This Krishna is that Narayana! | Shanti-Parva-Section-110 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 110)
பதிவின் சுருக்கம் : உயிரினங்களால் துன்பங்களை எவ்வாறு தவிர்க்க முடியும் என்பதையும், நாராயணனே அனைத்தின் புகலிடம் என்பதையும், கிருஷ்ணனே அந்த நாராயணன் என்பதையும் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
Bhishma advises Yudhistra Pandavs and Shree Krishna on his death bed of arrows |
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "கிட்டத்தட்ட தொடர்ச்சியாகவே பல்வேறு வழிகளில் உயிரினங்கள் பீடிக்கப்படுவது {துன்புறுவதும்} காணப்படுகிறது. ஓ பாட்டா, அந்தக் கடினமான துன்பங்கள் அனைத்தில் இருந்தும் ஒருவன் விடுபடக்கூடிய வழியென்ன?” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “மறுபிறப்பாள வகையைச் சேர்ந்தோர், அடக்கப்பட்ட ஆன்மாக்களுடனும், பல்வேறு வாழ்வுமுறைகளுக்காக {அசிரமங்களுக்காக} சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள கடமைகளை முறையாகப் பயின்றும் இந்தத் துன்பங்களைக் கடப்பதில் வெல்கின்றனர்.(2) வஞ்சகத்தை ஒருபோதும் பயிலாதவர்களும், வணங்கத்தக்க கட்டுப்பாடுகளால் அடக்கப்பட்ட ஒழுக்கத்தைக் கொண்டவர்களும், உலக ஆசைகள் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறவர்களும், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(3) தீய மொழி பேசப்படும்போது பேசாமல் இருப்பவர்களும், தாக்கப்படும்போதும் பிறரைத் தாக்காதவர்களும், எடுக்காமல் கொடுப்பவர்களும் அனைத்துத் துன்பங்களையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(4) விருந்தினர்களுக்கு விருந்தோம்பலுடன் உறைவிடத்தை எப்போதும் கொடுப்பவர்களும், வன்மத்தில் ஈடுபடாதவர்களும், தொடர்ந்து வேத கல்வியில் ஈடுபடுபவர்களும், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(5) கடமைகளை அறிந்தவர்களும், தங்களைப் பெற்றோரிடம் தகுந்த நடையில் நடந்து கொள்பவர்களும், பகலில் உறங்குவதைத் தவிர்ப்பவர்களுமான மனிதர்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(6) எண்ணம், சொல், செயல் ஆகியவற்றில் எவ்வகைப் பாவத்தையும் செய்யாதவர்களும், எந்த உயிரினத்திற்கும் தீங்கிழைக்காதவர்களும் தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(7)
ஆசை மற்றும் பேராசையின் ஆதிக்கத்தில் {மக்களை} ஒடுக்கும் வகையில் வரிகளை விதிக்காதவர்களும், தங்கள் ஆட்சிப்பகுதிகளைக் காப்பவர்களுமான மன்னர்கள், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(8) பிற பெண்களின் தோழமையை நாடாமல், தாங்கள் திருமணம் செய்து கொண்ட மனைவியரிடம் மட்டுமே தகுந்த காலத்தில் செல்பவர்களும், நேர்மையானவர்களும், தங்கள் அக்னி ஹோத்திரங்களில் கவனமாக இருப்பவர்களும், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(9) மரணம் குறித்த அச்சமனைத்தையும் கைவிட்டு, நியாயமான வழிமுறைகளின் மூலம் வெற்றியை அடைய விரும்பி போரில் ஈடுபடும் துணிவுமிக்கோர், தங்கள் கடமைகள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(10) உயிரையே பணயம் வைத்து இவ்வுலகில் எப்போதும் உண்மையைப் பேசி வருபவர்களும், அனைத்து உயிரினங்களுக்கும் முன்மாதிரியான எடுத்துக்காட்டாகத் திகழ்பவர்களும், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(11) செயல்களில் ஒருபோதும் வஞ்சிக்காதவர்களும், எப்போதும் ஏற்புடைய வார்த்தைகளைப் பேசுபவர்களும், செல்வத்தை எப்போதும் சிறப்புடன் நன்றாகச் செலவழிப்பவர்களும், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(12)
தகாத வேளைகளில் வேதங்களை ஒருபோதும் கல்லாதவர்களும், அர்ப்பணிப்புடன் தவங்களைப் பயில்பவர்களுமான பிராமணர்கள், தங்கள் கடமைகள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(13) மணமாகா நிலையையும், பிரம்மச்சரியத்தையும் வாழ்வாகக் கொள்பவர்களும், தவங்களைச் செய்பவர்களும், கல்வியால் தூய்மையடைந்தவர்களும், வேத ஞானமும், முறையான நோன்புகளும் கொண்டவர்களுமான பிராமணர்கள், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(14) ஆசை {ரஜோ} மற்றும் இருள் {தமோ} குணங்கள் அனைத்தையும் தடுப்பவர்களும், உயர் ஆன்மாக்களைக் கொண்டவர்களும், நன்மை என்றழைக்கப்படும் பண்புகள் அனைத்தையும் பயில்பவர்களும், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(15)
எவர்களைக் கண்டு எந்த உயிரினமும் அச்சப்படாதோ, எவர்கள் எந்த உயிரினத்தையும் கண்டு அஞ்சாதிருக்கிறார்களோ, எவர்கள் அனைத்து உயிரினங்களையும் தம்மைப் போலப் பார்க்கிறார்களோ, அவர்கள் தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(16) நல்லோராக இருப்பவர்களும், செழிப்பாக இருக்கும் மக்களைக் கண்டு ஒருபோதும் துயரடையாதவர்களும், உன்னதமற்ற அனைத்து வகைச் செயல்களையும் தவிர்ப்பவர்களுமான மனிதர்களில் காளைகள், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(17) தேவர்கள் அனைவரையும் வணங்குபவர்களும், நம்பிக்கைகளைக் கொண்ட சமயங்களின் கோட்பாடுகள் அனைத்தையும் கேட்பவர்களும், அமைதியான ஆன்மாக்களைக் கொண்டவர்களும், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்[1].(18) தங்களுக்குக் கௌரவங்களை விரும்பாமல், பிறருக்குக் கௌரவங்களைக் கொடுப்பவர்களும், வழிபாட்டுக்குத் தகுந்தோரை வணங்குபவர்களும், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(19) வாரிசுகளை விரும்பி, தூய மனத்துடன் முறையான சந்திர நாட்களில் சிராத்தங்களைச் செய்பவர்கள், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்[2].(20)
[1] கும்பகோணம் பதிப்பில், “எவர்கள் எல்லாத் தேவர்களையும் நமஸ்கரிப்பவர்களும், எல்லாத் தர்மங்களையும் கேட்பவர்களும், ஸ்ரத்தையுள்ளவர்களும், அடக்கமுள்ளவர்களுமாயிருக்கிறார்களோ அவர்கள் கடினமான துன்பங்களையும் தாண்டுகிறார்கள்” என்றிருக்கிறது.[2] கும்பகோணம் பதிப்பில், “எவர்கள் பிரஜைகளை விரும்பிக் கொண்டு, மிகவும் சுத்தமான மனத்துடன் ஒவ்வொரு திதியிலும் ஸ்ராத்தங்களைச் செய்கிறார்களோ அவர்கள் கடினமான துன்பங்களையும் தாண்டுகிறார்கள்” என்றிருக்கிறது.
தங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தி, பிறரின் கோபத்தைத் தணிப்பவர்களும், எந்த உயிரினத்திடமும் ஒருபோதும் கோபமடையாதவர்களும், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(21) தேன் {மது}, இறைச்சி, போதையூட்டும் பானங்கள் ஆகியவற்றைப் பிறப்பிலிருந்தே தவிர்ப்பவர்கள், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்[3].(22) உயிரைத் தாங்கிக் கொள்வதற்காக மட்டுமே உண்பவர்களும், வாரிசுகளுக்காக மட்டுமே பெண்களின் தோழமையை நாடுபவர்களும், உண்மையைப் பேசுவதற்காக மட்டுமே தங்கள் உதடுகளைத் திறப்பவர்களும், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(23) அனைத்து உயிரினங்களின் உயர்ந்த தலைவனும் {பரமனும்}, அண்டத்தின் தோற்றம் மற்றும் அழிவுக்குக் காரணமாக இருப்பவனுமான தேவன் நாராயணனை அர்ப்பணிப்புடன் வழிபடுபவர்கள், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(24) தாமரை போல் கண்கள் சிவந்தவனும், மஞ்சள் ஆடை {பீதாம்பரம்} உடுத்தியிருப்பவனும், வலிய கரங்களைக் கொண்டவனும், நமது நலன் விரும்பியும், சகோதரனும் {உங்கள் மைத்துனனும், நண்பனும், உறவினனுமான இந்தக் கிருஷ்ணனே மங்கா மகிமை கொண்ட அந்த நாராயணனாவான்.(25)
[3] கும்பகோணம் பதிப்பில், “எந்த மனிதர்கள் பிறந்தது முதல் மதுவையும், மாம்ஸத்தையும், பெண்டிர்களையும், கள்ளையும் எப்பொழுதும் விலக்கிறார்களோ அவர்கள் கடினமான துன்பங்களையும் தாண்டுகிறார்கள்” என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், “பிறந்தது முதல் மது, இறைச்சி, சாராயம் ஆகியவற்றைத் தவிர்ப்பவர்கள் துன்பங்கள் அனைத்தையும் கடக்கிறார்கள்” என்றிருக்கிறது. மேலும் அடிக்குறிப்பில், “மது என்ற சொல்லை நான் மொழிபெயர்க்கவில்லை. இந்தச் சொல் பொதுவாகப் போதையூட்டும் பானத்தைக் குறிக்கும், ஆனால் மத்ய என்று சாராயமும் குறிப்பிடப்படுகிறது. மது என்பது தேனாகவோ, புளிக்கவைக்கப்பட்ட பானமாகவோ, வேறு விதமாகவோ இருக்கலாம். அல்லது குறிப்பிட்ட வகைச் சிறப்பு மதுபானமாகவும் இருக்கலாம்” எனப் பிபேக்திப்ராய் விளக்குகிறார்.
தோலுறையைப் போல இந்த உலகங்கள் யாவையும் தன் விருப்பம்போல மறைப்பவன் இவனே. நினைத்தற்கரிய ஆன்மா கொண்ட பலமிக்கத் தலைவன் இவனே. உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையான கோவிந்தன் இவனே.(26) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, ஜிஷ்ணுவுக்கும் {அர்ஜுனனுக்கும்}, உனக்கும் ஏற்புடையதையும், நன்மையானதையும் செய்வதில் எப்போதும் ஈடுபடுபவனான இந்தக் கிருஷ்ணனே, தடுக்கப்படமுடியாதவனும், அழிவில்லா புகழின் வசிப்பிடமாக இருப்பவனுமான அவனாவான் {நாராயணனாவான்}.(27) ஹரி என்றும் அழைக்கப்படும் இந்த நாராயணனின் புகலிடத்தை அர்ப்பணிப்புடன் நாடுபவர்கள், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(28) துன்பங்களைக் கடப்பது குறித்த இந்த வரிகளைப் படிப்பவர்களும், பிறருக்கு உரைப்பவர்களும், பிராமணர்களிடம் சொல்பவர்களும், தங்கள் துன்பங்கள் அனைத்தையும் கடப்பதில் வெல்கிறார்கள்.(29) ஓ! பாவமற்றவனே {யுதிஷ்டிரனே}, எச்செயல்களின் மூலம் மனிதர்கள் இம்மையிலும், மறுமையிலும் துன்பங்கள் அனைத்தையும் கடப்பார்களோ, அவை அனைத்தையும் இப்போது நான் உனக்குச் சொல்லிவிட்டேன்” என்றார் {பீஷ்மர்}.(30)
சாந்திபர்வம் பகுதி – 110ல் உள்ள சுலோகங்கள் : 30
ஆங்கிலத்தில் | In English |