Mother, Father and Preceptor! | Shanti-Parva-Section-108 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 108)
பதிவின் சுருக்கம் : கடமைகள் அனைத்திலும் முக்கியமானவை எவை என யுதிஷ்டிரன் கேட்பது; தாய், தந்தை, ஆசான் ஆகியோரை வழிபடுவதே முக்கியக் கடமை என்பதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷமரிடம்}, "கடமையின் பாதை நீண்டதாகும். ஓ! பாரதரே, மேலும் அது பல கிளைகளைக் கொண்டதாக இருக்கிறது. எனினும், உம்மைப் பொறுத்தவரையில், நடைமுறையில் பின்பற்ற மிகத் தகுந்தவை எவை?(1) உம்மைப் பொறுத்தவரையில், இம்மையிலும், மறுமையிலும் உயர்ந்த தகுதியை எனக்கு ஈட்டித் தருபவையும், கடமைகள் அனைத்திலும் மிக முக்கியமானவையுமான செயல்கள் எவை?” என்று கேட்டான்.(2)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “என்னைப் பொறுத்தவரையில் தாய், தந்தை, ஆசான் ஆகியோரை வழிபடுவதே மிக முக்கியமானது. இம்மையில் அக்கடமையைச் செய்யும் மனிதன், பெரும் புகழையும், புகழுலகங்கள் பலவற்றையும் ஈட்டுவதில் வெல்கிறான்.(3) ஓ! யுதிஷ்டிரா, அவர்கள் மரியாதையுடன் வழிபடப்பட்டு, அறத்திற்கு இசைவாகவோ, இல்லாமலோ அவர்களால் ஆணையிடப்படும் எதுவும் எந்தத் தயக்கமும் இல்லாமல் செய்யப்பட வேண்டும்.(4) அவர்கள் தடை செய்ததை ஒருவன் ஒருபோதும் செய்யக்கூடாது. அவர்கள் எதை ஆணையிடுவார்களோ, அஃது எப்போதும் நிச்சயம் செய்யப்பட வேண்டும்.(5) மூவுலகங்கள் அவர்களே. மூன்று வாழ்வுமுறைகளும் அவர்களே. மூன்று வேதங்களும் அவர்களே. மூன்று புனித நெருப்புகளும் அவர்களே.(6) கார்ஹபத்ய நெருப்பாகத் தந்தை சொல்லப்படுகிறார்; தக்ஷிண நெருப்பாகத் தாய் சொல்லப்படுகிறார்; ஆகுதி ஊற்றப்படும் {ஆஹவநீ} நெருப்பாக ஆசான் சொல்லப்படுகிறார். உண்மையில் இந்த மூன்று நெருப்புகளும் மிக உயர்ந்தவையாகும். இந்த மூன்று நெருப்புகளிலும் நீ கவனத்தோடு இருந்தால், மூவுலகங்களையும் நீ வெல்வாய்.(7)
முறைமையுடன் தந்தைக்குத் தொண்டாற்றினால் ஒருவன் இவ்வுலகைக் கடக்கலாம். அதே வழியில் தாய்க்குத் தொண்டாற்றினால், அவன் மறுமையில் புகழுலகங்களை அடையலாம். முறைமையுடன் ஆசானுக்குத் தொண்டாற்றினால், ஒருவன் பிரம்மலோகத்தையே அடையலாம்.(8) ஓ!பாரதா {யுதிஷ்டிரா}, இந்த மூவரிடமும் முறையாக நடந்து கொண்டால், நீ மூவுலகங்களிலும் புகழையடைவாய், அருளப்பட்டவனாவாய், உன் தகுதியும் {புண்ணியமும்}, வெகுமதியும் பெரியதாக இருக்கும்.(9) எச்செயலையும் ஒருபோதும் அவர்களை மீறிச் செய்யாதே. அவர்கள் உண்பதற்கு முன் நீ உண்ணாதே, அவர்கள் உண்பதைவிடச் சிறந்த எதையும் நீ உண்ணாதே. அவர்களின் மேல் எந்தக் குற்றத்தையும் ஒருபோதும் சுமத்தாதே. ஒருவன் எப்போதும் அவர்களிடம் பணிவுடன் தொண்டாற்ற வேண்டும். அதுவே உயர்ந்த தகுதியை {புண்ணியத்தைக்} கொண்ட ஒரு செயலாகும்.(10) ஓ! மன்னர்களில் சிறந்தவனே, இவ்வழியில் செயல்பட்டால், புகழ், தகுதி, கௌரவம், மறுமையில் புகழ் உலகங்கள் ஆகியவற்றை அடைவாய். எவன் இவர்களைக் கௌரவிப்பானோ, அவன் மூவுலகங்களிலும் கௌரவிக்கப்படுவான்.(11)
மறுபுறம், எவன் இவர்களை அவமதிப்பானோ, அவன் செய்யும் எந்தச் செயல்களிலும் எந்தத் தகுதியும் {புண்ணியத்தையும்} அடையமாட்டான். ஓ! எதிரிகளை எரிப்பவனே {யுதிஷ்டிரனே}, அத்தகு மனிதன் இம்மையும், மறுமையும் அடைவதில்லை.(12) இந்த மூன்று பெரியோரையும் எவன் எப்போதும் அவமதிப்பானோ, அவன் இம்மையிலும் மறுமையிலும் ஒருபோதும் புகழை அடையமாட்டான். அவன் மறுமையில் எந்த நன்மையையும் ஒருபோதும் ஈட்டமாட்டான்.(13) இந்த மூவரைக் கௌரவிக்கும் வகையில் நான் கொடுத்த அனைத்தும் அதன் உண்மை அளவைவிட நூறு மடங்காகவோ, ஆயிரம் மடங்காகவோ ஆனது. ஓ! யுதிஷ்டிரா, அந்தத் தகுதியின் விளைவாகவே, நான் என் கண்களால் மூவுலகங்களையும் தெளிவாகக் காண்கிறேன்.(14) ஓர் ஆச்சாரியர் {ஆசிரியர்}, கல்வி கற்ற பத்து பிராமணர்களைவிட மேன்மையானவராவார். ஓர் உபாத்யாயர் {துணையாசிரியர்}, பத்து ஆச்சாரியர்களைவிட மேன்மையானவராவார். தந்தை, பத்து உபாத்யாயர்களைவிட மேன்மையானவராவார். தாயானவள், பத்து தந்தைகளைவிட, முக்கியத்துவத்தைப் பொறுத்தவரையில் ஒருவேளை, மொத்த உலகையும்விட மேன்மையானவளாவாள்.(15,16)
எனினும், ஓர் ஆசான், தந்தையையும், தாயைவிடவும் கூட அதிக மதிப்புக்குத் தகுந்தவர் என்பது என் கருத்து. தந்தையும், தாயும் ஒருவனைப் படைக்கிறார்கள்.(17) ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, தந்தையும், தாயும் உடலை மட்டுமே உண்டாக்குகிறார்கள். மறுபுறம், தன் ஆசானிடம் இருந்து ஒருவன் பெறும் பிறவியானது தெய்வீகமானதாகும். அந்த வாழ்வானது சிதைவும் {முதுமையும்}, அழிவும் இல்லாததாகும்.(18) தந்தையும், தாயும் எக்குற்றமிழைத்தாலும் அவர்கள் கொல்லப்படக்கூடாது. (தண்டனைக்குத் தகுந்தவர்களாக இருப்பினும்) ஒரு தந்தையையும், ஒரு தாயையும் தண்டிக்காமல் இருப்பதால் ஒருவன் பாவமிழைத்தவன் ஆகமாட்டான். உண்மையில், தண்டனையிலிருந்து தப்பும் அத்தகு மதிப்புக்குரிய மனிதர்கள் மன்னனைக் களங்கப்படுத்துவதில்லை. பாவம் நிறைந்த தந்தையை மதிப்புடன் பேணி வளர்க்க முயலும் மனிதர்களுக்குத் தேவர்களும், முனிவர்களும் தங்கள் உதவிகளை நிறுத்துவதில்லை.(19) உண்மையான கல்வியைக் கொடுப்பது, வேதங்களைச் சொல்வது, அழிவில்லா ஞானத்தைக் கொடுப்பது ஆகிய காரியங்களால் ஒரு மனிதனுக்கு உதவுபவர், தந்தையாகவும், தாயாகவும் கருதப்பட வேண்டும். ஆசானின் செயலை நன்றியுடன் நினைவுகூரும் சீடன், எதற்காகவும் ஒருபோதும் அவருக்கு எத்தீங்கையும் செய்யக்கூடாது.(20)
ஆசான்களிடம் இருந்து கல்வியை அடைந்த பிறகு, எண்ணத்தாலும், செயலாலும் கடமையுணர்வுடன் அவர்களுக்குக் கீழ்ப்படியாமல், அவர்களை மதிக்காமல் இருப்போர் கருவைக் கொன்ற பாவத்தை இழைக்கிறார்கள். அவர்களைப் போன்ற பாவிகள் இவ்வுலகில் வேறு எவரும் இல்லை. ஆசான்கள் எப்போதும் தங்கள் சீடர்களிடம் பெரும் அன்பை வெளிப்படுத்துவார்கள். எனவே, சீடர்களும் ஒப்பிடத்தக்க தங்கள் மரியாதையை அவர்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.(21) எனவே, பழங்காலத்தில் இருந்த உயர்ந்த தகுதியை {புண்ணியத்தை} ஈட்ட விரும்பும் ஒருவன், தன் ஆசான்களைப் போற்றி வழிபட்டு, அனைத்து இன்பநுகர் பொருட்களையும் அவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.(22) தன் தந்தையை எவன் நிறைவு கொள்ளச் செய்கிறானோ, அவனிடம் பிரஜாபதி நிறைவுடன் இருக்கிறார். தன் தாயை எவன் நிறைவு கொள்ளச் செய்கிறானோ, அவன் பூமாதேவியையே நிறைவுகொள்ளச் செய்கிறான்.(23) எவன் தன் ஆசானை நிறைவுகொள்ளச் செய்கிறானோ, அவன் அச்செயலால் பிரம்மனையே நிறைவுகொள்ளச் செய்கிறான். இதன் காரணமாகவே, ஓர் ஆசான், தந்தையையோ, தாயையோ விடப் பெரும் மதிப்புக்குத் தகுந்தவராக இருக்கிறார்.(24) ஆசான்கள் வழிபடப்பட்டால், முனிவர்களுடனும், தேவர்களுடனும் சேர்ந்த பித்ருக்கள் அனைவரும் நிறைவடைகிறார்கள். எனவே, ஆசான் என்பவர் உயர்ந்த மதிப்புக்குத் தகுந்தவராவார்.(25)
ஆசானானவர், ஒரு சீடனால் எவ்வகையிலும் ஒருபோதும் அலட்சியம் செய்யப் {அவமதிக்கப்} படக்கூடாது. தாயோ, தந்தையோ கூட ஆசானின் அளவுக்கு மதிப்புக்குத் தகுந்தவர்கள் இல்லை.(26) தந்தை, தாய், ஆசான் ஆகியோர் ஒருபோதும் அவமதிக்கப்படக்கூடாது. அவர்களுடைய எச்செயலிலும் குற்றம் காணக்கூடாது. எவன் தன் ஆசான்களிடம் மதிப்புடன் நடந்து கொள்கிறானோ, அவனிடம் தேவர்களும், பெரும் முனிவர்களும் நிறைவு கொள்கிறார்கள்.(27) எண்ணத்தாலோ, செயலாலோ ஆசான்கள், அல்லது தந்தைமார், அல்லது தாய்மார் ஆகியோருக்குத் தீங்கிழைப்பவர்கள், ஒரு கருவைக் கொன்ற பாவத்தை இழைக்கிறார்கள். அவர்களுக்கு இணையான பாவிகள் இவ்வுலகில் வேறு எவரும் இல்லை.(28) தந்தையின் மடியிலும், தாயின் கருவறையிலும் பிறந்த ஒரு மகன், அவர்களால் வளர்க்கப்பட்டு, வயதடையும்போது தன் பங்குக்கு அவர்களை ஆதரிக்காமல் போனால், அவன் ஒரு கருவைக் கொன்ற பாவத்தை இழைக்கிறான். அவனுக்கு இணையான பாவி இவ்வுலகில் வேறு எவனும் இல்லை.(29) ஒரு நண்பனுக்குத் தீங்கிழைப்பவன், நன்றியில்லாதவன், ஒரு பெண்ணைக் கொல்பவன், ஓர் ஆசானைக் கொல்பவன் ஆகிய நால்வரும் {பாவங்களில் இருந்து} தங்களைத் தூய்மைப்படுத்திக் கொண்டதாக நாம் ஒருபோதும் கேள்விப்படுவதில்லை.(30) இவ்வுலகில் ஒரு மனிதன் பொதுவாகச் செய்ய வேண்டிய அனைத்தையும் நான் இப்போது உனக்குச் சொல்லிவிட்டேன். நான் சொன்ன கடமைகளைத் தவிர்த்து, பெரும் புகழை உண்டாக்கக்கூடியவை வேறு {செயல்கள்} எவையும் இல்லை. கடமைகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு, அவற்றின் சாரத்தை நான் உனக்குச் சொல்லிவிட்டேன்” என்றார் {பீஷ்மர்}.(31)
சாந்திபர்வம் பகுதி – 108ல் உள்ள சுலோகங்கள் : 31
ஆங்கிலத்தில் | In English |