Eternal Virtue! | Shanti-Parva-Section-109 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 109)
பதிவின் சுருக்கம் : உண்மை மற்றும் பொய்ம்மையின் பண்புகளையும், அவையிரண்டும் பயன்படுத்தப்பட வேண்டிய நேரங்களையும், அழிவில்லா அறமான நித்திய கடமையையும் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாரதரே, அறத்தைக் கடைப்பிடிக்க விரும்பும் ஒரு மனிதன் எவ்வாறு செயல்பட வேண்டும்? ஓ! பாரதக் குலத்தின் காளையே, கல்விமானான நீர் என்னால் கேட்கப்படும் இந்தக் கேள்விக்குப் பதிலளிப்பீராக.(1) உண்மை மற்றும் பொய்ம்மை ஆகியன உலகங்கள் அனைத்தையும் சூழ்ந்தபடியே இருக்கின்றன. ஓ! மன்னா, அறத்தில் உறுதியாக இருக்கும் மனிதன் இவை இரண்டில் எதைப் பின்பற்ற வேண்டும்?(2) மேலும், உண்மை என்றால் என்ன? பொய்ம்மை என்றால் என்ன? மேலும் அழிவில்லா அறம் {ஸநாதன தர்மம்} என்பது என்ன? எச்சமயத்தில் ஒரு மனிதன் உண்மையைச் சொல்ல வேண்டும், மேலும் எச்சமயத்தில் பொய்யைச் சொல்ல வேண்டும்?” என்று கேட்டான்.(3)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “உண்மையைச் சொல்வதே அறத்திற்கு இசைவானது. உண்மையைவிட வேறு உயர்ந்தது ஏதும் கிடையாது. ஓ! பாரதா, பொதுவாக மனிதர்கள் அறியாததை நான் இப்போது உனக்குச் சொல்லப் போகிறேன்.(4) எங்கே பொய்ம்மை, உண்மையின் தன்மையை ஏற்குமோ, அங்கே உண்மை சொல்லப்படக்கூடாது. மேலும், எங்கே உண்மையானது, பொய்ம்மையின் தன்மையை ஏற்குமோ, அங்கே பொய்மையும்கூடச் சொல்லப்படலாம்[1].(5) அறத்தின் தொடர்பறுந்த உண்மையைச் சொல்லும் அறியாமை கொண்ட மனிதன் பாவத்தையே இழைக்கிறான். பொய்ம்மையில் இருந்து உண்மையை வேறுபடுத்திப் பார்க்க முடிந்த மனிதனே கடமைகளை அறிந்தவனாகச் சொல்லப்படுகிறான்[2].(6) மதிக்கத்தகாதவனும், தூய்மையற்ற ஆன்மா கொண்டவனும், மிகக் கொடூரமானவனுமான ஒரு மனிதனும் கூட, (அனைத்து உயிரினங்களையும் அழிக்க அச்சுறுத்திய) குருட்டு விலங்கைக் கொன்றதன் மூலம் வேடன் பலாகன்[3] அடைந்த பெரும் தகுதியை {புண்ணியத்தை} ஈட்ட முடியும்.(7) மூட அறிவு கொண்ட ஒரு மனிதன், (கடுந்தவங்களின் மூலம்) தகுதியை அடைய விரும்பினாலும், பாவம் நிறைந்த ஒரு செயலை அவனால் செய்ய முடியும்[4]. மேலும் கங்கைக் கரையில் உள்ள ஓர் ஆந்தையானது, (நியாயமற்ற ஒரு செயலைச் செய்ததன் மூலம்) பெரும் தகுதியை அடைந்தது[5].(8)
[1] மன்மதநாததத்தரின் பதிப்பில், “எங்கே பொய்ம்மையே உண்மையாக மேலோங்கி இருக்கிறதோ, அங்கே உண்மை சொல்லப்படக்கூடாது. மேலும் எங்கே உண்மை பொய்மையைக் கடந்து இருக்கிறதோ, அங்கே பொய்ம்மையும் சொல்லப்பட வேண்டும்” என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், “பொய்ம்மை உண்மையாகும்போதும், உண்மை பொய்ம்மையாகும்போது, ஒருவன் உண்மையைப் பேசக்கூடாது, அவன் பொய்யே சொல்ல வேண்டும்” என்றிருக்கிறது. கும்பகோணம் பதிப்பில், “எந்த விஷயத்தில் உண்மை பொய் போலாகுமோ அந்த விஷயத்தில் உண்மை சொல்லத்தகாததாகும். எந்த விஷயத்தில் பொய்யும் உண்மை போலாகுமோ, அந்த விஷயத்தில் பொய் சொல்லத்தக்கதாகும்” என்றிருக்கிறது. இங்கே கும்பகோணம் பதிப்பே குழப்பம் இல்லாததாகத் தெரிகிறது.[2] “உண்மை எப்போது பொய்ம்மையே போலத் தீங்குநிறைந்ததாகிறது, எப்போதும் பொய்ம்மை, உண்மையைப் போல நீதியாகிறது என்பதை அறிந்தவன் என இங்கே பொருள் கொள்ள வேண்டும்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[3] இந்தக் கதை கர்ண பர்வம் பகுதி 69ல் கிருஷ்ணனால் அர்ஜுனனுக்குச் சொல்லப்படுகிறது. https://mahabharatham.arasan.info/2017/04/Mahabharatha-Karna-Parva-Section-69.html[4] இந்தக் கதையும் கர்ண பர்வம் பகுதி 69ல் கிருஷ்ணனால் அர்ஜுனனுக்குச் சொல்லப்படுகிறது. https://mahabharatham.arasan.info/2017/04/Mahabharatha-Karna-Parva-Section-69.html இங்கே குறிப்பிடப்படும் மூட மனிதன் அங்கே கௌசிகன் என்ற பெயரில் தவசியாகக் குறிப்பிடப்படுகிறான்.[5] “ஓர் ஆந்தையானது, மரணத்தை ஏற்படுத்தும் கடும் நஞ்சுமிக்கப் பெண்பாம்பு இட்டுவைத்திருந்த ஆயிரம் முட்டைகளைத் தன் அலகால் உடைத்ததால் சொர்க்கத்திற்குச் சென்றதை இந்த மறைகுறிப்புக் குறிப்பிடுகிறது. பர்துவான் பண்டிதர்கள் இந்த எட்டாம் ஸ்லோகத்தின் முதல் வரியை பொருளற்றதாகச் செய்துவிட்டார்கள். அதில் முதல்வரிக்கும், இரண்டாம் வரிக்கும் எத்தொடர்பும் இல்லை. கே.பி.சின்ஹா இதைச் சரியாக உரைத்திருக்கிறார்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அறம் எதுவெனச் சொல்வது கடினமானதாகையால், நீ என்னிடம் கேட்ட கேள்வி மிகக் கடினமானதே. அதைச் சுட்டிக்காட்டுவது எளிதன்று. அறம் குறித்து உரையாடும் எவராலும் அதைச் சரியாகச் சுட்டிக்காட்ட முடியாது.(9) அறமானது, உயிரினங்கள் அனைத்தின் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்காகவுமே (பிரம்மனால்) அறிவிக்கப்பட்டது. எனவே, எது முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் வழிவகுக்குமோ, அதுவே அறமாகும்.(10) உயிரினங்கள் ஒன்றையொன்று காயப்படுத்துவதைத் தவிர்க்கவே அறம் அறிவிக்கப்பட்டது. எனவே, எது உயிரினங்களைத் தீங்கு செய்வதில் இருந்து தவிர்க்குமோ அதுவே அறமாகும்.(11) அறமானது {தர்மமானது}, உயிரினங்கள் அனைத்தையும் தூக்கி நிறுத்துவதாலேயே அஃது அவ்வாறு அழைக்கப்படுகிறது. உண்மையில் அனைத்து உயிரினங்களும் அறத்தாலேயே தூக்கி நிறுத்தப்படுகின்றன. எனவே, உயிரினங்கள் அனைத்தையும் தூக்கி நிறுத்தவல்லது எதுவோ அதுவே அறமாகும்.(12) ஸ்ருதிகளில் பதியப்பட்டிருப்பவற்றைக் கொண்டதே அறம் எனச் சிலரால் சொல்லப்படுகிறது. வேறு சிலர் இஃதை ஏற்பதில்லை. அவ்வாறு சொல்வோரை நான் கண்டிக்கமாட்டேன். மேலும், அனைத்தும் ஸ்ருதிகளில் சொல்லப்படவில்லை[6].(13)
[6] “வசிஷ்டிரால் குறிப்பிடப்படும் ’ஸ்ருதிகளிலும், ஸ்மிருதிகளிலும் விதிக்கப்பட்டுள்ளவையே தர்மம்” என்ற விளக்கத்தை இது சுட்டிக்காட்டுகிறது. ஸ்ருதிகளிலும், ஸ்மிருதிகளிலும் அனைத்துக் கடமைகளும் இல்லை என்பதே இந்த விளக்கத்தின் குறையாகும். எனவேதான், “எவை குறித்துச் சொல்லப்படவில்லையென்றால், நல்லோரின் எடுத்துக்காட்டுகள் மற்றும் நடைமுறைகள் ஆகியவற்றை வழிகாட்டிகளாக மனிதர்கள் கொள்ள வேண்டும் என வசிஷ்டர் சொல்கிறார்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
சில வேளைகளில், பிறரின் செல்வத்தை அடைய விரும்பும் மனிதர்கள் (கள்வர்கள்), (கொள்ளைச் செயலுக்கு உதவிபுரிவதற்காக) இது குறித்து விசாரிக்கின்றனர். ஒருவன், அத்தகு கேள்விகளுக்கு ஒருபோதும் பதிலளிக்கக்கூடாது. அது தீர்மானிக்கப்பட்ட கடமையாகும்.(14) அமைதியாயிருப்பதன் மூலம், ஒருவன் தப்ப முடியுமென்றால், அவன் அமைதியாகவே இருக்க வேண்டும். மறுபுறம், ஒருவன் பேச வேண்டிய நேரத்தில் அமைதியாக இருப்பதில் ஐயமெழுந்தால்,(15) அத்தகு தருணங்களில், உண்மையைச் சொல்வதைவிட உண்மையற்றதைச் சொல்வதே சிறப்பானதாகும். இந்த முடிவே தீர்மானிக்கப்பட்ட ஒன்றாகும். (பொய்யான) ஓர் உறுதிமொழியின் மூலம், ஒருவனால் பாவியிடம் இருந்து தப்ப முடியுமென்றால், அவன் அவ்வாறு செய்வதால் பாவத்தை இழைத்தவனாக மாட்டான்.(16) ஒருவனால் தன் செல்வத்தைக் கொடுக்க முடியும் என்றாலும், பாவம் நிறைந்த மனிதர்களுக்கு அஃதை அவன் கொடுக்கக்கூடாது. பாவிகளுக்குக் கொடுக்கப்படும் செல்வமானது அதைக் கொடுப்பவனையும் பீடிக்கும்.(17) கடன் கொடுத்தவன், தன்னிடம் கடன் பெற்றவன் உடல் சார்ந்த தொண்டைச் செய்து அக்கடனை அடைக்க வேண்டும் என்று விரும்பினால், {அந்தக் கடன்} ஒப்பந்தத்தின் உண்மையை நிறுவுவதற்காகக் கடன் கொடுத்தவனால் அழைக்கப்பட்ட சாட்சிகள் என்ன சொல்லப்பட வேண்டுமோ அதைச் சொல்லவில்லையென்றால், அவர்கள் {சாட்சி சொன்னவர்கள்} அனைவரும் பொய்யர்களாவர்[7]. உயிர் ஆபத்திலிருக்கும்போதோ, திருமணத் தருணங்களிலோ ஒருவன் பொய்ம்மை பேசலாம்.(18,19) அறம் நாடும் ஒருவன், பிறரின் செல்வத்தையும், செழிப்பையும் காப்பதற்கோ, அறக்காரியங்களுக்கோ பொய்ம்மை பேசினால், அந்தப் பொய்ம்மையால் அவன் பாவமிழைத்தவனாக மாட்டான்.(20)
[7] மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. கும்பகோணம் பதிப்பில், “தனம் பெற்றவனுடைய சரீரத்தைத் துன்பப்படுத்திப் பொருளை வாங்க விருப்பமுள்ளவனுக்கு உண்மையை அறிவிக்க வேண்டி வந்த ஸாக்ஷிகள் சொல்லத்தக்க வசனத்தைச் சொல்லாமல் அவ்விஷயத்தில் “இவன் பொருளை வைத்திருக்கிறான்” என்று சொன்னார்களாகில் அவர்கள் யாவரும் பொய் சொன்னவர்களாகிறார்கள்” என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், “லாபத்தை இருவரும் அடைய வேண்டுமென்ற ஏற்பாட்டுடன் ஒருவனிடமிருந்து பொருளை வாங்கி மற்றொருவன் வேலை செய்யும் விஷயத்தில், அப்பொருளைத் திருடர்கள் அபகரித்தால் பொருள் கொடுத்தவன் பெற்றுக் கொண்டவனைத் துன்பப்படுத்தியாவது அப்பொருளை வாங்க விரும்புவானாகில் ஸாக்ஷிகள் கடன் வாங்கியவனிடம் பொருளிருப்பதாகச் சொல்லுவது பொய்யாகவே முடியும்” என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், “தீய மனிதர்களுக்குச் செல்வத்தைக் கொடுப்பது, கொடுத்தவனையே துன்புறுத்தும். இஃது ஒருவனின் உடலைக் காயப்படுத்துவதாகவே அமைந்தாலும், அவர்கள் விரும்புவதைக் கொடுக்காமல் இருப்பதே சிறப்பானதாகும். எனினும், உண்மையின் இயல்பைப் பேசுவதற்கு அங்கே சாட்சிகளும் இருக்கலாம். எது சொல்லப்பட வேண்டுமோ, அஃதை அவர்கள் சொல்லவில்லையெனில், அவர்கள் பொய்யர்களாவார்கள்” என்றிருக்கிறது. இங்கே பிபேக்திப்ராயின் பதிப்பு சற்றுத் தெளிவாக இருப்பதாகத் தெரிகிறது.
ஒருவன் கொடுக்கிறேன் என உறுதிகூறிவிட்டால், தன் உறுதிமொழியை நிறைவற்ற அவன் கட்டுப்பட்டவனாகிறான். தவறினால், தன்னையே கொள்ளையிடும் அவன், பலவந்தமாக அடக்கப்பட வேண்டும். நியாயமான ஒப்பந்தத்தை நிறைவேற்றாமல் ஒருவன் நியாயமில்லாமல் செயல்பட்டால், அத்தகு ஒழுக்கத்தைப் பின்பற்றியதற்காக அவன் தண்டக்கோலால் நிச்சயம் பீடிக்கப்பட வேண்டும்[8].(21) கடமைகள் அனைத்தில் இருந்து வழுவி, தன் வகையைச் சேர்ந்தோரைக் கைவிட்ட வஞ்சகன் ஒருவன், தன் வாழ்வைத் தாங்கிக் கொள்வதற்காக அசுரர்களின் நடைமுறையான ஒழுக்கமின்மையையே எப்போதும் விரும்புவான்.(22) வஞ்சகத்தால் வாழும் அத்தகு பாவம் நிறைந்த இழிந்தவன், அனைத்து வழிமுறைகளினாலும் கொல்லப்பட வேண்டும். அத்தகு பாவிகள் செல்வத்தை விட உயர்ந்தது இவ்வுலகில் வேறேதும் இல்லை என்று நினைக்கின்றனர்.(23) அத்தகு மனிதர்களை ஒருபோதும் பொறுத்து {சகித்துக்} கொள்ளக்கூடாது. அவர்களுடன் சேர்ந்து யாரும் உண்ணக்கூடாது. அவர்கள், தங்கள் பாவங்களின் விளைவால் வீழ்ந்துவிட்டவர்களாகவே கருதப்பட வேண்டும். மனித நிலையில் இருந்து வீழ்ந்து, தேவர்களின் அருளில் இருந்து ஒதுக்கப்பட்ட அவர்கள் பிணங்களைப் போன்றோரே ஆவர்.(24)
[8] கும்பகோணம் பதிப்பில், “பொருளைச் சம்பாதிப்பவன் (திருடர்களால்) பலாத்காரமாக அபகரிக்கப்பட்டவனாக இருந்தால் (பொருளுடையவனுக்குப்) பிரதிஜ்சை செய்யப்பட்ட பொருளைக் கொடுக்க வேண்டியதில்லை. (அவ்விதமின்றித்) தருமப்படி ஜீவிக்கும் எவன் தர்மமான உடன்பாட்டிலிருந்து விலகுகிறானோ அவ்வழியை அடைந்த அவனைத் தண்டத்தாலேயே அடிக்க வேண்டும்” என்றிருக்கிறது.
வேள்விகள் செய்யாமல், தவங்களில் ஈடுபடாமல் இருக்கும் அவர்கள், தங்கள் தோழமையை விட்டு {தோழர்களிடம் இருந்து} விலகுகிறார்கள். அவர்களது செல்வம் தொலைந்துபோனால், மிகப் பரிதாபகரமான தற்கொலையையும்கூடச் செய்து கொள்வார்கள்.(25) இந்தப் பாவிகளில் ஒருவனிடமும், “இஃது உன் கடமை. உன் இதயம் இதை நோக்கித் திரும்பட்டும்” என்று உன்னால் சொல்ல முடியாது. இவ்வுலகத்தில் செல்வத்துக்கு இணையானது வேறெதுவும் இல்லை என்பது அவர்கள் தீர்மானித்து வைத்திருக்கும் திட நம்பிக்கையாகும்.(26) அத்தகு பிறவியைக் கொல்பவன், எந்தப் பாவத்தையும் அடையமாட்டான். எவன் அவனைக் கொல்வானோ, ஏற்கனவே தன் சொந்த செயல்களால் கொல்லப்பட்ட ஒருவனையே கொல்கிறான். அவன் கொல்லப்பட்டால், அங்கே {ஏற்கனவே} இறந்தவனே கொல்லப்படுகிறான் {ஒரு பிணமே கொல்லப்படுகிறது}.(27) உணர்விழந்தவர்களான அம்மனிதர்களைக் கொல்ல சபதம் செய்தவன், தன் சபதத்தை நிறைவேற்ற வேண்டும்[9]. அத்தகு பாவிகள், தங்கள் வாழ்வுக்காக வஞ்சகத்தை நம்பி வாழும் காகத்தையும், கழுகையும் போன்றோராவர். அவர்களது (மனித) உடல் அழிவை அடைந்த பிறகு, அவர்கள் காகங்களாகவும், கழுகுகளாகவும் மறுபிறப்பை அடைகிறார்கள்.(28) எந்தக் காரியத்திலும், அடுத்தவன் அந்தக் காரியத்தில் எவ்வாறு நடந்து கொள்கிறானோ, அதே போலவே அவனிடம் ஒருவன் நடந்து கொள்ள வேண்டும். வஞ்சகம் பயில்பவன் வஞ்சகத்தாலேயே தடுக்கப்பட வேண்டும். நேர்மையானவன் நேர்மையாகவே எதிர்க்கொள்ளப்பட வேண்டும்” என்றார் {பீஷ்மர்}.(29)
[9] “இங்கே தோன்றும் வாக்கிய அமைப்புக் குழப்புவதாக இருக்கிறது” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். சுலோகங்கள 27 மற்றும் 28ல் வரும் செய்தி கும்பகோணம் பதிப்பில், “அவ்விதமான மனிதனை எவன் அடிக்கிறானோ அவன் பாபத்தை அடையமாட்டான். தன் கர்மத்தால் அடிக்கப்பட்ட பாவியை அவன் அடிக்கிறான். (கர்மத்தால்) அடிக்கப்பட்டுத்தான் அந்தப் பாவி அடிபடுகிறான். கெட்ட புத்தியுள்ள அந்தப் பாபிகளை அடிக்க வேண்டுமென்று ஸங்கல்பஞ்செய்கிறவன் புண்யமடைகிறான். கபடமாகப் பிழைப்பவர்கள் காகத்தையும் நாயையும் போன்றவர்கள்தாம். அவர்கள் சரீரத்தை விட்டபின் இந்தப் பிறவிகளில் பிறக்கிறார்கள்” என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், “தீயோருக்கு எந்தத் தர்மமும் கிடையாது என்பது நிச்சயம். அத்தகு நிலையை அடைந்தவனை ஒரு மனிதன் கொன்றால், அவன் எந்தப் பாவத்தையும் இழைத்தவனாகமாட்டான். ஏற்கனவே தன் செயல்களால் கொல்லப்பட்டவனையே அவன் கொல்கிறான். அறிவு அழிந்து, தீயோனாகி அத்தகு மனிதனுடன் உடன்பட்டு இருக்கும் எவனும், ஒரு காக்கையைப் போலவே, ஒரு கழுகைப் போலவோ நடந்து கொள்கிறான். அவர்கள் தங்கள் உடல்களைக் கைவிடும்போது, மறுப்பிறப்பில் அத்தகு கருவறைகளிலேயே எழுகிறார்கள்” என்றிருக்கிறது.
சாந்திபர்வம் பகுதி – 109ல் சுலோகங்கள் : 29
ஆங்கிலத்தில் | In English |