Who is a wicked man! | Shanti-Parva-Section-103 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 103)
பதிவின் சுருக்கம் : எதிரியை வெற்றி கொள்வது குறித்தும், தீயவர்களின் அறிகுறிகளைக் குறித்தும் இந்திரனுக்கும், பிருஹஸ்பதிக்கும் இடையில் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
Vrihaspati and Indra, Mahabharata (பிருஹஸ்பதியும் இந்திரனும் மகாபாரதம்) |
யுதிஷ்டிரன் {பீமரிடம்}, "ஓ! பாட்டா, மென்மையான எதிரியிடமும், கடுமையான எதிரியிடமும், பல கூட்டாளிகளையும், பெரிய படையையும் கொண்ட ஒருவனிடமும் ஒரு மன்னன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?" என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! யுதிஷ்டிரா, இது தொடர்பாகப் பிருஹஸ்பதிக்கும், இந்திரனுக்கும் இடையில் நடந்த உரையாடலை ஒரு பழங்கதை குறிப்பிடுகிறது.(2) ஒரு காலத்தில், பகைவீரர்களைக் கொல்பவனும், தேவர்களின் தலைவனுமான வாசவன் {இந்திரன்}, தன் கரங்களைக் கூப்பியபடியே பிருஹஸ்பதியை அணுகி, அவரை வணங்கி இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(3)
இந்திரன் {பிருஹஸ்பதியிடம்}, "ஓ! மறுபிறப்பாளரே, நான் என் எதிரிகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? {சூழ்ச்சித்}திட்டங்களைக் கொண்ட வழிமுறைகளின் {ராஜதந்திரங்களின்} மூலம் நான் எவ்வாறு அவர்களை {எதிரிகளை} அடக்க வேண்டும்?(4) இரு படைகளுக்கிடையிலான மோதலில் ஒரு தரப்பே வெற்றியை அடையும். நான் வென்ற சுடர்மிக்கச் செழிப்பும், என் பகைவர்கள் அனைவரின் வாட்டமும் என்னைக் கைவிடாதிருக்க, நான் எவ்வழியில் நடந்து கொள்ள வேண்டும்?" என்று கேட்டான்.(5) இவ்வாறு கேட்கப்பட்டவரும், அறம், பொருள் மற்றும் இன்பம் குறித்த காரியங்களில் திறன்மிக்கவரும், அரச கடமைகளின் அறிவைக் கொண்டவரும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவருமான பிருஹஸ்பதி, பின்வரும் வார்த்தைகளில் இந்திரனுக்குப் பதிலளித்தார்.(6)
பிருஹஸ்பதி {இந்திரனிடம்}, "ஒருவன் தன் எதிரிகளைச் சச்சரவின் {கலகத்தின்} மூலம் அடக்க ஒருபோதும் விரும்பக்கூடாது. கோபத்தில் தூண்டப்பட்ட, மன்னிக்கும் தன்மையற்ற {பொறுமையற்ற} சிறுவர்கள் மட்டுமே சச்சரவு செய்ய முனைவார்கள்.(7) எதிரியை அழிக்க விரும்பும் ஒருவன், அந்த எதிரி பாதுகாப்பை அடையும்படி செயல்படக்கூடாது. மறுபுறம், ஒருவன் தன் கோபத்தையோ, அச்சத்தையோ, மகிழ்ச்சியையோ ஒருபோதும் வெளிப்படுத்தக் கூடாது. அவன் அவற்றைத் தன் நெஞ்சுக்குள்ளேயே மறைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.(8) ஒருவன் உண்மையில் தன் எதிரியை நம்பக்கூடாது என்றாலும், அவனிடம் முழுமையான நம்பிக்கையுடனிருப்பது போல அவனிடம் நடந்து கொள்ள வேண்டும். ஒருவன் தன் எதிரிகளிடம் எப்போதும் இனிமையான வார்த்தைகளையே பேச வேண்டும், அவனுக்கு ஏற்பில்லாத எதையும் ஒருபோதும் செய்யக்கூடாது.(9) ஒருவன் பலனற்ற பகைச்செயல்களையும், துடுக்குத்தனமான பேச்சையும் {கோள் சொல்வதைத்} தவிர்க்க வேண்டும். ஒரு வேடனானவன், அவன் பிடிக்க, அல்லது கொல்ல விரும்பும் பறவைகள் போன்றே கவனமாகக் குரலெழுப்பி,(10) அவற்றைக் கைப்பற்றி, தன் ஆளுகைக்குள் கொண்டுவருவதைப் போலவே, ஓ! புரந்தரா {இந்திரா}, ஒரு மன்னனும் தன் எதிரிகளைத் தன் ஆளுகைக்குள் கொண்டுவந்த பிறகு, தான் விரும்பினால் அவர்களைக் கொல்லலாம்[1].(11)
[1] கும்பகோணம் பதிப்பில், "இந்திர, பக்ஷிபிடிக்கும் விதம்ஸம் {கண்ணி} என்னும் யந்திரங்கொண்டு பிழைப்பவன் முயற்சியுடன் பக்ஷிகளின் த்வனிபோன்ற த்வனியுள்ளவனாகி, அப்பக்ஷிகளைத் தன் வசமாக்கிக் கொள்வதுபோல அரசன் முயற்சியுடன் சத்துருக்களைத் தன்வசம் வரும்படி செய்து கொள்ள வேண்டும்; கொல்லவும் வேண்டும்" என்றிருக்கிறது.
ஒருவன் தன் எதிரிகளை வென்றபிறகு, கவலையில்லாமல் உறங்கக்கூடாது. தீயவனான பகைவன், கவனமில்லாமல் விடப்படும் நெருப்பு மீண்டும் தோன்றுவதைப் போலவே தன் தலையை மீண்டும் உயர்த்துவான்.(12) இரு தரப்பாலும் வெற்றியடையமுடியும் எனும்போது, பகைமைமிக்க ஆயுத மோதல் தவிர்க்கப்பட வேண்டும். ஒருவன் தன் எதிரியைப் பாதுகாப்பாக வளைத்து அமைதிப்படுத்திய பிறகு, அவனைத் தன் ஆளுகைக்குள் கொண்டுவந்து, தன் நோக்கத்தை ஈடேற்றிக் கொள்ள வேண்டும்.(13) ஒரு பகைவன் அவமதிக்கவும், புறக்கணிக்கவும் பட்டு, {வாழ்க்கை} நெடுகிலும் இதயத்தால் அடங்காதவனாக இருந்தால், அவன் தன் அமைச்சர்களுடனும், கொள்கை அறிந்த புத்திமான்களுடனும் கலந்தாலோசித்து,(14) உரிய காலம் நேரும்போது, அதிலும் குறிப்பாக அவமதித்தவன் தவறான அடியை எடுத்து வைக்கும்போது அவனைத் தாக்குவான். அத்தகு எதிரியானவன், தன் நம்பிக்கைக்குரிய முகவர்களை {ஒற்றர்களை} நியமித்து, அவனுடைய {அவமதித்தவனின்} திறனில்லா படைகளுக்கு மத்தியில் ஒற்றுமையின்மையை {வேற்றுமையை} உண்டாக்குவான்.(15)
ஒரு மன்னன், தன் எதிரிகளின் தொடக்கக் காலம், மத்திய காலம் மற்றும் முடிவுக்காலம் ஆகியவற்றை உறுதி செய்து {தெரிந்து} கொண்டு[2], இரகசியமாக அவர்களிடம் பகைவளர்க்க வேண்டும். அவன் நேர்மறையான ஆதாரங்கள் அனைத்தையும் உறுதி செய்து {தெரிந்து} கொண்டு, தன் எதிரியின் படைகளை ஊழலில் மலியச் செய்து, {பேதவழியில்}வேற்றுமையை உண்டாக்கும் கலைகளைப் பயன்படுத்தி, {தான வழியில்} கொடைகளைக் கொடுத்து, {தண்ட வழியில்} விஷம் கொடுத்துச் சிதைக்க வேண்டும். ஒரு மன்னன் தன் எதிரிகளின் தோழமையில் ஒருபோதும் வாழக்கூடாது. ஒரு மன்னன் நீண்ட காலம் காத்திருந்தாவது தன் எதிரிகளைக் கொல்ல வேண்டும். உண்மையில் அவன், குறைந்தது தன் எதிரி எதிர்பார்க்காத வேளையில் அவன் மீது பாயும் வகையில் வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும். ஒரு மன்னன் தன் வெற்றியை ஐயமற்றதாகச் செய்ய, தன் எதிரியின் துருப்பினரைக் கொல்ல வேண்டும் என்றாலும், பெரும் எண்ணிக்கையில் அவர்களை ஒருபோதும் கொல்லக்கூடாது.(18) மன்னன் தன் எதிரியின் இதயம் எரிச்சலடையும் வகையில் ஒருபோதும் அவனுக்குக் காயத்தை ஏற்படுத்தக்கூடாது. மேலும் அவன் சொற்கணைகளாலும் அவனுக்குக் காயங்களை உண்டாக்கக்கூடாது. வாய்ப்பேற்படும்போது, அவன் நழுவிவிடாதவாறு அவனைத் தாக்க வேண்டும். ஓ! தேவர்களின் தலைவா {இந்திரா}, எதிரிகளைக் கொல்ல விரும்பும் மன்னன், தன் எதிரிகளாக இருப்போரிடம் இவ்வாறே நடந்து கொள்ள வேண்டும்.(19) வாய்ப்புக்காகக் காத்திருக்கும் மனிதனைப் பொறுத்தவரையில், செயல் பட விரும்பும் அவனிடம் இருந்து வாய்ப்பு ஒரு முறை நழுவிச் சென்றால், மீண்டும் அஃது ஒருபோதும் வாய்க்காது.(20)
[2] "அஃதாவது, எதிரியைக் குறித்த அனைத்தையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஞானியரின் கருத்துகளின் படி செயல்படும் மன்னன், தன் எதிரியின் பலத்தை மட்டுமே உடைக்க வேண்டும். வாய்ப்பில்லாதபோது தன் நோக்கங்களை நிறைவேற்ற அவன் ஒருபோதும் முனையக்கூடாது. அதே வேளையில் வாய்ப்பு இருக்கும்போது, தன் எதிரியை வாட்டவும் கூடாது[3].(21) காமம், கோபம் மற்றும் செருக்கு ஆகியவற்றைக் கைவிடும் மன்னன், தன் எதிரிகளின் தவறுகளை {காலதாமதத்தைத்} தொடர்ந்து கண்காணித்துக் கவனத்துடன் செயல்பட வேண்டும்.(22) ஓ! தேவர்களின் தலைவா {இந்திரா}, இயல்பான மென்மை, தண்டனைகளில் கடுமை, செயல்படாமை, கவனக்குறைவு ஆகியவற்றின் மூலம் (எதிரிகளிடம்) செயல்படுத்தப்படும் வஞ்சகம் நிறைந்த சதித்திட்டங்கள் ஒரு மூட மன்னனை அழித்துவிடும்.(23) இந்த நான்கு தவறுகளை வெற்றிக் கொள்ளும் மன்னன், தன் எதிரிகளின் வஞ்சக சதித்திட்டங்களுக்கு எதிர்வினையாற்றி, அவர்கள் அனைவரையும் தாக்கி ஐயமில்லாமல் வெல்கிறான்.(24) (மன்னனின்) ஓர் இரகிசய நோக்கத்தை (வேறெந்த உதவியுமின்றி) நிறைவேற்றத் தகுந்தவன் ஒரேஒரு அமைச்சனே என்ற போது, அத்தகு இரகசிய நோக்கத்தைப் பொறுத்தவரை அந்தவொரு அமைச்சனிடம் மட்டுமே அவன் ஆலோசிக்க வேண்டும். பல அமைச்சர்களுடன் கலந்தாலோசித்தால், அவர்கள் அந்தப் பணியின் சுமையை அடுத்தவர்களின் தோள்களில் சுமத்த முயற்சித்து, இரகசியமாக வைக்கப்பட வேண்டிய அந்நோக்கத்தை விளம்பரப்படுத்திவிடக்கூடும்.(25) ஒரே ஒருவரிடம் ஆலோசிப்பது முறையாகாது எனும்போது மட்டுமே மன்னன் பலருடன் கலந்தாலோசிக்க வேண்டும்.
[3] "முற்றிலும் அழித்துவிடக்கூடாது என்பது பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ஸாதுக்களுக்கு இஷ்டமான முறையை அடைந்து பலத்தை உண்டுபணிக் கொள்ள வேண்டும். காலத்தால் காரியத்தைப் பயன்படச் செய்துகொள்ள வேண்டும். காலத்தையடையாமல் சத்துருவைப் பீடிக்கக்கூடாது" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், "சரியான காலத்திற்காகக் காத்திருக்கும் மனிதன் அந்தக் கணத்தைத் தவற விடக்கூடாது. இது காலத்தின் தர்மமாகும் {அறமாகும்}. மீண்டும் அந்த வாய்ப்புக் கிடைப்பது அரிது. எதிரியின் சக்தியைத் தகர்க்கும் நுணுக்கத்தை அறவோர் மதிப்பார்கள்" என்றிருக்கிறது.
எதிரி கண்ணுக்குப் புலப்படாதபோது, தெய்வீக தண்டனை அவர்களுக்கு ஏற்பட அஃதை {தெய்வீகத் தண்டனையை} இருப்புக்கு அழைக்கவேண்டும். அவர்கள் {எதிரிகள்} புலப்பட்டால், நால்வகைப் படைகள் நகர்த்தப்பட வேண்டும்[4].(26) மன்னன் முதலில் ஒற்றுமையின்மையை {வேற்றுமையை} உண்டாக்கும் {பேத} முறையையும், இணக்க {சாம} முறைகளையும் பயன்படுத்த வேண்டும். அந்தந்தக் குறிப்பிட்ட வழிமுறைக்கான காலம் வாய்க்கும்போது, அந்தக் குறிப்பிட்ட வழிமுறைகளையே செயல்படுத்த வேண்டும்.(27) சில நேரங்களில் மன்னன், தன் பலமிக்க எதிரிகளின் முன்பு நெடுஞ்சாண்கிடையாக விழவும் வேண்டும். மேலும் கவனமாகச் செயல்படும் அவன், வெற்றியாளன் {எதிரி} கவனமற்றவனாக இருக்கும்போது அவனுக்கு அழிவை ஏற்படுத்த முயல வேண்டும்.(28) நெடுஞ்சாண்கிடையாக விழுவது, கப்பத்தைக் கொடையாகக் கொடுப்பது, இனிய சொற்கள் பேசுவது ஆகியவற்றின் மூலம் ஒருவன் பலமிக்க மன்னனின் எதிரில் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும். (இத்தகு செயல்களுக்கான வாய்ப்பு நேரும்போது) ஒருவன் தன் பலமிக்க எதிரி ஐயங்கொள்ளும் அளவுக்கு எச்செயலையும் ஒருபோதும் செய்யக்கூடாது.(29) அத்தகு சூழ்நிலைகளில் பலவீனமான ஓர் ஆட்சியாளன், ஐயத்தை எழுப்பும் செயல்கள் அனைத்தையும் கவனமாகத் தவிர்க்க வேண்டும். மேலும், வெற்றியாளனான ஒரு மன்னன், வெல்லப்பட்டவனான எதிரிகள் எப்போதும் விழிப்புடன் இருப்பார்கள் என்பதைக் கருத்திக் கொண்டு, அவர்களை நம்பாமல் இருக்க வேண்டும்.(30)
[4] "இங்கே குறிப்பிடப்படும் பிரம்ம தண்டம் Brahma-dandah என்பது தேவர்களின் மூலம் கிடைக்கும் தண்டனையாகும். பகைவர்கள் கண்ணுக்குப்புலப்படாத போது, அஃதாவது அவர்கள் தொலைவில் இருக்கும்போது, மன்னன் அவர்களின் அழிவுக்காக அதர்வணச் சடங்குகளைச் செய்யுமாறு தன் புரோகிதரை நியமிக்க வேண்டும். எனினும், அவர்கள் தென்பட்டாலோ, அஃதாவது அருகில் இருக்கும்போது, அவன் அதர்வனச் சடங்குகளைச் சார்ந்திராமல் தன் துருப்புகளை நகர்த்த வேண்டும் என்பது இங்கே பொருளாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஓ! தேவர்களில் சிறந்தவனே {இந்திரனே}, ஓ! இறவாதவர்களின் ஆட்சியாளனே, செழிப்பை அடைவதைவிட, அமைதியற்ற மனநிலை கொண்ட மனிதர்களுக்கு மிகக் கடினமானது வேறேதும் இல்லை.(31) அமைதியற்ற மனோநிலை கொண்ட மனிதர்களின் இருப்பே ஆபத்து நிறைந்ததாகும். எனவே, மன்னர்கள் தங்கள் நண்பர்களையும், எதிரிகளையும் கவனமாக உறுதி செய்ய {தேர்ந்தெடுக்க} வேண்டும்.(32) ஒரு மன்னன் மென்மையடைந்தால், அவன் அவமதிக்கப்படுகிறான். அவன் மூர்க்கமடைந்தால், மக்களை அச்சத்தில் ஆழ்த்துகிறான். எனவே, நீ மூர்க்கனாயிராதே, அதே வேளையில் மென்மையானவனாகவும் இராதே. கடுமை, மென்மை ஆகிய இரண்டையும் கொண்டவனாக இருப்பாயாக.(33) மூர்க்கமான நீரோடை உயர்ந்த கரையைக்கூட அரித்து, நிலச்சரிவை ஏற்படுத்துவதைப் போலவே, கவனமின்மையும், தவறும் ஒரு நாட்டையே அழித்துவிடும்.(34) ஒரே நேரத்தில் பல எதிரிகளை ஒருபோதும் எதிர்க்காதே. ஓ! புரந்தரா, இணக்க {சாம}, கொடை {தான}, வேற்றுமையை உண்டாக்குதல் {பேதம்} ஆகிய கலைகளைக் கொண்டு அவர்கள் ஒருவர் பின் ஒருவராகக் கலங்கடிக்கப்பட வேண்டும்.(35)
(சிறு எண்ணிக்கையில்) எஞ்சியிருப்போரைப் பொறுத்தவரையில், வெற்றியாளன் அவர்களிடம் அமைதியுடன் நடந்து கொள்ளலாம். நுண்ணறிவைக் கொண்ட ஒரு மன்னன், ஒரே நேரத்தில் (தன் எதிரிகள்) அனைவரையும் நொறுக்க இயன்றவனாக இருப்பினும், அவன் அவ்வாறு செயல்படக்கூடாது[5].(36) ஒரு மன்னனானவன், தன்னிடம் அர்ப்பணிப்புள்ள குதிரை, யானைகள், தேர்கள், காலாள், இயந்திரங்கள் ஆகியவை அடங்கிய ஆறு அங்கங்களைக் கொண்ட ஒரு பெரிய படையைக்[6] கொண்டிருப்பவனானால்,(37) ஒரு நியாயமான ஒப்பீட்டளவில் பல விதங்களில் தன் எதிரியைவிடத் தான் மேன்மையானவனாக இருப்பதாகக் கருதினால், அப்போது அவன் தயங்காமல் வெளிப்படையாக எதிரியைத் தாக்க வேண்டும்.(38) எதிரி பலவானாக இருந்தால், (அவனிடம்) இணக்கக் கொள்கையைப் பின்பற்றுவது பாராட்டுக்குரியதல்ல. மறுபறம், இரகசிய வழிமுறைகளில் தண்டிக்கும் கொள்கையே பின்பற்றப்படவேண்டும். நிர்வாகத்தின் ஏழு கிளைகளைப் பொறுத்தவரையில் பயிர் இழப்பு, கிணறுகள் மற்றும் குளங்களுக்கு நஞ்சூட்டுவது, ஐயுணர்வை ஏற்படுத்தல்ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும் என்பதால், அத்தகு எதிரிகளிடம் மென்மையான நடத்தையோ, மீண்டும் மீண்டும் படையெடுப்பதோ பின்பற்றப்படக்கூடாது[7]. (39) அத்தகு சந்தர்ப்பங்களில் மன்னன் பல்வேறு வஞ்சனைகளையும், பல்வகைச் சதிச்செயல்களையும் செய்து, பல்வேறு வகைக் கபட நடத்தைகளையும் மேற்கொண்டு எதிரிகளை ஒருவருக்கொருவர் எதிராகத் திருப்ப வேண்டும்.(40)
[5] "நிபுணம் Nipunam என்பது நீலகண்டரால் குசலம் Kusalam என்று விளக்கப்படுகிறது, அதன்பிறகு திராபேத், பேஸ்தும் drabhet, pestum ஆகியன புரிந்து கொள்ளப்படுகின்றன. பர்துவான் பதிப்பில் 35, 36 ஸ்லோகங்கள் முற்றிலும் பொருளற்றவையாக இருக்கின்றன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "ஒரே ஸமயத்தில் பல பகைவர்களைப் பீடிப்பது கூடாது. ஓ புரந்தர, இவர்களில் ஒவ்வொருவனையும் ஸாமத்தாலும், தானத்தாலும், பேதத்தாலும், தண்டத்தாலும் நன்றாகக் கசக்கியபின் மிச்சமுள்ளவர்களிடம் ஸாமர்த்தியம் போலச் செய்ய வேண்டும். புத்தியுள்ளவனும் பண்டிதனுமாயிருப்பவன் சக்தியுள்ளவனாயிருந்தாலும் யாவர்களையும் எதிர்த்துச் செல்லக்கூடாது" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "ஒருவன் ஒரே நேரத்தில் பல எதிரிகளை எதிர்க்கக்கூடாது. ஓ புரந்தரா, அவன் சாம, தான, பேத, தண்டத்தைப் பயன்படுத்த வேண்டும். இவற்றை ஒவ்வொன்றாகச் செய்ய வேண்டும். ஒருவன் திறன்பெற்றவனாக இருப்பினும், ஒரே நேரத்தில் தீயோர் அனைவரையும் எதிர்த்துச் செயல்புரியக் கூடாது. நுண்ணறிவு கொண்ட மன்னன் ஒரே நேரத்தில் அனைவருடனும் தன்னால் மோத முடியாது என்பதை அறிவான்" என்றிருக்கிறது.[6] "படையின் ஆறு அங்கங்கள், காலாள், குதிரை, யானைகள், தேர்கள், கருவூலம் ஆகியவை மற்றும் முகாமைப் பின்தொடரும் வணிகர்கள் ஆவர்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[7] "இந்தச் சுலோகத்துக்கு நான் நீலகண்டரின் விளக்கத்தைப் பின்பற்றியிருக்கிறேன். படையெடுப்புகளின் விளைவாகத் தவிர்க்க முடியாத பயிர் இழப்பு முதலியன என்பது அவ்விளக்கத்தால் ஏற்படுவதே. மன்னன் அச்சந்தர்ப்பங்களில், நிர்வாகத்தின் ஏழு கிளைகளில் குறிப்பிட்ட கவனம் செலுத்த வேண்டியவனாவான். இவை அனைத்தும் இனிமையற்றவையாக இருப்பதால் அவை தவிர்க்கப்பட வேண்டும் என்பது பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "எப்பொழுதும் (யுத்தத்திற்கு) யாத்திரை செய்வதும் சிறந்ததன்று. (அதில் நேரும்) தான்யங்களின் நாசமும், விஷ முதலியவற்றைச் சேர்த்துவைப்பதும் அடிக்கடி அமாத்யன் முதலிய பிரகிருதியைப் பற்றிய விசாரமும் இல்லாமலிருக்கும். (ஆகையால்) பலவிதமான மாயைகளையும், ஒருவரையொருவர் எதிர்க்கும்படி செய்வதையும் கபடமான கொலையையும் செய்விக்க வேண்டும்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "பயிர்களை அழிப்பது, நஞ்சு கலக்கும் செயல்கள், இயற்கையை அதிகமாக அழிப்பது ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும். மன்னன் பகை நாட்டின் நகரங்களில் நம்பிக்குரிய மனிதர்களின் மூலம் தீய மற்றும் நிந்திக்கத்தக்க செயல்களைச் செய்ய வைத்து, வஞ்சகமாக மக்களுக்கு மத்தியில் வேற்றுமையை உண்டாக்க வேண்டும்" என்றிருக்கிறது.
ஓ! பலனையும், விருத்திரனையும் கொன்றவனே {இந்திரனே}, எதிரிகளைத் துரத்தும் மன்னர்கள், அவர்களது கோபுரங்களில் {நகரத்திற்குள்} நுழைந்து, அங்கே கிடைக்கும் சிறந்த பொருட்களைக் கைப்பற்றித் தனதாக்கி, தங்கள் சொந்த நகரங்கள் மற்றும் ஆட்சிப்பகுதிகளில் உரிய கொள்கை நடவடிக்கைகளை வகுக்கின்றனர்.(41) மன்னர்கள், பகைவருக்குத் தனிமையில் {மறைமுகமாகச்} செல்வக்கொடையளித்து, வெளிப்படையாக அவர்களது உடைமைகளைப் பறிமுதல் செய்து, பொருள் சார்ந்த காயத்தை அவர்களுக்கு ஏற்படுத்தாமல், அவர்கள் அனைவரும் தீய மனிதர்கள் என்றும், அவர்களது தவறான செயல்களுக்காகவே அவர்கள் துன்புறுகிறார்கள் என்பதையும் அறிவிக்கும் வகையில் தங்கள் பகைவரின் நகரங்கள் மற்றும் மாகாணங்களுக்குத் தங்கள் ஒற்றர்களை அனுப்ப வேண்டும்.(42) அதே வேளையில், தங்கள் சொந்த நகரங்களில் சாத்திரங்களை அறிந்தவர்களும், அனைத்துச் சாதனைகளையும் கொண்டவர்களும், புனித நூல்களின் விதிகளை அறிந்தவர்களும், கல்வியாளர்களுமான மனிதர்களைக் கொண்டு, எதிரிகளைக் கொல்வதற்கான சடங்குகளையும், மந்திரங்களை ஓதுவதையும் செய்ய வைக்க வேண்டும்" என்றார் {பிருஹஸ்பதி}.(43)
இந்திரன் {பிருஹஸ்பதியிடம்}, "ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, ஒரு தீய மனிதனின் அறிகுறிகள் என்னென்ன? என்னால் கேட்கப்படும் நீர், நான் எவ்வாறு தீயவர்களை அறிவது என்பதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(44)
பிருஹஸ்பதி {இந்திரனிடம்}, "எவன் அடுத்தவரின் குறைகளை அவர்களின் முதுகுக்குப் பின்னால் அறிவிக்கிறானோ; எவன் அடுத்தவரின் சாதனைகளில் பொறாமை கொள்கிறானோ; எவன் தன் முன்னிலையில் வேறு மக்களின் தகுதிகள் அறிவிக்கப்படும்போது, அந்தக் கூட்டுத்துதியில் சேரத் தயங்கி அமைதியாக இருக்கிறானோ அவனே தீய மனிதன்.(45) அத்தகு சந்தர்ப்பங்களில் அமைதியாக இருப்பது மட்டுமே தீமையின் குறியீடு அல்ல. எனினும், அத்தகு நேரங்களில் ஒரு தீய மனிதன், நெடும் மூச்சு விடுவான், தன் உதடுகளைக் கடித்துக் கொள்வான், மேலும் தன் தலையையும் அசைப்பான்.(46) அத்தகு மனிதன் எப்போதும் சமூகத்துடன் கலந்து, தொடர்பில்லாமல் பேசுவான்[8]. அத்தகு மனிதன் எந்த மனிதனுக்கு எந்த உறுதியை அளித்தானோ, அந்த மனிதனின் கண் தன் மேல் இல்லாதவரை, அஃதை ஒருபோதும் செய்யமாட்டான். அந்த மனிதனின் கண் அவன் மீது இருக்கும்போதோ, அந்தத் தீய மனிதன் அதுகுறித்து மறைமுகமாகக் கூடக் குறிப்பிட மாட்டான்.(47) அந்தத் தீய மனிதன் (பிறரைச் சேர்த்துக் கொள்ளாமல் தான் மட்டும்) தனியாக உண்பான், "மற்ற நாட்களைப் போல இல்லாமல் இன்று எதுவும் சரியில்லை" என்று தன் முன் வைக்கப்படும் உணவிலும் குறை கண்டுபிடிப்பான். அமர்வது, படுப்பது, போவது தொடர்பான சூழ்நிலைகளில் கூட அவனுடைய மனோநிலை வெளிப்படும்[9].(48) கவலைநிறைந்த சந்தர்ப்பங்களில் கவலைப்படுவதும், மகிழ்ச்சிமிக்கத் தருணங்களில் மகிழ்ந்திருப்பதும் ஒரு நண்பனின் அறிகுறிகளாகும். இதற்கு மாறான நடத்தையே ஓர் எதிரிக்கான அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது.(49) ஓ! தேவர்களின் ஆட்சியாளா {இந்திரா}, இஃதை உன் இதயத்திலேயே வைத்துக் கொள்வாயாக. தீய மனிதர்களின் மனோநிலையை ஒருபோதும் மறைக்க முடியாது.(50) ஓ! தேவர்களில் முதன்மையானவனே, தீய மனிதர்களுக்கான அறிகுறிகள் என்னென்ன என்பதை இப்போது நான் உனக்குச் சொல்லிவிட்டேன். ஓ! தேவர்களின் ஆட்சியாளா, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள உண்மைகளைக் கேட்டு முறைப்படி அதைப் பின்பற்றுவாயாக" என்றார் {பிருஹஸ்பதி}".(51)
[8] "அஃதாவது, இயல்பாக எழாத விவாதங்களைத் தொடக்கி வைப்பான். அதுவும் தான் மட்டுமே விருப்பப்படுவதும், கேட்பவர்களுக்கு விருப்பமில்லாததுமான பிறர் குறைகளை அறிவிக்கும் நோக்கில் அந்த விவாதங்களைத் தொடக்கி வைப்பான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[9] மேற்கண்ட முழுப் பத்தியும் கும்பகோணம் பதிப்பில், "பக்கத்தில் குற்றங்களைச் சொல்லுவான்; நற்குணங்களில் அஸூயைப்படுவான்; பிறர்களால் புகழப்படும்பொழுது முகத்தைத் திருப்பிக் கொண்டு பேசாமலிருப்பான்; காரணமில்லாமல் பேசாமலிருப்பதிலும் தெரிந்து கொள்ள வேண்டும்; பெருமூச்சையும், உதட்டைக்கடிப்பதையும், தலையை அசைப்பதையும் அடிக்கடி நெருங்கியிருத்தலையும் செய்வான்; ஸம்பந்தமில்லாதவனைப் போலப் பேசுவான்; காணாதவனைப் போல வேறுபாட்டை அடைவான்; கண்டாலும் பேசமாட்டான்; வேறாக வந்து புசிப்பான். இப்பொழுது இஃதுதான் விதிப்படியுள்ள அடையாளம் என்பதன்று. இருப்பதிலும், படுப்பதிலும், போவதிலும் விசேஷமான எண்ணங்களை அறிய வேண்டும்ம என்றிருக்கிறது.
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "பிருஹஸ்பதியின் இவ்வார்த்தைகளைக் கேட்ட புரந்தரன் {இந்திரன்}, அவற்றின் படியே உறுதியுடன் செயல்பட்டு தன் எதிரிகளை அடக்குவதில் ஈடுபட்டான். வெற்றியில் நோக்கம் கொண்ட அந்த எதிரிகளைக் கொல்பவன், வாய்ப்பு ஏற்பட்ட போது, இந்த அறிவுரைகளுக்குக் கீழ்ப்படிந்து, தன் எதிரிகள் அனைவரையும் அடக்கினான்".(52)
சாந்திபர்வம் பகுதி – 103ல் உள்ள சுலோகங்கள் : 52
ஆங்கிலத்தில் | In English |