Reproaches and Slanders! | Shanti-Parva-Section-114 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 114)
பதிவின் சுருக்கம் : சபைகளில் அற்பர்களால் வசைமாரி பொழியப்படும்போதும், அவதூறு செய்யப்படும் போதும், அதைப் பொறுத்துக் கொள்ளும் நல்லோன் அடையும் பயனைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
Bhishma advises Yudhistra Pandavs and Shree Krishna on his death bed of arrows_Shanti Parva-114 |
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாரதரே, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே, இறுமாப்பில் பெருகியவனும், அறியாமை கொண்டவனுமான ஒரு மனிதனால், சபைகளுக்கு மத்தியில் வைத்து கடுஞ்சொற்களால் தாக்கப்படும்போது, அடக்கத்தால் அலங்கரிக்கப்பட்ட ஒரு கல்விமான் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, இவ்வுலகில் சிறு மதி கொண்டோரின் வசைமொழிகளை, நல்லான்மா கொண்ட ஒருவன் எவ்வாறு பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து (சாத்திரங்களில்) எவ்வாறு சொல்லப்பட்டுள்ளது என்பதைக் கேட்பாயாக.(2) ஒரு மனிதன் மற்றொருவனால் நிந்திக்கப்படும்போது, கோபவசப்படாமல் இருந்தால், அவன் நிந்திப்பவனின் {வசைபாடுபவனின்} நற்செயல்கள் அனைத்தையும் (அவை அனைத்தின் தகுதியையும் {புண்ணியத்தையும்}) எடுத்துக் கொள்வான். அத்தகு வழக்கில் {அந்த வசையைப்} பொறுமையாகத் தாங்கிக் கொள்பவன், தன் தீச்செயல்களுடைய குற்றங்கள் அனைத்தையும் {அவற்றால் விளையும் பாவங்கள் அனைத்தையும்} கோபவசப்பட்டு நிந்தனையில் ஈடுபடும் {வசைமாரி பொழியும்} மனிதனுக்குக் கொடுக்கிறான்.(3) நுண்ணறிவுமிக்க ஒரு மனிதன், பொருந்தாக் கூச்சலிடும் அற்பமான ஒரு தித்திபத்துக்கு {நீர்க்கோழிக்கு} ஒப்பாக வசைமொழி பேசும் ஒருவனை அலட்சியம் செய்ய வேண்டும். வெறுப்பின் வசப்படுபவன் வீணாக வாழ்கிறான் எனச் சொல்லப்படுகிறது. “அத்தகு மரியாதைக்குரிய மனிதனை, அத்தகு மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் வைத்து, இத்தகு வார்த்தைகளைச் சொல்லி நான் பேசினேன்” என்று ஒரு மூடன் சொல்வதையும், அந்தத் தீச்செயலைக் குறித்து அவன் தற்பெருமை பேசிக் கொள்வதையும் நாம் அடிக்கடி கேட்கிறோம்(4,5). மேலும் அவன், “என்னால் நிந்திக்கப்பட்ட அந்த மனிதன், செத்தவனைப் போல வெட்கத்துடன் அமைதியாக இருந்தான்” என்றும் சேர்த்துச் சொல்வான். இவ்வாறே, எவனும் பீற்றிக் கொள்ளக்கூடாத ஒரு செயலைக் குறித்துச் சொல்லி ஒரு வெட்கங்கெட்ட மனிதன் தற்புகழ்ச்சி செய்து கொள்வான்.(6) மனிதர்களில் இழிந்தவனான இத்தகையவன் கவனமாக அலட்சியம் செய்யப்பட வேண்டும். சிறு மதி கொண்ட இத்தகையவன் சொல்லக்கூடிய அனைத்தையும் ஞானம் கொண்ட ஒரு மனிதன் பொறுத்துக் கொள்ள வேண்டும்.(7)
ஒரு மதிக்கத்தகாத {மதிப்பில்லாத} நபரால் செய்யப்படும், தற்புகழ்ச்சியாலோ, பழிச் சொல்லாலோ என்ன செய்து விட முடியும்? கானகங்களில் பயனில்லாமல் கரையும் ஒரு காகத்தைப் போன்றவனே அவன்.(8) தங்கள் வார்த்தைகளால் மட்டுமே பிறரை குற்றஞ்சாட்டுபவர்கள், தகுந்த வழிமுறைகளின் மூலம் அந்தக் குற்றச்சாட்டுகளை நிறுவினால், அவர்களுடைய வார்த்தைகள் சற்றே {சிறிது} மதிக்கப்படலாம். எனினும் உண்மையென்னவெனில், யாரிடம் சச்சரவு செய்கிறார்களோ அவர்களுக்கு மரணத்தை இருப்புக்கு அழைக்கும் மூடர்களுடைய வார்த்தைகளின் அளவுக்கே அவர்களுடைய வார்த்தைகள் திறன் கொண்டவை[1].(9) இத்தகு நடத்தை {செயல்} மற்றும் வார்த்தைகளில் ஈடுபடும் மனிதன், தன் தகாவழிப் பிறப்பையே அறிவித்துக் கொள்கிறான். உண்மையில் அவன், எப்போதும் மறைக்கப்பட வேண்டிய உடலின் பகுதியைக் காட்டிக் கொண்டு ஆடும் ஒரு மயிலைப் போன்றவனாவான்[2].(10) தூய நடத்தை கொண்ட ஒருவன், எதையும் சொல்லவோ, செய்யவோ ஐயுணர்வு கொள்ளாதவனும், பாவம் நிறைந்தவனுமான இழிந்தவனிடம் ஒருபோதும் பேசக்கூடாது.(11)
[1] “இந்தியாவில், அறியாமை கொண்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மத்தியில் பொதுவாகப் புழங்கும் வசைமொழியானது, “உனக்கு மரணம் வரட்டும்”, அல்லது “யமனின் வீட்டுக்குச் செல்” என்பதாகும். தீய மனிதர்களின் வசைமொழிகள் முற்றிலும் பயனற்றவையாக இருப்பதைப் போலவே அத்தகு வார்த்தைகளும் வீணானவையே எனப் பீஷ்மர் சொல்கிறார்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[2] கும்பகோணம் பதிப்பில், “நிந்தை செய்யும் மனிதன் தன் செய்கையாலும், சொல்லாலும் தன் தாயிடம் பிறன் புணர்ச்சி செய்ததைச் சொல்லிக் கொள்ளுகிறவனாகிறான். ரஹஸ்யாங்கத்தை வெளியிட்டுக் கொண்டு கூத்தாடும் மயில்போல அவன் ஸந்தோஷப்படுகிறான்” என்றிருக்கிறது.
ஒருவனுடைய பார்வை தன் மேல் இருக்கும்போது, அவனுடைய தகுதிகளைப் பேசுபவனும், அவனுடைய பார்வை தன்னிடம் இருந்து விலகும்போது அவனைக் குறித்து இழிவாகப் பேசுபவனுமான மனிதன், உண்மையில் ஒரு நாயைப் போன்றவனாவான். அத்தகு மனிதன் சொர்க்கத்தில் தனக்கான பகுதிகள் அனைத்தையும், தான் கொண்ட எந்த அறிவு மற்றும் பண்பின் பலன்கள் அனைத்தையும் மொத்தமாக இழக்கிறான்.(12) ஒருவனுடைய பார்வை தன் மேல் இல்லாத போது, அவனைக் குறித்து இழிவாகப் பேசும் மனிதன், நெருப்பிலிட்ட தன் ஆகுதிகள் {காணிக்கைகள்} அனைத்தின் கனிகளையும், நூற்றுக்கணக்கான மனிதர்களுக்கு அவன் அளித்திருக்கும் கொடைகளின் பலன்களையும் தாமதமில்லாமல் இழக்கிறான்.(13) எனவே, ஞானம் கொண்ட மனிதன் ஒருவன், நேர்மையான மனிதர்கள் அனைவராலும் தவிர்க்கப்படத் தகுந்த இத்தகு பாவம் நிறைந்த இதயம் கொண்டவனை, நாயின் இறைச்சியைத் தவிர்ப்பதுபோலத் தயங்காமல் தவிர்க்க வேண்டும்.(14) ஓர் உயர் ஆன்ம மனிதனின் குற்றங்களை அறிவிக்கும் தீய ஆன்மா கொண்ட இழிந்தவன், (அச்செயலின் மூலம்) பாம்பானது (மற்றவர்கள் தலையிடும்போது) தன் தலையை வெளிக்காட்டுவதைப் போலத் தன் தீய இயல்பையே வெளிப்படுத்துகிறான்.(15) தனக்கு இனிமையான தொழிலிலேயே எப்போதும் ஈடுபடும் இத்தகு புறங்கூறுவோரிடம் எதிரிவினையாற்ற முனையும் உணர்வுள்ள மனிதன், சாம்பற்குவியலில் மூழ்கிய மூடக் கழுதையைப் போலத் துன்பம் நிறைந்த நிலையையே அடைகிறான்.(16)
பிறரின் குற்றங்களைப் பேசுவதில் எப்போதும் ஈடுபடும் மனிதனானவன், வெஞ்சினமிக்கதோர் ஓநாய், அல்லது பித்துப் பிடித்துப் பிளிறும் மதங்கொண்ட ஒரு யானை, அல்லது மூர்க்கமான ஒரு நாயைப் போலத் தவிர்க்கப்பட வேண்டியவனாவான்.(17) மூடப் பாதையில் செல்பவனும், நலம்தரும் கட்டுப்பாடுகள் மற்றும் அடக்கம் ஆகியவற்றில் இருந்து வீழ்ந்துவிட்டவனும், பிறருக்குத் தீங்கு செய்வதிலேயே எப்போதும் ஈடுபடுபவனும், தன் செழிப்பைக் குறித்துக் கவலையில்லாதவனுமான அந்த இழிந்த பாவிக்கு ஐயோ {அந்த இழிந்த பாவியை வெறுக்க வேண்டும்}.(18) இத்தகு இழிந்தோரால் அவமதிக்கப்படும்போது, அவர்களிடம் வார்த்தைகளைப் பரிமாறிக்கொள்ள ஒரு நேர்மையான மனிதன் விரும்பினால், “துன்பத்தை அனுபவிக்காதே” என்ற இவ்வார்த்தைகளால் அவனுக்கு அறிவுரை கூற வேண்டும். ஓர் உயர்ந்த மனிதனுக்கும், இழிந்த மனிதனுக்கும் இடையிலான வார்த்தை மோதலை அமைதியான மனம் கொண்டோர் ஒருபோதும் அங்கீகரிப்பதில்லை.(19) அவதூறு செய்யும் இழிந்தவன், சினங்கொள்ளும்போது, தன் உள்ளங்கையால் அடுத்தவனை அடிக்கவோ, புழுதி, அல்லது உமி வாரி இறைக்கவோ, பற்களைக் காட்டி, அல்லது நறநறவெனக் கடித்து அச்சுறுத்தவோ செய்வான். இவையனைத்தும் நன்கறியப்பட்டதே.(20) தீய ஆன்மா கொண்ட இழிந்தோர் சபைகளில் கூறும் நிந்தனைகளையும், அவதூறுகளையும் பொறுத்துக் கொள்ளும் மனிதன், அல்லது இந்த அறிவுரைகளை அடிக்கடி படிக்கும் மனிதன், பேச்சால் நேரும் எந்தத் துன்பத்தையும் ஒருபோதும் அனுபவிக்கமாட்டான்” என்றார் {பீஷ்மர்}.(21)
சாந்திபர்வம் பகுதி – 114ல் உள்ள சுலோகங்கள் : 21
ஆங்கிலத்தில் | In English |