The jackal and the tiger! | Shanti-Parva-Section-111 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 111)
பதிவின் சுருக்கம் : நல்லோரையும், தீயோரையும் வேறுபடுத்திப் பார்ப்பது எவ்வாறு? புலிக்கு அமைச்சராகச் செயல்பட்ட நல்ல நரியின் கதை ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
Bhisma, "The jackal and the tiger"_Shanti-Parva-Section-111 | Mahabharata In Tamil |
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "இங்கே பல மனிதர்கள் உண்மையில் அமைதியான ஆன்மா கொண்டோராக இல்லையெனினும், வெளிப்புறத்தோற்றத்தில் அமைதி நிறைந்த ஆன்மா கொண்டோராகத் தெரிகின்றனர். மேலும் உண்மையில் அமைதியான ஆன்மா கொண்டோர் வேறு வகையில் தெரிகின்றனர். ஓ! ஐயா, இம்மனிதர்களை நாம் எவ்வாறு அறிந்து கொள்வது?” எனக் கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாக ஒரு புலிக்கும், ஒரு நரிக்கும் இடையில் நடந்த உரையாடல் ஒன்று பழங்கதையில் குறிப்பிடப்படுகிறது. ஓ! யுதிஷ்டிரா, அதைக் கேட்பாயாக.(2) பழங்காலத்தில், புரிகை என்றழைக்கப்படும் செழிப்புமிக்க ஒரு நகரத்தில் பௌரிகன் என்ற பெயரில் ஒரு மன்னன் இருந்தான். உயிரினங்களில் இழிந்தவனான அவன் மிகக் கொடூரனாகவும், பிறருக்குத் தீங்கிழைப்பதில் மகிழ்பவனாகவும் இருந்தான்.(3) அவனது வாழ்நாளின் காலம் முடிந்ததும், விரும்பத்தகாத முடிவை அவன் அடைந்தான். உண்மையில், மனிதவாழ்வில் அவன் செய்த தீச்செயலின் களங்கத்தோடு கூடிய அவன், ஒரு நரியாக மறுபிறவி அடைந்தான்.(4) அவன், தனது பழைய செழிப்பை நினைவுகூர்ந்து, துயரத்தால் நிறைந்து, பிறர் கொண்டு வந்து கொடுத்தாலும் இறைச்சியை உண்ணாதிருந்தான்.(5) அவன் அனைத்து உயிரினிங்களிடமும் கருணை கொண்டவனாகவும், பேச்சில் உண்மை நிறைந்தவனாகவும், கடும் நோன்புகளை நோற்பதில் உறுதியுள்ளவனாகவும் இருந்தான். குறிப்பிட்ட நேரத்தில் மரங்களில் இருந்து விழும் கனிகளை அவன் உணவாகக் கொண்டான்.(6) அந்த நரியானவன், ஒரு பரந்த சுடலையில் {சுடுகாட்டில்} வசித்து வந்தான், அங்கேயே தொடர்ந்து வசிக்கவும் விரும்பினான். அதுவே அவன் பிறந்த இடமாகையால், அவன் வேறு சிறப்பான இடத்திற்கு மாற ஒரு போதும் விரும்பாதிருந்தான்.(7)
அவனது நடத்தையின் தூய்மையைப் பொறுத்துக் கொள்ள முடியாத அவனது வகையைச் சேர்ந்த உயிரினங்கள் {நரிகள்}, அவனது தீர்மானத்தை மாற்றும் முயற்சியில், பணிவுடன் கூடிய இவ்வார்த்தைகளை அவனிடம் சொல்லின,(8) “பயங்கரச் சுடலையில் வசித்தாலும், இத்தகு தூய ஒழுக்கத்துடன் வாழ நீ விரும்புகிறாய். அழுகும் பிணங்களை உண்பதை இயற்கை பண்பாகக் கொண்ட நீ, இப்போது உன் பங்குக்குப் பிறழ்புத்தி கொண்டவனாகத் தெரியவில்லையா?(9) எங்களைப் போல இருப்பாயாக. நாங்கள் அனைவரும் உனக்கு உணவளிக்கிறோம். இத்தகு தூய ஒழுக்கத்தைக் கைவிட்டு, எப்போதும் எது உன் உணவாக இருக்க முடியுமோ அஃதை உண்பாயாக” என்றன.(10)
அவற்றின் இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்த நரியானவன், குவிந்த கவனத்துடனும், தீங்கிழையாமையை அனைவரின் மனத்தில் பதிய வைக்கும் வகையிலும், இந்த இனிமை நிறைந்த வார்த்தைகளைப் பேசினான்:(11) “என் பிறவி இழிந்ததாக இருக்கிறது. எனினும், ஒழுக்கமே குலத்தைத் தீர்மானிக்கிறது.[1] என் புகழ் பரவும் வகையில் நடந்து கொள்ளவே நான் விரும்புகிறேன்.(12) என் வசிப்பிடம் சுடலையாக இருப்பினும், ஒழுக்கம் தொடர்பான என் நோன்புகளைக் கேட்பீராக. ஒருவனின் செயல்களே அவனது சுயத்தை விளைவிக்கின்றன. ஒருவன் செய்யும் அறச்செயல்களின் விளைவாக அவன் மேற்கொள்ளும் வாழ்வுமுறை {ஆசிரமம்} அமைவதில்லை.(13) ஒரு குறிப்பிட்ட வாழ்வுமுறையை நோற்கும் ஒருவன் ஒரு பிராமணனைக் கொன்றால், பிராமணக் கொலை {பிரம்மஹத்தி} எனும் பாவம் அவனைப் பற்றாமல் இருக்குமா? மறுபுறம், ஒருவன் எந்த வாழ்வுமுறையையும் நோற்காமல் இருந்து, அவனே ஒரு பசுவைத் தானமளித்தால், அந்த நற்கொடை அவனுக்கு எந்தத் தகுதியையும் {புண்ணியத்தையும்} உண்டாக்காதா?(14) ஏற்புடையதை அடைய விரும்பும் உந்துதலால் நீங்கள் உங்கள் வயிற்றை மட்டுமே நிரப்புவதில் ஈடுபடுகிறீர்கள். மூடத்தனத்தில் மயங்கியிருக்கும் நீங்கள், முடிவில் உண்டாகும் மூன்று குற்றங்களைக் காணாமல் இருக்கிறீர்கள்.(15) இம்மையிலும், மறுமையிலும் தீமையையே கொண்டதும், நிறைவில்லாமை, மயக்கம் {சபலம்} ஆகியவற்றுடன் அற இழப்பை ஏற்படுத்துவதுமான நீங்கள் வாழும் வாழ்வைப் பின்பற்ற நான் விரும்பவில்லை” என்றான் {நரியாக இருந்த மன்னன் பௌரிகன்}.(16)
[1] “இழிந்த குலத்தில் பிறந்தாலும், நான் இழிந்தவனாகத்தான் செயல்பட வேண்டும் என்று சொல்லக் காரணமேதும் இல்லை. ஒழுக்கமே குலத்தைத் தீர்மானிக்கிறதன்றி, குலம் ஒழுக்கத்தைத் தீர்மானிப்பதில்லை. எனவே, ஒவ்வொரு குலத்திலும் நல்லோர் இருப்பர் என்பது இங்கே பொருள். பர்துவான் பதிப்பில் இவ்வரி நகைப்பிற்கிடமான வகையில் சொல்லப்பட்டுள்ளது” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஆற்றலுக்காகக் கொண்டாடப்படும் ஒரு புலியானது, இந்த உரையாடலைக் கேட்க நேர்ந்து, அந்த நரியை தூய ஒழுக்கம் கொண்ட கல்விமானாகக் கருதி, தனக்கு இணையாக மரியாதையை அவனுக்குச் செலுத்தி, அவனைத் தன் அமைச்சராக நியமித்துக் கொள்ளும் தன் விருப்பத்தை வெளிப்படுத்தியது.(17)
அந்தப் புலியானது {நரியிடம்}, “ஓ! அறவோனே, நீ யார் என்பதை நான் அறிவேன். என்னோடு சேர்ந்து அரசின் கடமைகளைக் கவனிப்பாயாக. உன் சுவைக்குத் தகாத எதையும் கைவிட்டு, நீ விரும்பும் எந்தப் பொருளையும் அனுபவிப்பாயாக.(18) எங்களைப் பொறுத்தவரையில், நாங்கள் சீற்றமிகு கடும் மனோநிலை கொண்டவர்களாக அறியப்படுகிறோம். இதை நான் முன்கூட்டியே உனக்குச் சொல்லிவிடுகிறேன். நீ மென்மையாக நடந்து கொண்டால் நன்மைகளை அடைந்து, உனக்கான பயன்களையும் அறுவடை செய்வாய்” என்றது.(19) விலங்குகள் அனைத்தின் தலைவனான அந்த உயர் ஆன்மாவின் {புலியின்} இந்த வார்த்தைகளை மதித்த நரியானவன், தன் தலையைச் சற்றே தொங்கவிட்டபடியே, பணிவு நிறைந்த இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(20)
அந்த நரியானவன் {மன்னன் பௌரிகன்}, “ஓ! விலங்குகளின் மன்னா, என்னைக் குறித்த உன் வார்த்தைகள் உனக்குத் தகுந்தவையே. தூய நடத்தை கொண்டவர்களும், கடமைகளையும், உலகக் காரியங்களை அறிந்தவர்களுமான அமைச்சர்களை நீ நாடுவதும் உனக்குத் தகுந்ததே.(21) ஓ! வீரா, ஒரு நல்ல அமைச்சரில்லாமல் உன் பெருமையை உன்னால் தக்கவைத்துக் கொள்ள முடியாது, அல்லது ஒரு தீய அமைச்சனின் மூலம் உன் வாழ்வுக்கே முடிவேற்படலாம்.(22) ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவனே, உன் அமைச்சர்களில் உனக்கு அர்ப்பணிப்புள்ளவர்கள், கொள்கை அறிந்தவர்கள், ஒருவருக்கொருவர் சுதந்திரமாக இருப்பவர்கள், வெற்றியால் உனக்கு மகுடம் சூட்ட விரும்புபவர்கள், பேராசை எனும் களங்கம் இல்லாதவர்கள், வஞ்சகமில்லாதவர்கள், ஞானம் உள்ளவர்கள், உன் நன்மையில் எப்போதும் ஈடுபடுபவர்கள் பெரும் மனத் திண்மை கொண்டவர்கள் ஆகியோரையோ, ஆசான்களையோ, உன் பெற்றோர்களையோ போல மதிப்பாயாக.(23,24) ஓ! விலங்குகளின் மன்னா, என் தற்போதைய நிலையில் நான் நிறைவுடன் இருப்பதால், எதன் காரணமாகவும் நான் அந்நிலையை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை. ஆடம்பர இன்பங்களினால் எழும் மகிழ்ச்சியிலும் நான் ஆசை கொள்ளவில்லை.(25)
மேலும் என் நடத்தையை உன் பழைய பணியாட்கள் ஏற்காமல் போகக்கூடும். அவர்கள் தீய நடத்தை கொண்டோராக இருந்தால், உனக்கும் எனக்கும் இடையில் ஒற்றுமையின்மையை {வேற்றுமையை} உண்டாக்குவார்கள்.(26) அந்த வேறொருவர், காந்தியைக் கொண்டவராக இருப்பினும், அவரைச் சார்ந்திருப்பது விரும்பத்தக்கதோ, புகழத்தக்கதோ அல்ல.(27) நான் தூய்மைப்படுத்தப்பட்ட ஆன்மாவைக் கொண்டவன் ஆவேன். நான் உயர்ந்த அருளைப் பெற்றிருக்கிறேன். பாவிகளிடம் கூட நான் கடுமையைக் காட்டவல்லவனாக இல்லை. நான் பெரும் முன்னறிதிறனைப் பெற்றிருக்கிறேன். பேருழைப்புக்குத் தகுதியுடையவனாக இருக்கிறேன். சிறு காரியங்களை நான் பார்ப்பதில்லை. நான் பெரும் பலத்தைக் கொண்டவனாவேன். நான் என் செயல்களில் வெற்றிகரமாக இருக்கிறேன். கனியற்ற செயலை நான் ஒருபோதும் செய்வதில்லை. இன்பநுகர் பொருட்கள் அனைத்தாலும் நான் அலங்கரிக்கப்பட்டிருக்கிறேன்.(28) சிறிதளவே கொண்டு நான் ஒரு போதும் நிறைவடைவதில்லை. நான் ஒருபோதும் பிறருக்குத் தொண்டாற்றியவனில்லை. மேலும் பணிவிடை செய்வதில் நான் திறனற்றவனாக இருக்கிறேன். நான் என் விருப்பப்படி காடுகளில் இன்பமாக வாழ்ந்து வருகிறேன்[2].(29)
[2] மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது. கும்பகோணம் பதிப்பில் இது முற்றிலும் வேறுவிதமாக, “எனது ஸ்வபாவமானது உன்னுடைய பழைய வேலைக்காரர்களுடன் சேர்க்கை அடையாது. என்னிமித்தமாகத் துன்பமடையுமவர்கள் உன்னைப் பேதப்படுத்துவார்கள். நீ சிறந்தவர்களான மற்றவர்களுக்கும், கொண்டாடத்தக்கவனும் அடுக்கத்தக்கவனும் நல்ல மனமுள்ளவனும் மிகப்பெரிய பாக்யம்பெற்றவனும் பாபிகளிடத்திலும் கடோரமற்றவனும் நீண்ட ஆலோசனையுள்ளவனும், பெரிய உத்ஸாஹமுள்ளவனும், பெருங்கொடையுள்ளவனும், பெரிய பலமுள்ளவனும், உபகாரத்திற்குப் பழுதில்லாத, பிரதி உபகாரம் செய்கிறவனும், பாக்யங்களால் நன்றாக அலங்கரிக்கப்பட்டவனாகவும் இருக்கிறாய். ஆனால் நான் என்னிலைமையிலே மிக்கச் சந்தோஷமுள்ளவனாயிருக்கிறேன். என்னிஷ்டம் போல் வனத்தில் ஸஞ்சரிக்கும் நான் (பிறரிடம்) சேவை செய்தலை அறிந்தவனல்லன்” என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பிலும், கும்பகோணம் பதிப்பில் உள்ளதைப் போலவே நரியானது, புலியின் நற்பேற்றைச் சொல்வதாகவே அமைந்திருக்கிறது.
மன்னர்களைச் சார்ந்து வாழும் அனைவரும், தங்களுக்கு எதிராகத் தொடுக்கப்படும் தீய பேச்சுகளின் விளைவால் பெரும் துன்பத்தைப் பொறுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். எனினும், காடுகளில் வசிப்போர், எந்தக் கவலையும், அச்சமுமில்லாமல் தங்கள் நோன்புகளை நோற்றபடி நாட்களைக் கடத்த முடியும்.(30) மன்னனால் அழைக்கப்பட்டவனின் இதயத்தில் எழும் அச்சத்தை, காட்டில் கனிகளையும், கிழங்குகளையும் உண்டு, தங்கள் நாட்களைக் கடத்தியபடி நிறைவுடன் வாழ்ந்து வருபவர்கள் அறியமாட்டார்கள்.(31) முயற்சியேதும் இல்லாமல் அடையப்படும் எளிய உணவு மற்றும் பானத்திற்கும், அச்சத்துடன் தருவிக்கப்படும் ஆடம்பர உணவுக்கும் இடையில் பெருத்த வேறுபாடு உள்ளது. இவையிரண்டையும் சிந்திக்கும் நான், எங்கே கவலையில்லையோ அங்கேயே மகிழ்ச்சியிருக்க முடியும் என்ற கருத்தை அடைகிறேன்.(32) அரசத் தொண்டாற்றுவோருக்கு மத்தியில் மிகச் சிலர் மட்டுமே அவர்களது குற்றங்களுக்காக நீதியுடன் தண்டிக்கப்படுகின்றனர். எனினும், அவர்களில் பெரும் எண்ணிக்கையிலானோர், பொய்க் குற்றச்சாட்டுகளின் மூலமே மரணத்தை அடைகின்றனர்.(33) ஓ! விலங்குகளின் மன்னா, இவையனைத்தும் இருந்தபோதிலும், நீ என்னை உன் அமைச்சராக நியமித்துக் கொண்டால், நீ என்னிடம் நடந்து கொள்ள வேண்டிய முறை குறித்து உன்னுடன் ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொள்ள நான் விரும்புகிறேன்.(34) உன் நன்மைக்காக நான் பேசும் சொற்கள் உன்னால் கேட்கப்பட்டு, உன்னால் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். உன்னால் எனக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் வழிவகைகளில் நீ ஒருபோதும் குறிக்கிடக்கூடாது.(35)
நான் ஒருபோதும் உன் மற்ற அமைச்சர்களுடன் ஆலோசிக்க மாட்டேன். நான் அவ்வாறு செய்தால், என்னிலும் மேன்மையடைய விரும்பும் அவர்கள், பல்வேறு வகைக் குற்றச்சாட்டுகளால் என்னைக் களங்கப்படுத்துவார்கள்.(36) உன்னை மட்டுமே தனிமையில் சந்தித்து, உனக்கு எது நன்மையோ அதை இரகசியமாகச் சொல்வேன். உன் உறவினர்கள் தொடர்புடைய காரியங்கள் அனைத்திலும், உனக்கு நன்மையானது எது, அல்லது நன்மையற்றது எது என்பதை என்னிடம் நீ கேட்காமலிருக்க வேண்டும்.(37) என்னிடம் ஆலோசித்த பிறகு, நீ உன் பிற அமைச்சர்களைத் தண்டிக்காமல் இருக்க வேண்டும். என்னைப் பின்தொடர்பவர்களையும், என்னைச் சார்ந்திருப்பவர்களையும் நீ சினத்தின் வசப்பட்டுத் தண்டிக்காமல் இருக்க வேண்டும்” என்றான் {நரியாக இருந்த மன்னன் பௌரிகன்}.(38) நரியால் இவ்வாறு சொல்லப்பட்ட அந்த விலங்குகளின் மன்னன் {புலியானவன்}, அவனிடம், “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி அவனுக்கு அனைத்து கௌரவங்களையும் அளித்தான். பிறகு, புலியின் அமைச்சராக நரியானவன் பொறுப்பேற்றான். நரியானவன், மரியாதையாக நடத்தப்படுவதையும், அவனது செயல்கள் அனைத்தும் கௌரவிக்கப்படுவதையும் கண்ட மன்னனின் {புலியின்} பழைய பணியாட்கள் ஒன்றாகச் சேர்ந்து சதித்திட்டங்களைத் தீட்டி, அவனுக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை இடையறாமல் வெளிப்படுத்தத் தொடங்கினர்.(40)
அந்தத் தீயவர்கள், நட்புடன் பழகி அவனை நிறைவு செய்யவும், அரசில் நிலவிய அதிகாரத்துக்குப் புறம்பான பல்வேறு குற்றங்களைப் பொறுத்துக் கொள்ளச் செய்யவும் முதலில் முயற்சித்தனர்.(41) அடுத்தவரின் சொத்தைக் கொள்ளையடிக்கும் அவர்கள், தங்கள் மேல்வருமானங்களில் இன்புற்றவர்களாக நீண்ட காலம் வாழ்ந்து வந்தனர். எனினும் இப்போதோ, நரியால் ஆளப்படும்போது, அவர்கள், பிறருக்குச் சொந்தமானவற்றை அபகரிக்க இயலாதவர்களானார்கள்.(42) முன்னேற்றத்தையும், செழிப்பையும் விரும்பிய அவர்கள், இனிய பேச்சுகளால் அவனை மயக்கத் {சபலப்படுத்தத்} தொடங்கினர். உண்மையில், அவனது இதயத்தைக் கவர்ந்திழுக்கும்படியான பெரிய அளவிலான கையூட்டுகளும் கொடுக்கப்பட்டன. ஆனால் பெரும் ஞானியான அந்த நரியானவன், அந்தச் சபலங்களுக்கு வசப்படுவதற்கான எந்த அறிகுறிகளையும் வெளிக்காட்டவில்லை.(43) பிறகு அவர்களில் சிலர், அவனை அழிப்பதற்காகத் தங்களுக்குள் திட்டம் வகுத்துக் கொண்டு, விலங்குகளின் மன்னனால் {புலியால்} மிகவும் விரும்பப்படுவதும், அவனுக்கெனவே வைக்கப்பட்டிருந்ததுமான நன்கு பக்குவப்படுத்தப்பட்ட இறைச்சியை எடுத்து இரகசியமாக நரியின் வீட்டில் வைத்துவிட்டனர்.(44) இறைச்சியைத் திருடியது யார் என்பதையும், யார் இந்தச் சதியைச் செய்தது என்பதையும் நரியானவன் அறியவந்தான். அனைத்தையும் அறிந்தாலும், ஒரு குறிப்பிட்ட நோக்கத்தில் அதைப் பொறுத்துக் கொண்டான்.(45) அவன் அமைச்சர் பொறுப்பை ஏற்ற சமயத்தில், “ஓ ஏகாதபதி {புலியே}, நீ என் நட்பை விரும்புகிறாய். ஆனால் காரணமேதுமில்லாமல் நீ என்னில் நம்பிக்கையிழக்கலாகாது” என்ற ஒப்பந்தத்தை மன்னனிடம் {புலியிடம்} ஏற்படுத்தியிருந்தான்”.(46)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “ விலங்குகளின் மன்னன் பசியை உணர்ந்து, உண்ண வந்த போது, எப்போதும் ஆயுத்தமாக வைக்கப்படும் இறைச்சி இல்லாதத்தைக் கண்டான். அப்போது மன்னன், “கள்வன் கண்டுபிடிக்கப்பட வேண்டும்” என்று ஆணையிட்டான்.(17) வஞ்சகம் நிறைந்த அவனது அமைச்சர்கள், அவனுக்காக வைக்கப்பட்டிருந்த இறைச்சியை, கல்விமானும், ஞானச்செருக்கு கொண்டவனும், அவனது மற்றொரு அமைச்சனுமான நரியே திருடினான் என்று சொன்னார்கள்.(48) நரி நியாயமில்லாமல் நடந்து கொண்டதைக் கேட்ட அந்தப் புலி சீற்றத்தால் நிறைந்தவனானான். உண்மையில், மன்னன் {புலி} கோபவசப்பட்டு, தன் அமைச்சரைக் கொல்லும்படி ஆணையிட்டான்.(49) இந்த வாய்ப்பைக் கண்ட முன்னாள் அமைச்சர்கள், மன்னனிடம் வந்து, “அந்த நரியானவன், எங்கள் வாழ்வாதாரங்கள் அனைத்தையும் எடுத்துக் கொள்ள எப்போதும் தயாராக இருக்கிறான்” என்று சொன்னார்கள்.(50)
இதைச் சொன்ன அவர்கள், மன்னனின் உணவைக் களவாடிய நரியின் செய்கையைக் குறித்து மீண்டும் மீண்டும் பேசினர். அவர்கள், “அவனது செயல்கள் இவ்வாறே இருக்கின்றன. அவன் என்னதான் செய்யத் துணியமாட்டான்?(51) அவன் நீர் கேள்விப்பட்டது போன்றவனல்ல. அவன் பேச்சில்தான் அறவோன், ஆனால் பாவம் நிறைந்த மனநிலை கொண்டவனாவான்.(53) உண்மையில் இழிந்தவன், ஆனால், அறப்போர்வை போர்த்திக் கொண்டு வேடம் போடுகிறான். அவனது நடத்தையும் உண்மையில் பாவம் நிறைந்ததாகும். தன் தேவைகளுக்குத் தொண்டாற்றிக் கொள்ளவே, அவன் உணவு காரியங்களில் துறவையும் நோன்புகளையும் பயில்கிறான்.(53) இதை நீ நம்பவில்லையெனில், ஆதாரத்தை உன் கண் முன்பே காட்டுகிறோம்” என்றனர். பிறகு அவர்கள் உடனடியாக நரியின் வசிப்பிடத்திற்குள் நுழைந்து இறைச்சியைக் கண்டுபிடித்தனர்.(54) நரியின் இல்லத்தில் இருந்து இறைச்சி கொண்டுவரப்பட்டதை உறுதிசெய்து கொண்டு, தன் பழைய பணியாட்கள் சொன்னதனைத்தையும் கேட்ட மன்னன் {புலி}, “நரி கொல்லப்பட வேண்டும்” என்று கட்டளையிட்டான்.(55)
புலியின் வார்த்தைகளைக் கேட்ட அவனது {புலியின்} தாய், நல்லாலோசனைகளின் மூலம் தன் மகனின் நல்லறிவை விழிப்படையச் செய்வதற்காக அவ்விடத்திற்கு வந்தாள்.(56) அந்த மதிப்பிற்குரிய சீமாட்டி {புலியின் தாய்}, “ஓ! மகனே, வஞ்சகம் நிறைந்த இந்தக் குற்றச்சாட்டை நீ ஏற்கக்கூடாது. பகையாலும், பொறாமையாலும் உந்தப்பட்ட தீயோர், நேர்மையானவனின் மீது கூடக் குற்றஞ்சாட்டுவார்கள்.(57) சச்சரவை விரும்பும் பகைவர்களால், உயர்ந்த சாதனை படைக்கப்போகும் தன் எதிரியின் மேன்மையைப் பொறுத்துக் கொள்ள முடியாது. தவங்களில் ஈடுபடும் தூய ஆன்மா கொண்டவர்கள் மேலும்கூடக் குற்றம் சுமத்தப்படும்.(58) காடுகளில் (தீங்கற்ற) செயல்களில் ஈடுபடும் தவசிக்குக் கூட, நண்பர்கள், நடுநிலையாளர்கள், எதிரிகள் என்ற மூன்று தரப்பினர் எழுகின்றனர்.(59) பிறரைத் துன்புறுத்துவோர், தூயவர்களை வெறுக்கிறார்கள். சோம்பேறிகள் சுறுசுறுப்புடையவனை வெறுக்கிறார்கள். கல்வியற்றவர்கள் கல்விமான்களை வெறுக்கிறார்கள். வறியவர்கள், வசதிபடைத்தவர்களை வெறுக்கிறார்கள். நீதியற்றவர்கள் நீதிமான்களை வெறுக்கிறார்கள். அழகற்றவர்கள் அழகானவர்களை வெறுக்கிறார்கள்.(60)
கல்விமான்கள், கல்வியற்றவர்கள், பிறரைத் துன்புறுத்துவோர், வஞ்சகம் நிறைந்தோர் ஆகியோரில் பலர், பிருஹஸ்பதியின் நற்பண்புகளையும், நுண்ணறிவையும் கொண்ட அப்பாவிகளின் மேல் பொய்க்குற்றச்சாட்டுகளைச் சுமத்துவார்கள்.(61) நீ இல்லாதபோது, உன் வீட்டில் இருந்து உண்மையில் இறைச்சி களவாடப்பட்டதென்றால், நரியானவன் அவனுக்குக் கொடுக்கும் எந்த இறைச்சியையும் மறுப்பவன் என்பதை நினைவுகூர்வாயாக. (கள்வனைக் கண்டுபிடிப்பதில்) இந்த உண்மையும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.(62) தீயவர்கள் சில வேளைகளில் நல்லவர்களைப் போலவும், நல்லவர்கள் சிலவேளைகளில் தீயவர்களைப் போலவும் தோன்றுவார்கள். பல்வேறு வகையான தன்மைகள் உயிரினங்களில் காணப்படுகின்றன. எனவே, எது எதுவாக இருக்கிறது என்று ஆராயும் தேவை இருக்கிறது.(63) ஆகாயமானது, ஒரு பாத்திரத்தின் கடினமான அடிப்பாகத்தைப் போலத் தெரிகிறது. விட்டில்பூச்சியானது, உண்மையான நெருப்பின் கீற்று போலவே தெரிகிறது. எனினும், உண்மையில், ஆகாயத்திற்கு எந்த அடித்தளமும் கிடையாது, விட்டில் பூச்சியிலும் எந்த நெருப்பும் இல்லை.(64) எனவே, கண்ணுக்குப் புலப்படும் இத்தகு காரியங்களில் கூராய்வுக்கான தேவை இருக்கிறது. கூராய்வுக்குப் பிறகே எதையும் உறுதி செய்து கொள்பவனுக்கு, பின்னால் எவ்வகையிலும் வருந்த வேண்டிய அவசியமேற்படாது.(65)
ஓ! மகனே, ஒரு தலைவனுக்கு ஒரு பணியாளைக் கொல்வது ஒருபோதும் கடினமானதில்லை. எனினும், அதிகாரம் படைத்தவர்களிடம் உள்ள மன்னிக்கும் தன்மையானது {பொறுமையானது}, எப்போதும் புகழத்தக்கதும், புகழை உண்டாக்கத்தக்க ஒன்றாகவும் இருக்கிறது.(66) நீ அந்த நரியானவனை முதல் அமைச்சராக்கினாய். அதன் விளைவாக, அக்கம்பக்கத்துத் தலைவர்களுக்கு மத்தியில் அவன் பெரும்புகழை ஈட்டியிருக்கிறான். ஒரு நல்ல அமைச்சரை அடைவது எளிதன்று. அந்த நரி உனது நலன்விரும்பியாவான். எனவே, அவன் ஆதரிக்கப்படுபவனாக இருக்க வேண்டும்.(67) உண்மையில் அப்பாவியான ஒருவன் மீது எதிரிகள் பொய் குற்றச்சாட்டுகளை வைக்கும்போது மன்னன் அவனைக் குற்றவாளியாகக் கருதினால், அந்தத் தீர்மானத்திற்கு அவனை வழிநடத்திச் சென்ற அந்தத் தீய அமைச்சர்களின் விளைவால், அவன் விரைவில் அழிவையே அடைவான்” என்றாள் {புலியின் தாய்}.(68)
புலியின் தாயார் இவ்வாறு பேசிய பிறகு, நரியைச் சார்ந்த ஒரு நல்ல ஒற்றன், பகைவர்களின் ஒன்றுபட்டக்குழுவில் இருந்து முன்வந்து, பொய்க் குற்றச்சாட்டு அமைக்கப்பட்ட விதம் குறித்த அனைத்தையும் கண்டுபிடித்துச் சொன்னான்.(69) நரியின் குற்றமின்மை வெளிப்படையானது, அவன் {நரி} தன் தலைவனால் குற்றமற்றவனாக அறிவிக்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டான். விலங்குகளின் மன்னன் {புலி} மீண்டும் மீண்டும் அவனை {நரியை} அன்புடன் அணைத்துக் கொண்டான்.(70) எனினும் கொள்கையறிவியலை நன்கறிந்த நரியானவன், துயரால் எரிந்து, விலங்குகளின் மன்னனை வணங்கி, பிராய நோன்பை நோற்று தன் உயிரை விடுவதற்கு அவனது {புலியின்} அனுமதியை வேண்டினான்.(71) புலியானவன், அன்பால் விரிந்த தன் கண்களை அறவோனான அந்த நரியின் மீது செலுத்தி, மரியாதையுடன் கூடிய வழிபாட்டால் அவனைக் கௌரவித்து, அவனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதில் இருந்து அவனைத் தடுக்க முயன்றான்.(72)
தன் தலைவன் கலங்குவதைக் கண்ட நரியானவன், அவனை வணங்கி, கண்ணீரால் தடைபட்ட குரலுடன்,(73) “உன்னால் முதலில் கௌரவிக்கப்பட்டேன். பிறகு உன்னால் அவமதிக்கவும் பட்டேன். நீ என்னிடம் நடந்து கொண்ட விதம், என்னை உன் எதிரியாக்கியிருக்கிறது. எனவே, நான் இனியும் உன்னோடு வசிப்பது முறையாகாது.(74) பணியில் இருந்து விரட்டப்பட்டோ, தங்களுக்குரிய கௌரவங்களில் இருந்து படியிறக்கப்பட்டோ, தனிமைப்படுத்தப்பட்டோ, (தங்கள் தலைவனின் கோபத்தின்மூலம்) தங்கள் எதிரிகளால் அழிவையடைந்தோ,(75) துன்பத்தையேற்படுத்தும் மனநிலையிலோ, சீற்றமடைந்தோ, அச்சமடைந்தோ, (தங்கள் தலைவர்களைப் பொறுத்தமட்டில்) வஞ்சிக்கப்பட்டோ, பறிமுதல் செய்யப்பட்டோ, பெரும் சாதனைகளைச் செய்யும் செருக்கும், விருப்பமும் இருந்தும், செல்வமீட்டும் வழிமுறைகள் இல்லாதவர்களாக ஆக்கப்பட்டோ,(76) தங்களுக்கு இழைக்கப்பட்ட தீங்கின் விளைவால் சீற்றமடைந்தோ, துயரில் எரிந்தோ, நிறைவில்லாமல் இருக்கும் பணியாட்கள், தங்கள் தலைவர்களுக்குப் பேரிடர் ஏற்படும் காலத்திற்காக எப்போதும் காத்திருப்பார்கள். வஞ்சிக்கப்பட்ட அவர்கள் தங்கள் தலைவர்களை விட்டு, எதிரிகளின் கைகளில் உள்ள திறன்மிக்கக் கருவிகளாகிறார்கள்.(77)
நான் உன்னால் அவமதிக்கப்படு என் இடத்தில் இருந்து இறக்கப்பட்டேன். நீ மீண்டும் என்னை எவ்வாறு நம்புவாய்? (என் தரப்பில்) நான் எவ்வாறு உன்னுடன் தொடர்ந்து வசிக்க முடியும்?(78) தகுந்தவனாக நினைத்தே, ஆய்வு செய்து உன் அலுவலில் நீ என்னை நியமித்தாய். (நமக்கிடையில்) முன்பு செய்யப்பட்ட உடன்படிக்கையை மீறி நீ என்னை அவமதித்திருக்கிறாய்.(79) ஒருவன் தன் நிலைத்திறனைப் பராமரிக்க விரும்பினால், முன்பு பிறரின் முன்னிலையில் வைத்து குறிப்பிட்டவனை அறநடத்தை கொண்டவன் என்று பேசிவிட்டு, பிறகு அவனையே தீயோன் எனச் சொல்லக்கூடாது.(80) உன்னால் அவமதிக்கப்பட்ட நான், இனியும் உன்னில் நம்பிக்கை கொள்ள முடியாது. என் தரப்பில், என்னிடம் நீ நம்பிக்கை இழப்பதைக் கண்டால், நான் அச்சத்திலும், கவலையிலும் நிறைந்தவனாவேன்.(81) நீயும் ஐயங்கொண்டு, நானும் அஞ்சி இருக்கும் நிலையானது, நமக்குத் தீங்கிழைக்கும் வாய்ப்புக்காகக் காத்திருக்கும் நமது எதிரிகளுக்கு உதவியாக அமையும். அதன்விளைவாக உனது குடிமக்களும், கவலையடைந்து, நிறைவில்லாதவர்களாக ஆவார்கள். காரியங்களில் அத்தகு நிலையானது பல குற்றங்களைக் கொண்டதாகும்.(82)
முதலில் கௌரவமும், பிறகு அவமதிப்பும் எங்கே இருக்கிறதோ, அந்நிலையை ஞானிகள் மகிழ்ச்சியானதாகக் கருதுவதில்லை.(83) ஒற்றுமையாக இருக்கும் இருவரைப் பிரிக்க முடியாததைப் போலவே, பிரிந்த இருவரைச் சேர்ப்பதும் மிகக் கடினமானதாகும். பிரிவுக்குப் பிறகு மீண்டும் சேர்ந்தவர்கள், ஒருவரையொருவர் மீண்டும் அணுகும்போது, அவர்களது அணுகுமுறை அன்புடையதாக இருக்க முடியாது.(84) தன் தலைவனுக்கு நன்மை செய்யும் விருப்பத்தை மட்டுமே எந்தப் பணியாளும் கொள்வதில்லை. தன் தலைவனுக்கும், தனக்கும் நன்மை செய்யும் நோக்கில் இருந்தே தொண்டு பிறக்கிறது. அனைத்துச் செயல்பாடுகளும் தன்னல நோக்கங்களிலிருந்து மேற்கொள்ளப்படுகின்றன. தன்னலமற்ற செயல்களோ, நோக்கங்களோ மிக அரிதானவையாகும்.(85) அமைதியற்ற இதயங்களைக் கொண்ட மன்னர்கள், மனிதர்களின் உண்மை அறிவை அடையமாட்டார்கள். திறன் கொண்டவனாகவும், அச்சமற்றவனாகவும் நூற்றிலொருவனே காணப்படுவான்.(86) மனிதர்களின் செழிப்பும், அவர்களது வீழ்ச்சியும் தானே நேர்கின்றன. செழிப்பு, வறுமை, பெருமை ஆகிய அனைத்தும் புத்திகுறைவில் இருந்தே உண்டாகின்றன” என்றான் {அந்த நரியானவன்}”.(87)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகியவை நிரம்பிய இந்த இணக்கமான சொற்களைப் பேசி, மன்னனை நிறைவு செய்த நரியானது காட்டுக்கு ஓயச் சென்றது.(88) விலங்குகளின் மன்னனுடைய {புலியினுடைய} கெஞ்சல்களைக் கேளாத அந்தப் புத்திசாலி நரியானது, பிராயத்தில் அமர்ந்து, தன் உடலைக் கைவிட்டு, (பூமியில் தான் செய்த நற்செயல்களுக்கான வெகுமதியாக) சொர்க்கத்திற்குச் சென்றது” {என்றார் பீஷ்மர்}.(89)
சாந்திபர்வம் பகுதி – 111ல் உள்ள சுலோகங்கள் : 89
ஆங்கிலத்தில் | In English |