An idle Camel! | Shanti-Parva-Section-112 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 112)
பதிவின் சுருக்கம் : சோம்பலால் உண்டாகும் தீங்கைக் குறித்து ஓர் ஒட்டகத்தின் கதை மூலம் யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
Bhisma, "An idle Camel!" | Shanti-Parva-Section-112 | Mahabharata |
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஒரு மன்னனால் எச்செயல்கள் செய்யப்பட வேண்டும்? எச்செயல்களைச் செய்வதன் மூலம் ஒரு மன்னன் மகிழ்ச்சியை அடைவான்? ஓ கடமைகளை அறிந்தோர் அனைவரிலும் முதன்மையானவரே, இஃதை எனக்கு விரிவாகச் சொல்வீராக” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடன்}, “நீ அறிய விரும்புவதை நான் உனக்குச் சொல்வேன். ஒரு மன்னனால் இவ்வுலகில் செய்யப்பட வேண்டியது மற்றும் மன்னன் மகிழ்ச்சியடையக்கூடிய செயல்கள் என்னென்ன என்பது குறித்துத் தீர்மானிக்கப்பட்டிருக்கும் உண்மையைக் கேட்பாயாக.(2) ஒரு மன்னன், நாம் கேள்விப்பட்டிருக்கும் ஓர் ஒட்டகத்தின் உயர்ந்த வரலாற்றில் சொல்லப்பட்டுள்ள முறையில் நடந்து கொள்ள வேண்டும். ஓ! யுதிஷ்டிரா அந்த வரலாற்றைக் கேட்பாயாக. ஓ! யுதிஷ்டிரா, இப்போது அந்த வரலாற்றைக் கேட்பாயாக.(3) கிருத யுகத்தில், தன் முந்தைய பிறவியின் செயல்கள் அனைத்தையும் நினைவில் கொண்டுள்ள ஒரு பெரிய ஒட்டகம் இருந்தது. கடும் நோன்புகளை நோற்றுவந்த அவ்வொட்டகம், காட்டில் கடுந்தவத்தைச் செய்து வந்தது.(4) அதனுடைய தவத்தின் முடிவில் பலமிக்கப் பிரம்மன் அதனிடம் நிறைவு கொண்டான். எனவே, பெரும்பாட்டன் அதற்கு {அந்த ஒட்டகத்திற்கு} வரங்களை அளிக்க விரும்பினான்.(5)
ஒட்டகம் {பிரம்மனிடம்}, “ஓ! புனிதமானவரே, ஓ! பலமிக்கத் தலைவா, நூறு யோஜனைகள் தொலைவில் உள்ள எந்த உணவையும் பற்றும் வகையில், உமது அருளால் என் கழுத்து நீண்டதாகட்டும்” என்று கேட்டது.(6)
வரங்களை அளிக்கும் அந்த உயர் ஆன்மா {பிரம்மன்}, “அப்படியே ஆகட்டும்” என்றான். பிறகு அந்த ஒட்டகம் தன் காட்டிற்குச் சென்றது.(7)
வரம்பெற்ற நாள்தொடங்கி அந்த மூட விலங்கு சோம்பேறியானது. உண்மையில், விதியால் மயக்கமடைந்த அந்த இழிந்த விலங்கு, அந்த நாள் முதலே மேய்ச்சலுக்குச் செல்லவில்லை.(8) ஒரு நாள், அந்த விலங்கு நூறு யோஜனைகள் கொண்ட தன் கழுத்தை நீட்டி, எந்த முயற்சியுமின்றித் தன் உணவை அடைவதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, பெரும்புயலொன்று எழுந்தது.(9) அந்த ஒட்டகம் தன் தலையையும், தன் கழுத்தின் ஒரு பகுதியையும் ஒரு மலைக்குகையில் மறைத்துக் கொண்டு, புயல் ஓயும்வரை காத்திருக்கத் தீர்மானித்தது.(10)
அப்போது ஒரு நரியானது, தன் மனைவியுடன் சேர்ந்து மழையில் நனைந்து, குளிரில் நடுங்கியபடியே, பெரும் சிரமங்களுக்குப் பிறகு அதே குகையை நோக்கிச் சென்று உறைவிடத்திற்காக அதற்குள் விரைவாக நுழைந்தது.(11) ஓ! பாரதக் குலத்தின் காளையே, இறைச்சியை உண்டு வாழ்ந்தது என்பதாலும், களைப்புடன் இருந்ததாலும், அந்த நரியானது ஒட்டகத்தின் கழுத்தைக் கண்டு, தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உண்ணத் தொடங்கியது. தன் கழுத்து உண்ணப்படுவதைக் கண்ட ஒட்டகம், அதைக் குறுக்கி {சுருக்கிக்} கொள்ள முயற்சித்தது.(12) ஆனால், அது தன் கழுத்தை மேலும் கீழும் அசைத்த போது, நரியும், அதன் மனைவியும், அதைப் பிடித்திருக்கும் தங்கள் பிடியை விடாமல் தொடர்ந்து உண்டன.(14) குறுகிய காலத்திற்குள்ளாகவே அந்த ஒட்டகம் இறந்தது. இவ்வாறு அந்த ஒட்டக்கதைக்கொன்று தின்ற நரியானது, புயல் அடங்கி, மழை நின்றதும் அந்தக் குகையைவிட்டு வெளியே வந்தது.(15) இவ்வாறே அந்த மூட ஒட்டகம் மரணமடைந்தது.
செயலின்மையின் தொடர்ச்சியாக எவ்வளவு பெரிய தீமை விளைந்தது என்பதைப் பார்.(16) உன்னைப் பொறுத்தவரையில் நீ சோம்பலைத் தவிர்த்து, உன் புலன்களைக் கட்டுப்படுத்தி, இவ்வுலகில் அனைத்தையும் முறையான வழிமுறைகளில் செய்வாயாக. வெற்றியானது புத்தியைச் சார்ந்திருக்கிறது என்று மனுவே சொல்லியிருக்கிறார்.(17) நுண்ணறிவின் துணையால் நிறைவேற்றப்பட்ட செயல்கள் அனைத்தும் முதன்மையானவையாகவும், கரங்களின் உதவியால் அடையப்பட்டவை நடுநிலையாகவும், கால்களின் உதவியால் அடையப்பட்டவை தாழ்ந்தவையாகவும் கருதப்படுகின்றன.(18) தொழில் பரிவர்த்தனையில் புத்திசாலித்தனத்துடன் நடந்து கொண்டு, புலனடக்கத்துடன் உள்ள மன்னன், தன் நாட்டைத் தக்க வைத்துக் கொள்கிறான். ஆர்வமிக்க மனிதர்கள், நுண்ணறிவின் உதவியுடன் வெற்றிகளை அடைவார்கள் என்று மனுவே சொல்லியிருக்கிறார்.(19)
ஓ! யுதிஷ்டிரா, ஓ! பாவமற்றவனே, பொதுவாக அறியப்படாத விவேகமிக்க ஆலோசனைகளைக் கேட்பவர்களும், கூட்டாளிகளைக் கொண்டவர்களும், முறையான கூராய்வுக்குப் பிறகு செயல்படுபவர்களும், இவ்வுலகில் தங்கள் நோக்கங்கள் அனைத்தையும் அடைவதில் வெல்கிறார்கள்.(20) இத்தகு துணைகளைப் பெற்ற ஒருவன், மொத்த பூமியையும் ஆள்வதில் வெல்கிறான்.(21) ஓ! இந்திரனைப் போன்ற ஆற்றலைக் கொண்டவனே, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள விதிகளை அறிந்த பழங்காலத்து ஞானிகளால் இது சொல்லப்பட்டிருக்கிறது. சாத்திரங்களை நோக்கும் பார்வை கொண்ட நானும், அதையே உனக்குச் சொல்கிறேன். ஓ! மன்னா, உன் நுண்ணறிவைப் பயன்படுத்தி, இவ்வுலகில் செயல்படுவாயாக” என்றார் {பீஷ்மர்}.(22)
சாந்திபர்வம் பகுதி – 112ல் உள்ள சுலோகங்கள் : 22
ஆங்கிலத்தில் | In English |