Docility! | Shanti-Parva-Section-113 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 113)
பதிவின் சுருக்கம் : பெருங்கடலுக்கும், ஆறுகளுக்கும் இடையில் நடந்த உரையாடலின் மூலம் பலவீனமான மன்னன், பலமிக்க எதிரியிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
Bhishma advises Yudhistra Pandavs and Shree Krishna on his death bed of arrows_Shanti Parva-113 |
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாரதக் குலத்தின் காளையே, மதிப்புமிக்க உடைமையான ஒரு நாட்டை அடைந்தும், வழக்கமான துணைகள் ஏதுமில்லாத ஒரு மன்னனானவன், ஒரு பலமிக்க எதிரியிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்” என்று கேட்டான்.(1)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாகப் பெருங்கடலுக்கும், ஆறுகளுக்கும் இடையில் நடைபெற்ற ஓர் உரையாடல் பழங்கதையில் குறிப்பிடப்படுகிறது.(2) பழங்காலத்தில், ஆறுகளின் தலைவனும், தேவர்களுடைய எதிரிகளின் புகலிடமுமான அழிவில்லாத பெருங்கடலானவன், தன் மனத்தில் எழுந்த இந்த ஐயத்தைத் தீர்க்குமாறு ஆறுகள் அனைத்திடமும் கேட்டான்.(3)
அந்தப் பெருங்கடல், “ஆறுகளே, வேருடனும், கிளைகளுடனும் பிடுங்கப்பட்ட பெரும் தண்டுகளைக் கொண்ட மரங்கள் நீரோட்டம் நிறைந்த உங்கள் அனைவராலும் அடித்துக் கொண்டு வரப்படுவதைக் காண்கிறேன். எனினும் நீங்கள் ஒருபோதும் பிரம்பை[1] கொண்டு வருவதில்லை.(4) உங்கள் கரைகளில் வளரும் பிரம்புகள் {நாணல்கள்} அற்பமான தண்டுகளைக் கொண்டவையாகவும், பலமற்றவையாகவும் இருக்கின்றன. இகழ்வால் நீங்கள் அவற்றைப் பிடுங்க மறுக்கிறீர்களா? அல்லது அவற்றால் உங்களுக்கு ஏதேனும் பயனிருக்கிறதா?(5) உங்கள் அனைவரையும் ஈர்க்கும் நோக்கம் என்ன என்பதை நான் கேட்க விரும்புகிறேன். உண்மையில், கரைகளில் வளரும் பிரம்புகள் {நாணல்கள்} உங்களில் ஒருவராலும் ஏன் வேரோடு பிடுங்கப்படுவதில்லை?” என்று கேட்டான்{பெருங்கடல்}}.(6)
[1] மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே பிரம்பு cane என்றே இருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில் நாணல் reed என்றிருக்கிறது. கும்பகோணம் பதிப்பில் நீர்நொச்சி மரம் என்றிருக்கிறது. இது நாணலாகவே இருக்க வேண்டும்.
இவ்வாறு கேட்கப்பட்டதும், கங்கை ஆறானவள், ஆறுகள் அனைத்தின் தலைவனான அந்தப் பெருங்கடலிடம், முக்கியத்துவம் வாய்ந்தவையும், அறிவு நிறைந்தவையும், அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுபவையுமான வார்த்தைகளில் பதிலளித்தாள்.(7) கங்கை, “மரங்கள் தனியாக, ஒரே இடத்தில், தாங்கள் இருக்கும் இடத்தை விட்டுச் சற்றும் நகராமல் {விறைப்பாக} நிற்கின்றன. எங்கள் நீரோட்டத்தைத் தடுக்கும் அவற்றுடைய நிலைப்பாட்டின் விளைவாலேயே, அவை தாங்கள் வளரும் இடத்தைவிட்டு அகலும் கடன்பட்டவையாக இருக்கின்றன. எனினும், பிரம்புகள் {நாணல்கள்} வேறுவகையில் செயல்படுகின்றன.(8) முன்னேறிவரும் நீரோட்டத்தைக் காணும் பிரம்பானது {நாணலானது}, அதற்கேற்ப வளைந்து கொடுக்கிறது. மற்றவை இவ்வழியில் செயல்படுவதில்லை. நீரோட்டம் கடந்து சென்றதும், பிரம்பானது {நாணலானது} தன் பழையை நிலையையே ஏற்கிறது.(9) பிரம்பானது {நாணலானது}, காலம் மற்றும் வாய்ப்பு ஆகியவற்றின் அறங்களை அறிந்திருக்கிறது. அது கட்டுப்படுவதாகவும், கீழ்ப்படிவதாகவும் இருக்கிறது. விறைப்பாக இல்லாமல் அது வளைந்து கொடுக்கிறது. இந்தக் காரணங்களாலேயே அஃது எங்களுடன் அடித்து வரப்படாமல், தான் வளரும் இடத்திலேயே நிற்கிறது.(10) காற்று மற்றும் நீரின் சக்திக்கு முன்பு வளைந்து, எழும் செடிகள், மரங்கள் மற்றும் கொடிகள் ஆகியன ஒருபோதும் (வேருடன் பிடுங்கப்பட்டு அடித்துச் செல்லப்படும்) ஏமாற்றத்தை அடைவதில்லை” என்றாள் {கங்கை}”.(11)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “வலிமையில் மிகுந்தவனும், சிறைபிடிக்கவோ, கொல்லவோ வல்லவனுமான ஒரு பலமிக்க எதிரிக்கு வளைந்து கொடுக்காத ஒருவன் விரைவில் அழிவை அடைவான்[2].(12) தன்னுடைய மற்றும் தன் எதிரியுடைய பலம் மற்றும் பலவீனம், வலிமை மற்றும் சக்தி ஆகியவற்றை முழுமையாக உறுதி செய்து கொண்ட பிறகு செயல்படும் ஞானம் கொண்ட மனிதன், ஒருபோதும் ஏமாற்றத்தை அடைவதில்லை.(13) எனவே, ஒரு நுண்ணறிவுமிக்க மனிதன், தன் எதிரியைத் தன்னைவிடப் பலவானாகக் காணும்போது, இந்தப் பிரம்பின் {நாணலின்} நடத்தையையே பின்பற்ற வேண்டும். அதுவே ஞானத்தின் அறிகுறியாகும்” {என்றார் பீஷ்மர்}.(14)
[2] "எனவே, இங்கே உண்மையான கொள்கையானது, "எதிரி பலவீனமடையும் காலம் வரை பொறுத்திருக்க வேண்டும்" என்பதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
சாந்திபர்வம் பகுதி – 113ல் உள்ள சுலோகங்கள் : 14
ஆங்கிலத்தில் | In English |