Kshemadarcin and Kalakavrikshiya! | Shanti-Parva-Section-104 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 104)
பதிவின் சுருக்கம் : நாட்டை இழந்தவனும், அறவோனுமான மன்னனின் ஒழுக்கம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து க்ஷேமதர்சினுக்கும் காலகவிருக்ஷீயருக்கும் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
Kshemadarcin and Kalakavrikshiya - Mahabharata
க்ஷேமதர்சின் _ காலவிருக்ஷீயர் -மகாபாரதம்
|
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "தன் சொந்த அதிகாரிகளாலேயே எதிர்க்கப்படுபவனும், கருவூலமும், படையும் தன் கட்டுப்பாட்டில் இல்லாதவனும், செல்வமில்லாதவனும், அறவோனுமான ஒரு மன்னன் மகிழ்ச்சியை அடைவதற்காகத் தன்னை எவ்வாறு நடத்திக் கொள்ள வேண்டும்?" என்று கேட்டான்.(1)
Kosala Map - Mahabharata |
[1] "வங்க உரைகளில் 3ம் ஸ்லோகத்தின் முதல் வரியில் யாத்திரை Yatra என்பதற்குப் பதில், பிழையாகச் சத்ரு Catru என்ற வார்த்தை இருக்கிறது. பர்துவான் பண்டிதர்களும் தங்கள் பதிப்பில் அதே பிழையைத் தொடர்கிறார்கள். கே.பி.சின்ஹா இதைத் தவிர்க்கிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். சாந்தி பர்வம் 82ம் பகுதியில் இதே க்ஷேமதர்சின் மற்றும் காலகவிருக்ஷீயர் ஆகியோருக்கிடையில் நடந்த வேறொரு உரையாடலைப் https://mahabharatham.arasan.info/2018/02/Mahabharatha-Santi-Parva-Section-82.html பீஷ்மர் யுதிஷ்டிரனுக்குச் சொல்கிறார்.
மன்னன் {க்ஷேமதர்சின் காலகவிருக்ஷீயரிடம்}, "ஓ! பிராமணரே, செல்வம் வேண்டும் என்னைப் போன்ற ஒரு மனிதன், மீண்டும் மீண்டும் முயற்சி செய்தும், தன் நாட்டை மீட்கத் தவறினால், தற்கொலை, களவு, கொள்ளை, அடுத்தவரின் புகலிடத்தை நாடுதல், மேலும் இது போன்ற அற்ப காரியங்களைத் தவிர வேறு என்ன செய்ய வேண்டும்? ஓ! மனிதர்களில் சிறந்தவரே, இஃதை எனக்குச் சொல்வீராக.(4,5) அறநெறிகளை அறிந்தவரும், மகிமை நிறைந்தவருமான உம்மைப் போன்ற ஒருவரே, மன, அல்லது உடல் நோயால் பீடிக்கப்பட்டிருக்கும் மனிதனுக்குப் புகலிடமாவீர்.(6) மனிதன் தன் ஆசைகளைக் கைவிட வேண்டும். இவ்வழியில் இன்ப துன்பங்களைக் கைவிட்டு, அறிவெனும் செல்வத்தை ஈட்டிச் செயல்படும் ஒருவன் புகழை அடைவதில் வெல்கிறான். செல்வத்தைச் சார்ந்து உலக இன்பங்களில் பற்று கொள்வோருக்காக நான் வருந்துகிறேன். எனினும், அவை யாவும் ஒரு கனவைப் போல மறைந்து விடுகின்றன.(8) பரந்த செல்வத்தைக் கைவிட முடிந்தோர், மிகக் கடினமான சாதனையை அடைகிறார்கள். எங்களைப் பொறுத்தவரையில், எங்களிடம் இல்லாத செல்வத்தைக் கைவிட முடியாதவர்களாக நாங்கள் இருக்கிறோம்[2].(9) செழிப்பை இழந்து, மகிழ்ச்சியற்ற துயரமான இழிநிலையில் நான் விழுந்துவிட்டேன். ஓ! பிராமணரே, எந்த மகிழ்ச்சிக்காக நான் இன்னும் முயற்சி செய்ய வேண்டும் என்பதை எனக்குப் போதிப்பீராக" எனக் கேட்டான்.(10) நுண்ணறிவு மிக்க அந்தக் கோசல இளவரசனால் {க்ஷேமதர்சினால்} இவ்வாறு கேட்கப்பட்டவரும், பெரும் காந்தியைக் கொண்டவருமான தவசி காலகவிருக்ஷீயர் பின்வரும் பதிலை அளித்தார்.(11)
[2] "என் நாட்டை இழந்துவிட்டாலும், அதை மீட்கும் நம்பிக்கையை என்னால் கைவிட முடியவில்லை என்பது பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
தவசி {காலகவிருக்ஷீயர் க்ஷேமதர்சினிடம்}, "ஏற்கனவே நீ அதைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறாய் என்றே தெரிகிறது. அறிவைக் கொண்டவனான நீ, உன் எண்ணத்தைப் போலவே செயல்பட வேண்டும். "நான் மற்றும் நான் கொண்டவை உள்ளிட்ட இவை அனைத்தும் நிலையற்றவை என்றே நான் காண்கிறேன்" என்ற உன் நம்பிக்கை சரியானதே.(12) ஓ! இளவரசே, எப்பொருள் இருக்கிறது என நீ கருதுகிறாயோ, அஃது உண்மையில் இல்லை என்று அறிவாயாக. ஞானம் கொண்ட மனிதன் இஃதை அறிகிறான், அதன்படி, எத்துன்பம் அவனுக்கு ஏற்பட்டாலும் அவன் ஒருபோதும் துன்பப்படுவதில்லை.(13) எவை நடந்தனவோ, எவை நடக்க இருக்கின்றனவோ, அவை அனைத்தும் உண்மையற்றவை. அனைவரும் அறிய வேண்டிய இதை நீ அறியும்போது, அநீதியில் {அதர்மத்தில்} இருந்து விடுபடுவாய்.(14) முன்பு ஈட்டப்பட்ட, அடையப்பட்ட பொருட்கள், அதற்குப் பின் ஈட்டப்பட்ட அடையப்பட்ட பொருட்கள் யாவும் அழிந்துவிட்டன. இதைக் கருத்தில் கொண்டால், எவன் தான் துன்பப்பட மாட்டான்?(15)
எப்பொருட்கள் இருந்தனவோ, அவை ஒன்றும் இப்போது இல்லை. இப்போது இருப்பவையும் இல்லாமலே போகும். துயரத்திற்கு அவற்றை மீட்கும் சக்தி கிடையாது. எனவே, ஒருவன் துன்பத்தில் ஈடுபடக்கூடாது.(16) ஓ! மன்னா {க்ஷேமதர்சனா}, இன்று உன் தந்தையும் எங்கே? உன் பாட்டன் எங்கே? இன்று நீயும் அவர்களைக் காணவில்லை. அவர்களும் இப்போது உன்னைக் காணவில்லை.(17) உனது நிலையின்மையைக் கருத்தில் கொண்டால், அவற்றுக்காக நீ ஏன் வருந்தப் போகிறாய்? நுண்ணறிவின் துணையுடன் சிந்திப்பாயாக, நீயும் இருக்க மாட்டாய் என்பதை நீ புரிந்து கொள்வாய்.(18) ஓ! மன்னா, நான், நீ, உன் நண்பர்கள், எதிரிகள் ஆகியோர் அனைவரும் நிச்சயம் இல்லாமல் போவோம். உண்மையில், அனைத்தும் இல்லாமலே போகும்.(19) இன்று இருபது, அல்லது முப்பது வயது கொண்டோர் அனைவரும், அடுத்த நூறு ஆண்டுகளில் நிச்சயம் இறந்துவிடுவார்கள்.(20)
ஒரு மனிதன் தன் பரந்த உடைமைகளை விட்டுக் கொடுக்கும் இதயம் இல்லாதவனாக இருந்தால், அவன் தன் உடைமைகள் தனதல்ல என்று நினைக்க முயற்சித்து, அதன் மூலம் தன் நன்மையை நாட வேண்டும்[3].(21) எதிர்காலத்தில் கிடைக்கப்போகும் உடைமைகளும் தன்னுடையவையல்ல என அவன் கருத வேண்டும். ஏற்கனவே மறைந்த உடைமைகளும் தன்னுடையவையல்ல எனவும் ஒருவன் கருத வேண்டும். விதியே அனைத்திலும் வலியது எனக் கருதப்பட வேண்டும். இவ்வகையில் சிந்திப்போரே ஞானம் கொண்டவர்களாகச் சொல்லப்படுகிறார்கள். இவ்வகையில் பொருட்களைக் காணும் பழக்கம் நல்ல பண்பாகும்.(22) புத்தியிலும், முயற்சியிலும் உனக்கு இணையானவர்களாகவோ, மேன்மையானவர்களாகவோ உள்ள பல மனிதர்கள், செல்வதை இழந்தவர்களாக உயிரோடு இருந்தாலும், நாடுகளை ஒருபோதும் ஆள்வதில்லை.(23) அவர்கள் உன்னைப் போன்றோரல்ல. அவர்கள் உன்னைப் போலத் துயரத்தில் ஈடுபடுவதில்லை. எனவே, இவ்வழியில் துயருறுவதை நிறுத்துவாயாக. நீ புத்தியிலும், முயற்சியிலும் அம்மனிதர்களை விட உயர்ந்தவனோ, குறைந்தது அவர்களுக்கு இணையானவனோ இல்லையா?" என்று கேட்டார்{காலகவிருக்ஷீயர்}.(24)
[3] "அஃதாவது, அவன் அந்தச் செல்வம் தன் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பிறருக்காகவே தன்னிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று நினைக்க வேண்டும். அப்போது அவன் ஈகை பயில்வதில் வெல்வான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
மன்னன் {க்ஷேமதர்சின் காலகவிருக்ஷீயரிடம்}, "என் நாடானது, அது கொண்டிருந்த அனைத்துப் பொருட்களுடன் எந்த முயற்சியுமில்லாமல் என்னால் {முன்பு} வெல்லப்பட்டது என்று கருதுகிறேன். எனினும், ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே}, அனைத்திலும் வலிமையான காலம் அஃதை அபகரித்து விட்டது.(25) ஓர் ஓடையால் அடித்துச் செல்லப்படுவதைப் போல என் நாடு காலத்தால் அடித்துச் செல்லப்பட்டதன் விளைவாகவே, (ஈகை பெறுவதன் மூலம்) அடையும் எதையும் கொண்டு என்னை ஆதரித்துக் கொள்ள வேண்டிய நிலையில் நான் இருக்கிறேன் என்பதைக் காண்கிறேன்" என்றான்.(26)
தவசி {காலகவிருக்ஷீயர் க்ஷேமதர்சினிடம்}, "(வாழ்வில்) உண்மை அறிவால் தூண்டப்பட்ட ஒருவன், கடந்த காலத்திற்காகவோ, எதிர்காலத்திற்காகவோ ஒருபோதும் வருந்தக்கூடாது. ஓ! கோசல இளவரசே {க்ஷேமதர்சின்}, நீ உன் கவனத்தைச் செலுத்தும் ஒவ்வொரு காரியத்திலும் நீ இத்தகு மனநிலையையே கொள்வாயாக.(27) கிடைக்கமுடியாததை அல்லாமல், கிடைக்கக்கூடியதை மட்டுமே அடைய விரும்பி, தற்போது நீ கொண்டிருக்கும் உடைமைகளில் இன்புற்று, இல்லாததை நினைத்து ஒருபோதும் வருந்தாமல் இருப்பாயாக.(28) ஓ! கோசல இளவரசே, எளிமையாக நீ அடைந்த எதையும் கொண்டு நீ மகிழ்ச்சியாக இருப்பாயாக. செழிப்பை இழந்தாலும், தூய மனநிலையைப் பாதுகாக்க வேண்டுமேயன்றி ஒருபோதும் அதற்காக வருந்தக்கூடாது.(29) மூடப்புத்தி கொண்ட பேரற்ற மனிதனே, முந்தைய செழிப்பை இழக்கும்போது, தன் தற்போதைய உடைமைகளில் நிறைவில்லாமல் படைப்பாளனை நிந்திக்கிறான்.(30)
அத்தகு மனிதன், பிறர் அதற்குத் தகாதவர்களாக இருப்பினும், செழிப்பால் அருளப்பட்டிருக்கும் மனிதர்களாக இருக்கிறார்களே எனக் கருதுகிறான். இதன் காரணமாகவே, ஆணவமும் அகந்தையும் கொண்டவர்களும், தங்கள் முக்கியத்துவம் குறித்த உணர்விலேயே நிறைந்திருப்பவர்களுமான அவர்கள் அதிகத் துன்பத்தை அனுபவிக்கிறார்கள். எனினும், ஓ! மன்னா {க்ஷேமதர்சினே}, நீ அத்தகு களங்கங்களினால் கறைபடியாதவனாக இருக்கிறாய்.(31,32) நீ செல்வத்தை இழந்தவனாக இருப்பினும், அடுத்தவரின் செழிப்பைப் பொறுத்துக் கொள்வாயாக. கைத்திறன் கொண்டவர்கள், பிறரிடம் உள்ள செழிப்பை அனுபவிக்கிறார்கள். செழிப்பானது, பிறரின் செழிப்பை வெறுப்பவனிடம் இருந்து விலகிச் செல்கிறது.(33) நன்னடத்தை மற்றும் ஞானம் கொண்டவர்களும், யோகத்தின் கடமைகளை அறிந்தவர்களுமான மனிதர்கள், செழிப்பு, மகன்கள், பேரப்பிள்ளைகள் ஆகியோரைத் தாங்களாகவே துறக்கிறார்கள்.(34) உலகம் சார்ந்த செல்வமானது, இடையறாத செயல்பாடு மற்றும் முயற்சியைச் சார்ந்தது என்பதால் அது நிலையில்லாதது என்றும் அடையமுடியாதது என்றும் கருதும் வேறு சிலரும், அதைத் துறப்பதைக் காண முடிகிறது.(35)
நீ ஞானம் கொண்டவனாகத் தெரிகிறாய். பிறகு ஏன் நீ விரும்பக்கூடாதவையும், நிலையற்றவையும், பிறரைச் சார்ந்திருக்கக்கூடியவையுமான பொருட்களை விரும்பி பரிதாபத்துக்குரியவனாக வருந்துகிறாய்? நீ (உன் உடைமைகள் எப்படி இருந்தபோதிலும் புகழை அனுபவிக்கத்தக்கவனாக உன்னைச் செயல்பட வைப்பதற்கான) குறிப்பிட்ட மனோநிலையைக் குறித்துக் கேட்க விரும்புகிறாய். நான் உனக்குக் கொடுக்கும் அறிவுரை என்னவென்றால், விருப்பத்திற்குரிய அந்தப் பொருட்கள் யாவையும் துறந்துவிடுவாயாக. தவிர்க்கப்பட வேண்டிய பொருட்களே, முயற்சி செய்து அடைய வேண்டிய வடிவில் தோன்றும், அதே வேளையில், எவை முயற்சி செய்து அடையப்பட வேண்டுமோ, அவை தவிர்க்கப்பட வேண்டிய பொருட்களாகத் தோன்றும்.(37) சிலர் செல்வத்தைத் தேடியே செல்வத்தை இழக்கிறார்கள். வேறு சிலர் செல்வத்தை முடிவிலா இன்பத்தின் வேராகக் கருதி, அதை ஆவலுடன் பின்தொடர்கிறார்கள்.(38) மேலும் சிலர், செல்வத்தில் மகிழ்ந்து, அதைவிட வேறெதுவும் மேன்மையானதல்ல என நினைக்கிறார்கள். அத்தகு மனிதர்கள், செல்வத்தை அடையும் விருப்பத்தில் உள்ள தங்கள் ஆவலால், வாழ்வின் பிற நோக்கங்கள் அனைத்தையும் இழக்கிறார்கள்.(39) ஓ! கோசல இளவரசே, கடினமாக ஈட்டப்பட்டதும், தன் ஆசைகளின் அளவுக்கு இணையானதுமான செல்வத்தை ஒரு மனிதன் இழந்தால், {அதன் விளைவாக உண்டாகும்} துன்பத்தால் ஏற்படும் செயல்பாடின்மையில் மூழ்கி, செல்வம் குறித்த விருப்பம் அனைத்தையும் கைவிடுகிறான்.(40)
நல்லான்மாவையும், உயர்ந்த பிறப்பையும் கொண்ட சில மனிதர்கள், அறம் ஈட்டுவதில் ஈடுபடுகிறார்கள். மறுமையில் புகழை வெல்லும் விருப்பத்தால் அவர்கள் உலகம் சார்ந்த அனைத்து வகை இன்பங்களையும் துறக்கிறார்கள்.(41) சில மனிதர்கள், செல்வத்தை அடையும் விருப்பத்தால் உந்தப்பட்டுத் தங்கள் உயிரை இழக்கிறார்கள். செல்வத்தோடு தொடர்பில்லா வாழ்வில் எந்தப் பயனும் இல்லை என்றே அவர்கள் நினைக்கிறார்கள்.(42) அவர்களது பரிதாப நிலையைப் பார். அவர்களது மூடத்தனத்தைப் பார். வாழ்வென்பது மிகக் குறுகியது, நிச்சயமற்றது எனும்போது இம்மனிதர்கள், அறியாமையால் உந்தப்பட்டுத் தங்கள் கண்களைச் செல்வத்தில் நிலைக்கச் செய்கிறார்கள்.(43) அழிவே முடிவு எனும்போது கட்டடச்சாரங்களிலும், மரணமே முடிவு எனும்போது வாழ்விலும், பிரிவே முடிவு எனும்போது சேர்க்கையிலும் எவன் இதயத்தை நிலைக்கச் செய்வான்?(44) சில நேரங்களில் மனிதன் செல்வத்தைத் துறக்கிறான், மேலும் சிலநேரங்களில் செல்வம் மனிதனைத் துறக்கிறது. செல்வ இழப்பால் ஞானம் கொண்ட எந்த மனிதன் வருந்துவான்? செல்வத்தையும் நண்பர்களையும் இழக்கும் பலர் இந்த உலகத்தில் இருக்கின்றனர்.(45)
ஓ! மன்னா {க்ஷேமதர்சின்}, மனிதர்களுக்கு நேரும் இடர்கள் அனைத்தும் அவர்களுடைய சொந்த நடத்தையாலேயே நேர்கிறது என்பதைக் கண்டு புரிந்து கொள்வாயாக. எனவே நீ உன் புலன்கள், மனம் மற்றும் பேச்சைக் கட்டுப்படுத்துவாயாக.(46) ஏனெனில், இவை பலவீனமடைந்து, தீமையை உண்டாக்கினால் எந்த மனிதனும் எப்போதும் தன்னைச் சூழ்ந்திருக்கும் வெளிப்பொருட்களின் மேலுள்ள ஆசையில் {சபலத்தில்} இருந்து ஒருபோதும் விடுபட முடியாது. காலம் மற்றும் இடம் ஆகியவற்றில் பல இடைவெளிகள் இருப்பதால், கடந்த காலத்தைக் குறித்த போதுமான கருத்தையோ, எதிர்காலத்தைக் குறித்த முன்னுணர்தலையோ ஒருவனாலும் அமைத்துக் கொள்ள முடியாததைப் போலவே, இத்தகு ஞானமும், ஆற்றலும் கொண்ட உன்னைப் போன்ற ஒரு மனிதன், சேர்க்கை பிரிவு, நன்மை தீமை ஆகியவற்றுக்காக ஒருபோதும் துயரில் ஈடுபட மாட்டான்.(47) இத்தகு மென்மையான மனநிலை, நன்கு கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மா, முடிவுசெய்யப்பட்ட தீர்மானங்கள் ஆகியவற்றைக் கொண்டவனும், பிரம்மச்சரிய நோன்பை நோற்பவனுமான ஒரு மனிதன் துயரில் ஈடுபடாதவனாகவும், {எதையும்} அடையும் ஆசையில் ஒருபோதும் அமைதியற்றவனாக மாறாதவனாகவும், அற்ப மதிப்பைக் கொண்ட எதையும் இழப்பதற்கு அஞ்சாதவனாகவும் இருப்பான்.(48) அத்தகு மனிதன், பாவம் நிறைந்ததும், தீமையானதும், கொடுமையானதும், இழிந்தோருக்கு மட்டுமே தகுந்ததுமான ஆண்டி {பிச்சைக்காரன்} எனும் வஞ்சக வாழ்வைப் பின்பற்ற ஒரு போதும் தகுந்தவனாகான்[4].(49) பெருங்காட்டுக்குச் சென்று, தனியாக இருந்து, கனிகள் மற்றும் கிழங்குகளை மட்டுமே உண்டு, பேச்சையும், ஆன்மாவையும் கட்டுப்படுத்தி, அனைத்துயிரினங்களிடமும் கருணையால் நிறைந்து அங்கே இன்பமாக வாழ்வாயாக.(50)
[4] கும்பகோணம் பதிப்பில், "கெட்டமனிதர்களுக்கு யோக்யமானதும், துன்பமுள்ளதும், மிக்கப் பாவமுள்ளதும் கொடுமையான விருத்தியுள்ளதும் கெட்ட மனிதர்களைச் சேர்ந்ததுமான ஓடெடுக்கும் ஜீவனத்தை நீ விரும்பத்தக்கவனேயல்லன்" என்றிருக்கிறது.
அருகே மனிதர்கள் இல்லாமல், பெரும் தந்தங்களுடைய யானைகளின் தோழமையில், காட்டின் விளைச்சலில் நிறைந்து உற்சாகமான இத்தகு வாழ்வைக் காட்டில் வாழ்வது ஞானியரின் நடத்தை எனச் சொல்லப்படுகிறது.(51) பெரும் தடாகம் ஒன்று கலங்கும்போது, தன் அமைதியைத் தானே மீட்கிறது. அதே போலவே, ஞானம் கொண்ட மனிதனும், இத்தகு காரியங்களில் குழப்பமடையும்போது, தானாகவே அமைதியடைகிறான். உன்னைப் போன்று இத்தகு பரிதாபகரமான நிலையில் வீழ்ந்த ஒரு மனிதன் இவ்வாறே மகிழ்ச்சியாக வாழ முடியும் என்றே நான் காண்கிறேன்.(52) உன் செழிப்பை மீட்பது கிட்டத்தட்ட முடியாதநிலையில், அமைச்சர்களும், ஆசோலகர்களும் இல்லாதவனாக இருக்கும்போது, இத்தகு வழியே உனக்குத் திறந்திருக்கிறது. விதியை நம்பிக்கொண்டிருப்பதால் எந்தப் பலனையும் அடைய முடியும் என்பதை நீ நம்புகிறாயா?" என்று கேட்டார் {காலகவிருக்ஷீயர்}.(53)
ஆங்கிலத்தில் | In English |