A dog transformed into a Sarabha, assumed its own form! | Shanti-Parva-Section-117 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 117)
பதிவின் சுருக்கம் : முனிவரின் உதவியால் சிறுத்தையாகவும், புலியாகவும் மாறிய நாய், பின்பு, யானையாகவும், சிங்கமாகவும், சரபமாகவும் மாற்றப்பட்டது; சரபமாகி இன்புற்றிருந்த நாய் அந்த முனிவரையே கொல்ல நினைத்தது; அதை அறிந்த முனிவர் சரபமாகியிருந்த அந்த நாயை மீண்டும் தன் வடிவையே ஏற்கச் செய்தது...
Bhishma advises Yudhistra on his death bed of arrows_Shanti Parva-117 |
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “புலியாக உருமாறிய நாய், கொல்லப்பட்ட விலங்குகளின் இறைச்சியை உண்டு சுகமாக உறங்கிக் கொண்டிருந்தது. ஒரு நாள் அஃது ஆசிரமத்தின் முற்றத்தில் கிடந்தபோது, எழுச்சியடைந்த மேகம் போலத் தெரிந்த ஒரு மதங்கொண்ட யானை அங்கே வந்தது.(1) பெரிய உடற்கட்டுடனும், மதநீர் பெருகிய கன்னத்துடனும், உடலில் தாமரையின் குறியீடுகளுடனும், அகன்ற மத்தகங்களுடனும் இருந்த அந்த விலங்குக்கு, நீண்ட தந்தங்களும், மேகங்களைப் போன்ற ஆழ்ந்த குரலும் இருந்தன.(2) பலத்தில் செருக்கடைந்திருக்கும் அந்த மதங்கொண்ட யானை தன்னை நோக்கி வருவதைக் கண்ட அந்தப் புலி, அச்சத்தால் கலங்கி, அந்த முனிவரின் பாதுகாப்பை நாடியது.(3) அதன் பேரில் அந்த முனிவர்களில் சிறந்தவர் அந்தப் புலியை ஒரு யானையாக மாற்றினார். உண்மையான யானையானது, தன் இனத்தைச் சார்ந்ததும், மேகத் திரளைப் போன்று பெரிதாக இருப்பதுமான அதைக் கண்டு அச்சமடைந்தது.(4) முனிவரின் யானையானது, தாமரை இதழ்களை உடற்புள்ளிகளாக {மச்சங்களாகப் போலக்} கொண்டு, தாமரைகள் அடர்த்தியாக மலர்ந்திருக்கும் தடாகங்களுக்குள் மகிழ்ச்சியாகக் குதித்து, முயல் பொந்துகள் நிறைந்த அதன் கரைகளில் திரிந்தது.(5)
இவ்வழியில் ஒரு குறிப்பிட்ட காலம் கடந்து சென்றது. ஒரு நாள் அந்த யானை ஆசிரமத்தின் பக்கம் உலவிக் கொண்டிருந்தபோது, மலைக்குகையில் பிறந்ததும், யானைகளைக் கொல்வதை வழக்கமாகக் கொண்டதுமான பிடரி படைத்த சிங்கம் ஒன்று அங்கே வந்தது.(6,7) சிங்கம் வருவதைக் கண்ட முனிவரின் யானை, உயிருக்கு அஞ்சி நடுங்கத் தொடங்கி, அந்தத் தவசியின் பாதுகாப்பை நாடியது.(8) அதன் பேரில் அந்தத் தவசி அந்த யானைகளின் இளவரசனை ஒரு சிங்கமாக மாற்றினார். அந்தக் காட்டுச்சிங்கம் தன் இனத்தைச் சேர்ந்த விலங்காக இருந்ததால், முனிவரின் சிங்கம் அதற்குமேலும் அஞ்சவில்லை. மறுபுறம், அந்தக் காட்டுச் சிங்கமானது, தன் இனத்தைச் சேர்ந்த வலிமைமிக்க விலங்கைத் தன் முன்னே கண்டு அச்சமடைந்தது.(9) முனிவரின் சிங்கம் காட்டில் உள்ள அந்த ஆசிரமத்திலேயே வசிக்கத் தொடங்கியது. அந்த விலங்கிடம் கொண்ட அச்சத்தால், அதற்கு மேலும் வேறெந்த விலங்கும் அந்த ஆசிரமத்தை அணுகத் துணியவில்லை. உண்மையில் அந்த விலங்குகள் அனைத்தும் தங்கள் உயிரின் பாதுகாப்பைக் கருதி அச்சமடைந்தன.(10)
சில காலம் கடந்ததும், ஒரு நாள், பெரும் பலம் கொண்டதும், அனைத்து விலங்குகளையும் கொல்லக்கூடியதும், அனைத்து விலங்குகளுக்கும் அச்சமூட்டக்கூடியதும், எட்டுக் கால்களைக் கொண்டதும், நெற்றியில் கண்களைக் கொண்டதுமான ஒரு சரபம் அங்கே வந்தது. உண்மையில், அது முனிவரின் சிங்கத்தைக் கொல்லும் நோக்குடன் அந்த ஆசிரமத்திற்கே வந்தது.(11,12) இதைக் கண்ட தவசி, தன் சிங்கத்தைப் பெரும்பலமிக்க ஒரு சரபமாக மாற்றினார். அந்தக் காட்டுச் சரபமானது, சீற்றமிக்கதும், தன்னைவிடப் பலமிக்கதுமான முனிவரின் சரபம் தன் முன்னே நிற்பதைக் கண்டு வேகமாக அந்தக் காட்டைவிட்டுத் தப்பி ஓடியது.(14) இவ்வாறு அந்தத் தவசியால் சரபமாக மாற்றப்பட்ட அந்த விலங்கானது, தன்னை அவ்வாறு மாற்றியவரின் அருகிலேயே மகிழ்ச்சியாக வாழ்ந்தது.(15)
அருகில் வசித்து வந்த விலங்குகள் அனைத்தும் அந்தச் சரபத்தால் அச்சமடைந்தன. அச்சமும், தங்கள் உயிர்களைக் காத்துக் கொள்ளும் விருப்பமும் அவை அனைத்தும் அந்தக் காட்டில் இருந்து தப்பி ஓடுவதற்கு வழிவகுத்தன.(16) மகிழ்ச்சியில் நிறைந்திருந்த அந்தச் சரபம், தினமும் தன் உணவுக்காக விலங்குகளைக் கொல்வதைத் தொடர்ந்தது. ஊனுண்ணும் விலங்காக மாற்றப்பட்ட அஃது, அதற்கு மேலும் முந்தைய வாழ்வில் தான் உண்ட கனிகளையும், கிழங்குகளையும் உண்ணவில்லை.(17) முன்பு நாயாக இருந்து இப்போது சரபமாக மாறியிருக்கும் அந்த நன்றியற்ற விலங்கு, ஒரு நாள், ஆவலுடன் கூடிய குருதி தாகத்துடன் அந்தத் தவசியைக் கொல்ல விரும்பியது.(18) அவர் {தவசி}, தன் தவச் சக்தியாலும், தன் ஆன்ம அறிவாலும் அனைத்தையும் கண்டார். பெரும் ஞானத்தைக் கொண்ட அந்தத் தவசி, அந்த விலங்கின் நோக்கங்களை உறுதிசெய்து கொண்டு, அதனிடம் இவ்வார்த்தைகளைப் பேசினார்.(19)
அந்தத் தவசி {சரபமாக மாறியிருக்கும் நாயிடம்}, “ஓ! நாயே, நீ முதலில் ஒரு சிறுத்தையாக உருமாற்றப்பட்டாய். பிறகு சிறுத்தையிலிருந்து ஒரு புலியாக மாற்றப்பட்டாய். புலியாக இருந்த நீ, கன்னங்களில் மதநீர் ஒழுகும் ஒரு யானையாக மாற்றப்பட்டாய். அடுத்ததாகச் சிங்கமாகவும் மாற்றப்பட்டாய்.(20) பிறகு வலிமைமிக்கச் சிங்கமாக இருந்த நீ ஒரு சரபமாகவும் மாற்றப்பட்டாய். உன்னிடம் அன்பால் நிறைந்ததால் நான் உன்னைப் பல்வேறு வடிவங்களில் உருமாற்றி வந்தேன். பிறப்பால் நீ அந்த இனங்களில் ஏதேனும் ஒன்றில் இருப்பதோ, இருக்ககூடிய பிறப்போ அல்ல.(21) எனினும், ஓ பாவம் நிறைந்த இழிந்த பிறவியே, உனக்கு எந்தத் தீங்கையும் செய்யாத என்னை நீ கொல்ல விரும்பியதால், மீண்டும் நீ உன் இனத்தைச் சேர்ந்த பிறவியாகவே மாறி, மீண்டும் ஒரு நாயாவாயாக” என்றார்.(22) இதன்பிறகு, சரபமாக மாற்றப்பட்டிருந்ததும், குறுகிய புத்தி கொண்டதுமான அந்த மூட விலங்கு, அந்த முனிவருடைய சாபத்தின் வீளைவால் மீண்டும் அதற்குரிய நாயின் வடிவத்தை ஏற்றது” என்றார் {பீஷ்மர்}.(23)
சாந்திபர்வம் பகுதி – 117ல் உள்ள சுலோகங்கள் : 23
ஆங்கிலத்தில் | In English |