A dog transformed into a tiger! | Shanti-Parva-Section-116 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 116)
பதிவின் சுருக்கம் : அச்சத்தில் நடுங்கிய ஒரு நாயானது, ஒரு முனிவரின் உதவியால் சிறுத்தையாகவும், புலியாகவும் மாறிய கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
Bhishma advises Yudhistra Pandavs and Shree Krishna on his death bed of arrows_Shanti Parva-116 |
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “இது தொடர்பாகப் பின்வரும் பழங்கால வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. நல்லோருக்கும் ஞானிகளுக்கும் மத்தியில் அந்த வரலாறானது நல்ல முன்னுதாரணமாகக் கருதப்படுகிறது.(1) அவ்வரலாறு தற்போதைய தலைப்புக்கு {உரையாடலுக்குத்} தொடர்புடையதாகும். ஜமதக்னியின் மகனான ராமரின் {பரசுராமரின்} ஆசிரமத்தில், முனிவர்களில் முதன்மையானோர் பலரால் அஃது உரைக்கப்படும்போது நான் கேட்டிருக்கிறேன்.(2) மனிதர்கள் வசிக்காத ஒரு பெருங்காட்டில், கனிகளையும், கிழங்குகளையும் உண்டு, புலனடக்கத்துடன், கடுந்தவங்களை நோற்கும் ஒரு தவசி வாழ்ந்து வந்தார்.(3) அவர், கடும் விதிமுறைகள் மற்றும் தன்னடக்கத்தை நோற்பவராக, அமைதியான மற்றும் தூய்மையான ஆன்மா கொண்டவராக, வேதம் ஓதுவதில் எப்போதும் கவனம் உள்ளவராக, நோன்புகளால் இதயம் தூய்மை அடைந்தவராக, அனைத்து உயிரினங்களிடமும் நற்பண்புகளுடன் நடந்து கொள்ளும் ஒரு வாழ்வைப் பின்பற்றி வந்தார்.(4) பெரும் நுண்ணறிவுடன் தன் இருக்கையில் அமர்ந்திருக்கும் அவரது நல்லியல்பானது, காட்டில் வாழும் அனைத்து உயிரினங்களாலும் அறியப்பட்டதே என்பதால், அவை அவரை அன்புடன் அணுகி வந்தன.(5)
சீற்றமிகு சிங்கங்களும், புலிகளும், பெரும் அளவைக் கொண்ட மதங்கொண்ட யானைகளும், சிறுத்தைகள், காண்டாமிருகங்கள், கரடிகள் மற்றும் குருதியுண்டு வாழும் கடுந்தன்மை கொண்ட பிற விலங்குகளும் அம்முனிவரை அணுகி, அவரிடம் வழக்கமான கேள்விகளைக் கேட்டு வந்தன. உண்மையில் அவை அனைத்தும் அவரிடம் சீடர்களைப் போலவும், பணியாட்களைப் போலவும் நடந்து கொண்டு, எப்போதும் அவருக்கு ஏற்புடையவற்றையே செய்து வந்தன.(6,7) அவரிடம் வந்து வழக்கமான விசாரிப்புகளை விசாரித்துவிட்டு, தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்வதை அவை வழக்கமாகக் கொண்டிருந்தன. எனினும், ஒரு வளர்ப்பு விலங்கானது {நாயானது}, எந்த நேரமும் அந்த முனிவரை விட்டு விலகாமல், அங்கேயே வாழ்ந்து வந்தது.(8) அஃது {அந்த நாய்} அந்தத் தவசியிடம் அர்ப்பணிப்பும், ஆதிதப் பற்றுக் கொண்டதாக இருந்தது. நோன்புகளால் பலவீனமடைந்து மெலிந்திருந்த அது, கனிகளையும், கிழங்குகளையும், நீரையும் உண்டு வாழ்ந்து, அமைதியுடனும், குற்றமிழைக்கா தன்மையுடனும் இருந்தது.(9) அந்த உயர் ஆன்ம முனிவரின் பாதத்தில் கிடந்த அது {அந்த நாயானது}, தான் நடத்தப்படும் விதத்ததில் விளைந்த அன்பின் விளைவால் அவரிடம் {முனிவரிடம்} மிகவும் பற்றுடன் இருந்தது.(10)
ஒரு நாள் பெரும்பலம் படைத்ததும், குருதியையுண்டு வாழ்வதுமான ஒரு சிறுத்தை அங்கே வந்தது. தீய மனோநிலை கொண்டதும், எப்போதும் இரை தேடும் திளைப்பில் நிறைந்ததுமான அந்தக் கடும் விலங்கானது இரண்டாம் யமனைப் போலத் தெரிந்தது.(11) அந்தச் சிறுத்தையானது, நாவால் தன் கடைவாயை நக்கியபடியும், தன் வாலை மூர்க்கமாக ஆட்டியபடியும், பசியுடனும், தாகத்துடனும், தன் வாயை அகல விரித்துக் கொண்டு, அந்த நாயைத் தன் இரையாகப் பிடிக்க விரும்பி அங்கே வந்தது.(12) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அந்தக் கடும் விலங்கு வருவதைக் கண்ட அந்த நாய், உயிருக்கு அஞ்சி முனிவரிடம் இவ்வார்த்தைகளில் பேசியது. ஓ! ஏகாதிபதி, அதைக் கேட்பாயாக.(13) {அந்த நாய் முனிவரிடம்}, “ஓ! புனிதமானவரே, இந்தச் சிறுத்தையானது நாய்களுக்கு எதிரியாகும். அஃது என்னைக் கொல்ல விரும்புகிறது. ஓ! பெரும் தவசியே, இந்த விலங்கிடம் நான் கொண்ட அச்சங்கள் அனைத்தும் உமது அருளால் என்னிடமிருந்து விலகும் வழியில் செயல்படுவீராக. ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, நீர் அனைத்தையும் அறிந்தவர் என்பதில் ஐயமில்லை” என்றது.(14) அனைத்து உயிரினங்களின் எண்ணங்களையும் அறிந்தவரான அந்தத் தவசி, அந்த நாய் பெரும் அச்சத்தில் இருப்பதை உணர்ந்தார். ஆறு பண்புகளைக் கொண்டவரும், விலங்குகள் அனைத்தின் குரல்களைப் படிக்கவல்லவருமான அந்தத் தவசி பின்வரும் வார்த்தைகளைச் சொன்னார்.(15)
அந்தத் தவசி {நாயிடம்}, “இனியும் உனக்குச் சிறுத்தைகளிடம் மரண அச்சமேதும் வேண்டாம். ஓ! மகனே, உன் இயல்பான வடிவம் மறைந்து, நீயும் ஒரு சிறுத்தையாவாயாக” என்றார்.(16) அந்த வார்த்தைகளைச் சொல்லப்பட்டதும், அந்த நாயானது, தங்கம் போன்ற பிரகாசத்துடன் கூடிய தோலைக் கொண்ட ஒரு சிறுத்தையாக மாறியது. உடலில் கோடுகளுடனும், {வாயில்} பெரும்பற்களுடனும் கூடிய அஃது, அந்தக் காட்டில் அச்சமில்லாமல் வாழத் தொடங்கியது.(17) அதே வேளையில், தன் இனத்தைச் சேர்ந்த மற்றொரு விலங்கைத் தன் முன் கண்ட சிறுத்தையானது, அதனிடம் கொண்ட பகையுணர்வனைத்தையும் அப்போதே கைவிட்டது.(18) சில காலம் கழித்து, சீற்றமும் பசியும் நிறைந்த ஒரு புலியானது திறந்த வாயுடன் அந்த ஆசிரமத்திற்கு வந்தது. நாவால் தன் கடைவாயை நக்கியபடியும், குருதி குடிக்கும் ஆவல் மற்றும் விருப்பத்துடனும் அந்தப் புலியானது, சிறுத்தையாக மாறியிருந்த அந்த விலங்கை நோக்கிச் செல்லத் தொடங்கியது.(19) பயங்கரப் பற்களைக் கொண்டதும், பசியுடன் கூடியதுமான புலி, அந்தக் காட்டை அணுகுவதைக் கண்ட (வடிவம் மாறிய) சிறுத்தையானது, தன் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அந்த முனிவரின் பாதுகாப்பை நாடியது.(20)
அந்தச் சிறுத்தை அதே இடத்திலேயே தன்னுடன் வாழ்ந்து வந்ததால், அதனிடம் பெரும் பற்றுக் கொண்ட அந்தத் தவசி, அந்தச் சிறுத்தையை, அனைத்து எதிரிகளைவிடவும் பலமிக்க ஒரு புலியாக மாற்றினார்.(21) ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, தன் இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கைக் கண்ட புலியானது, அதற்கு எந்தத் தீங்கையும் செய்யாதிருந்தது. காலத்தின் ஓட்டத்தில், குருதியும், இறைச்சியும் உண்டு வாழும் பலமிக்க ஒரு புலியாக உருமாறிய அந்த நாயானது, தன் முந்தைய உணவான கனிகளையும், கிழங்குகளையும் தவிர்த்தது.(22) ஓ! ஏகாதிபதி, உண்மையில் அது {அந்த நாயானது}, புலியாக மாறிய நேரத்தில் இருந்து, உண்மையான விலங்குகளின் மன்னனைப் போலவே காட்டின் பிற விலங்குகளை உண்டு வாழ்ந்தது” என்றார் {பீஷ்மர்}.(23)
சாந்திபர்வம் பகுதி – 116ல் உள்ள சுலோகங்கள் : 23
ஆங்கிலத்தில் | In English |