Servants! | Shanti-Parva-Section-115 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 115)
பதிவின் சுருக்கம் : மன்னனால் பணியமற்றத்தப்படும் மனிதர்களின் தகுதிகளைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
Bhishma advises Yudhistra on his death bed of arrows_ Shanti Parva-115 |
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, ஓ! பெரும் ஞானத்தைக் கொண்டவரே, என்னைக் குழப்பத்தில் பெரும் ஐயம் ஒன்று எனக்கிருக்கிறது. ஓ! மன்னா, நீர் அக்குறை தீர்க்க வேண்டும். நீர் நமது குடும்பத்தை முன்னேற்றமடையச் செய்பவராவீர்.(1) தீய நடத்தையும், தீய ஆன்மாவும் கொண்ட இழிந்தவர்கள் பேசும் அவதூறுகளைக் குறித்து எங்களிடம் உரையாடினீர். எனினும், நாம் உம்மை மேலும் கேள்வி கேட்க விரும்புகிறேன்.(2) நாட்டுக்கு எது நன்மையோ, அரச குலத்திற்கு எது மகிழ்ச்சியை உண்டாக்குமோ, எதிர்காலத்திலும், நிகழ்காலத்திலும் எது நன்மையையும் முன்னேற்றத்தையும் உண்டாக்குமோ,(3) உணவு, பானம் மற்றும் இந்த உடல் தொடர்புடையவற்றில் எது நன்மையோ, அதைக்குறித்து நீர் உரையாட வேண்டுமென நான் விரும்புகிறேன்.(4) அரியணையில் அமர்த்தப்பட்டு, நண்பர்கள், அமைச்சர்கள் மற்றும் பணியாட்கள் சூழ அதில் தொடர்ந்திருக்கும் {தொடர்ந்து அமர்ந்திருக்கும்} மன்னன், தன் மக்களை எவ்வாறு நிறைவுகொள்ளச் செய்ய வேண்டும்?(5)
எந்த மன்னன், தன் பற்று மற்றும் சார்புநிலை ஆகியவற்றால் வழிநடத்தப்பட்டுத் தீய கூட்டாளிகளுடன் அர்ப்பணிப்புள்ளவனாக மாறுவானோ, எவன், தன் உணர்வுகளுக்கு அடிமையாவதன் விளைவால் தீய மனிதர்களிடம் செல்வானோ, அவன்,(6) நல்ல குடி மற்றும் குருதியில் பிறந்த பணியாட்கள் அனைவரும் தன்னிடம் வெறுப்படைந்திருப்பதைக் காண்கிறான். அத்தகைய மன்னன், நல்ல பணியாட்களின் எண்ணிக்கை பலத்தால் அடையத்தக்க எந்த நோக்கத்தின் நிறைவையும் அடைய மாட்டான்.(7) நுண்ணறிவில் பிருஹஸ்பதிக்கு இணையாவரான உமக்கு, உறுதிசெய்து கொள்ளக் கடினமான மன்னர்களின் கடமைகளைக் குறித்து என்னிடம் உரையாடி, என் ஐயங்களைக் களைவதே தகும். (8) ஓ! மனிதர்களில் புலியே {பீஷ்மரே}, நமது குலத்திற்கு நன்மை செய்வதில் நீர் எப்போதும் ஈடுபட்டிருக்கிறீர். அதன் காரணமாகவே, ஆட்சித்திறத்தின் கடமைகள் குறித்து நீர் எப்போதும் எங்களிடம் உரையாடுகிறீர். பெரும் ஞானம் கொண்ட க்ஷத்திரியும் (விதுரரும்), மதிப்புமிக்க அறிவுரைகளை எப்போதும் எங்களுக்கு வழங்கி வருகிறார்.(9) நமது குலத்திற்கும், நாட்டுக்கும் நன்மையை உண்டாக்கவல்ல அறிவுரைகளை உம்மிடமிருந்து கேட்டால், இறவாநிலை தரும் அமுதத்தைப் பருகி நிறைவடைந்திருக்கும் மனிதனைப் போல என்னால் என் நாட்களை மகிழ்ச்சியாகக் கடத்த முடியும். (10) பணியாட்களில் எந்த வர்க்கத்தினர் இழிந்தவர்களாகவும், எவர்கள் அனைத்து சிறப்புகளைக் கொண்டவர்களாகவும் கருதப்பட வேண்டும்? எந்த வர்க்கத்துப் பணியாட்கள், அல்லது எவ்வகைப் பிறப்புக் கொண்ட பணியாட்களின் உதவியுடன், ஆட்சிக் கடமைகளை வெளிப்படுத்துவது பரிந்துரைக்கப்படலாம்?(11) மன்னன் பணியாட்கள் இல்லாமல் தனியாகச் செயல்படுவதைத் தேர்ந்தெடுத்தால், அவனால் ஒருபோதும் தனது மக்களைப் பாதுகாப்பதில் வெல்ல முடியாது. எனினும், உயர்குடி பிறப்பைக் கொண்ட மனிதர்கள் அனைவரும், அரசுரிமையை அடையும் ஆசையுடன் இருக்கின்றனர்” என்றான் {யுதிஷ்டிரன்}.(12)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதா, ஒரு மன்னனால் தனியாகத் தன் நாட்டை ஆள முடியாது. அவனுக்கு உதவி செய்யப் பணியாட்கள் இல்லாமல், அவனால் எந்த நோக்கத்தையும் நிறைவேற்றுவதில் வெல்ல முடியாது. எந்த நோக்கத்தையாவது அடைவதில் அவன் வென்றாலும், அவனால் (தனியாக) அதைத் தக்க வைத்துக் கொள்ள முடியாது.(13) எந்த மன்னனின் பணியாட்கள் அனைவரும், அறிவும், ஞானமும் கொண்டவர்களாக இருப்பார்களோ, தங்கள் தலைவனின் நன்மையில் அர்ப்பணிப்பு கொண்டவர்களாக இருப்பார்களோ, உயர்குடி பிறப்பையும், அமைதியான மனநிலையும் கொண்டவர்களாக இருப்பார்களோ, அவனே {அந்த மன்னனே} அரசு தொடர்பான இன்பங்களை அனுபவிப்பதில் வெல்கிறான் {அரசின் பயனை அடைவான்}.(14) எந்த மன்னனின் அமைச்சர்கள் அனைவரும் நற்குடி பிறப்பு கொண்டவர்களாக, (கையூட்டுகள் மற்றும் பிற ஆதிக்கங்களின் மூலம்) அவனிடம் இருந்து விலகிச் செல்ல முடியாதவர்களாக, எப்போதும் அவனுடனே வாழ்பவர்களாக, தங்கள் தலைவனுக்கு அறிவுரை வழங்குவதில் ஈடுபடுபவர்களாக, ஞானம், நற்பண்பு ஆகியவற்றையும், பொருள்களின் உறவுகள் குறித்த அறிவையும் கொண்டவர்களாக,(15) எதிர்கால மற்றும் எதிர்பாரா நிகழ்வுகளைக் குறித்துச் சொல்பவர்களாக, காலத்தின் தன்மைகளைக் குறித்த நல்லறிவு கொண்டவர்களாக, கடந்து போனவற்றின் நிமித்தம் ஒருபோதும் வருந்தாதவர்களாக இருப்பார்களோ, அவன் {அந்த மன்னன்} அரசு தொடர்பான இன்பங்களை அனுபவிப்பதில் வெல்கிறான் {அரசின் பயனை அடைவான்}.(16) எந்த மன்னனின் பணியாட்கள், அவனுடைய இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்பவர்களாக, அவனுக்கு ஏற்புடையதையே எப்போதும் செய்பவர்களாக, தங்கள் தலைவனின் நோக்கங்களை நிறைவேற்றுவதிலேயே எப்போதும் கவனம் கொண்டவர்களாக, பற்றுறுதிமிக்கவர்களாக இருப்பார்களோ, அவன் {அந்த மன்னன்} அரசு தொடர்பான இன்பங்களை அனுபவிப்பதில் வெல்கிறான் {அரசின் பயனை அடைவான்}.(17)
எந்த மன்னனின் குடிமக்கள் எப்போதும் உற்சாகம் நிறைந்தவர்களாக, உயர்ந்த மனம் கொண்டவர்களாக, எப்போதும் அறவழியில் நடப்பவர்களாக இருப்பார்களோ, அவன் {அந்த மன்னன்} அரசு தொடர்பான இன்பங்களை அனுபவிப்பதில் வெல்கிறான் {அரசின் பயனை அடைவான்}.(18) எவனுடைய வருமானத்தின் {வரவின்} மூலங்கள் அனைத்தும், நிறைவு கொண்டவர்களும், நம்பிக்கைக்குரியவர்களும், நிதியைப் பெருகச் செய்யும் வழிமுறைகளை நன்கறிந்தவர்களுமான மனிதர்களால் கண்காணிக்கப்பட்டு, நிர்வகிக்கப்படுகிறதோ, அவனே {அந்த மன்னனே} மன்னர்களில் சிறந்தவனாவான்.(19) எந்த மன்னனுடைய பண்டகசாலைகளும், தானியக்களஞ்சியங்களும், கையூட்டு பெறாதவர்களும், நம்பிக்கைக்குரியவர்களும், அர்ப்பணிப்புள்ளவர்களும், ஆசையற்றவர்களும், திரள {பெருகச்} செய்வதில் முனைப்புள்ளவர்களுமான பணியாட்களின் மேற்பார்வையில் நடத்தப்படுகிறதோ, அவன் {அந்த மன்னன்} செழிப்பையும், பெரும் தகுதியையும் {புண்ணியத்தையும்} அடைவதில் வெல்கிறான்.(20) எந்த மன்னனின் நகரத்தில் நீதியானது, நன்கறியப்பட்ட விளைவுகளை உண்டாக்கும் உண்மையற்ற வழக்கைக் கொண்ட வாதி அல்லது பிரதிவாதிக்கு அபராதம் விதிக்கும் வகையிலும், குற்றவியல் வழக்குகளில் சங்கர் மற்றும் லிகிதரின்[1] ஒழங்கிலும் முறையாக நிர்வகிக்கப்படுகிறதோ, அவன் {அந்த மன்னன்} அரசு தொடர்பான தகுதியை {புண்ணியத்தை} ஈட்டுவதில் வெல்கிறான் {அரசின் பயனை அடைவான்}.(21) எந்த மன்னன் தன் குடிமக்களிடம் அன்பால் தன்னைப் பிணைத்துக் கொள்கிறானோ, மன்னர்களின் கடமைகளைஅறிந்தவனாக இருக்கிறானோ, ஆறு தொகுப்புகளை {ஆறு முக்கிய நோக்கங்களைக்} கவனிக்கிறானோ, அவன் {அந்த மன்னன்} அரசு தொடர்பான தகுதியை {புண்ணியத்தை} ஈட்டுவதில் வெல்கிறான் {அரசின் பயனை அடைவான்}.(22)
[1] இங்கே குறிப்பிடப்படும் சங்கர் மற்றும் லிகிதரின் கதை சாந்தி பர்வம் பகுதி 23ல் https://mahabharatham.arasan.info/2017/11/Mahabharatha-Santi-Parva-Section-23.html ஏற்கனவே விவரிக்கப்பட்டிருக்கிறது.
சாந்திபர்வம் பகுதி – 115ல் உள்ள சுலோகங்கள் : 22
ஆங்கிலத்தில் | In English |