகச்சிறந்தது.(27) படையெடுப்பாளன் இவ்வழியில் செயல்படவில்லையெனில், அவன் தன் எதிரியை நசுக்குவதில் ஒருபோதும் முற்றான வெற்றியை அடைய மாட்டான். பகைவரைக் கையாளும்போது, அனைத்துப் புறங்களில் இருந்தும் அவனை வளைப்பதில் கவனமாக வேண்டும்.(28) மன்னிக்கும் தன்மை {பொறுமை} எப்போதும் நல்லோருக்கே ஏற்படும். தீயோருக்கு அஃது ஏற்படாது. ஓ! பார்த்தா {யுதிஷ்டிரா}, மன்னிக்கும் தன்மை {பொறுமை} மற்றும் கடுமை ஆகியவற்றின் பயன்களை இப்போது கேட்பாயாக.(29)
- [6] "படையெடுக்கத் தன் படையை அனுப்பும் அதேவேளையில் மன்னன் இணக்கத்திற்கும் முயற்சிக்க வேண்டும். அத்தகு அரசியல் நடவடிக்கைகள் அமைதியை ஏற்படுத்தும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "அவர்களுக்கு அடிக்கடி கடுமையுடன் கலந்த பிரிய வசனம் பேச வேண்டும். பீடிக்கப்படுகிறவர்கள் எல்லாவிதத்தாலும் பிறர்களிடம் ஸந்தியை அடைவார்கள்" என்றிருக்கிறது.
படையெடுப்புக்குப் பிறகு, மன்னிக்கும் தன்மையை {பொறுமையை} வெளிப்படுத்தும் மன்னனின் புகழ் மிக விரிவான அளவில் பரவுகிறது. மன்னிக்கும் மனநிலையுடன் இருக்கும் ஒரு மனிதனின் பகைவர்களே கூட, மிக முக்கிய மீறலுக்கான குற்றச்சாட்டுக்கு அவன் ஆளாகும் போது, அவனை நம்புவார்கள்.(30) ஒரு மரத்தண்டானது {மூங்கில், பிரம்பு போன்ற மரங்கள்} சுடப்படாமல் நேராக்கப்பட்டால் {நிமிர்க்கப்பட்டால்}, அது மீண்டும் தன் பழைய நிலையையே மிக விரைவில் ஏற்கும். எனவே, பகைவனை முதலில் பீடித்த பிறகே அவனுக்கு மன்னிப்பு {பொறுமை} காட்டப்பட வேண்டும் என்று சம்பரன் {சம்பராசுரன்} சொல்லியிருக்கிறான்.(31) எனினும் சாத்திரங்களில் திறன்வாய்ந்த மனிதர்கள் இதை மெச்சுவதில்லை. மேலும் அவர்கள் அஃதை ஒரு நல்ல மன்னனுக்குரிய அறிகுறியாகவும் கருதவில்லை. மறுபுறம் அவர்கள், ஒரு தந்தை தன் மகனைக் கோபமில்லாமலும், அவனை அழித்துவிடாமலும் அடக்கித் தடுப்பதைப் போலவே, ஒரு பகைவனும் அடக்கித் தடுக்கப்பட வேண்டும் என்று சொல்கின்றனர்.(32) ஓ! யுதிஷ்டிரா, ஒரு மன்னன் கடுமையாக இருந்தால், அவன் அனைத்துயிர்களின் வெறுப்புக்கான பொருளாகிறான். மறுபுறம் மென்மையானவனாக இருந்தாலோ, அனைவராலும் அவமதிக்கப்படுகிறான். எனவே, நீ கடுமை, மென்மை ஆகிய இரண்டையும் பயில வேண்டும்.(33) ஓ! பாரதா, தாக்குவதற்கு முன்பும், தாக்கும்போதும் இனிமையான சொற்களைப் பேசுவாயாக; தாக்கிய பிறகு அவர்களிடம் கருணை காட்டி, நீ அவர்களுக்காக வருந்துவதையும், அழுவதையும் அவர்களுக்குப் புரிய வைப்பாயாக.(34)
மன்னன், ஒரு படையை வென்ற பிறகு, {எதிரிப் படையினரில்} எஞ்சியிருப்போரிடம், "என் துருப்புகளால் இவ்வளவு அதிகமான பேர் கொல்லப்பட்டிருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. ஐயோ, என்னால் மீண்டும் மீண்டும் அறிவுறுத்தப்பட்டும் அவர்கள் என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவில்லையே.(35) (கொல்லப்பட்டவர்கள்) அனைவரும் உயிரோடிருப்பதையே நான் விரும்பினேன். அவர்கள் இத்தகு மரணத்திற்குத் தகுந்தவர்களல்ல. அவர்கள் அனைவரும், நல்லோராகவும், உண்மையானவர்களாகவும், போரில் புறமுதுகிடாதவர்களாகவும் இருந்தனர். உண்மையில் அத்தகு மனிதர்கள் அரிதானவர்கள்.(36) போரில் அத்தகு வீரனைக் கொன்ற ஒருவன், நிச்சயமாக எனக்கு ஏற்பில்லாததையே செய்திருக்கிறான்" என்று சொல்ல வேண்டும். வெல்லப்பட்ட எதிரிப் படையில் எஞ்சியிருப்போரிடம் இவ்வாறு பேசிவிட்டு, தன் துருப்பினரில் எதிரியைத் துணிவுடன் கொன்றவர்களுக்கு மறைமுகமாகக் கௌரவங்களை அளிக்க வேண்டும்.(37)
பகைவரின் கைகளால் காயமடைந்து துன்புற்றிருக்கும் கொலையாளிகளுக்கு ஆறுதலளிக்கவும், தன்னோடு அவர்களை இணைத்துக் கொள்ளவும் விரும்பும் மன்னன், அவர்கள் கரங்களை அன்புடன் பற்றிக் கொண்டு அழவும் செய்யலாம்.(38) இவ்வாறு மன்னனானவன், அனைத்துச் சூழ்நிலைகளிலும் இணக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அச்சமற்றவனாக, அறவோனாக இருக்கும் மன்னன் ஒருவன், அனைத்து உயிரினங்களாலும் விரும்பப்படுகிறான்.(39) ஓ! பாரதா, அனைத்து உயிரினங்களும் அத்தகு ஆட்சியாளனையே நம்பும். அவர்களது நம்பிக்கையை வெல்லும் ஒருவன், தான் விரும்பும்வரை பூமியை அனுபவிப்பதில் வெல்கிறான்.(40) எனவே, மன்னனானவன் வஞ்சகத்தைக் கைவிட்டு, அனைத்துயிரினங்களின் நம்பிக்கையைப் பெற முயற்சிக்க வேண்டும். மேலும் அவன், பூமியை அனுபவிக்க முனைந்தால், தன் குடிமக்களை அச்சங்கள் அனைத்தில் இருந்து பாதுகாக்கவும் முனைய வேண்டும்" என்றார் {பீஷ்மர்}.(41)
சாந்திபர்வம் பகுதி – 102ல் உள்ள சுலோகங்கள் : 41
ஆங்கிலத்தில் | In English |