The virtues of Royal servants! | Shanti-Parva-Section-118 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 118)
பதிவின் சுருக்கம் : மன்னன் தன் பணியாட்களை நியமிக்க வேண்டிய முறை; நியமிக்கப்பட வேண்டிய அமைச்சர்களின் பண்புகள்; ஒரு மன்னனுக்கு இருக்க வேண்டிய, அல்லது அவன் வளர்த்துக் கொள்ள வேண்டிய பண்புகள்; போர்வீரர்களுக்குத் தேவையான பண்புகள் ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
Bhishma advises Yudhistra with Pandavas and Krishna on his death bed of arrows_Shanti Parva-118 |
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “அந்த நாயானது, தனக்கு உரிய வடிவத்தை ஏற்றவுடன் உற்சாகமிழந்தது. அந்தப்பாவம் நிறைந்த விலங்கைக் கண்டித்த முனிவர், அதைத் {நாயை} தன் ஆசிரமத்திலிருந்து விரட்டிவிட்டார்.(1) நுண்ணறிவு கொண்ட மன்னன் ஒருவன், இந்த எடுத்துக்காட்டால் வழிகாட்டப்பட்டு, பணியாட்கள் ஒவ்வொருவரும் பணியமர்த்தப்படும் முன்பே, அவர்களின் உண்மைத்தன்மை, தூய்மை, நேர்மை, பொதுவான மனநிலை, சாத்திர அறிவு, நடத்தை, பிறப்பு, தன்னடக்கம், கருணை, பலம், சக்தி, கண்ணியம் மற்றும் மன்னிக்கும் தன்மை {பொறுமை} ஆகியவற்றை உறுதி செய்து கொண்டு, அலுவலுக்குத் தகுந்த பணியாட்களை நியமிக்க வேண்டும்.(2,3) ஒரு மன்னன், முதலிலேயே தீர ஆராயமல் ஓர் அமைச்சரை ஒருபோதும் நியமிக்கக்கூடாது. ஒரு மன்னன் தன்னைச் சுற்றிலும் இழிபிறவிகளைத் திரட்டி வைத்திருந்தால், அவனால் ஒருபோதும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது.(4) உயர் குடி பிறப்பைக் கொண்டவன், எக்குற்றமும் செய்யாமலே தன் தலைவனால் தண்டிக்கப்பட்டாலும், தன் குருதியுடைய மதிப்பின் விளைவால், தன் தலைவனுக்குத் தீங்கிழைப்பதில் ஒருபோதும் இதயத்தை நிலைக்கச் செய்ய மாட்டான்[1].(5)
[1] கும்பகோணம் பதிப்பில், ”கெட்ட குலத்திலுதித்த மனிதர்களால் சூழப்பட்ட அரசன் சுகமாக வளரமாட்டான். அரசனே! நற்குலத்திற்பிறந்தவன் அவிவேகியாயிருந்தாலும், குற்றமில்லாமல் நிந்திக்கப்பட்டாலும் அக்குலத்திற்பிறந்த காரணத்தால் எப்பொழுதும் பாபத்தில் புத்தியைச் செலுத்த மாட்டான்” என்றிருக்கிறது.
எனினும், இழிபிறவியான ஒருவன், ஏதோவொரு நேர்மையான மனிதனின் தொடர்பால் பெருஞ்செழிப்பை அடைந்திருந்தாலும், வெறுமனே வார்த்தைகளில் கண்டிக்கப்பட்டாலும்கூட அம்மனிதனின் பகைவனாகிவிடுவான்[2].(6) ஓர் அமைச்சன் உயர்குடி பிறப்பைக் கொண்டவனாக, பலமிக்கவனாக இருக்க வேண்டும்; அவன் மன்னிக்கும் தன்மையும், தன்னடக்கமும் கொண்டவனாக, தன் புலன்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தியவனாக, கொள்ளை எனும் தீமையில் இருந்து விடுபட்டவனாக, நியாயமான முறையில் அடையப்பட்ட உடைமைகளில் மனம்நிறைந்தவனாக, தன் தலைவன் மற்றும் நண்பர்களின் செழிப்பில் மகிழ்ச்சி கொள்பவனாக,(7,8) இடம் மற்றும் நேரத்திற்குத் தக்க தேவைகளை அறிந்தவனாக, தன் தலைவனுக்கான நல்ல அலுவல்களைச் செய்பவனாக, அல்லது அதில் எப்போதும் ஈடுபடுபவனாக, எப்போதும் கவனமிக்கவனாக,(9) தன் கடமைகளை ஆற்றுவதில் நம்பிக்கைக்குரியவனாக, போர் மற்றும் அமைதியின் கலைகளில் முற்றான திறம் கொண்டவனாக, மூன்று பெரும் தொகுப்புகளின் {அறம், பொருள், இன்பம் ஆகியவற்றில்} மன்னனின் தேவைகளை அறிந்தவனாக, குடிமக்களாலும், மாகாணங்களில் வசிப்போராலும் அன்புடன் விரும்பப்படுபவனாக,(10) பகைவரின் படையணிகளைப் பிளக்கவும், துளைக்கவும் கூடிய அனைத்து வகைப் போர்வியூகங்களையும் அறிந்தவனாக, தன் தலைவனின் படைகளுக்கு உற்சாகத்தையும் இன்பத்தையும் அளிப்பவனாக, அறிகுறிகளையும், தோற்றநிலைகளையும் படிக்கவல்லவனாக, அணிவகுப்புக்குத் தேவையான அனைத்தையும் அறிந்தவனாக,(11) யானைகளுக்குப் பயிற்சி அளிப்பதில் திறம் கொண்டவனாக, செருக்கில் இருந்து விடுபட்டவனாக, தன் சக்திகளில் நம்பிக்கை உள்ளவனாக, தொழில் பரிவர்த்தனையில் புத்திசாலியாக, எப்போதும் சரியானதையே செய்பவனாக,(12) நல்லொழுக்கம் கொண்டவனாக, நல்ல நண்பர்களால் சூழப்பட்டவனாக, இனிய பேச்சைக் கொண்டவனாக, ஏற்புடைய பண்புகளைக் கொண்டவனாக, சிறப்புத் திறமை, செயல்பாட்டில் துடிப்பு,(13) சுறுசுறுப்பு, புத்திக்கூர்மை, இனிய மனம், பேச்சில் பணிவு, பொறுமை, துணிவு, வளமை ஆகியவற்றைக் கொண்டவனாக, இடம் மற்றும் காலத்திற்குத் தகுந்த தேவைகளின்படி தன் நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ளவல்லவனாக இருக்க வேண்டும்.(14) இத்தகு அமைச்சனை அடையும் மன்னனை, வேறு எவனாலும் ஒருபோதும் அவமதிக்கவோ, வீழ்த்தவோ முடியாது. உண்மையில் அவனது நாடானது, நிலவின் வெளிச்சத்தைப் போல இந்தப் பூமியில் படிப்படியாகப் பரவும்.(15)
[2] “நீலகண்டர் சுட்டிக்காட்டுவது போல இந்த முரணிசைவுநயமானது, உயர்குடியில் பிறந்த மனிதன், தகாத முறையில் அழிவை அடைந்தாலும், தன் தலைவனுக்குத் தீங்கிழைக்கமாட்டான். எனினும், இழிபிறவியான மனிதன், அன்பான தலைவனால், வார்த்தைகளால் மட்டுமே கண்டிக்கப்பட்டாலும் கூட அவனுக்கு எதிரியாகிவிடுவான் என்ற பொருளைக் கொண்டிருக்கிறது” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
மேலும் சாத்திரங்களை அறிந்தவனும், அறமே அனைத்திற்கும் மேலானது எனக் கருதுபவனும், தன் குடிமக்களைக் காப்பதில் எப்போதும் ஈடுபடுபவனும், பின்வரும் பண்புகளைக் கொண்டவனுமான ஒரு மன்னனானவன் அனைவரின் அன்பையும் பெறுவான்.(16) அவன் {ஒரு மன்னன்}, பொறுமை, மன்னிக்கும் தன்மை, தூய ஒழுக்கம், தேவையான தருணங்களில் கடுமை, பெரியோர் அனைவரையும் மதிக்கும் நடத்தை, சாத்திர அறிவு, அறிவுரையும் ஆலோசனையும் வழங்கத்தக்கவர்களிடம் அவற்றைக் கேட்கக்கூடிய ஆயத்தம், தனக்குப் பரிந்துரைக்கப்படும் வேறுபட்ட, அல்லது எதிர் நடவடிக்கைகளுக்கு மத்தியில் சரியாகத் தீர்மானிக்கும் திறன்,(17) புத்திக்கூர்மை, நல்ல நினைவுத்திறன், நீதியைச் செய்ய ஆயத்தம், தற்கட்டுப்பாடு, எப்போதும் பேச்சில் இனிமை, எதிரிகளையும் மன்னிக்கும் தன்மை,(18) தனிப்பட்ட ஈகை பயில்வது, நம்பிக்கையுடன் இருப்பது, ஏற்புடைய பண்புகளைக் கொண்டிருப்பது, துயரில் மூழ்கியிருக்கும் மனிதர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் ஆயத்தநிலையிலிருப்பது, தன் நன்மையை எப்போதும் நாடும் அமைச்சர்களைக் கொண்டிருப்பது,(19) தற்பெருமை எனும் குற்றத்தைத் தவிர்ப்பது, மனைவியில்லாமல் ஒருபோதும் இல்லாத நிலை, எதையும் அவசரமாகச் செய்யாத நிலை ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும் .(20)
அவன், சோம்பலைத் தவிர்த்து, தனக்கு நன்மை செய்யும் மனிதர்களுடன் எப்போதும் இணைந்திருக்க வேண்டும். அவனது முகம் எப்போதும் உற்சாகம் நிறைந்ததாக இருக்க வேண்டும். தன் பணியாட்களின் தேவைகளில் எப்போதும் கவனமாக இருப்பவனாகவும், கோப வசப்படாதவனாகவும் அவன் இருக்க வேண்டும். இவற்றைத் தவிர்த்து அவன் பெருந்தன்மை கொண்டவனாக இருக்க வேண்டும்.(21) தண்டக்கோலைக் கீழே வைக்காமல், அதை முறையுடன் தரிக்க வேண்டும். தன் மக்கள் அனைவரையும் நியாயமாக நடக்கச் செய்ய வேண்டும். அவன், ஒற்றர்களைத் தன் கண்களாகக் கொண்டு, தன் குடிமக்களின் காரியங்களைக் கண்காணித்து, அறம் மற்றும் செல்வம் தொடர்பான அனைத்துக் காரியங்களையும் அறிந்து கொள்ள வேண்டும். இந்த நூறு பண்புகளையும் கொண்ட மன்னன் அனைவரின் அன்பையும் ஈட்டுவான். ஒவ்வொரு ஆட்சியாளனும் இவ்வாறு இருக்க முயற்சிக்க வேண்டும்.(22) ஓ! ஏகாதிபதி, ஒரு மன்னன், தன் நாட்டைப் பாதுகாப்பதில் தனக்கு உதவி செய்வதற்குத் தேவையான தகுதிகளுடன் கூடிய நல்ல போர்வீரர்களைத் (தன் படையில் சேர்த்துக் கொள்வதற்குத்) தேட வேண்டும்.(23) தன் முன்னேற்றத்தை விரும்புபவனான ஒரு மன்னன் ஒருபோதும் தன் படையை அலட்சியம் செய்யக்கூடாது.
எந்த மன்னனின் படைவீரர்களில், போரில் துணிவுமிக்கவர்களாகவும், நன்றியுணர்வு மிக்கவர்களாகவும், சாத்திரங்களை அறிந்தவர்களாகவும் இருக்கிறார்களோ, எவனுடைய படையில், அறம் மற்றும் கடமை குறித்த உடன்படிக்கைகளை அறிந்த காலாட்படையினர் இருக்கிறார்களோ, எவனுடைய யானைவீரர்கள் அச்சமில்லாதவர்களாக இருக்கிறார்களோ, எவனுடைய தேர்வீரர்கள், தங்கள் வகைப் போரில் திறம்பெற்றவர்களாகவும், கணை ஏவுவதை நன்கறிந்தவர்களாகவும், பிற ஆயுதங்களைத் தரிக்கவும் தெரிந்தவர்களாக இருக்கிறார்களோ, அவன் {அந்த மன்னன்} மொத்த உலகையும் அடக்குவான்.(24,25) எந்த மன்னன், மனிதர்கள் அனைவரையும் தன்னோடு இணைப்பதில் எப்போதும் ஈடுபடுவானோ, எவன் முயற்சிக்கு {உழைப்புக்கு} எப்போதும் ஆயத்தமாக இருக்கிறானோ, எவன் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளின் காரியத்தில் வளத்துடன் இருக்கிறானோ, அவன் {அந்த மன்னன்} ஆட்சியாளர்களில் முதன்மையானவன் ஆவான்.(26) ஓ! பாரதா, மனிதர்கள் அனைவரையும் தன்னோடு இணைத்துக் கொள்வதில் வெற்றி காணும் மன்னன், துணிவுடன் கூடிய ஓராயிரம் குதிரைவீரர்களை மட்டுமே கொண்டும் கூட மொத்த உலகையும் கைப்பற்றுவான்” என்றார் {பீஷ்மர்}.(27)
சாந்திபர்வம் பகுதி – 118ல் உள்ள சுலோகங்கள் : 27
ஆங்கிலத்தில் | In English |